ஸ்டேஷனுக்குள் வண்டி நுழைந்தது. வேகம் குறையத் தொடங்கிய போதே சுகன்யாவைக் கண்டுபிடிக்கத் தயாரானேன். எதிர்பார்ப்பும் பயமும் கலந்த பரவசநிலை. திடுமென இதயத்துடிப்பு அதிகமானது.
இக்கின்பாதம்ஸ் கடை பார்வைக்கு முழுசாய்த் தெரிந்தது. ஒரு பக்கம் புத்தகத் தொங்கல். மறுபுறம் பழக்குலைகள். நடுவில் குளிர்பானங்களின் வரிசை. அதன் அருகில் இருந்த கல்பெஞ்சில்தான் சுகன்யாகவை வந்து காத்திருக்கச் சொல்லி எழுதியிருந்தேன். கிழிசல் அணிந்த இரண்டு சிறுவர்கள் காகிதத் தம்ளர்களைச் சேகரித்து எண்ணிக்கொண்டிருந்த காட்சிதான் அங்கே தெரிந்தது. சுகன்யா இல்லை. ஏமாற்றம் நெஞ்சை அடைத்தது. மூளையில் ஒரு நரம்பு துடித்து அடங்கியது. சட்டென எடை பார்க்கும் மிஷின் முன் நின்றிருந்த ஓர் உருவம் பார்வையில் விழுந்தது. துரதிருஷ்டவசமாய்ப் பின்பக்கம்தான் தெரிந்தது. அந்த வெளிர் நிறப்புடைவை அவளுடையதுதான்.
போனமுறை ஜபல்பூர் போயிருந்த போது வாங்கித் தந்தது. அந்தப் புடைவையும் முதுகும்
தலைக் கூந்தல் சரிவும் அவள் சுகன்யாதான் என்றன. ‘‘சுகன்யா’’ என்று எழுந்த குரலைக் கஷ்டப்பட்டு
அடக்கிக்கொண்டேன், ‘வண்டி வந்து நிற்பதுகூடத் தெரியாமல் நிற்கிறாயே அசடு, உன்னை இருக்கச்
சொன்ன இடம் எது, நீ இருக்கும் இடம் எது?’’ செல்லக் கோபம். வண்டி எப்போதும் நிற்கும்
என்று அவசரப்பட்டேன். மனிதனின் அவஸ்தை புரியாத வண்டி மெதுமெதுவாக வேகம் அடங்கிக் குலுக்கலோடு
நின்றது. பெட்டி, பைகளோடு கீழே இறங்கினேன்.
‘‘குட்மார்னிங் சார்’’ என்ற படி அருகில் வந்தவனைக் கவனித்தேன். எங்கள் நிறுவனத்தின்
சேவகன். ‘‘கண்டு புடிச்சிட்டியா. கருடப் பட்சிடா நீ’’ என்றேன்.
‘‘இதுல அட்வான்ஸ் நாலாயிரம் ரூபா இருக்குது. இது டிக்கட். எக்யுப்மென்ட்ஸ் ப்ரேக்வேன்ல
போட்டாச்சி. கவர்ல எல்லா பேப்பர்ஸும் இருக்குது.’’
சொல்லிக் கொடுத்த மிஷின்மாதிரி ஒப்பித்தான் அவன்.
‘‘அப்புறம்’’
‘‘விஷ் யூ ஹேப்பி ஜேர்னி சார்’’
‘‘என்ன ஹேப்பி ஜேர்னி போ. எறங்கி ரெண்டு நிமிஷம் கூட ஆகல. அதுக்குள்ள இன்னொரு
டிக்கட் குடுத்தனப்பறானே மொதலாளி, மொதல்ல அவன் மண்டைய போடணும். இல்ல நான் இந்த வேலய
உடணும். அப்பதான் ஹேப்பி...’’
ஒரு நாளில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது இந்த வேலையை விட்டொழித்துத் தலைமுழுகவேண்டும்
என்கிற அளவுக்கு வேகம் வருகிறது. அந்த அளவு வெறுப்பு, கசப்பு, ஆனால் தைரியம்தான் இல்லை.
இந்த நொள்ளை பி.எஸ்.சி. டிகிரி வைத்துக்கொண்டு வெளியே ஐநூறு ரூபாய் கூட சம்பாதிக்க
முடியாது.
‘‘சரிங்க, நா வரேன் சார்.’’
அவன் மறுபடியும் வணங்கிவிட்டு கூட்டத்தில் மறைந்து போனான். நான் சுகன்யாவைத்
தேடி இக்கின்பாதம்ஸ் கடைக்கருகே சென்றேன். மேலே கடிகாரம் தெரிந்தது. ஒன்றே முக்கால்
வண்டி சரியான சமயத்திற்கே வந்துவிட்டது. அந்த நேரத்திற்குத் தான் சுகன்யாவை வந்து காத்திருக்குமாறு
கடிதம் எழுதியிருந்தேன்.
எடைபார்க்கும் மிஷினின் அருகில் சுகன்யாவைக் காணவில்லை. தாட்டிகமான ஒருவர் மிஷின்
மீது ஏறிக்கொண்டு மிஷினைத் தட்டிக்கொண்டிருந்தார். என் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல்
சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டினேன். அருகில் இக்கின்பாதம்ஸ் கல்பெஞ்சையும் பார்த்தேன்.
இல்லை. நான் பார்த்த பெண் சுகன்யா இல்லை. என் கண்களில் ஏதோ பிழை. முதன்முறையாக மனசில்
ஏமாற்றம் கவிந்தது. பேசாமல் கல்பெஞ்ச்சின் மீது அமர்ந்தேன்.
என்ன செய்வது என்று புரியாமல் ஒருகணம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தை
அளந்தேன். ஹூப்ளியில் இருந்து நான்கு நாள்களுக்கு முன்பேயே கடிதம் எழுதியிருந்தேன்.
தந்தியும் கொடுத்திருந்தேன். தவறிப் போவதற்கு வாய்ப்பே இல்லை என்று மனம் திடமாக நம்பியது.
வழக்கமாக டூர்களுக்கு இடையே ஒரே ஒரு நாளாவது இடைவெளி இருக்கும். இரண்டு மூன்று
நாட்களுக்கு நடுவே அபூர்வமாக வரும் ஒரு நாள் விடுப்பு. இந்த முறை அது கூட இல்லை. ஹூப்ளியில்
இருந்து வந்த அன்றே தில்லிக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டார்கள். ஹூப்ளி
வண்டி வரும் நேரம் ஒன்றே முக்கால். தில்லி வண்டி புறப்படும் நேரம் நாலரை. இடைப்பட்ட
இரண்டே முக்கால் மணி நேரத்தில் புறநகரில் இருக்கும் ஜாலஹள்ளிக்குப் போய் வருவது பெரிய
வித்தைதான். சாத்தியமே இல்லாத விஷயம். சுகன்யாவைப் பார்த்து இரண்டு வாரமாகிறது. இந்த
இடைவெளி நேரத்தையும் விட்டால் மீண்டும் சந்திக்க இரண்டு வாரங்களாகிவிடும். எல்லாவற்றையும்
விளக்கிவிளக்கி எழுதியிருந்தேன். அவள் வரவில்லை. என் மனம் பதறியது. தலை வலித்தது.
வண்டியிலிருந்து இறங்கியவர்களும் எதிர்கொண்டவர்களுமாக நிரம்பி வழிந்த கூட்டம்
கும்மாளத்தோடு நகர்ந்தது. அவர்கள் ஆனந்தத்தைப் பார்க்கப் பார்க்க வெறுப்பாக இருந்தது.
அவ்வளவு பெரிய கூட்டத்திடையே திடீரென தனிமையை உணர்ந்தேன். என் கண்களில் இருள் சூழ்ந்தமாதிரி
இருந்தது.
‘‘கடலை... கடலை... டைம் பாஸ் கடலை சார்’’ என்று என் அருகில் ஒரு சிறுவன் வந்து
நின்றான். அவனுக்குப் போட்டியாக லாட்டரிச் சீட்டுச் சிறுமி ஒருத்தி இடது பக்கம் வந்து
விசிறி மடிப்பில் சீட்டுகளைப் பிரித்து நீட்டினாள். பதில் சொல்லாமல் இருவரையும் ஒரு
கணம் ஏறிட்டுப் பார்த்தேன். என் மௌனம் அவர்களுக்குத் தவறான உற்சாகத்தைக் கொடுத்து விட்டது.
‘‘சார்... சார்...’’ என்று கெஞ்சத் தொடங்கி விட்டார்கள். நான் பதிலே சொல்லாமல் நாக்கு
சப்புக் கொட்டிவிட்டுக் குனிந்து கொண்டது அவர்களை ஏமாற்றி விட்டது. வேறு பக்கம் நகர்ந்துகொண்டார்கள்.
வேறு ஏதாவது பிளாட்பாரம் அல்லது வேறு ஏதாவது இக்கின்பாதம்ஸ் பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கக்
கூடுமோ என்று திடுமென யோசனை எழுந்தது. முதலில் நான் உட்கார்ந்து கொண்டிருந்த பிளாட்பாரம்
முழுசையும் பார்த்துவிட முடிவு செய்து பெட்டி பைகளோடு நடந்தேன். அந்த மூலைக்கும் இந்த
மூலைக்கும் நடந்து கால்வலியும் தோள்வலியும் கண்டதுதான் மிச்சம். இது என்ன அப்பாவித்தனமான
நம்பிக்கை என்று தோன்றியது! அதே சமயம் பைகளைச் சுமந்து கொண்டு ஓர் அடி கூட எடுத்து
வைக்கவும் முடியாது என்றும் தோன்றியது. க்ளாக் ரூமை முதலில் தேடிப் பெட்டிகளை ஒப்படைத்த
பிறகு என் முயற்சியைத் தொடர்ந்தேன். ஏழு பிளாட்பாரங்களிலும் சல்லடை போட்டுச் சலித்தாகி
விட்டது. சுகன்யா இல்லை.
மணி இரண்டரை. என் முயற்சி தோற்றுக்கொண்டே இருக்கிறது என்பதில் கவலை கூடியது.
பசித்தது. ஆனால் சாபபிடப் பிடிக்கவில்லை. அதிகாலையிலிருந்து சுகன்யாவோடு சேர்ந்து சாப்பிடும்
ஆசையை அணுஅணுவாக மனசுக்குள் தீட்டிய சித்திரத்தை அவ்வளவு சீக்கிரம் அழித்து மாற்றி
எழுதிவிட முடியவில்லை. இந்நேரத்திற்குள் முதல் பிளாட்பாரத்தில் கல் பெஞ்சில் வந்து
காத்திருக்கிறது மாதிரி ஒரு சித்திரம் எழுந்தது. நம்பிக்கையின் இழையை உதற மனம் தயாராக
இல்லை. வேகவேகமாக ஏழாவது பிளாட்பாரத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தேன்.
இக்கின்பாதம்ஸ் கடைக்காரன் கடையைச் சாத்திக் கொண்டிருந்தான். கல்பெஞ்ச்சில் இரண்டு
குருவிகள் விளையாடிக்கொண்டிருந்தன.
இரண்டு குருவிகள். சாம்பலும் கருமையும் படிந்த குருவிகள். சற்றே நீண்ட குச்சி
ஒன்றைப் பெஞ்ச்சில் போட்டிருந்தன. அலகால் கவ்விக்கொண்டு பறக்கிற மாதிரி எழுகிறது ஒன்று.
ஒரே ஒரே அடிமட்டும் எழும்பி மீண்டும் தாழ்ந்து பெஞ்ச்சில் உட்கார்கிறது. இரண்டாவது
குருவி அதன் கழுத்தில் குத்துகிறது. சிக்சிக் என்று சத்தம். பிறகு முதல் குருவி குச்சியைக்
கவ்விக்கொண்டு தாவிவிட்டு மீண்டும் இறங்கி விடுகிறது. சிரமம் ஏன் என்று எனக்கு அப்போது
புரிந்தது. கொஞ்சம் எடைகூடிய நீளமான குச்சி அது. குருவிக்கு ஜோடியும் தேவை, குச்சியும்
தேவை என்பது சட்டென்று புரிந்தது. பேராசைக்குருவி என்று தொண்டைவரை எழுந்த வார்த்தையை
கஷ்டப்பட்டு அடக்கினேன். அதற்குள் அந்தக் குருவி நான்தான் என்று எண்ணத் தொடங்கிவிட்டேன்.
யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது! ஆண்குரல். ஆனாலும் திரும்பினேன். என்னை இல்லை.
என்னையும் தாண்டி இருந்தவரை அழைத்தது. என் அருகில் வந்து கைகுலுக்கிக் கொண்டார்கள்.
அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டபடி நின்றேன். இருவரும் பக்கத்தில் இருந்த சைவச்சிற்றுண்டிச்
சாலைக்குத் தோள்மேல் கை போட்டுக்கொண்டு சென்றார்கள். ஞாபகம் வந்தவன் போல பெஞ்சின் பக்கம்
திரும்பினேன். குருவிகள் இல்லை. குச்சிமட்டும் கிடந்தது.
மணி மூன்று. வர இருக்கிற வண்டிபற்றிய ஓர் அறிவிப்பு எழுந்தது. சட்டென்று ஒரு
யோசனை. வேக வேகமாக அறிவிப்பாளர் அறையை நோக்கிச் சென்றேன். இளம்பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள்.
என் நிறுவனத்தின் அடையாள அட்டையைக் காட்டியதும் அவன் கௌரவமாக எனக்கு இருக்கையைக் காட்டினாள்.
நான் என் கோரிக்கையைச் சுருக்கமாய் முன்வைத்தேன். அவள் எனக்காக வருத்தப்படுவதை உணரமுடிந்தது.
‘‘கவலைப்படாதீர்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’’ என்றாள். என் மனசின் பாதிப்
பாரம் குறைந்ததுபோல இருந்தது.
‘‘திருமதி சுகன்யா. எங்கிருந்தாலும் கவனிக்கவும். நாலரை மணி கர்நாடகா எக்ஸ்பிரஸில்
டில்லி செல்ல இருக்கிற உங்கள் கணவர் உங்களுக்காக ஏழாவது பிளாட்பாரத்தில் உள்ள இக்கின்பாதம்ஸ்
கடைக்குப் பக்கத்தில் இருக்கிற கல்பெஞ்ச்சில் காத்துக்கொண்டிருக்கிறார். உடனடியாய்ச்
சென்று சந்தியுங்கள்.’’
நான் அவளை நன்றியோடு பார்த்தேன். என் கண்கள் தளும்பத் தொடங்கின. அவசரமாய்ப்
பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துத் தரப் போனேன். அவள் கையை இழுத்துக் கொண்டு மறுத்தாள்.
‘‘கவலைப்படாதீங்க... வந்துடுவாங்க.’’
நான் தலையசைத்து நன்றி சொல்லிவிட்டுச் கல்பெஞ்சிற்குத் திரும்பினேன்.
ஒருவேளை என் கடிதமோ, தந்தியோ அவளுக்குக் கிடைக்காமல் போயிருக்குமோ என்கிற சாத்தியப்பாட்டை
நினைக்கத் தொடங்கினேன். பிடிவாதமாக அந்தச் சாத்தியப்பாட்டை ஏன் ஒதுக்கவேண்டும் என்று
தோன்றியது. பாதி பாதி அதற்கும் வாய்ப்பு இருப்பதை இப்போது மனம் ஒத்துக்கொண்டது. கடிதம்
கிடைத்து வராத அளவுக்குச் சுகன்யா ஆசையற்றவள் அல்ல. அவசரக் காரியத்துக்குக் கூட ஒரு
தொலைபேசி வீட்டில் இல்லாதது வெறுப்பாக இருந்தது. எங்கள் நிறுவனத்திற்கு என் ரத்தம்,
உழைப்பு எல்லாம் வேண்டும். ஆனால் ஒரு தொலைபேசி இணைப்புக்கு கூட வழி செய்ய மாட்டார்களாம்.
ஏதேதோ சட்ட திட்டங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார்கள். அக்கம்பக்கத்தில் கூட தொடர்பு
எண் எதுவுமில்லை. அவள் நேரத்தோடு புறப்பட்டும் கூட டவுன் பஸ்கள் கிடைக்காமல் போயிருந்தால்,
ஒருவேளை கிடைத்த வண்டி பாதியில் பழுதாகி நின்றிருந்தால்... இப்படி யோசிக்கவே பிடிக்கவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் யோசிக்கத் தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை. ஆயிரம் பதில்களைத்
தோண்டி எடுத்து, அப்பதில்கள் என்னும் குழியிலேயே நம்மை மூடிவிடும்போல இருந்தது.
‘‘திருமதி சுகன்யா... எங்கிருந்தாலும் கவனிக்கவும்... நாலரைமணி கர்நாடகா எக்ஸ்பிரஸில்...’’
நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மூன்றரை மணி. டில்லி வண்டி வந்து நின்றுவிட்டது.
இக்கின்பாதம்ஸ் கடைக்காரன் வந்து திறந்தான்.
உள்ளே உட்காரப் போனவன் ஒரு பெப்ஸியை உடைத்து இருக்கையில் உட்கார்ந்தபடி குடித்து
முடித்தான். சூழல் களைகட்டத் தொடங்கியது. கருப்பு கோட்போட்ட ஒருவர் ரிசர்வேஷன் தாளைப்
பெட்டிதோறும் வைத்து ஒட்டிக் கொண்டே சென்றார். அனிச்சையாக அவர் அருகில் சென்றேன் நான்.
என் டிக்கட்டை நீட்டிப் பெட்டியை உறுதிசெய்து கொண்டேன். என் லக்கேஜ் ஞாபகம் வந்தது.
எழுந்து சென்று க்ளாக் ரூம் வரிசையில் நின்றேன். அடிக்கடி திரும்பிக் கல் பெஞ்ச் பக்கம்
பார்த்துக் கொண்டே இருந்தேன். பெட்டி, பைகளை மீட்டுக்கொண்டதும் திரும்பும் கல்பெஞ்ச்
பக்கம் போவதா பெட்டிக்குப் போவதா என்று குழப்பம் வந்தது. ஒருகணம் தடுமாறினேன்.
‘‘என்ன வந்துட்டாங்களா?’’
நான் திடுக்கிட்டுத் திரும்பினேன், அறிவிப்பாள நங்கை. நான் ‘இல்லை’ என்று சிரிக்க
முயற்சி செய்தேன். அவள் “ம்ம்... வந்துடுவாங்க... வந்துடுவாங்க... கவலப்படாதீங்க’’
என்று சொல்லிவிட்டு என்னைத் தாண்டிச் சென்றாள். கல்பெஞ்சிலேயே சிறிது நேரம் உட்கார
முடிவுசெய்து சுமைகளோடு சென்றேன்.
மெதுவாக என்னைச் சுற்றி ஒரு விதமான பரபரப்பு ஏற்படுவதை அறிந்தேன். பிரித்தறிய
முடியாத உயர்ந்த குரல்கள். சிரிப்பு. திடுமென சற்றே தள்ளி ஒரு தூணருகில் ஒருவனைப் பிடித்து
நாலைந்து பேர்கள் அடிப்பது தெரிந்தது. ஒரு கணத்தில் கும்பல் கூடி விட்டது. எல்லாரும்
அடித்தார்கள். பயந்த குரலில் நான், ‘‘என்ன சார்’’ என்று இக்கின்பாதம்ஸ்காரனைக் கேட்டேன்.
‘‘பிக்பாக்கட் சார்’’ என்றான். எனக்குப் பாவமாக இருந்தது. ‘‘எத்தன நாளு ஏமாத்துவானுங்க.
என்னைக்காவது ஒருநாள் மாட்டித்தானே ஆவணும்.’’ இக்கின்பாதம்ஸ்காரன் ஒரு வெற்றிலையை மடக்கி
வாய்க்குள் அமிழ்த்திக்கொண்டான். எழுந்துபோய்ப் பார்க்கவேண்டும் போலஇருந்தது. சுகன்யாகவை
நினைத்து என் முடிவை மாற்றிக் கொண்டேன்.
‘‘திருமதி. சுகன்யா... எங்கிருந்தாலும் கவனிக்கவும்... நாலரைமணி...’’
இன்னும் கால்மணி நேரம்தான் இருந்தது. நானும் மற்றவர்களைப் போல எழுந்து என் பெட்டியைத்
தேடிப் போனேன். வேறு எதுவும் செய்வதற்கில்லை. சூட்கேஸையும் பைகளையும் பாதுகாப்பாய்
இருக்கையின் அடியில் தள்ளி விட்டு வெளியே வந்து நின்றேன். கல்பெஞ்ச் தெரியவில்லை. தலைகள்.
தலைகள். வெறும் தலைகள். உண்மையிலேயே சுகன்யா வந்து இந்தத் தலைகளுக்கிடையே நின்றாலும்
கண்டு பிடிப்பது மிகவும் சிரமம்தான் என்று தோன்றியது.
என் அருகில் யாரோ ஒரு ஜோடி விடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே இருந்தவன் புது
மாப்பிள்ளை போல இருந்தான். வெளியே பெண்ணும் பெண்ணின் தந்தையும் இருந்தார்கள். பெண்ணின்
கழுத்தில் புதுமஞ்சள் மின்னும் தாலிச்சரடு. கண்களில் லேசான கலக்கம். மெதுவாகக் குனிந்து
அவள் காதில் அவன் ஏதோ சொன்னான். நான் மீண்டும் சுகன்யா தெரியும் திசையை நோக்கினேன்.
வண்டி கிளம்புவது குறித்த இறுதி அறிவிப்பு எழுந்தது. எதையும் காதில் வாங்கிக்
கொள்ள நான் தயாராக இல்லை. ஏறி வாசல் கதவையொட்டி நின்று கொண்டேன். சுகன்யாவின் முகமாவது
தெரியாதா என்கிற நம்பிக்கை.
வண்டி நகரத் தொடங்கியது! கம்பங்கள். கடைகள். தள்ளு வண்டிகள். மனிதத் தலைகள்.
எல்லாம் மெல்லத் தள்ளிப் போய்க் கொண்டிருந்தன.
கொஞ்சநேரம் நான் கவனம் பிசகிவிட்டேன். அறிவிப்பு ஒலியில் என் பெயரை உச்சரித்த
மாதிரி இருந்தது. திடுக்கென்றது. பிரமையோ, என்னமோ, இருப்பினும் என்ன மடத்தனம் செய்து
விட்டேன். அது வண்டி புறப்படுவது பற்றிய தகவல் என்று காது கொடுக்காமல் இருந்தேன். இந்த
முறை விடக்கூடாது என்று உறுதி கொண்டவனாக உன்னிப்பாக என் செவிகளைக் கூர்மையாக்கினேன்.
வண்டி நகர்ந்துவிட்ட தூரம், உள்ளே இருந்தவர்களின் சலசலப்பு இரண்டும் சேர்ந்து எதுவும்
தெளிவாகக் காதில் விழவில்லை. ஏதோ என் பிரமையோ எனத் தோன்றியது. கடவுளே நிற்கமுடியவில்லை.
தவிப்போடு இருக்கையில் வந்து உட்கார்ந்தேன். ஏமாற்றத்தில் மனம் எரிந்தது. ‘‘சுகன்யா’’
என்று கூவினேன்.
(கணையாழி
– 1997)