Home

Sunday, 19 March 2023

வனவாசி - கட்டுரை

  

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை. ஆனால் மலையில் ஏறி இறங்கிய களைப்பில் எந்த வேலையும் ஓடவில்லை. உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் தேநீர் அருந்திமுடித்த கையோடு வேலையைத் தொடங்கி முடித்துவிட்டுத்தான் நடைப்பயிற்சிக்குக் கிளம்பினேன்.

சாலையோரத்தில் நடந்து சென்றாலும் மனமெல்லாம் காட்டுப்பாதையில் நடப்பதைப்போலவே இருந்தது. பச்சைமரங்களின் மணம். காற்றின் தழுவல். பறவைகளின் விதவிதமான ஒலிகள். இன்னும் அவையனைத்தும்  நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் பலமுறை நண்பர்களுடன் நடக்கச் சென்ற அனுபவம் உள்ளவன்தான் நான். சிற்சில சமயங்களில் ஆழ்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்று இரவு முழுதும் தங்கியிருந்த அனுபவமும் உண்டு. ஒவ்வொரு முறையும் காட்டிலிருந்து திரும்பும்போது, அதுவரை சென்ற காட்டுப்பயணங்களைவிட, அன்று சென்று திரும்பிய பயணமே ஈடு இணையற்ற பயணமாகத் தோன்றுவது விசித்திரமாக இருந்தாலும், அப்படி நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. அன்றும் அப்படித்தான் தோன்றியது. அந்த அளவுக்கு புஷ்பகிரியின் காட்சிகள் நினைவில் நிறைந்திருந்தன.

அறைக்குத் திரும்பியதும் சிறிதுநேரம் அறையில் வைக்கப்பட்டிருந்த செய்தித்தாளை ஒருமுறை வேகமாகப் புரட்டிப் படித்தேன். தொடர்ந்து  குளியல், சிற்றுண்டி எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஆகாஷின் வருகைக்காகக் காத்திருந்தபோது புஷ்பகிரி படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் போலத் தோன்றியது. மடிக்கணினியைத் திறந்து ஒவ்வொரு படமாக திரையில் ஒளிரவிட்டுப் பார்க்கத் தொடங்கினேன். காட்டின் பசுமையும் மேகங்களின் வெண்மையும் வெவ்வேறு விகிதங்களில் கலந்து நிறைந்திருந்த படங்களைப் பார்க்கப் பார்க்க மனம் பொங்கியது.

சுள்யா நகரத்துக்கு நான் வந்த காரணமே வேறு. அங்கு வந்து சேரும் வரைக்கும் புஷ்பகிரி என்னும் இடத்தைப்பற்றி நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் ஒரு புதையல் கிடைப்பதுபோல புஷ்பகிரியைப் பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் அமைந்துவிட்டது. 

புத்தூர், சுள்யா இரு நகரங்களையும் கண்ணாடியிழைக் கேபிள் வழியாக இணைக்கவேண்டும். அந்தப் பொறுப்பை எங்கள் மேலாளர் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

கேபிள் வழி இணைப்பில் தென்கன்னடப் பகுதிகள்  புறக்கணிக்கப்படுவதாக யாரோ ஒரு முக்கியஸ்தர் எழுதிய கடிதமொன்று துறையிலிருக்கும் மேல்மட்டத் தலைமைக்குச் சென்றுவிட்டது. அதன் விளைவாக, எந்தப் பகுதியும் புறக்கணிக்கப்படவில்லை என்று காட்டவேண்டிய நெருக்கடிச்சுமை துறையை அழுத்திக்கொண்டிருந்தது.

உண்மையில் இந்தத் திட்டத்துக்கான வழித்தடம் பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒன்று.  ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை கொடுத்து பல நேரங்களில் விவாதமும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் கேபிள் பதிப்பதற்கான அனுமதியை இரு நகரங்களுக்கு இடையில் உள்ள வனத்துறை மறுத்தது. அல்லது தட்டிக்கழித்து தாமதப்படுத்தியது. அதுதான் உண்மையான காரணம். ஆனால் அந்த உண்மையான காரணத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை. அது ஒரு வகையான பலவீனமாகக் கருதப்பட்டுவிடுமோ என மேலாளர் தயங்கினார். இப்போது எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தம் வந்ததும் முன்புபோல இழுத்தடிக்காமல் வனத்துறை அமைதியாக அனுமதியைக் கொடுத்துவிட்டது. இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் செய்யமுடியாது என்ற நிலை உருவானதும் நாங்களும் விசையுடன் செயல்படும் நிலை உருவானது.

ஒப்பந்ததாரர்கள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் வேலையைத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னால் பொறியாளர்களும் துணை ஊழியர்களும் தங்கி பணியாற்ற எல்லா வசதிகளோடும் அமைந்த வீடு ஒன்று குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு வாடகைக்குத் தேவைப்பட்டது. எல்லோருக்கும் விடுதியில் தங்கிக்கொள்ளும் வசதியை உருவாக்கி அளிக்கமுடியாது என்பதால் அந்த ஏற்பாடு.

துறையின் தேவைக்காக வாடகைக்கு வீடு கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. எந்தத் துறையின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை. பல ஊர்களில் இப்படி தேடித்தேடி சலித்த அனுபவம் எனக்கு உண்டு. தனிப்பட்ட அளவில் உள்ளூரில் தொடர்போ செல்வாக்கோ உள்ள ஒருவருடைய உதவியுடன்தான்  வாடகைக்கு வீட்டைத் தேடி கண்டுபிடிக்கமுடியும்.

என்னோடு பெங்களூரில் ஏற்கனவே பணிபுரிந்த நண்பரொருவர் சோம்வார்பெட் என்னும் இடத்தில் வேலை செய்துவந்தார். சுள்யாவுக்கு அருகில் உள்ள சிறுநகரம் சோம்வார்பெட். அவர் ஏதேனும் உதவி செய்யக்கூடும் அல்லது ஆலோசனையாவது வழங்கக்கூடும் என நினைத்தேன். அவரைத் தொடர்புகொண்டு என் தேவையைத் தெரிவித்தேன். அவர் உடனே ஆகாஷின் எண்ணைக் கொடுத்து, அவரைத் தொடர்புகொள்ளுமாறு சொன்னார்.

முதல் அழைப்பிலேயே ஆகாஷ் நண்பராகிவிட்டார். அந்த ஊர் கனரா வங்கியில் வேலை செய்பவர் அவர். எங்கள் தேவையைத் தெரிவித்ததும் “எதுக்கு சார் நீங்க அங்க இங்கன்னு வீடு தேடிகிட்டு கெடக்கணும்? எனக்குச் சொந்தமான வீடு ஒன்னு இங்க காலியாகத்தான் இருக்கிறது. உங்க தேவைக்கு அது தாராளமா போதும். வேணும்ன்னா ஒருமுறை வந்து பாருங்க. புடிச்சிருந்தா அதையே முடிவு செஞ்சிக்கலாம்” என்றார்.  அவ்வளவு எளிதாக எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஆகாஷின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.

சுள்யாவுக்குப் புறப்படும் நாளை முடிவு செய்த பிறகு ஆகாஷை ஒருமுறை தொலைபேசியில் அழைத்து தகவலைச் சொன்னேன். ”வாங்க சார். நான் ஊருலதான் இருக்கேன். பார்த்துட்டு முடிவு செஞ்சிக்கலாம். சுள்யாவுல இறங்கனதும் கோல்டன் லாட்ஜ் எங்க இருக்குதுன்னு விசாரிச்சி வந்துடுங்க. நான் ஒரு எட்டு, எட்டரை மணிக்கு மேல லாட்ஜுக்கு நேருல வந்து பாக்கறேன்” என்றார்.

அதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நான்  இரவில் பேருந்து பிடித்து காலையில் சுள்யாவில் இறங்கி கோல்டன் லாட்ஜில் அறை எடுத்தேன். சிரிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஆகாஷுக்குத் தகவல் சொல்ல தொலைபேசியில் அழைத்தேன். மணி ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் மறுபக்கத்தில் யாரும்  தொலைபேசியை எடுக்கவில்லை. அரைமணி நேர இடைவேளையில் மீண்டும் அழைத்தேன். அப்போதும் பதில் இல்லை.

ஒரு மணி நேரம் கழித்த பிறகு தொலைபேசியில் அவர் மனைவி பேசினார். பக்கத்துவீட்டில் யாரோ எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார் என்றும் அந்த வேலை தொடர்பாக ஆகாஷ் அலைந்துகொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவரிடம் நான் அழைத்த தகவலைச் சேர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார். எனக்கு முதலில் சற்றே ஏமாற்றமாகத்தான் இருந்தது. இருப்பினும் இயற்கையாக நேரும் நெருக்கடிகளை யாராலும் தவிர்க்கமுடியாது என்பதால் மெல்ல மெல்ல அமைதிகொண்டேன்.

ஆகாஷ் அன்று இரவுதான் விடுதி எண்ணில் என்னை அழைத்தார். “ரொம்ப சாரி சார். ரொம்ப சாரி சார். உங்கள இவ்வளவு தூரம் வர சொல்லிட்டு இப்படி நடந்துக்கற மாதிரி ஆயிடுச்சி. தப்பா எடுத்துக்காதீங்க சார். சாரி. சாரி” என்று உள்ளார்ந்த வருத்தத்துடன் சொன்னார். “பரவாயில்லை விடுங்க” என்று நான்தான் அவரை ஆறுதல்படுத்தினேன்.

”என்னதான் நடந்திச்சி?” என்று அவர் மனச்சுமையைக் குறைப்பதற்காக பேச்சை மாற்றினேன்.

அவர் உடனே “அது ஒரு பெரிய கொடுமை சார். நல்லா இருந்த ஆளு திடீர்னு எறந்துட்டார். தற்கொலை. பக்கத்துவீடு. பத்து பதினஞ்சி வருஷத்து பழக்கம். எல்லாத்துக்கும் கூடவே இருக்கவேண்டிய ஒரு நெருக்கடி” என்று பெருமூச்சு வாங்கினார்.

“இருக்கட்டும் ஆகாஷ். பரவாயில்லை. நம்ம வேலையை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல அத கவனியுங்க” என்றேன்.

”தயவுசெஞ்சி நீங்க தப்பா எடுத்துக்காதிங்க சார். இன்னைக்கு ஆஸ்பத்திரி ப்ரொசீஜர்லயே ரொம்ப லேட்டாய்ட்டுது. நாளைக்குத்தான் எடுக்கறாங்க. நான் நாளைக்கு மறுநாள் காலையில உங்கள லாட்ஜ்ல வந்து பாக்கறேன் சார்” என்று சொன்னார். நானும் “சரி ஆகாஷ். நீங்க சொல்றமாதிரியே நாளைக்கு மறுநாள் சந்திக்கலாம்.” என்று தெரிவித்தேன்.

“இன்னைக்கு எப்படி சார் பொழுது போச்சு?” என்று உரையாடலைத் தொடர்ந்தார் ஆகாஷ். “எப்படியோ ஓடிட்டுது. கொஞ்ச நேரம் கடைகள் பக்கம் சுத்தனேன். அங்க ஒரு பார்க் இருந்தது. அதுல ஒரு மணி நேரம் சுத்தினேன். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு சினிமா பார்த்தேன். அப்புறம் சாயங்காலம் மறுபடியும் கடைத்தெரு, பூங்கான்னு ஒரு சுத்து சுத்தி வந்தேன்” என்றேன். அப்போதுதான் அவர் “சார், நாளைக்கி நான் சொல்றமாதிரி . செய்யறீங்களா?” என்று கேட்டார். ”சொல்லுங்க ஆகாஷ்” என்றேன் நான்.

“இங்கதான் பக்கத்துல புஷ்பகிரின்னு ஒரு முக்கியமான இடம் காட்டுக்குள்ள இருக்குது. பெரிய சிகரம் மாதிரி இருக்கும். மரங்களுக்கு மேல மேகங்கள் றெக்கை விரிச்சி பறக்கிற பறவைகள் மாதிரி ரொம்ப அழகா இருக்கும். ஒரு நாள் முழுக்க நின்னு பார்த்துட்டே இருக்கலாம். அதைப் பார்க்கறதே கண்கொள்ளாக் காட்சி. கொஞ்ச தூரத்துக்கு மலை ஏறணும். அவ்ளோதான். போறீங்களா? உங்களுக்கும் பொழுது போனமாதிரி இருக்கும். கடைத்தெரு பூங்கான்னு சுத்தறதுக்கு பதிலா அந்த இடத்துக்கு போனா மனசுக்கும் ஒரு உற்சாகமா இருக்கும். நான் லாட்ஜ் ஓனருகிட்ட சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்றேன்”

சில கணங்களுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தயக்கத்துடன் நின்றேன். ஏதோ ஒரு தயக்கம் என்னைத் தடுத்தது. வந்த வேலையை விட்டுவிட்டு வேறு எதையோ செய்துகொண்டிருக்கிறோமோ என்றொரு குற்ற உணர்வு மெல்ல மெல்லப் படர்ந்தது. பிறகு தானாக வரும் வாய்ப்பை ஏன் தட்டிக் கழிக்கவேண்டும் என நினைத்து புஷ்பகிரிக்குச் செல்லும் திட்டத்தை ஏற்றுக்கொண்டேன். அதுவரை தொலைபேசியிலேயே காத்திருந்தவரிடம்  “சரி ஆகாஷ்” என்று சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அப்படித்தான் புஷ்பகிரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  என் மனத்தையும் ரசனையையும் ஏற்கனவே அறிந்தவரைப்போல ஆகாஷ் நடந்துகொண்டார். வீடு பார்க்கும் திட்டத்தில் ஏற்பட்ட தடங்கல் கூட ஒருவகையில் சாதகமாக அமைந்துவிட்டது. எதுவுமே தற்செயல் அல்ல, தற்செயலாக உருவாகி அமையும் வாய்ப்பு என்றொரு எண்ணம் தோன்றியது.   

அப்போது “என்ன சார், வரலாமா? நான்தான் ஆகாஷ்” என்று வாசல் பக்கத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பினேன். அப்போதுதான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். ஆனால் ஏற்கனவே பார்த்துப் பழகியதைப்போன்ற அவருடைய பேச்சும் சிரிப்பும் என்னைக் கவர்ந்தன.

“வாங்க ஆகாஷ். வாங்க. உங்களைத்தான் எதிர்பார்த்துட்டிருந்தேன்” என்றபடி எழுந்து அவரை நோக்கி நடந்தேன். அதே கணத்தில் ”புஷ்பகிரி அனுபவம்லாம் எப்படி சார் இருந்தது?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆகாஷ்.

”மகத்தான அனுபவம் ஆகாஷ். ஃபோன்ல நீங்க சொல்லலைன்னா நான் அங்க போயிருக்கமாட்டேன். சுள்யாவுல இப்படி ஒரு இடம் இருக்குதுன்னே எனக்குத் தெரியாது. அருமை. அருமை” என்றபடி அவரோடு கைகுலுக்கி நாற்காலியின் பக்கம் அழைத்துச் சென்றேன்.

“அந்த டெத் மேட்டரால எந்தத் திட்டமும் நினைச்சமாதிரி நடக்கலை சார். ஆஸ்பத்திரி போலீஸ் ஸ்டேஷன்னு ஒரே அலைச்சல். அதுக்கு நடுவுல உங்களுக்கு வீடு காட்டற வேலைக்கு வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சிட்டுது. இவ்ளோ தொலைவு நீங்க இந்த வேலைக்காக வந்திருக்கீங்க, இன்னும் ஒரு நாள் ரூம்லயே உக்காந்திருங்கன்னு சொல்றதுக்கும் மனசு வரலை. அதனாலதான் புஷ்பகிரிய பத்தி ஒரு பேச்சுக்கு சொல்லிவச்சேன்.”

“நல்ல அனுபவம் ஆகாஷ். ஒரே வார்த்தையில சொல்லணும்ன்னா சொர்க்கம். மலையில ஏறியது, இறங்கியது எல்லாமே ஏதோ ஒரு கனவு மாதிரி இருக்குது. ஒரு பறவை மாதிரி ஆகாயமார்க்கமாகவே பறந்துபோய் பறந்து வந்ததுபோல இருக்குது. உண்மையிலயே மறக்கமுடியாத அனுபவம்”

ஆகாஷ் ஒருகணம் என்னை நிமிர்ந்து பார்த்து நிறைவுடன் புன்னகைத்தார். “போதும் சார் போதும். இதுக்கு மேல நீங்க எதுவுமே சொல்லவேணாம். எல்லாத்தயும் உங்க முகமே சொல்லுது” என்று சொன்னபடியே என் கையைப்பற்றி அழுத்தினார்.

“இந்த நாளை வாழ்க்கையில மறக்கவே முடியாது.  கண்ணை மூடினா பச்சைமலைக்கு முன்னால நிக்கிறமாதிரி இருக்குது. அந்த உயரங்கள். பள்ளங்கள். மரங்கள். எல்லாமே ஞாபகத்துக்கு வந்துட்டே இருக்குது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் பைத்தியம் புடிச்ச மாதிரி எல்லாருகிட்டயும் இத பத்தியே பேசிட்டிருப்பேன்.”

“பறவைகள், விலங்குகள் ஏதாவது உங்க கண்ணுக்கு தென்பட்டதா?”

“எல்லா பக்கத்துலயும் பறவைகளும் விலங்குகளும்தான் இருக்குது ஆகாஷ். எந்த பயமும் இல்லாம சுதந்திரமா திரியுது. ஒரு இடத்துல  நாலஞ்சி மான்கள பார்த்தேன். இன்னொரு பக்கம் காட்டுநாய்கள் பார்த்தேன். தூரத்துல ஒரு சரிவுல ஒரு யானை கூட தெரிஞ்சிது. அதுக்கு மேல விதவிதமான பறவைகள். எல்லா மரத்துலயும் ஏதாவது ஒரு புதுமாதிரியான பறவை.”

“படம் எடுத்தீங்களா?”

“முடிஞ்ச அளவுக்கு எடுத்தேன். ஒவ்வொரு பறவையும் ஒரு விதமா இருக்குது. எதை எடுக்க, எதை விடன்னு புரியலை. பாக்கறதுக்கு ஒரு பறவை புறா மாதிரி கொழுக்குமொழுக்குனு இருந்தது. ஆனா கொண்டை இருக்குது. வாலும் நீளமா இருக்குது. பேர் என்னன்னு தெரியலை”

“என்ன நிறம்?”

“ஒரு நிறமா இருந்தா சொல்லமுடியும். ஒவ்வொன்னும் ஒரு நிறத்துல இருந்தது. ஒரு பறவைக்கு வால் வெள்ளைவெளேர்னு இருந்தது. இன்னொரு பறவைக்கு செம்பழுப்பா இருந்தது. ஒரு பறவைக்கு தலை மொட்டையா இருந்தது. இன்னொரு பறவைக்கு நம்ம முடியை கலைச்சிவிட்டா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இப்படித்தான்னு வகைப்படுத்தி சொல்லமுடியாதபடி ஒரு புது வகையான பறவை”

“அப்புறம் என்ன பார்த்தீங்க?”

“இன்னொரு பறவையும் பாக்கறதுக்கு ரொம்ப விசித்திரமா இருந்தது. அதுக்கும் புறா மாதிரிதான் உடம்பு. ஆனா மூக்கும் காலும் நல்லா சிவப்பா தர்பூசணி பழத்துண்டு மாதிரி இருந்தது. உடம்பு மட்டும் மயில்தோகை நிறத்துல நீலமா இருந்தது. எல்லாமே விசித்திரம்”

ஆகாஷின் ஒவ்வொரு கேள்விக்கும் நான் ஆர்வத்தின் காரணமாக மிக நீண்ட பதில்களாக சொல்லி விளக்கிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அந்த ஆர்வக்கோளாறை நான் உணர்ந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். வேறு திசையில் உரையாடலை மாற்றும் விதமாக “பக்கத்துவீட்டுல யாரோ செத்துட்டாங்கன்னு சொன்னீங்களே, யார் அது? உங்க உறவினரா?” என்று அவரிடம் கேள்வி கேட்டேன்.

அவர் முகத்தில் அதுவரை படர்ந்திருந்த வெளிச்சம் சட்டென மங்கத் தொடங்கியது. துயரம் படிந்த குரலில் “உறவுக்காரர் கிடையாது சார். பக்கத்துவீடுங்கற முறையில உருவான நட்புதான். பத்து பதினஞ்சி வருஷத்து பழக்கம். நல்ல மனுஷன்” என்று சொல்லிவிட்டு ஒருகணம் நிறுத்தி த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டினார். அதைப் பார்க்க எனக்குச் சங்கடமாக இருந்தது. “என்னதான் நடந்தது? தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டேன். ஆகாஷ் ஒருகணம் என் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டார்.

“சொல்றேன் சார். சொல்றேன். முதல்ல நம்ம வேலையை முடிச்சிக்கலாம். வாங்க. வீடு பிடிச்சிருக்குதா, பார்த்துட்டு சொல்லுங்க. ஒருவேளை இது வசதிப்படாதுன்னா வேற இடம் கூட பார்க்கலாம்”

ஆகாஷ் எழுந்து நின்றதும் நானும் பேச்சை நிறுத்திவிட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவரோடு செல்வதற்குத் தயாராக மடிக்கணினியை அணைத்து பைக்குள் வைத்து மூடிவிட்டு அறையையும் பூட்டிக்கொண்டு அவரோடு வெளியே வந்தேன்.

ஆகாஷ் இரண்டுசக்கர வாகனத்தில் வந்திருந்தார். என்னை பின்னால் உட்காரவைத்துக்கொண்டு அவர் வண்டியை ஓட்டினார். பிரதான சாலையிலேயே சிறிது தொலைவு சென்று பிறகு கிளைச்சாலையில் பிரிந்து கால்மணி நேரம் சென்றோம்.

ஒரு திருப்பத்தில் ஒரு புதிய தெருவுக்குள் நுழைந்தோம். நாலைந்து வாதுமை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. அதை நெருங்கியதும் ஆகாஷ் வண்டியின் வேகத்தைக் குறைத்துவிட்டு ஒரு மரத்தின் நிழலடியில். நிறுத்தினார். “அதோ, மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கே, அதான் சார் நம்ம வீடு” என்று சுட்டிக்காட்டினார்.

தோளுயரத்துக்கு அமைந்த சுற்றுச்சுவர். எளிதாக ஒரு வாகனம் சென்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட இரும்புக்கதவு. வீட்டுக்கும் சுற்றுச்சுவர் கதவுக்கும் நடுவில் அகலமான இடைவெளி இருந்தது.  தாராளமாக இரண்டு வாகனங்களை நிறுத்தலாம். நல்ல காற்றோட்டமுள்ள வீடு.

“இந்த இடத்துல ஒரு பெரிய தோட்டம் வச்சிருந்தோம். போன வருஷம் இங்க இருந்தவங்க சரியா பராமரிக்கலை. எல்லாச் செடிகளும் செத்து இப்ப மைதானம் மாதிரி ஆயிடுச்சி”

“இருக்கட்டும். அதுவும் ஒரு வகையில நல்லதுதான். நம்ம வண்டிகளை நிறுத்திவைக்க வசதியா இருக்கும்”

கதவைத் திறந்து உள்ளே சென்றோம். பெரிய கூடம். ஐந்து அறைகள். பெரிய சமையலறை. பின்னால் இரு குளியலறைகள். கிணறும் இருந்தது. முதல் பார்வையிலேயே எனக்கு அந்த இடம் பிடித்துவிட்டது. ஆகாஷ் அந்த வீட்டைக் கட்டியதன் பின்னணியையும் அதைக் கட்டுவதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட பட்ட பாடுகளையும் விரிவாகச் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அறையாக திறந்து காட்டினார்.

வீடு எங்கள் தேவைக்குப் போதுமானதாகவே தோன்றியது. அவர் சொன்ன வாடகைத்தொகையும் நாங்கள் நினைத்திருந்த கணக்குக்குள்ளேயே இருந்தது. அதனால் உடனடியாக எந்த யோசனைக்கும் இடமில்லாமல் “எங்களுக்கு ஓ.கே. ஆகாஷ். இப்பவே ஒரு அக்ரிமென்ட் போட்டுடலாம்” என்று சொன்னேன்.

மீண்டும் நகரத்துக்குத் திரும்பினோம். ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி அக்ரிமென்ட் தட்டச்சு செய்பவரிடம் விவரங்களை எழுதிக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி ஒருமுறை படித்துப் பார்த்தார். பிறகு “அடிச்சி வைக்கறேன் சார். நீங்க போய் ஒரு காப்பி குடிச்சிட்டு வாங்க” என்றார். நாங்கள் அருகிலிருந்த  ஓட்டலுக்குள் சென்று உட்கார்ந்தோம். ”ரெண்டு காப்பி” என்று சொன்னார் ஆகாஷ்.

“இப்ப சொல்லுங்க ஆகாஷ். தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு உங்க ஃப்ரெண்டுக்கு என்னதான் பிரச்சினை?” என்று கேட்டேன். ”இன்னும் மனசுக்குள்ள அதையே நெனச்சிட்டிருக்கீங்களா?” என்றபடி ஆகாஷ் ஒருகணம் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பிறகு பெருமூச்சு விட்டபடி “பிரச்சினையே இல்லாத மனுஷன்னு நான் இத்தனை காலமும் அவரை நினைச்சிட்டிருந்தேன்.  சாவு வரைக்கும் துரத்தக்கூடிய அளவுக்கு அவரையும் ஒரு பிரச்சினை சுத்தி வளைச்சி துன்பம் கொடுத்திருக்குதுங்கறதே இப்பதான் புரியுது. வாழ்க்கை முழுக்க முயற்சி செஞ்சாலும் ஒரு மனுஷன இன்னொரு மனுஷன் புரிஞ்சிக்கவே முடியாது சார்” என்றார்.

“ஏன் இந்த பெருமூச்சு? என்ன பிரச்சினை? அத சொல்லுங்க. குடும்பத்துல ஏதாவது குழப்பமா?”

“அப்படியெல்லாம் இல்லை சார். ரொம்ப நல்ல குடும்பம் அது”

“வேற என்ன காரணம்?”

“அவரு ரொம்ப நல்லவரா இருந்ததுதான் காரணம் சார்”

எனக்கு உண்மையிலேயே எதுவும் புரியவிலை. அவரே தொடர்ந்து பேசட்டும் என நான் அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“ஸ்கூல் உண்டு. வீடு உண்டுன்னு இருக்கிற ஆள் சார் அவரு. மூனு பொம்பள புள்ளைங்க இருக்காங்க. மூனும் ஸ்கூல்ல படிக்குதுங்க. பேசறதுக்கும் பழகறதுக்கும்  தங்கமான ஆளு. ரெண்டு மூனு வருஷத்துக்கு முன்னால கும்டா பக்கத்துலேர்ந்து ஒருத்தர் இதே ஸ்கூலுக்கு வாத்தியாரா வந்திருக்காரு. கம்ப்யூட்டர் படிப்பு படிச்ச ஆளு.  டெம்பரவரி வேலைன்னாலும் இவ்வளவு தூரம் வந்திருக்காரேன்னு அவருகூட இவரு கொஞ்சம் நெருக்கமா இருந்திருக்காரு. அதுதான் பிரச்சினையுடைய ஆரம்பம்.”

“எப்படி?”

“அவருடைய வீட்டுக்காரம்மாவுக்கு டெலிவரி நேரம். ஆப்பரேஷன் செலவுக்கு அவசரமா ஒரு இருபதாயிரம் ரூபாய் தேவைப்பட்டிருக்குது. இவருகிட்ட கேட்டிருக்காரு. இவருகிட்ட அந்த அளவுக்கு கையிருப்பு இல்லை. இல்லைன்னா இல்லைன்னு சொல்லிட்டு ஒதுங்கியிருந்தா பிரச்சினையே இருந்திருக்காது. இவரு என்ன பண்ணாருன்னா, அவருக்காக வட்டிக்கு கடன் கொடுக்கிற ஒரு ஆள்கிட்ட வாங்கி கொடுத்திருக்காரு. மாசாமாசம் வட்டியும் அசலுமா கொடுத்து நான் அடைச்சிடறேன்னு அவரு சொன்னத இவரும் நம்பிட்டாரு. கடன் கொடுத்தவரும் நம்பிட்டாரு”

“சரி”

“மூனு நாலு மாசத்துக்கு அப்புறமாத்தான் அந்த கும்டாக்காரரு வட்டியும் கொடுக்கலை, அசலையும் கொடுக்கலைங்கற விஷயம் இவருக்கு தெரிய வந்தது. கடன் கொடுத்த ஆள் இவர நெருக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த நேரத்துல கும்டாகாரருடைய போஸ்டிங் பீரியட் முடிஞ்சிட்டதால அவர் ஊரைவிட்டே கெளம்பி போயிட்டாரு. இவருக்கு பைத்தியம் புடிச்சமாதிரி ஆயிட்டுது”

“ஐயையோ. இப்படியுமா ஜனங்க இருப்பாங்க? எவ்வளவு பெரிய நம்பிக்கைத்துரோகம் இது?”

”எப்படியோ கும்டா அட்ரஸ கண்டுபுடிச்சி அவர தேடி போயி கேட்டிருக்காரு இவரு.  சுள்யாவிலிருந்து வந்ததுக்கபுறம் புதுசா ஒன்னும் வேலை கிடைக்கலை. வருமானம் இல்லாததால கொடுக்கமுடியாம போயிட்டுதுன்னு மன்னிச்சிக்குங்கன்னு கால்ல விழுந்திருக்காரு அவரு. எப்படியாவது ஒரு மாசத்துல பொரட்டி கொண்டாந்து கட்டிடறேன் நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு.”

“கடன் வாங்கன ஆள் தப்பிச்சிட்டாரு, கடனுக்கு சம்பந்தமே இல்லாத ஆள் மாட்டிகிட்டாரே”

“கடன் கொடுத்த ஆளு எவ்ளோ காலம்தான் பொறுத்திருப்பான், சொல்லுங்க. ஒருநாள் நீங்க வாத்தியாருங்கறதால சும்மா இருக்கறன். இன்னும் பத்து நாள்ல எனக்கு அசலும் வட்டியும் வரலைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுவேன்னு மெரட்டியிருக்காரு.  வட்டி மேல வட்டி சேர்ந்து இருபதாயிரம் ரூபாய் கடன் நாற்பதாயிரமா பெருத்துடுச்சி.”

“அப்பவாவது அவர் நாலு பேருகிட்ட சொல்லி ஆலோசனை கேட்டிருக்கலாமே? ஏன் செய்யலை அவர்?”

“அப்படிப்பட்ட நேரத்துல மனிஷனுக்கு மூளை வேலை செய்யாது போல. யாரும் யோசிக்கவே முடியாத ஒரு பெரிய தப்பை நம்ம ஆள் அப்ப செஞ்சிட்டாரு. அந்த வட்டிக்காரன்கிட்ட வாங்கின கடன அடைக்க அவரைவிட பெரிய இன்னொரு வட்டிக்காரன்கிட்ட கடன் வாங்கி செட்டில் பண்ணிட்டாரு. நாற்பதாயிரம் ரூபா கடன். ஆறு மாசத்துக்குப் பிறகு அவன் நெருக்க ஆரம்பிச்ச சமயத்துல இன்னொரு வட்டிக்காரன்கிட்ட எண்பதாயிரம் ரூபா வாங்கினாரு. உலகத்துல ஒரு படிச்ச மனுஷன் யாராவது இப்படி செய்வாங்களா, சொல்லுங்க. நேத்து அவன் வந்து ரெண்டு லட்ச ரூபா எனக்கு அவர் கடன் கொடுக்கணும்னு ஆஸ்பத்திரி வாசல்ல நின்னுட்டான். என்ன செய்யறது சொல்லுங்க. ஏற்கனவே அவன் கொடுத்த அழுத்தத்த சமாளிக்கமுடியாமதான் அவர் தூக்குல தொங்கிட்டாரு. போலீஸ் வட்டாரத்துல எனக்கு பழக்கமான ஒரு இன்ஸ்பெக்டர் இருந்ததால அவர வச்சி சமரசமா பேசி முடிக்கமுடிஞ்சது. இந்த கடன் விஷயத்தை அவர் என்கிட்ட தொடக்கத்துலயே சொல்லியிருந்தார்னா, சுலபமா தீர்த்திருக்கலாம். அசிங்கம், அவமானம்னு எதைஎதையோ நெனச்சி கொழம்பி, அநியாயமா உயிர விட்டுட்டாரு. பாவம்”

முகம் தெரியாத அந்த நண்பரைப் பற்றி கேட்கக்கேட்க மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது. நான் ஆகாஷின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் ஏதோ யோசனையில் மூழ்கிவிட்டரைப்போல இருந்தார். சில கணங்களுக்குப் பிறகு தொண்டையைச் செருமியபடி “கெட்டவன்லாம் இந்த உலகத்துல ரொம்ப சுலபமா, நெஞ்சை நிமித்திகிட்டு வாழறான் சார். நல்லவனாலதான் வாழ முடியலை” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். பிறகு தணிவான குரலில் “வரக்கூடாத வியாதி வந்தாகூட ஒருத்தனால எப்படியாவது மீண்டு வந்துடமுடியும், ஆனா யாருக்காவது கடன்பட்டுட்டா, அந்த கடன்லேருந்து ஒருநாளும் மீண்டுவரவே முடியாதுன்னு எங்க அப்பா சாகற வரைக்கும் சொல்லிட்டே இருந்தாரு. அந்த வார்த்தையுடைய மதிப்பு அப்ப புரியலை. இப்படிப்பட்ட நேரத்துலதான் அந்த மதிப்பு புரியுது” என்றார்.

சூடான காப்பி கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டுச் சென்றார் சிப்பந்தி. அந்த நேரத்தில் மிடறுமிடறாக அந்தச் சூடான காப்பியை அருந்துவது மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது.

“வரவர இந்த வட்டாரத்துல வட்டித்தொல்லை அதிகமா போயிடுச்சி சார். பத்து பர்செண்ட் இருபது பர்சண்ட் வட்டியெல்லாம் ரொம்ப சாதாரணமாயிட்டுது. அதனால தற்கொலைகளும் அதிகமாயிட்டுது. தெனம் இப்படி ஒரு சாவுச்செய்தி வராத பத்திரிகையே இல்லை”

“இந்த ஊரு மட்டுமில்லை ஆகாஷ். இந்தியா முழுக்க இப்படித்தான் இருக்குது. வருமானம் குறைவாக இருக்குது. தேவைகளுக்கு தக்கபடி செலவு செய்ய முடியலை. ஏழைகளால கடன் வாங்காம எப்படி இருக்கமுடியும்?”

என் சொற்கள் ஆகாஷின் செவியை அடையவே இல்லை. அவர் தனக்குள் ஏதோ யோசனையில் மூழ்கிவிட்டதை உணர்ந்து நானும் அமைதியாக இருந்தேன். சில கணங்களுக்குப் பிறகு அவர் சோகம் கலந்த பெருமூச்சுடன் என்னைப் பார்த்தார். அவர் ஆறுதலுக்காக நான் அப்போது “கடன் ஒரு பேய் மாதிரி ஆகாஷ். சில சமயத்துல உயிரையே பலி வாங்கிடுது. சில சமயத்துல ஊரவிட்டு ஊரு துரத்தியடிக்குது” என்றேன். அதைக் கேட்டு அவர் முகத்தில் சின்னதாக புன்னகை படர்ந்தது.

காப்பிக்கான தொகையைக் கொடுத்துவிட்டு ஓட்டலிலிருந்து வெளியே வந்தோம். ஆகாஷ் என் பக்கமாகத் திரும்பி “கடன் ஊரைவிட்டு ஊருக்கு மட்டும் துரத்தியடிக்கறதில்லை சார். சில சமயங்கள்ல ஊரைவிட்டு காட்டுக்கு கூட துரத்தியடிக்குது” என்றார்.

“காட்டுக்கா?”

”ஆமாம் சார். இங்க சுள்யாவுக்கு பக்கத்துல காந்தமங்கலான்னு ஒரு ஊரு இருக்குது. அங்க திவாகர்னு ஒரு ஆளு இப்படித்தான் கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டமுடியாம வீடு வாசல் எல்லாத்தயும் பறிகொடுத்துட்டு காட்டுக்கு போயிட்டாரு”

”என்ன சொல்றீங்க ஆகாஷ்? உண்மையாகவா?”

”ஆமாம் சார்.  காந்தமங்கலத்துல பத்து பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னால திவாகர்னு ஒருத்தர் மாட்டுப்பண்ணை வைக்கணும்கற ஆசையில பேங்க்ல வீட்ட அடமானம் வச்சி நாற்பதாயிரம் ரூபா கடன் வாங்கினாரு”

”சரி”

“ஆரம்பத்துல ஒரு ஆறு மாசம் எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனா அதுக்கப்புறம் திணற ஆரம்பிச்சிட்டாரு. அவரு எதிர்பார்த்த அளவுக்கு அவரால வெற்றிகரமா பால் வியாபாரம் செய்யமுடியலை. அவருகிட்டேர்ந்து தினமும் நாப்பது அம்பது லிட்டர் பால் வாங்கிக்கறேன்னு சொன்ன புத்தூர்காரங்க ரெகுலரா வாங்கிக்கலை. கொண்டுபோய் சேக்கற அளவுக்கு திவாகர்கிட்ட வாகன வசதி இல்லை. அந்த சமயத்துல பால் கெட்டு போயிடும். மாசத்துல பத்து நாள் இப்படி கெட்டு போனா வியாபாரத்த எப்படி நடத்த முடியும்? தவணை கட்ட முடியாத திவாகர் ஒவ்வொரு மாடா வித்து வித்து தவணை கட்டிட்டு வந்தார். மாடு எல்லாத்தயும் வித்துட்ட பிறகு கூட கடன் அப்படியே நிரந்தரமா நின்னுட்டுது. பேங்க் ஆளுங்க வீட்ட ஏலத்துக்கு கொண்டுவந்துட்டாங்க. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துட்டுது. ஒனக்கும் எனக்கும் இனிமேல உறவே இல்லைன்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைகளை அழச்சிகிட்டு அவுங்கம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. திவாகருக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாரு. ரெண்டுமூனு நாளைக்கு மேல யாரும் வச்சிக்கலை. நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. ஒரு நாள் முழுக்க கோவில் மண்டபத்துல படுத்துக் கிடந்தாரு. அப்புறம் எழுந்து கால்போன போக்குல நடந்தாரு. சாலையோரமாகவே நடந்து போயிட்டிருந்த ஆளு, சட்டுனு காட்டுக்குள்ள போற பாதையை பார்த்ததும் அதுல இறங்கி நடந்து உள்ள போயிட்டாரு.”

”ஐயையோ, அப்புறம்?”

”மனிதர்கள் மீது அவருக்கு நம்பிக்கையே இல்லாம போயிடுச்சி. காடுதான் தனக்கு பொருத்தமான இடம்னு தீர்மானிச்சிட்டாரு. காட்டினுடைய உட்பகுதிக்குள்ள அங்கு கிடைச்ச குச்சி, இலை, தழையை வச்சி ஒரு குடிசைய உண்டாக்கி அதுக்குள்ள இருக்க ஆரம்பிச்சிட்டாரு. அங்க கிடைக்கிற பழம், கிழங்குகள்தான் அவருடைய சாப்பாடு.”

திவாகரின் கதை விசித்திரமும் துயரமும் கலந்ததாக இருந்தது. “அவர் காட்டவிட்டே வரமாட்டாரா?” என்று கேட்டேன்.

”எப்பவாவது வருவாரு. காட்டுக்குள்ள கிடைக்கிற மூங்கில்பட்டை, குச்சிகள வச்சி கூடை, முறம்லாம் பின்னுவாரு. எல்லாத்தயும் எடுத்துகிட்டு காட்டு வழியாவே சுள்யாவுக்கு வருவாரு. மொத்தமா ஈஸ்வரப்பா கடையில போட்டுட்டு அதுக்கு உண்டான பணத்துக்கு தக்கபடி அரிசி, பருப்பு, எண்ணெய், வெல்லம்ன்னு  வாங்கிட்டு போயிடுவாரு. ஒரு தரம்  காட்டுக்குள்ள போனா ஒரு மாசம் வரைக்கும் வெளியே வரமாட்டாரு. ரொம்ப விசித்திரமான பிறவி.”

“அது சரி, வனத்துறை ஆட்களுக்கு இதெல்லாம் தெரியுமா, தெரியாதா? அவுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”

“அவுங்க எல்லாருக்குமே திவாகர் கதை தெரியும். அவரால காட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அப்படியே அமைதியா விட்டுட்டாங்க. எனக்குத் தெரிஞ்சி பதினாலு வருஷமா காட்டுக்குள்ளதான் இருக்கறாரு.”

“பதினாலு வருஷமா? ராமர் வனவாசம் போன கதையா இருக்குதே”

“அது என்ன வாசமோ? நான் காலேஜ்ல டிகிரி சேர்ந்த சமயத்துல அவரு காட்டுக்குள்ள போயிட்ட செய்தியை பத்திரிகையில ஞாபகம் இருக்குது. கணக்கு பண்ணி பார்த்தா பதினாலு வருஷமாவுது”

எனக்கு அக்கணத்தில் அவரைப் பார்க்கவேண்டும் என்றும் அவரை ஒரு படம் எடுக்கவேண்டும் என்றும் தோன்றியது. புஷ்பகிரி படங்களைக் கொண்ட ஆல்பத்தில் அவருடைய படமும் இடம்பெறவேண்டும் என்று விரும்பினேன். அதை ஆகாஷிடம் சொன்னேன். “இங்கதான ஆறுமாசம் தங்க போறீங்க. அதுக்குள்ள ஒரு முறையாவது அவரை பார்க்கலாம்” என்றார் ஆகாஷ்.

தட்டச்சு வேலை முடிந்திருந்தது. அதை வாங்கி படித்துவிட்டு ஒரு பிரதியை அவரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு பிரதியை நான் வைத்துக்கொண்டேன். ஆகாஷ் அன்று வங்கிக்குச் செல்லவில்லை. என்னோடேயே விடுதி அறைக்குத் திரும்பி வந்து மாலை வரை தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். இரவு என்னை பேருந்தில் ஏற்றி பெங்களூருக்கு அனுப்பிவிட்டுத்தான் சென்றார்.

அடுத்த ஒரு வாரத்திலேயே நான் என் அணியினரோடு அந்த ஊருக்குத் திரும்பி வந்தேன். இரு நகரங்களையும் இணைக்கும் வேலையைத் தொடங்கினோம்.

ஓய்விருக்கும்போதெல்லாம் ஆகாஷ் வந்து உரையாடிவிட்டுச் செல்வார். அடிக்கடி திவாகரைப்பற்றி விசாரிப்பேன். சில சமயங்களில் அவர் வரவே இல்லை என்று தெரிவிப்பார். சில சமயங்களில் அவர் வந்து போய்விட்டதாகச் சொல்வார்.

ஆறுமாத காலத்தில் எங்கள் வேலை முடிந்தது. இரு நகரங்களும் கேபிள் வழித்தடத்தால் இணைக்கப்பட்டுவிட்டன. பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு எல்லோருமே பெங்களூருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். வீட்டுச்சாவியை ஒப்படைப்பதற்காக நான் ஆகாஷுக்காகக் காத்திருந்தேன்.

பொழுது கவிந்த பிறகுதான் ஆகாஷ் வந்தார். நன்றி சொன்னபடி நான் அவரிடம் சாவியை ஒப்படைத்தேன்.

நகரத்துக்குள் சென்று ஒரு ஓட்டலில் காப்பி அருந்தினோம். ஏதேதோ பழைய நினைவுகளில் எங்கள் உரையாடல் நீண்டுகொண்டே இருந்தது. “உங்களுக்கு திவாகர் தாத்தாவை காட்டறதுக்கான வாய்ப்பே அமையாம போயிட்டுது. அது ஒன்னுதான் சங்கடமா இருக்குது” என்றார் ஆகாஷ்.

“அவரை ஒரு படம் எடுக்கணும்னு நெனச்சேன். இப்படியும் ஒரு மனுஷன் இந்த உலகத்தில் இருந்தான்னு சொல்ல அது ஒரு அடையாளமா இருந்திருக்கும்.”

ஆகாஷ் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு சட்டென “வாங்களேன். கடைசியா ஒரு முயற்சி. கூடை கடை வரைக்கும் போய் பார்த்துட்டு வரலாமா? எந்த அளவுக்கு நமக்கு அதிர்ஷ்டம் இருக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்” என்றார்.

அக்கணமே நான் தயாராக எழுந்து நின்றேன். ஆகாஷ் தன் வாகனத்திலேயே என்னை அழைத்துச் சென்றார். அங்கே புறப்பட்ட வண்டி கூடைக்கடையின் முன்னால்தான் நின்றது. எங்களைப் பார்த்ததுமே “என்னப்பா ஆகாஷ்? கூடைக்கார தாத்தாவை தேடிட்டு வந்தியா?” என்று சிரித்தார். தொடர்ந்து ”ரெண்டு நாள் முன்னாலதான் அவர் வந்துட்டு போனாரு. நீ இப்ப வந்து நின்னா நான் என்ன பதில் சொல்றது?” என்றார் கடைக்காரர்.

ஆகாஷ் ஏமாற்றத்துடன் என்னைப் பார்த்தார். ”என் ஆல்பத்துக்கு அதிர்ஷ்டமில்லை” என்று பெருமூச்சுடன் த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி நானும் அவரை ஏமாற்றத்துடன் பார்த்தேன்.