Home

Saturday 23 July 2022

இறையடியான் : எல்லோரும் விரும்பும் இனிய ஆளுமை

  

பெங்களூருக்குக் குடிவந்த புதிதில் ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு, நானும் காவ்யா சண்முகசுந்தரமும் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்போம். விடுமுறை தினங்களில் அந்த உரையாடல் நேரம் மணிக்கணக்கில் நீண்டுபோகும். ஒருமுறை விடுமுறையில் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கூடத்தில் அவருடன் இன்னொருவர் உரையாடிக்கொண்டிருந்தார். மெலிந்த உருவம். நல்ல உயரம். கண்களில் கனிவு குடிகொண்டிருந்தது. என் அப்பா வயதிருக்கும் என்று தோன்றியது.

உரையாடலை அக்கணமே நிறுத்திவிட்டு அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார் சண்முகசுந்தரம். “எனக்கு நெருக்கமான நண்பர். பேரு தாஸ். ஐ.டி.ஐ.ல வேலை செய்றாரு. தனித்தமிழ்ல ஆர்வமுள்ளவர். நிறைய கவிதைகள் எழுதியிருக்காரு. ஒரு கவிதைத்தொகுதி கூட வந்திருக்குது. இப்ப கன்னடத்துலேருந்து தமிழ்ல மொழிபெயர்க்க ஆரம்பிச்சிருக்காரு. எடுத்த எடுப்பிலயே ஒரு நாவலையே தமிழ்ல மொழிபெயர்த்து முடிச்சிட்டாரு” என்றபடி மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த  கையெழுத்துப்பிரதியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.  பிறகு என்னைப்பற்றியும் அவரிடம் சொன்னார். நான் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, அந்தப் பிரதியைப் புரட்டிப் பார்த்தேன். முதல் பக்கத்தில் சற்றே சாய்ந்த எழுத்தமைப்பில் பணியம்மா என்று தலைப்பிடப்பட்டிருந்தது.


“இந்தப் பேருல ஒரு சினிமா வந்ததே, அதே கதையா?” என்று நான் சற்றே ஐயமுடன் கூடிய குரலில் இறையடியானிடம் கேட்டேன்.  அவர் புன்னகைத்தபடியே “ஆமாம். நாவலுடைய சினிமா வடிவம் அது. நாவல்ல இன்னும் விரிவான கதையோட்டம் இருக்குது” என்று பதில் சொன்னார். ”நீங்க திரைப்படம் பாத்தீங்களா?” என்று கேட்டேன். “இல்லை. நான் பார்க்கலை. எனக்கு திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமில்லை” என்றார். அடுத்து ”தமிழ்ப்படம் கூடவா?” என்று கேட்டேன். அவர் மீண்டும் புன்னகைத்தபடி இல்லை என்பதுபோல தலையசைத்துக்கொண்டார். அந்தப் பதில் எனக்கு ஆச்சரியமளித்தது.

நான் அமைதியடைந்ததைப் பார்த்துவிட்டு “படிக்கறது, எழுதறது ரெண்டுலதான் எனக்கு ஆர்வம் அதிகம். ஊர் சுத்திப் பாக்கறதுல கூட ஆர்வம் கிடையாது” என்று சொன்னார் இறையடியான். ஓர் அதிசய மனிதரைப் பார்ப்பதுபோல நான் அவரைக் கண்ணிமைக்காமல் சில கணங்கள் பார்த்தபடி இருந்தேன்.

அந்தக் கையெழுத்துப்பிரதியை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவேண்டும் என்று எனக்கு ஆவலாக இருந்தது. இறையடியானிடம் கேட்பதா, சண்முகசுந்தரத்திடம் கேட்பதா என்று புரியாமல் ஒருகணம் தடுமாறினேன். பிறகு சண்முகசுந்தரத்திடம் என் வேண்டுகோளை முன்வைத்தேன்.  சண்முகசுந்தரம் ஒருகணம் இறையடியானின் பக்கம் திரும்பிப் பார்த்து “நம்ம எழுத்தாளர்தான். இங்கதான் பக்கத்துல லட்சுமிபுரத்துல இருக்காரு. உங்களுக்குச் சம்மதம்னா கொடுக்கறேன். படிச்சிட்டு கருத்து சொன்னா, நமக்கும் நல்லதுதானே” என்று சொன்னார். ”கொடுங்க கொடுங்க” என்று உடனடியாக இறையடியான் சம்மதமளித்தார்..  உடனே அருகிலிருந்த ஒரு பைக்குள் கையெழுத்துப்பிரதியைப் போட்டு “கவனமா வச்சிக்கணும்.  படிச்சிட்டு உடனே திருப்பிக் கொடுத்திருங்க. இது கையெழுத்துப் பிரதி. வேற யாருகிட்டயும் நீங்க கடன் கொடுத்திடக் கூடாது” என்று இரண்டுமூன்று முறை எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு என்னிடம் கொடுத்தார் சண்முகசுந்தரம்.

அன்று இரவில் ஒரு பாதியும் அடுத்தநாள் இரவில் மறு பாதியுமாக கையெழுத்துப்பிரதியைப் படித்துமுடித்தேன். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சூழலை கதைக்களமாகக் கொண்டிருந்தது அந்த நாவல். அந்தக் காலத்தில் பிராமண சமூகத்தில் விதவைப்பெண்களின் நிலையைச் சித்தரிக்கும் கதை. ஒன்பது வயதில் விதவையாகி நூறு வயதுக்கும் மேலாக உயிருடன் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கை வரலாறு என்றும் சொல்லலாம். விதவைப்பெண்களைப் பாத்திரங்களாகக் கொண்ட பல நாவல்கள் பொதுவாக இருவித திசைகளில் விரிவடைந்து செல்வதையே நான் அதுவரை பார்த்திருந்தேன். அப்பெண்கள் எதிர்பாராத விதமாக பாலியல் பிறழ்வில் சிக்கிக்கொள்வதால் உருவாகும் அவஸ்தைகளைச் சித்தரிப்பது ஒருவித திசை. அவர்கள் பிறரால் பாலியல் சுரண்டலுக்குட்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் துன்பங்களைச் சித்தரிப்பது மற்றொரு திசை. பணியம்மா இவ்விரண்டு திசைகளிலும் செல்லும் படைப்பல்ல. மாறாக, மூன்றாவதாக ஒரு புதிய திசையில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்.

ஒன்பது வயதில் விதவையான பணியம்மாவுக்கு தனக்கு தாலி கட்டியவனின் முகமே நினைவில் இல்லை. சிறுமிக்குரிய துறுதுறுப்பான காலகட்டத்திலேயே அவளுடைய திருமணம் நடந்தேறி, வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. விதவைக்குரிய கட்டுப்பாடுகளும் சடங்குகளும் மட்டுமே அவளுடைய வாழ்க்கையாக மாறிவிட்டது. எந்தச் சடங்கையும் அவள் விரும்பி ஏற்கவில்லை. அதே சமயத்தில் அவற்றை நிராகரித்து குடும்ப அமைப்புக்குள் ஒரு பிரச்சினையாக நீடிக்கவும் விரும்பவில்லை. எல்லாத் துன்பங்களையும் அவள் அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். அந்த அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவளைக் குடும்பத்துக்குள் முக்கியமான ஓர் ஆளுமையாக மாற்றிவிடுகிறது. அவள் தன் அன்பால் அனைவரையும் அரவணைத்து தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்கிறாள். நாலைந்து தலைமுறைகள் அவள் கண்முன்னால் பிறந்து வளர்கின்றன. எல்லோருக்கும் அவள் தேவைப்படுகிறாள். சடங்குகளுக்கு உட்படுத்தி துன்பத்தில் ஆழ்த்தும் அமைப்புக்கு அவள் அன்பையே பரிசாக வழங்குகிறாள். எதிர்ப்புமின்றி, நிராகரிப்புமின்றி, நிபந்தனையற்ற அன்பை பரிசாக வழங்கும் பேரன்னையாக உயர்ந்து நிற்கிறாள் பணியம்மா.

அடுத்த வாரம் சண்முகசுந்தரத்தைப் பார்க்கச் சென்றிருந்தபோது அவரிடம் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். பணியம்மாவுக்கு முன்னால், கன்னட மொழியில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய ’சம்ஸ்கார’ என்னும் நாவலை அதே தலைப்பில் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்த பிரதி காவ்யா வழியாக வெளிவந்து வாசகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் பணியம்மா நாவலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தெரிவித்தேன். என் கருத்தை இறையடியானிடமும் பகிர்ந்துகொள்வதாகச் சொன்னார் சண்முகசுந்தரம்.

சில நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக நான் இறையடியானை  ஒருமுறை அல்சூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தேன். நான் பேருந்திலிருந்து இறங்கிய இடத்தில் அவர் வேறொரு பேருந்துக்காகக் காத்திருந்தார். அந்த இடம் பொதுமக்கள் நிறைந்திருக்கும் நெருக்கடியான இடமென்ற எண்ணமெல்லாம் என் நெஞ்சில் எழவே இல்லை. விருப்பத்தோடு நெருங்கிச் சென்று வணக்கம் சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினேன்.

“வாங்க, ஒரு டீ சாப்பிடலாம்” என்று அவரை அழைத்தேன்.

வழக்கம்போல புன்னகையுடன் தலையசைத்தபடி மறுத்தார் இறையடியான். “நான் தேநீர் அருந்தறதில்லை. வேண்டாம்” என்றார் அவர். அவருடைய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மெதுவாக “எப்பவுமே குடிக்கறதில்லையா, இல்லை இப்ப மட்டும்தானா?” என்று கேட்டேன். “எப்பவுமே நான் தேநீர் அருந்தமாட்டேன். எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது” என்று பதில் சொன்னார் இறையடியான். ஒன்றிரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை தேநீர் அருந்திக்கொண்டிருந்த எனக்கு அவருடைய பதில் அதிர்ச்சியளித்தது.

“எங்க இந்தப் பக்கம்?” என்று உரையாடலைத் தொடர்ந்தேன்.

“இங்க அல்சூர்ல ஒரு நண்பர் வீட்டுல யோகா சொல்லிக் கொடுக்க வாரத்துக்கு மூனு நாள் வருவேன்.”

“நீங்க யோகா டீச்சரா?”

“ம்”

நான் அப்போதுதான் அவர் தோற்றத்தை ஆழமாகக் கவனித்தேன். மெலிந்திருந்தாலும் செதுக்கிவைத்ததுபோல உறுதியாக இருந்தார். தோளில் அந்த உறுதி எடுப்பாகவே தெரிந்தது.

“இங்க பக்கத்துலதான் பத்தொம்பதாவது க்ராஸ்ல எங்க வீடு. அப்படியே பேசிட்டே போவலாம். வாங்களேன். உங்களுக்கும் வீட்ட தெரிஞ்சிகிட்டமாதிரி இருக்கும்”

“சரி வாங்க”

அக்கணமே என் வேண்டுகோளுக்கு இணங்கி என்னோடு நடந்துவந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. நடக்கும்போதுதான் அவருக்கு மொழிபெயர்ப்பின் மீது உருவான ஆர்வத்தைப்பற்றிக் கேட்டேன்.

“அடிப்படையில எனக்கு கன்னடம்தான் தாய்மொழி. சின்ன வயசுல மதுகிரிக்கு பக்கத்துல இருந்தோம். பள்ளிக்கூடம் சேக்கிற வயசு வந்த சமயத்துல எங்க வீட்டுக்குப் பக்கத்துல தமிழ் பள்ளிக்கூடம்தான் இருந்தது. அதனால அப்பா என்னை அங்கே சேத்துட்டாரு. அதனால நான் தமிழ் படிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா என் நேசத்துக்குரிய மொழியா தமிழ் மாறிட்டுது. பள்ளிக்கூட பாடங்களுக்கு வெளியே நான் படிச்ச புத்தகங்கள் எல்லாமே தமிழ் புத்தகங்கள்தான். எனக்கு நண்பர்களா அமைந்தவர்களும் தமிழ் நண்பர்கள்தான். பள்ளிப்படிப்புக்குப் பிறகு என்னுடைய சொந்த முயற்சியில நானா கன்னடம் கத்துகிட்டேன். ஐ.டி.ஐ.ல சதாசிவம்னு ஒரு நண்பர் வேலை செய்யறாரு. அவரு தமிழர்தான். இங்க வந்து கன்னடம் கத்துகிட்டு கன்னடத்துலேருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தாரு. கன்னடம் மட்டுமில்லை. அவருக்கு மலையாளம் கூட நல்லா தெரியும். தொடக்கத்துல நான் தமிழ்ல கவிதை, கட்டுரைகள்தான் எழுதிட்டிருந்தேன். சதாசிவத்தைப் பார்த்துத்தான் எனக்கும் மொழிபெயர்க்கணும்கற ஆசை வந்தது. எனக்குள்ள அந்த ஆசையைத் தூண்டியது அவருதான்”

நான் பணியம்மா பற்றிய என் கருத்துகளை அப்போது அவரிடம் பகிர்ந்துகொண்டேன். “பணியம்மா ரொம்ப முக்கியமான நாவல்னுதான் எனக்குத் தோணுது. தமிழ்ல இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வெறுப்புக்குரிய மனிதர்கள் மீது கூட வெறுப்பைக் காட்டாம, விமர்சனம் பண்ணி ஒதுக்காம, எவ்விதமான நிபந்தனையும் இல்லாம அன்பைக் காட்டறது, வாழ்க்கையில ரொம்ப முக்கியமான புள்ளி. சடங்கு, சம்பிரதாயம், நம்பிக்கைன்னு ஆயிரம் விஷயங்கள நம்ம சுத்தி விஷச்செடி மாதிரி வளர்த்துவச்சிருக்கோம். ஆனா நம்மால அன்ப காட்ட முடியலை. அதே சூழல்லேருந்து வரக்கூடிய பணியம்மா அப்படி வாழ்ந்து காட்டக்கூடிய மனுஷியா இருக்கா. ஒரு வரில சொல்லணும்ன்னா இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்ங்கற திருக்குறள் கருத்துதான் பணியம்மாவுடைய கருத்து. அந்தக் கருத்த அவள் தன் வாழ்க்கைக்குள்ள வச்சி நிறுவிக் காட்டறா. அதனாலதான் நான் இந்த நாவலை முக்கியமான நாவல்னு சொல்றேன். நீங்க அன்னைக்கு சொன்னமாதிரி திரைப்படத்தைவிட நாவல் பல திசைகள்ல விரிஞ்சி போகும் தன்மையைக் கொண்டதா இருக்குது”

நான் சொல்லச்சொல்ல அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டே வந்தார். அதற்குள் வீடு வந்துவிட்டது. என் மனைவிக்கு அவரை அறிமுகப்படுத்தினேன். அவரும் “டீ போடட்டுமா?” என்று இறையடியானிடம் முதலில் கேட்டுவிட்டு, அவர் சொன்ன பதிலைக் கேட்டு வியப்பில் மூழ்கினார். மேசை மீது அடுக்கி வைத்திருந்த புத்தகங்களையும் இலக்கிய இதழ்களையும் மெதுவாகப் புரட்டிப் பார்த்தார் இறையடியான்.

“உங்க கருத்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. ஒரு வரியில பணியம்மாவுடைய சாரத்தையே சொல்லிட்டிங்க. ரொம்ப நன்றி”

அதற்குப் பிறகு மேலும் சிறிது நேரம் என் எழுத்துகளைப்பற்றிக் கேட்டார். அப்போதைக்கு என் சிறுகதைகள் வெளிவந்திருந்த சில இதழ்களைக் கொண்டுவந்து காட்டினேன். “இவ்வளவு கதைகளா?” என்று கேட்டபடி அவர் புருவத்தை உயர்த்தினார். ஒருசில இதழ்களை மட்டும் பிரித்து வைத்துக்கொண்டு “நான் வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார். “தாராளமா எடுத்துக்குங்க. நீங்க எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம். பேசிட்டிருக்கலாம்” என்று சொன்னபடி புத்தகங்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தேன். “நிச்சயம் வரேன்” என்றபடி விடைபெற்றுச் சென்றார்.

அந்தச் சந்திப்பு நடைபெற்றது 1989ஆம் ஆண்டில். நான் அதே வாடகை வீட்டில் 2019 வரைக்கும் இருந்தேன். அந்த முப்பது ஆண்டு காலமும் இறையடியான் மாதத்துக்கு ஒருமுறையோ இரு முறையோ தொடர்ச்சியாக எங்கள் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ”உங்க வீட்டுக்கு நான் ஒருமுறை வந்து பார்க்கிறேன். எப்படி வரணும்னு மட்டும் சொல்லுங்க” என்று சொலும்போதெல்லாம் “அதெல்லாம் எதுக்குங்க? நான் வீட்டுல தங்கற ஆளே கெடையாது. காலையில வீட்டைவிட்டு வெளியே வந்தா சுத்திகிட்டேதான் இருப்பேன். அல்சூர் பக்கம் அடிக்கடி வரக்கூடிய ஆள்தான் நான். நானே வந்து உங்களை பாக்கறேன்” என்று சொல்லி தடுத்துவிடுவார். எங்காவது இலக்கியக்கூட்டத்தில் சந்திக்க நேர்ந்தாலும் சிறிது நேரமொதுக்கி உரையாடிவிட்டுச் செல்வார். உரையாடலில் அவருக்கு அவ்வளவு ஆர்வமிருந்தது.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மொழிபெயர்ப்பும் யோகப்பயிற்சிகளும் அவரை ஓய்வற்றவராகவே வைத்திருந்தன. ஐ.டி.ஐ. வளாகத்திலேயே அவர் ஒரு பயிற்சி மையத்தில் விரும்பி வருபவர்களுக்கு பயிற்சியைக் கொடுத்தார். வேறு சில இடங்களுக்கு அவரே சென்று பயிற்சியளித்தார். சாகித்ய அகாதெமி நிறுவனத்துக்காக அவர் பல புத்தகங்களை மொழிபெயர்த்தார்.

பணியம்மா புத்தகம் வெளியானதுமே எனக்கு ஒரு பிரதியைக் கையெழுத்திட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதற்குப் பிறகு அவருடைய புத்தகம் வெளிவந்தபோதெல்லாம் எனக்காக ஒரு புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்துவிட்டுச் செல்வார்.

கடந்த முப்பதாண்டுகளில் அவர் இருபத்தைந்து புத்தகங்களுக்கு மேல் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பார் என்பது என் எண்ணம். மொழிபெயர்ப்புக்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட எல்லாப் படைப்புகளுமே முக்கியமானவை. தமிழுக்கு வளம் சேர்ப்பவை. சலங்கைச்சடங்கு, போராட்டம், மகாபிராமணன், அரண்மனை, அவதேஸ்வரி, முத்துப்பாடி சனங்களின் கதை ஆகிய அனைத்துமே கன்னட நாவல் உலகின் சாதனைப்படைப்புகள்.

அவதேஸ்வரி நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதெமி நிறுவனம் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்குரிய விருதை இறையடியானுக்கு 2014இல் வழங்கியது. அறிவிப்பு வெளியான அடுத்த வாரமே நானும் நண்பர்களும் சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு சிறு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். விட்டல்ராவ், மகாலிங்கம், திருஞானசம்பந்தம், ஜி,கே.ராமசாமி, விஜயன், முகம்மது அலி என பல நண்பர்கள் திரண்டுவந்து அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இறையடியான் தன் மூன்று மகள்களோடும் மருமகன்களோடும் பேரப்பிள்ளைகளோடும்  மகிழ்ச்சி பொங்க கலந்துகொண்டார். நண்பர்கள் அவரைப்பற்றியும் அவருடைய மொழிபெயர்ப்பைப்பற்றியும் உரையாடினர். அவர்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் அவர் பொறுமையாக பதில் சொன்னார். ஒரு திறந்தெவெளி இலக்கியநிகழ்ச்சியைப்போலவே நாங்கள் அதை நடத்தினோம். அங்கிருந்து பூங்கா வழியாகவே உரையாடியபடி சென்று அருகிலிருந்த ஈடன் கார்டன் என்னும் விடுதியில் மதிய உணவை உண்டுவிட்டுப் பிரிந்தோம்.

மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராகவும் தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டு ஆயிரம் பக்கங்களில் ஒரு தொகைநூலாக இறையடியான் கொண்டுவந்த ’வசனம்’ என்னும் புத்தகம் ஓர் அரிய புதையல் என்றே சொல்லவேண்டும். கன்னட வசன இலக்கியத்தொகையையே இறையடியான் தமிழுக்கு வழங்கினார். சர்வக்ஞர் வசனங்களை ஒரு தனிநூலாகவே அவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்விரு நூல்களுக்குமே நான் விரிவான அளவில் அறிமுகக்கட்டுரைகளை எழுதினேன். அது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. போராட்டம், லங்கேஷ் கதைகள் ஆகிய நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்ச்சிகளை அவர் ஒருங்கிணைத்த சமயங்களில் அந்த மேடையில் அப்புத்தகங்களைக் குறித்தும் அவருடைய மொழிபெயர்ப்பைப்பற்றியும் விரிவாகவே உரையாற்றினேன்.

ஒவ்வொரு மாதமும் சீரான இடைவெளியில் சந்தித்து வந்த நாங்கள் நோயச்ச காலத்தில் திடீரென சந்திக்கமுடியாதவர்களாகிவிட்டோம். கைப்பேசியில் உரையாடி நலம் விசாரித்துக்கொள்பவர்களாகவும் புத்தகங்கள் பற்றி உரையாடுகிறவர்களாகவும் மாறிவிட்டோம். அந்தக் கட்டாய ஓய்வைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நான் அவருடைய தன்வரலாற்றை எழுதும்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். அதை எப்படி தொடங்குவது என்றெல்லாம் அவருக்குள் ஒரு தயக்கம் இருந்தது. தன்வரலாறு என்றதுமே ஐநூறு அறுநூறு பக்கங்கள் இருக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஐம்பது நூறு பக்க அளவில் இருந்தால் கூட போதுமானது, பள்ளிக்கூட வாழ்க்கையிலிருந்தோ அல்லது ஐ.டி.ஐ.வாழ்க்கையில் இருந்தோ ஏதோ ஒரு புள்ளியில் முதலில் தொடங்குங்கள், பிறகு எழுத்தின் ஓட்டம் தானாகவே தன் போக்கில் இழுத்துச் சென்றுவிடும் என்று தெரிவித்தேன். ஆனாலும் என் விடைகளோ அல்லது ஊக்கச்சொற்களோ அவருக்குப் போதுமானதாக இல்லை. அவரோடு உரையாட நேர்ந்த ஒவ்வொரு முறையும் நான் விடாப்பிடியாக அதை நினைவூட்டியபடி இருந்தேன். அவர் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கமுடியும். ஏதோ ஒரு மனத்தடை. அது நிகழாமல் போய்விட்டது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் உரையாடிய சமயத்தில் போல்வார் மஹம்மது குன்ஹியின் கன்னடநாவலின் மொழியாக்கமான முத்துப்பாடி சனங்களின் கதை புத்தகம் வெளிவந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ”நீங்கள் படித்துவிட்டு கருத்து சொன்னால் நல்லது” என்று சொன்னார் இறையடியான். ”எனக்கும் படிப்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது. விரைவில் இந்த நோயச்ச காலம் முடிந்து நாம் சந்திக்கும் தருணம் வரும், அப்போது உங்களைச் சந்தித்து நேரிடையாக பெற்றுக்கொள்கிறேன்” என்றேன் நான். “அது வரை காத்திருக்கவேண்டாம். நான் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். நீங்கள் படித்துமுடிக்க வசதியாக இருக்கும்” என்றார். அவருக்கு வீணாக செலவு வைக்கவேண்டாமே என்று எவ்வளவோ தடுத்தும் கூட அவர் அனுப்பிவைத்துவிட்டார். ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு பக்கங்கள். படிக்கத் தொடங்கிய  சில பக்கங்களிலேயே அதன் பின்னணிக்களம் புரிந்துவிட்டது. தேசப்பிரிவினையை ஒட்டிய காலத்தில் நிகழும் கதை என்பதால் நானும் அதை ஆர்வத்துடன் படித்தேன். தமிழுக்கு மிகமுக்கியமான வரவு என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. உடனே இறையடியானை கைப்பேசியில் அழைத்து எதிர்காலத்தில் உங்கள் பெயரைச் சொல்லும் படைப்பாக நிச்சயம் இந்த மொழிபெயர்ப்பு விளங்கும் என்று சொன்னேன். ஒரு வேகத்தில் “ஒரு விரிவான கட்டுரையை நான் இந்தப் புத்தகத்துக்கு எழுதப் போகிறேன்” என்றும் சொல்லிவைத்தேன். “மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி பாவண்ணன். அதன் மூலம் இன்னும் பத்து பேருக்கு இந்தப் புத்தகத்தைப்பற்றிய அறிமுகம் கிடைத்தால் நல்லதுதான்” என்றார்.

சொல்லிவிட்டேனே தவிர, என்னால் அந்தக் கட்டுரையை உடனடியாகத் தொடங்க இயலவில்லை. நான் அப்புத்தகத்தை மீண்டுமொரு முறை படித்து குறிப்பெடுக்க வேண்டியிருந்தது. அதற்குள் நான் முடித்துக்கொடுக்கவேண்டிய வேறு சில வேலைகள் குவிந்துவிட்டன. ஒரு போட்டியில் நடுவராக இருக்க பொறுப்பேற்றுக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படிக்கவேண்டிய நெருக்கடியில் நானே சிக்கிக்கொண்டேன். நான் நினைத்ததுபோல முத்துப்பாடி சனங்களின் கதை நாவலைப்பற்றி எழுதமுடியவில்லை.

வழக்கமாக பேசுவதுபோல, போன மாதம் அவரை கைப்பேசியில் அழைத்தேன். மருத்துவமனையிலிருந்து அப்போதுதான் திரும்பியதாகச் சொன்னார். அது எனக்கு திகைப்பூட்டியது. மருத்துவமனைக்குச் செல்பவராக அவரை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. அப்படி ஒரு தோற்றம் கொண்டவர் அவர். “என்ன சார் உடம்புக்கு?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். “என்னென்னமோ பிரச்சினை பாவண்ணன். ரொம்ப சோர்வா இருக்குது. எதுவோ ஹீமோகுளோபின் குறைச்சலா இருக்குதுன்னு சொல்லியிருக்காங்க. ஒன்னும் புரியலை” என்றார். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. குரலில் வலிமை இல்லை. இணைப்பும் அன்று சரியாக வேலை செய்யவில்லை. நொடிக்கொரு முறை அறுந்துகொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் அழைத்துப் பேசவேண்டியிருந்தது. ஒருமுறை அவரே அலுப்புடன் “நல்லான பிறகு நானே கூப்பிடறேன் பாவண்ணன். பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய அழைப்பு வரவே இல்லை. ஏதோ என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. திடீரென 19.06.2022 அன்று அவருடைய மரணச்செய்திதான் வந்தது.

இறையடியான் இன்று நம் சூழலில் பெற்றிருக்கும் கவனத்தைவிட, பல மடங்கு கூடுதலான கவனத்தைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர் என என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். ஆனால் நம் சூழல் அவருடைய பங்களிப்பை மதித்து ஆற்றவேண்டிய எந்தக் கடமையையும் ஆற்றவில்லை. ஏதேதோ கணக்குகளின் காரணமாக அவர் பொருட்படுத்தாத ஓர் ஆளுமையாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். அந்தப் புறக்கணிப்பு உருவாக்கும் வேதனையையும் துயரத்தையும் தாங்கமுடியவில்லை.

இந்தப் புறக்கணிப்பு எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அதைப்பற்றி சிறிதளவும் சிந்திக்காதவராகவே இறுதிமூச்சு வரை இறையடியான் வாழ்ந்தார் என்பதும் உண்மை. இக்கணத்தில் அவர் முதன்முதலில் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பணியம்மா நாவலைப்பற்றி நினைத்துக்கொள்கிறேன். முழுக்க முழுக்க பெண்ணுலகம் சார்ந்த அந்தப் புத்தகத்தை அவர் ஏன் மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பது தொடக்க காலத்தில் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அவரிடமே அந்தக் கேள்வியை ஒருமுறை கேட்டிருக்கிறேன். “ரொம்ப புடிச்சிருந்தது. அதனால செஞ்சேன்” என்பதுதான் அவர் பதிலாக இருந்தது.

ஒருநாள் அக்கேள்விக்கான விடையை நானே தற்செயலாகக் கண்டடைந்தேன். வெறுக்கவும் நிராகரிக்கவும் பல காரணங்கள் இருந்தபோதும், அவற்றைக் கடந்து எவ்வித நிபந்தனையுமற்ற அன்பை எல்லோருக்கும் வழங்குகிற பணியம்மாவின் பாத்திர வார்ப்புதான் அவரை ஈர்த்திருக்கவேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை.  இறையடியான் என்னும் ஆளுமைக்குள்ளும் ஒரு பணியம்மா இருந்திருக்கிறாள். அவள்தான் அவருக்குள் அமர்ந்து புறக்கணிப்புகளைப் புறக்கணித்துவிட்டு செயலாற்றும் விசையாகவும் அன்புசெலுத்தும் ஆற்றலாகவும் இயங்கினாள். அன்பே வடிவான இறையடியானுக்கு அஞ்சலிகள்.

 

(காவ்யா – காலாண்டிதழ் ஜூலை 2022)