Home

Sunday, 7 August 2022

சட்டை - சிறுகதை

 தனபாலுக்கு சட்டைதான் பெரிய பிரச்சனை.

வேறு ஏதாச்சும் சொல்லி கலாட்டா செய்தால் கூட பரவாயில்லை. கழுதை, குதிரை, தீவட்டி என்று கிண்டல் செய்தால் கூட பதிலுக்குப் பதில் மாடு, பன்றி, புண்ணாக்கு என்று கிண்டல் செய்துவிட்டு விடலாம். பதில் கிண்டல் செய்வதில் இஷ்டம் இல்லாவிட்டால் கூட போனால் போகட்டும் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால்போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்என்று கூப்பிட்டு கலாட்டா செய்வது தான் தாங்கமுடியாத அசிங்கமாயும் ஆத்திரமாயும் இருந்தது. அதுவும் கண்ட கண்ட பேப்பர்களையெல்லாம் மடித்து தபால் போடுகிற மாதிரி சட்டைக் கிழிசலுக்குள் கை விட்டு பிள்ளைகள் போடும் போது அளவுக்கு மீறி வேதனையாய் இருந்தது

கிழிசல் வேறு சொல்லிவைத்தமாதிரி முதுகு பக்கமாகவே இருப்பது குறும்புக்காரர்களுக்கு ரொம்ப தோதாகிவிட்டது. கேசவன், செல்வகுமார் ராஜசேகர், ஆழ்வார் எல்லாரும் ஒரு செட்டாக சேர்ந்து கொண்டு தான் இவ்வளவு வேலைகளையும் செய்தார்கள். நாலாவதுயில் துடுக்குப் பசங்கள் என்றாலே இந்த லிஸ்ட்தான். மோகனரங்கம் சாரும், கே.பி.சாரும் கூட இந்த பிள்ளைகளைக் கண்டிப்பது கிடையாது. மீறிப்போய் வலியுறுத்திப் புகார் செய்தால் கூடநீ நல்ல சொக்காய போட்டுக்னு வந்தா அவனுங்க ஏன்டா ஒன்ன சொல்றாங்க?’ என்று இவனையே பார்த்துச் சொன்னார்கள். அந்தப் பிள்ளைகள் முன்னாலயே இப்படிச் சொல்லிவிடுவது அவர்கள் உற்சாகத்துக்கு இன்னும் கொஞ்சம் சாவி கொடுத்த மாதிரி ஆகிவிடும். இன்னும் உக்கிரமான கிண்டல்கள் தொடரும். வாத்தியார்களிலேயே பங்கஜம் டீச்சர் பரவாயில்லை. புகார் செய்த கையோடு குறும்புப் பிள்ளைகளைக் கூப்பிட்டு சத்தம் போடுவாள். அந்த டீச்சரே கூட அன்றைய தினம் எதுவும் கண்டு கொள்ளாமல் போனதுதான் சட்டைப் பிரச்சனை பற்றி தனபாலை மேலும் வருத்தமாயும் சங்கடமாயும் உணர வைத்தது.

சாயங்காலமாய் -தூங்குமூஞ்சி மரத்தடியில்கல்லா மண்ணாவிளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் பங்கஜம் டீச்சர் எல்லாரையும் விசில் ஊதிக் கூப்பிட்டாள்,

நாளக்கி மலர்க்கண்காட்சிக்கு வர்றவங்கள்ளாம் கை -தூக்குங்க...’

பாதிப் பிள்ளைகள் உற்சாகமாய் கை-தூக்கினார்கள். மீதிப்பிள்ளைகள் டீச்சர் முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

நாப்பது பேர்ல இவ்ளோதானா. காசி கேட்பாங்கண்ணு நெனச்சிட்டிங்களா. அதெல்லாம் ஒன்னும் வேணாம். சும்மா நடந்து போயி நடந்துவர்றதுதான்...’

அநேகமாய் முன்பு -தூக்கப்படாத கைகள் எல்லாமே உயர்ந்தன. தனபாலும் உற்சாகமாய் கையைத் -தூக்கினான். அப்போது போன தரம் ஆரோவில்லுக்கு சென்ற போதும் அதற்கும் முன்பு செஞ்சிக்குப் போன போதும் அதற்கெல்லாம் முன்பு வேளாங்கண்ணி, சாத்தனூர், வீடூர் எல்லாம் போய் வந்த போதுகூட இவ்வளவு தொகை தரவேண்டும் என்கிற வார்த்தைகள்தான் கை-தூக்குவதில் இருந்து தனபாலைத் தடுத்து நிறுத்தியது. ஒரு தரம் பாலாஜி தியேட்டரில் காந்தி சினிமா காட்டும் போது சென்று பார்க்க பள்ளிக்கூடத்தில் தர இரண்டு ரூபாய் கேட்டுப் போராடி அம்மாவிடம் உதை வாங்கியதிலிருந்து இந்த மாதிரி பிக்னிக், சினிமா விவகாரங்களுக்குப் பணம் கேட்கவே பயம்தான் முதலில் முளைக்கும். பயமே ஆசைகளை நசுக்கி அழிக்கும். இந்த தரம் காசில்லாமல் கண்காட்சிக்குப் போகலாம் என்றதும் உற்சாகமாய் கை-தூக்கினான் தனபால். முதன் முதலில் ஒரு சந்தோஷத்தை கூட்டத்தோடு அனுபவிக்கப் போகிற பரபரப்பிலும், ஆர்வத்திலும் விருட்டென்று கை -தூக்கும் போது ஏற்கெனவே கிழிந்திருந்த சட்டை இன்னும் கொஞ்சம் நீளவாக்கில் டர்ரென்று கிழிந்தது. அதே நேரத்தில்சின்ன போஸ்ட்ஆபீஸ் பெரிய போஸ்ட் ஆபீஸாய்டுச்சிடா டேய்என்று கூவிக் கிண்டல் செய்தான் கேசவன். பிள்ளைகள் எல்லாரும் இவன் பக்கம் திரும்பி சோழி சிதறினமாதிரி சிரித்தார்கள். சிரிப்புத்துணுக்குகளையும் பார்வைகளையும் அவமானத்துடன் விலக்கி ஆதரவு தேடுகிற தவிப்போடு டீச்சரை அண்ணாந்து பார்த்தபோது டீச்சர் கூட வாயைக் கையால் மூடிக்கொண்டு சிரிப்பது தெரிந்தது. பார்க்கப்பார்க்க மனசு வலித்தது. காலைல எட்டுமணிக்கெல்லாம் பள்ளிக்கூட வாசல்ல வந்து நின்னுடணும்என்று டீச்சர் சொன்னது கூட உறைக்கவில்லை. மனசில் நுரைத்த சந்தோஷமெல்லாம் வடிந்து வரள நிராதரவாய் காயம்பட்டு விழுந்த குருவி மாதிரி வீட்டுக்குத் திரும்பினான் தனபால்.

**

தனபாலிடம் இருந்ததே நாலு சட்டைகள்தான். நாலும் அக்குகளில், முதுகில், மார்பில் என்று ஏதாவது ஒரு இடத்தில் கிழிந்ததாய்த்தான் இருந்தது. கிழிய ஆரம்பிக்கிற கட்டத்தில்தான் நர்ஸம்மா வீட்டிலும், மலையாளத்துக்காரர் வீட்டிலும் மாவரைக்கப் போகிற அம்மா கேட்டு வாங்கி வந்தாள். அதை அணிந்துகொண்டு ஒரு நடை பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் கிழிந்து தொங்கத் தொடங்கும். அடுத்த நிமிஷம் போஸ்ட் ஆபீஸ் கூச்சல்தான். அம்மாவிடம் சொல்லும் போதெல்லாம்அடுத்த தீபாவளிக்கு என் கண்ணுக்குத்தா புதுசட்டை. எனக்கு கூட கெடையாதுஎன்று கொஞ்சிச் சந்தோஷப்படுத்துவாள். தீபாவளிக்குத் தவறும் போதுகண்டிப்பா எங்க ராஜாவுக்கு பொங்கலுக்கு எடுத்துரலாம்என்பாள். எதுவுமே சாத்தியப்படாமல் போய் கட்டக்கடைசியில் நர்ஸம்மா வீட்டுப் பழஞ் சட்டையைத்தான் போட்டுக் கொள்கிறமாதிரி நேரும். ஏதாவது ஒரு ராத்திரியில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கம்பங்களி தின்னும் போது மனசு கரைந்து போய் அம்மாவிடம் புகார் சொல்லுகிற தருணத்தில்அப்பா இருக்கற ஊடுங்கள்ள எப்படி ஓணும்னா செய்வாங்க தனபாலு. நமக்கு யாரு இருக்காங்க? ஒனக்கு நானு. எனக்கு நீ தான்-. எல்லாத்துக்கும் ஆசப்பட்டா முடியுமா ராஜாஎன்று நெகிழ்ச்சியாய்த் தொடங்கி அதன் தொடர்ச்சியாய் அம்மா குலுங்கிக்குலுங்கி அழுதபடி நெடுநேரத்துக்கு சுவரில் சாய்ந்து கிடப்பாள். அம்மாவின் அழுகையையும், துக்கமான முகத்தையும் பார்த்த பிறகு எது கேட்கவும் மனசு வராது: மனசில் ததும்பும் யோசனைகளுக்குள்ளேயே நீந்தி நீந்திச் சோர்ந்து திண்ணையிலேயே படுக்கப் போனபோது வாசல் படலைத் தள்ளிக் கொண்டு அம்மா வந்தாள்.

இன்னா தனபாலு சீக்கிரம் வந்துட்டியாடா?

ம்மா

வௌயாடப் போவல...’

இல்ல...’

எதுக்கு மூஞ்சி ஒரு மாதிரியா கெடக்குது. ஜொரம் அடிக்குதா...?’

இல்ல...’

பின்ன எதுக்கு சோகமா இருக்க...?’

இடுப்பில் இருந்த கூடையை சுவர் ஓரமாய்க் கவிழ்த்து விட்டு தனபாலின் மார்பிலும் கழுத்திலும் தொட்டுப் பார்த்தாள் அம்மா. ‘நல்லாதான... இருக்குதுஎன்று சொல்லிக் கொண்டாள்.

பசிக்குதாப்பா...?’

இல்ல...’

அப்புறம் யேன் ம்னு இருக்க...’

பள்ளிக்கூடத்தல எல்லாரும் நாளக்கி கண்காட்சிக்கு போறாங்க...’

அதுக்கெல்லாம் போவணும்ன்னா காசி ஏதுடா தனபாலு? ஒனக்குத் தெரியாதாடா...’

காசி எதுவும் வேணாம்மா. சும்மாதான்’...

சும்மான்னா போய்ட்டுவா அதுக்காகவா ம்னு இருக்க?’

பள்ளிக்கூடத்துல எல்லாரும் போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்னு கூப்படறாங்க தெரிமா...’

கூப்ட்டா கூப்ட்டுக்னு கெடக்கட்டுமே தனபாலு. நம்மள இல்லன்னு கண்ண மூடிக்னு வந்துருடா

எவ்ளோத்தரம்தா சும்மா இருக்கறதாம். அழுக அழுகயா வருது தெரிமா?’

டீச்சர்கிட்ட சொல்லு

ம்க்கும். டீச்சரே இன்னிக்கு சிரிக்கறாங்க

அப்டியா...’

எனக்கு எப்பம்மா நல்ல சட்ட எடுத்து தருவ

நம்ம மாரியாத்தா கோயில் திருவிழாவுக்கு கண்டிப்பா எடுத்துரலாம்

ஒவ்வோர் தடவயும் இப்டிதான் சொல்ற

இந்த தரம் கண்டிப்பா எடுத்துரலாம்

எப்ப வரும் திருவிழா...’

சீக்கிரம வந்துரும்டா...’

நாலாம் கிளாஸ்ல இருக்கும் போதே வந்துருமா...’

ம்

மறக்க மாட்டியே

ம்ஹும்

நாளைக்கி கண்காட்சிக்கு போவ எதுவுமே நல்லா இல்லியே. எல்லாமே கிழிஞ்சிதா இருக்குது

தச்சிப் போட்டுக்கிறியாடா?’

ம்

எது ஒனக்குப் புடிக்குதோ அத கந்தசாமி டைலர் மாமாகிட்ட போயி தச்சி வாங்கியாந்துடு

அந்த மாமா தைக்குமா...?’

நா சொன்னன்னு சொல்லு

காசி கேட்டா...?’

அப்றமா தரன்னு சொல்லு...’

மீண்டும் பழைய சந்தோஷம் முகத்தில் படர துணி மூட்டைக்குள் இருந்த நீலச் சட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த தனபாலின் ஓட்டம் டைலர் கடைக்குப் பக்கத்தில் தான் நின்றது. இரைக்கஇரைக்க வாசலில் நின்று டைலரைப் பார்த்தான். டைலர் யாரோ ஒரு பெண்மணியிடம் கூலியை வாங்கி டிராயர்க்குள் போட்டுக்கொண்டு துணிச் சுருளைக் கொடுத்து விட்டு இவன் பக்கம் திரும்பினார்.

சட்ட ஒன்னு தைக்கணும் மாமா...’

புதுசா...’

இல்ல மாமா, பழசுதான். கொஞ்சம் கிழிஞ்சிருச்சி, நாளக்கி கண்காட்சிக்குப் போவணும். வேற இல்ல. தச்சி குடு மாமா...’

அதெல்லாம் இப்ப ஆவாது, அப்பறம் எடுத்தா போ.’

நாளக்கி போட்டுக்க ஒன்னுமில்ல மாமா...’

அதுக்கு என்ன இன்னாடா பண்ண சொல்ற? போய் ஒங்க அம்மாகிட்ட எடுத்துதரச் சொல்லு...’

கொஞ்சோண்டு தச்சி குடு மாமா...’

சொன்னா கேளுடா. வேலயக் கெடுக்காத போ

மாமா...’

இன்னிக்கி வெள்ளிக்கெழமடா முண்டம். பழசு தக்கக் கூடாது போடா...’

அம்மாதான் மாமா தச்சாரச் சொன்னாங்க. காசி அப்றமா தரன்னாங்க...’

ஒங்க அம்மா இன்னா பெரிய இந்திராகாந்தின்னு நெனப்பா. சொன்ன ஒடனே இங்க தச்சிடுவாங்களா... வாய மூடிக்னு பேசாம போடா...’

மனம் உடைந்து திரும்பிய தனபால் நடந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்லச்சொல்ல அழுகை பொங்கியது. அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டான்.

கைல காசில்லன்னு தெரிஞ்சிக்னா நரம்பில்லாத நாக்கு நாலும்தா பேசும் தனபாலு. போனாப் போவுது. உடு...’ அம்மா தனபாலின் தலையைத் தடவி மெல்ல ஆறுதல் சொன்னாள்.

ஒனக்கு சட்டதான தைக்கணும். மிஷின்ல தச்சாத்தா தையலா. ஊசியால நா தச்சிதரன். ஏந்துருடா...’

முகத்தில் சின்னதாய் பிரகாசம் சுடர்விட அம்மாவை நிமிர்ந்து பார்த்தான் தனபால். நம்ப முடியாமல் கண் ஸ்தம்பித்து நின்றது.

நீ மூஞ்சிய கழுவிக்னு வா தனபாலு. நா எதுத்தாப்பல போயி ஊசியும் -நூலும் வாங்கியாரன்...

புழக்கடைப் பக்கம் போய் தனபால் திரும்பவும் ஊசி -நூலோடு அம்மா வரவும் சரியாக இருந்தது. அம்மாவுக்கு கண் சரியாய்ப் புலப்படாமல் -நூல் கோர்ப்பதற்கு தடுமாற்றமாய் இருந்தது. உடனே  தனபால் அந்த ஊசியை வாங்கி -நூல் கோர்த்துக் கொடுத்தான். கிழிசலின் ஒரு முனையைத் தனபால் பிடித்துக்கொள்ள அம்மா அடுத்த முனையில் தைக்க ஆரம்பித்தாள். -நூலை வேகமாய் இழுக்க அறுந்து துண்டானது. பிசிறு -நூலை கடித்துத் துப்பி விட்டு மீண்டும் தைத்தாள். தனபால் பிகுவாகத் துணியை இழுத்துப் பிடிக்க கிழிசலுக்கு நடுவில் இன்னொரு திசையில் கிழிசல் அதிகமானது.

ரொம்ப இழுத்து புடிக்காதடா தனபாலு, நஞ்சிப் போன துணி பின்ன ரெண்டுதா கிழியும்...’

தனபால் சாதாரணமாய்ப் பிடிக்க அம்மா மெதுவாய் மடித்து மடித்து தைத்தாள். கொஞ்சம்கொஞ்சமாய்க் கிழிசல் மறைந்தது. தையலை முடித்து படுமுடிச்சு போட்டு -நூலை அறுத்த பிறகு கிழிசல் மறைந்த சட்டையைப் பார்த்ததும் சொல்ல முடியாத சந்தோஷம் பிறந்தது தனபாலுக்கு. நாளைக்கு எவனாவது கண்காட்சிக்குப் போகும் போதுபோஸ்ட் ஆபீஸ்என்ற கிண்டல் செய்து வம்புக்கு இழுத்தால் தைரியமாய் மறு சண்டைக்குப் போகலாம் என்ற தோன்றியது.

**

தூக்கம் வரவில்லை தனபாலுக்கு.   தூங்கப் போகிற வரைக்கும் மாடத்தில் வைத்துள்ள தைத்த சட்டையைத் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டான். இன்னும் பெட்டிக்குள் இருக்கிற மீதிச் சட்டைகளையும் என்றைக்காவது களையெடுப்போ, வீட்டு வேலையோ இல்லாத நாள்களில் தைத்துக் கொடுக்க வேண்டி அம்மாவிடம் கெஞ்சி சம்மதிக்க வைத்தான். திருவிழாவுக்கு வாங்கப் போகிற புதுச்சட்டையில் இருக்கப் போகிற நிற அமைப்பு, கோடுகள், பூக்கள், பைகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் நிறையப் பேசினான். பேசிக் களைத்துத் தூங்கத் தொடங்கியதும்  தூக்கத்தில் சட்டைக் கனவுகளாகவே இருந்தது.

திடீரென்று கோழி கூவுகிற சத்தம் கேட்ட மாதிரி பிரமை தட்ட விழித்தெழுந்த தனபால் அம்மாவை உலுக்கி எழுப்பினான்.

இன்னாடா...’

எழுந்திரும்மா. பொழுது விடிஞ்சிடுச்சிம்மா... கண்காட்சிக்குப் போவணும். சீக்கிரம் கஞ்சி காச்சுமா...’

கண்ணைக் கசக்கிக் கொண்டு படுத்த வாக்கிலேயே கதவைத் திறந்து வெளியே பார்த்த அம்மாவுக்குச் சிரிப்பு வந்தது.

பைத்தியக்காரா பேசாம  தூங்குடா. இன்னம் வெடியல.

ஐயோ. கோழி கூவிச்சிம்மா...’

நல்லா கூவிச்சி ஒன் கனவுல. -தூங்குடா பேசாம...’

அம்மா சுருண்டு படுத்துத் -தூங்கத் தொடங்க -தூக்கம் வராமல் கொட்டக்கொட்ட இறவாணத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான் தனபால். எப்போது பொழுது விடியும், எப்போது சட்டை போடலாம் என்று யோசனை எழுந்தது அவனுக்கு.

(எதிர்வு- 1989)