Home

Sunday, 5 February 2023

அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும்

  

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

 

இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர் மின்னற்பொழுதுகள். அந்தத் தலைப்பை வாசித்ததுமே மனத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் எழுந்தன. தோணி, புறக்கண்ணால் பார்க்கமுடிகிற ஓர் உருவம். தீவு, அகக்கண்ணுக்கு மட்டுமே தென்படும் உருவம். பார்க்கும் மனவார்ப்பு உள்ளவருக்கே தென்படக்கூடிய அபூர்வமான உருவம் அது. அப்படிப் பார்க்கக்கூடியவர்களுக்கு அக்காட்சி மின்னலடிக்கும் நேரத்தில் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறகு அந்தக் காட்சியை நினைவிலிருந்து மீட்டிமீட்டித்தான் பார்க்கவேண்டும்.

விட்டல்ராவ் தன் கட்டுரைத்தொகுதியில் தான் சந்தித்த பதினெட்டு நண்பர்களைப்பற்றிய நினைவலைகளைப் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலானோர் எழுத்தாளர்கள். ஒருவர் ஓவியர். ஒருவர் வாசகர். ஒருவர் பால்யகாலத்து நண்பர். ஒவ்வொரு நினைவலைத்தொகுப்பும்  தனித்ததொரு புகைப்படத்தொகுப்பைப்போல உள்ளது. அவர் அளிக்கும் விவரங்களின் ஊடே மின்னல் போல சிற்சில தருணங்கள் கடந்துபோவதை உணரமுடிகிறது. தோணி தீவாகத் தெரிவதுபோல, அத்தருணங்களில் எழுதாத சிறுகதைகளின் வடிவங்களைப் பார்க்கமுடிகிறது. மின்னல் வெளிச்சத்தில் தெரியும் மரத்தைப்போல, மனமொன்றிய வாசிப்பின் வெளிச்சத்தில் அவ்வடிவங்கள் பளிச்சிடுகின்றன. தான் பெற்ற அபூர்வமான நண்பர்களோடு செலவழித்த மின்னற்பொழுதுகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் விட்டல்ராவ் எழுதியிருக்கும் இக்கட்டுரைகளில் புதையல்களைப்போல அத்தருணங்கள் மறைந்திருக்கின்றன.

அசோகமித்திரனைப்பற்றிய நினைவுத்தொகுப்பில் அவரும் தானும்  இணைந்து மிதிவண்டியில் பயணம் செய்து பார்த்த அமெரிக்க இயக்குநர்களின் திரைப்படங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார் விட்டல்ராவ். அப்போது பழைய இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை மெல்ல முணுமுணுத்தபடி மிதிவண்டியை ஓட்டும் அசோகமித்திரனைச் சித்தரிக்கிறார். அபூர்வமான ஒரு காட்சிச் சித்திரம் அது. ஒருநாள் அவருடைய வளர்ப்புநாயை நகராட்சியைச் சேர்ந்த குழுவினர் பிடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். நாய்களை வளர்ப்பதற்கு கட்டாயமாக உரிமம் வைத்திருக்க வேண்டிய காலம் அது. தனியாளாக அவர்களிடம் பேசி அவரால் நாயை மீட்க முடியவில்லை. நண்பரான விட்டல்ராவை தொலைபேசியில் அழைத்து நாயைப் பிடித்துச் சென்றுவிட்ட செய்தியைத் தெரிவிக்கிறார்.  நாயை எப்படியாவது காப்பாற்றி அழைத்து வரவேண்டுமே என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்.

அக்கணத்தில் விட்டல்ராவுக்கு தன் நண்பரும் எழுத்தாளருமான மா.அரங்கநாதன் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவது நினைவுக்கு வருகிறது. அவருக்கு தகவலைத் தெரியப்படுத்தி உதவி கேட்கிறார்கள். அவர் அசோகமித்திரனை அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்கிறார். வந்தவுடன் அரங்கநாதனே அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் செல்கிறார். நூற்றுக்கணக்கான நாய்கள் அடைபட்டிருக்கும் அந்தச் சூழலில் அசோகமித்திரனால் தன் நாயைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எல்லா நாய்களும் ஒரே மாதிரி இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. கண்டுபிடித்துக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தும் நாயைக் காப்பாற்ற வழியில்லாமல் போய்விடுகிறது. அசோகமித்திரனின் கதையுலகம் ஏராளமான கையறு தருணங்களால் நிறைந்த ஒன்று. அவரைப்பற்றிய விட்டல்ராவின் நினைவுப்பதிவிலும் அப்படிப்பட்ட ஒரு தருணம் இடம்பெற்றிருப்பது இயல்பான ஒன்றாகவே தோன்றுகிறது.

பத்திரிகையாளர் சாவியைப்பற்றிய நினைவலைக்குறிப்பில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும் அபூர்வமான தருணமொன்றின் சித்திரத்தை வழங்கியிருக்கிறார் விட்டல்ராவ். ஒரு சமயத்தில் ஆனந்த விகடன் ஒரு நாவல் போட்டியை அறிவிக்கிறது. நடுவர் குழுவுக்கு அனுப்பும் முன்பாக கையெழுத்துப் பிரதிகளைப் படித்துப் பார்த்து தகுதியடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, அங்கே பணிபுரியும் மணியனுக்கு அளிக்கப்படுகிறது.  சாவி அதே அலுவலகத்தில் பணிபுரிகிறார். விருதுக்குரிய பிரதிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்படாத பிரதிகளை அனுப்பும் பணி தொடங்குகிறது. திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் போதிய அஞ்சல் தலைகளை இணைத்து அனுப்பியவர்களுக்கு மட்டுமே  பிரதிகள் அனுப்பப்படுகின்றன. அஞ்சல் தலைகளை இணைக்காதவர்களின் பிரதிகளை குப்பைக்கூடையில் வீசிவிடுகிறார் மணியன்.

ஓர் ஆர்வத்தின் காரணமாக அப்பிரதிகளைச் சேகரித்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கிறார் சாவி. அவற்றில் நடைபாதை என்னும் நாவல் பிரதி அவருடைய மனத்தைக் கவர்கிறது. அது வெற்றி பெற்றிருக்க வேண்டிய படைப்பு. அந்த எழுத்தாளரின் திறமையின் மீது அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அவர் வளர வேண்டிய ஓர் எழுத்தாளர் என்னும் எண்ணம் எழுகிறது. உடனே முதன்மை ஆசிரியரான வாசனை நேரில் சந்தித்து செய்தியைச் சொல்லி அந்தப் பிரதியையும் கொடுக்கிறார். ஒரே இரவில் அதைப் படித்து முடித்த வாசனும் அதன் சிறப்பைப் புரிந்துகொள்கிறார். ஆனால் நடுவர் தீர்ப்பில் குறுக்கிட அவருக்கு விருப்பமில்லை. அதே சமயத்தில் அதை வெளியிடும் வாய்ப்பைத் தவறவிடவும் விருப்பமில்லை. அதனால் அப்பிரதியை தனியொரு தொடர்கதையாக விகடனிலேயே வெளியிட ஏற்பாடு செய்யும்படி சொல்கிறார்.

அந்த நாவலை எழுதிய இதயன் உண்மையிலேயே பம்பாய் நகரத்தில் ஒன்பது ஆண்டு காலமாக நடைபாதையில் ஊதுவத்தி முதலான பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர். அந்த அனுபவங்களின் தொகுப்பைத்தான் அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அவரை உடனே அலுவலகத்துக்கு வரவழைக்கும்படி சொல்கிறார் வாசன். அலுவலகத்துக்கு வரும் இதயனுக்கு விகடனிலேயே வேலையும் கிடைக்கிறது. பம்பாயை விட்டு சொந்த ஊரான வேலூருக்கு வந்து பிழைக்க வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த இதயனின் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையான தருணமாக அமைகிறது.

ஒரு படைப்புக்கான அகத்தூண்டுதல் ஒரு படைப்பாளிக்கு எங்கிருந்து கிடைக்கிறது, யார் வழியாகக் கிடைக்கிறது என்பது, அது நிகழும் கணம் வரை அந்தப் படைப்பாளியே அறிந்துகொள்ள முடியாத ஒரு செய்தி. அந்த விசித்திரத்தன்மையே அந்தக் கணத்தை நோக்கிய செய்தியை மனம் ஆர்வத்தோடு கவனிக்கிறது. கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி பற்றிய விட்டல்ராவின் கட்டுரையில் அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான தருணத்தைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் ஒரு விழாவில் வெளியிடப்படுகிறது. அதைப்பற்றி பலர் மேடையில் பேசுகிறார்கள். அந்த விழாவுக்கு மாசிலாமணி வந்திருக்கிறார்.  பல எழுத்தாளர்களும் வாசகர்களும் வந்திருக்கிறார்கள். விமர்சகரான சிட்டி தன்னுடன் பார்வையற்ற நண்பரொருவரோடு வந்திருக்கிறார். அந்த நண்பர் சுதந்திரப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். சற்றே வயதானவர். விழா முடிந்ததும் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுகிறார் விட்டல்ராவ். அப்போது விட்டல்ராவின் குடும்பப்பின்னணி விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் அவர். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களுடன் தனக்கு இருந்த அறிமுகத்தையும் அவர்களுடைய பங்களிப்பையும் சொல்லியிருக்கிறார் அவர்.

அச்செய்திகளால் மனம் தூண்டப்பட்ட விட்டல்ராவ், அந்தத் தகவல்களின் பின்னணியில் ஒரு நாவலை தன்னால் எழுதமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார். அக்கணமே, அந்த நாவலின் ஒரு முன்வடிவம் அவர் மனத்தில் கருக்கொண்டு விடுகிறது. நண்பர் மாசலாமணியிடம் அக்கதையின் கோட்டுச்சித்திரத்தை விவரிக்கிறார். அக்கதையின் மையத்தால் ஈர்க்கப்பட்ட மாசிலாமணியும் நாவல் எழுதும் வேலையை உடனே தொடங்கும்படி தூண்டுகிறார். மன எழுச்சி கொண்ட விட்டல்ராவ் பார்வையற்ற நண்பர் சொன்ன தகவல்களை தன் தாயிடம் பகிர்ந்துகொள்கிறார். அதன் தொடர்ச்சியாகவும் அவர் தாயாரும் தனக்குத் தெரிந்த பூர்வீகத் தகவல்கள் அனைத்தையும் விவரிக்கிறார். விட்டல்ராவின் மனத்தில் மெல்ல மெல்ல அந்த நாவலின் வடிவம் விரிவடைந்தபடி செல்கிறது. சில மாதங்களின் கனவுக்கும் உழைப்புக்கும் பிறகு அவர் நதிமூலம் நாவலை எழுதி முடிக்கிறார்.

கோவையில் அருவி என்னும் அமைப்பை நடத்தியவர் சீனுவாசன். தொழில்முறையாக வழக்கறிஞர் என்றபோதும் கலை இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார் விட்டல்ராவ். கடலோடி நரசய்யாவும் அந்நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிகிறது. அவசர வேலை காரணமாக நரசய்யா உடனடியாக கிளம்பிவிட, விட்டல்ராவை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் சீனிவாசன். தன் வீட்டையொட்டி சுற்றுச்சுவரிடப்பட்ட ஒரு மைதானத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தை ஒரு பூங்காவாக மாற்றவிருக்கும் திட்டத்தைப்பற்றிச் சொல்கிறார். அங்கே புதிய வகை செடிகளையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கவிருப்பதாகவும் சொல்கிறார். பல மரங்கள் நெடுநெடுவென வளர்ந்து நிற்க, ஏராளமான பறவைகள் அங்கே வந்து செல்வதைப் பார்க்கவேண்டுமென்றும் அவை போடும் சத்தக்களைக் கேட்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் தன் கனவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அறையில் அமர்ந்து தன் குடும்பக்கதைகளை விரிவாகச் சொல்கிறார். விட்டல்ராவின் குடும்பக்கதையையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். மாலையில் தேநீர் வேண்டுமா காப்பி வேண்டுமா என்று கேட்கிறார். பிறகு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அலுவலக வேலையொன்றைப் பார்ப்பதற்காகச் செல்கிறார். பத்து நிமிட இடைவெளியில் அவருடைய அறையிலிருந்து யாரோ அலறி அழும் சத்தம் கேட்கிறது. ஓடிச் சென்று பார்க்கும்போது சீனிவாசன் படுக்கையிலிருந்து கீழே சரிந்து விழுகிறார். இதய இயக்கம் நின்று அப்படியே உயிர் பிரிந்துவிடுகிறது. இப்படி மகிழ்ச்சியும் மரணமும் அடுத்தடுத்து நிகழ்ந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது.

சித்ரதுர்கா கோட்டையைப் பார்ப்பதற்காகச் சென்ற அனுபவத்தை விட்டல்ராவ் விவரித்திருக்கும் விதமே ஒரு சிறுகதையைப் படிப்பதுபோல இருக்கிறது. அங்கே செல்வதற்கு முன் அக்கோட்டையைப்பற்றி அவருக்கு அதிக அளவில் எதுவும் தெரியாது. அந்த ஊரிலிருக்கும் வெங்கணாச்சார் என்னும் பேராசிரியரைச் சந்தித்தால் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்னும் தகவலோடு அந்த ஊருக்குச் செல்கிறார். ஆனால் அவரைப்பற்றி எங்கே விசாரிப்பது யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமலேயே கோட்டைக்குச் சென்றுவிடுகிறார்.

கோட்டை மதிற்சுவரையொட்டி நுழைவுச்சீட்டு கொடுப்பவருக்கான அறை இருக்கிறது. அதற்கு அருகிலேயே ’இங்கே யாரும் புகைபிடிக்கக்கூடாது, மீறினால் இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எழுதிவைக்கப்பட்ட  அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தப் பலகைக்கு அருகிலேயே நின்றுகொண்டு ஒருவர் அவசரமாக புகைபிடித்துக்கொண்டிருக்கிறார். பிறகு பாதி எரிந்த சிகரெட் துண்டை அங்கேயே வீசி காலால் நசுக்கிறார். அந்தக் காட்சிகளின் முரண்களால் ஈர்க்கப்பட்ட விட்டல்ராவ் தன் கேமிராவில் அவ்விரண்டு காட்சிகளையும் படமாகப் பிடித்துவிடுகிறார்.

அங்கே புகை பிடித்தவர் வெளியாள் அல்ல, அங்கேயே வேலை செய்பவர் என்பது அவர் நுழைவுச்சீட்டு கொடுக்கும் அறைக்குள் நுழையும்போதுதான் புரிகிறது. நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு படம்பிடித்த விட்டல்ராவிடம் ”நீங்கள் பத்திரிகைக்காரரா?” என்று விசாரிக்கிறார். அவர் சற்றே பதற்றத்தில் மூழ்கிவிடுகிறார். சிறிது நேரத்தில் வேறொருவரும் வந்து அவரிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். சுற்றிப் பார்க்கத் தொடங்கிய பிறகு மற்றொருவரும் அவரை நிறுத்தி அதே கேள்வியைக் கேட்கிறார். பிறகு தன் மேலதிகாரி சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்து, விட்டல்ராவை அதிகாரியுடைய அறைக்கு அழைத்துச் செல்கிறார். அவரும் நீங்கள் பத்திரிகைக்காரரா என்று அதே கேள்வியைக் கேட்கிறார். தான் எழுத்தாளர் என்றும் அக்கோட்டையைப்பற்றி எழுதுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் விட்டல்ராவ்.

அதற்குப் பிறகே அங்கே அவர்களுடைய பதற்றம் குறைந்து சற்றே நிம்மதி நிலவத் தொடங்குகிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, கோட்டையைப்பற்றிய பிரசுரங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று விசாரிக்கிறார் விட்டல்ராவ். “பிரசுரங்கள் வழியாகத் தெரிந்துகொள்ள இயலாத தகவல்களைச் சொல்லும் அறிஞரொருவர் இங்கே இருக்கிறார். அவர் பெயர் வெங்கணாச்சார். அவரை நீங்கள் சந்தித்து உரையாடலாம்” என்று சொல்கிறார் அதிகாரி. அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். எந்த வெங்கணாச்சாரை எப்படிச் சந்திக்கப்போகிறோம் என நினைத்து குழப்பத்துடன் வந்தாரோ, அதே வெங்கணாச்சாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிகரெட் துண்டு வழியாகக் கிடைத்துவிடுகிறது.

இத்தொகுதியில் முகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. உயர்நிலைப்பள்ளியில் தன்னோடு படித்த ஒரு நண்பரை சேலத்துக்குச் சென்று சந்தித்த அனுபவத்தை அதில் எழுதியிருக்கிறார் விட்டல்ராவ். வேறொரு நண்பர் வழியாக அவருடைய தொலைபேசி எண் கிடைக்கிறது. இரண்டுமூன்று முறை உரையாடுகிறார்கள். அந்த நண்பர் விட்டல்ராவை சேலத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறார். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க சேலத்துக்குப் புறப்படுகிறார். தன் பயணத்தைப்பற்றி அவரிடம் தெரிவித்துவிட்டு பள்ளிப்பருவத்தில் சுற்றியலைந்த இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றி வேடிக்கை பார்க்கவேண்டும் என்னும் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கும்போதுதான் அவர் தனக்குக் கண்பார்வை போய்விட்டது என்னும் தகவலைப் பகிர்ந்துகொள்கிறார். அவர் மேற்கொண்ட ஏராளமான மருத்துவ முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சேலம் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வண்ண உடைகளை அணிந்துகொண்டு நிற்பதாகவும் அந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு தன்னைக் கண்டுபிடித்துவிடும்படியும் சொல்கிறார். அப்படித்தான் அவர்கள் இருவரும் அன்று சந்தித்துக்கொள்கிறார்கள்.

அந்த நண்பர் வேறொரு அதிசய மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார். காந்தி சிலைக்கு அருகில் தினந்தோறும் வந்து நிற்கிறார் அந்த மனிதர். ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணிக்கு அங்கே வந்து நிற்கிறார் அவர். மது அருந்தாதீர்கள், மது குடும்பத்தையும் நாட்டையும் அழிக்கும் என பல விதமான வாசகங்களை எழுதிய அட்டைகளை அனைவரும் பார்க்கும் வகையில் கையிலேந்தி நிற்கிறார். அவர் பெயர் ஃப்ராங்க்ளின் ஆஸாத் காந்தி. கிறித்தவம், இஸ்லாம், இந்து என மூன்று மத அடையாளங்களையும் இணைக்கும் விதமாக தன் பெயரை அப்படி வைத்திருக்கிறார். அந்த மனிதரை விட்டல்ராவுக்கு அறிமுகப்படுத்துகிறார் நண்பர். அவரோடு கைகுலுக்கி உரையாடுகிறார் விட்டல்ராவ். அவர் முகம் எங்கோ பார்த்த முகமாகத் தோன்றுகிறது ஆனால் எங்கு எப்போது பார்த்தோம் என்பது அவருக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. . பழைய நினைவுகளைத் துழாவிக்கொண்டே உரையாடலையும் தொடர்கிறார் விட்டல்ராவ். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு இருவரும் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஏதேதோ உரையாடல்களில் பொழுதுகளைக் கழித்தாலும் அவர் மனம் அந்த மனிதரைப்பற்றிய யோசனைகளிலேயே மூழ்கியிருக்கிறது. விடாமுயற்சியின் விளைவாக, ஒரு கட்டத்தில் அந்த முகத்தின் ஊற்றுக்கண்ணை அவர் கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்கு பதினாலு வயசிருக்கும்போது அவருடைய அப்பா உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக இருந்தார். வீட்டுக்கு அருகிலேயே இருந்த ஒரு டாக்டர் வீட்டுக்குச் சென்று அப்பாவின் நிலையை எடுத்துச் சொல்லி அவரைப் பார்க்க வருமாறு கெஞ்சிக் கேட்டார். அவரும் மனமிரங்கி அச்சிறுவனோடு வந்து அப்பாவின் உடல்நிலையை ஆய்வு செய்தார். பரிசோதித்துவிட்டு உடனடியாக அவரை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்வதுதான் நல்லது என்று சொன்னார். வீட்டிலிருப்பவர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்து நிலையைப் புரிந்துகொண்டு தன் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். உடனே அரசு மருத்துவமனைக்கு தன் அப்பாவை அழைத்துச் சென்றார் விட்டல்ராவ். ஆனால் இரு தினங்களுக்குப் பிறகு அங்கிருந்து அழைத்துச் சென்றுவிடும்படி அங்கிருக்கும் மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். நிலைமை கைமீறிப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார்.

அடுத்தநாள் காலையில் அவர் உடல் அசைவற்றுப் போய்விடுகிறது. சிறுவனான விட்டல்ராவ் அதே டாக்டரின் வீட்டுக்குச் சென்று தகவலைச் சொல்லி கையோடு அழைத்து வருகிறார். அப்பாவின் நாடியைப் பரிசோதித்துவிட்டு  அவர் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். அவர் இறந்ததற்கான சான்றிதழையும் அவரே கைப்பட எழுதிக் கொடுக்கிறார். புறப்படும்போது இரண்டு ரூபாய்த்தாளை எடுத்து கொடுத்துவிட்டுச் செல்கிறார். அன்று கனிவோடும் இரக்கத்தோடும் பணம் கொடுத்துவிட்டுச் சென்ற டாக்டர்தான் காந்தி சிலைக்கு அருகில் நின்ற மனிதர் என்பதை அவர் அறிந்துகொள்கிறார். அடுத்த நாள் மீண்டும் காந்தி சிலைக்கு அருகில் சென்று அதே மனிதரைச் சந்தித்து உரையாடுகிறார். கிச்சிப்பாளையத்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டர்தானே நீங்கள் என்று கேட்கும்போது அந்த மனிதரின் முகம் மலர்கிறது. அதே சிரிப்பு அதே கண்கள். பழைய கதைகளைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறார் விட்டல்ராவ்.

பார்த்துப் பழகிய பதினேழு ஆளுமைகளைப்பற்றிய நினைவுகளை வெவ்வேறு கட்டுரைகள் வழியாக இத்தொகுதியில் பதிவு செய்திருக்கிறார் விட்டல்ராவ். கதைத்தன்மையுடன் கூடிய ஒவ்வொரு கட்டுரையிலும் ஆவணப்படக் காட்சிகள் போல பல்வேறு தருணங்களின் சித்தரிப்புகள் அடங்கியுள்ளன. அகத்தூண்டுதலை அளிக்கும் அற்புதத் தருணங்கள் மின்னற்பொழுதுகள் புத்தக வாசிப்பை மகத்தான அனுபவமாக்குகின்றன.

 

( மின்னற்பொழுதுகள். விட்டல்ராவ். பேசும் புதிய சக்தி வெளியீடு. 29 காம்ப்ளெக்ஸ் தெற்குத்தெரு, திருவாரூர் - 610001. விலை. ரூ.180 )

 

( புக்டே இணையதளம் - 03.02.2023 )