‘மனித வாழ்க்கையே என் படைப்புகளின் ஊற்றுவாய்’ என்றும் ‘என் படைப்புகள் எல்லாவற்றிலும் நானே நிரம்பி வழ்கிறேன்’ என்றும் அறிவித்துக்கொண்டவர் எம்.வி.வெங்கட்ராம். அவருடைய நூற்றாண்டு நிறைவெய்தியிருக்கும் தருணத்தின் நினைவாக சாகித்ய அகாதெமி தன் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல்வரிசையில் அவரைப்பற்றிய அறிமுகநூலை வெளியிட்டிருக்கிறது.
வயதுவேறுபாட்டைப் பொருட்படுத்தாமல்
எம்.வி.வெங்கட்ராம் அவர்களுடன் இருபதாண்டுகளுக்கும் மேலாக நெருக்கமுடன் பழகிய கவிஞர்
ரவிசுப்பிரமணியன் அந்நூலை எழுதியிருக்கிறார். எம்.வி.வி.யுடன் ரவிசுப்பிரமணியன் கொண்டிருந்த
நட்பையும் மதிப்பையும் நூலின் ஒவ்வொரு பகுதியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறது.
இருபத்தெட்டு பக்க அளவில் ரவிசுப்பிரமணியன்
எழுதியிருக்கும் எம்.வி.வி.யின் வாழ்க்கைக்குறிப்புகள் இந்நூலின் மிகமுக்கியமான பகுதியாகும்.
எம்.வி.வி.யின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான
வெவ்வேறு காலகட்டங்களை வேகவேகமாக நகர்கிற ஆவணப்படத்தின் காட்சித்தொகுப்பைப்போல இணைத்து
அப்பகுதியை உருவாக்கியிருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.
எம்.வி.வி.யின் சொந்தப் பெற்றோர், தத்தெடுத்துக்கொண்ட
பெற்றோர் விவரங்கள். கல்வி, எழுத்தார்வம், திருமணம், ஏற்றம், இறக்கம், ஏமாற்றம், பத்திரிகை
வெளியீடு, அவர் சந்தித்த நம்பிக்கைத் துரோகங்கள், நட்பின் துணை, வெற்றிகள், தோல்விகள்,
நோய்கள், ஆன்மிக அனுபவங்கள், படைப்பனுபவங்கள் என ஒன்றுவிடாமல் தொட்டுத்தொட்டு தாவிச்
சென்று இறுதியில் மரணத்தில் முடிவடைகிறது.
எம்.வி.வி.யுடன் நெருங்கிப் பழகியதன்
விளைவாக அவர் வழியாகவே தெரிந்துகொண்ட விவரங்களும் நேரடிப்பழக்கத்தின் விளைவாகத் தெரிந்துகொண்ட
விவரங்களும் ரவிசுப்பிரமணியனுக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. அவ்விருவரும் உரையாடிக்கொள்ளும்
விவரணைகளைப் படிக்கும்போது நாற்பதாண்டு வயது வித்தியாசத்தை ஒரு விஷயமாகவே பொருட்படுத்தாமல்
பழகிய தூய அன்பையே பார்க்கமுடிகிறது.
’இரவு பத்தரையானாலும் பரவாயில்லை, வீட்டுக்கு
வந்துவிட்டுச் செல்’ என ரவிசுப்பிரமணியன் பாதுகாத்திருக்கும் ஒரு கடிதத்தில் எம்.வி.வி.
எழுதியிருக்கும் ஒரே ஒரு வரி போதும், எம்.வி.வி.க்கும் ரவிசுப்பிரமணியனுக்கும் இடையில்
உள்ள நட்பைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல எம்.வி.வி.யின் துணைவியார் எம்.வி.வி.பற்றி ரவிசுப்பிரமணியனிடம் உரையாடும்
ஒரு தருணத்தில் ‘உன் அப்பா’ என்று பொருள்படும்படி ‘ஒப்பாரு’ என்று தன்னிச்சையாகப் பயன்படுத்துகிற
சொல்லும் ஒரு சாட்சி. ரவிசுப்பிரமணியனின் சொற்கள் வழியாக உருவாகியிருக்கும் சொல்லோவியம்
வழியாக எம்.வி.வி.யைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது.
பதினாறு வயதில் எம்.வி.வி. தன் முதல்
சிறுகதையை எழுதினார். அப்போது அவர் பள்ளிக்கல்விக்கு
அப்பால் தனிப்பயிற்சி வழியாக ஓர் இந்தியாசிரியரிடம் இந்தி மொழியைக் கற்றுக்கொண்டிருந்தார்.
அந்த ஆசிரியர் இந்தி மொழியில் வெளிவரும் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து மணிக்கொடிக்கு
அனுப்பிவைப்பவர். அவர் வீட்டில் மணிக்கொடி இதழ்களைப் பார்த்த எம்.வி.வி. தன் கதை அப்பத்திரிகையில்
வெளிவருமா என்று கேட்டுவிட்டு அந்த ஆசிரியரிடம் கதையைக் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
தன்னைச் சந்திக்க வரும் பிச்சமூர்த்தியிடமும் கு.ப.ரா.விடமும் காட்டி கருத்து கேட்டார்
இந்தி ஆசிரியர். பிச்சமூர்த்திக்கு அந்தச் சிறுகதை மிகவும் பிடித்துவிட்டது. அடுத்த
மணிக்கொடி இதழில் அந்தச் சிறுகதை பிரசுரமாக ஏற்பாடு செய்துவிட்டார். அப்புள்ளியிலிருந்து
எம்.வி.வி.யின் எழுத்துப்பயணம் தொடங்கிவிட்டது.
”எழுதறதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று
கேட்கக்கூடியவராகத்தான் இருந்திருக்கிறார் எம்.வி.வி.யின் மனைவி ருக்மணியம்மாள். இந்த
ஒரு வாக்கியத்தை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து மதிப்பிடுகிறவர்களுக்கு இந்தச் சொல்
சங்கடமளிக்கக்கூடும். ஆனால் அரை வீசை தங்கத்தோடும் ஒரு வீசை வெள்ளிச்சாமான்களோடும்
ஒரு மாட்டுவண்டி நிறைய பித்தளைப்பாத்திரங்களோடும் புகுந்த வீட்டுக்கு வந்த ஒரு பெண்மணி
காலப்போக்கில் அனைத்தையும் குடும்பநலனுக்காக இழந்து, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வேலை
செய்து ஒரு கிலோ பாவை இழை பிரித்து உருட்டி ஒன்பது ரூபாய் கூலி வாங்கி செலவு செய்யும்
அளவுக்கு இறங்கிவிட்ட நிலையில் இந்தச் சொற்களைத் தவிர வேறெந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கமுடியும்
என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ருக்மணியம்மாள் மனம்நொந்து சொல்கிறாரே
தவிர யாரையும் எங்கும் நிந்தித்துப் பேசியதில்லை என்றும் ரவிசுப்பிரமணியன் எழுதிச்
செல்வது, கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம். கண்பார்வை குறைந்து கைநடுக்கமும் அதிகரித்து
அவஸ்தைப்பட்ட இறுதி நாட்களில் எம்.வி.வி.யின் வழக்கமான முகப்பொலிவுக்கு குறைவரக்கூடாது
என்பதற்காக தினமும் முகச்சவரம் செய்துவிடும் அளவுக்கு அவர்களிருவரும் நெருக்கமாகவே
இருந்திருக்கிறார்கள்.
ஒரு தருணத்தில் எம்.வி.வி.க்கு சிதம்பரம்
ஜெயராமன் குரலில் கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி பாடலைப் பாடிக் காட்டுகிறார். பாட்டின்
போக்கில் துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே என்று
பாடுகிறார். அதுவரை அமைதியாக அதைக் கேட்டபடி அங்கிருந்த ருக்மணியம்மாள் “அந்த வரிய
பாடின பாரு, அது அப்படியே அவருக்குத்தான்டா பொருந்தும்” என்று சொல்கிறார். அவர் பட்ட
பாடுதான் அவரை அப்படி பேசவைத்திருக்கிறது. அவருடைய இல்லற வாழ்க்கையின் ஒரு துண்டுக்காட்சி
இது. அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை இதைவைத்து ஊகித்துக்கொள்ள முடிகிறது.
எம்.வி.வி.யின் படைப்புலகத்தில் இடம்பெற்றிருக்கும்
மனிதர்களைப்பற்றிய விரிவானதொரு ஆய்வுரையை தனித்தனி தலைப்புகள் கீழே நிகழ்த்தியிருக்கிறார்
ரவிசுப்பிரமணியன். எவ்விதமான கோட்பாட்டையும் தத்துவத்தையும் துணைக்கு வைத்துக்கொள்ளாமல்
தன் ரசனை ஒன்றையே முழு அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தின் பிரகாசத்தையும் இருளையும்
மதிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
இதுவரை வெளிவராத எம்.வி.வி.யின் முற்றுப்பெறாத நாவலிலிருந்து ஒரு பகுதி, வெளிவராத இரு நேர்காணல்கள்,
எம்.வி.வி.பற்றி மூன்று வெவ்வேறு நாவலாசிரியர்கள் உரைத்த கருத்துகள் என தனித்தனி பகுதிகளாக
இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
கதைக்கான கருவைக் கண்டடைவது பற்றிய
ஒரு கேள்விக்கு எம்.வி.வி. அமைதியாக “உனக்கு வேற கண்ணு இருந்தா அது தானா வந்து விழும்”
என்று உரைத்திருக்கும் பதில் மிகமுக்கியமானது. அந்த அகக்கண்ணே அவர் மிகச்சிறந்த படைப்பாளியாக
நிலைத்திருக்க வைத்தது என்பதில் ஐயமில்லை. யயாதி என்னும் மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாள்
என்கிற ஒரேஒரு வரி தகவலை மட்டும் வைத்துக்கொண்டு நித்யகன்னி என்னும் மிகச்சிறந்த நாவலை
எழுத எம்.வி.வி.யால் மட்டுமே முடியும். அவருடைய அகக்கண்ணின் ஆற்றல் எத்தகையது என்பதை
உணர அந்த நாவல் ஓர் எடுத்துக்காட்டு.
இழப்பைச் சந்திக்க நேரும் என தெரிந்திருந்தும்
முதலீடு செய்து தேனீ என்னும் சிறுபத்திரிகையை எம்.வி.வி. நடத்தினார். அது அவருடைய ஆர்வத்தின் அடையாளம். ஒரே ஒரு இதழின்
உள்ளடக்க விவரம் இந்த நூலில் அடங்கியுள்ளது. அந்தப் படைப்புகளின் வகைமை வழியாக எம்.வி.வி.
எத்தகைய கனவுடன் இயங்கியிருப்பார் என ஊகிக்கமுடிகிறது.
128 பக்கங்கள் கொண்ட நூல் என்றபோதும்,
எம்.வி.வி. என்னும் எழுத்தாளரின் பங்களிப்பை இன்றைய இளைய தலைமுறை புரிந்துகொள்ளும்
வண்ணம் சுவாரசியமாகவும் செறிவாகவும் எழுதியிருக்கும் ரவிசுப்பிரமணியனுக்கு தமிழுலகம்
கடமைப்பட்டிருக்கிறது.
(எம்.வி.வெங்கட்ராம்.
இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல். ரவிசுப்பிரமணியன். சாகித்திய அகாதெமி, குணா
வளாகம், 443, இரண்டாம் தளம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18. விலை. ரூ.50)
(இந்து
தமிழ் திசை நாளிதழ் – 25.02.2023)