பாதி பீடியோடு நெருப்பை அணைத்து காதில் செருகிக்கொண்டு ரிக்ஷாக்காரன் வருவதற்கும், மூன்று வயசுப் பையனை நடக்கவிட்டு கையைப் பிடித்தபடி கோயிலில் இருந்து இவள் வருவதற்கும் சரியாய் இருந்தது. பையனைத் தூக்கி முதலில் உட்கார வைத்துவிட்டு பிறகு தானும் உட்கார்ந்தாள் இவள்.
“பீச்சுக்குப் போப்பா.”
ரிக்ஷா நகர்ந்தது.
ஆரம்பத்தில் இந்தப் பழக்கம் எதுவும் இல்லை இவளுக்கு. எல்லாம் கல்யாணம் ஆனதற்குப் பிறகு ஏற்பட்டதுதான். தலை பின்னியதும் பூ வைக்கிற மாதிரி புடவைக்கேற்ற ரவிக்கையை ரசனையோடு தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்கிறமாதிரி இதுவும் ஒரு பழக்கம். இப்படி இருப்பதிலும் நடப்பதிலும் இவளுக்குள் ஒரு சந்தோஷம். திருப்தி. அதே நேரத்தில் மரபுரீதியாய் சடங்கு செய்கிற செயற்கைத் தனமோ மூடத்தனமோ ஒட்டாமல், ஒவ்வொரு முறையும் ரொம்ப இயல்பாய் விசேஷ ஆசையோடு மனசு கரைய ஈடுபட்டு அந்தப் பழக்கத்தை கடைபிடித்தாள். மணக்குள விநாயகர் கோயிலுக்குப் போகிற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரை மணி நேரமாவது கடற்கரைக்குப் போய் காலாற நடப்பது தான் இருபத்து மூணு வயசில் கல்யாணத்துக்குப் பிறகு அவளோடு வந்து சேர்ந்த பழக்கம்.
பாரதிதாசன் சிலையைத் தாண்டி ரிக்ஷாஓடிக்கொண்டிருந்தது.
இவள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ரிக்ஷாக்காரன் பீச்சுக்குத்தான் போவான். இவள் பழக்கம் அவனுக்கு நன்றாய்த் தெரியும். நாலு வருஷத்துக்கு முன்பு கல்யாணம் நடந்த புதுசில் புருஷனோடு முத்தியால் பேட்டையில் இருந்து இந்த வினாயகர் கோயிலுக்கும் ஏற்றி வந்து நிறுத்தியது இவன்தான். வெள்ளிக்கிழமை தவிர மற்ற தினங்களில் கடைத்தெரு மணிக்கூண்டு, பூங்கா, பாலர்பவன், தியேட்டர் என்று சுமந்து போனதும் இவன்தான். கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் புருஷன் பிரான்சுக்குப் போனதும் ஒண்டியாய் இவளைச் சுமந்து வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கும் கடற்கரைக்கும் வந்துகொண்டிருப்பதும் இந்த ரிக்ஷாக்காரன்தான். இவளுக்காகவே வெள்ளிக்கிழமை மணி ஐந்தாகிவிட்டால் டாண் என்று ரிக்ஷாவை வீட்டு வாசலில் நிறுத்தி மணி அடித்து அழைப்பவனும் இந்த ரிக்ஷாக்காரன்தான்.
இவள் மௌனமாய் உட்கார்ந்திருந்தாள். பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஒரே சிந்தனையாய் இருந்தது.
‘இந்நேரம் பிரான்சில் அவர் வேலை செய்வார், தூங்குவார், படிப்பார், எழுதுவார், சாப்பிடுவார், சினிமா பார்ப்பார், டி.வி. பார்ப்பார், சுற்றுவார், என்னை நினைப்பார் . . .’
நெசவுக்கு நூல் கட்டின மாதிரி நீளமாய் பிசிறு இல்லாமல் ஒரே சிந்தனை. வீட்டில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மனசு மட்டும் இந்த சிந்தனையைச் சுற்றித்தான் ஆடியது. பேயாட்டம் ஆடியது.
கிளம்பும்போதும் வண்டியில் வரும்போதும் புருஷன் அரூபமாய் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மாதிரி தோன்றுகிற சந்தோஷம், இந்த இடத்தில் உட்கார்ந்தார், இந்த இடத்தில் சிரித்தார். இந்த இடத்தில் இதைப் பேசினார் என்று ஒவ்வொரு விஷயமும் சரம்சரமாய் ஞாபகத்துக்கு வரும்போது குறைந்து, மனசு ரணமாகி வலிக்கும். இந்த ரணமும் வலியும்கூட ஒரு சுகம்தான் என்கிற ரீதியில் பல்லைக் கடித்துக்கொண்டாள்.
இவள் தோளைக் கெட்டியாய்ப் பிடித்தபடி திரும்பி நின்ற குழந்தை சிவப்பாய்ப் பூ கொட்டுகிற கொன்றை மரங்களையும் உயரமான கட்டிடங்களையும், வரிசையாய் நிறுத்தி வைத்திருக்கின்ற சைக்கிள்களையும் பின்னால் நகர்ந்து மறைகின்ற வண்டிகளையும் பார்த்துக்கொண்டு வந்தது. வேறொரு ரிக்
ஷாவில் போன தனது வயதையொத்த குழந்தையைப் பார்த்துக் கையை அசைத்தது. விர்ரென்று பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் ஹார்ன் ஓசையை வினோதமான சுகத்தோடு கேட்டது. கவர்னர் மாளிகை வாசலில் பொம்மை மாதிரி துப்பாக்கி தூக்கி நிற்கும் போலீஸ்காரனைப் பார்த்துச் சிரித்தது.
“ஐயா எப்ப வருவாங்கம்மா?”
குழந்தை மாதிரி இந்த உலகத்தைப் பார்க்கிற லயிப்போ சுய பிரக்ஞையோ இல்லாது மனசுக்குள் பிரான்சுப் புருஷனின் நடவடிக்கைகளைக் கற்பனை செய்துகொண்டு வந்த இவளுக்கு ரிக்ஷாக்காரன் கேட்டது காதில் விழவில்லை.
நீண்ட மணியடிப்பில் பாதையில் தன் வண்டிக்கு வழி பண்ணிக்கொண்டு ரிக்ஷாக்காரன் இவள் பக்கம் திரும்பி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
இவள் சிந்தனை அறுந்தது.
“ம் . . . இன்னாது?”
“ஐயா எப்ப வருவாங்கன்னு கேட்டேன்.”
“ஐயாவா . . . இன்னும் ஆறு மாசமாவது ஆவும்.”
திரும்பி மிதிக்கத் தொடங்கினான் அவன்.
போகிற வருகிற வண்டிகளையெல்லாம் கையை நீட்டித் தொட்டு விடுகிற சந்தோஷத்தோடு விரல் அசைத்துச் சிரிப்போடு வந்தது குழந்தை. ஸ் என்று அலாதியான ஈடுபாட்டோடு ஒலியெழுப்பி ரசித்தது.
ரேடியோ ஸ்டேஷன் தாண்டி கரும்புச்சாறு விற்கிற வண்டிக்காரன் முன்னால் ரிக்ஷா நின்றது.
இவள் குழந்தையோடு இறங்கினாள்.
“ஏழு மணிக்கா வந்து இங்கியே இருக்கேன்.”
“சரிம்மா.”
மறுபடியும் மணியடித்தபடி இடது கையை நீட்டி ‘சைட்’ வாங்கி வண்டியை வளைத்தான் அவன். திரட்சியான அவன் தேகமும், உருண்டு தசைநார்ப் பின்னல் தெரியும் தோளும் சாயங்கால வெளிச்சத்தில் மின்னின.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு சமுத்திரக்கரைப் பக்கம் போனாள் இவள்.
நிறைய கூட்டம் இருந்தது. ஆணும் பெண்ணுமாய் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் நடந்தவாறு இருந்தார்கள். பூசிவிட்ட மாதிரி எல்லார் முகத்திலும் சிரிப்பு. சந்தோஷம். நாலைந்து பேர் சமுத்திரத்தில் குளித்தார்கள். மேக்ஸியை லேசாய் மேலேற்றிப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் கிளிஞ்சல் பொறுக்கினாள். மணலில் இறங்காமல் சிமெண்ட் நடைபாதையில் இருந்தே இவள் பார்த்தாள்.
தூரத்தில் பெரிய கப்பல் ஒன்று நின்றிருந்தது. அப்புறம் சுற்றிச்சுற்றிச் சின்னசின்னதாய் மூன்று கப்பல்கள். நாலு வருஷத்துக்கு முன்பும் இதே இடத்தில் ஒரு கப்பல் நின்றிருந்தது. இதைவிடப் பெரிசு. புருஷனோடு முதன்முதல் கடற்கரைக்கு வந்தபோதுதான் அதைப் பார்த்தாள். அதுபோல் அதே இடத்தில் இந்த நாலு வருஷத்தில் எத்தனையோ கப்பல்கள் வந்தும் போயும் விட்டன. இப்போது இது வந்திருக்கிறது. இந்தக் கப்பலை முன்னால் வைத்து அன்றைக்கு நடந்த சம்பாஷணை மனசை வட்டமிட்டது.
எங்கும் நீளமாய் பொங்கிப் புரளும் சமுத்திரமும், பட்டுப் புடவைக்கு கரை இழுப்பதுபோல் நடுநடுவில் நெளியும் வெள்ளை நுரைகளும் இவள் மனசிற்கு இதமாய் இருந்தது. சட்டென்று சுயதுக்கம் விலகி அறுபட்ட மாதிரி ஓர் அலாதியான ஈடுபாடு பிறந்தது.
நடக்கத் தொடங்கினாள்.
பக்கத்தில் பூஞ்செடிகளைப் பார்த்துக் குதித்தது குழந்தை. இவள் கையை விடுவித்துக்கொண்டு ஓடி தொட்டுத்தொட்டு சந்தோஷித்தது. அதன் உயரமே இருக்கும் செடியின் அருகில் சென்று பூக்களை கைநிறைய சேகரித்தது. சவுக்க மிளார் கன்றுகளின் கரும்பச்சை அடர்த்திக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. மெல்லிய அதன் வருடலில் சந்தோஷத்துடன் லயித்து முகத்தை மிளார்களின் ஊடே நுழைத்து கை தட்டியது. குடை மரத்தின் சின்ன படிக்கட்டுகளில் ஏறி இறங்கியது. மேலே ஏறி நின்று இவளைப் பார்த்துக் கையை அசைத்தது.
சிரித்தாள் இவள்.
இதுதான், இந்தக் குழந்தைதான் இவளின் திருமண வாழ்வுக்கு ஒரே சாட்சி.
கல்யாணம் ஆவதற்கு முன்பு, தான் கர்ப்பமாய் இருக்கும்போது என்னென்ன நிகழவேண்டும், எப்படி எப்படி இருக்கவேண்டும் என்று நிறைய கற்பனை செய்துவைத்திருந்தாள். கர்ப்பம் என்று தெரிந்த நாளில் இருந்து புருஷனோடு நிமிஷமும் அகலாமல் இருக்கவேண்டும், சின்னச்சின்ன விஷயங்களாய் சந்தோஷத்துடன் சிரித்துப் பேசவேண்டும். வயிறு கனத்து வெட்கத்தோடு அமர்ந்திருக்கும்போது சிறுசிறு உபகாரங்களோடு புருஷன் தன்னை அணுகவேண்டும். தின்பண்டங்களை அவன் ஊட்ட செல்லமாய் சிணுங்கித் தின்னவேண்டும். ஆசையோடு தொடவந்தால் கெஞ்சலாய் அதட்டி விலகவேண்டும் என்று நூறு கற்பனைகள். கர்ப்பத்தைச் சுமப்பது போல், மனசுக்குள் அந்தக் கற்பனைகளைச் சுமந்திருந்தாள். ஒரு மாதமே புருஷன் சேர்ந்திருந்து அப்புறம் பிரான்ஸ் போனதும் எல்லாம் தண்ணீர்ப்பானை உடைகிறமாதிரி உடைந்தது. கடைசியில் சுவரில் இரண்டுக்கு ஒன்றரை அடிக்கு தங்க பிரேம் போட்டு மாட்டி இருக்கிற கல்யாண போட்டோவையும் ‘ஆனந்தா மெடிக்கல்ஸ்’ காலண்டர் குழந்தையையும் பார்த்தே இவள் கர்ப்பகாலமும் பிரசவ காலமும் முடிந்தது.
மாசம் தவறாமல் புருஷனிடம் இருந்து மடல் வந்தது. இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் ‘ஐயோ இந்த நேரத்துல ஒன் பக்கத்துல இல்லியே’ என்று ஏங்கி எழுதும் அவன் எழுத்துக்கள் இவள் மனசை ஒரு மாதிரி செய்யும். நெருப்பை மிதிக்கிற மாதிரி பொறுத்துக்கொண்டே குழந்தை பெற்றாள்.
மூன்று வருஷமாய் வளர்த்தாள். மாசம் தவறாமல் போட்டோ எடுத்து புருஷனுக்கு அனுப்பினாள். குழந்தையின் மழலையையும் சிணுங்கலையும் கேசட்டில் பதிவு செய்து அனுப்பினாள்.
இன்னமும் புருஷன் இப்படித்தான் என்று இவளால் கணிக்க முடியவில்லை. ஒரு மாச வாழ்வில் எதுவும் பிடிபடவில்லை. ஊர் சுற்றியது. சினிமா பார்த்தது, விருந்தாளிகளாய் ஜோடியாக நண்பர்கள் வீட்டுக்கு ரிக்ஷாவில் போய் வந்தது. துணி துவைக்கும்போது ஒருமுறை சோப்பு வழுக்கி தடுமாறி விழும்போது, “நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்ற? பேசாம துணியெல்லாம் எடுத்து இனிமே லாண்டரிக்குப் போடு!” என்று ஆதரவாய் பேசியது. புடவைகளாய் வாங்கித் தந்தது, ராத்திரிகளில் அன்போடும் ஆதரவோடும் இருந்தது. இவை போன்ற சில அனுபவங்கள் மட்டுமே அவன் உருவத்தைப் பின்ன போதாமல் இருந்தது. துளிதுளியாய் அனுபவம்தான் நிற்கிறதே தவிர முழு உருவமும் கைகூடவில்லை. அவன் பலம், பலவீனம், ஆத்திரம், சிரிப்பு, அழுகை, அடக்கம், அகங்காரம் எதுவும் புரியவில்லை. புரிந்துகொள்ள ஒரு மாச வாழ்வு போதவில்லை. ஆனால், நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. நினைக்கும்போதே இவளுக்கு சங்கடமாகி மனசு கனத்தது.
கூட இருந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவளைக் கோயிலுக்கும் பீச்சுக்கும் அழைத்துவந்து பழக்கப்படுத்தி னான் அவன். “இதே ஊர்ல இருந்துக்கினே பீச்சைப் பார்த்ததே இல்லங்கறியே!” என்று ஆச்சரியப்பட்டான். ‘இது சமுத்திரம், இது அலை, இது கப்பல்’ என்று ஒவ்வொன்றாய்ச் சுட்டிக் காட்டி கிண்டல் செய்தான்.
‘அப்பா ரொம்ப கண்டிப்பு. வெளியில தெருவுல எங்கியும் அனுப்பமாட்டாரு!’ என்று அவள் சொன்னபோது பெண்ணுரிமையைப் பற்றி ஒரு லெக்சரே அடித்தான். பிரான்சிற்கு புறப்படும் முன்பு இவளை இவள் வீட்டிலேயே தங்க வைத்து விட்டுப்போனான். நான்கு வருஷங்கள் - நாற்பத்தெட்டு மாதங்கள், ஏறத்தாழ இருநூறு வெள்ளிக்கிழமைகள். புருஷன் ஏற்படுத்திய பழக்கத்தில் சந்தோஷப்பட்டு இன்றுவரை தனியாய் வந்து போகிறாள்.
இவள் அப்பாதான் இதற்குக் காரணம். பள்ளிக்கூடம் தவிர வேறு எங்கேயும் அனுப்பாது வளர்த்தவர் அவர். ஏதோ சந்தர்ப்பத்தில் எதிர்த்தவீட்டுப் பையன் இவளுக்கு லெட்டர் கொடுக்க, நாகரிகமாய் அடுத்த நாள் அவனை தெருவில் வைத்துப் பார்த்து அவன் காதலை அவள் நிராகரிக்க, அந்தச் சம்பவத்தைத் தப்பர்த்தத்தோடு பார்த்தார் அவர். மரபு ரீதியான கற்புக் கொள்கையிலும் உடம்பு பவித்திரத்திலும் பிடிதளராத பற்றோடு அந்த நிமிஷம் தொட்டு ஓடிஓடி அலைந்து நாலாம் நாளே இந்த பிரான்ஸ் மாப்பிள்ளையை பார்த்து அவசரத்தில் யார் சம்மதத்திற்கும் காத்திராமல் கல்யாணத்தையும் செய்து முடித்தார். ‘பொண்ணு மானத்த காப்பாத்திட்டேன். ஒரு பாரம் எறங்கிடுச்சி’ என்று ‘அப்பாடா’ போட்டு மாப்பிள்ளையை பிரான்சிற்கு அனுப்பிவிட்டு பெண்ணை வீட்டிலேயே வைத்துக் கொண்டார். கதறக்கதற ஒரு வாழ்க்கையை பலி வாங்கியதை உணராமல் நிம்மதியாய் உலாத்தினார்.
இன்றைக்கும் அதே எதிர்த்த வீட்டுப் பையன் இவளிடம் படிக்க புஸ்தகம் வாங்கிப் போகிறான். இவளுக்கும் புஸ்தகம் தருகின்றான். இவளும் தனியே தெருவில் பேசுகிறாள். வெள்ளிக்கிழமை தோறும் ரிக்ஷா ஏறி கோயிலுக்கும் பீச்சுக்கும் போகிறாள். ஆனால் எந்தப் பதற்றமும் இவள் அப்பாவிடம் இல்லை. இவளுக்கு ஏதோ கவசம் மாட்டிவிட்ட மாதிரியும் அதன்வழியாகவே தனது மானத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்திக்கொண்ட மாதிரியும் தலைநிமிர்ந்து நடக்கிறார்.
அடி மனசு கசந்தது இவளுக்கு. நீண்ட பெருமூச்சு வந்தது. த்ச் என்று நாக்கு சப்பலோடு எல்லா நினைவுகளையும் உதறிவிட்டு திரும்பி குழந்தையைப் பார்த்தாள்.
பூவையும், குடைமரத்தையும் விட்டு விலகி பத்தடி தள்ளி ஐஸ் வண்டியை சுற்றி ஐஸ் தின்னும் குழந்தைகளின் முகமலர்ச்சியை உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டு நின்றது. பெயரைச் சொல்லி கூப்பிட்டாள் இவள்.
இவளைப் பார்த்ததும் ‘ஐஸ் வேணும்’ என்கிற மாதிரி வண்டிக்காரனைக் காட்டித் தத்தித்தத்தி நடந்து வந்தது. புடவையைப் பிடித்து அண்ணாந்து கெஞ்சியது.
தூக்கிக் கொண்டாள் இவள்.
ஒரு ஐஸ் வாங்கினாள். குச்சியை இவளே பிடித்து குழந்தை வாய்க்குச் சூப்பக் கொடுத்தாள். தானே சூப்பும் ஆசையில் ஐஸைப் பிடித்தது குழந்தை. அதன் சில்லிப்பு தாளாமல் விரலை உதறி கன்னம் சிவக்க சிரித்தது. ‘அவசரமா கண்ணா?’ என்று சிரிப்போடு ஐஸ் தீருகிறவரைக்கும் கையில் வைத்து இவளே சூப்பக் கொடுத்தாள்.
நடந்துகொண்டே குழந்தைக்கு சமுத்திரத்தை சுட்டிக் காட்டினாள் இவள். ஆடுகிற சின்ன வயசுப் பிள்ளைகளைச் சுட்டிக் காட்டினாள். அலைக்குப் போய்விட்ட ஒரு பையன் திணறி ஓடிவருவதைக் காட்டினாள்.
மணி ஏழானது.
இருள் லேசாய் பரவத் தொடங்கி இருந்தது. ரேடியோ ஸ்டேசனுக்குப் பக்கத்தில் பெரிய போலீஸ் வண்டி நின்றிருந்தது. பாதையோரம் இளநீர், மணி, பொம்மை விற்கும் சின்னச்சின்ன கடைகளை விரட்டிக் கொண்டிருந்தார்கள் போலீஸ்காரர்கள். கரும்புச்சாறு வண்டிக்காரன் தள்ளிக்கொண்டு வேறு இடம் போனான். ‘கரும்பு ஜுஸே’ என்ற அவன் குரல் எல்லாப் பின்னணியிலிருந்தும் வித்தியாசப்பட்டு ஒலித்தது.
வேடிக்கை பார்க்கும்போதே ரிக்ஷா வந்துவிட்டது. குழந்தை தூங்கப் போகிற மாதிரி கண் சொக்கியது. தோளில் சாய்த்துக் கொண்டாள் இவள்.
“ரொம்ப நேரமா நிக்கறிங்களா?”
“இல்லப்பா, இப்பதான். அஞ்சு நிமிஷம் இருக்கும்.”
“மின்னியே வந்திருப்பன். லா காலேஜான்ட ஒரு கிராக்கிகிட்ட ஒரு சின்ன தகராறு. பேசிகினே இருந்துட்டன். லேட்டாயிருச்சி. நீங்க ஏறி குந்துங்கம்மா.”
ஏறிக்கொண்டாள் இவள்.
சண்டை மூண்ட விதம் பற்றியும், கிராக்கியும் இவனும் பேசிய சம்பாஷணையையும் பதில் சொன்ன இவன் சாதுர்யம் பற்றியும், கடைசியாய் கூலியை கறாராய் வசூலித்தது பற்றியும் விளாவாரியாய் எடுத்துச் சொன்னான் அவன். சொல்லிக்கொண்டிருக்கும்போதே முத்தியால்பேட்டை வந்தது. முடிவு முக்கியம் இல்லை என்கிற மாதிரி அவனும் நிறுத்திக்கொண்டான். இவளும் கேட்கவில்லை.
ஒரு சின்னச் சிரிப்போடு பத்து ரூபாய்த்தாளை நீட்டினாள்.
“வர்ற வெள்ளிக் கெழம வந்துடுப்பா.”
“சரிம்மா.”
போய்விட்டான். தோளில் கிடத்திய குழந்தையோடு வீட்டுக்குப் போக படலைத் திறந்தாள்.
அரக்கு நிறத்தில் பூத்து வழியும் குரோட்டன்ஸ் வரிசையைத் தாண்டிய முற்றத்தில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அப்பா யாரோ ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார். இவள் நேராய் உள்ளே போய் அறையில் குழந்தையைக் கிடத்தினாள். நிமிஷநேரம் குழந்தைக்குப் பக்கத்தில் தானும் படுத்துத் தட்டிக் கொடுத்தாள். உடம்பின் கசகசப்பு நீங்க மின்விசிறியைத் தட்டிவிட்டு புடவை மாற்றினாள்.
வெளியில் அப்பா குரல் கேட்டது.
“இனிமே எனக்கு என்னங்க கவல? நாலு வருஷத்துக்கு மின்னியாவது வயசுக்கு வந்த பொண்ண வச்சிருக்கமே, கல்யாணம் செய்யணுமேன்னு மடில நெருப்ப கட்டிக்னு இருக்கிற மாதிரி இருந்துச்சி. இப்ப எதுவுமில்ல. ஜாம் ஜாம்னு பொண்ணு கல்யாணத்தயும் நாலுபேர் மதிக்கிற மாதிரி நடத்திப் பாத்தாச்சி. பேரக் கொழந்தயயும் பாத்தாச்சி . . .”
இவளுக்கு மனசில் புரட்டிக்கொண்டு வந்து கசந்தது.
அப்பா, கல்யாணம் பற்றிய அவரது மதிப்பீடு, கற்பு பற்றிய அபிப்பிராயம், ரத்தமும் சதையும் மனசும் உணர்வும் யோசனையும் உள்ளவளாய் பெண்ணைப் பார்க்காது ஜடமாய்க் காணும் பார்வை எல்லாவற்றின் மீதும் எரிச்சல் பொங்கியது. கொடுவாள் எடுத்து ரத்தம் வழிய வழிய வெட்டிப் பலி வாங்கும் பூசாரியாய் அவரைப் பார்த்தாள்.
மீறி வந்த அழுகையைப் பல்லைக் கடித்து நிறுத்தினாள் இவள்.
இன்னும் வெளியே மாப்பிள்ளை தேடிய தனது பிரதாபங்களை சலிக்காமல் அளந்துகொண்டிருந்தார் இவள் அப்பா.
(தாமரை - 1984)