Home

Sunday, 3 July 2022

அரைநூற்றாண்டு வரலாற்றின் அடையாளம்

  

சாதிவேற்றுமைகளால் மானுடம் நிலைகுலையும் வெவ்வேறு தருணங்களை அரைநூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக தம் படைப்புகளில் பதிவு செய்த இலங்கை எழுத்தாளர் தெணியான் சமீபத்தில் 22.05.2022 அன்று மறைந்துவிட்டார். அவர் தன் இறுதிக்காலத்தில் படைப்பெழுத்துகளைவிட தம் வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். இலங்கையில் ஞானம் என்னும் இதழில் தொடர்ச்சியாக தம் இளமைப்பருவ நினைவுகளைப் பதிவு செய்துவந்தார். தம் பெற்றோரைப்பற்றியும் குடும்ப உறுப்பினர்களைப்பற்றியும் பள்ளிநாட்களைப்பற்றியும் ஒருசிறிதும் மிகையோ, விலக்கமோ இன்றி செறிவோடும் சுருக்கமாகவும் அவர் எழுதிய சித்திரங்கள் அனைத்தும் அற்புதமான சொல்லோவியங்கள். அக்கட்டுரைகளோடு மேலும் மூன்று கட்டுரைகளை எழுதி வாங்கி, தமிழகத்தைச் சேர்ந்த எழுத்து பதிப்பகம் வே.அலெக்ஸ் 2011இல் இன்னும் சொல்லாதவை என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியிட்டார். இன்று அப்புத்தகத்தை எழுதியவரும் இல்லை. வெளியிட்டவரும் இல்லை.

பிரசவ காலத்தில் முகமூடியோடு குழந்தை பிறப்பதை மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றொரு நம்பிக்கையைப்பற்றிய குறிப்போடு தெணியானின் தன்வரலாறு தொடங்குகிறது. முதலில் அது எனக்குப் புரியவில்லை. பலரிடம் விசாரித்தபோது அப்படி ஒரு நம்பிக்கையோ, சொலவடையோ இந்தப் பக்கத்தில் இல்லை என்று தெரிந்தது. ஆனால் அந்த நம்பிக்கை கடந்த நூற்றாண்டில் இலங்கையில் நிலவியிருந்தது என்பதற்கு தெணியானின் வரிகளே ஆதாரம். முகத்தோடு ஒட்டிக்கொண்டு வரும் மெல்லிய சவ்வுப்படலத்தையே அவர்கள் முகமூடி என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். அந்த முகமூடியை பிறந்த குழந்தையின் முகத்திலிருந்து எடுத்து சுவரில் அறைந்து ஒட்டிவைக்க வேண்டும். அது நன்றாக உலர்ந்த பிறகு எடுத்து உருட்டிப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். முக்கியமான செயல்களுக்காக வெளியே செல்லும்போது அதை வைத்துக்கொண்டு செல்லும்போது வெற்றிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.


    தன் அம்மாவைப்பற்றி எழுதத் தொடங்கும்போது இந்த நம்பிக்கையோடு தொடங்குகிறார் தெணியான். இப்படி ஒரு நம்பிக்கை ஆழ்மனத்தில் இருந்தபோதும், தெணியான் முகமூடியோடு பிறந்தபோதும், அதை வீட்டில் இருந்த பெரியவர்கள் அக்கறையோடு எடுத்துப் பாதுகாக்கவில்லை. அவர் அம்மா அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்படுகிறார். நம்பிக்கையின் அடிப்படையில் தெணியான் அதிர்ஷ்டத்தை இழந்தவராக இருந்தபோதும், பாசமுள்ள பெற்றோர், சகோதரசகோதரிகள், நல்ல பள்ளியாசிரியர்கள், நல்ல நண்பர்கள் என தமக்குக் கிடைத்த இளமைக்காலச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன்னைச் சுற்றியிருந்த சாதி இழிவுகளைப் புறந்தள்ளி மெல்ல மெல்ல முன்னேறி ஓர் ஆசிரியராக அரசுப்பணியில் இணைந்து தன் அதிர்ஷ்டத்தைத் தானே தேடிக் கண்டடைந்த அனுபவங்களை முன்வைக்கிறார் தெணியான். அந்த வெற்றிப்பயணத்தின் வாழ்வனுபவங்களே இன்னும் சொல்லாதவை என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.

வடமராச்சியில் பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர் தெணியான். அவருடைய இயற்பெயர் கந்தையா நடேசு. பொலிகண்டியில் அவருடைய குடும்பம் தெணியார் குடும்பம் என்ற அடைமொழிப்பெயரோடு அழைக்கப்பட்டது. அவருடைய சந்ததியினர் தெணி என்னும் இடத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் தெணியார் குடும்பம் என அழைக்கப்பட்டு, சிறிது காலத்துக்குப் பிறகு அதுவே நிலைத்துவிட்டது. அந்தப் பரம்பரைப் பட்டப்பெயரையே அவர் தனக்குப் புனைபெயராக சூட்டிக்கொண்டார்.

தெணியானின் தந்தையார் மரத்தில் ஏறி கள் இறக்கும் தொழிலைச் செய்துவந்தார். கள் இறக்குவதும் விற்பதும் அவருக்குத் தொழில்தானே தவிர, அதில் ஒருபோதும் திளைத்தவரல்ல. அவருடைய பொறுப்புணர்வும் விடாமுயற்சியும் உழைப்பும் அவருடைய குடும்பத்துக்கு உற்ற துணைகளாக இருந்தன. அவருக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த அண்ணன் மட்டுமே கல்வியில் நாட்டமின்றி வணிகத்தின் பக்கம் சென்றுவிட்டார். தெணியானும் அவருடைய தம்பி தங்கைகளும் நன்கு படித்து பட்டம் பெற்று, அனைவரும் ஆசிரியர் பணிகளை ஏற்றுக்கொண்டனர்.

அந்தக் காலத்தில் இலங்கைப்பகுதிகளில் கள் இறக்கும் தொழிலைச் செய்பவர்கள் சுயமாக அதை விற்கமுடியாது. அதற்குத் தடை இருந்தது. ஊருக்குள் உரிமம் பெற்று கடை நடத்தும் முதலாளி வழியாகத்தான் கள் விற்பனை நிகழவேண்டும். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தி உரிமம் பெற்றவர்கள். மரங்களில் ஏறி இறங்கி எடுத்துவரும் கள்ளை மிகக்குறைந்த விலைக்கு கடைக்காரரிடம் கொடுத்துவிட்டுத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. 1936இல் அரசு கள் விற்பனை வரி தொடர்பாக ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகச் செலுத்திவிட்டு கடை நடத்தலாம் என்ற விதிக்கு மாறாக, ஊரில் கள் இறக்கப்படும் மரங்கள் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகச் செலுத்திவிட்டு கள் இறக்குபவர்களே நேரிடையாக விற்பனை செய்வதற்கு அந்தப் புதிய சட்டம் வழிவகுத்தது. தெணியானின் தந்தையாருக்கு அது சாதகமான சட்டமாக அமைந்தது. அவர் தாம் இறக்கும் கள்ளை தாமே ஒரு கடை போட்டு விற்பனை செய்து பொருளீட்டினார். அந்தப் பணத்தில் நிலம் வாங்கி வீட்டையும் தோட்டத்தையும் விரிவாக்கினார்.

தெணியானின் தந்தையார் எக்காரணத்தை முன்னிட்டும் தம் பிள்ளைகள் தன் தொழிலைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். சாதியையும் தொழிலையும் இழிவாகப் பார்க்கும் சமூகத்தின் முன்னால் தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் அனைவரும் கல்வியால் தகுதி பெற்று அரசு வேலைக்குச் செல்லவேண்டும் என்று கனவு கண்டார். கதகதப்பான தம் இறக்கைகளால் தம் குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்ப்பறவைகள்போல தெணியானின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதில் கண்ணும் கருத்துமாக  இருந்தனர்.

ஒரு சிறுகதைக்கே உரிய தருணமொன்றை இளமைக்கால நினைவாக எழுதியிருக்கிறார் தெணியான். சிறுவனாக இருந்தபோது ஒருமுறை தீராத வயிற்றுப்போக்கால் துவண்டுபோய்விட்டார். நாட்டு மருத்துவரும் ஆங்கில மருத்துவரும் கொடுத்த மருந்துகளுக்கு அது கட்டுப்படவில்லை. வயிற்றில் எதுவும் தங்காமல் தண்ணீராகப் போய்க்கொண்டே இருக்கிறது. மந்தரித்து திருநீறு பூசுபவரிடம் செல்கிறார்கள். குறி சொல்கிறவர்களிடமும் செல்கிறார்கள். எதற்கும் அந்த வயிற்றுப்போக்கு தணியவில்லை. துவண்டு விழும் மகனைக் காப்பாற்ற வழி தெரியாத தாய், கடைசிப் புகலிடமாக தன் குலதெய்வமான சக்கோடை பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அழுத கண்ணீரோடு வழிபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுகிறார். அன்று இரவு உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு கிழவர் தோன்றி ஒரு கைப்பிடி மிளகை அவரிடம் கொடுத்து “வறுத்து அவிச்சி குடு” என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார். சுருக்கென்று எழுந்த அவளுக்கு அதற்குப் பிறகு உறக்கம் வரவில்லை. உடனே எழுந்து கனவில் தோன்றிய கிழவர் சொன்னபடி மிளகை வறுத்து அவித்து மகனை எழுப்பி அந்த மிளகுத்தண்ணீரைப் பருகவைக்கிறார். மூன்று வேளையில் வயிற்றுப்போக்கு நின்றுவிடுகிறது.

தெணியான் பதிவு செய்திருக்கும் நினைவுகளில், யாரோ ஒரு பெரியம்மா தன் அம்மாவிடம் தாய்ப்பால் கேட்டு வந்ததைப் பார்த்த நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கும் நினைவு முக்கியமானது. அப்போது அம்மா ஐந்தாவது குழந்தையை ஈன்றெடுத்த நேரம். அந்தக் குழந்தைக்கு அம்மா பாலூட்டிக்கொண்டிருக்கிறாள். அப்போது வாசலுக்கு வெளியே. வேலிப்படலை ஒட்டி வயதில் மூத்த ஒரு பெரியம்மா கையில் சிரட்டையோடு நின்று சத்தமெழுப்பி தன் வருகையை உணர்த்துகிறாள். வேலியைத் தாண்டி அவள் உள்ளே வருவதில்லை. அவளுடைய பேத்திக்காக தாய்ப்பால் கேட்டு வந்திருக்கிறாள். அவள் சத்தம் கேட்டதுமே அம்மா எழுந்து சென்று சிரட்டையை வாங்கி வந்து பாலைப் பீய்ச்சியெடுத்து நிரப்பிக் கொடுக்கிறாள். குழந்தைக்குத் ஒவ்வொரு நாளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வசிக்கும் வீடுகளுக்கெல்லாம் அவள் சென்று தாய்ப்பாலைக் கேட்டு வாங்கிக்கொண்டு செல்கிறாள். சில சமயங்களில் அந்தப் பெரியம்மா தனக்கும் பசிப்பதாகச் சொல்கிறாள். அதைக் கேட்டு அம்மா அவளுக்கு கொஞ்சம் அரிசியையோ அல்லது சில்லறையையோ கொடுத்து அனுப்புகிறாள். சாப்பாட்டுக்குப் பதிலாக அரிசியைக் கொடுப்பது எதற்கு என்று புரியாமல் கேள்வி கேட்கும் சிறுவனிடம் ”அவுங்க சாதியில மேல இருக்கிறவங்க” என்று சொல்லிவிட்டு உரையாடல் தொடர்வதைத் தவிர்த்துவிடுகிறாள். சாப்பாடு தீட்டென்றால், பால் தீட்டில்லையா என்று கேட்க நினைக்கும் கேள்வியை நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டு சென்றுவிடுகிறான் சிறுவன்.

பள்ளி நாட்களில் முடிவெட்டிக்கொள்வதற்குப் பட்ட பாடுகளையும் போகிறபோக்கில் தெணியான் குறிப்பிடுகிறார். நகைச்சுவை படிந்த வரிகளோடு அவர் அக்காட்சியைச் சித்தரித்தாலும், இளம் உள்ளம் அக்காலத்தில் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் அவர்களுக்கு முடிவெட்ட ஆள் இல்லை. அருகிலிருந்த பட்டினத்தில் சலூன் கடைகள் திறந்திருந்த போதிலும், அங்கு சென்று முடிதிருத்திக்கொள்ள அவர்களைப்போன்றவர்களுக்கு அனுமதி இல்லை. இரண்டு மைல் தொலைவில் நெல்லையடிப்பட்டினம் என்னும் இடத்தில் அவர்களுக்கு வெட்டும் சலூன் இருக்கும் செய்தியைக் கேட்டு அண்ணனும் தம்பியும்  புறப்படுகிறார்கள். அந்த இடத்துக்குச் செல்லும் வழியையெல்லாம் எடுத்துச் சொல்லும் அப்பா பிற கடைகளுக்குள் சென்றுவிடவேண்டாம் என சொல்லியனுப்புகிறார். கடைத்தெருவில் இரண்டு சலூன்கள் உள்ளன. ஒரு சலூனில் திறந்துமூடும் கதவு. நாற்காலி எல்லாம் இருக்கிறது. இன்னொரு சலூனில் கதவில்லாத வாசலுக்குப் பின்னால் மரநாற்காலி போடப்பட்டிருக்கிறது. பார்த்ததுமே அவர்களுக்கு தாம் செல்லவேண்டிய கடை எது என்பது அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. அந்தக் கடைக்குள் சென்று, அங்கே  வெகுநேரம் காத்திருந்து முடிதிருத்தம் செய்துகொண்டு திரும்புகிறார்கள்.

குறிப்பிட்ட சில வகுப்பினர்  கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத சமூகச்சூழல் நிலவியிருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவமொன்றை தெணியான் சொற்கள் வழியாகப் படிக்கும்போது, இச்சமூகக்கட்டுப்பாடுகளின் கடுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.  அது ஒரு திருவிழா நேரம். ஊரே கோவிலுக்கும் கடற்கரைக்கும் நடந்துகொண்டிருக்கிறது.  தெணியான் வீட்டுக்குப் பக்கத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் வல்லிபுர ஆழ்வார் பக்தன். ஆவணி மாதத்தில் அவருக்காக விரதமிருந்து வழிபடுபவன். கோவில் வழியாகச் சென்று வாசலிலிருந்தே கைகுவித்துக் கும்பிட்டுவிட்டுத் திரும்புவதுதான் அவன் வழிபாடு. உள்ளே செல்வதில்லை. சிறுவனான தெணியான் தன்னையும் ஆழ்வார் கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறான். சிறுவனின்  கோரிக்கையை அவனால் தட்டிக் கழிக்கமுடியவில்லை. அதனால் அழைத்துச் செல்கிறான். கோவிலுக்கு அருகில் சென்ற பிறகு, உள்ளே சென்று பார்க்கவேண்டும் என்று கேட்கிறான். அந்த இளைஞனுக்கோ நடுக்கமாக இருக்கிறது. அந்த இளைஞன் யோசித்து ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுக்கிறான். சுவாமி தீர்த்தமாடுவதற்கு கடலை நோக்கிச் செல்வது என்பது திருவிழா நாட்களில் ஒருநாள் சடங்கு. அன்று ஊரே கடற்கரையில் திரண்டிருக்கும். அன்று கோவிலுக்குள் சென்று பார்த்துவிடலாம் என்பதுதான் திட்டம். சிறுவனும் அத்திட்டத்துக்கு உடன்பட்டுக்கொள்ள, அன்றைய தினம் இருவருமே வாசலோடு திரும்பிவிடுகிறார்கள்.

வாய்மொழியாக ஒரு திட்டத்தைச் சொல்லிவிட்டானே தவிர, இளைஞனுக்கு உள்ளூர நடுக்கமாகவே இருக்கிறது. அவன் சிறுவனின் தந்தையைப்போலவே கள்ளிறக்கும் தொழிலாளி. கை, கால், நெஞ்சு, தோள் எல்லாமே தடித்த தோற்றம். பார்த்த கணத்திலேயே அவன் யார் என்பது மற்றவர்களுக்குப் புரிந்துவிடும். பிறரிடம் சிக்கிக்கொண்டால் தனக்கு என்ன நேருமோ என்ற அச்சம் அவனை வாட்டுகிறது. ஆயினும் சிறுவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவன் மனம் விழைகிறது. அதனால், தீர்த்தமாடுவதற்கு சுவாமியோடு அனைவரும் கடலை நோக்கிச் சென்றிருந்த சமயத்தில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி சிறுவனை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்துவிடுகிறான். கிணற்றடியில் கால் கழுவ நேரமில்லை. வாசலில் கற்பூரம் கொளுத்திவிட்டு நுழைந்துவிடுகிறார்கள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்கிற அச்சத்தோடு வேகவேகமாக சுற்றிவருகிறார்கள். வாசலை நெருங்கி வெளியேறும் சமயத்தில் யாரோ தெரிந்தவர் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டு அவசரமாக பின்னால் நகர்ந்து வேறொரு வாசல் வழியாக மூச்சிரைக்க ஓடி வெளியேறிச் செல்கிறார்கள். பயத்துடன் சுற்றியதில் பாதிக் கோவில் பார்க்கவே இல்லை. ஒரு சாகசச்செயல் போல அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டிருந்தாலும், சாதியப்பார்வையின் விளைவைப் புரிந்துகொள்ள துணையாக இருக்கிறது.

சுயமரியாதையோடு நிமிர்ந்து நிற்கவேண்டும் என்கிற தன்னுணர்ச்சி தெணியானின் நெஞ்சில் இயல்பாகவே நிறைந்திருந்ததை பல நிகழ்ச்சிகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒருமுறை பனைமரத்துக்கு ’நெம்பர் ப்ளேட்’ அடிக்க அரசு அலுவலர்கள் இருவர் வருகிறார்கள். அதைப்பற்றி சிறுவனின் தந்தையார் ஏற்கனவே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் அவர்கள் வந்ததும் நெம்பர் ப்ளேட் அடிக்கவேண்டிய மரத்தை அடையாளம் காட்டுகிறான். இருவரில் ஒருவன் மரத்தில் ஏறிக்கொண்டு ’அதைப்பிடி இதைப்பிடி’ என சிறுவனிடம் வேலை வாங்க நினைக்கிறான். சின்னப்பையன் என்பது ஒரு எண்ணம். சாதியில் தாழ்ந்தவன் என்பது இன்னொரு எண்ணம். ஆனால் அச்சிறுவனோ  அவன் சொன்ன வேலையைச் செய்ய முன்வரவில்லை. ”அதற்காகத்தானே இருவராக வந்துள்ளீர்கள், நீங்களே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்கிறான். வேறு வழியில்லாமல் அவர்களே செய்துவிட்டுச் செல்கிறார்கள். அப்பா அவர்களிடம் கொடுக்கும்படி சொன்ன பணத்தைக்கூட கொடுக்காமல் அனுப்பிவைத்துவிடுகிறான் சிறுவன்.

இந்தத் தன்வரலாற்று நூலில் சாதியத்தின் நிழல் படிந்த தருணங்களை மட்டும் தெணியான் முன்வைக்கவில்லை. தன் தவறுகளையும் இயலாமையையும் குற்றங்களையும் படிக்கும் பழக்கம் உருவான விதங்களையும் குறும்புவிளையாடுகளையும் கூட பதிவு செய்துள்ளார். திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தபோது, தன் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தன் ஆசிரியர் என்று தெரியாமல் இளமைவேகத்தில் தொடர்ச்சியாக சிகரெட் புகைத்து, புகையை அவர் அமர்ந்திருந்த திசையில் செலுத்திவிட்டு, இடைவேளை சமயத்தில் வெளிச்சம் வந்த பிறகு உண்மையை உணர்ந்து குற்ற உணர்ச்சியோடு தொடர்ந்து படம் பார்க்க முடியாமல் திரும்பிவிட்ட ஒரு தருணத்தையும் எழுதியிருக்கிறார்.

தெணியானின் தன்வரலாறு ஒரு கோணத்தில் அவருடைய வாழ்க்கைப்பாதையைப் படம் பிடிப்பதாகத் தோன்றினாலும், இன்னொரு கோணத்தில் வடமராச்சி மக்களின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

 

( அம்ருதா – ஜுலை 2022 )