Home

Sunday 24 July 2022

மரணம் - சிறுகதை

 

 சுடுகாட்டைச் சுற்றி ஓடிப் பழகுவதுதான் என் அதிகாலைப் பயிற்சியாய் இருந்தது. சுடுகாடு தவிர வேறு விஸ்தாரமான இடம் எதுவுமே இல்லாத ஊர் அது. எனக்கோ ஓட்டப்பயிற்சி மேல் அளவுகடந்த மோகம். கட்டுக்கட்டாய்த் திரண்டிருக்கும் உடல்களைக் கொண்ட விளம்பரங்கள் என்னைக் கூவி அழைத்த நாள்கள் அவை. “காலங்காத்தால சுடுகாட்டு மொகத்துலதான் முழிக்கணுமாஎன்கிற அம்மாவின் வார்த்தைகளை அசட்டை செய்தேன். என் ஆரோக்கியமான லட்சியத்தை அன்பின் பிடிக்குள் தள்ளி நொறுக்க நினைக்கும் அவள் திட்டத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தரவில்லை. இத்தனைக்கும் காலை நேரங்களில் அவள்தான் என்னை எழுப்பிவந்தாள். வாசலில் அவள் சாண நீர் தெளித்து முடிப்பதற்கும் நான் ஷுக்களை மாட்டிக்கொண்டு இறங்குவதற்கும் சரியாய் இருக்கும். அவள் முகம் போகும் போக்கு அத்தனை சந்தோஷத்துக்குரியதாய் இருக்காது. ஆனாலும் கவனிக்காததுபோல புறப்பட்டு விடுவேன். நெகிழத் தொடங்கும் முதல் தருணத்திலேயே என் உயிர் லட்சியத்தை கைகழுவ வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தது.

குப்புசாமியை அங்குதான் சந்தித்தேன். சுடுகாட்டை ஒட்டிய குடிசைவாசி. ஓட்டத்தைக் கண்டு சொல்லப்படும் பாராட்டுக்கள் எனக்கும் தேவையாய் இருந்தன. நான் ஓடும்போது அவன் வேடிக்கை பார்த்திருப்பான். ஓடஓட மெல்ல இருள் விலகும். செக்கச்சிவந்த சூரியன் மெதுவாகத் தலை காட்டும். அதன் ஒளிக்கற்றைகள்  நேர்க்கோடாய் என் மேல் விழும். அவனைக் கடக்கும்போதெல்லாம் முடிந்துவிட்ட சுற்றுக்களின் எண்ணை உற்சாகமாய்க் கூவுவான். ஓட்டம் முடிந்ததும் பம்ப்செட் ஒன்றை நோக்கி மெல்ல நடப்போம் அந்த இடத்தை அவன்தான் எனக்குக் காட்டினான். கரும்புத் தோட்டக் காற்று ஆனந்தமாய் இருக்கும். பெண்களின் குளியல் முடியும்வரை வயல் வரப்பில் ஒதுங்கிக் காத்திருப்போம். சந்தடி அடங்கியதும் குளித்துவிட்டுத் திரும்புவோம்.

குப்புசாமிக்குத்தான் என் அறிமுகம் தேவையாயிருந்ததே தவிர, அவன் அறிமுகம் ஏற்கனவே எனக்கிருந்தது. சுடுகாட்டில் புதைகுழிகளைத் தோண்டுபவன் அவன்தான். அவனுடைய ஏக உரிமையான தொழில். ஆனால் அது அல்ல முக்கியம். சாவு வீட்டில் அவன் ஆடுகிற ஆட்டம்தான் முக்கியம். தப்பட்டைகளின் முழக்கிற்கு உடம்பு வளைந்து நெளியும். அடிகள் ஒவ்வொன்றையும் சொல்லி வைத்ததுபோல வைப்பான். அடிகளின் அழுத்தத்திற்குத் தகுந்த மாதிரிதான் அவன் கால்கள் நகரும். இடுப்பு அசையும். அவனிடம் என்னை ஈர்த்து வந்து சேர்ந்தது இந்த ஆட்டம்தான். சாவு வீட்டில் சோர்ந்துபோய் ஒதுங்கி உட்கார்ந்திருப்பவர்களுக்கு இலவச கேளிக்கை. அவன் வழங்கிய காட்சி.

அவனைப்பற்றி விசாரித்து அறிந்தது சொற்பம்தான். அவனுக்குத் தாய்தந்தை இல்லை. தாய்க்கு இயற்கை மரணம். தந்தைக்கு வார்னிஷ் குடித்து மரணம். கூடப் பிறந்தது ஒரே ஒரு அக்கா. எங்கோ தூரத்து கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். சாவு வீட்டில் வருகிற பணம் தவிர, தேவைப்படும்போது ஓட்டலுக்கு விறகு உடைக்கப் போவான்.

எங்கள் பழக்கம் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று முழுக்க என்னை வெளியே விடவில்லை. அப்பாவிடம் சொல்லி உதை வாங்கி வைக்கப்போவதாய்ச் சொன்னாள். ஆனால் சொல்லவில்லை. அவள் மட்டும் வ்£ய் ஓயாமல் திட்டிக் கொண்டிருந்தாள். கண்டகண்ட பிள்ளைகளோடு சேர்ந்து என் படிப்பையும், எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்வேனோ என்று அவளுக்கு வருத்தம். எல்லாவிதமான உத்தரவாதங்களையும், வாக்குறுதிகளையும் அவளுக்கு செய்த பிறகுதான் அரைமனத்தோடு என்னை வெளியில் நடமாட அனுமதித்தாள்.

குப்புசாமிக்கும் வார்னிஷ் குடிக்கிற பழக்கம் இருப்பதை ஒருநாள் கண்டுபிடித்துவிட்டேன். ஓடப்போன ஒரு நாள் ஆளே தென்படவில்லை. வழக்கமாய் வேப்பங்குச்சியை வாயில் வைத்துக்கொண்டு அவன் நின்றிருக்கும் நேரம், ஆளைக் காணோமே என்று குடிசைப்படலைத் தள்ளிக்கொண்டு போனேன். அவன் படுத்துக்கிடந்தான். காய்ச்சலோ எனப் பதட்டமடைந்தேன். ஒரு வேகத்தோடு அவன் நெற்றியில் கை வைத்தேன். இல்லை. ஆனால் என் கை பட்டதும் எழுந்து விட்டான் அவன். என்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே கண்ணைக் கசக்கினான். என் பார்வை பாய்க்குப் பக்கத்திலிருந்த ஒரு பாட்டிலில் பதிந்தது. “என்ன அது?” என்றேன். “ஒன்னுமில்லையேஎன்றான் அவன். பாட்டிலின் அடியில் சொட்டுக்களாய் மிஞ்சிக் கிடந்த திரவத்தின் வர்ணம் என் சந்தேகத்தை அதிகரித்தது. “பொய் சொல்லாத, வார்னிஷ்தானஎன்றேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தான் அவன்.

ஒனக்கே தெரியுமில்ல. நேத்து வண்டிக்காரர் ஊட்டுல சாவு. ஆட்டபாட்டத்ல ஒடம்பு வலி. தூங்கணுமே. அதான் கொஞசமா வாங்கியாந்தன்.”

அவன் உலகில் எனக்குப் பிடிக்காததும், என்னால் நுழைய முடியாத பாகமும் இருந்ததை முதன்முதலாய் உணர்ந்தேன். பிற்பாடு பல விஷயங்கள் புலப்பட்டன. பகல்வேளை முழுக்க காசு வைத்துச் சூதாடுவான். யாருக்காவது ஆடுகளும், கோழிகளும் அறுத்து உரித்துத் தருவான். வேப்ப மரங்களிலும் நாவல் மரங்களிலும் உட்கார வரும் பறவை இனங்களை தாட்சண்யமே இல்லாமல் கவண்கல்லால் அடித்து வீழ்த்துவான். “சாப்பிட வேணாமா தம்பி, ஒனக்கு பெத்தவங்க இருக்காங்க. எனக்கு யாரு சொல்லுஎன்று கேட்டுவிட்டு தலையை ஆட்டுவான். ஆனாலும் அவனை வெறுக்க இயலவில்லை. அறுக்க முடியாத ஒர் இழை அவனுக்கும் எனக்கும் இடையில் இருந்தது.

ஓடி முடிந்ததும் ஒரு நாள் குப்புசாமி குளிப்பதற்கு வரவில்லை. “உடம்பு ஒரு மாதிரியா இருக்குது. வரலைஎன்றான். “ஆஸ்பத்திரிக்குப் போவலியாஎன்று கேட்டேன். “மருந்துதான் வாங்கணும், ஒரு ரெண்டு ரூபா இருக்குதாஎன்று என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அவன் கண்களின் கெஞ்சுதல் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. மறுபேச்சு இல்லாமல் பையிலிருந்து காசை எடுத்துத் தந்தேன். வாங்கிக்கொண்டு விறுவிறுவென்று ஊர்ப்பக்கம் நடக்க ஆரம்பித்தான். அப்புறம் வெகு நாள்களுக்கு எதுவும் என்னைக் கேட்கவில்லை அவன். அப்புறம் வாரத்துக்கு ஒரு தரமாவது கைமாற்றாக வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. சில முறைகள் திருப்பித் தந்தான். சில முறைகள் மறந்ததைப்போல இருந்தான். நானும் வற்புறுத்திக் கேட்கவில்லை. ஒருமுறை ஏழெட்டு நாள்களுக்கும் மேல் படுத்த படுக்கையாகிவிட்டான் குப்புசாமி. சூதாட்டத்தில் வந்த சண்டையில் அவன் கூட்டாளிகளால் பலமாகத் தாக்கப்பட்டு விட்டான். ஒண்டி ஆளின் கைவரிசை நாலைந்து ஆள்களின் மொத்த பலத்துக்கு முன்பு எடுபடவில்லை. “நல்லாவட்டும் ஒடம்பு. அப்றம் பாரு. நடுத்தெருவுல போட்டு ஒவ்வோர்த்தனயும் தொவட்டி எடுத்துர்றன்என்று கறுவினான். பலமற்ற அவன் உறுமல் எனக்குச் சிரிப்பைத் தந்தது. சாப்பிட ரொட்டித் துண்டுகளை வாங்கிவந்து தந்தேன். “கொஞ்சம் வார்னிஷ் குடிச்சா தெம்பா இருக்கும்என்றான். பல கோணங்களில் அவன் இதைச் சொல்ல முயற்சித்தான். கடைசி வரைக்கும் நான் கண்டு கொள்ளவில்லை.

பழைய ஆரோக்கியம் மெல்ல மெல்ல திரும்ப ஆரம்பித்தது அவனுக்கு. அக்கா வீட்டில் ஒரு மாசம் இருக்கப் போவதாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். “எதுக்காகஎன்று கேட்டேன். “ருசியா ஆக்கிப்போடும் அது. சாப்ட்டு ஒடம்பைத் தேத்திக்கலாம்என்றான். மெல்லப் பேசி மனசை மாற்ற முடியுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் அவன் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமைதியாகி விட்டேன். ஒரு மதியம் புறப்பட்டுப் போனான். அடுத்த வாரமே வந்து நின்றான். எனக்கு ஆச்சரியம்.

என்னாச்சி.”

அக்காவ தெனமும் போட்டு அடிக்கறாம்பா அந்த ராஸ்கல். அந்த மாதிரிலாம அடிக்காத மாமான்னேன். போடா தெண்டச் சோறுன்னான். கோவம் வந்துருச்சி. அவ மேல கையை வச்சா ஒடிச்சிடுவேன் உஷார்ன்னு சொன்னன். ஒடிடா பாப்பம். ஒடிடா பாப்பம்ன்னு கிட்ட கிட்ட வந்து முட்டனான். அவ்ளோ ஆங்காரமா ஒனக்குன்னு ஒரு முறுக்கு முறுக்கனன். நெசமாவே ஒடைச்சிக்கிச்சி. சட்டுனு எழுந்து என்ன அடிச்சிட்டா அக்கா. எனக்கு வெறுத்துப் போச்சி. ஒங்க சகவாசமே வேணாம்ன்னு கௌம்பி வந்துட்டன்.”

அவனைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அவன் நிலையை நினைக்க வருத்தமாய் இருந்தது.

அப்போதுதான் எங்கள் தாத்தா இறந்தார். குப்புசாமிதான் முன் நின்று எல்லாவற்றையும் செய்தான். மூங்கில் கிழிப்பதில் இருந்து பாடைக்கு பூ ஜோடிப்பது வரையில் அவன் செய்தான். “ஏம்பா குழி தோண்டப் போவலியாஎன்று பெரியப்பா கேட்டார். “தோண்டி வச்சிட்டு குழி ஆறக்கூடாதுங்க. பாடை அங்க வர்றதுக்கும் வந்ததுமே புடிச்சி எறக்கறதுக்கும் சரியா இருக்கணும்என்று பதில்  சொன்னான். அவனோடேயே எல்லா வேலைகளிலும் ஒத்தாசையாய் இருந்தேன். அன்று தப்பட்டை அடிகளுக்கு அவன் ஆடிய ஆட்டம் அட்டகாசமாய் இருந்ததாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்காக வேண்டி அவன் தன் திறமையையெல்லாம் சேர்த்து ஆடிக் கொண்டிருந்தான் என்கிற விஷயம் என்னை நெகிழ வைத்தது. வெளியூர் உறவினர்கள் எல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரம் பாக்கி என்னும் போது சுடுகாட்டுக்கு நழுவி விட்டான். அடக்கம் முடிந்ததும் அப்பா அவனுக்குக் குறை வைக்காதபடி பணம் தந்தார். கும்பிட்டுக்கொண்டே வாங்கினான். யாருக்கும் தெரியாமல் என்னிடமிருந்த பத்து ரூபாய்த் தாளைத் தந்தேன். கண்கள் விரிய வாங்கிக்கொண்டான். அன்றைய இரவு அவனுக்கு வாழைஇலையில் சோறு போட்டுத் தளர குழம்பு ஊற்றி அவனிடம் தந்தாள் அம்மா.

இதற்கப்புறம்தான் அவன் உடம்பு மெலியத் தொடங்கியது. மெல்ல மெல்ல பலம் இழந்துகொண்டிருந்தான். வார்த்தைக்கு வார்த்தை அக்கா புருஷனைத் திட்டினான். சரம்சரமாய் கெட்ட வார்த்தைகள் வந்தன. “அவன்தான் எனக்கு சூனியம் வச்சிருக்கான்என்றான். ஆட்டத்துக்கும் வேலைக்கும் தெம்பு போதவில்லை. தெம்பைத் திரட்ட வார்னிஷ் தேவைப்பட்டது. களைத்துத் தூங்கி எழுந்ததும் மென்மேலும் பலவீனம். பலத்தைத் திரட்ட மேலும் வார்னிஷ். பலம் திரட்ட அவன் குடித்த வார்னிஷே அவனது பலத்தைக் குடித்துக்கொண்டிருந்தது.

ஒரு நாள் சாயங்காலம் என் வீட்டுக்கு வந்திருந்தான். பழகி இரண்டு வருஷ காலத்தில் சாவு நிகழ்ந்த அன்ற தவிர எப்போதும் வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்காதவன் அவன். தலையெல்லாம் கலைந்து அழுக்காக வாசலில் நின்றான். என் கெட்டநேரம். வாசலில் அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. இன்றைக்குபூஜைஇருக்கிறது என்று வாய் முணுமுணுத்தது. மெல்லப் படி இறங்கிஎன்னஎன்றேன். “இங்க கொஞ்சம் வாயேன்என்று தெருமுனைக்கு இழுத்துச் சென்றான். எனக்கோ கால்கள் நடுங்கின. அப்பா என்னையே முதுக்குப் பின்னால் முறைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்தப் பக்கம் பார்க்காமலேயே நழுவினேன். “என்னடாஎன்றேன் ஓர் அவசரத்துடன்.

ரெண்டு ரூபா வேணும்.”

வார்னிஷுக்கா?”

அடிபட்ட மாதிரி என்னைப் பார்த்தான் அவன்.

எதுக்குடா ஒடம்ப கெடுத்துக்கற?”

இங்க பாரு. இருந்தா கொடு. இல்லன்னா இல்லன்னு சொல்லு. பெரிய தாத்தா மாதிரி புத்தி சொல்லாத.”

மேற்கொண்டு பேசவில்லை. கோபப்படவும் முடியவில்லை. அனுதாபப்படாமலும் இருக்கமுடியவில்லை. என்னிடம் இருந்ததே இரண்டு ரூபாய்தான். எடுத்துக் கொடுத்துவிட்டேன். “சீக்கிரம் தந்திடறன்என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்துவிட்டான். திரும்பியதுமே அப்பா மடக்கிக் கொண்டார். “அன்னிக்கு சாவுல ஆடனானே அந்தப் பையன்தான அது?” என்றார் அப்பா. நான் குனிந்தபடி தலையாட்டினேன். அதற்கப்புறம் என் கூடாநட்பைப் பற்றி அரைமணி நேரம் திட்டினார். சிலை போல நின்றிருந்தேன். அம்மாதான் இழுத்துக்கொண்டு உள்ளே போனாள். “என்னடா அவனுக்கு? எதுக்கு இங்க வரான்?” என்றாள். என் வாயில் சரளமாய் பொய் வந்தது. “பசிக்குதாம்என்றேன். “பாவம் யாரு பெத்த புள்ளையோ நிக்கச் சொல்லக் கூடாதா. கொஞ்சம் சோறாச்சும் போட்டிருக்கலாமேஎன்று அங்கலாய்த்தாள்.

அடுத்த நாள் ஓட்டத்துக்குப் போனபோது வாசலில் தான் இருந்தான். “வீட்டுக்கெல்லாம் வரவேண்டாம்என்று நாசூக்காய் எடுத்துச் சொன்னேன். சரி என என்னைப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் வெளிச்சம் இல்லை. அப்போதுதான் தன் திட்டத்தைச் சொன்னான். இந்த ஊரே பிடிக்கவில்லை என்றும், ஒரு நூறு ரூபாய் இருந்தால் போதும் என்றும், மெட்ராஸ் போய் பிழைத்துக்கொள்ளமுடியும் என்றும் சொன்னான். அவன் பேச்சு விசித்திரமாய் இருந்தது. அவனோ மீண்டும்மீண்டும் இதை வேகமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்தினேன். நான் படிப்பு முடிந்து சீக்கிரம் வேலைக்குப் போய்விடுவேன் என்றும் என் முதல் சம்பளத்திலேயே நூறு ரூபாய் எடுத்துத் தருவேன் என்றும் சொன்னேன். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். ஏதோ ஒரு நம்பிக்கையின்மை அதில் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன் நான். ஆனால் சொல்லவில்லை. கையில் கொடுத்துபார்த்தாயாஎன்று கேட்க மட்டும் ஆசைப்பட்டேன்.

நாட்கள் கடந்தன. என் ஆசைகளில் எதுவுமே நடக்கவில்லை. இடிமேல் இடி. பரீட்சையில் தோல்வி. வேலையோ வெகு தொலைவில். போதையில் குழறும் குப்புசாமி மட்டுமே என் ஆன்மாவுக்கு உகந்த நண்பனாயிருந்தான்.   ஒரு நாள் ஓட்டத்துக்குப் போனபோது அவனைக் காணவில்லை. ‘காலையில் எழுந்து எங்கே போனானோஎன்ற கேள்வி மனசில் தொங்கியது. இறுதிச்சுற்றை முடித்துக் கொண்டு குடிசைக்கு அருகில் வந்தேன். படல் சார்த்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே தள்ளினேன். உள்ளே குப்புசாமி படுத்திருந்தான். ஒரே ஒரு வினாடிதான் பார்த்தேன். அவன் படுத்திருந்த கோலம் பீதியூட்டுவதாய் இருந்தது. பக்கத்தில் தரையெங்கும் உலர்ந்த வாந்திக் கோழை. நடுங்கிக்கொண்டே நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். முறுக்கிக் கொண்ட மாதிரி உடம்பு கிடந்தது. மூச்சு இல்லை. பதறினேன். நான் உடனே வெளியே ஓடிவந்துவிட்டேன். புளியமரத்துக்கு ஓடினேன். அவனுடைய சூதாட்ட சகாக்கள் படுத்திருந்தார்கள். எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். ஒரே குரலில் என்னைத் திட்டினார்கள். “போ... போ... நீயே எடுத்துப்போடுஎன்று விரட்டினார்கள். எனக்கு அழுகை முட்டியதும் வீட்டுக்குப் போனேன். சுரத்தற்ற என் முகத்தைப் பார்த்துஎன்ன விஷயம்என்று அம்மா கேட்டாள். நான் அப்பாவுக்குத் தெரியாமல் பின்கட்டுக்கு அழைத்துச் சென்று விஷயத்தைச் சொன்னேன். என்குரல் உடைந்துவிட்டது. அம்மாவும் வருத்தப்பட்டாள். “ஐயோ பாவமேஎன்றாள். “இப்ப என்ன செய்யலாம்என்று கையைப் பிசைந்தேன். “போய் முனிசிப்பாலிட்டில சொல்லுடா. அவுங்களாவது எடுத்துப் போடட்டும்என்றாள் அம்மா. உடனே ஓடினேன். விஷயத்தைச் சொன்னேன். ஒருமாதிரி என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். மீண்டும்மீண்டும் கெஞ்சினேன். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. சில விண்ணப்பங்களை கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். கையெழுத்துப் போடச் சொன்னார்கள். முடிந்ததும் ஆள்களைக் கூட அனுப்பினார்கள். கைவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள் அவர்கள் தெருமுடுக்கு திரும்பியதும் என்னை நிறுத்தினார்கள்.

சும்மா வந்தா எப்படி தம்பி? ஒரு நூறு ரூபா ரெடி பண்ணிட்டு அங்க வந்துடு. மிச்சத்தை நாங்க பாத்து தயார் செய்றம்.”

அவர்கள் வார்த்தைகள் என்னைக் குழப்பின. பணம் தராவிட்டால் செய்யமாட்டார்கள் என்றும் புரிந்தது. ‘சரிஎன்று அவர்களைச் சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டு கடைத் தெருவுக்கு ஓடினேன். கையில் கட்டி இருந்த வாட்சை அடகு வைத்து நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு திரும்பினேன். சொன்னபடி அவர்கள் குழிதோண்டி வைத்துக் கொண்டு தயாராகவே இருந்தார்கள். “குழியெல்லாம் ஆறக் கூடாதுஎன்ற குப்புசாமியின் வார்த்தைகள்  மனசில் மோதி என்னைக் கரைத்து. கை வண்டியில் அவனைக் கிடத்தி இழுத்து வந்திருந்தார்கள். பணத்தை நீட்டினேன். இரண்டு பேர் குப்புசாமியைத் தூக்கி இறக்க இரண்டு பேர் குழியில் நின்றுகொண்டு வாங்கிக் கிடத்தினார்கள். என் கட்டுப்பாடு உடைந்தது. அடுத்த கணம் அவன் மண்ணில் புதைந்துவிடுவான் என்ற உணர்வு என்னைத் தாக்கியது. அலறினேன். அழுகை பெருகியது. “குப்புசாமிஎன்று சொல்லிக்கொண்டே அவனை இறுதி முறையாய்ப் பார்த்துவிட்டு மண்ணை அள்ளிப்«ப்£ட்டேன். அதற்கென்றே காத்திருந்ததைப்போல் அவர்கள் மண்வெட்டியால் இழுத்து இழுத்து மண்ணைக் குழிக்குள் தள்ளினார்கள். மெல்ல மெல்ல அவன் உடல் புதைந்தது.

நிற்க முடியவில்லை எனக்கு. பலவீனமாய் உணர்ந்தேன். திரும்பி நடந்தேன். அடிக்கடி குப்புசாமி பிரஸ்தாபிக்கும் அவனது மெட்ராஸ் திட்டம் ஞாபகத்துக்கு வந்தது. இந்த நூறு ரூபாயை அப்போதே அவன் கையில் தந்திருந்தால் அவன் உயிராவது மிஞ்சி இருக்கக்கூடுமோ என்று நினைத்தபோது மீண்டும் அழுகை முட்டியது.

(பிரசுரமாகாதது -1992)