பிரபாகரின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கிராமவாழ்க்கை என்னும் தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறவுநிலை என்பதைத் தாண்டி சமூக உறவுநிலையே இக்கதைகளின் மையமாக உள்ளது. ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அப்பண்ணையில் வேலை பார்க்கும் அடிமட்டச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான உறவின் பல பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறார் பிரபாகர்.
சிறுகதைகள் உருவான தொடக்க காலகட்டத்தில்
பண்ணையார் என்பவர் கெட்டவர், பண்ணை ஊழியர் என்பவர் சுரண்டப்படுபவர் என்கிற மேலோட்டமான
கருத்தை நிலைநிறுத்தும் விதமாக ஏராளமான கதைகள் எழுதி வாசிக்கப்பட்டன. பொதுக்கல்வியும்
சமூக இயக்கங்களின் சேவையும் இந்த மண்ணில் மெல்ல மெல்ல மாற்றத்தை உருவாக்கின. சுதந்திரமடைந்த நாட்டில் அனைவரும் சமம் என்ற சொல்லும்
பேச்சும் கொஞ்சம்கொஞ்சமாக மனிதர்கள் நெஞ்சில்
வேரூன்றத் தொடங்கின. வெளியுலகத்தைப்பற்றி மனிதர்கள்
புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பதியெழு அறியாப் பழங்குடியினராக இருந்த மக்கள் கூட்டம்
இடம்பெயர்ந்து செல்லும் வாழ்க்கைக்குப் பழகி, அதன் வெற்றியையும் இன்பத்தையும் சுவைக்கத்
தொடங்கினார்கள். முழு நல்லவர், முழு கெட்டவர் என ஒருவரையும் வகைப்படுத்திவிட முடியாது
என்ற புரிதல் ஏற்பட்டது. நல்லவனுக்குள் வெளிப்படும் தீயவனையும் தீயவனுக்குள் வெளிப்படும்
நல்லவனையும் படைப்புலகம் சித்தரிக்கத் தொடங்கியது.
மாற்றமடைந்த கிராமங்களில் மனித உறவு
எத்தகையதாக உள்ளது என்பது ஒரு முக்கியமான கேள்வி. பிரபாகரின் கதைத்தொகுதி வழியாக மேலெழுந்து
வரும் கேள்வியும் அதுதான். அந்தக் கேள்விக்கான பதில்களைத்தான் தம் கதைகள் வழியாகத்
தேடுகிறார் பிரபாகர். தம் தேடல் பயணத்தின்
ஊடே, வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு தருணங்களில் தான் கண்ட மனிதர்களை நம் முன் கதைச்சித்திரங்களாக
கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் பிரபாகர்.
பேரு சொல்ற நிலம் என்னும்
சிறுகதையில் தாசப்பன் என்பவனைப்பற்றிய சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. அவனுடைய பெயர்
தாசப்பன் என்றாலும் யாரும் அவனை அந்தப் பெயரைப் பயன்படுத்தி அழைப்பதில்லை. எல்லோரும்
அவனைக் கூத்தாடிக் கொம்பன் என்று அடைமொழிப் பெயரிட்டுத்தான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு
கூத்துக்கலையில் அவன் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான். கூத்தில் எல்லா வேஷங்களுக்கும்
பொருத்தமானவன் அவன். நல்ல குரல்வளமும் உடல்வளமும் உள்ளவன். அவன் ஆட்டத்துக்கு உள்ளூர்க்காரர்கள்,
வெளியூர்க்காரர்கள் அனைவருமே ரசிகர்கள். விடியவிடிய ரசனையோடு பார்ப்பார்கள். திடீரென
அவன் தொழுநோய்க்குப் பலியாகிறான். கூத்தாட்டத்திலிருந்து ஒதுங்கிவர வேண்டிய நிலை வந்துவிடுகிறது.
ஆயினும் ஊரில் அவனுக்கு இருக்கும் மதிப்பு போகவில்லை. சாவு வீடுகளில் ஒலிவாங்கி முன்னால்
அமர்ந்து ஒப்பாரிப்பாட்டு பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கிடைக்கும் சில்லறை வருமானம்
அவனுடைய செலவுக்குப் போதுமானதாக இருக்கிறது. சாப்பாட்டு வேளையில் யாராவது ஒருவருடைய
வீட்டுக்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு செல்கிறான். அங்கு கிடைக்கும் பழைய சோறு அல்லது
கஞ்சி அவனுடைய பசியைப் போக்க போதுமானதாக இருக்கிறது.
அவ்வப்போது அவனை வீடு வரைக்கும் வரவழைத்து
பாடச் சொல்லி கேட்கும் பழக்கமுள்ள நல்லப்பன் என்பவர் ஒருநாள் தனக்குச் சொந்தமான ஒரு
துண்டு நிலத்தை அவன் பெயருக்கு எழுதி வைத்துவிடுகிறார். அடுத்த நாள் அதில் ஒரு குடிசை
போட்டுக்கொள்ள மூங்கில்களையும் கீற்றுகளையும் ஊர்த்தலைவரிடம் யாசகமாகக் கேட்கிறான்
அவன். அக்கணத்தில் அவர் நெஞ்சில் வாழும் சாதி என்னும் பூதம் விழிப்புற்றெழுந்து தலைவிரித்தாடத்
தொடங்குகிறது. பெரிய சாதியைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான நிலமும் வீடும் இருக்கும்
இடத்துக்கு நடுவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் குடிசை போட்டுக்கொண்டு வருவதை
அவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவனை வசைபாடுகிறார். ஊரையே அவனுக்கு எதிராக
நிற்கும்படி செய்கிறார். வன்முறை வழியில் தன்னிடமிருந்து கையெழுத்து வாங்கப் போகிறார்கள்
என்பதை ஊகித்துவிட்ட கூத்தாடிக்கொம்பன் ஊரை யே விட்டே ஓடுகிறான்.
ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொள்தல்
என்கிற நிலையிலோ அல்லது ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நிலையிலோ இந்த மண்ணில் யாரும்
சாதியைப் பொருட்படுத்தவில்லை. சாதிக்கோட்டை கடந்தே அவை நிகழ்கின்றன. ஆனால் சொத்துரிமை
என்று வரும்போது, மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் அது தனக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்
கவனமாக இருக்கிறார்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் தமக்கு நடுவில் வந்து வாழ்வதை வெறுப்புடன் எதிர்க்கிறார்கள். இது முதல் விசித்திரம்.
ஒறவு என்பது இன்னொரு சிறுகதை. மேல்சாதியைச்
சேர்ந்த இரு வேறு குடும்பங்கள் இருவேறு ஊர்களில் இருக்கின்றன. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த
ஒருவன் ஒரு பண்ணையில் வேலை செய்கிறான். அவன் மனைவி இன்னொரு பண்ணையில் வேலை செய்கிறாள்.
ஒரு வீட்டில் திருமண வயது வந்த பெண் இருக்கிறாள். இன்னொரு வீட்டில் திருமண வயதை அடைந்த
இளைஞன் இருக்கிறான். தன் மனைவி வழியாக தெரிந்த தகவலை ஒருநாள் பேச்சோடு பேச்சாக தன்
பண்ணையாரிடம் சொல்கிறான் அவன். பண்ணையாட்கள் வழியாகவே ஜாதகப்பரிமாற்றமும் நிகழ்கிறது.
பொருத்தத்தில் தேறிவிட்ட செய்தியையும் பரிமாறிக்கொள்கிறார்கள். பெண் பார்க்கும் படலமும்
மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நிகழ்கின்றன. திருமணம் வரைக்கும் பண்ணையாட்கள் ஏதோ தம்
வீட்டுத் திருமணம் போல எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.
திருமணத்துக்கு முதல்நாள் மாலை விருந்து நடைபெறுகிறது. அந்த விருந்தின் கடைசிப்பந்தியில்
பசியின் காரணமாக பண்ணைக்காரர்கள் ஏதோ ஒரு வரிசையில் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறார்கள்.
அதைப் பார்த்ததும் சீற்றமுற்ற பண்ணையார் அவ்விருவரையும் அவமானப்படுத்திப் பேசி அங்கிருந்து
விரட்டியடித்துவிடுகிறார். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் தம் பிள்ளைக்கு பெண் தேடிக்
கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிற அவரால், தம் சாதிக்காரர்கள் அமர்ந்து உணவுண்ணும்
பந்தியில் அவனும் ஒருவனாக அமர்ந்து உண்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது
இரண்டாவது விசித்திரம்.
குழிவெட்டி கதையில் இந்தச் சாதியப்பார்வை
வேறு விதத்தில் வெளிப்படுகிறது. தரகு வேலை பார்க்கிற தங்கப்பன் மேல்சாதியைச் சேர்ந்தவன்.
சந்தையில் மாடு பிடித்துவரச் சென்றபோது அவனோடேயே ஒரு சிறுவன் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறான்.
ஆள் நல்ல உழைப்பாளி என்று தெரியவந்ததும் தங்கப்பன் அவனை தன் மாட்டுக்கொட்டகையிலேயே
தங்க வைத்துக்கொள்கிறான். சிறுவன் இளைஞனான பிறகும் அந்த நிலை தொடர்கிறது. எதிர்பாராத
ஒரு தருணத்தில் இடுகாட்டில் அவன் தங்கப்பனின் தேவையை முக்கியமாகக் கருதி அவர் குறிப்பிட்ட இடத்தில்
ஒரு குழியை வெட்டிக்கொடுக்கிறான். பிறகு அதுவே பழக்கமாகிவிட, குழிவெட்டி என்ற அடைமொழி
நிலைத்துவிடும் அளவுக்கு அவன் கிராமத்தைச் சேர்ந்த எல்லாச் சாதியினருக்கும் குழியை
வெட்டிக் கொடுக்கிறான்.
ஒருநாள் தரகுக்காரர் வீட்டுத் தோட்டத்தில்
புதுசாக வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து மண்ணை வெளியேற்றிக்கொண்டிருந்த தருணத்தில் இடிபாட்டில்
சிக்கி இறந்துவிடுகிறான் அவன். இப்போது இறந்துவிட்ட குழிவெட்டியை குழிதோண்டி நல்லடக்கம்
செய்யவேண்டும். ஊரார் அனைவருக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லாமல் குழிதோண்டி நல்லடக்கம்
செய்ய உதவிய குழிவெட்டிக்கு ஒரு குழிதோண்ட அந்த ஊரில் ஒருவரும் முன்வராமல் அமைதி காக்கிறார்கள்.
ஒருவனிடமிருந்து வேலை வாங்கும் சமயத்தில்
யாருக்கும் சாதி தேவைப்படவில்லை. ஆனால் சாவு என்றும் திருமணம் என்றும் வரும்போது மட்டும்
சாதி ஒரு தீவிரமான அடையாளமாக மாறிவிடுகிறது. இது மூன்றாவது விசித்திரம்.
கருவண்டு என்பது மற்றொரு சிறுகதை. செங்காலிப்
பண்ணையார் வீட்டில் வேலை செய்பவன் கருவண்டு. பண்ணையாரின் விருப்பப்பட்டபடி அணில்கறி
செய்து போடுபவனும் அவன்தான். அவருக்குத் தேவைப்பட்டபோது பக்குவமாக சாராயம் காய்ச்சிக்
கொடுப்பவனும் அவன்தான். அதே நேரத்தில் அவரிடமிருந்து வசைகளையும் அடிகளையும் வாங்குபவனும்
அவன்தான். ஒருமுறை பண்ணையார் வீட்டுக் குழந்தை தவழ்ந்துகொண்டே போய் வீட்டு மூலையில்
உள்ள சலதாரைக் குழியை நெருங்கிவிடுகிறது. குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்திலும்
சத்தம் போட்டு வேறு ஆட்களை அழைக்கும் அளவுக்கு நேரம் இல்லை என்பதாலும் அவனே ஒடோடிச்
சென்று தூக்கி ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதைவிட
பண்ணையாருக்கு தாழ்ந்த சாதிக்காரன் ஒருவன் குழந்தையைத் தொட்டுத் தூக்கியதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
காலால் எட்டி உதைத்து அவனைக் கீழே தள்ளுகிறான்.
அவன் கையால் தொட்டுச் செய்த அணில்கறியையும் சாராயத்தையும் வாங்கிச்
சாப்பிடும்போது தெரியாத சாதிவேறுபாடு குழந்தையைத் தொட்டதும் தெரியத் தொடங்குவது விசித்திரம்.
அந்த அளவுக்கு அவமானப்படுத்தினாலும் உதறிவிட்டுச் செல்லாமல் அந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு
காலத்தைத் தள்ளும் அவன் வாழ்க்கை இன்னொரு விசித்திரம். பண்ணையாருக்கு சிறுநீரகப்பிரச்சினை
வந்தபோது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறுநீரக தானமளிக்க மறுத்த தருணத்தில் காலம்
முழுதும் அவரால் அவமானத்துக்குள்ளான அவன் தன் சீறுநீரகத்தைத் தானமாக அளிக்க தயாராக
இருக்கிறான். அது எல்லா விசித்திரங்களை விடவும் தலையாய விசித்திரம்.
சாதிய உறவுகளில் முழு ஒட்டுதலும் இல்லை.
முழுக்க முழுக்க ஒட்டாமையும் இல்லை. ஏற்பும் நிராகரிப்பும் ஏறக்குறைய சம அளவில் உள்ள
இந்த வகையான உறவை சமூகவியல் அளவுகோல்களால் மதிப்பிடுவது எளிதான வேலையல்ல. ஒரு ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சாதியம் சார்ந்த இறுக்கமான சூழல் இன்றில்லை. அந்த இறுக்கம்
இன்று சற்றே தளர்ந்திருக்கிறது. இதன் சான்றுகளாக உள்ளவை பிரபாகரின் சிறுகதைகள்.
இந்தக் கட்டுமானத்துக்கு வெளியே பாட்டியம்மா,
செவியன் என இரு சிறுகதைகள் உள்ளன. இவையே இத்தொகுதியின் சிறந்த சிறுகதைகள். பாட்டியம்மா சிறுகதையில் சித்தரிக்கப்படும் பாட்டிக்கு
எச்சில் ஊற்றுப்போல பொங்கிக்கொண்டே இருக்கிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம் அவள்
துப்பிக்கொண்டே இருக்கிறாள். வீட்டில் இருந்தபடி துப்புவது சிரமமாக இருப்பதால் தோட்டத்துக்குச்
செல்கிறாள். அங்கும் கண்ட இடங்களில் துப்பிக்கொண்டே இருப்பது, அவளுக்கே அருவருப்பாக
இருக்கிறது. மகனும் மருமகளும் முடிந்த அளவு வைத்தியம் பார்க்கிறார்கள். ஒன்றும் குணப்படுத்த
முடியவில்லை. ஆசைகள் நிராசையாகும்போது வெளிப்படமுடியாத மனத்திலேயே அழுத்தப்பட்டுவிடும்
போது, அதன் வெளிப்பாடாக இப்படி சில இடர்ப்பாடுகள் நிகழ்வதற்குச் சாத்தியமுள்ளது என்று
மருத்துவர் தெரிவித்த ஒரு குறிப்பை உள்வாங்கிய குடும்பத்தினர் பாட்டியின் மனத்தில்
புதைந்து கிடக்கும் ஆசை என்ன என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். அதற்குப் பலன்
கிடைக்கவில்லை. பிறகு தானாகவே ஓர் ஊகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் செய்து பாட்டியை திருப்திப்படுத்த முயற்சி செய்கின்றனர்.
அதற்கும் பலன் இல்லை. ஒருநாள் தற்செயலாக வெளியூரில் விடுதியில் தங்கிப் படிக்கும் பேரன்
வீட்டுக்கு வந்து, திரும்பிச் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் வீட்டிலேயெ அன்றிரவு தங்கிவிடுகிறான். பாட்டியும் பேரனும் மாறி மாறி உரையாடிக்கொள்கிறார்கள்.
நீண்ட நேர உரையாடலைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் அனைவரும் கேலிப் பார்வை பார்க்கிறார்கள்.
நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அவ்வளவு நேர உரையாடலில் ஒரு கணமும் அவள் வாயிலிருந்து
எச்சில் தெறிக்கவில்லை என்பதையும் துப்பவில்லை என்பதையும் உணர்ந்து வியப்பில் ஆழ்கிறார்கள்.
பேரன்தான் அவளுடைய மனம் விரும்பிய உறவு என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்தப் பாட்டியாலும் அதை வரையறுத்துச் சொல்லமுடியவில்லை. எதிர்பாராத ஒரு திருப்பமாக
அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு தானாக அமைந்து அனைவர்க்கும் ஒரு நிம்மதியை வழங்குகிறது.
செவியன் சிறுகதையும் கிட்டத்தட்ட இதே
கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. மற்றவர்களின் பேச்சை முழுமையாகக் கேட்க முடியாத குறை
உள்ளவன் செவியன். தன் குறை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கூடுதலாக கவனம்
எடுத்துக்கொள்கிறான். செவிடன் என யாரும் தன்னை கேலி செய்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக
உள்ளான். பள்ளிக்கூடம் செல்லும் காலத்திலேயே வந்துவிட்ட இந்நோய்க்கு எந்த மருத்துவமும்
தீர்வை அளிக்கவில்லை. பணம் செலவானதே தவிர, பலன் கிடைக்கவில்லை. மனத்தை உறுதிப்படுத்திக்
கொண்டு, குறை தெரிந்துவிடாதபடி சில தந்திரங்களைக் கடைபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான்
அவன். கூட்டத்தைத் தவிர்க்கிறான். உரையாடல்களைத் தவிர்க்கிறான். படித்து பட்டம் பெற்று
ஆசிரியராக வேலைக்குச் செல்கிறான். ஒரு காலத்தில் சகமாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடக்
கூடாது என நினைத்து அஞ்சியவன், அப்போது வகுப்பு மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடக் கூடாது
என நினைத்து அஞ்சுகிறான். எப்போதும் ஓர் அச்ச உணர்வு அவனை ஆட்டிப் படைத்தபடி இருக்கிறது.
அவனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது.
செவிட்டுத்தன்மையை மறைக்கும் முயற்சி தோல்வியடைந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு
பெண் வீட்டாரின் மனப்போக்கைப் புரிந்துகொள்வதற்காக ஒருநாள் முன்னதாக மணப்பெண்ணை தொலைபேசியில்
அழைத்து உரையாடுகிறான். உரையாடலின் போக்கில் அவளுக்கு தன் பிரச்சினை பற்றி ஏற்கனவே
தெரிந்திருப்பதையும் அவள் அதை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டவளாக உரையாடுவதையும் அறிந்து
அவன் முதலில் அதிர்ச்சியடைகிறான். அவ்வளவு தொலைவு அச்செய்தி சென்ற விதம் முதலில் திகைக்கவைக்கிறது.
தான் மூடி மறைக்க நினைக்கும் ஓர் உண்மை வெகுகாலமாக உலகத்துக்கு தெரிந்தே இருக்கிறது
என்னும் எதார்த்தம் அவன் நெஞ்சிலிருந்து எல்லாச் சுமைகளையும் கரைத்துவிடுகிறது. அக்கணத்தில்
அவன் உணரும் பெரிய விடுதலை அவனுடைய எல்லாவிதமான தற்கூச்சங்களையும் தடுமாற்றங்களையும்
அகற்றி இயல்பாக்கிவிடுகிறது. விடுதலைக்கான வழி எப்போதும் மிக அருகிலேயே உள்ளது. ஆனால்
மனிதர்கள்தான் வெகுதாமதமாக அந்தப் புள்ளிக்கு வந்து சேருகிறார்கள்.
இத்தொகுதியில் பதினான்கு சிறுகதைகள்
உள்ளன. அனைத்தும் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டுக்கு
முன்னும் பின்னுமான காலகட்டத்தில் எழுதியவை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பிரபாகர் எதுவும்
எழுதவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. ஏதோ சில நெருக்கடிகள் அவருடைய எழுத்தியக்கத்தை
முடக்கிவிட்டன. மெல்ல மெல்ல பிரபாகர் அதன் பிடிகளிலிருந்து விடுபட முயற்சி செய்து வருகிறார்
என்பது ஆறுதலை அளிக்கிறது. இந்த முதல் தொகுதி வழியாக அவருடைய படைப்புகள் மீது குவியும்
வாசக கவனம் அவரை ஊக்கம் கொண்டவராக மாற்றவேண்டும்.
(செவியன்.
இரா.பிரபாகர், நம் பதிப்பகம், சாலிகிராமம், சென்னை -600093. விலை.ரூ.180)
(புக்
டே இணையதளம் – 01.03.2023)