Home

Sunday 3 July 2022

தொண்டு என்னும் வாழ்க்கைநெறி

        

இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டத்தை  இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். காந்தியடிகளின் வருகைக்கு முற்பட்ட காலம் என்பது ஒரு பகுதி.  அவர் வருகைக்குப் பிறகான காலம் என்பது அடுத்த பகுதி. காந்தியடிகளே சுதந்திரப்போராட்டத்துக்கு ஒரு வடிவத்தையும் நோக்கத்தையும் வழிமுறையையும் வகுத்தவர். சத்தியாகிரகமும் அகிம்சையும் அவருடைய வழிமுறையாக இருந்தன. அப்போராட்டம் எங்கும் வெறுப்பை விதைக்கவில்லை. மாறாக தன் உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்வைப்பதாக இருந்தன. போராட்டத்தின் வழியில் அவர் வன்முறையை முற்றிலும் விலக்கிவைத்தார்.

அர்ப்பணிப்புணர்வு மிக்க காந்தியடிகளுடைய போராட்டப்பாதையில் நடந்த தேசத்தொண்டர்கள் பலர். அவர் தம்மைப் பின்பற்றும் தொண்டர்களை தொடக்கத்திலேயே இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துவைத்தார். ஒரு பிரிவு நாட்டுக்கான அரசியல் விடுதலைப்போரில் நேரிடையாக ஈடுபட்டது. விடுதலை பெறவிருக்கும் இந்தியா எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், எப்படி இயங்கவேண்டும் என்பதைச் சார்ந்து காந்தியடிகளுக்கு ஒரு கனவு இருந்தது.  எண்ணற்ற நிர்மாணப்பணிகளை நடைமுறைப்படுத்துவதன் வழியாகவே அந்தக் கனவை நிறைவேற்ற முடியும் என்னும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. இரண்டாவது பிரிவைச் சேர்ந்த தொண்டர்கள் அத்தகு நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.

நிர்மாணப்பணிகளை நிறைவேறுவதற்காக எண்ணற்ற ஆசிரமங்கள் நாடெங்கும் உருவாகின. தமிழகத்தில் திருச்செங்கோடு என்னும் ஊரில் 06.02.1925 அன்று இராஜாஜி ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். அப்போது ஏற்கனவே பம்பாய் நகரத்தில் கதர் விற்பனையில் அனுபவம் பெற்றிருந்த  இளைஞரொருவர் ஆசிரமத்தில் வந்து இணைந்துகொண்டார். அவர் பெயர் கிருஷ்ணன். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அவருக்கு இருபது ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தேசத்துக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும் என்னும் எண்ணம் நிறைந்திருந்த கிருஷ்ணன் சம்பளத்தைப் பொருட்டாக நினைக்காமல் ஆசிரமத்தில் தொடர்ந்து பணிபுரிந்தார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன் வாழ்க்கை வரலாற்றை நினைவுக்குறிப்புகளாக ஒரு குறிப்பேட்டில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார் கிருஷ்ணன். இறுதிக்கால உடல்நிலையின் காரணமாக, அந்தக் குறிப்புகளை அவரால் முழுமை செய்ய இயலாமல் போய்விட்டது. முற்றுப் பெறாத அந்தத் தன்வரலாற்றை அவருடைய மகன் தேடிக் கண்டுபிடித்து அக்குறிப்புகளுக்கு அவருடைய நூற்றாண்டு நாளான 2008இல் ஒரு நூல்வடிவம் கொடுத்தார். இராஜாஜியுடன் பழகிய, பேசிய அனுபவங்களைப்பற்றி கிருஷ்ணன் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளையும் அவற்றுடன் இணைத்து, இப்போது ஒரு தேசத்தொண்டனின் கதை என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். குடிசைத்தொழில் முறையில் காகிதம் தயாரிக்கும் செய்முறையை நேரில் பார்த்து பயிற்சியெடுப்பதற்காக வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த நேரத்தில் ஐந்து நிமிடம் காந்தியடிகளைச் சந்தித்துப் பேசிய அனுபவத்தைப்பற்றி கிருஷ்ணன் எழுதிய ஒரு தனிக்கட்டுரையும் நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

1927இல் ஐம்பது சிறுவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவுக்குத் தலைவனாக இருந்து நெல்லைக்கு வரவிருந்த காந்தியடிகளிடம் கதர்ப்பணிகளுக்கு வழங்குவதற்காக அலைந்து நிதி திரட்டிவைத்திருந்த நிலையில், அதை நேரிடையாக காந்தியடிகளிடம் ஒப்படைக்க வழியில்லாமல் குடும்பத்தாரின் நெருக்கடிக்கு இணங்கி பம்பாய்க்கு ரயிலேறிய தருணத்திலிருந்து தொடங்குகிறது, கிருஷ்ணனின் தன்வரலாறு. பம்பாயில் வருமானத்துக்கென ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பணியாற்றிய போதிலும், தன் மனநிறைவுக்காக கதர்ப்பணிகளில் ஈடுபட நினைத்து, தினந்தோறும் கதராடைகளை மூட்டையாகச் சுமந்து சென்று தெருத்தெருவாக அலைந்து விற்பனை செய்வதில் ஈடுபட்டார். தொடக்கத்திலேயே இப்படி அவர் கதருடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டார்.

1929இல் தந்தையார் மறைவையொட்டி ஊருக்குத் திரும்பிவந்த கிருஷ்ணன், விளாத்திகுளத்தில் அவருடைய சகோதரர் வழியாகக் கிடைத்த ஒரு மேஸ்திரி வேலையைச் செய்துவந்தார். அப்போதும் கதர்ப்பணிகள் மீது அவர் கொண்ட ஆழ்ந்த ஈடுபாடு குறையவில்லை. அருகிலிருந்த கதர் மையத்திலிருந்து கதராடைகளை வாங்கி மூட்டையாகக் கட்டிச் சென்று தெருதோறும் அலைந்து விற்கத் தொடங்கினார். தற்செயலாக கதர் மையத்தில் கண்ட விமோசனம் என்னும் இதழைப் படித்துவிட்டு, மதுவுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த அந்தப் பத்திரிகையை மக்களிடையே பிரபலப்படுத்தி எழுபத்தைந்து சந்தாக்கள் திரட்டி அனுப்பிவைத்தார்.  இறுதியாக பெரியவர்களின் ஒப்புதலோடு திருச்செங்கோடு ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்தார். வேதாரண்யம் சத்தியாகிரகத்தையொட்டி அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம் அது. சந்தா திரட்டி அனுப்பியிருந்த பத்திரிகைக்கே உதவியாசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. தமிழகமெங்கும் பயணம் செய்து சத்தியாகிரகத்தில் கைதாகிச் சிறைக்குச் சென்ற தியாகிகளைப்பற்றிய விவரப்பட்டியலை கிருஷ்ணன் தயாரித்தார். ஏறத்தாழ நாலாயிரம் பேர் தமிழகத்தில் சிறைக்குச் சென்றதாக கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கிருஷ்ணன் இருமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். 1932இல் நாமக்கல்லில் அயல்நாட்டுத்துணிகள் விற்கப்படும் கடைகள் முன்னால் கதர்த்தொண்டர்களை இணைத்து ஒரு போராட்டத்தைத் தொடங்கிய கிருஷ்ணன் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். ஒருசில நாட்கள் கழித்து, காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சாது மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் புறப்பட்டபோது அவரை அரசு கைது செய்து ஓராண்டு காலம் சிறையில் அடைத்தது. 1933இல் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக யாத்திரையில் பங்கேற்றதற்காக கிருஷ்ணன் மறுபடியும் கைது செய்யப்பட்டு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்றார்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு ஆசிரமப்பணியிலேயே முழுமூச்சுடன் ஈடுபட்டார் கிருஷ்ணன்.  கதர்ப்பணிகளில் அவர் மனம் மிகவும் நிறைவடைந்தது. அரசியல் சூழலில் எண்ணற்ற மாற்றங்கள் உருவான போதும் காந்தியப்பாதையில் அர்ப்பணிப்புணர்வோடு தொடர்ந்து நடந்தார். தொடக்கத்தில் திருமணமே வேண்டாம் என ஒதுங்கியிருந்த கிருஷ்ணன் மூத்த சகோதரர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்கி தன் முப்பதாவது வயதில் அவர் எவ்விதமான சடங்குகளுக்கும் இடமின்றி எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். காந்தி ஆசிரமம் அவருடைய இன்னொரு அடையாளமாகவே மாறிவிட்டது. அனைவரும் அவரை காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் என்றே அழைத்தனர்.

முற்றுப்பெறாத குறிப்பு என்றபோதும், இக்குறிப்புகள் வழியாக கிருஷ்ணனைப்பற்றிய முழுமையான சித்திரத்தை நம்மால் உருவகித்துக்கொள்ளமுடிகிறது.

இராஜாஜி தொடர்பான பகுதிகள் இராஜாஜியின் மேன்மையையும் எளிமையையும் உணர்த்தும் விதத்திலும் தொண்டரான கிருஷ்ணனுக்கும் அவருக்கும் இருந்த நெருக்கத்தை உணர்த்தும் விதத்திலும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு ஒரு குறிப்பு. இராஜாஜி டில்லியில் இருந்த சமயத்தில் அவருக்கு தமிழகத்திலிருந்து மாரிமுத்து என்பவர் ஒரு கடிதம் எழுதினார். காந்தி ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அங்கே மாணவராகப் படித்தவர் என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, காது கேளாத, வாய் பேசமுடியாத தன் மகன் உழைத்துப் பிழைக்க உதவியாக ஒரு தையல் மிஷின் கிடைக்க உதவுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடிதத்தைப் படித்த ராஜாஜியால் அந்த மாரிமுத்துவின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர இயலவில்லை. அதே சமயத்தில் அவர் கேட்கும் உதவியை மறுக்கவும் மனம் வரவில்லை. அதனால் ஆசிரமத்தின் மேலாளராக இருந்த நாராயணராவுக்கு ஐநூறு ரூபாய்க்கு ஒரு காசோலையும் ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார்.

அக்கடிதத்தில் மூன்று குறிப்புகள் உள்ளன. கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது முதல் குறிப்பு. ஒரு தையல் மிஷினை வாங்கி, அதை ஆசிரமச்சொத்தாக வைத்துக்கொண்டு, மாத வாடகையாக பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த இளைஞனுக்கு மிஷினைக் கொடுத்து உதவுவது இரண்டாவது குறிப்பு. ஓராண்டு காலத்துக்குப் பிறகு, அவனுடைய நிலைமை முன்னேற்றத்தையும் வாடகையைக் கட்டும் நேர்மையையும் உறுதி செய்துகொண்டு, அந்த மிஷினை அந்த இளைஞனுக்கே அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டும் என்பதும் அந்த இளைஞனிடமிருந்து  வசூலித்த பணத்தையும் திருப்பித் தரவேண்டும் என்பதும் மூன்றாவது குறிப்பு.  இந்த மதிப்பீடு அவருடைய கூர்த்த மதிக்கு ஓர் அடையாளம் என்றே சொல்லவேண்டும். பொதுவாக உதவி என ஒருவர் தன் முன் நிற்கும் தருணத்தில் முற்றிலும் கரைந்துபோவது வழக்கம். அல்லது முற்றிலுமாக உதறிவிட்டுச் செல்வது வழக்கம். இரு வழிகளிலும் செல்லாது, அத்தருணத்தில் இராஜாஜி காட்டும் நிதானமும் விவேகமான சிந்தனையும் மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

நூலின் இறுதியில் வெளிச்சத்துக்கு வராத நிர்மாண ஊழியர்கள் என்னும் தலைப்பில் கண்ணன் எழுதிய தனிக்கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. லங்காபதி சிவகுருநாதன், வெண்ணாற்றங்கரை நாகராஜராவ், ஆர்.வேங்கடராமன், ஹரிஜன் கோபு என்று அழைக்கப்பட்ட கோபாலகிருஷ்ண ஐயர், எஸ்.சுப்புரத்தினம், டாக்டர் ரங்கநாதன், வி.எஸ்.தியாகராஜன், எம்.கே.வேங்கடராமன், முனுசாமி, தேனீ விசுவநாதன் ஆகியோரைப்பற்றி சிறுசிறு குறிப்புகளையும் அவர்கள் பணிபுரிந்த களங்களைப்பற்றியும் சுருக்கமாக எழுதியுள்ளார். உப்பாகக் கரைந்துபோன தியாக உள்ளங்களை நினைவில் நிறுத்திவைத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. ஒருவேளை அவர்களும் கிருஷ்ணனைப்போல தன்வரலாற்றுக் குறிப்புகளை எழுதிவைத்திருந்தால், அவையும் நூல்வடிவம் பெறவேண்டும்.

கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும் அவரோடு ஆசிரமத்தில் தொண்டாற்றிய பிற தொண்டர்களின் வாழ்க்கைக்குறிப்புகளையும் படிக்கும்போது ஓர் உண்மையை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தொண்டு என்பதையும் சேவை என்பதையும் அவர்கள் ஒருபோதும் ஓய்வுநேர வேலையாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை நெறியாகவும் முதன்மை இலக்காகவும் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதுவே இந்த மண்ணில் காந்தியம் ஈட்டிய மிகப்பெரிய வெற்றி. கிருஷ்ணனைப்போன்றவர்கள் அதற்கு நடமாடும் சாட்சிகளாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

 

(ஒரு தேசத்தொண்டனின் கதை – காந்தி ஆசிரமம் கிருஷ்ணன். வெளியீடு கி. கண்ணன், 31 ஏ, நானா நானி ஹோம்ஸ், கே.கே.ஆர்.நகர், வடவள்ளி- 641041.)

 

(சர்வோதயம் மலர்கிறது – ஜூன் 2022)