Home

Sunday 31 July 2022

ஒரு கனவு - பாவண்ணன் சிறுகதைகள் முதல் தொகுதிக்கான முன்னுரை

 

சிறுவயதில் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படுவதை நினைத்தாலே மனத்துக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஒன்பது மணிக்கு கொடிவணக்கத்தோடு எங்கள் பள்ளிக்கூடம் தொடங்கும். ஆனால் எட்டரைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் முனைப்பாக இருப்போம். அந்த அரைமணி நேரம் எங்களுக்கு விளையாட்டு நேரம். உடல்முழுதும் இறக்கைகள் முளைத்ததுபோல மைதானத்தில் சுற்றிச்சுற்றி பறந்தபடியே இருப்போம். கொடிவணக்கத்துக்கு அழைக்கும் மணியோசை ஒலிக்கும் கணம் வரைக்கும் மரத்தடிகளில் விருப்பம்போல ஆடித் தீர்ப்போம். ஓடிப் பிடிப்பதிலிருந்து தாண்டிக் குதிப்பது வரைக்கும் எங்களுக்குத் தெரிந்த எல்லா விளையாட்டுகளையும் ஆடுவோம்.

பள்ளிக்கூடம் முடிந்ததும் இதேபோல அரைமணி நேரம் கூடுதலாகத் தங்கி விளையாடிவிட்டுத் திரும்புவோம். நாலரைக்கு வகுப்புகள் முடியும். ஐந்து மணி வரைக்கும் விளையாட்டு. சட்டாம்பிள்ளையே இறங்கி வந்து “பிள்ளைங்களா, கௌம்புங்க கௌம்புங்க, நேரமாய்ட்டுது” என்று எங்களைத் திரட்டி வெளியே அனுப்புகிறவரைக்கும் ஆடிவிட்டுப் புறப்படுவோம்.


காலை நேரத்தில் எங்கள் வீடு இருக்கும் தெருவைக் கடந்த பகுதியிலிருந்து கிளம்பிவரும் பிள்ளைகளின் வரிசையைப் பார்த்ததுமே ஒரு பரபரப்பு வந்துவிடும். வேகவேகமாகக் கிளம்பி ஏதேனும் ஒரு குழுவோடு சேர்ந்துகொள்வேன். எல்லாக் குழுவிலும் கதை சொல்கிற யாரோ ஒரு சிறுவனோ சிறுமியோ இருப்பார்கள். அந்தக் கதைக்கு உம் கொட்டியபடி முதுகில் தொங்கும் புத்தகப்பை அசைய நடந்து செல்வேன்.

எங்கள் ஊர்வலத்துக்கு ஒருபோதும் நிரந்தரமான பாதை என்பதே இருந்ததில்லை. கதையின் போக்குக்கும் தீவிரத்துக்கும் தகுந்தபடி பாதையின் நீளம் பெருகும். குறையும். எங்களுக்காகவே உருவாக்கப்பட்டவைபோல ஊரில் ஏராளமான ஊடுபாதைகள் இருந்தன. ஏதாவது ஒன்றின் வழியாகச் சென்று இன்னொன்றைத் தொட்டுவிட்டு வெளியே வந்துவிடலாம்.

எங்கு திரும்பி எந்தப் பக்கம் வளைந்தாலும் போஸ்ட்மாஸ்டர் ஆயா வீட்டுத் திண்ணையின் பக்கமாக வராமல் பள்ளிக்குச் செல்லமுடியாது. அந்த ஆயாவின் கணவர் ஒரு காலத்தில் எங்கள் ஊரில் போஸ்ட் மாஸ்டராக இருந்தவர். அதனால் அவருக்கு அந்தப் பெயர். வட்டமான சிரித்த முகம். முற்றிலும் நரைத்துவிட்ட தலைமுடியை அழகாக படிய சீவி முடித்திருப்பார். பின்னலுக்கிடையில் ஒரே ஒரு ரோஜாப்பூ செருகியிருக்கும். ”என்னங்க செல்லம்” ”சொல்லுங்க செல்லம்” “சாப்பிட்டிங்களா செல்லம்” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் செல்லம் போட்டு சொல்வார். அதைக் கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கும். அவர் கன்னத்தைத் தொட்டு அசைத்து முத்தமிடும்போது இன்னொருமுறை தொட்டு அசைக்கமாட்டாரா என்று தோன்றும். ”ஆயாவுக்கு போஸ்ட் மாஸ்டர் ஆயாங்கற பேரவிட, செல்லம் ஆயான்னு புதுசா ஒரு பேர் வைக்கலாமா?” என்று ஒருநாள் செல்வகுமாரி ரகசியமான குரலில் கேட்டாள். ”அந்த ஆயா பக்கத்துல போனதுமே கமகமன்னு ஒரு வாசனை அடிச்சிதே, ஒனக்கு தெரிஞ்சிதா?”

ஒரு சிறிய கூடை நிறைய ரோஜாப்பூக்களோடு ஆயா திண்ணையில் உட்கார்ந்திருப்பார். ”வணக்கம் ஆயா” என்று நாங்கள் அந்தத் திண்ணையில் ஏறி நின்று உற்சாகமான குரலில் சொல்வோம். எங்கள் குரலைக் கேட்டு ஆயாவின் முகம் மலர்ந்துவிடும். “வாங்கடா செல்லம், வாங்கடா செல்லம், என்ன இன்னும் காணமேன்னு இப்பதான் நெனச்சிட்டே இருந்தேன்” என்று சொல்லிக்கொண்டே ”இது ஒனக்கு, இது ஒனக்கு” என ஒவ்வொருவருக்கும் ஒரு  ரோஜாப்பூவை எடுத்துக் கொடுப்பார். சிறுமிகளை மட்டும் அருகில் அழைத்து கூடுதலாக ஒரு பூவை எடுத்து அவர்கள் தலையில் சூட்டிவிடுவார். எல்லோரும் வரிசையாக நடந்து சென்று பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் முன் பூவை வைத்து வணங்கிவிட்டு ஓடிவிடுவோம்.

அந்த ஆயா வீட்டில் ஒரு ரோஜாத்தோட்டம் இருந்தது. ஒவ்வொரு நாளும் பூக்கும் பூக்களையெல்லாம் சிறுவர் சிறுமிகளுக்கு எடுத்துக்கொடுப்பதில் ஏதோ ஒரு வகையில் அவர் மனம் மகிழ்ச்சியடைந்தது. அந்த ஆயாவுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் நல்ல வேலையில் டில்லி பக்கமோ பம்பாய் பக்கமோ இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்குப் பூ கொடுப்பதைப் பார்த்த ஒரு பூ வியாபாரி “தெனமும் எனக்கு ஒரு கூடை பூ கொடுங்க, போதும். பத்து ரூபா நான் தரேன்” என்று ஆயாவிடம் கேட்டுப் பார்த்தார். “அதெல்லாம் விக்கறதுக்கில்லப்பா” என்று பதில் சொன்னார் ஆயா. “வேணும்ன்னா பன்னெண்டா  வச்சிக்குங்க” என்று இறங்கிவந்து பேரம் பேசினார் வியாபாரி. “இங்க பாருங்க, ஏதோ என் ஆசைக்கு தோட்டம் வச்சி வளர்த்தேன். பூக்கற பூக்களை இந்தப் புள்ளைங்க கையாலே என் திருப்திக்கு சாமிக்கு வைக்கறேன். காசும் வேணாம். பணமும் வேணாம். விடுங்க” என்று அனுப்பிவைத்தார் ஆயா.

“பள்ளிக்கூடம் இருக்கிற நாள்ல பூவெல்லாத்தயும் ஆயா நமக்கு குடுக்கறாங்க. பள்ளிக்கூடம் இல்லாத நாள்ல ஆயா என்னடா செய்வாங்க?” என்று ஒருநாள் சந்தேகத்தை எழுப்பினாள் சிவகாமி. “அக்கம்பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்கு பிரிச்சி குடுப்பாங்களோ என்னமோ” என்றான் கோபி. “பள்ளிக்கூடத்து பசங்களுக்குத்தான் கொடுக்கணும்னு என்ன இருக்குது? தெருவுல போறவர பசங்களுக்குக்கூட கொடுக்கலாம்” என்றான் குமாரசாமி. “அதெல்லாம் இருக்காதுடா. அவுங்களே நடந்துபோய் பிள்ளையாருக்கு வச்சிட்டு வந்துருவாங்க” என்றான் சோமசுந்தரம். “கோவில் வரைக்கும் எதுக்குடா போவணும்? அவுங்க வீட்டிலயே சாமிய ஜோடிச்சி படைச்சிடுவாங்க” என்றாள் மல்லிகா. “பூவ பறிச்சாதான்டா என்ன செய்யணும்ன்னு யோசிக்கணும். பறிக்காம செடியிலயே விட்டா அப்படியே இருக்குமில்ல” என்று குறுக்கே புகுந்தான் தங்கராசு. நீண்ட நேர மௌனத்துக்குப் பிறகு “லீவ் வந்துட்டா  ஆயாவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான், பாவம்ல” என்று நாக்கு சப்புக்கொட்டினான் செல்லப்பா.

ஒற்றை மலரை நரையோடிய கூந்தலில் செருகியபடி கூடை நிறைய ரோஜாப்பூக்களோடு திண்ணையில் அமர்ந்திருக்கும் போஸ்ட் மாஸ்டர் ஆயாவின் சித்திரம் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இன்னும் பசுமையாக என் நெஞ்சில் பதிந்துள்ளது. இன்று அந்த ஆயாவோ திண்ணையோ எதுவுமே இல்லை. வீடும் இல்லை. தோட்டமும் இல்லை. பல கைகள் மாறி இன்று அது வேறு கோலத்தில் நிற்கிறது.

கணிப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்டு வந்திருக்கும் இந்தச் சிறுகதைகளுக்கு ஒரு வாரமாக மெய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்துப் பதினைந்து வரிகளைக் கடப்பதற்குள், ஒவ்வொரு கதையும் உருவான சூழல் கற்பனையில் விரிந்துவிடுகிறது. மழையில் நனைந்து செல்பவன் போல, நான் அந்நினைவில் நனைந்தபடியே வெகுதொலைவு சென்றுவிடுகிறேன். வளரத் தொடங்கிவிட்ட கற்பனையை நிறுத்திவிட்டு, மீண்டும் திருத்தும் பணிக்குத் திரும்புவது பெரும்பாடாகவே இருக்கிறது.

1982 முதல் 2008 வரைக்கும் ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகளில் எழுதிய சிறுகதைகள் இவை. எல்லோரும் வெளியிடுவதுபோல காலவரிசைப்படியோ, தொகுப்பு வரிசைப்படியோ அடுக்காமல் கதைமையத்தைத் தொட்டு வரிசைப்படுத்தும் வகையில் சிறுகதைகளை அடுக்கலாம் என்று நானும் நண்பர் நடராஜனும் முடிவெடுத்தோம். அப்படி கலைத்ததாலேயே, அதுவரை உறைந்திருந்த காலம் உருகிக் கரையத் தொடங்கிவிட்டது.

குவிந்திருக்கும் இச்சிறுகதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில்தான் சட்டென்று ரோஜாக் கூடையை நினைத்துக்கொண்டேன். அதைத்தொட்டு போஸ்ட்மாஸ்டர் ஆயாவையும் நினைத்துக்கொண்டேன். ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, ஆண்டுக்கணக்கில் தன் வீட்டுத் திண்ணையைக் கடந்துபோகும் சிறுவர்சிறுமியருக்கு எடுத்து எடுத்து வழங்கியவர் அந்த ஆயா. ஆயாவைப்போல நானும் என்னைத் தேடிவரும் வாசகர்களுக்கு என்வசம் இருக்கும் பூக்களை அன்போடு எடுத்து வழங்குகிறேன்.  பூக்களை எடுத்துக் கொடுப்பதையும் கதைகளை எடுத்துக் கொடுப்பதையும் பற்றிய நினைவுகள் எழும்போது, அதன்  தொடர்ச்சியாக பிள்ளைகளுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக எடுத்துக்கொடுக்கும் காட்சியை அழகான சிறுகதையாக எழுதிய முன்னோடி எழுத்தாளர் கு.அழகிரிசாமியைப்பற்றிய நினைவும் எழுகிறது. குழந்தைகளின் அனுபவங்களை அழகான கோட்டோவியங்களாக தம் கதைகளில் தீட்டிவைத்திருப்பவர் கு.அழகிரிசாமி. அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், குமாரபுரம் ஸ்டேஷன் என பல கதைகள் நினைவில் மோதுகின்றன. எளிமையும் வலிமையும் பொருந்தியவை அவருடைய சிறுகதைகள். தமிழ்ச்சிறுகதை உலகத்துக்கு அவருடைய படைப்புகள் மிகப்பெரிய கொடை. தமிழ்ச்சிறுகதை உலகம் என்னும் பெரிய கோலத்தில் அவர் ஒரு புள்ளி என்றால் இன்னொரு முனையில் நானும் ஒரு புள்ளியென நினைத்துக்கொள்கிறேன். இச்சிறுகதைத்தொகுதியை கு.அழகிரிசாமி அவர்களுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

உண்மையைக் குறிப்பிடவேண்டுமெனில் இத்தொகுதி நண்பர் நடராஜனின் கனவு. அவர் சொல்லிச்சொல்லி எனக்கும் கனவாக மாறியது. நாங்கள் இருவரும் கண்ட ஒரே கனவு. அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இத்தொகுப்புக்கான கனவோடு இருந்த மற்றொரு முக்கியமான நண்பர் ஆந்திர வங்கி பாலு. இன்று அவர் இயற்கையோடு கலந்துவிட்டார். அவருக்கு என் வணக்கம். தீபம் முதல் அம்ருதா வரைக்கும் இச்சிறுகதைகளை வெளியிட்ட இதழ்களின் பட்டியல் மிகவும் நீண்டது. அவ்விதழ்களின் ஆசிரியர்கள் அனைவரையும் இத்தருணத்தில் அன்போடும் நன்றியோடும் நினைத்துக்கொள்கிறேன்.

என் இல்லத்தரசி அமுதாவின் ஊக்கமும் அன்பும் என் படைப்பாக்க முயற்சிகளில் எப்போதும் துணையாக இருப்பவை. அவரை நினைக்காமல் ஒருகணம் கூட கடந்துபோனதில்லை. இந்தத் தொகுதியின் வடிவமைப்பில் ஆழ்ந்த கவனத்தோடு ஒத்துழைப்பு நல்கிய மேனகாவுக்கு நன்றி சொல்லவேண்டும். இந்தச் சிறுகதைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் பிரசுரித்திருக்கும் சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி

மிக்க அன்புடன்

பாவண்ணன்