Home

Sunday, 17 July 2022

பேசுதல் - சிறுகதை


‘பத்து நாளக்கி எவ்ளோத்தம் வேணுமோ அவ்ளோத்தம் எடுத்துக்க சுசிலா. என்னத்துக்கு எல்லாத்தயும் எடுத்துக்னும் போயி மறுபடியும் சொமந்துக்னு வரணும். கொஞ்சமாக எடுத்துக்கயேன்’

ரொம்பவும் சாதாரணமாகத்தான் சொன்னான் துளசிங்கம். சொல்லி முடிக்கிற தருணத்தில் கூட மனைவியோடு பிரயாணப்படுகிற சந்தோஷமும், தனக்குப் பிரியமான ஊர்க்குப் போய் நிறைய வருடங்களாய் காணாத ஜனங்களைக் காணப் போகிற சந்தோஷமும், தனது புது மனைவியை அவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப் போகிற கூச்சமுடனான சந்தோஷமும் புரள்கிற மனசோடுதான் இருந்தான். புருஷனோடு கிளம்புகிற உற்சாகமும் சந்தோஷமுமாய் அவள் இருக்கிற சந்தர்ப்பத்தில்தான் சொன்னான்.

சட்டென்று அரைக்கணம் வேலையை நிறுத்தி புருவம் உயர்த்திய சுசிலா இவனை ஊடுருவுகிற மாதிரியான ஒரு பார்வையை உதிர்த்து தலையைப் பின்னுக்குச் சாய்த்துச் சொன்னாள்.

‘நீங்களே வந்து வச்சிக்குங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது.’

அவளிடம் இருந்து வார்த்தைகள் விழுந்த தோரணை ரொம்பவும் புதுசாக இருந்தது இவனுக்கு. ஒரு சின்ன நகர்த்தலில் என்னுடையதில்லை இது என்கிற ரீதியில் விலகுகிற தோரணை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று தள்ளி நிற்கிற தோரணை. கல்யாணமான ஐந்து மாதத்தில் இதுவரை கண்டுகொள்ளாத தோரணை. இவனுக்கு அம்பு குத்தியது மாதிரி இருந்தது மனசில். சட்டென்று விலகி எழுந்து போய் விட்ட அவளது செய்கை வேதனை தருவதாய் இருந்தது. ஒரு சந்தோஷமான புறப்படுதல் எந்த சந்தர்ப்பத்தாலும் கெட்டுப் போகக்கூடாது என்ற எண்ணமுடையவனாய்த் தானே ஒவ்வொன்றாய் எடுத்துப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.

சுசிலாவுக்குத் திடீரென்று ஏன் எரிச்சல் வரவேண்டும். அதிக சுமைகளுடனான பிரயாணம் சுகமா தரும். பொருள்களும் அதன் மேலான கவனமும் உடைய மனசோடு ஊர் சுற்றினால் சந்தோஷம் எங்கிருந்து வரும்? சுற்றுச்சூழலோடு முழுக்க ஐக்கியமாதல்தானே சந்தோஷம். அப்படி முழுக்கவும் ஐக்கியப்படவிடாமல் அது பத்திரமாய் இருக்கிறதா, இது பத்திரமாய் இருக்கிறதா, தூங்கும்போது யாராவது எடுத்துக் கொண்டுபோய் விடுவார்களா என்றெல்லாம் பயங்கள் படரும்போது எங்கிருந்து வரும் சந்தோஷம். மேலும் சுமந்துபோய் சுமந்துவரல் சிரமம்தானே. இது ஏன் இவளுக்குப் புரியவில்லை.

யோசனைகள் ஊடுருவுகிற மனசோடு தேவையானதை வைத்து முடித்திடுகிற சமயம் வரைக்கும் ஒடுங்கி நின்று இவனையே பார்த்த சுசிலா வாசலைக் கடந்து மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளப் போனாள்.

விருட்டென்று அவள் புறப்பாடு இவன் மனசுக்கு மேலும் வேதனை தருவதாய் இருந்தது. தள்ளி தூண்பக்கமாய் சாய்ந்து நின்றுகொண்டான்.

தவிர்க்கமுடியாமல் கல்யாணம் ஆனதில் இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவளுடனான அனுபவங்கள் ஒவ்வொன்றும் சித்திரம் சித்திரமாய் ஞாபகம் வந்தது. கூச்சமும், சட்டென்று இணக்கமாகி விடுகிற சுபாவமுமாய் ஆரம்பத்தில் அவள் நிகழ்த்திய பேச்சுகள், மெல்லமெல்ல உரிமையை ஸ்வீகரித்துக் கொள்கிறவளாய் சிறிதே வெட்கம் விலகி நிகழ்த்திய பேச்சுகள், கல்யாணம் ஆன எட்டாவது நாளே தவிர்க்க முடியாமல் தனிக்குடித்தனம் வந்ததும் முழு சுதந்திரத்துடன் நிகழ்த்திய பேச்சுகள், நாளாவட்டத்தில் பயமும் நாணமும் விலகி ஆவலோடும் ஈடுபாட்டோடும் பல விஷயங்களைத் தர்க்கிக்கிற பாவனையில் நிகழ்த்திய பேச்சுகள் எல்லாம் அடுக்கடுக்காய் ஞாபகம் வந்தது. அவை அனைத்தும் சந்தோஷம் தருவதாகவே இருந்தன. பேசுதலை தவித்துச் சட்டென்று நகர்ந்துவிட்ட இன்றைய சம்பவம் மாதிரி என்றுமே நிகழ்ந்தது இல்லை. இந்தப் புது அனுபவத்தின் வேதனை இவனுக்குத் தாங்கமுடியாததாகவும், பெரிய துயரம் தருவதாகவும் இருந்தது.

வாசலில் நிழலாடியது.

வாசல் வரைக்கும் எதிர்வீட்டு சிவகாமியை அழைத்து வந்து ஊருக்குப் புறப்படுகிற விஷயத்தை உற்சாகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் சுசிலா. தூணில் சாய்ந்தபடி அவளை இவன் உற்றுப்பார்த்தபோது ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று சொன்ன முகதோரணை இல்லை. ரொம்பவும் மலர்ச்சியாய்ச் சிரித்துச் சிரித்துப் பேசினாள். அவளது சிரிப்பும், குதூகலமான பேச்சும் இவனுக்குள் மீண்டும் சந்தோஷம் புரளச் செய்வதாய் இருந்தன. இவனும் மலர்ந்து அவளையே பார்த்திருந்தான்.

இவன் எண்ணம் தவறு என்கிற மாதிரி சிவகாமியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குள் காலடி வைத்த கணமே சிரிப்பு மறைந்து ஒருவித இறுக்கம் குடிகொண்டது அவளிடம். எந்த சம்பாஷணையும் இல்லாமல் நேரே வந்து இவன் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்த துணிமணிகளையும் பொருள்களையும் மெல்ல உற்றுப்பார்த்துவிட்டு சயைமல் கட்டுக்குள் போய்விட்டாள். ஒருசில நொடிகள் நகர்ந்தன. அதுவே ரொம்ப நேரம் போலவும், அந்தத் தனிமை சகிக்க முடியாத ஒன்றாகவும் பட்டது இவனுக்கு. எழுந்து சமையல் கட்டுக்குள் போனான்.

‘சுசிலா’

மெல்லிய குரலிலான இவன் அழைப்புக்குத் திரும்பினாள் அவள்.

‘யேன் சுசிலா இங்க வந்து நின்னுக்ன...?’

ஒன்னுமில்லியே’

‘ஒடம்புக்கு ஏதாச்சும் சரியில்லயா?’

‘ஒன்னுமில்லியே’

‘பின்ன எதுக்கு உம்முனு இருக்க?’

‘ஒன்னுமில்லியே’

‘கொஞ்சமா எடுத்துக்கனு சொன்னனே அதுக்கு கோவமா?’

‘இல்லியே’

‘இல்ல இல்லங்கற, ஆனா இந்த மாதிரி ஒதுங்கி வந்து நின்னுக்னு இருந்தா நா இன்னான்னு நெனச்சிக்கறது சுசிலா’

‘அதான் ஒன்னுமில்லங்கறன்ல’

அவள் ‘ஒன்னுமில்லியே ஒன்னுமில்லியே’ என்று பதில் சொன்ன விதம் ரொம்பவும் சங்கடமும் துக்கமும் தருவதாய் இருந்தது. ‘கொஞசமா எடுத்துக்கேன்’ என்று சொல்லப்பட்ட ஒரு சாதாரண வார்த்தை ஒருத்தியை இத்தனை தூரத்துக்கு கோபப்படுத்தி உள்ளுக்குள்ளேயே புகைய வைக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இவன். ஒரு மகிழ்ச்சியின் ஆரம்பம் இப்படி தவிர்க்க முடியாமல் துக்கப்படலில் முடிந்தது தவிப்பாய் இருந்தது இவனுக்கு. நெஞ்சுக்குள் ஏதோ உடைந்து கசிகிற மாதிரி இருந்தது. ரொம்பவும் சமீபமாய் நின்று கொண்டிருந்தாலும் இவனைத் தவிர்த்து ஜன்னலில் தெரிந்த துண்டு வானத்தை உற்றுப் பார்க்கிறவளாய், தோட்டத்தில் அவரைப் பந்தலைப் பார்க்கிறவளாய், குளியலுக்குக் கட்டிய கீற்றுத் தட்டியைப் பார்க்கிறவளாய் மௌனமாய் நின்றாள் இவள். உரையாடல் இல்லாத தனிமை இவனுக்குச் சங்கடமாகப் பட்டது.

‘சரி. நா எடுத்து வச்சது போதுமான்னு பாரு சுசிலா கௌம்பிரலாம். நேரமாய்டுச்சி’

அதற்குப் பதில் சொல்லாது இவனைத் தாண்டி சமையல் கட்டை விட்டு வெளிய வந்தாள் அவள். என்னென்ன எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிற முயற்சி சிறிதும் இல்லாதவளாய் பெட்டியை மூடினாள்.

‘இன்னம் ஏதாச்சும் வேணுமான்னு பாரேன் சுசிலா’

‘ஒன்னுமில்ல’

மீண்டும் அவளது ஒற்றை வார்த்தைப் பதில் இவனை வெகுவாகக் கவலைப்படச்செய்தது. நெற்றிமேடு படபடவென்று துடித்தது. கண்ணுக்கடியில் அழுத்தமாய் ரத்தம் பரவிக் கரைவதை உணர முடிந்தது. சுமை பற்றி அக்கறை இல்லாமல் அவள் இஷ்டத்துக்கு எடுத்துவைக்கவிட்டு நாலைந்து பெட்டிகளானாலும் பரவாயில்லை என்று பேசாமல் இருந்திருக்கலாமோ என்று விரக்தியாய் நினைத்தான். ‘கொஞ்சமா எடுத்துக்கேன்’ என்று சொன்னதும் ‘பத்து நாளு இருக்க போறோம். போற எடத்ல என்னென்ன கெடைக்குமோ கெடைக்காதோ எப்பிடித் தெரியும். இங்கேர்ந்தே வசதியா எல்லாத்தயும் எடுத்துக்னும் போனா பரவால்ல’ என்கிற ரீதியில் அப்பாவித்தனமாய் அவள் பதில் சொல்வாள். அந்த சமயத்தில் அவள் பக்கத்தில் போய் சுமை குறைவான பிரயாணத்தின் சுகத்தையும், பிரயாணப்படுகிற ஊரில் கிடைக்கிற சௌகரியங்களையும், மெதுவாய் எடுத்துச் சொல்லலாம். இவன் சொன்னபடியும் அவள் கேட்டபடியும் ரெண்டுபேருமாய் தேவையானதை அடுக்கி வைக்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தான். அந்தச் சுகக் கற்பனையின் தொடக்கமாய்த்தான் அப்படிச் சொல்ல நேரிட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாய் இவனால் சொல்லப்பட்ட வார்த்தை தப்பாய் அர்த்தம் செய்து கொள்ளப்பட்டு இத்தனை தூரத்துக்கு கசப்பைக் கொண்டுவரும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆதலால் ரொம்பவும் மனக்கஷ்டம் கொண்டான்.

சின்னப்பெட்டியைத் தூக்கி அறைக்காலுக்கு அந்தப் பக்கம் வைத்துவிட்டு நின்று இவனைப் பார்த்தாள் அவள். ‘நான் தயார்’ என்கிற ரீதியிலான பார்வை, அவள் வீம்பு காட்டக்காட்ட இவனுக்குப் பேச வார்த்தை இல்லாது போயிற்று, சங்கடத்தோடேயே வெளியே வந்து கதவை இழுத்துப் பூட்டினான். சாவியைப் பைக்குள் போட்டபடி பெட்டியைத் தூக்கிக்கொண்டான்.

எதிர்வீட்டுச் சிவகாமி இறவாணத்தைப் பிடித்தபடி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘போய் வரங்க்கா’

‘ம்’

அவள் பக்கமாய் ஒரு சிரிப்பை மலர்ச்சியோடு உதிர்த்து இயல்பாய் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் இறுக்கத்தோடு நடந்தாள் அவள்.

வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு கொஞ்ச தூரம்தான். ஆனால் எப்போதும் இந்த தூரத்தை நடந்து கடப்பதில்தான் இவனுக்கு இஷ்டம். ஒரு ரூபாய் ரிக்ஷாவிற்கு கொடுத்தால் நிமிஷத்தில் போய்விடலாம் என்றாலும் எப்போதும் அதை விரும்புவதில்லை இவன். என்னதான் உச்சி பிளக்கிற வெயிலாய் இருந்தாலும் சூரியகிரணங்களை எப்போதும் ஒரு அளவாகவே பாதை மேல் விழச்செய்தபடி இரண்டு பக்கமும் அடர்ந்து இருக்கும் காட்டுவாகை மரங்களின் நிழலில் மெல்ல நடப்பது எப்போதும் பிரியமாகவே இருக்கும் இவனுக்கு. உடம்பைத் தடவுகிற அதன் காற்று, எப்போதும் குளிர வைக்கிற சுகமாய் இருக்கும். கீழே உதிர்ந்து கிடக்கிற இலைகளைச் சரக் சரக்கென்று மிதித்து நடப்பதும் சுகம் தரும். தினத்துக்கு எட்டு தரம் இந்தப் பாதையில் நடக்கிற இவனுக்கு இன்றைய நடைரொம்பவும் விசித்திர அனுபவமாய் இருந்தது. அவனுக்குத் தெரிந்து இவ்வளவு மனக்கஷ்டத்தோடு ஒருநாளும் நடந்தது இல்லை. இதே சுசிலாவோடு பல தரம் இந்தப் பாதையில் நடந்திருக்கிறான் இவன். சினிமாவுக்குப் போக, சினேகிதர்கள் வீட்டு விருந்துக்குப் போக, சும்மா ஊரைச் சுற்றிப் பார்க்க, வீட்டு வேலை எதுவும் இல்லாத சாயங்காலங்களில் நேரக்கழிப்பாய் நடந்துவர என்று இதே காட்டுவாகை மரப்பந்தலுக்குக் கீழே பலமுறைகள் நடைகள் நிகழ்ந்து இருகின்றன. அப்படி நிகழ்ந்த ஒவ்வொரு நடையும் ரொம்பவும் சுவாரஸ்யமும், உற்சாகமும் படரப்படர நிகழ்த்தப்பட்ட சம்பாஷணைகளோடுதான். தன் உறவு ஜனம், பள்ளிக்கூடத்து சிநேகிதிகள் பற்றி, ரொம்பவும் பிரியமான அம்மா பற்றி எப்போதோ நடந்த ஒரு கோலப் போட்டியில் தான் ஜெயித்தது பற்றியெல்லாம் அந்தந்த நிமிஷங்களில் நடந்து முடிந்த மாதிரி அவளும், தனக்கு உயிரான நண்பர்கள் பற்றி, அவர்களால் நேர்ந்த உதவிகள் பற்றி, தனது கவிதை அனுபவம் பற்றி, தான் எழுதிச் சமீபத்தில் பிரசுரமான ஒரு கவிதை பற்றி, அப்போது நேர்ந்த சந்தோஷம் பற்றி இவனும் வாய் வலிக்கவலிக்க பேசிப் பரிமாறிக் கொண்டதும் இந்தத் தெருவில் இந்த மரங்களின் நிழலில்தான். இவர்கள் ரெண்டு பேருமாய் நடக்கிற போது சிரிப்பும் சந்தோஷமுமாய்ப் போகிற தினுசைப் பார்த்து எதிர்த்திசையிலோ அல்லது இவர்கள் செல்லும் திசையிலோ செல்கிற ஜனங்கள் ஒரு அற்புதமான கல்யாண ஜோடியைக் கண்ட மலர்ச்சியோடு போவதை இவனே பல முறை கவனித்திருக்கிறான். இன்று நேர்ந்த மாதிரியான ஒரு ஊமைத்தனம் என்றும் வாய்த்ததில்லை. கல்யாணத்துக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு அமைதியான நடை எப்போதுமே நேரப் பெறாத இவனால் அதைச் சகித்துக்கொள்ள இயலவில்லை. இப்படி மனசில் வைத்துப் புழுங்கிப் புழுங்கி வேக்காளத்தோடு ஊமையாகி பக்கத்தில் நடந்தபடி தூரமாய் நிற்கிற மனோபாவனையோடு இருப்பதைவிட இது என் கருத்து, இது ஏன் உன்னோடு ஒத்துப்போகக்கூடாது என்று திறந்து பேசிப் புரியவைக்கவும் அல்லது புரிந்துகொள்ளவும் செய்யலாம். எதுவும் இல்லாமல் மௌனமாய் வருகிற ஒவ்வொரு கணமும் நம் சந்தோஷம் தானே கெடுகிறது. வாழ்க்கையில் நமக்கென்றான சந்தோஷத்தின் பங்குதானே குறைகிறது. இன்னும் பத்து நிமிஷமோ அதிகபட்சம் பஸ் ஏறுகிற வரைக்குமோ இவள் பேசாமல் வரலாம். அப்புறம் மனசு சரிப்பட்டு பேச நேரிடலாம். அப்படி நேரிடுகிறவரை சந்தோஷமின்றி பேச்சின்றி இழக்கப் போகிற நிமிஷங்கள் அப்புறமாய் வா என்றால் திரும்ப வருமா. இதை ஏன் இவள் உணரவில்லை என்று நினைக்கநினைக்க இவனுக்கு ரொம்பவும் துக்கமாய் இருந்தது. அவள்தான் சும்மா வந்தால் தானும் சும்மா இருப்பது தவறு என்கிற மனோபாவனையோடு அவளைப் பேசவைக்கிற முயற்சியில் பிரியத்தோடு ஈடுபட்டான் இவன்.

வைக்கோல் சுமந்தபடி மாட்டுவண்டி ஒன்று போனது. கம்பீரத்தோடும் ‘ச்சளங் ச்சளங்’ என்று கொம்புமணி அசைவோடும் வருகிற காளைகளைப பார்த்ததும் அது கவுண்டர் வீட்டு வண்டி என்று புரிந்தது இவனுக்கு, தனது முயற்சியை இந்த வண்டியில் இருந்து ஆரம்பிக்க நினைத்தான் இவன்.

‘இந்த வண்டி யார்துன்னு தெரிமா சுசிலா’

‘ம்’

‘தோ வக்கிலு ஏத்திகினும் போவுதே வண்டி, அது யாருதுன்னு தெரிமான்னு கேட்டன்’

‘ம்ஹும்’

இறுக்கம் குறையாமல் அவள் பூமியை பார்த்தபடியே தலையாட்டினாள். ‘ம்ஹும்’ தரும் அர்த்தத்தையே வேறு விதமாய் ‘தெரியாதுங்களே யார்து’ என்று குழைந்த குரலோடு கேட்டிருந்தால் சந்தோஷமாயும், அதைப் பற்றி மேலும் சொல்ல ஆர்வமாயும் இருந்திருக்கும் என்று நினைத்தான். இப்படி வேறு வார்த்தைகளில் சொல்ல மனசில்லாவிட்டாலும் கூட இவன் முகத்தை பார்த்தாவது ம்ஹுமை சொல்லி இருக்கலாம். அதுவாவது ஓரளவு சந்தோஷமாய்த்தான் இருக்கும். எதுவும் இல்லாமல் இவன் பார்வையை விலக்கிப் பூமியைப் பார்த்தபடி உச்சரிக்கப்பட்ட ஒற்றை வார்த்தை காயம் பட்டதுபோல் இருந்தது. தனது முயற்சியின் ஆரம்பமே இந்த ரீதியில் புறக்கணித்தலான ஒரு சம்பவமாய்ப் போய்விட்டாலும் கூட பேசுவித்தலில் இது சகஜம்தான் என்று மேலும் தொடர்ந்தான்.

‘சுப்பிரமணி கோயில் தெருவுல கவுண்டர் ஊடுன்னு சொன்னா எல்லார்க்கும் தெரியும். ரொம்ப நல்ல மனசு அவுர்க்கு. இந்த வண்டி அவுர்துதா. வண்டியும் மாடும் தான் அவுர்தே தவிர தெருவுல யாருக்கும் ஒரு அவசரம்னு போனாலும் வண்டிய குடுப்பாரு. ஒரு பைசா வாங்க மாட்டாரு. ஓரம் அடிக்கணுமா, எரு அடிக்கணுமா, ஏதாச்சும் சாமான் ஏத்தணுமா எல்லாத்துக்கும் கவுண்டர் வண்டிதா. ரொம்ப தாராளமான மனசு. ஆனா அவுருக்குப் புடிக்காத விஷயம் என்னான்னா ஜாஸ்தி பாரம் ஏத்தக் கூடாது மாட்ட அடிக்கக் கூடாது. எவனாச்சும் மாட்ட அடிக்கறது பாத்தாருன்னா போச்சி. அவ்ளோதான் ஜென்மத்துக்கும் அவுர்கிட்ட அப்புறம் வண்டி வாங்க முடியாது...’

இவன் சொன்ன விஷயங்களைக் கேட்ட மாதிரியும் இல்லாமல், கேட்காத மாதிரியும் இல்லாமல் ஒரே விதமான முகபாவனையோடு வந்தாள் சுசிலா. இன்னும் அவள் இறுக்கம் தளராதது இவனக்கு கஷ்டமாய் இருந்தது. வண்டி பின்னுக்கு எவ்வளவோ தூரம் போய் மணி ஓசையும் தேய்ந்து போனது.

மரக்கிளைகளில் இருந்த பட்சிகளின் ஓசை ரொம்ப வித்தியாசமாய் கேட்கத் தக்கதாய் இருந்தது. கிளைகளின் சின்னச் சின்ன சந்துகளுக்கிடையே சூரிய வெளிச்சம் வட்டம் வட்டமாய் நுழைந்து தரையில் ஜொலிக்கிற விதம் ரசனைக்குரியதாய் இருந்தது. வழி முழுக்க காசு நிரப்பிய மாதிரி இருந்த அந்த சூழலை சந்தோஷத்தோடு அவளுடன் பகிர்ந்து கொள்ள இவனுக்கு மனசு துடித்தது. எப்படியும் ஸ்டாண்ட் போய் சேர்வதற்குள் இவள் பேசுதல் நிகழந்துவிடும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் அவளுடன் பேசத் தயாரானான் இவன்.

இடுப்பில் செருகி இருந்த முந்தானையை விலக்கிப் போர்வை மாதிரி தோள் முழுக்கப் போர்த்திக் கையால் பிடித்துக் கொண்டாள் அவள். ரோட்டில் விழுந்து கிடந்த ஒரு வாகைக் காயை காலால் தள்ளிக் கொண்டே கொஞ்சம் தூரத்துக்கு வந்து அப்புறம் கை விட்டாள்.

பெரியார் பஸ் ஒன்று இவர்களைக் கடந்து போனது. அதைப் பார்த்ததும் அதனோடு சம்பந்தமான ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தான் இவன்.

‘ஒரு தரம் இந்தப் பெரியார் பஸ்லதா ஊருக்குப் போயிருந்தான். மீதி சில்லறய தராம கண்டக்டர் டிக்கட்லியே எழுதிக் குடுத்திட்டான். மூணுரூபா எண்பது பைசா. எனக்குத்தா ஞாபகமறதி ஜாஸ்தியாச்சே. ஊர் போய் சேர்ந்ததும் எறங்கிட்டேன். பஸ்ஸுக்கும் லஞ்ச் டைம் போல. நிறத்திட்டான். நா போயி ஓட்டல்ல சாப்பிட்டு ஒரு கடைல வாழைப்பழம் வாங்கனன். சில்லற குடுக்கப் பைல கையை உடறபோதுதா டிக்கட்ட பாத்தன். ஐயய்யோ கண்டக்டர்கிட்ட காசு வாங்கலியேன்னு ஏர்பேக்க கடக்காரன்கிட்டியே பாத்துக்கப்பா தோ வரன்னு சொல்லிட்டு ஓடனன். பஸ் ஸ்டாண்டுக்குள்ளார நா நொழையவும் வண்டி பொறப்படவும் சரியாய்டுச்சி. ஹோல்டான் ஹோல்டான்னு கத்திக்னே பின்னால போறன். ம்ஹும். நிறுத்தற மாதிரியே இல்ல. நல்ல வேளையா காலேஜ் பொண்ணுங்க ஏழெட்டு பேரு கைய காட்டி அந்த வண்டிய நிறுத்தனாங்க. அதுக்குள்ளார ஓடிப்போய் சில்லறய வாங்கனன்...’

இந்த சம்பவமும் அவளிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது இவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இதுவே வேறு சமயமாய் இருந்தால் சில்லறை வாங்காமல் இறங்கியதைக் கேட்டு பச்சாதாப பட்டு, ஓடியது கேட்டு வியப்புற்று கடைசியில் ஞாபகமறதிக் குணத்தைக் கேலி செய்து சிரித்திருப்பாள். அந்த சுபாவங்களுக்கெல்லாம் சட்டென்று ஒரு திரை போட்டு மூட இவளால் எப்படி முடிகிறது என்று மிகவும் விசனத்தோடு நினைத்தான்.

பேசுதல் இவனது பக்கத்தில் இருந்தே நிகழ்ந்து கொண்டிருக்க அவள் வெறுமனே துணைக்கு நடந்து வருவது ரொம்பவும் கஷ்டமாய் இருந்தது. அவளாக ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என நம்பினான் இவன். இந்த ஐந்து மாச வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பாஷணைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் நிறைய ஞாபகம் வந்தது இவனுக்கு. இவற்றில் எத்தனை சம்பாஷணைகளை இவள் ஆரம்பித்தாள் இவன் எத்தனை ஆரம்பித்திருப்பான் என்றெல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா என யோசித்தான். அதெல்லாம் முடிகிற விஷயமாய்த் தெரியவில்லை இவனுக்கு. ஆனால் நிறைய நேரங்களில் அவளே சம்பாஷணையை ஆரம்பித்து வைத்திருக்கிறாள் என்பது மட்டும் உண்மை. முக்கால் வாசி இவனிடம் இருக்கிற ஏதாவது சுபாவத்தைப்பற்றி, சட்டை நிறத்தைப் பற்றி, இவனுக்கு வந்த லெட்டர்களில் இவன் சிநேகிதர்கள் எழுதி இருந்த விஷயம் பற்றி அவளாகவே அபிப்பராயம் சொல்கிற ரீதியில் ஆரம்பிக்கிற சம்பாஷணை மணிக்கணக்கில் நடக்கும். அத்தகையவளின் ஊமையான வருகைதான் ஒரு விசித்திரமான சோகத்தைத் தருவதாய் இருந்தது.

மீண்டும் இவனே பேச ஆரம்பித்தான். வழியில் இருந்த வாய்க்கால் பற்றி, அதில் சின்ன வயசில் தானும் சினேகிதர்களும் குளித்தது பற்றி, தண்ணீர்ப் பாம்புக்குப் பயந்தது பற்றி, அடுத்து வந்த சந்தைத் தோப்பு பற்றி, ஆஸ்பத்திரி பற்றி தகரக்குடிசைகளில் இருந்த ஜனங்கள் பற்றியெல்லாம் ஒற்றையாகவே பேசினான். ம் கொட்டுதலும் இல்லாமல், இவனது பார்வைச் சந்திப்பும் இல்லாமல் பூமியை பார்த்தபடி தலையசைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளது ஒவ்வொரு தலையசைப்புக்கும் அசைகிற காது வளையங்களையும், காதோரம் நெளிகிற பூனைமயிர்களையும் பார்த்தபடியே வந்தான் இவன். முகம் இன்னும் இறுகியபடிதான் இருந்தது அவளுக்கு. சட்டென்று அவள் முகத்தில் அதிகப்படியான மஞ்சள் பூசி இருப்பது போல் இவனுக்குப் பட்டது. பளீர் என்ற மஞ்சள் பூச்சு கருப்பான அவள் முகத்துக்கு கொஞ்சம் அழகுக் குறைச்சலாகவே உணர்ந்தாள் இவன்.

‘மொகத்துக்கு இவ்ளோத்தம் மஞ்சளா பூசுவாங்க?’

சட்டென்று இவன் பக்கமாய்த் திரும்பி தளர்தலற்ற ஒரு பார்வையை உதிர்த்து விட்டு மீண்டும் பூமியைப் பார்த்து நடந்தாள்.

‘போட்டு மஞ்சள எழச்சுட்டியா...?’

கொஞ்சம் கேலியான குரலில் ரொம்பவும் சுபாவமாய்க் கேட்டான் இவன். இடது கையால் கன்னத்தில் அரும்பிய வேர்வையை துடைத்தபடி வந்தாள் அவள்.

‘இன்னா சுசிலா கேக்கறன்... காதுல உழல’ ‘மஞ்சளிலேயே குளுச்சிட்டியான்னேன்’

‘பத்து நாளைக்கும் சேத்து ஒரேடியா தேச்சிக்னன். அத வேற எடுத்துவச்சா சொமயாய்டுமோன்னு’

மனசுக்குள் என்னமோ சரிந்து உடைகிற மாதிரி இருந்தது இவனுக்கு. இவ்வளவு தாக்குதலான பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவன் அவளைப் பேச வைக்கத் தான் எடுத்த முயற்சிகள் தன்னையே பேசாமல் வரச் செய்கிற அளவுக்குப் போய் முடியும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. இதயத்துடிப்பு அதிகமானது இவனுக்கு.

கை ரொம்பவும் வலிக்கிற மாதிரி இருந்தது. இன்னொரு கைக்கு பெட்டியை மாற்றிக் கொண்டான். பேசுதற்கு வார்த்தை இல்லாமல் மெதுவாய் நடந்தான்.

பஸ் ஸ்டான்ட் போவதற்குள் அவள் பேசுவாள் என்கிற நம்பிக்கை ஒரு கோணத்தில் கரைகிறமாதிரி இருந்தாலும் இன்னொரு கோணத்தில் அப்படியெல்லாம் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற ஆசையும், படபடப்பும் இருந்தன, நெற்றிமேட்டில் அரும்பிய வேர்வையை அழுத்தித் துடைத்துக் கொண்டான் இவன்.

தோளில் இருந்த சேலையை ரொம்பவும் குளிருக்கு இறுக்கிப் பிடிக்கிற மாதிரி பிடித்துக்கொண்டு நடந்தாள் சுசிலா.

(அரும்பு -1989)