Home

Sunday, 19 March 2023

இதயத்தால் பார்ப்பவன்

  

’சின்னஞ்சிறு இளவரசன்’ நாவல் இப்படித் தொடங்குகிறது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே யாரிடமும் மனம்விட்டுப் பேசமுடியாமல் வளர்ந்து பெரியவனாகிறார் ஒருவர். பிறகு விமான ஓட்டுநராக  பணிபுரியச் செல்கிறார். அவர் பறந்துவந்த தனிவிமானம் ஏதோ விளங்கிக்கொள்ள முடியாத பழுது காரணமாக பாலைவனத்தில் தரையிறங்கிவிடுகிறது.  கண்ணுக்கெட்டிய தொலைவுவரை யாருமே இல்லாத பாலைவனத்தில் என்ன செய்வது, அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் குழப்பத்தில் தவிக்கிறார் அவர்.  அடுத்த திட்டம் பற்றி யோசனையில்  மூழ்கியிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் தன் இளம்பருவத்து அனுபவமொன்று நினைவுக்கு வருகிறது. .  

அப்போது அவருக்கு வயது ஆறு. காட்டுவிலங்கை விழுங்கிவிடும் பெரிய மலைப்பாம்பு மாதக்கணக்கில் நகரமுடியாமல் ஒரே இடத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் என்னும் தகவலை ஒரு புத்தகத்தில் படித்ததால் உருவான மன எழுச்சியின் காரணமாக யானையை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பின் ஓவியத்தை வரைந்து முடிக்கிறார்.

ஆனால் அதைப் பார்க்கும் பெரியவர்கள் அனைவரும் அச்சித்திரத்தில் இருப்பது பாம்பு என்பதையோ அதன் வயிற்றில் இருப்பது யானை என்பதையோ நம்ப மறுத்துவிடுகிறார்கள். அது ஒரு தொப்பியின் படம் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். அதுமட்டுமன்றி, அவனுடைய ஓவிய ஆர்வத்தையும் திசைதிருப்பிவிடுகிறார்கள்.  முடிவில் அவனுக்கு படம் எப்படி வரைவது என்பதே மறந்துபோய்விடுகிறது.  வேறு ஏதேதோ பாடங்கள் படித்து விமானியாகிவிடுகிறார்.

பழுதாகிவிட்ட விமானத்தை சரிசெய்வது எப்படி என்று புரியாமல் குழம்பித் தவிக்கும் வேளையில் ஒரு சிறுவன் தோன்றி அவருக்கு அருகில் வந்து நிற்கிறான். தனக்கு ஒரு ஆட்டின் படத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறான். யாருமே தென்படாத வெட்டவெளியில் சிறுவனைப் பார்த்ததில் அவர் திகைத்துவிடுகிறார். அதைத் தொடர்ந்து அச்சிறுவனின் கோரிக்கை அவரை மேலும் திகைப்பில் ஆழ்த்திவிடுகிறது. அப்போதுதான் அந்தப் பழைய நினைவுகளை அவர் அசைபோட்டுப் பார்க்கிறார்.

தனக்கு படம் வரையத் தெரியாது என்றும் தான் வரையும் படம் இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்துவதற்காக, சிறுவனாக இருந்தபோது வரைந்த மலைப்பாம்பு – யானை படத்தை வரைந்து அச்சிறுவனிடம் காட்டுகிறார். ஆனால் அதைப் பார்த்த வேகத்தில் அச்சிறுவன் ”எனக்கு மலைப்பாம்பு – யானை படம் எல்லாம் வேண்டாம். ஆட்டின் படம் வரைந்து கொடு” என்று கேட்கிறான்.

அந்த ஓவியத்தில் இந்த உலகத்தின் கண்களுக்கு இதுவரை தெரியாத மலைப்பாம்பையும் யானையையும் அச்சிறுவனின் கண்கள் பார்த்துவிட்டதை நேருக்கு நேர் பார்த்த விமானி மகிழ்ச்சியில் திளைத்துவிடுகிறார்.  அந்த அதிசயம் அவரை முதன்முதலாக மனம் விட்டுப் பேசுகிறவராக மாற்றிவிடுகிறது. உடனே அச்சிறுவனிடம் பல கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறுகிறார்.

உலகத்தின் கண்கள் எதைப் பார்க்கின்றன, சிறுவனின் கண்கள் எதைப் பார்க்கின்றன, உலகத்தின் நோக்கம் என்னவாக இருக்கிறது, சிறுவனின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளும் விதமாக அந்த உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. சிறுவன் தக்கவைத்திருப்பது என்ன, பெரியவர்கள் இழந்திருப்பது என்ன என்கிற திசையை நோக்கி அந்த உரையாடல்கள் நம்மை நகர்த்திச் செல்கின்றன. இதுதான் சின்னஞ்சிறு இளவரசன் நாவலுக்குக் கிடைத்த வெற்றி. எண்பது ஆண்டுகளாக இந்தச் சிறிய நாவல் தொடர்ந்து வாசகர்களை ஈர்த்துவருவதற்கு இதுதான்  காரணம்.

உலகில் எல்லாத் தேசத்து மொழிகளிலும் தேவதைக்கதைகள் நிறைந்துள்ளன. பெரும்பாலான தேவதைக்கதைகளில் சிறுவர்களே முக்கியமான பாத்திரங்களாக இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். தேவதைகள் சிறுவர்களோடு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். மனம் திறந்து உரையாடுகிறார்கள். தேவதைகளோடு பழகிப்பழகி, சிறுவர்களும் கொஞ்சம்கொஞ்சமாக தேவதைகளாக மாறிவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. தேவதைகள் வழியாக அவர்கள் பெற்றவை அனைத்தையும் கால ஓட்டத்தில்  இளைஞர்களாக மாறும் போது இழந்துவிடுகிறார்கள். பெற்ற செல்வத்தின் மதிப்பை நாம் உணர்ந்துகொள்ளும் முன்பே அது நம் கையைவிட்டுப் போய்விடுகிறது.

விமான ஒட்டிக்கும் சிறுவனுக்கும் நிகழும் உரையாடல் நாவலின் சத்தான பகுதியாகும். மிகச்சிறிய ஒரு கிரகத்தில் தன்னந்தனியாக வாழ்வது பற்றியும் தன்னுடைய அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்வதற்காக அவன் தன்னுடைய கிரகத்திலிருந்து வெளியேறி அருகில் இருக்கும் வேறு சில கிரகங்களுக்குச் சென்றதையும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தையும் விமான ஓட்டியிடம் கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கிறான்.   

முதல் கிரகத்தில் வாழ்ந்துவந்த அரசன் அச்சிறுவனைக் கண்டதும் தன் சொல்லைக் கேட்டு அடிபணிந்து நடக்கும் ஒரு குடிமகன் கிடைத்துவிட்டான் என்ற உற்சாகத்தில் அதிகார மிடுக்கோடு ஆணைகளைப் பிறப்பிக்கிறான். இரண்டாவது கிரகத்தில் இருப்பவன் சதாகாலமும் தற்பெருமை பேசுகிறவனாக இருக்கிறான். மூன்றாவது கிரகத்தில் இருப்பவன் குடிபோதையில் மூழ்கியிருக்கிறான். நான்காவது கிரகத்தில் வாழ்பவன் முழுக்கமுழுக்க ஒரு வியாபாரியைப்போல நடந்துகொள்கிறான். அடுத்த கிரகத்தில் வசிப்பவர் முதிய எழுத்தாளர். எல்லோருமே அச்சிறுவனை தனக்குக் கிடைத்த ஓர் அடிமையைப்போல நடத்துகிறார்கள். யாருமே அவனைச் சிறுவனாக நடத்தவில்லை.

அவர்கள் அனைவரையும் விட சிறுவன் மனிதாபிமானம் மிகுந்தவனாக இருக்கிறான். அவனால் ஒரே சமயத்தில் மனிதர்களோடும் பேசமுடிகிறது. பாம்பு, மலர், நரி என எல்லாவிதமான உயிரனங்களோடும் பேசமுடிகிறது. அதுதான் அவன் வலிமை. நரிக்கும் சிறுவனுக்கும் நிகழும் ஓர் உரையாடலில் இதயத்திற்கும் பார்வை இருக்கிறதென்றும். அதன் வழியாக கண்களுக்குத் தென்படாததையெல்லாம் பார்க்கமுடியுமென்றும் இடம்பெற்றிருக்கும் குறிப்பு மிகமுக்கியமானது.

இதயம் வழியாகப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால்தான் சிறுவன் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாத மலைப்பாம்பின் சித்திரத்தை ஒரே கணத்தில் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லாத வகையில் கண்டுபிடித்துவிடுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு மனம்விட்டுப் பேசத் தொடங்கிய விமான ஓட்டி சிறுவனோடு உரையாடி தனிமையின் துயரத்தைப் போக்கிக்கொள்கிறான்.

ஒவ்வொரு நாளும் தன் கிரகத்தை தானே சுத்தம் செய்வதாகத் தெரிவிக்கிறான் சிறுவன். அவன் அங்கே ரோஜாச்செடிகளை வளர்க்கிறான். தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறான். அவ்வப்போது செடிகளுக்கு நடுவில் களைகள் வளர்ந்து மண்டிவிடுகின்றன. அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அகற்றிவிடுகிறான். அப்போதுதான் அவன் பவோபாப் செடிகளைப்பற்றித் தெரிவிக்கிறான். பார்ப்பதற்கு ரோஜாச்செடியும் பவோபாப் செடியும் ஒன்றுபோலவே தோற்றமளிப்பவை.   ஆனால் அது ஒருவகையான களைச்செடி அவன் கண்களுக்கு அந்தக் களைச்செடிகள் தெரிகின்றன. ஆதலால் அவற்றை அவ்வப்போது அகற்றுகிறான்.

வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் வெறும் ஒளிப்புள்ளிகள் அல்ல என்றும் அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை விமான ஓட்டிக்குக் கற்பித்துவிட்டு சிறுவன் சென்றுவிடுகிறான். விமான ஓட்டியும் உயிர்தப்பி ஊருக்குத் திரும்பிவிடுகிறார்.

இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டாலும் சிறுவன் வழியாக தான் அறிந்துகொண்ட அனுபவங்களை தினந்தோறும் அசைபோட்டபடி வாழ்க்கையைக் கழிக்கிறார். பிறகு ஒருநாள் அவை அனைத்தையும் ஒரு கதையாக எழுதி முடிக்கிறார். அதில் அவர் சிறுவனைச் சந்தித்துப் பேசிய செய்தியையும் சிறுவனுக்கு இந்த உலகத்தின் மீது இருக்கும் பற்றையும் நம்பிக்கையும் மையப்படுத்தி ஒரு நீள்கதையாக எழுதி முடிக்கிறார். பிரெஞ்சு மொழியில் முதலில் வெளியான அந்த நாவல் இதுவரை உலகெங்கும் 470 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்திருந்தபோதும், இப்போது எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் மீண்டும் வாசகர்களை வந்தடைந்திருக்கிறது.

சின்னஞ்சிறு இளவரசன் நாவலை வாசித்து முடித்ததும் சிறுவனுடைய புதுமையான எண்ணங்களும் சீரான நோக்கங்களும் மீண்டும் மீண்டும் நினைவில் மோதிக்கொண்டே இருக்கின்றன. சிறுவனுடைய ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்தியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்துமுடியும் தருணத்தில் அவன் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பும் பெருகியபடியே இருக்கிறது. அவனுக்கு சிக்கல் என்பதே இல்லை. அவன் அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்கிறான். பெரியவர்களுக்கு சிக்கலாகத் தோன்றுபவை அனைத்தும் அவனுக்கு எளிதாகத் தோன்றுகின்றன. அவன் தூய்மையின் மீது விருப்பம் கொண்டவனாக இருக்கிறான். தன் வேலையை தானே செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறான். அவனால் ரோஜாச்செடிகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. எலி, நரி போன்ற  உயிரினங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அவனுக்கு மிக எளிய விதத்தில் சாத்தியமாகும் அம்சங்கள் நமக்கு ஏன் சாத்தியமாகவில்லை என்பது ஒரு கேள்வியாக நம் முன் நிற்கிறது. இந்த நாவல் முன்வைக்கும் கேள்வியும் அதுதான். அதற்குரிய விடையும் நாவலின் சிற்சில பகுதிகளில் இடம்பெற்றிருக்கிறது. சிறுவன் அனைத்தையும் தன் இதயத்தால் பார்க்கிறான். மனிதர்களோ கண்களால் மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள். அதிலும் பிடித்தவை, பிடிக்காதவை என்கிற வேறுபாடும் உண்டு. சிறுவனின் மனம் அனைத்தையும் நெருங்கிச் செல்லும் விதமான இயக்கத்தை உடையதாக இருக்கிறது. ஆனால் உலகில் மனிதர்களின்  மனமோ அனைத்தையும் விட்டு விலகி, அனைத்துவிதமான உறவுகளையும் துண்டித்துக்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளும் விதமான இயக்கத்தை உடையதாக இருக்கிறது. ஒருவருக்கும் அடுத்தவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்ளும் விருப்பமே இல்லை. அதுதான் காரணம். அதுதான் கேள்விக்கான விடை.

மிகவும் எளிமையான விடை. ஆனால் அந்த எளிமையை அடைவதுதான் உலகத்திலேயே மிகவும் சிக்கலானது. ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபரி நம் கண்களைத் திறக்கவைத்து நம்மையே அச்சிக்கலைப் பார்க்கவைக்கிறார்.


(சின்னஞ்சிறு இளவரசன். பிரெஞ்சு நாவல். ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி. காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில். விலை ரூ.195)

 

(புக் டே – இணையதளம் – 10.03.2023)