Home

Wednesday 13 July 2022

பாதாள உலகமும் பாதை மாறியவர்களும்

  

பூமிக்குக் கீழே உள்ளதாக நாம் நம்பும் ஏழு உலகங்களில் ஒன்று பாதாளம். அந்தப் பாதாளத்தில் இரக்கம் இல்லை. கருணை இல்லை. யாரோடும் ஒட்டுதலோ உறவோ இல்லை. யாரும் அங்கே மனிதர்களே இல்லை. மனித உருவில் விலங்குகளே வாழ்கின்றன. ஒவ்வொருவரும் அடுத்தவரின் உயிரையே உண்ணுபவர்கள். வக்கிரம் கொண்டவர்கள். நம்மிடையில் உலவும் பாதாளத்தைப்பற்றிய கற்பனைகள் இப்படித்தான் உள்ளன. ஆனால், உண்மையில் பாதாளம் பூமிக்கு அடியில் இல்லை.  பூமியின் மேற்புறத்திலேயே உள்ளது. கருணையும் இரக்கமும் இல்லாத இடமெல்லாம் பாதாளமே. மக்களின் மதிப்பைப் பெறமுடியாமல் ஒதுங்கியிருக்கும் இடமனைத்தும் பாதாளமே. பாதாளம் இல்லாத ஊரே இல்லை.

ஒருவருடைய மரணத்துக்குப் பிறகு அவரைச் சிதையிலேற்றி எரித்து சாம்பலாக்கி, இறுதிச்சடங்குகளுக்கு துணைநின்று செயலாற்றும் களமாக ஒவ்வொரு ஊரிலும் விரிந்திருக்கும் சுடுகாட்டுக் கல்மண்டபத்தை பாதாள உலகம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தக் கல்மண்டபத்திலும் வேண்டப்பட்டவன், வேண்டப்படாதவன் என மனிதர்கள் வேறுபட்டு நிறைந்திருக்கிறார்கள். உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அங்கும் தனி அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் சுரண்டல் மனிதர்கள் இருக்கிறார்கள்.

கல்மண்டப வேலைகளுக்கு இச்சமூகத்துக்குத் தேவைப்படும் வேலைவரிசைப்பட்டியலில் முக்கியமான இடமுண்டு. ஆயினும், கல்மண்டபத்து மனிதர்களுக்கு சமூக மதிப்பு என்பதே இல்லை. சாதிகளாலும் மதங்களாலும் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்தில் எந்த சாதியினராக இருந்தாலும், கல்மண்டபத்தில் பணியாற்றும் தன் சொந்தச் சாதிக்காரர்களை மதிப்பதில்லை. எல்லைக்கோடுகள் புலப்படாத ஒரு பாதாளத்துக்குள்தான் அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது.

தம்மை ஒதுக்கிவைத்த சமூகத்தை கல்மண்டபத்துக்காரர்களும் ஒதுக்கிவைத்துவிட்டு வாழலாம். அத்தகையோருக்கு சமூக மதிப்பு இல்லாமல் போனாலும் குறைந்தபட்சமாக, குடும்ப மதிப்பாவது எஞ்சியிருக்கும். ஆயினும், மது, சூதாட்டம், களவு போன்றவற்றில் ஈடுபட்டு கைப்பொருளை இழந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும் பொருட்படுத்தாமல் வாழத் தொடங்கிவிடும் கல்மண்டபக்காரர்கள் தம் குடும்ப மதிப்பையும் இழந்துவிடுகிறார்கள். புதைகுழியில் சிக்கி உயிரிழக்கும் விலங்கென, அவர்கள் கொஞ்சம்கொஞ்சமாக, அந்தப் பாதாளத்துக்குள்  புதைந்துபோய்விடுகிறார்கள்.  

கல்மண்டபத்தின் கடுமையையும் சுமையையும் தாங்கிக்கொள்ள இயலாமல் எங்கோ ஒருசிலர் தன்னைப் பிடித்து மேலேற்றும் ஏதோ ஒரு கையைப் பற்றிக்கொண்டு பாதாளத்திலிருந்து மீண்டுவிட விழைகிறார்கள். எங்கோ ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் அரிதாக நிகழ்கின்றன. ஏதோ ஓர் அரிய தருணத்தில் அத்தகு மீட்சிக்கான கையைப் பற்றிக்கொண்டு எப்படியோ அவர்கள்  மெல்லமெல்ல வெளியேறிவிடுகிறார்கள்.  அவ்வகையில் வெளியேறியவர்களில் ஒருவன் வேதாந்த தேசிகன் என்கிற தேசு. அவன் கல்மண்டபப் பாதாளத்தில் சிக்கிச் சீரழிந்த கதையை ஒரு பகுதியாகவும் மீண்டுவந்த கதையை மறுபகுதியாகவும் கொண்டு சுமதி இருபதாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஒரு நாவல் இப்போது புதிய பதிப்பாக வந்திருக்கிறது.

புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்ட ராமானுஜம் என்கிற ராமான்ஜி வாய்ப்புக்காகவும் வருமானத்துக்காகவும் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்குக் குடியேறியவர். அவர் வேதபாடசாலையில் படித்துத் தேறியவர்.  ஆயினும் அவரால் தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் வாழமுடியாமல் போய்விடுகிறது. சென்னையில் அவர் ஒருநாள் பார்த்தசாரதி ஐயங்கார் என்னும் வழக்கறிஞர் வீட்டுக்கு திவசம் செய்துவைக்கச் செல்கிறார். ஏதோ காரணத்தால் அவரால் குறித்த நேரத்துக்குச் செல்ல இயலவில்லை. சற்றே தாமதமாகிவிடுகிறது. பொறுமையிழந்த வழக்கறிஞர் வாய்த்துடுக்காக புரோகிதரைப் பார்த்து எதைஎதையோ பேசிவிடுகிறார். தாமதத்துக்கான காரணத்தை எடுத்துரைக்கக்கூட ராமான்ஜிக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை.  “ஒரே நாள்ல நாலு திவசம் சீச்சீ” என்று அருவருப்போடு முகம் சுளிக்கிறார். “பரிசாரகன் வேலைக்குத்தான் நீ லாயக்கு” என்று  சொற்களைக் கொட்டுகிறார். அதைக் கேட்டு அவமானத்தால் துடிக்கும் ராமான்ஜி அவர் முன்னாலேயே தர்ப்பைக்கட்டை வீசியெறிகிறார். இனி ஒருபோதும் புரோகிதத்தொழிலில் இறங்கமாட்டேன் என உறுதிகொள்கிறார். இனி தன் தொழில் பரிசாரகனே என்று அறிவித்துவிடுகிறார்.

வழக்கறிஞராக இருப்பது ஒரு தொழில். புரோகிதராக இருப்பதுவும் ஒரு தொழிலே. வேறுபாடு ஒன்றுமில்லை. ஆனால் நம் சமூகத்தில் ஒரு தொழிலுக்குரிய சமூகமதிப்பு மற்றொரு தொழிலுக்கு இல்லை. அந்த பேதமே வழக்கறிஞருக்கு அப்படி பேசும் உரிமையை அளிக்கிறது. ஒரு வழக்கறிஞர் ஒரு நாளில் நான்கு வழக்குக்களை  எடுத்து நடத்தும்போது, ஒரு புரோகிதரும் ஒரே நாளில் நான்கு திவசங்களை நடத்திக் கொடுக்கலாம். அதில் பிழை ஒன்றுமில்லை. ஆனால், அப்படி எடுத்துச் சொல்லும் அளவுக்கு ராமான்ஜியிடம் பொறுமை இல்லை. தன்னம்பிக்கையும் இல்லை. வழக்கறிஞரைப்போலவே அவரும் சொற்களைத் தேவையில்லாமல் கொட்டிவிடுகிறார். தன்னைத் தானே ஒரு படி இறக்கிக்கொள்கிறார்.

சொந்த வீட்டுச் சமையல்கட்டுக்குள்ளேயே கணவன் வருவதை விரும்பாத செளந்திரம் தன் கணவன் சமையல் தொழிலைத் தேர்தெடுத்ததை முற்றிலும் ஆதரிக்கவில்லை. அவர் முடிவு அவளுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. எனினும் குடும்ப அமைதி கருதி, அந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தவில்லை. சமையல் வாய்ப்புகள் பெருகப்பெருக, அவனுக்கு நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்குகிறது. வருமானம் பெருகியதும், வாடகை வீட்டை விட்டு வெளியேறி சொந்தமாக ஒரு வீடு கட்டிக் குடிபுகும் எண்ணம் அவர் நெஞ்சில் புகுந்துவிடுகிறது. வளர்ந்துவரும் அசோக்நகரில் ஒரு மனை வாங்கி வீடு கட்டிமுடிக்கிறார். ஆனால் செல்வம் சேரச்சேர மனத்தளவில் அவரை விட்டு வெகுதொலைவு போய்விடுகிறாள் செளந்திரம். ஒருநாள் மனமுடைந்து மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டுவிட்டு வயிற்றுப்பிள்ளையோடு தற்கொலை செய்துகொள்கிறாள்.

ராமான்ஜியின் வாழ்வில் இப்படித்தான் முதன்முதலாக சரிவு ஏற்படுகிறது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவரும் மறைந்துவிட, பதினாலு வயதுச் சிறுவனான தேசிகன் தன் வாழ்வின் திசையை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய நிலையில் நிற்கிறான். பசியும் பட்டினியும் ஆதரவின்மையும் அவனை கல்மண்டபத்தில் தஞ்சமடையச் செய்கிறது. கல்மண்டபத்து உதவியாளாக, பணியாளனாக, பாடை தூக்கும் நான்கு பேர்களில் ஒருவனாக மாறிவிடுகிறது அவன் வாழ்க்கை. அங்கே கொடுக்கப்படும் பணத்தைச் சம்பளமாக வாங்கிக்கொள்கிறான். பசி நேரத்துக்கு விடுதியில் சாப்பிட்டு உயிர்வாழ்கிறான்.

போது, திருமண வயதை அடைந்தபோது, வைதீகம் பார்ப்பதாகப் பொய்சொல்லி கல்யாணியைத் திருமணம் செய்துகொள்கிறான் தேசு. இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்கிறார்கள். ஒரு நாள் ஒரு அவசரத்துக்காக அவன் வேலை செய்யும் விஷ்ணுதீர்த்தத்துக்கு நேரிடையாக வந்தபோதுதான் கல்யாணிக்கு உண்மைநிலை தெரிய வருகிறது. உண்மையை மறைத்த குற்ற உணர்வும் தன்னிரக்கமும் அவனை கூடா நட்பும் மதுவும் போதை மருந்தும் இணைந்த வேறொரு திசையை நோக்கி இழுத்துச் செல்கின்றன. அவன் மனைவியின் மதிப்பை இழக்க நேர்கிறது. அந்த அதிர்ச்சியும் வருத்தமும் அச்சமும் வாழ்வின் திசையப்பற்றிய ஒரு முடிவையெடுக்கவேண்டிய புள்ளியை நோக்கி அவனைச் செலுத்துகின்றன.

கல்மண்டபத்தைவிட்டு வெளியேறுவதற்கு அந்தத் தருணம் அவனுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் பதினாலு ஆண்டு காலமாக அந்தத் தொழிலை மட்டுமே செய்துவந்த அவனால் வேறு தொழிலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதே தொழிலை சற்றே மதிப்புடன் நடத்தும் நோக்கத்துடன் வங்கிக்கடன் உதவியோடு முக்திரதம் என்னும் பெயரில் ஒரு வாகனத்தை வாங்கத் திட்டமிடுகிறான். கல்மண்டபத்தைவிட்டு அவன் வெளியேறக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அவன் கல்மண்டபத்துக்கே மீண்டும் திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறான். ஒரு வாகனத்தின் வருகை அவனுடைய முடிவுக்கு வலிமை சேர்க்கிறது.

ஒரு வாகனம் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்பது சுவாரசியமான கேள்வி. இறுதிச்சடங்குகளை நடத்தும் விஷ்ணுதீர்த்தம், தர்மவாபி போன்ற இடங்களில் நிலவும் பேதங்கள் ஏராளம். சட்டாம்பிள்ளைகளாக அந்த இடங்களில் அதிகாரத்தோடு உலவும் கிட்டு போன்றவர்களும் மகாதேவ ஐயர் போன்றவர்களும் அங்கு வேலை செய்பவர்களை பூச்சிகளைப்போலவும் விலங்குகளைப்போலவும் நடத்துகிறார்கள். தொழில்செய்பவர்களுடைய  சுயமரியாதையைச் சீர்குலைத்துச் சிதைக்கிறார்கள். அத்தகையோரே மரணம் நிகழ்ந்த வீட்டினருக்கும் இறுதிச்சடங்கு நிகழும் இடத்துக்கும் இடையிலான இணைப்புக்கண்ணியாக இருக்கிறார்கள்.  ஒரு வாகனத்துடன் முன்வரும் தேசு அதே இணைப்புக்கண்ணியின் இடத்தை நோக்கித்தான்  வருகிறான். இறுதிச்சடங்கில் ஈடுபட்டிருக்கும் பிறருக்கு அவன் உரிய ஊதியத்தைக் கொடுத்து, மதிப்போடு நடத்தக்கூடும். மெல்ல மெல்ல அவன் அத்தொழிலில் தன்னை நிறுவிக்கொள்ளும்போது மாதவராவின் இடத்தையும் கிட்டுவின் இடத்தையும் அவன் எதிர்காலத்தில் அடையக்கூடும். காலம்தோறும் கல்மண்டபத்தில் நடைபெற்றுவந்த வேலைகளே ஒருசிறிதும் மாற்றமின்றி அப்போதும் நடைபெறும். ஆயினும் அந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்களின் சுயமரியாதையைக் குலைக்கும் தருணங்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும்.

ஒருவருடைய மதிப்பு என்பது, அவர் செய்யும் தொழில்சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட சமூகத்தில், ஒவ்வொருவரும் மதிப்பான வேலைகளைத் தேடி அடைய விரும்புவது இயற்கையே. சிலருக்கு மதிப்பான வேலைகள் இயற்கையாகவே அமைந்துவிடுகின்றன. இன்னும் சிலர் தன் தளராத முயற்சிகளாலும் பிறர் ஒத்துழைப்பினாலும் மதிப்பான வேலைகளைத் தேடிப் பற்றிக்கொள்கிறார்கள். அப்படி இயற்கையாக அமையும் வாய்ப்பும் இல்லாத, அமைத்துத்தர வல்லவர்களின் உறுதுணையும் இல்லாத, தேடிச் சென்றாலும் கிட்டுகிற வாய்ப்பும் இல்லாத கூட்டத்தினர் வேறு வழியின்றி மதிப்பிழந்த வேலைகளில் ஒட்டிக்கொள்கிறார்கள். தொழில் என்பது வருமானமீட்டும் ஒரு வழி மட்டுமே என கருதும்போது பேதங்கள் குறைவதற்கு வழியுண்டு. ஒரு வாகனம் என்னும் நவீன வசதியோடு அனைவரையும் மதிக்கவேண்டும் என்ற உள்ளத்தோடு கல்மண்டபத்தை நோக்கிச் செல்லும் தேசு போன்றவர்களின் முயற்சியால் கல்மண்டபத்தின் மதிப்பு அடுக்குகளில் சிறிதளவாவது மாற்றங்களை உருவாக்கமுடியும்.

நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்துவத்தோடும் அதற்குரிய முக்கியத்துவத்தோடும் உருவாக்கியிருக்கிறார் சுமதி. கணவன் மீது காதலிருந்தாலும் தனக்குள் நிறைந்துவிட்ட கசப்பின் வெளிப்பாடாக தற்கொலையை நாடிச் செல்லும் செளந்திரம், கணவன் மீதான காதலைத் துறக்கவும் மனமின்றி, ஏற்கவும் மனமின்றி நலிந்து ஒடுங்கி, பிறகு அவன் மீண்டுவர எடுக்கும் முயற்சியில் துணையாக நிற்கும் கல்யாணி, ஆண் என்கிற கர்வத்தால் மனைவி இருக்கும்போதே வேறொரு பெண்ணை மணம் புரிந்துகொண்டு வந்த கணவனுக்கு உறைக்கும் விதமாக, அவனுக்கு எதிரிலேயே தலையை மழித்து நார்மடி உடுத்திக்கொண்டு விதவைக்கோலத்தோடு அவனை விட்டுப் பிரிந்துசென்று எங்கோ ஒரு சத்திரத்தில் எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கும் வெங்கிட்டம்மாள், அவளுடைய அமைதியான வெளியேற்றமே தன் வாழ்க்கைக்குச் சாபமாக அமைந்துவிட்டது என்ற நம்பிக்கையில் தன் மகனை அவள் தங்கியிருக்கும் சத்திரத்துக்குச் சென்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவளுக்குச் சேவை செய்யுமாறு  தான் பெற்ற மகனை அனுப்பிவைக்கும் காய்த்ரி என ஒவ்வொரு பாத்திரமும் தம் செயல்களால் வாசகர்களின் நெஞ்சில் இடம்பிடிக்கிறார்கள்.

கல்மண்டபத்துப் பணியாளனான தேசு போன்றவர்களை ஆடுமாடுகள் போல நடத்தும் கிட்டுவும் மகாதேவராவும் எப்போதும் நெஞ்சில் பிறர் மீதான வெறுப்பைச் சுமந்தவர்களாகவே இருக்கிறார்கள். எங்கெங்கும் தன்னை நிறுவிக்கொள்ளும் அற்ப ஆசையே அதற்குக் காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தேசுவை மதிப்போடு நடத்தி அன்போடு உரையாடுகிறவர்களும் இருப்பதையும் காட்டுகிறார் சுமதி. கல்மண்டபத்தில் தேசுக்குக் கிடைக்கும் கோம்ஸின் நட்பு அத்தகைய ஒன்று. நவீன காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் உடலைச் சுமந்து செல்வதற்கு வாகனத்தை வாங்கும் எண்ணத்தை ஆலோசனையை வழங்கி, அதற்கான முதலீட்டுத் தொகையில் ஒரு பங்காக நூற்றியொரு ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பும் மணிசங்கர ஐயரின் சித்திரத்தை மறக்கமுடியாது. பக்கத்து வீட்டில் வசிக்க வந்த மாமியாகப் பார்த்த காலத்திலிருந்து, வாகனம் வாங்குவதற்கான தொகைக்கு என்ன செய்வது என்று புரியாமல் அவன் மனம்குலைந்து  நடந்துபோகும்போது, அவனைப் பெயரிட்டு அழைத்து உரையாடி பதினோரு ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பும் விசாலம் மாமியின் சித்திரமும் நாவலில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. கிடைக்கவே கிடைக்காது என நினைத்திருந்த வங்கிக்கடன் கனவைச் சாத்தியமாக்கிய டைகர்  அத்தருணத்தில் மகத்தான மனிதனாகவே உயர்ந்து நிற்கிறான்.

கிட்டுவும் மகாதேவ ஐயரும் வாழ்கிற இதே உலகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். வெறுப்பும் அன்பும் கசப்பும் இனிமையும் இந்த வாழ்க்கையில் கலந்துதான் கிடைக்கின்றன. இவ்வாழ்வில் இனிமை மட்டுமே வேண்டும் என்று வேண்டுவதில் பொருளில்லை. கசப்பாக அமைந்துவிட்டதே என சலித்துக்கொள்வதிலும் பொருளில்லை ஒவ்வொன்றையும் அதனதன் போக்கில் எடுத்துக்கொண்டு சென்றால், ஒவ்வொரு கணமும் வாழ்வில் முக்கியமான கணமே. இரக்கமும் மதிக்கத் தெரியும் பண்பும் நிறைந்திருந்தால், கல்மண்டபங்கள் மலர்மண்டபங்களாகவே மாறிவிடும். இல்லையென்றால், அவை இரும்புமண்டபங்களாக இறுகிப்போய்விடும்.

பரதுக்கத்தை சுயதுக்கமாக எண்ணும் பண்புள்ளவனே உண்மையான வைணவன் என்றொரு பேச்சு நாவலின் போக்கில் ஓரிடத்தில் இடம்பெற்றிருக்கிறது. துக்கத்தை  நிகராக நினைப்பது என்பது ஒரு முக்கியமான நிலை. அதில் சந்தேகமே இல்லை. அதற்கு முன்பு, அடுத்தவன் வேறு, தான் வேறு என்னும் எண்ணமில்லாமல் அனைவரையும் இணையாக மதிக்கும் பண்பு உருவாக வேண்டும்.  சுமதியின் நாவல் இப்படி ஏராளமான எண்ணங்களை எழுப்புகின்றன.

 

( நூல் : கல்மண்டபம், ஆசிரியர் : வழக்கறிஞர் சுமதி, வெளியீடு: பவித்ரா பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையம், கோவை, விலை : ரூ: 250 )

 

( புக் டே – 12.07.2022 )