இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் புதிய தலைமுறையினர் தோன்றியுள்ளார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் பெயர்களை படம்பார்த்துக்கூட சொல்லத் தெரியாத அளவுக்கு காலம் மாறிவிட்டது. ஆயினும் ஓர் இலட்சியவாதியைப்பற்றிய செய்தி இன்றும்கூட நம் மனசாட்சியைத் தொட்டு அசைக்கும் சக்தியுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மின்னலைப்போல அது நம்மைத் தாக்கித் திணறடித்துவிட்டு மறைந்துபோகிறது.
கடந்த
நூற்றாண்டின் மாபெரும் இலட்சிய உருவகம் மகாத்மா காந்தி. அவர் காட்டிய வழியில்
அர்ப்பணிப்புணர்வோடும் நம்பிக்கையோடும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டார்கள். அது காந்திய யுகம்.
’இந்துக்களும் இஸ்லாமியர்களும் என்னுடைய இரண்டு கண்கள்’ என்று சொன்னவர் காந்தி.
மதவேறுபாடின்றி, இருவரும் இணைந்துவாழும் மாபெரும் இந்தியா அவருடைய கனவாக இருந்தது.
அது அவருடைய வாழ்நாளிலேயே சுக்குநூறாக உடைந்துபோனது. அவருடைய இலட்சியக்கனவை பலியாக
எடுத்துக்கொண்டுதான் இந்திய சுதந்திரம் பிறந்தது. அது வரலாற்றின் மிகப்பெரிய
நகைமுரண். சோகம்.
ஒரு வசதிக்காக,
காந்தி, ஆசிரமத்தில் வசித்தவர்கள், காங்கிரஸ்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரை நான்கு
வளையங்கள் என உருவகிக்கலாம். வளையங்களின் மையத்தில் இருப்பவர் காந்தி. இலட்சியக்கனவுகளின்
மையம். அவர் முதலில் தன் இலட்சியக்கனவுகளை ஆசிரமத்தினரின் கனவுகளாக வெற்றிகரமாக
மாற்றினார். காங்கிரஸ்காரர்களையும் அந்தக் கனவுகளை ஏற்றுக்கொள்ளும் முயற்சியில்
ஓரளவு காந்தி வெற்றியடைந்தார் என்றே சொல்லவேண்டும். ஆனால், காங்கிரஸ்காரர்கள்
அல்லாத பொதுமக்களிடையே அவருடைய முயற்சி மிகமிகக்குறைவான வெற்றியையே அடைந்தது.
மாறுபட்ட வளையங்களில் இருந்த ஒவ்வொருவருக்கும் காந்தியைப்பற்றிச் சொல்லிப்
பகிர்ந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. சில எழுத்துப்பதிவாக நூல்வடிவம்
பெற்றுள்ளன. சில வாய்மொழிப்பதிவாக உள்ளன.
1942 ஆம்
ஆண்டில் காந்தியடிகளின் தனிச்செயலாளராக இணைந்து, அவருடைய இறுதிமூச்சுவரைக்கும்
பணியாற்றியவர் கல்யாணம். காந்தியுடன் இணையும்போது அவருக்கு 22 வயது.
அதற்குமுன்னால், அவர் நல்ல சம்பளத்துடன் அரசு வேலையில் இருந்தவர். மேசைவேலை
செய்வதை அவர் மனம் விரும்பவில்லை. உடல் உழைப்பு சார்ந்த சேவை செய்யவேண்டும் என்கிற
எண்ணத்தால் அவர் தன் வேலையை உதறிவிட்டு, வார்தா ஆசிரமத்துக்கு வந்தார். காந்தியின்
எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு, அவருக்காகவே உழைத்தார். சுதந்திர
இந்தியாவில் அகதிகள் மறுவாழ்வுத்திட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் நலவாழ்வுத்திட்டத்தில்
பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.
காந்தி தன்
இறுதிமூச்சை விடுவதற்கு முன்னால் ‘ஹே ராம்’ என்று சொல்லவில்லை என்றொரு அறிக்கையை
அவர் வெளியிட்டபோது அவருடைய பெயர் ஊடகங்களில் அடிபட்டது. அடுத்து காந்தியின்
கடிதங்கள் சிலவற்றை அவர் வெளிநாட்டு நிறுவனமொன்றின் துணையோடு ஏலம் விடுவதற்கு
முயற்சி செய்கிறார் என்ற செய்தியோடு மீண்டும் அவர் பெயர் அடிபட்டது. அவர் தன்
அனுபவங்களை நூலாக எழுதியிருக்கலாம். என்ன காரணத்தாலோ, அது நடக்கவில்லை. இத்தனை
ஆண்டுகள் கழிந்தபிறகு, தற்செயலாக அவரைச் சந்தித்து நட்புகொண்ட நீலகண்டனுடன் அவரால்
தம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது. எம்.எஸ்.யூனூஸ் அவர்களின் பர்மா
நினைவுகளைப்போல கல்யாணம் அவர்களின் சுதந்திர நினைவுகளும் பதிவு பெறத்தக்கவை.
நீலகண்டனின் புதிய நாவலுக்கு அந்த நினைவுகளே ஊடுபாவுகளாக உள்ளன.
இந்தியாவில்
இணையதளங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை பத்துகோடி என்றும் கைப்பேசி வழியாக அவற்றை
வாசிப்பவர்களின் எண்ணிக்கை எட்டுகோடி என்றும் சமீபத்தில் ஒரு தகவலைப் படித்தேன்.
இந்த எட்டு கோடிப் பேரில் பாதிக்குப் பாதி பேராவது வலைப்பூ வைத்துக்கொண்டு,
தினசரிக்குறிப்புகள்போல தம் மனத்துக்குத் தோன்றுவதை தொடர்ந்து எழுதியபடி
இருக்கிறார்கள். அவற்றை மற்றவர்கள் படிக்கிறார்கள். படித்த கருத்தையொட்டி
பின்னூட்டம் இடுகிறார்கள். இந்த வசீகரம் நீலகண்டன் மனத்தைக்
கவர்ந்திழுத்திருக்கவேண்டும். இந்த வசீகரத்தின் வழியாக புதிய நாவலுக்கான வடிவத்தை
அவர் கண்டடைந்திருக்கலாம். புத்தாயிரத்தாண்டின் முதல் சுதந்திரதினத்தில் பிறந்த
சத்யா என்னும் சிறுமி ஒரு வலைப்பூ தொடங்கி, தன் மனத்தில் தோன்றுவதை எழுதுகிறாள்.
பிரிந்து வாழும் தன் பெற்றோர், அமைச்சரும் சீரழிவுகளின் உச்சமுமான தன் மாமா
வீட்டில் தங்கிப் படிக்க நேர்ந்த சூழல், அவருடைய ஊழல்கள், பணம் சம்பாதிக்க அவர்
கையாளும் தவறான வழிமுறைகள், அவருடைய மகன், தன் தந்தையையே இலட்சியமாகக் கொண்டு
வளரும் அவன் போக்கு என பல விவரங்கள் அவள் வலைப்பூவில் இடம்பெறுகின்றன. கணிப்பொறியை
இயக்கும் விதத்தைக் கற்றுக்கொண்டு தற்செயலாக இணையத்தின் பக்கம் வருகிற பெரியவர்
கல்யாணம் சத்யாவின் வலைப்பூவைப் படித்துவிட்டு, சிறுமியின் எழுத்துகளால் உத்வேகம்
கொண்டு தனக்கென சொந்தமாக ஒரு வலைப்பூவை ஏற்படுத்தி, தன் நினைவுகளைப் பதிவு செய்யத்
தொடங்குகிறார். ஒருபுறம் சத்யாவால் முன்வைக்கப்படும் சீரழிவுகளின்
காட்சித்தொகுப்புகள். இன்னொரு புறம் பெரியவர் கல்யாணத்தால் முன்வைக்கப்படும்
லட்சிய யுகக் காட்சித்தொகுப்புகள். சத்யாவின் எழுத்துகளில் உள்ள ஏதோ ஒரு சொல்
கல்யாணத்துக்குத் தூண்டுதலாக உள்ளது. கல்யாணத்தின் எழுத்துகளில் உள்ள ஏதோ ஒரு சொல்
சத்யாவுக்குத் தூண்டுதலாக உள்ளது. இருவருமே வெவ்வேறு ஆண்டுகளில் ஆகஸ்டு 15 ஆம்
நாளில் பிறந்தவர்கள். இருவருடைய எழுத்துகளுக்கும் மையமாக இருப்பது இந்தியா. ஆகஸ்டு
15 ஆம் நாள் பிறந்த இந்தியா. லட்சிய யுகமாக தொடங்கிய இந்தியா, மெல்லமெல்ல
சீரழிந்து சரிகிறது. இந்த நாவலின் இறுதியில் ஒரு ரயில்விபத்துக் காட்சி
இடம்பெற்றுள்ளது. பெட்டிகள் தடம்புரண்டு பயணியர்கள் காயமடைந்து துடிக்கிறார்கள்.
அதே பெட்டியில் பயணம் செய்து தப்பித்த பிற பயணியர் அவர்களைக் காப்பாற்றி உரிய
இடத்துக்குத் தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார்கள். தமக்குள் மனவேறுபாடு கொண்டு
சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துபோன சத்யாவின் பெற்றோர் தற்செயலாக அங்கே சந்தித்துக்கொள்கிறார்கள்.
இருவருமே காயமடைந்தவர்களைக் காப்பாற்றுகிறார்கள். அடுத்த உயிரை தன்னுயிர்போல
நினைத்துக் காப்பாற்ற நினைக்கும் அருளுணர்வுக்கு எளிய மனிதர்களிடம் எப்போதும் இடம்
இருக்கிறது. அரசின் மையத்திலிருந்து வெகுதொலைவு இருப்பவர்கள் இவர்கள். ஆனாலும்
இவர்கள் வழியாக மீண்டும் இலட்சியவாதம் உருவாகி வளரும் என்ற நம்பிக்கைக்கான விதையை
நாவல் விதைக்கிறது.
கல்யாணம்
பதிவுசெய்யும் நினைவுகள் பெரும்பாலானவை காந்தியைப்பற்றியவை. அதனாலேயே, நாவலுக்கு
ஒரு வரலாற்றுத்தன்மை உருவாகிவிடுகிறது. காந்தி கோபம் கொள்வதில்லை. கோபத்தோடு
முறைத்துப் பார்ப்பதே வன்முறை. பல்லைக் கடிப்பதும் மனத்துக்குள் ஒருவரைப்
பழிவாங்கவேண்டுமென்று நினைத்துக்கொள்வதும் வன்முறை. அவர்களுக்கு தீங்கு
நிகழவேண்டும் என நினைப்பதும் வன்முறை. இதுவே காந்தியின் சித்தாந்தம் என்றொரு
சித்திரத்தை கல்யாணம் வழங்குகிறார். பிரார்த்தனைக்கூடத்தில்
பிரார்த்தனைப்பாடல்களைப் பாடுவதுபோல பாவனை செய்தபடி, உட்கார்ந்த நிலையில் சிலர்
உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தெளிவு வரவில்லையே என்று மனம் வருந்துகிறாரே
தவிர, காந்தி கோபத்தைக் காட்டவில்லை. ஆசிரமத்தில் தங்கி, உதவித்தொகையோடு படிக்கும்
ஒரு மாணவன் உதவித்தொகையை உயர்த்திக் கொடுக்குமாறு காந்தியின் பெயரில் ஒரு
போலிக்கடிதம் எழுதி, அகப்பட்டுக்கொள்கிறான். பணத்தாசையின் விளைவாக, இப்படிச்
செய்துவிட்டானே என்று வருத்தம் கொள்கிறார் காந்தி. அப்போதும் கோபம் கொள்ளவில்லை.
ராணுவ ஜெனரல் கரியப்பா ‘இந்தியாவில் நமக்கு ஒரு வலுவான ராணுவம் வேண்டும், அகிம்சையைப்பற்றிப்
பேசி எந்தப் பயனுமில்லை’ என்று ஒருமுறை பேசினார். அதைக் கேட்ட காந்தி, ‘பெரும்பாலான
வல்லுநர்களைப்போலவே கரியப்பாவும் தான் அறிந்தவற்றுக்கும் அப்பால் பேசுகிறார்’
என்று வருத்தம் கொள்கிறாரே தவிர, கோபம் கொள்ளவில்லை.
அவரைச்
சந்திக்கும் செயலாளர்கள் அவரைச் சீண்டுவதற்காகவும் கோபப்படுத்திப் பார்க்கவும் சில
கேள்விகளைக் கேட்கிறார்கள். அவரைக் கோபப்படுத்திப் பார்க்கிற, எரிச்சலடைந்து
பேசுகிற வார்த்தைகளைக் கேட்கிற வெற்று ஆர்வத்தைத் தவிர வேறொன்றும் இதற்குக்
காரணமில்லை. ஒரு செய்தியாளர் நீங்கள் சர்வாதிகாரியாக மாறினால் என்ன செய்வீர்கள்
என்று கேட்கிறார். இன்னொரு செய்தியாளர் அணுகுண்டுக்கு எதிராக நீங்கள் என்ன
செய்வீர்கள் என்று கேட்கிறார். தன்னைச் சீண்டிப் பார்க்கும் இக்கேள்விகளை
அமைதியாகவே எதிர்கொள்கிறார் காந்தி. ‘நான் சர்வாதிகாரப் பொறுப்பை ஒத்துக்கொள்ளவே
மாட்டேன். அப்படியே நான் சர்வாதிகாரியானால் வைஸ்ராயின் வீட்டுக் கழிப்பறைகளைச்
சுத்தம் செய்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய
வீட்டுக் கழிப்பறைகளைத் தூய்மை செய்வேன்’ என்றும், ‘அணுகுண்டுக்கு எதிராக நான்
பிரார்த்தனை செய்வேன்’ என்றும் அக்கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் காந்தி.
பிரார்த்தனை என்பதை மனத்தைத் தூய்மைப்படுத்தும் செயல் என்கிற எண்ணத்தில் ஆழ்ந்த
பிடிப்புள்ளவர் காந்தி. பிரார்த்தனையை மருந்தாகச் சொல்வது மனத்தூய்மையை நோக்கிச்
செலுத்தும் வழியாகும். மனம் தூய்மையடையும் போது எண்ணங்கள் தூய்மையாகும். எண்ணங்கள்
தூய்மையடையும்போது செயல்கள் தூய்மையாகும். பிறகு வாழ்க்கையே தூய்மையாகும். தன்
வழிமுறைக்குப் பொருந்தும் வகையிலேயே காந்தியின் பேச்சும் செயலும் அமைந்திருந்தன.
இப்படி பல சம்பவங்களை கல்யாணம் நினைவுகூர்கிறார்.
நேர்ச்சந்திப்புகளில்
பலரும் காந்தியிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். கடிதங்கள்வழியாகவும் பல
கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். பழித்து எழுதுகிறார்கள்.
கண்டித்து எழுதுகிறார்கள். குற்றம் சுமத்தி எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து
ஒருவர் மதுவிலக்கு கூடாது என்று காந்திக்கு ஆலோசனை சொல்லி எழுதியிருக்கிறார்.
கல்யாணம் பல கடிதங்களின் நகல்களை நமக்குப் படிக்கக் காட்டுகிறார். கடிதங்கள்
வழியாகவும் நேர்ச்சந்திப்பிலும் இப்படி ஏராளமான கேள்விகள் கேட்கிற சுதந்திரம்
மக்களுக்கு இருந்தது என்பதையும் ஒன்றுவிடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும்
பொறுமையும் கடமையும் காந்திக்கும் இருந்தன என்பதையும் நாம் நினைத்துப்
பார்க்கவேண்டும். இதேபோன்ற சுதந்திரமான அணுகுமுறையோடு இன்றைய தலைவர்களைப் பார்த்து
நம்மால் கேள்விகேட்டுப் பதிலைப் பெற முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
பாட்ஷாகான்
எனப்படும் எல்லை காந்தியைப்பற்றிய கல்யாணத்தின் தகவல் முக்கியமானது. அணிந்துகொள்ள
ஒரு ஜோடி, மாற்றுடையாக ஒரு ஜோடி என இரண்டுஜோடி ஆடைகளைமட்டுமே தன் உடைமையாகக்
கொண்டவர் அவர். தன்னைச் சந்திக்க வந்த பாட்ஷாகானுக்கு ஒரு ஜோடி ஆடையை
அன்பளிப்பாகத் தந்தார் காந்தி. அதை அவர் வாங்க மறுத்துவிடுகிறார். மூன்றாவது ஜோடி
ஆடை ஆடம்பரம், எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார் அவர். வற்புறுத்தித்தான் அந்த
ஆடையை அவரிடம் கொடுத்தார் காந்தி. குடியரசுத்தலைவராக பணியாற்றி முடிந்த பிறகு,
ராஜேந்திர பிரசாத் தன் சொந்தக் கிராமத்தில் உள்ள கூரைவீட்டுக்குத் திரும்பிப் போய்விடுகிறார்.
சேவைகளில்மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், இறுதிவரைக்கும்
தன் சொந்த ஊரிலேயே வாழ்கிறார். அதிகாலையில் வீட்டுமுன்னால் வந்து நிற்கும்
பொதுமக்களின் துயரக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்பவராகவும் பொதுமக்கள்
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பூங்காவில் கூட்டத்தோடு கூட்டமாக நடப்பவராகவும்
வாழ்ந்தவர் வல்லபபாய் படேல். இப்படி, காந்தி யுகத்து மனிதர்கள் அனைவருமே எளிமையின்
அடையாளமாக இருக்கிறார்கள். இலட்சியமும் எளிமையும் அந்த மாமனிதர்களின் அணிகலன்களாக
உள்ளன. இவற்றின்மீது கறைபடிந்த கணத்தில்தான் வரலாறும் கறையுள்ளதாக மாறியது.
பல தளங்களில்
யோசிக்கத் தூண்டுகிறது ஆகஸ்டு-15 நாவல். அடிப்படையில் எளிய விவரணைத்தன்மையைக்
கொண்டிருந்தாலும், தகவல்களுடைய உண்மைத்தன்மையின் காரணமாக முக்கியத்துவம்
பெற்றுவிடுகிறது.
(ஆகஸ்டு-15.
நாவல். குமரி.எஸ்.நீலகண்டன். சாய் சூர்யா, 204/432, 7, பார்சன் குரு பிரசாத்
ரெசிடென்ஷியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18. விலை.
ரூ.450)
( 23.09.2013
திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை )