Home

Wednesday, 13 July 2022

தாய்மையின் சாயல்

 

      சிற்சில சமயங்களில் நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்துவிடும். அதுவரை காட்சிப்படங்களாக நகர்ந்துகொண்டிருந்த கனவு சட்டென அறுந்துவிடும். கனவில் நிகழ்ந்தது என்ன என்பதே புரியாது. எவ்வளவு யோசித்தாலும் ஒரு காட்சியைக் கூட நினைவிலிருந்து மீட்டெடுக்கமுடியாது.  அதற்குப் பிறகு தூங்கவும் பிடிக்காமல் எழுந்து சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தபடி நின்றிருப்பேன். இத்தகு அனுபவம் ஒரு சிலருக்காவது ஏற்பட்டிருக்கும்.

      அக்கணத்தில் வானம் அழகாக இருக்கும். மல்லிகை அரும்புகள் சிதறியதைப்போல எங்கெங்கும் விண்மீன்கள் சிதறிக்கிடக்கும். பக்கத்து வீட்டு தொழுவத்திலிருந்து மாடுகள் கால்மாற்றி நிற்கும் சத்தம் கேட்கும். அருகில் எங்கோ அகால நேரத்தில் இரண்டு சக்கர வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்கும். வெகுதொலைவில் தனக்கே உரிய சைரன் சத்தத்துடன் அவசர ஊர்தியொன்று போகும் சத்தமும் கேட்கும். இப்படி காதில் விழும் சத்தங்களெல்லாம் மனமென்னும் ஒலிநாடாவில் தன் போக்கில் பதிவானபடி இருக்கும். என்றாவது ஒருநாள் எதிர்பாராதபடி ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கும். அக்கணமே எந்தத் திசையிலிருந்து வருகிறது, எந்த வீட்டிலிருந்து வருகிறது எனக் கண்டறிய அவசரமாக விழிகள் அலையும். கண்டுபிடித்து ஆற்றவேண்டிய கடமை என எதுவுமில்லை. யாருக்கும் தெரியப்படுத்தவும் முடியாது. யாரையும் அங்கு அனுப்பிவைக்கவும் முடியாது. ஆயினும் அடையாளம் கண்டுபிடிக்கும் வரை மனத்தின் பதற்றத்தையும் அலைபாய்தலையும் கட்டுப்படுத்தவே முடியாது. ஒவ்வொரு புலனையும் அந்த அழுகை விழித்தெழச் செய்துவிடும்.

      பிருந்தா இளங்கோவனின் தொகுதியில்    இதே போன்றதொரு அனுபவத்தை முன்வைக்கும் ஒரு கவிதை சாமம் என்னும் தலைப்பில் உள்ளது. அவருடைய பார்வையிலும் நிலவொளி பூசிய தெரு விரிந்திருக்கிறது. உறங்கும் திண்ணைகள், ஓசையடங்கிய கட்டில், அசையாத மரங்கள், மெளனம் கவிந்த கூடுகள், அமைதியாக கிணற்றடியில் சுருண்டுகிடக்கும் கயிறு, உறங்கும் பூனை, இருள் அப்பிய தொழுவம் ஆகியவற்றின் இருப்பையும் அவரால் உணரமுடிகிறது. அனைத்தும் உணரத்தக்கதாக இருக்கும் அந்த இருளில் ஒரு குழந்தையின் சிணுங்கலொலி அவரைச் சிலிர்க்கவைத்து அலைபாய வைக்கிறது. அந்தப் பொது அனுபவத்தை ஒரு சின்ன கற்பனையின் வழியாக கவித்துவம் நிறைந்ததாக மாற்றியிருக்கிறார் பிருந்தா.

 

குழந்தையொன்றின்

விகசித்த சிணுங்கல் ஒலி

நிசியின் புலன்களை

மெல்ல எழுப்புகிறது

     

பரு உடல் கொண்ட உயிராக இருட்டை உருமாற்றுகிறார் பிருந்தா. ஒரு பெண்ணாகவோ, ஆணாகவோ எங்கோ ஒரு மூலையில் நின்று அனைத்தையும் பார்க்கிற அந்த இருட்டு, குழந்தையின் ஒலியைக் கேட்டு மெய்ச்சிலிர்க்கிறது. சாமத்தின் மெய்ச்சிலிர்ப்புக்கு சாட்சியாக நிற்கிறார் கவிஞர்.

கல்விப்பருவத்தைக் கடந்து, மருத்துவராக வாழ்ந்து, ஒரு குழந்தைக்குத் தாயாக இல்லற வாழ்க்கையில் குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் பயணம் செய்துவந்திருக்கும் பிருந்தா, தன் மனமும் வாழ்வும் கனிந்த பருவத்தில் கவிதைக்கு வந்திருக்கிறார். அந்தப் பக்குவம் தாய்மை கனிந்த பார்வையை பிருந்தாவின் இயல்பாகக் கட்டமைத்திருக்கிறது. இளமைப்பருவம் முதலாக அவருடைய இதயத்தில் பதிந்திருக்கும் காட்சிகளும் சமகாலக்காட்சிகளும் அந்தத் தாய்மையின் சாயலை ஏற்று வெளிப்படுகின்றன. ஒரு குவளைத் தண்ணீருக்குள் ஒரே ஒரு சொட்டு திராட்சைச்சாற்றை ஊற்றி, திராட்சை ரசமாக மாற்றும் மாயத்தைப்போல பிருந்தா தன் கவிதைகளில் தாய்மையின் சாயலை நிறைத்திருக்கிறார்.

எல்லாக் கட்டங்களிலும் வாழ்க்கை நம்மை நம்முடைய இயற்கையான இயல்பு சார்ந்து இயங்கவிடுவதில்லை. வேறொன்றாக மாறுவதற்கான சூழல்களை வெவ்வேறு விதங்களில் உருவாக்கி, நம்மை ஈர்க்கத் தொடங்குகின்றன. நம் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.  கனிவுமிக்க தாய்மை அச்சூழலைச் சமாளிக்கும் விதமாக, தன்னை ஒரு குழந்தையாக மாற்றிக்கொள்கிறது.  தன்னைத் திசைதிருப்பும் மிருகத்தைக்கூட குழந்தையின் கண்களோடு பார்க்கிறது.  குழந்தையின் விரல்களால் தொட்டு விளையாடுகிறது. தொட்டு, பழகி, விளையாடி, மிருகத்தைக்கூட மெல்ல மெல்ல குழந்தையாக மாற்றிவிடுகிறது. கடைசியில் தன் மடியிலேயே படுக்கவைத்துக்கொண்டு தட்டிக் கொடுத்து தூங்கவைக்கிறது. நானெப்படுவது யாதெனில் என்று தன்னைத் தானே வரையறுத்துக்கொள்ளும் கவிதையில் அந்த உருமாற்றத்தின் சித்திரத்தைப் பார்க்கமுடிகிறது.

 

எனக்குள்ளொரு

மிருகம் இருக்கிறது

வெஞ்சினம் கொண்டு

இடவலமாய் அலைந்து திரிகிறது

நாளெல்லாம்

எனக்குள் ஒரு

குழந்தையுமிருக்கிறது

அச்சமின்றி அருகமர்ந்து

மிருகத்தின் கூர்நகங்களைச் சீராக்குகிறது

செங்குருதி படிந்த

அதன் கோரப்பற்களைச்

சுத்தம் செய்கிறது

இரவுப்பொழுதுகளில்

குழந்தையின் மடி சாய்ந்து

உறங்குகிறது அந்த மிருகம்

நிச்சலனமாக

 

கனிந்த மனம் கொண்டவர்களின் ஆழ்மனத்தில் கூட சிற்சில சமயங்களில் ஏதோ ஓர் ஏக்கம் படிந்துவிடுகிறது.  தனிமைத்துயரை அளிக்கும் அந்த ஏக்கத்துக்கு நிரந்தரத் தீர்வென எதுவுமில்லை. வெளிப்படுத்தவும் முடியாத, விழுங்கவும் முடியாத அத்துயரத்தை மனக்கரையில் ஒரு பாறையாக ஒதுக்கிவைப்பதுதான் ஒரே வழி. பாறையை கவிதையாக மாற்றுகிறது பிருந்தாவின் கவித்துவம். குரல் கவிதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

 

தினமும் ஒரே மெட்டில்தான்

பாடுகிறது அந்தக் குயில்

 

நீளமான ஒரு கூவல்

தொடர்ந்து

சிறுசிறு கேவல்களாக ஓர் அழைப்பு

விரைந்து வரச்சொல்லி

பேடைக் குயிலிடம்

இறஞ்சுவதான பாவனையில்

 

முகம்மட்டும்

காட்டுவதில்லை என்னிடம்

நான் மரம் நெருங்கும்போதே

என் வாசனையுணர்ந்ததுபோல

உச்சிக்கிளைக்குத் தாவி

இலைத்திரையின் பின்

மறைந்துகொள்கிறது

 

காதலின்

ஏக்கம் தெறிக்குமந்தக் குரல்

கேட்கும் கணந்தோறும் என்னை

ஏதோ ஒரு விதமாய்

வதை செய்கிறது

என்னை அவ்விதமாய்

அழைப்பார் யாருளர்…

 

இதுவும் உருமாற்றும் கலையின் இன்னொரு சித்திரம்தான். கவிதை முழுதும் ஒரு குயிலின் சித்திரம் வந்தபடி இருக்கிறது. இலைகளின் அடர்த்தியாலோ அல்லது காட்சித்தொலைவின் காரணமாகவோ, அந்தக் குயிலின் உருவம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆயினும் அதன் உருக்கமான குரலின் அழைப்பு கேட்டபடி இருக்கிறது. அழைப்புக்குரிய இணையை அந்தக் குயில் பார்க்கவில்லை. அழைக்கும் குயிலை அந்தத் தருணத்தை விவரிப்பவர் பார்க்கவில்லை. எனினும் உருக்கமான குரல் மட்டும் வெளிப்பட்டபடி இருக்கிறது. அக்குரலால் மனம் உருகிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவர் மனம் சட்டென இன்னொரு காட்சிக்குத் தாவிவிடுகிறது. அதேபோன்ற குரலில், அதேபோன்ற மென்மையோடும் உருக்கத்தோடும் தன்னை யாராவது அழைத்திருப்பார்களா என்று கேள்விக்கு அவரிடம் விடை இல்லை. அவருடைய நினைவுக்கு எட்டிய வரையில் அப்படி ஒருவரும் இறந்த காலத்திலும் இல்லை. நிகழ்காலத்திலும் இல்லை. எதிர்காலத்திலும் இருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. குயிலைத் தேடத் தொடங்கும் கண்கள் மெல்ல மெல்ல தன்னை உருக்கமுடன் அழைக்கும் உயிரைத் தேடும் தேடலாக உருமாறிவிடுகிறது.  

தொகுப்பில் சிறந்த கவிதைகளில் ஒன்று சுவை நிறைந்த வீடு. உண்மையை வெளிப்படுத்த முடியாத காதல் தலைவியின் சங்கடத்தை வெளிப்படுத்தும் அகத்துறைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. கபிலரின் பாடலொன்றில் வழிப்போக்கன்போல வாசலில் வந்து நின்று தண்ணீர் கேட்கும் காதலனுக்கு தண்ணீர் ஊற்றச் சென்ற தலைவியின் கைகளை சட்டென எட்டிப் பிடித்துவிடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இயல்பான அதிர்ச்சியில் அவள் அலறிவிட, எதற்கு அலறுகிறாய் என்று உள்ளிருந்தபடியே கேட்கும் தாயிடம் தண்ணீர் அருந்தும்போது அவனுக்கு வந்த விக்கலைப் பார்த்து அதிர்ச்சியில் அலறியதாக மனமறிந்து பொய்யைச் சொல்கிறாள் அவள். மெய்யுரைக்கமுடியாமல் திண்டாடும் தருணங்கள் தமிழ்க்கவிதைகளில் காலந்தோறும் இடம்பெற்றபடி இருக்கின்றன. பிருந்தாவின் தொகுதியிலும் அந்த வகைமையில் ஒரு கவிதை உள்ளது.

 

யாருமறியாமல்

நானும் நீயும் முத்தமிட்டுக்கொண்ட

அந்தக் கிராமத்து வீட்டிற்கு நான்

போக நேர்ந்தது

மாடியறைக்கு எதற்குப் போகிறாய்

தூசும் தும்புமாய்க் கிடக்கிறதென்று

அரற்றினாள்

கயிற்றுக்கட்டிலில் சுருண்டிருந்த

அங்கம்மைக்கிழவி

முன்பு

கோடைப்பருவத்திலொரு மாலைப்பொழுதில்

மொட்டை மாடியின் இளவெயிலை

உள்வாங்கிக்கொண்டு

சங்கரன் மாமாவின்

வேஷ்டி விரிப்பின் மேல் உலர்த்தப்பட்டிருந்த

புளியம்பழங்களில் ஒன்றை

வெகுவாய் ரசித்துத் தின்ற பின்னர்

நாம் பரிமாறிக்கொண்ட

இனிப்பும் புளிப்புமான அந்த இதழ் முத்தம்

இன்னுமொரு முறை

ஒரேயொரு முறை

அரக்குப் பெட்டியின் இழுப்பறையில் கிடக்கும்

உன் இளவயதுப் புகைப்பட்டத்திலிருந்தேனும்

கிடைக்குமாவென்று

பார்ப்பதற்கு யோகிறேனென்பதை

கிழவிக்கு எங்ஙனம் சொல்வேன்?

 

ஒரு தொன்மக்கதையை விவரிக்கும் சாயலில்  பிருந்தா எழுதியிருக்கும் சில கவிதைகளும் இத்தொகுதியில் உள்ளன. பிருந்தாவின் ஆளுமையைப் புரிந்துகொள்ள அக்கவிதைகள் உதவிசெய்கின்றன. மேல்தளத்தில் அவை கதைகளைப்போல காட்சியளித்தாலும் ஆழத்தில் அவை வேறொரு தரிசனத்தை வெளிப்படுத்துகின்றன. அவருடைய சித்தரிப்பு மொழி அத்தகு கதைகளை முன்வைப்பதற்குப் பொருத்தமாக உள்ளன. ஒரு காதல் கதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

காதலர்களுக்கிடையில் எதிர்பாராத விதமாக பிளவு ஏற்பட்டுவிடுகிறது நல்ல நண்பர்களாக பிரிந்து செல்லலாம் என்று முடிவெடுத்துக்கொள்கிறார்கள். வருடக்கணக்கில் வளர்த்துக்கொண்ட காதலை என்ன செய்வது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. முதலில் அதை மண்ணில் புதைத்தார்கள். ஆனால் அது துளிர்த்து வளர்ந்துவிட்டது. பிறகு கடலில் வீசினார்கள். ஆனாலும் அலைகள் கரைசேர்த்துவிட்டன. நெருப்பிட்டுப் பொசுக்க முயற்சி செய்தார்கள். உருக்க முடியவில்லை. இறுதியில் ஏழுகடல் தாண்டி ஏழு மலைகள் தாண்டி ஒரு பொந்தில் வசித்துவந்த கிளியிடம் கொடுத்தார்கள். அடுத்த பிறவியில் வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தார்கள். காதலின் சாரத்தை விழுங்கிய கிளி தன் நெஞ்சில் அதைப் பாதுகாத்தது. பிறகு அதன் சந்ததிகளும் அக்காதலைப் பாதுகாத்துவந்தன. யுகம்யுகமாய் குலவிக்கொண்டு திரியும் அந்தச் சந்ததிகளுக்கு காதல் கிளிகள் என்று பெயர்சூட்டப்பட்டன. இன்றோ, காதலைப் பாதுகாக்கும் கிளிகளுக்குச் சிறகில்லை. சிறகில்லாத காதல் கிளிகள் கொஞ்சிக் களித்தாடியபடி கூண்டுக்குள்ளேயே கிடக்கின்றன.

காதல் என்பது ஒரு கோணத்தில் மானுடனுக்கு வரமெனக் கிடைத்த சிறகு. அச்சிறகுடன் வானில் சுதந்திரமாகப் பறந்து திரிந்து களிக்கவேண்டியவர்கள் காதலர்கள். அந்த வரத்துடன் வாழ வழியில்லாமல்தான் அவர்கள் கிளிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பிரிந்து செல்கிறார்கள். நாளடைவில் காலம் மெல்ல மெல்ல கிளிகளின் சிறகுகளையும் கத்தரித்துவிடுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் காதல் இல்லாத கிளிகளை காதல் கிளிகள் என அழைப்பது நகைமுரணாகத் தோன்றலாம். ஆயினும்  ஒரு காலத்தில் சிறகாக இருந்த காதல், இன்று கூண்டுக்குள் கொஞ்சும் காதலாக மாறிவிட்ட எதார்த்தத்தைப் புரிந்துகொண்டால் அந்த எண்ணம் மறைந்துவிடும். ஒரே காதல்தான். ஆனால் அதன் வழியும் வடிவமும் இன்று மாறிவிட்டது.  

ஊடலின் இரவு பிருந்தா வடித்திருக்கும் இன்னொரு கதைச்சித்திரம். காதலின் இன்னொரு வடிவம் இக்கவிதையில் உள்ளது. ஒருநாள் காலையிலேயே இருவருக்குமிடையில் ஏதோ ஒரு விவாதம். யாரோ ஒருவர் மற்றவரைப் பார்த்து கடுஞ்சொல் பேசிவிடுகிறார். அது உருவாக்கிய வலியிலிருந்து அச்சொல்லைக் கேட்டுக்கொண்டவர்  அமைதியின்றித் தவிக்கிறார். இரவு வேளையிலும் அந்த அமைதியின்மை நீடிக்கிறது. இருவரும் இரு விளிம்புகளில் இருக்க, இரவு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. ஒரு மன்னிப்புக்கோரலில் முடிந்துவிடும் வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை கடுஞ்சொல்லுக்குச் சொந்தக்காரர் பயன்படுத்திக்கொள்ளா தயாராக இல்லை. ஏதோ ஓர் ஆணவப்புள்ளி அவரைத் தடுத்து நிறுத்துகிறது.

காலையில் நீ

வீசியெறிந்துவிட்டுப் போன

ஒற்றைக் கடுஞ்சொல்

நம்மிருவருக்குமிடையில்

சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது

நம் காதலை வென்றுவிட்ட களிப்புடன்

 

கவனப்பிசகாக சொல்லப்பட்ட ஒரு கடுஞ்சொல் காதலர்கள் இருவருக்குமிடையில் ஒரு மூன்றாவது மனிதனைப்போல உட்கார்ந்துகொண்டிருக்கும் தோற்றம் சிறப்பானதொரு சித்திரம். கதைச்சித்திரங்களின் வரிசையில் வந்து கதைசொல் பாட்டி, காணமால் போன தெரு கவிதைகளும் முக்கியமானவை.

தொகுப்பின் மற்றொரு சிறந்த கவிதை வெற்றுக் காமம். இன்றைய நவீன காலத்தின் முகம் அக்கவிதையில் தெரிகிறது. தாய்மையின் சாயலோடு கவிதைகள் எழுதியிருக்கும் பிருந்தா, தாய்மையே சிக்கலாக மாறிவிட்ட அவலத்தை இக்கவிதையில் பேசுபொருளாக்கியுள்ளார்.  நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துக்குக் குறையாத குழந்தைகள் பிறந்தார்கள். முப்பது கோடி முகமுடைய இந்தியத்தாய் நூறு கோடி முகமுடைய தாயாகிவிட்டாள். இந்தியாவில் பெருகும் மக்கள் தொகையைக் கண்டு இந்திய அரசே ஒரு கட்டத்தில் அஞ்சி சோர்வில் மூழ்கி வெவ்வேறு சமூகத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது. முதலில், பத்து என்னும் எண்ணிக்கை எட்டு, ஆறு, நான்கு என படிப்படியாகக் குறைந்தது. அரசின் தொடர் பிரச்சாரத்தின் விளைவாக பத்துப்பதினைந்து ஆண்டுகளில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது எழுதாத இலக்கணமானது. இன்று திடீரென குழந்தையில்லாத குடும்பங்கள் பெருகத் தொடங்கிவிட்டன. குழந்தைப்பேறு மையங்களைவிட, குழந்தைப்பேறு ஆலோசனை மையங்கள் இன்று அதிகரித்துவிட்டன. காதல் உறவு கடமை சார்ந்த ஓர் உறவாக மாறிவிட்டது. அதன் வேதனையை விவரிக்க சொற்கள் போதாது. ரணம் எனத் தெரியாதபடி ஏதோ ஒரு முள் இதயத்தைக் கீறிவிட்டுச் செல்கிறது. அந்த முள்ளின்  தடம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையின் ஒரு முகம்.

 

மருத்துவர் குறித்துக் கொடுத்த

அட்டவனை நாட்களிலொன்றில்

இன்பம் துய்க்க ஏதுமில்லாத

குழந்தைப் பேற்றிற்கான

கலவி துவங்குகிறது

அவர்களுக்கு

 

பெயர் தெரிந்த கடவுளையெல்லாம்

கூவியழைத்து

இறைஞ்சி மன்றாடுமவள்

விழிக்கடையோரம் பெருகி வழியும்

உவர்நீரை

கணவன் அறியாமல்

துடைத்துக்கொள்ளும் பொருட்டு

விளக்கணைக்கச் சொல்கிறாள்

 

அதையறியாதவன் போல்

பாசாங்கு செய்கிறான் அவன்

இத்தனை வருடங்களாகியும்

வெட்கம் போகவிலையடி உனக்கு”

என்று கேலி பேசுகிறான்

கலங்கும் தன் கண்களை நிமிர்த்தாமல்

 

துயரத்தையும் ஒருவித கனிவுடன் அணுகி துயரற்றதாக உருமாற்றுகிறது பிருந்தாவின் கவிதை.  இப்புவியில் ஒரு கவிஞராக வாழ்வதால் கிட்டும் பெரும்பேறு இது.  வாழ்க்கையில் நம்மிடம் இறுதியாக எஞ்சும் ஒரு புன்னகையின் வெளிச்சம் பிருந்தாவின் கவிதையில் உள்ளது.  அதுவே அவர் வலிமை.

 

(எனக்கென பொழிகிறது தனிமழை. எஸ்.பிருந்தா இளங்கோவன், சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை – 600083)

 

(புக் டே – 05.07.2022 )