Home

Friday, 31 March 2023

சாட்சி - சிறுகதை

 வாரத்துக்கு ஏழு நாட்கள் என்கிற கணக்கு ரொம்பவும் அனாவசியம் என்பதுதான் துரைசாமி நாயக்கரின் எண்ணம். சிற்சில சமயங்களில் ஒருவார காலம் என்பது முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே இருப்பது மாதிரியும் யாரோ ஒருவர் வேண்டுமென்ற சதி செய்து ஓடுகிற ஒன்றை இழுத்துக் கட்டிப்போட்டு நத்தை வேகத்தில் உருட்டி விடுகிற மாதிரியும் தோன்றும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிகிற சிரமமாய் இருக்கும். இல்லை இல்லை. அது கூட தப்பு என்பதே நாயக்கரின் அபிப்பராயம். சாட்சிக் கையெழுத்துக்கு எவனாச்சும் கூப்பிடமாட்டானா என்று ரெஜிஸ்டர் ஆபீஸ் படிகளில் ஏறுகிற இறங்குகிற முகங்களை எல்லாம் கண்கொட்டாது பார்க்கிற தனக்கு ஒரு மணி நேரம் கழிவதே ஒரு யுகம் கழிவது போல என்பதுதான் சரியான வசனம் என்று சொல்வார்.

சாட்சிக் கையெழுத்து போடுவதை எந்த உத்தியோகத்தின் கணக்கிலும் சேர்க்க முடியாது. வேறு வேலைசெய்து ஓடியாடி நாலு காசு சம்பாதிக்கிற அளவுக்கு உடம்பில் சக்தி இல்லாததால் தான் பொழுது விடிந்து பொழுது போகிற வரைக்கும் ரெஜிஸ்டர் ஆபீஸே கதி என்று விழுந்து கிடக்கவேண்டி இருக்கிறது. விழுந்து கிடப்பதாலேயே பார்ட்டிகள் கிடைத்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. வரும் நேரத்துக்குத்தான் பார்ட்டிகள் வரும். ஆனால் பார்ட்டியின் வருகை நிகழ்கிற தருணத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் தப்பவிடக்கூடாது என்பதாலேயே ஆபீஸ் வாசலில் தவம் கிடக்கவேண்டும். டீ, சிகரெட் வாங்கிவரச் சொல்கிற குமாஸ்தாக்கள், பேனாவுக்கு இங்க்  ஊற்றி வரச்சொல்கிற பத்திர எழுத்தர் ஆகியோரின் இரக்கமும், கருணையும் தொடர்ந்து தன்மேல் பொழிய வேண்டும் என்பதும் பார்வையிலேயே படுகிற விதத்தில் இருப்பதற்கு ஒரு காரணம்.

சுலபமாய் பார்வையில் படுகிற மாதிரி உட்கார்ந்திருந்தால் கூட செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அஷ்டமி, நவமி, பாட்டிமை ஆகிய கனத்த நாட்களில் ஒரு உபயோகமும் இருக்காது. எந்தப் பார்ட்டியும் ரெஜிஸ்டர் ஆபீஸ் பக்கம் வரமாட்டான். எட்டணா காசுக்குக்கூட வகையில்லாமல் போகும். நாள் கிழமைகளில்கூட ஆகி வராத நாள், துலங்காத நாள் என்று இனம்பிரித்து நம்பத்தொடங்கிய முன்னோர் மீதும் இன்னும் நம்பிக்கொண்டு அலைகிற ஜனங்கள் மீதும் கோபமும் எரிச்சலும் வரும். வயிற்றுப்பாட்டுக்கு ஒன்றும் இல்லாமல் போகிறதே என்பதுதான் காரணம். ஆபீஸ் திறந்திருக்கிற இந்த தினங்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை மாதிரியான அரசாங்க விடுமுறை நாட்களும் சோதனையான நாட்கள்தான். மற்ற நாட்கள் எல்லாம் ஏனோ வாரி இறைத்துவிடுகிற மாதிரியும் நினைப்பதற்கில்லை. ஐந்து ரூபாய் வரையில் கிடைத்தால் அதிகம். சில சந்தர்ப்பங்களில்நீயாதான்யா போடறன்  போடறன்னு ஓடியாந்த?  நானா போட சொன்னன்?’ என்று எகத்தாளமாய்த் தட்டிக்கழித்து அடாவடி செய்கிற பார்ட்டிகளும் உண்டு. வேண்டா வெறுப்பாக வீசிவிட்டுப் போகிற ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோதான் அந்த மாதிரி தினங்களின் மொத்த வருமானமாகிவிடும்.

இந்த வருமானத்துக்குள்ளேயே தானும் தன் மனைவியும் வயிற்றைக் கழுவவேண்டும் என்பதுதான் நாய்க்கர்க்கு வருத்தமான விஷயம். மகன் கொண்டவனுக்கு வருத்தம் இல்லை என்றது உலக வாக்கியம். ஆனால் மூன்று மகன்கள் இருந்தும் சல்லிக் காசுக்குப் பிரயோஜனம் இல்லை என்பதற்கு நாய்க்கரே சரியான உதாரணம். பெரிய பையனுக்கு உளுந்தூர்ப்பேட்டையில் கான்ஸ்டபிள் உத்தியோகம். நடுப்பையன் பாண்டிச்சேரி சுதேசி மில்லில் இருக்கிறான். சின்னவன் பெரியார் பஸ்ஸில் டிரைவராக கடலூரில் வாழ்கிறான். சொல்லிவைத்தமாதிரி மூன்று பிள்ளைகளும் கல்யாணத்துக்குப் பிறகு அந்தந்த ஊரிலேயே வேரூன்றிவிட்டார்கள். அப்பா அம்மா இல்லாமலேயே ஆகாயத் தில் இருந்து நேராக குதித்துவிட்ட மாதிரியான எண்ணம் அவர்களுக்கு. ஒருவேளை சோறு போடக்கூட எவனும் தயாராய் இல்லை. பெரியவன் சின்னவனைக் காட்டுவான். சின்னவன் நடுப் பையனைக் காட்டுவான். நடுப்பையன் வேறொருவனைக் காட்டுவான். இவரிடம் சொல்வதற்கென்றே அவனவனுக்கும் வினோதமான ஆயிரம் காரணங்கள் கிடைக்கும். இரண்டு  மூன்று வருஷத்துக்கு இருந்துஇருந்து கசந்துபோய் தாக்குப்பிடிக்க முடியாமல் வளவனூர்க்கே மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். பத்திரம் எழுதுகிற பழைய சினேகிதர் ஒருவர்தான் பலவந்தப்படுத்தி அழைத்துவந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் திண்ணையில் உட்காரவைத்து சாட்சிக் கையெழுத்துக்குப் பழக்கப்படுத்தினார். உடம்பு சுருங்கி, நடை தளர்ந்து பலவீனமான முதிய வயசில் ரொம்ப ஆறுதலாய் இருந்தது. ஒருவேளை சோறானாலும் கௌரவமான சோறாக இருந்தது. ஆறேழு வருஷங்களாக இந்தச் சோறுதான்.

இன்று செவ்வாய்க்கிழமை. உச்சி வெய்யில் மண்டையை பிளந்தது. ஆபீஸ் வாசலில் கூட இல்லை. பத்திரம் எழுதுகிற அட்டையை சுவரில் சாய்த்துவிட்டு பேப்பர் படித்தபடி இருந்தார் எழுத்தர். ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு முன் டவுன் பஸ் நிற்கிற ஒவ்வொரு தருணத்திலும் யாரோ வரப்போகிறார்கள் என்று வெகு நம்பிக்கையோடு நிமிர்ந்து பார்ப்பதும் இறங்கிய ஜனங்கள் எல்லாம் சத்திரம், கல்யாண மண்டபத்துப்பக்கம் நடக்கத் தொடங்கும்போது சின்ன ஏமாற்றமும் தோன்றியது நாயக்கர்க்கு. காலையில் இருந்து எந்த ஆகாரமும் இல்லை. வயிறு முறுக்கிமுறுக்கிச் சுருண்டது. வெடித்துவிடுகிற மாதிரி தலை வலித்தது. எதிரில் இருந்த ஐயப்பன் கோயில், பழைய காலத்து காங்கிரஸ் மண்டபம், முழுக்கக் கழித்துவிடப்பட்ட அரச மரம், நிழலே இல்லாத மரத்தடியில் லாடத்துக்குக் கால்களை நீட்டி படுத்துக் கிடந்த மாடு என்று வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தொரசாமி.’

உள்ளே இருந்து குமாஸ்தா கூப்பிட்டான். அந்தக் குரல் கேட்டு முகம் திருப்பிய நாய்க்கர் அவனை நோக்கி ஓடினார்.

ஒரு டீ வாங்கியாப்பா . . .”

வாங்கிவந்து தந்தார். ஊதிஊதிக் குடித்தான் அந்தக் குமாஸ்தா. ஒவ்வொரு ஊதலுக்கும் நெளிந்து கலங்குகிற டீயையும் அளவு குறைந்துகொண்டு வருகிற தம்ளரையும் பார்த்தபடி நின்றார் இவர். வெற்றுத் தம்ளரை வாங்கிக் கொண்டுபோய் கடையில் தந்துவிட்டுத் திரும்பினார். ஒரு கணம் கடன் சொல்லித் தானும் ஒரு டீ குடிக்கலாமா என்று யோசித்து, அப்புறம் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு குமாஸ்தாக்கள் உட்கார்ந்ததும் திரௌபதை அம்மன் கோயில் சந்தில் இருக்கும் குழாய்க்குப் பானையை எடுத்துக்கொண்டுபோய் தண்ணீர் பிடித்துவந்து தந்தார். ஆபீஸ் நேரத்தில் நாலைந்து பேர்களாய் ஒரு பார்ட்டி வந்தது. அதிர்ஷ்டம்தான் என்று ஓடினார். வீட்டுமனை விஷயமாய் ஏதோ பழைய குறிப்புகளை குமாஸ்தாவிடம் அவர்கள் கேட்கத் தொடங்கியதும் சோர்வோடு திரும்பினார். சாயங்காலம் மறுபடியும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் டீ வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். ஆபீஸ் முடிந்து கதவைச் சாத்துகிற மட்டும் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு தலையெழுத்தை நொந்தபடி எழுந்து நடந்தார். எங்கு போவது என்று தெரியாமலேயே கல்யாண மண்டபத்து வாசலில் கொஞ்ச நேரம், மகிழ மரத்து நிழலில் கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தார். அரை இருளாய் பூமியில் வெளிச்சம் மங்கத் தொடங்கியதும் வீட்டுக்கு நடந்தார்.

தேங்காய் ஓடு மாதிரி அடக்கமான சின்னக் குடிசை. கிழவி படுத்தபடி இருந்தாள். நாயக்கர் வந்து உட்கார்ந்த சப்தம் கேட்டு எழுந்தாள்.

எதுனாச்சும் கெடச்சுதா?’

ம்ஹும்.’

சுத்தமா ஒன்னுமே இல்லியா?’

இருளின் ஊடே நாய்க்கரையே பார்த்தாள் கிழவி. நாய்க்கர் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். பேச்சு எதுவும் இல்லாமலேயே சில நிமிஷங்கள் கழிந்தன. பயம் ஆழமாகப் பரவி அழுகை முட்டுகிற மாதிரி இருந்தது.

மத்தியானம் ஏதாச்சும் சாப்ட்டியா?’ என்று மெதுவாக பேச்சைத் தொடங்கினாள் கிழவி.

இல்ல.’

ஒரு டீகூடவா குடிக்கக் கூடாது?’

த்ச். காசு இருந்தாதான குடிக்கறதுக்கு . . ?’

மறுபடியும் கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைந்தது. அப்புறம் கிழவர் கேட்டார்.

மத்தியானம் நீ இன்னா செஞ்ச? ’

ஏதாச்சும் நீ கொண்டாருவன்னுதா ஒக்காந்துக்னிருந்தன்.’

நீயும் வெறும் வயித்தோடதா இருக்கியா?

பலவீனமான கால்களை ஊன்றி மெள்ள எழுந்து தண்ணீர் எடுக்கச் செம்பைத் தேடினார் கிழவர்.

(இங்கே இன்று - 1986)