வாசலில் கத்தரிக்காய் நிறத்தில் கைனடிக் ஹோண்டா நிற்கிறது. அது நிற்பதற்காகவே ஒரு மேடை கூட கட்டப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு டி.வி.எஸ். சாம்ப் இருந்தது. அதற்கு முன்பு வெறும் டி.வி.எஸ். காலம் நகர நகர வாகனமும் மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் முன்பு ஒரு சைக்கிள் வைத்திருந்தேன். அப்போது அந்த வாகன மேடையும் இல்லை. வீடும் இல்லை. ஆனால் அந்த நினைவுகள் மட்டும் மீண்டும்மீண்டும் மோதிக்கொண்டிருக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். புற நகரில் ஒரு போஸ்ட் ஆபீஸில் வேலை செய்துகொண்டிருந்த காலம். வி.ஆர். ராமனாதன் என் போஸ்ட் மாஸ்டர். நான் அவரை ‘வெறி ராமனாதன்’ என்று சொல்வேன். வேலையில் ஒருவித அலுப்பு மூள அவரும் ஒரு காரணம். கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தார். ஆயிரம் பாஸ் புக்குகள் இருக்கும். அந்த நிமிஷமே என்ட்ரி ஆக வேண்டும் என்று கூவுவார். என் சுபாவத்துக்கும் அந்தச் சூழலுக்கும் சிறிது கூட ஒத்து வரவில்லை. குடும்பச் சூழல் என் ராஜினாமா யோசனையைத் தள்ளித்தள்ளிப் போட வைத்தது.
எனது மூன்றாவது சம்பளத்தில் நான் ஒரு சைக்கிள் வாங்கினேன். நூற்றி எண்பது ரூபாய். “என்னப்பா ஸ்வீட் இல்லயா?” என்று கேட்டார் வெறி ராமனாதன். புதுச் சட்டை, புதுச் செருப்பு, புதுப் பேனா என்று புதுசாக எதைப் பார்த்தாலும்
அவர் ‘ஸ்வீட் இல்லயா?’ என்று அரித்துவிடுவார். கிருஷ்ண விலாஸிலிருந்து இனிப்பும் கொஞ்சம் காராபூந்தியும் காபியும் வாங்கித் தந்தால்தான் மனிதனுக்கு நிம்மதி.
விடுப்பு எடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நான் போஸ்ட் ஆபீஸில் இருந்து தப்பித்துக்கொண்டேன். சைக்கிளில் ஏறிப் புறப்படுவதுதான் என் பொழுதுபோக்கு. காற்று தழுவ ஓட்டத் தொடங்கியதுமே அப்படியே ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும் போலத் தோன்றும். தெரிந்த ஊர்கள், தெரியாத ஊர்கள் எல்லா இடங்களுக்கும் சைக்கிளிலேயே செல்வதுதான் என் அதிகபட்ச சந்தோஷம். இரண்டு கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு வரைக்கும் செல்வது ஐந்தாறு மாதத்துக்கு ஒரு முறையாவது நடக்கும். ஒருமுறை மகாபலிபுரம் சென்று வந்தோம். கன்யாகுமரி வரைக்கும் செல்வதற்காகப் போட்ட பிரயாணத்திற்குத்தான் கூட்டாளிகள் ஒத்துழைக்கவில்லை. ஆனால் என் தாகம் அடங்காத தாகம். என்னைத் தடுத்த குரல்களை அலட்சியப்படுத்திவிட்டுத் தன்னந்தனியே புறப்பட்டுவிட்டேன்.
ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. வழிநெடுக காடு. மலை. அவற்றின் தோள்களில் என் சைக்கிளை உருட்டிச் செல்ல ஆர்வம் கொண்டிருந்தேன். வழக்கம் போலத் தடைகள். கிண்டல்கள். விமர்சனங்கள். குத்தல் பேச்சுகள். “அடிக்கடி எதுக்குய்யா லீவ் எடுக்கற? சேத்து வச்சா நாள பின்னால் கல்யாணத்துக்கு ஒதவுமில்ல” என்று புத்தி சொன்னார் போஸ்ட் மாஸ்டர். “தாலி கட்ட ஒரு மணி நேரம் பர்மிஷன் போதும் சார்” என்றேன். என் உதடுகளில் சிரிப்பு தேங்கி இருந்ததைக் கண்டு அவர் முகம் இறுகியது. “பர்ஸ்ட் வீக். மொத்தம் நாலாயிரம் ஆர்.டி. வந்து மொச்சானுங்கன்னா எவன் பாக்கறது?” என்று குரலைக் கடுமையாக்கினார் அவர். “நீங்க அப்படியே பெண்டிங் வைங்க சார். க்ளார்க் லீவு. அப்புறமா வந்து வாங்கிக்குங்கன்னு சொல்லிடுங்க. நானே வந்து போடறன்” என்று வழிவகுத்துக் கொடுத்தேன். அவர் மனப்பாரம் உடனே விலகி விட்டது. “சரி. சரி. காபி சொல்லு. கையெழுத்து போட்டுடறன்” என்று சலிப்புற்ற மாதிரி நடித்தார். “மழ நாளாச்சே. எங்கனா போய் அவஸ்தைப்படப் போறியேன்னுதான் சொன்னன். போய்த்தான் ஆவணுமின்னா மகராஜனா போய்வா” என்று அனுமதித்துவிட்டார்.
அதிகாலையிலேயே கிளம்பினேன். எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி வந்திருப்பதில் மனம் உற்சாகமுற்றிருந்தது. தார் மின்னும் தரையில் கூட கானல் நீரைப் பார்க்க முடியும் என்பதை
அன்றுதான் தெரிந்துகொண்டேன். நல்ல வெயில். தொலைவில் மரத்தின் நிழல் கருந்தாரில் ஒரு குளம் போலத் தெரிந்தது. நீர்ப்பரப்பு போலவே அதில் ஒரு மின்னல். பளீர் என்ற நெளிவு. நீர் அசைவதுபோல ஒரு தோற்றம். என் உடல் சிலிர்த்துவிட்டது. இரண்டு நாட்களில் ஹாசன் போய்ச் சேர்ந்துவிட்டேன்.
பகல் வெப்பத்தை ஈடுகட்டுகிற மாதிரி இரவில் கடும் மழை. விடியும் போது குளிரத் தொடங்கிவிட்டது. ஒரே இரவில் சொல்லி வைத்த மாதிரி பருவம் மாறிப்போனது. மழை நின்ற பிறகு மறுநாள் பயணத்தைத் தொடங்கினேன். சக்லேஷ்புர் வரைக்கும் சிறுசிறு தூறல். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி இருந்த தூறலில் நனைவது கூட சந்தோஷமாக இருந்தது. நிற்காமலேயே சென்றுகொண்டிருந்தேன். பெரிய இறக்கத்தில் இறங்கும்போது சைக்கிள் பஞ்சராகிவிட்டது. இந்தச் சங்கடத்தை நான் எதிர்பார்க்கவில்லை. பழுது பார்க்கிற கருவிகளும் காற்றடிக்கும் பம்ப்பும் எப்போதும் கைவசம் இருப்பதுதான் வழக்கம். இந்த முறை தன் வேலைக்காகக் கடன் வாங்கி எடுத்துச் சென்ற உறவுக்காரப் பையன் திருப்பித் தரவில்லை. தேடிப் போன போது வீடு பூட்டிக் கிடந்தது. சரி, பார்த்துக்கொள்ளலாம் என்கிற தைரியத்தில் கிளம்பிவிட்டேன்.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். சுற்றிலும் மரங்கள். எட்டுகிற உயரத்தில் பெரிய பெரிய பலாப்பழங்களின் தொங்கலாட்டம். அதற்குப் பின் தேக்கு மரங்கள். தாவும் குரங்குகள். ஒரு மரம் வேரோடு சாய்ந்து கிடந்தது. அடிவேரைச் சுற்றி ரத்தக் குட்டை போல சேற்றின் தேக்கம். ஆள் சந்தடி எதுவும் கண்களில் படவில்லை. ஒரு விசித்திர உலகத்தின் ரகசிய பாதையில் நான் மட்டும் தனியே நடப்பதுபோல உணர்ந்தேன்.
ஒரே கணத்தில் வானம் இருண்டு மழை தொடங்கிவிட்டது. முற்றிலும் எதிர்பாராத மழை. முதலில் சற்றே கலவரப்பட்டு விட்டேன். குளிர்ந்த மழை முத்துகள் உடலில் விழும்போது கூச்சமாக இருந்தது. மறுநிமிடம் அதுவே சுகமாக மாறியது. உடல் முழுக்க குளிர் பரவியது.
எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ, எனக்குத் தெரியாது. மழையின் வேகத்தையும் மீறி எழுந்த குரல் என்னைத் தடுத்து நிறுத்திய போது பாதையோரம் ஒரு குடிசை தெரிந்தது. அதன் கதவுக்கருகிலிருந்தான் அந்தச் சிறுவன் குரல் கொடுத்தான். நான் “என்னையா?” என்பது போல நின்று அவனையே பார்த்தேன். அவன் மறுபடியும் என்னைக் கன்னடத்தில் கூப்பிட்டான். நான் குடிசையை நோக்கிச் சென்றேன். சைக்கிளை நிறுத்திவிட்டு
உள்ளே வரச் சொன்னான். மழை படாத வண்ணம் ஒதுங்கி இரு கைகளாலும் உடலில் வழியும் தண்ணீரை வழித்து உதறினேன்.
‘ரொம்ப நேரமா நனைஞ்சிட்டிங்க போல. எங்கனா நின்னிருக்கலாம்.’
அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். உள்ளே போய் ஒரு துண்டு எடுத்து வந்து தந்தான். சைக்கிள் கேரியரில் இருந்த என் தோல் பையை எடுத்தான். அதன் மீது இருந்த நீரை அவனே வழித்து உதறி ஓரமாக வைத்தான். இதற்குள் உள்ளே இருந்து ஒரு நடுவயசுப் பெண் கதவருகே வந்து நின்றாள். “அம்மா, பாவம்மா இவரு” என்று என்னைக் காட்டி அவளிடம் சொன்னான் அச்சிறுவன். நான் திண்ணையில் ஓரமாக நின்று லுங்கி கட்டிக் கொண்டு பேண்ட்டை உருவி முறுக்கிப் பிழிந்து உதறினேன்.
பேசக் காத்திருந்த மாதிரி அச்சிறுவன் உற்சாகமாய் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.
“பஞ்சர் வண்டின்னு தெரியாம எடுத்தாந்துட்டிங்களா?”
“இல்ல. வழியில்தான் பஞ்சராய்டுச்சி.”
வழியில் இருந்த நீண்ட இறக்கத்தைப் பற்றிச் சொன்னேன்.
“அந்த எடமே சுத்த மோசம்தான். நெறய கல்லு. பாத்து வரணும்.”
பெரிய அனுபவஸ்தன் போலச் சொன்னான்.
“எந்த ஊர்லேர்ந்து வரீங்க?”
“பெங்களூர்.”
“சைக்கிள்லேயவா . . ?”
“ம்.”
அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டான். அவன் கண்களில் புதுவித வெளிச்சம். மழையில் நனைந்துகொண்டிருந்த சைக்கிளை எட்டித் தொட்டான்.
“எவ்ளோ தூரம் இருக்கும் பெங்களூரு?”
“எரநூறு மைலு.”
“எரநூறு மைலுமா மெதிச்சிகிட்டு வரீங்க.”
அவன் புருவம் உயர்ந்தது. ஏதோ ஒரு அதிசயத்தைக் கண்டது போல அவன் மனமும் குரலும் குழையத் தொடங்கின.
அந்தப் பெண் மீண்டும் வந்து உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட்டாள். நானும் அச்சிறுவனும் உள்ளே சென்றோம். அவசரமாய் அவள் பழம் பாய் ஒன்றை விரித்தாள்.
“சைக்கிள்ல அவ்ளோ தூரம் போவலாமா?”
“போவலாமே. அதுல என்ன தப்பு. நான் கன்யாகுமரிக்கே சைக்கிள்ல போயிருக்கேன்.”
அவன் ஆச்சரியம் ததும்ப என்னைப் பார்த்தான்.
“நெஜமாவா?”
“ம்.”
“டில்லிக்குப் போவ முடியுமா?”
“ம்.”
“இமயமலைக்கு . . ?”
“ம்.”
“பம்பாய்க்கு . . ?”
“ம்.”
“பாகிஸ்தானுக்கு . . ?”
“ம்.”
“முடியுமா?”
“ஏன் முடியாது? மனுஷனால முடியாதது எது இருக்குது? மனசு வச்சா எங்க வேணும்னாலும் போய் வரலாம்.”
வாய் பிளந்து நின்றவன் முகம் திடுமெனச் சுண்டியது. கரகரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.
“எனக்கும் சைக்கிள்னா ரொம்ப ஆசை. ஆனா அம்மா வாங்கித்தர மாட்டறாங்க” என்றான் அம்மாவின் பக்கம் கையைக் காட்டியபடி.
“ஏம்பா, வாய வச்சிக்னு சும்மா இருக்க முடியலயா?” என்றாள் அவள். சிறுவன் குனிந்து கொண்டான். எனக்கு நொடியில் நிலைமை புரிந்தது. “இல்லப்பா, நீ ரொம்ப சின்னப் பையன் இல்லயா. ஓட்டறது கஷ்டமா இருக்கும். பெரியவனாய்ட்டா அம்மா வாங்கித் தருவாங்க. எங்க அம்மா கூட பெரியவனாய்ட்ட பிறகுதான் வாங்கித் தந்தாங்க” என்றேன். அந்தப் பதில் அவனுக்கு மன நிறைவாக இருந்தது. “அப்படியாம்மா?” என்று தன் அம்மாவைப் பார்த்தான் அச்சிறுவன். அவள் “ம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
“உனக்கு ஓட்டத் தெரியுமா?”
“குரங்குப் பெடல் போட்டுத்தான் ஓட்டுவன்.”
“மழை நிக்கட்டும். நா கத்துக் குடுக்கறேன்.”
அவன் சந்தோஷமாய் தலையை அசைத்துக்கொண்டான். உடனே அவன் தனக்குத் தெரிந்த சைக்கிள் பயிற்சியைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.
“அரசிக்கெரேல மாமா வீடு இருக்குது. அங்கதான் சைக்கிள் கத்துகிட்டேன். ஆனா மாமா ரொம்ப கண்டிப்பு. அவர் இல்லாத நேரத்தில்தான் சைக்கிளத் தொட முடியும் . . .”
அவனுக்கு இந்த உலகமே மறந்துவிட்டது. சைக்கிள் ஹேண்ட்பார்கள் சுழன்றன. அவற்றைப் பிடித்துக்கொண்டு தோளை அசைத்து அசைத்து ஓரம்பார்த்து ஓட்டினான். வாயாலேயே சைக்கிள் ஓடும் சத்தத்தைக் கொடுத்தான். கண்ணுக்குப் புலப்படாமல் எதிரே வந்துகொண்டிருந்த ஒரு பஸ்சுக்கு வழிவிட்டு மீண்டும் பாதையில் இறக்கிவிட்டு ஓட்டத் தொடங்கினான். மிதிக்கிற மாதிரி காற்றில் கால்கள் அலைபாய கண்கள் சாலையில் பதிந்திருந்தன. நான் உடனே விளையாட்டாக “ப்ரேக் ப்ரேக்” என்று கத்தினேன். அவன் சிரித்துவிட்டான். பல வருஷகாலம் ஒன்றாய்ப் பழகியதுபோல என்னிடம் நெருக்கமாகிவிட்டான்.
அச்சிறுவனின் தாய் இரண்டு கோப்பைகளில் வெறும் டிகாஷன் டீ போட்டு வந்து தந்தாள். நான் அவளை நன்றியோடு பார்த்தேன். அவளோடு பேச்சைத் தொடங்கலாமா, வேண்டாமா என்று தெரியாமல் விழித்தேன். எது நாகரிகமாக இருக்கும் என்று அக்கணத்தில் உடனடியாக முடிவெடுக்க இயலவில்லை.
டிகாஷன் குடித்து முடித்த பின்பு தரையைப் பார்த்தபடி நான் என்னைப் பற்றிச் சொன்னேன். முதலில் என் பிரயாண ஆசையை விவரித்தேன். அவள் வியப்போடு என்னைப் பார்த்தாள்.
“அவன மாதிரியே இருக்கறீங்க. அவனுக்கும் இப்படித்தான். எப்ப பாத்தாலும் ஊரச் சுத்திட்டே இருக்கணும். சுத்தி சுத்தி என்னத்த சாதிக்கப் போறானோ?”
“ஒரு அனுபவம்தான்.”
அவள் சட்டென என் பக்கம் திரும்பினாள்.
“அப்ப சோத்துக்கு? எல்லாம் கொட்டி வச்சிருந்தா சுத்தலாம்.”
ஒரு கணம் மௌனம். என் முகம் சுண்டி தடுமாற்றம் கொண்டதைக் கண்டு அவள் வருத்தமுற்றாள். பிறகு மெல்லிய குரலில் தாம் இருவர் மட்டுமே மலை அடிவாரத்தில் ஓர் இடத்தில் விவசாயம் செய்து சாப்பிடுவதாகச் சொன்னாள். புருஷன் இறந்து மூன்று வருஷம் ஓடிவிட்டது என்றும் சொன்னாள்.
மழை சிறிதுநேரம் கூட விடாமல் தொடர்ந்து பொழிந்தது. இப்படியொரு இருபத்தி நாலு மணி நேர மழையை நான் எப்போதும் பார்த்ததே இல்லை. நான் அங்கே தங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. சிறுவன் தன் மனசிலிருந்த பெங்களூர்ச் சித்திரங்களை என்னிடம் சொல்லி சரியா என்று கேட்டான். லால்பாக், கப்பன் பார்க், நேஷனல் பார்க் பற்றிய அவன் கனவுகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தன. எம்.ஜி. ரோடு கட்டடங்களின் பிரமாண்டம் பற்றியும் அல்சூர் ஏரி பற்றியும் அதில் ஓடும் படகுகள் பற்றியும் அவன் சொல்லிக்கொண்டே இருந்தான்.
“என்னைக்காவது ஒரு நாளு பாப்பன் சார்” என்று சபதம் எடுப்பது போல என்னிடம் சொன்னான். “நிச்சயமா பாக்கலாம்” என்று நானும் தாளமிட்டேன். அந்த நிமிஷமே அவனை என்னோடு பெங்களூருக்கு அழைத்துச் சென்றுவிட்டால் என்ன என்று தோன்றியது. சிறிது நேரத்திற்குப் பிறகு “உங்கள மாதிரியே சைக்கிள்ல போவன் சார்” என்றான். அவன் கண்களில் ஒளி வீசியது. இரவு வேளைக்கு அவன் அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். கருவாட்டுக் குழம்பு. கேழ்வரகுக் களியை உருட்டி வைத்திருந்தாள். ருசியான சமையல். “என்னால ரொம்ப தொந்தரவு ஒங்களுக்கு” என்றேன் நான். “அதெல்லாம் ஒண்ணுமில்லே” என்று சிரித்தாள் அவள்.
அச்சிறுவன் என்னோடு சுவரோரம் படுத்துக்கொண்டான். என்னிடம் கதை கேட்கத் தொடங்கினான். நான் சுற்றிய ஊர்களைப் பற்றியும் பார்த்த மனிதர்களைப் பற்றியும் கேட்டான். நான் என் சிறுவயசுக் காலத்தை எண்ணியபடி எல்லாவற்றையும் சொன்னேன். என் சின்ன வயதின் பிம்பமாக அவன் இருப்பது எனக்கு ஆனந்தமாக இருந்தது. காலம்காலமாக நீண்டு வரும் ஒரு பித்துச் சரடு என்னைக் கோர்த்துக்கொண்டு அவன் வழியாக நீள்வது போல இருந்தது.
விடிந்தபோது மழை விட்டிருந்தது. சிறுவன் எனக்கு முன்னால் எழுந்து சைக்கிள் அருகில் நின்றிருந்தான். காற்று இறங்கிப் போன சக்கரத்தைக் கையால் சுற்றிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். சக்கரக் கம்பியில் சிவப்பான துண்டுத் துணி ஒன்றைக் கட்டிவிட்டு அது மேலும் கீழும் மாறி வருவதை ஓட்டிக் காட்டினான். நான் சிரித்தேன்.
“மொதல்ல பஞ்ச்சர் ஒட்டணும் இதுக்கு” என்றேன்.
“பக்கத்தூர்ல சந்திரே கௌடா சைக்கிள் ஸ்டோர் வச்சிருக்காரு. அவர் கிட்ட போவலாம்.”
சைக்கிளைத் தள்ளிவர அவனே முன்வந்தான். அவன் கைகள் பழகிய ஒரு நாய்க்குட்டியின் கால்களைப் பற்றுவது போல சைக்கிள் ஹேண்ட் பார்களைப் பற்றின. சைக்கிள் பழுதற்றிருக்கும் பட்சத்தில் ஏறிப் பறந்துவிடுவான் போலத் தோன்றியது. மணியை அழுத்தி சத்தமெழுப்பிக்கொண்டே வந்தான்.
வாசலில் உட்கார்ந்து டீ பருகிக்கொண்டிருந்தார் சந்திரே கௌடா. சிறுவன் அவர்முன் சைக்கிளை நிறுத்தினான். சேற்றின் செந்நிறம் சக்கரம் முழுக்க அப்பி இருந்தது. யாரும் சொல்லாமலேயே சிறுவன் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து வந்து நன்றாகக் கழுவினான். கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து தனக்குத் தானே திருப்தியுற்றான்.
என்னைப் பற்றி விசாரித்தபடியே பஞ்சர் பார்த்து ஒட்டினார் சந்திரேகௌடா. இரண்டு இடங்களில் கல் பொத்திருந்தது. டியூபைப் பொருத்தி நன்கு காற்றடைத்துத் தந்தார். நான் கொடுத்த பணத்தை நன்றியுடன் வாங்கிக்கொண்டார்.
வரும்போது அவனை சைக்கிளில் ஏறி ஓட்டி வரும்படி சொன்னேன். அவன் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. குரங்குப் பெடலில் தெத்தித் தெத்தி ஓட்டினான். அவனைப் பிடித்து நிறுத்தி ஸீட்டில் உட்கார வைத்து முதுகை வளைக்காமல் இருக்கும்படி சொன்னேன். கால்கள் ஓரளவு எட்டியும் எட்டாமலும் இருந்தன. தடுமாறினான். கால் எட்டாமல் போகும்போது இடுப்பை அதிகமாக வளைத்து விழுந்தான்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஓட்டிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம். அவள் சூடாக அவல் வறுத்துத் தந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே மழை பிடித்துவிட்டது. சிறுவன் மழையைச் சபித்தான். வருத்தம் குரலிலும் முகத்திலும் வழிந்தது.
“படிக்க வய்க்கலயா இவன?”
நான் அவளிடம் கேட்டேன்.
“அவரு உயிரோடு இருக்கும்போது போனான். அஞ்சாவது வரிக்கும் படிச்சான். இப்ப நானும் அவனும்தான் வயலப் பாத்துக்கறோம்.”
சற்று நேரம் மௌனமாய்க் கழிந்தது.
“சொந்த ஊரே பெங்களூரா?”
“அப்பாவும் தாத்தாவும் அந்தக் காலத்துல மைசூர் டேம் கட்ட வந்தவங்க. அப்புறம் பெங்களூர்லயே இருந்துட்டம்.”
“மெட்ராஸ்ல எம்.ஜி.ஆர். ஏழைக்கெல்லாம் வாரி வாரிக் கொடுக்கறாராமே. கன்னடக்காரங்க எங்களுக்குத் தருவாரா?”
எனக்கு பதில் சொல்லத் தடுமாற்றமாய் இருந்தது. எங்கிருந்து பேச்சு எங்கே மாறிவிட்டது என்று தோன்றியது. நான் ஒரு வித இயலாமையோடு அவளைப் பார்த்தேன்.
“அந்த அளவுக்கு எனக்கு யாரயும் தெரியாது?”
“சரி . . . சரி . . . நீங்க அதுக்காக சங்கடப்படாதீங்க.”
மழை நின்றதும் நான் கிளம்பிவிட நினைத்தேன். ஆனால் சிறுவன் ‘எனக்கு நல்லா ஓட்ட கத்துத்தரன்னுதான சொன்னீங்க. எல்லாம் பொய்தானா?’ என்று மடக்கினான்.
மழை நின்ற பிறகு அவனை அழைத்துக்கொண்டு வெளியே போனேன். சைக்கிளை ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். கால் எட்டுகிறதா இல்லையா என்று அடிக்கடி தலை குனிந்து பார்த்தான். அதுதான் ஒரே குறை. மற்றபடி இடுப்பு படிந்துவிட்டது.
“சைக்கிள் ஓட்டற மாதிரியே இல்ல. ஏதோ றெக்கை கட்டிப் பறக்கற மாதிரி இருக்குது. ஒரு உலகத்திலேர்ந்து இன்னொரு உலகத்துக்குள்ள போவற மாதிரி இருக்குது” என்றான். அவன் கண்களைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக இருந்தது.
நண்பகலில் மீண்டும் மழை தொடங்கியது. சாயங்காலம்தான் நின்றது. நான் “கிளம்பட்டுமா” என்றேன். அச்சிறுவன் முகம் போன போக்கு சரியில்லை. “வழியில மறுபடியும் பேஞ்சா என்ன செய்வீங்க?” என்றான். “எல்லாம் சமாளிச்சிருவேன்” என்றேன். அவனும் அவன் அம்மாவும் தடுத்தார்கள். இரவு முழுக்க சிறுவனிடம் சைக்கிள் பிரயாண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.
“விடிஞ்சதும் நானும் உங்களோடு வரட்டுமா?”
“ம்” என்று உற்சாகமூட்டினேன்.
“அரசிக்கெரேயில என்ன விட்டுடுங்க. மாமா வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு திரும்பிடுவேன்.”
விடிந்தபோது மழை விட்டிருந்தது. நான் எழுந்து பல் துலக்கிவிட்டு குளித்து உடை மாற்றினேன். அறைக்குள்ளே உலர்த்திய ஈரத்துண்டை மடித்து பைக்குள் வைத்துக்கொண்டேன். அவளுக்குக் கொஞ்சம் பணம் தரலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனடியாய் விலக்கினேன். எதுவும் தராமலிருப்பது வும் சங்கடமாக இருந்தது. விடைபெற்றுக்கொள்ளும்போது மனசில் ஊமைவலி எழுந்தது. சிறுவன் மிகவும் வாதாடி என்னுடன் வருவதற்கு அவளிடம் அனுமதி பெற்றுவிட்டான். அவள் மீண்டும் “பத்தரம் பத்தரம்” என்று திரும்பத்திரும்பச் சொன்னாள். அவள் அக்கறையையும் கவலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சிறுவன் ஐந்து நிமிஷத்தில் ஒரு பழைய பையில் தன் மாற்றுடைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் அருகே நின்றான். அவனே ஓட்டப் போவதுபோலவும் எனக்காகக் காத்திருப்பதுபோலவும் இருந்தது அவன் தோற்றம்.
நாங்கள் புறப்பட்டோம். அவன் பின்னால் கேரியரில் உட்கார்ந்துகொண்டான். அந்தச் சூழல் மிகவும் மகிழ்ச்சியூட்டுவ தாக இருந்தது. பெரிய பெரிய மரங்கள். குன்றுகள். எங்கோ நழுவிச் செல்லும் ஓடைகள். கண்முன்னே நீண்டு விரிந்த பாதை. சிறுவன் பேசியபடி வந்தான். மிகவும் தயங்கி “நா கொஞ்சம் ஓட்டட்டுமா?” என்றான். நான் இறங்கி சிறிது நேரம் அவனிடம் தந்தேன். கொஞ்ச தூரம் போய்விட்டு மீண்டும் வருமாறு சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். ரொம்பவும் பழகியவன்போல சைக்கிளில் ஏறி மிதித்தான் அவன். கூவும் பறவைகளின் குரல்களைப் பிரித்தறிய முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தேன் நான்.
அவன் திரும்பி வந்ததும் எங்கள் பயணம் தொடர்ந்தது. பத்துப் பதினைந்து மைலுக்கப்புறம் மீண்டும் அவன் ஓட்டினான். வழியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டோம். அங்கு கோயில் ஒன்றிருந்தது. அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் புறப்பட்டோம். இடையில் சிறுசிறு தூரம் அவனும் ஓட்டினான்.
அரசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. வாகனங்களும் மனித நடமாட்டமும் தெரிந்தன. மூன்று நாட்களுக்கப்புறம் மனிதர்கள் நடமாட்டத்தைப் பார்த்தபோது மனம் கிளர்ச்சியுற்றது.
“இன்னும் கொஞ்ச தூரம்தான் எங்க மாமா வீடு. எங்க மாமா வீடுவரிக்கும் நானே சைக்கிள்ல போய் வரட்டா? கொஞ்ச நேரம் அவுங்க சைக்கிளத் தொட்டுட்டா என்னா கத்து கத்துவாங்க தெரிமா? இப்ப அவங்க முன்னால நான் போய் எறங்கனதுமே அதிசயப்படுவாங்க. போய் வரட்டா?”
அவன் உற்சாகத்தைக் குலைக்க விருப்பமில்லை. “சரி” என்றேன். “பாத்து, பாத்து” என்று எச்சரிப்பதற்குள் அவன் பாய்ந்துவிட்டான். நான் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். குடித்துவிட்டு வெளியே வந்து அவனுக்காகக் காத்திருந்தேன்.
சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள். சைக்கிள் ரிக்ஷாக்கள். மஞ்சள் துணி போர்த்திய ஆட்டோக்கள். லாரிகள். சிக்னல் கம்பங்களில் மாறி மாறி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இருபுறமும் ஜனநடமாட்டம். நான் சட்டென அச்சிறுவனைப் பற்றி யோசித்தேன். அவன் குடும்பம், அவன் ஆசை, அவன் வேகம் எல்லாமே மனசில் அலைமோதின. சட்டென ஒரு முடிவெடுத்தேன். அவசரமாய் தெரு மூலை வரைக்கும் பார்த்தேன். அவன் முகம் தெரிவதுபோல இருந்தது. என்னைப் பார்த்துப் பெருமிதமாய் அவன் சிரிப்பது போலவும் இருந்தது. எதிர்பாராத விதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பஸ்ஸில் சட்டென்று ஏறி உட்கார்ந்துவிட்டேன். வண்டியும் உடனே கிளம்பிவிட்டது.
(இந்தியா டுடே-1996)