Home

Sunday, 26 February 2023

மேஜிக் தாத்தா - கட்டுரை


எங்கள் குடியிருப்பை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருக்கிறது. இன்னும் விரல் பழகாத சிறுவனொருவன் கோணலாக இழுத்துவிட்ட கோடுகளையெல்லாம்  மீண்டும் இணைத்து வட்டமாக்கியதுபோன்ற வடிவம் கொண்ட ஏரி.

நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு  வசதியாக அதன் கரையை ஒட்டி ஒரு பாதை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் சீரான இடைவெளிகளில் அதன் கரை நெடுக மரங்கள் நின்றிருக்கின்றன. வாதாமரங்கள், மஞ்சள்கொன்றை மரங்கள், காட்டுவாகை மரங்கள், பூவரச மரங்கள், தெபூபியா மரங்கள் என கலவையான வரிசை. ஒரு திருப்பத்தில் பத்து பதினைந்து மூங்கில் மரங்கள் கூட உண்டு.

ஒவ்வொரு மரத்தின் கிளைகளிலும் விதவிதமான பறவைகள். கொக்குகள். காக்கைகள். புறாக்கள். குயில்கள். நீர்க்கோழிகள். நாரைகள். வானவெளியில் நீந்தியபடி கொக்குக்கூட்டம் பறந்துசெல்லும் காட்சியைப் பார்க்கும்தோறும் மனம் பரவசத்தில் திளைக்கும். அவற்றோடு சேர்ந்து  நாமும் பறந்துசெல்வது போலத் தோன்றும்.

குளிர்காலத்தில் வாதாமரங்கள்தான் முதலில் இலைகளை உதிர்க்கத் தொடங்குகின்றன.  அகன்ற பச்சை இலைகள் வாடி செந்நிறமாக மாறி காற்று வீசும்தோறும் சில நாட்கள் ஆடிஆடி அசைந்தபடி கிளைகளொடு ஒட்டியிருந்துவிட்டு ஒரு நாள் காலையில் அனைத்தும் மரத்தின் கீழேயே உதிர்ந்துகிடக்கும். அதிகாலை அமைதியில் அந்த இலைகளின் அடர்த்தியைப் பார்க்கும்தோறும் எங்கிருந்தோ இரவு நேரத்தில்   வந்தடைந்து மரத்தடியில் படுத்துறங்கி ஓய்வெடுக்கும் நாடோடிக்கூட்டத்தினரெனக் காட்சியளிக்கும்.

குளிர்காலத்தில் பார்க்கத்தக்க இன்னொரு காட்சி தெபூபியா மரங்கள் பூத்து நிற்கும் காட்சி. பூக்களை மட்டுமே கொண்ட மரங்கள் அவை. இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை என பல நிறங்களில் அவை பூக்கின்றன. எந்த நிறமாக இருந்தாலும், ஒரு மாபெரும் சுடரென நிற்கும் அதன் கோலம் நெஞ்சை நிறைக்குமொரு காட்சி.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடியே ஏரியை இரண்டு முறை சுற்றி வருவேன்.  அதுதான் என் நடைப்பயிற்சி வழிமுறை. ஒருநாள் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிவரும்போது ஒரு சிமெண்ட் பெஞ்ச்சைச் சுற்றி சிறுவர்கள் கூட்டமாக நிற்பதைப் பார்த்துவிட்டு நின்றேன். எல்லோருமே பத்து வயதை ஒட்டியவர்கள். நடுவில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக அந்தக் கூட்டத்தை நெருங்கிச் சென்றேன்.

அந்தப் பெரியவர் கரும்பு நிறத்தில் ஒரு பேண்ட்டும் வெள்ளையில் கரிய கட்டங்கள் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். உற்சாகமும் புன்னகையும் ததும்பும் அவருடைய முகத்தைப் பார்த்ததுமே எனக்கும் உற்சாகம் ஒட்டிக்கொண்டது. பஞ்சுபோல நரைத்துவிட்ட தலைமுடி. காதுகளை மறைக்கும்வகையில் குல்லாய். 

ஜியோமெட்ரி பெட்டியைப்போல அவர் கையில் ஒரு பெட்டியை வைத்திருந்தார். நான்கு புறங்களிலும் மூடிய வெறுமையானதொரு கூடு. மேசையின் இழுப்பறையைப்போல திறந்துமூடும் வகையில் அதற்குள் பொருந்திய ஒரு உட்கூடு. ஆனால் முற்றிலும் விடுபட்டு விழாத வகையில் ஒரு விளிம்பு மட்டும் உட்பக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தது. இழுக்கலாம். தள்ளலாம். ஆனால் முற்றிலுமாக விலக்கியெடுக்க முடியாது. அந்தப் பெட்டியின் அமைப்பு அப்படி இருந்தது. அதை முன்னும் பின்னும் அசைத்துக்காட்டியபடிதான் தன்னைச் சுற்றியிருக்கும் சிறுவர்களிடம் அவர் எதையோ விவரித்தபடி இருந்தார்.

“என்ன இது, தெரியுதா?” என்று ஒரு மந்திரவாதியைப்போல அந்தப் பெட்டியோடு கையை உயர்த்தி சிறுவர்களிடம் கேட்டார். “பெட்டி” என்று ஒரே குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள் சிறுவர்கள்.

“இதுக்குள்ள என்ன இருக்குது?”

“ஒன்னுமில்லை. காலி பெட்டி”

“நல்லா பார்த்து சொல்லணும், ஏதாவது இருக்குதா?”

அவர் மீண்டும் மீண்டும் உள்ளறையை இழுத்து இழுத்துக் காட்டினார். சிறுவர்கள் உற்சாகம் கொண்ட குரலில் இன்னும் சத்தமாக “ஒன்னுமில்லை தாத்தா. காலி பெட்டி. அவ்ளோதான்” என்றனர்.

”சரி, என் கையையே எல்லாரும் நல்லா பாத்துட்டிருங்க” என்றபடி எல்லோருடைய முன்னிலையிலும் அவர் பெட்டியை மூடினார். ஒரு கணம் அப்பெட்டியை முகத்துக்கருகில் கொண்டு சென்று எதையோ ரகசியமாக அதனிடம் சொல்வதுபோல சத்தமெழாதபடி மெல்ல முணுமுணுத்தார். அவர் உதடுகள் மட்டும் அசைந்தன. பிறகு அப்பெட்டியை சிறுவர்கள் பக்கமாக நீட்டிவைத்துக்கொண்டு வட்டமாக இடது புறத்தில் மூன்று முறையும் வலது புறத்தில் மூன்று முறையுமாகச் சுற்றினார்.

சிறுவர்கள் அப்பெட்டியிலிருந்து என்ன வெளிப்படப்போகிறது என்பதைப் பார்க்கும் ஆவலுடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். பெட்டியின் ஒரு விளிம்பை வலது கையால் பற்றியபடி, மற்றொரு விளிம்பின் வழியாக இழுப்பறையை இடது கையால் கொஞ்சம்கொஞ்சமாகத் திறந்தார் பெரியவர். சிறுவர்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு அப்பெட்டியைக் கவனித்தேன்.

பெட்டியின் பாதி அளவு வெளியே வந்துவிட்டது. அதுவரை ஒன்றும் தெரியவில்லை. பெரியவர் எல்லோரையும் ஏமாற்றிவிடுவாரோ என்று கூட ஒருகணம் தோன்றியது. ஆனால் சிறுவர்கள் மட்டும் வைத்த கண்ணை எடுக்காமல் பெட்டியின் பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

சட்டென யாரும் எதிர்பாராத ஒரு கணத்தில் பெட்டிக்குள்ளிருந்து வெள்ளையாக ஒரு சின்ன பிளாஸ்டிக் பல்லி கீழே வந்து விழுந்தது. சிறுவர்கள் உற்சாகத்தில் ஓவென்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். பார்ப்பதற்கு உண்மையான பல்லியைப்போலவே தோற்றமளித்த அதை கையை நீட்டி ஏந்திக்கொண்ட பெரியவரும் அவர்களோடு சேர்ந்து ஓவென்று சத்தமெழுப்பினார். அந்த உற்சாகம் அவரையும் சிறுவனாக்கிவிட்டது.

“எப்படி தாத்தா அந்தப் பல்லி வந்தது?”

“அதான் மேஜிக்”

“சொல்லுங்க தாத்தா. ஏற்கனவே அதுக்குள்ள வச்சிட்டு, இப்ப விழவச்சிங்க, இல்லையா?”

“ஆரம்பிக்கும்போதே பெட்டியை திறந்து காட்டிட்டுதான ஆரம்பிச்சேன். அப்ப ஏதாவது இருந்ததா?”

“ஏதோ ட்ரிக் இருக்குது. சொல்லுங்க தாத்தா”

“இந்தா வேணும்னா நீயே செஞ்சிப் பாரு”

பெரியவர் அந்தப் பெட்டியை அவனிடம் நீட்டினார். அவர் அப்படிச் சொல்வார் என அவன் எதிர்பார்க்கவில்லை. அதை கையில் வாங்கிவிட்டானே தவிர, ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான். பிறகு இழுப்பறையை தயக்கத்தோடு மூடிவிட்டு எல்லோரையும் கலவரத்தோடு பார்த்தான். திற திற என்று எல்லோரும் அவனை உற்சாகப்படுத்தினர். அவனும் உற்சாகம் கொண்டு கையை உயர்த்தி பெரியவரைப்போலவே பெட்டியின் விளிம்பை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையால் மற்றொரு விளிம்பைத் திறந்தான். இறுதிப்புள்ளி வரைக்கும் இழுத்தான். ஒன்றும் விழவில்லை. அவனுக்கு அது ஏமாற்றத்தை அளித்தது. சற்றே வெட்கத்தோடு பிற நண்பர்களைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான்.

உடனே பக்கத்தில் இருந்த சிறுவன் ”நான் ஒரு தரம் முயற்சி செய்யட்டுமா தாத்தா?” என்று கேட்டபடி கையை நீட்டினான். பெரியவர் பெட்டியை பெரிய சிறுவனிடமிருந்து வாங்கி, சின்ன சிறுவனிடம் கொடுத்தார். அவன் ஒரு வெற்றிப்புன்னகையோடு அதை வாங்கி வைத்துக்கொண்டு பெட்டியை ஒருமுறை, சுற்றியிருப்பவர்களை நோக்கி ஒருமுறை என மாறிமாறி பார்த்தபடி பொழுதுபோக்கினான்.

”சீக்கிரம் திறடா” என்று சுற்றியிருப்பவர்கள் அவசரப்படுத்தினர். “ம், கமான்” என்று பெரியவரும் ஊக்கப்படுத்தினார். கொஞ்சம்கொஞ்சமாக இழுப்பறையின் விளிம்பை இழுத்து முடித்தான் அவன். ஒன்றும் விழவில்லை. சிறுவர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

அவனைத் தொடர்ந்து இன்னும் இரு சிறுவர்கள் முயற்சி செய்தனர். அவர்களுடைய முயற்சிகளும் ஏமாற்றத்திலேயே முடிவடைந்தன. சிறுவர்களைப்போல அப்பெட்டியைக் கேட்டு வாங்கி ஒருமுறை முயற்சி செய்யவேண்டும் என்று உள்ளூர எனக்கும் ஆசையாக இருந்தது.  ஆயினும் ஏதோ வெட்கம் தடுத்தது. பெரியவர் கூட சிறுவர்களோடு சிறுவனாக நிற்கும் என்னை ஒருகணம் நிமிர்ந்து பார்த்து “ம்?” என்று கேள்விக்குறியோடு விழிகளை அசைத்தார். என்னையறியாமலேயே வேண்டாம் என்பதுபோல என் தலை அசைந்துவிட்டது. வாய்வரைக்கும் வந்துவிட்ட சொற்களை கூட்டி விழுங்கிவிட்டேன்.

சிறுவர்களிடம் இருந்த பெட்டியை “இங்க கொடு” என்று கேட்டு வாங்கினார் பெரியவர். பிறகு ”இப்ப என்ன நடக்குது, பார்க்கலாமா?” என்று கேட்டபடி திறந்திருந்த பெட்டியை மூடினார்.  ஒரு கணம் அப்பெட்டியை முகத்துக்கருகில் கொண்டு சென்று முன்பு செய்தபடி சத்தமெழாதபடி மெல்ல முணுமுணுத்தார். பிறகு அப்பெட்டியை சிறுவர்களை நோக்கி நீட்டியவாக்கில் வட்டமாகச் சுற்றினார்.

எல்லோரும் காணும்வகையில் பெட்டியை உயர்த்திப் பிடித்தபடி “தெறக்கட்டுமா, தெறக்கட்டுமா?” என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்தார். ஆர்வத்தில் இதயம் வேகமாக துடித்தது. அனைவரும் அப்பெட்டியையே வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்தபடி இருந்தோம்.

ஒன்றும் விழப்போவதில்லை என்று நினைத்திருந்த கணத்தில் சட்டென ஒரு சின்னஞ்சிறு பிளாஸ்டிக் பல்லி கீழே வந்து விழுந்தது. சிறுவர்கள் ஏ என்று சத்தமெழுப்பியபடி துள்ளிக் குதித்தனர்.

”எப்படி தாத்தா, நீங்க இழுத்தா மட்டும் பல்லி விழுது? நாங்க இழுத்தா ஒன்னும் விழமாட்டுது?”

“அதான் மேஜிக்”

“தாத்தா தாத்தா, எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க தாத்தா” சிறுவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கெஞ்சத் தொடங்கினர்.

அந்த இனிமையான சூழலிலிருந்து விடுவித்துக்கொண்டு புறப்படவே மனம் வரவில்லை. ஆனால் ஒன்பது மணிக்கு ஒரு நண்பரை அவருடைய வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டிய வேலை இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அடுத்த நாள் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும் சமயத்தில் மீண்டும் அந்தப் பெரியவரையும் சிறுவர்களையும் சந்தித்தேன். அதே மரத்தடி. அதே பெஞ்ச். அதே மாதிரி இனிமையான சூழல். வேறு ஏதோ ஒன்றைப் புதுமையாக செய்து காண்பித்துக்கொண்டிருந்தார் பெரியவர். இன்று என்ன புதுமை என அறியும் ஆவலில் நானும் அச்சிறுவர்களுக்குப் பின்னால் சென்று நின்றேன். பெரியவர் பார்வை என் மீது விழுந்த சமயத்தில் அவருக்கு வணக்கம் சொன்னேன்.

பெரியவரின் கையில் உறி கட்டுகிற கயிற்றைப்போன்ற உறுதியான ஒரு கயிறு இருந்தது. சணலாலான கயிறல்ல. உலோக நார்களால் ஆன கயிறு. பளிச்சென வெள்ளையான நிறத்தில் இருந்தது. அதை பெல்ட் போல ஐந்தாறு வட்டச்சுற்றாகச் சுற்றி கையில் வைத்திருந்தார் பெரியவர்.

சிறுவர்கள் முன்னிலையில் பெரியவர் அந்தக் கயிற்றுச்சுருளைப் பிரித்தார். பட்டத்தோடு இணைந்த வாலைப்போல அது நீண்டு தொங்கியது.  சிறுவர்கள் கைகளை நீட்டி அதை ஆர்வத்தோடு தொட்டுப் பார்த்தனர்.

“இரும்புக்கயிறா தாத்தா இது?”

“ஆமாம்”

“எஞ்சின்ல கட்டியிருப்பாங்களே, அந்த மாதிரி கயிறா இது?”

“ஆமாம். அதேதான்”

“இத வச்சி என்ன தாத்தா செய்யமுடியும்? இரும்ப காந்தமாக்க போறீங்களா?”

”அத விட முக்கியமான ஒன்னா ஆக்கப் போறேன்”

’அப்ப, தங்கம் மாதிரியா?”

“அதெல்லாம் இல்லை. வேற ஒன்னு. கண்டுபிடிங்க பார்ப்போம்”

தாத்தா அப்படிச் சொன்னதும் ஆளாளுக்கு ஒன்று சொல்லத் தொடங்கினர். புன்னகையோடு எல்லாவற்றையும் தாத்தா ”இல்லை இல்லை” என மறுத்துக்கொண்டே இருந்தார். கடைசியில் “சரி, நானே சொல்றேன்” என்றபடி அந்தக் கயிற்றுச்சுருளை உதறி நீளமாக தொங்கவைத்தார். “இந்தக் கயிறு இப்ப எப்படி இருக்குது? வளவளன்னு தொங்குது இல்லையா? அத அப்படியே உறையிலேருந்து உருவின வாள் மாதிரி மிடுக்கா மாத்த போறேன்” என்றார்.  பிறகு கயிற்றை நாலு பக்கங்களிலும் திருப்பித் திருப்பி உதறினார். சிறுவர்கள் அவருடைய கைகளையே உற்றுப் பார்த்தபடி நின்றனர். ஒரு கயிறு வாளாக  எப்படி மாறும் என்னும் கேள்வி அவர்கள் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது.

“இங்க பாருங்க” என்றபடி பெரியவர் அந்தக் கயிற்றை தலைக்கு மேலே உயர்த்தி கார்த்திகைப்பந்தத்தைச் சுற்றுவதுபோல வட்டமாகச் சுற்றினார். நானும் ஆவலோடு அவர் செய்யவிருக்கும் மாயத்தை அறிந்துகொள்வதற்காகக் காத்திருந்தேன்.

ஒன்று, இரண்டு, மூன்று என மெதுவாக பெரியவர் கயிற்றைச் சுற்றிகொண்டே இருந்தார். நான்காவது சுற்றையும் ஐந்தாவது சுற்றையும் வேகமாகச் சுற்ற்றினார். ஆறாவது சுற்றை முடித்துக்கொண்டு கைகளைக் கீழே இறக்கிய சமயத்தில் அவர் கையிலிருந்த கயிறு உறுதியான வாளாக மாறிவிட்டது. திடமான, வளையாத, வாள். திரைப்படங்களில் வாட்சண்டை போடும் கதாநாயகனைப்போல ஒரு கணம் வாளை உயர்த்தி சுழற்றிக்கொண்டே நாலைந்து அடிகள் முன்னால் நடந்து சென்று பின்பக்கமாகவே திரும்பினார்.

நம்பமுடியாதபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். சிறுவர்களும் பேச்செழாமல் பெரியவரின் கையிலிருந்த வாளைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.  எல்லோரும் தொட்டு முடிக்கும் வரை காத்திருந்த பெரியவர் புன்னகைத்துக்கொண்டே “சரி, மறுபடியும் கயிறா மாத்திடலாமா?” என்று கேட்டார். ஒருவரும் வாய் திறந்து பேசவில்லை. வைத்த கண்ணை எடுக்காமல் அந்த வாளையே பார்த்துக்கொண்டிருந்தனர். பெரியவர் “ஒன்று, இரண்டு, மூன்று” என்று சிற்சில நொடிகள் இடைவெளி விட்டு எண்ணியபிறகு அப்படியும் இப்படியுமாக வாளைச் சுழற்றிவிட்டு நிறுத்தினார். அக்கணமே நீண்டிருந்த வாள் அப்படியே தளர்ந்து, தொய்ந்து, கயிறாக மாறி அப்படியும் இப்படியுமாக ஆடியது.

”கயிறை எப்படி தாத்தா வாளா மாத்தறீங்க?”

“அதான் மேஜிக்”

“கயிறுக்குள்ள வாள் ஒளிஞ்சிருக்குதா தாத்தா?”

“இல்லையே. வேணும்ன்னா நீயே பாரு”

தாத்தா உடனே அக்கயிற்றை சிறுவர்களிடம் கொடுத்தார். எதிரிலேயே நின்றிருந்த ஒரு சிறுவன் மிகுந்த தயக்கத்தோடு அதை வாங்கி இப்படியும் அப்படியும் அசைத்துப் பார்த்தான். சுழற்றிப் பார்த்தான். சொடுக்கிப் பார்த்தான். ஆனால் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.  கயிறு கயிறாகவே  அசைந்தது. அவன் நிறுத்துவதற்காகக் காத்திருந்த மற்றொரு சிறுவன் அதை உடனடியாக வாங்கி மேஜிக் செய்யும் முயற்சியில் இறங்கினான். இப்படியே ஒருவரையடுத்து ஒருவரென அனைவரும் முயற்சி செய்துவிட்டு பெரியவரிடம் கயிற்றைத் திரும்பிக் கொடுத்தனர்

“எப்படி தாத்தா செய்யறீங்க, சொல்லுங்க தாத்தா. ப்ளீஸ்”

”அதான் மேஜிக்”

அதையடுத்து பெரியவர் அச்சிறுவர்களுக்கு வேறு என்னமோ செய்து  காட்டத் தொடங்கினார். நேரமின்மையால் நான் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விஷயத்தை சுற்றியிருக்கும் சிறுவர்களுக்குச் செய்து காட்டி மகிழ்ச்சியில் திளைக்கவைக்கிற அந்தப் பெரியவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒருநாள் சிறுவர்கள் அனைவரும் புறப்பட்டுச் செல்லும் வரைக்கும் காத்திருந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் “நான் பிரசன்ன ராகவன். பாதுகாப்புத்துறையில விஞ்ஞானியா இருந்து ரிட்டயர்ட் ஆனவன். இந்த குறுக்குத்தெருவுல வீட்டுமனை போட்டு வித்த சமயத்துல நான்தான் முதமுதல்ல மனை வாங்கி வீடு கட்டி குடிவந்தேன்” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். நான் அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “வீடு கட்டி குடி வர்ரதில என்ன புதுமை இருக்குதுன்னு உங்களுக்குத் தோணலாம். நான் வந்த சமயத்துல இங்க ஒரு வீடு கூட கிடையாது. இந்த ஏரி, சுத்தி திராட்சைத்தோட்டம் மட்டும்தான் இருந்தது. எல்லாருமே இங்க வரதுக்கு பயந்தாங்க. அப்படிப்பட்ட சூழல்ல வந்த முதல்ஆள் நான்”

“வயசு வித்தியாசம் பார்க்காம சின்ன புள்ளைங்ககூட நீ்ங்க சேர்ந்து பழகறத பார்க்கறதுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது சார்” என்றேன். பெரியவர் அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தார். “எனக்கு என்ன வயசிருக்கும்னு நெனைக்கறீங்க. வெறும் எண்பத்தேழு. ஆனா மனசுக்குள்ள என்னை இன்னும் அஞ்சு வயசு பத்து வயசு பையனாத்தான் நெனைச்சிட்டிருக்கேன். அதுதான் எனக்கு புடிச்சிருக்குது. என் மனசு முழுக்க அந்த நினைவுகள்தான் நிறைஞ்சிருக்குது” என்றார்.

அவர் பேசப்பேச அவரைப்பற்றிய மலைப்பான எண்ணங்கள்  பெருகிக்கொண்டே இருந்தன. நீண்ட நேரம் உரையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

ஒரு விடுமுறை நாளில் என்னை அவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பெரிய கூடம். சுவரில் ஒரு பக்கம் ஏராளமான புகைப்படங்கள் வெவ்வேறு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. பெரியவர் நிதானமாக ஒவ்வொருவரைப்பற்றியும் சொன்னார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பெண். ஒரு ஆண். அவர்களும் பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதே வட்டாரத்தில் வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டில் அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே வசித்து வந்தனர். தன் மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தினார்.

கூடத்தின் ஒரு மூலையில் பெரிய மேசை இருந்தது. அதன் மீது ஏராளமான பொருட்கள் நிறைந்திருந்தன. எல்லாமே மேஜிக் செய்வதற்காக வெவ்வேறு வடிவங்களில் அவரே கண்டுபிடித்து இணைத்து உருவாக்கிய விசித்திர வடிவங்கள். மேஜிக் பெட்டி, மேஜிக் வாள் எல்லாமே அந்த மேசையின் ஓரத்தில் இருந்தன.

இன்னொரு மூலையில் ஒரு சின்ன அலமாரியில் புத்தகங்கள் அடுகப்பட்டிருந்தன. உடனே அதற்கு அருகில் சென்று என்ன மாதிரியான புத்தகங்கள் என்று தலைப்புகளப் பார்த்தேன். எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள். பெரும்பாலும்  ஐரோப்பிய நாவல்கள். ரஷ்ய நாவல்கள். பிரிட்டன் நாவல்கள்.

மற்றொரு மூலையில் மூன்றடி உயரத் தூண்மீது சுழலும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த கேரம் போர்டைப் பார்த்துவிட்டு புரியாமல் நின்றேன். குழப்பத்துடன் அவரை அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். அதற்குள் அவர் அருகில் வந்து அந்தக் கேரம் போர்டைத் தொட்டு சுழலவிட்டார். அது இசைத்தட்டு சுழல்வதுபோல சுழன்று நின்றது.

“கேரம் போர்டுதான். நான் தனியாள். என் கூட விளையாட யாருமில்லை. அதனால ரொட்டேஷன் கேரம்போர்ட் மாதிரி நானே செட் பண்ணிகிட்டேன். முதல்ல ப்ளாக் காய்ன் ஆடுவேன். அப்புறம் போர்ட திருப்பி ஒரு சுத்து சுத்திவிட்டு ஒயிட் காய்ன் ஆடுவேன். கொஞ்ச நேரம் டைம் பாஸ்”

எந்த வருத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியான குரலில் சொன்னார். பெரியவர். பக்கத்தில் நின்றிருந்த மனைவி ”மெத்தையில பிலியர்ட்ஸ் விளையாட போர்டு ஒன்னு இருக்குது. அங்கயும் ஒத்த ஆளாவே ஆடிக்குவாரு. எல்லாத்தயும் ஒத்தயாவே செஞ்சி பழகிகிட்டாரு. அவருக்கு எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அதனால ஏமாற்றமும் இல்லை” என்று சொன்னார்.

இன்னொரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் பெரியவர். ஜன்னலோரமாக ஒரு பெரிய சாய்வு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதன் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. நீண்ட அதன் கைகள் மூன்று பகுதிகளாக இருந்தன. தேவைக்கேற்ப நீட்டிக்கொள்ளவும் குறைத்துக்கொள்ளவும் வசதி இருந்தது. அருகில் ஓவியம் தீட்டும் மேசை இருந்தது. அவர் தீட்டிய ஓவியங்களை ஒரு பெரிய கோப்புக்குள்  தேதி வாரியாக அடுக்கிவைத்திருந்தார். ”பாருங்க” என்று என் பக்கமாகத் தள்ளினார். சில ஸ்கெட்ச் பேனாக்களால் தீட்டியவை. சில நீர்வண்ண ஓவியங்கள்.

“உங்களுக்குத் தெரியாத கலையே இல்லை போல. எல்லாத்தயும் தெரிஞ்சி வச்சிருக்கிங்க சார்” என்று அவரைப் பார்த்து வியப்புடன் சொன்னேன். அக்கணமே எந்தத் தயக்கமும் இல்லாமல் உதடுகளில் புன்னகை மிளிர “மாஸ்டர் ஆஃப் ஆல். பட் எக்ஸ்பர்ட் ஆஃப் நத்திங்” என்று சொல்லிவிட்டு தோளைக் குலுக்கினார். அந்த ஓவியத்தொகுதியிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்தார். “இது புடிச்சிருக்குதா உங்களுக்கு?” என்று கேட்டார். ஒரு பெரிய மரக்கிளை. அடர்த்தியான இலைகள். நடுவில் சுள்ளிகளால் ஒரு கூடு. அதற்குள் நான்கு முட்டைகள்.  முதல் பார்வையிலேயே எனக்கு அந்தப் படம் பிடித்துவிட்டது. “எஸ் சார்” என்றேன். அவர் உடனே அந்தப் படத்தை எடுத்து “இந்தாங்க வச்சிக்குங்க. என் ஞாபகமா உங்ககிட்ட இருக்கட்டும்” என்றார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. “தேங்கஸ் சார். தேங்க்ஸ் சார்” என்றபடி வாங்கிக்கொண்டேன்.

ஏறத்தாழ ஓராண்டுக் காலம் எங்கள் சந்திப்புகள் தொடர்ந்தன. அவருடன் உரையாடிய கணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியான கணங்களே. கொரானா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி எங்கும் செல்லமுடியாத சூழல் உருவானதும் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தொடர்புகள் திடீரென நின்றுவிட்டன. அடுத்த தெருவில்தானே இருக்கிறார் என்ற எண்ணத்தில் அவருடைய தொலைபேசி எண்ணை நான் பெற்றுக்கொள்ளாமலேயே விட்டுவிட்டேன். திடீரென தொடர்புக்கான வழியே இல்லாமல் போய்விட்டது.

என்னைவிட ஏரிக்கரைச் சிறுவர்கள் அவரைப் பார்க்கமுடியாததை நினைத்து துயரப்பட்டிருப்பார்கள். அவருடைய புதுமைமான மேஜிக் முயற்சிகள் இல்லாமல் அவர்களுடைய பொழுதுகள் இருளடைந்ததாக மாறியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டுக்குள் அடைபட்டிருந்தாலும் அவருடைய கைகளும் மனமும் இயங்கியபடிதான் இருக்கும் என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. சூழல்விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு அவரைச் சந்திக்கச் செல்லும் நாளில் அவர் அடுக்கப்போகும் புதுமைகள் எப்படி இருக்கும் என்னும் கற்பனையில் மூழ்கி பொழுதுகளை இனிதாக்கிக்கொண்டேன். அவருடைய ஞாபகம் வரும்போதெல்லாம் அவர் அளித்த நான்கு முட்டைகள் ஓவியத்தை எடுத்துப் பார்த்துக்கொள்வேன். என் நினைவாக அவருக்கு நான் ஒன்றுமே தரவில்லையே என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகுதான் தயக்கங்களைக் களைந்து வீட்டைவிட்டு  வெளியே செல்லத் தொடங்கினேன். முதலில் ஏரிக்கரை நடைப்பயிற்சிக்குத்தான் சென்றேன். அங்கு வழக்கமாக அவரைச் சந்திக்கும் பெஞ்ச்சில் அவரைக் காணமுடியவில்லை. சிறுவர் கூட்டத்தையும் பார்க்கமுடியவில்லை என்பது இன்னும் வருத்தமாக இருந்தது. வயது காரணமாக அவர் வருவதற்குக் காலமெடுக்குமோ என்றெல்லாம் நினைத்து எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தேன். ஆயினும் அந்தக் கட்டுப்பாட்டை அதிக நாட்கள் கடைபிடிக்க முடியவில்லை.

ஒருநாள் என்னை அறியாமலேயே அவருடைய வீட்டுப் பக்கமாக சென்றுவிட்டேன். அவர் வீடு சாத்தியிருந்தது. ஒன்றும் புரியவில்லை. இரண்டு மூன்று முறை அப்படியும் இப்படியுமாக நடந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாளும் அதே நேரத்தில் சென்றேன். அதற்கடுத்த நாளும் சென்றேன். யாரும் தென்படவில்லை. ஆயினும் முயற்சியைக் கைவிடாமல் ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டே இருந்தேன்.

ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு என் முயற்சிக்குப் பயன் கிடைத்தது. வாசல் பக்கமாக இரண்டு சக்கர வாகனமொன்று நின்றிருந்தது. வீட்டுக்கதவு திறந்திருந்தது. அக்காட்சி எனக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. சில கணங்களுக்குப் பிறகு கதவைத் திறந்துகொண்டு வந்த முகக்கவசமணிந்த இளைஞனொருவன் வந்த வேகத்தில் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு பறந்தான். அவனுக்குப் பின்னாலேயே கதவருகில் பெரியவரின் மனைவி வந்து நின்றதைப் பார்த்தேன். அடுத்த நொடியே வேகமாக நடைபோட்டு அந்தக் கதவுக்கு அருகில் சென்று ”என்னங்க மேடம், நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டேன். என் குரலைக் கேட்டு ஒரு கணம் தயங்கி நின்ற அவர் என்னை உற்றுப் பார்த்தார். நான் அவசரமாக என் முகக்கவசத்தை எடுத்துவிட்டு அவருக்கு என் முழு முகத்தையும் காட்டினேன். அடுத்த கணமே அவருக்கு என் அடையாளம் புரிந்துவிட்டது. “வாங்க, வாங்க. உள்ள வாங்க. ஏன் அங்கயே நிக்கறீங்க? எப்படி இருக்கீங்க?” என்று கேட்டார். அதற்குப் பிறகே நிம்மதியுணர்வோடு நான் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.

கூடத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் பெரியவர். அவருக்கு அருகில் கையடக்கமாக செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள் இருந்தன. சில மரச்சிற்பங்கள். சில மெழுகானால சிற்பங்கள். எல்லாமே புன்னகை தவழும் புத்தர் சிற்பங்கள். இன்னொரு தட்டில் விதவிதமான கத்திகளும் பிளேடுகளும் ஊசிகளும் இரும்புக்குச்சிகளும் இருந்தன.

“இப்ப இதான் வேலை. இது முடிஞ்சா பெயிண்டிங் பண்ண போயிடுவாரு” என்றபடி அவர் மனைவி அவருக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். நான் பெரியவரின் அருகில் சென்று “வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?” என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்கினேன்.

பெரியவர் மெதுவாக தலையை உயர்த்தி என்னைப் பார்த்து புன்னகைத்தார். பிறகு “யாரு?” என்று கேட்டார். ஒரு கணம் எனக்குள் இடி இறங்கியதுபோல இருந்தது. முதலில் நான் என்னைப்பற்றி அவருக்கு எடுத்துச் சொல்ல முயற்சி செய்தேன். அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. என் முகம் அவர் நினைவிலிருந்து அழிந்துவிட்டது என்பதை அறிய பெரிதும் சங்கடமாக இருந்தது. அவர் மனைவியும் என்னைப்பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். அதுவும் பயனளிக்கவில்லை. ”திடீர்னு இது ஒரு புது பிரச்சினை. யார பார்த்தாலும் தெரியலை தெரியலைன்னு சொல்றாரு. இப்ப வந்துட்டு போனானே, அவன் என் பெரிய மகளோட பையன். அவன்தான் நாலு மாசமா சகலத்தையும் வாங்கி வந்து போட்டுட்டு போறான். அவனயே யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டாரு. நீங்க தயவுசெஞ்சி தப்பா எடுத்துக்காதீங்க” என்று சங்கடத்தோடு சொன்னார்.

“பரவாயில்லைங்க. இருக்கட்டும். சார நேருக்கு நேரா பார்த்ததே ரொம்ப சந்தோஷம். நான் இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கறேன்” என்றபடி எழுந்தேன். அப்போது பெரியவர் என்னைப் பார்த்து கையசைத்து அருகில் வருமாறு சொன்னார். அதே புன்னகை. அதே மலர்ச்சி. நான் தயக்கத்தோடு சென்று நின்றேன். “எல்லாமே மறந்து போயிட்டுது. வெளுத்து மடிச்சி வச்ச துணிமாதிரி இருக்குது மூளை. அதானால ஒரு பிரச்சினையும் இல்லை. பழைய ஞாபகம் போனா என்ன? நாம இப்ப புதுசா ப்ரெண்ட்ஸாய்டுவோம். சரியா?” என்று கையை நீட்டினார். எனக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. இப்படி ஒரு கோணத்தோடு நட்புக்கு கைநீட்ட இவருக்கு எப்படித் தோன்றியது என்று மலைப்போடு நினைத்தபடி அவர் கைவிரல்களை நான் ஆவலோடு பற்றினேன்.

(கிழக்கு டுடே - இணைய இதழ் - 14.02.2023)