Home

Sunday, 19 February 2023

அசைந்த கைகள் - கட்டுரை

  

”இந்திராநகர் டெலிபோன் எக்சேஞ்ச்சுக்கு எதுத்தாபுல கொஞ்ச தூரம் நடந்து போனா மிராண்டா இங்கிலீஷ் ஸ்கூல்னு ஒரு ஸ்கூல் வரும். அதுக்கு எதிர்பக்கமா ஒரு பஸ் ஸ்டாப் இருக்குது. அங்க வந்து வெய்ட் பண்ணுங்க. போதும். பத்தரையிலேர்ந்து பதினொன்னுக்குள்ள நான் அங்க வந்துடுவேன்” என்று நண்பர் சொல்லியிருந்தார். நான் அவரிடம் வாங்கிய சில புத்தகங்களைத் திருப்பியளிக்க வேண்டியிருந்தது. அதுபோலவே அவரும் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கவேண்டியிருந்தது.

அவர் சொன்னதை நம்பி பத்தரைக்கு அந்த நிறுத்தத்தை அடைந்துவிட்டேன். ஆனால் அவரை அங்கே காணவில்லை. வந்து சேர்ந்துவிட்ட தகவலைத் தெரிவிப்பதற்காக  கைப்பேசியில் அவரை அழைத்தேன். “திடீர்னு ஒரு சின்ன வேலை வந்துட்டுது. இதோ இன்னும் ரெண்டு நிமிஷத்துல கெளம்பிடுவேன். நீங்க அங்கயே வேடிக்கை பார்த்துகிட்டு இருங்க. சரியா பதினொரு மணிக்கு வந்துருவேன்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

சாலையில் இடமே இல்லாத அளவுக்கு ஏராளமான இரண்டுசக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் இரு திசைகளிலும் ஓடிக்கொண்டே இருந்தன. இடையிடையில் பேருந்துகளும் சென்றன. எதுவும் அந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை. ஒவ்வொரு முறையும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் தருணத்தில் அது நிற்குமென்ற நம்பிக்கையில் பயணிகள் கூட்டம் பரபரப்பாக எழுந்து வாகனத்தை நெருங்கிச் செல்ல தயாராவதையும் எதிர்பார்த்ததற்கு மாறாக பேருந்து நிற்காமல் சென்றதும் ஏமாற்றத்துடன் முணுமுணுத்தபடி திரும்பி வந்து நிற்பதையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு பேருந்திலும் அளவுமீறிய கூட்டம் அடைத்துக்கொண்டிருந்தது.

“ஒரு நாளாவது நேரத்துக்கு பஸ் புடிக்கமுடியுதா? சித்த நேரம் நின்னு எல்லாரயும் ஏத்திகிட்டு போனா என்ன? என்னமோ ஏரோப்பிளேன் ஓட்டறமாதிரி சர்ருனு போயிகிட்டே இருக்கானுங்க”

“இந்த மாதிரி நெருக்கடி நேரத்துல இன்னும் ரெண்டு பஸ்ஸ கூடுதலா அனுப்பினா என்ன? அந்த டிப்போவுல இருக்கறவனுங்க இதயெல்லாம் பாக்கமாட்டானுங்களா?”

 “ஒம்போதரையிலிருந்து நிக்கறேன் மேடம். எல்லா பஸ்ங்களும் நிக்காமலே போவுது. நிக்கிற பஸ்ல கால வச்சி ஏறமுடியலை. அவ்ளோ கூட்டம். என்ன செய்யறதுன்னே தெரியலை”

“தெனம் ஆட்டோ புடிச்சி போவறதுக்கு நம்மகிட்ட பணம் கொட்டியா கெடக்குது? எண்ணி எண்ணிதான நாம செலவு பண்ண வேண்டியிருக்குது”

”நாளையிலேருந்து எட்டு மணிக்கே வந்து நின்னாதான் பஸ்ஸ புடிக்கமுடியும்போல”

ஒவ்வொருவரும் பக்கத்தில் நிற்பவர்களிடம் ஆற்றாமையுடன் சொல்வதைக் கேட்டபடி நின்றிருந்தேன். ஒவ்வொருவருடைய முகத்திலும் பதற்றமும் குறித்த நேரத்தில் கிளம்பமுடியவில்லையே என்கிற எரிச்சலும் படிந்திருந்தது.  யாராலும் ஒரு இடத்தில் நிம்மதியாக நிற்கமுடியவில்லை. இந்தப் பக்கம் திரும்புவதும் த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி அந்தப் பக்கம் திரும்புவதும் பெருமூச்சு வாங்குவதும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்கள்.

வேகம் குறைந்து வந்த ஒரு பேருந்து அந்த நிறுத்தத்துக்கு வராமல், இருபது அடி தொலைவு முன்னாலேயே தயங்கி நின்றது. பிரயாணிகள் ஒவ்வொருவராக பிதுங்கி வெளியேறிக்கொண்டிருந்தனர். அந்தப் பேருந்துக்காக நிறுத்தத்தில்  காத்திருந்த ஆண்களும் பெண்களும் அதை நோக்கி வேகவேகமாக ஓடினார்கள். ஒருவர் பின்னால் ஒருவர் முட்டி மோதிக்கொண்டு படிக்கட்டில் ஏறிச் செல்ல முயற்சி செய்தார்கள். “போதும் விலகுங்க. அடுத்த பஸ் பின்னால வரும். அதுல வாங்க” என்று முழங்கிக்கொண்டிருந்தார் நடத்துநர். அவர் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. ஒருவரையொருவர் தள்ளிவிட்டும் தாண்டிக்கொண்டும் உள்ளே செல்வதிலேயே குறியாக இருந்தனர்.

எல்லோருக்கும் பின்னால் ஒரு இளைஞனின் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்ற பெண்மணியை அப்போதுதான் நான் பார்த்தேன். அந்தப் பெண்மணியின் வேகத்துக்கு அவனுடைய கால்கள் வேகம் கொள்ளவில்லை. கால் தவறி கீழே விழுந்துவிடாதபடி அவனை அழைத்துக்கொண்டு மெல்ல மெல்ல பேருந்தை நெருங்கிவிட்டார் அவர். தனக்கு முன்னால் அந்த இளைஞனை நிறுத்திவைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தார். அவனை முதலில் ஏற்றி உள்ளே அனுப்பிவிட்டு அடுத்தபடியாக வண்டிக்குள் ஏறும் திட்டம் அவருக்கு இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

வாசலில் நின்றிருந்த நடத்துநர் “நில்லு நில்லும்மா” என்று அந்தப் பெண்மணியைத் தடுத்தார். ”லேடீஸ் வழியில எதுக்கும்மா ஆம்பளைய ஏத்தறீங்க. போய் பின்னால ஏறச் சொல்லும்மா” என்று சத்தம் போட்டார். அந்தப் பெண்மணி ஒருகணம் செய்வதறியாமல் திகைத்து அந்த நடத்துநரையே பார்த்தார். “ஏம்மா ஒரு தரம் சொன்னா புரியாதா? ஆம்பள ஆள் பின்னால ஏறட்டும். நீ முன்னால ஏறும்மா. லேடீஸ்க்கு நடுவுல எப்படி நிக்கவைப்பீங்க?” என்று தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

அந்தப் பெண்மணிக்குப் பின்னால் நின்றிருந்த பெண்களும் நடத்துநருக்கு இணையாக அவரைப் பார்த்து பேசத் தொடங்கினர்.

“ஆம்பளைய குறுக்குல நிக்க வச்சிட்டு என்னம்மா வேடிக்கை பார்க்கறீங்க? வழிய விட்டு நில்லுங்கம்மா. நாங்கள்ளாம் ஏற வேணாமா?”

“செதுக்கிவச்ச சிலை மாதிரி ஒரே இடத்துல நிக்கறீங்க. அவரு தெளிவாதான சொல்றாரு? புரியலையா?”

அந்த நடத்துநர் ஏதாவது உதவி செய்யக்கூடும் என்கிற எண்ணத்தில் அவர் முகத்தைப் பார்த்துத் திரும்பினார் அந்தப் பெண்மணி. அவர் முகத்தில் கிஞ்சித்தும் அருளே இல்லை. “ஏறறவங்களுக்கு வழிய விட்டு நில்லும்மா. காலை நேரத்துல ஏம்மா இப்படி வந்து சங்கடப்படுத்தறீங்க?” என்று சலிப்போடு முணுமுணுத்தார்.

படியில் கால்வைத்து ஏறுவதற்காகச் சென்ற அந்த இளைஞனோடு அந்தப் பெண்மணி பின்வாங்கினார். கூட்டம் ஏறி உள்ளே சென்றதும் நடத்துநர் விசில் அடித்துக்கொண்டே படிக்கட்டில் தொத்திக்கொண்டார். வண்டி புறப்பட்டுச் சென்றது.

தோல்வியில் தளர்ந்து முணுமுணுத்துக்கொண்டே அந்த இளைஞனை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு நிறுத்தத்துக்குத் திரும்பினார் அந்தப் பெண்மணி. அங்கிருந்த இரும்பு பெஞ்ச்சில் அவனை உட்கார வைத்தார். உட்கார்ந்ததும் அவன் அவரைப் பார்த்து “அம்மா” என்று அழைத்தான். அவன் குரலுக்கும் அவன் வயதுக்கும் தொடர்பே இல்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். அவனோ பார்ப்பதற்கு முப்பது வயது இளைஞனாகத் தெரிந்தான். குரலோ ஏழெட்டு வயது சிறுவனுக்குரியது. அவன் பக்கம் திரும்பி கவனிக்கவே சங்கடமாக இருந்தது. அதே சமயத்தில் கவனிக்காமல் இருக்கவும் முடியவில்லை.

அந்தப் பெண்மணி திரும்பிப் பார்த்ததும் “தண்ணி வேணும்” என்று சொல்லிவிட்டு கை பெருவிரலை வளைத்துக் காட்டினான். அவர் தன் கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவனிடம் கொடுத்தார். “பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா குடி” என்றபடி அவன் மீதே கவனத்தைப் பதித்திருந்தார். அவன் பேச்சும் அசைவுகளும் அவன் நிலையை உணர்த்துவதாக இருந்தன.

தண்ணீர் அருந்தி முடித்ததும் பாட்டிலை வாங்கி மூடி பைக்குள் வைத்துவிட்டு அவனுக்கு பக்கத்திலேயே அவரும் உட்கார்ந்துகொண்டார். பேருந்து வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார். நாலைந்து பேருந்துகள் நிற்காமலேயே செல்ல, அதற்குப் பின்னால் வந்த ஒரு பேருந்து நிறுத்தத்தைக் கடந்து சென்று சிறிது தொலைவில் நின்றது. அந்தப் பெண்மணி அவனை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அந்தப் பேருந்தை நோக்கி ஓடினார். அவர் நெருங்கிச் செல்வதற்குள், அவருக்கு முன்னால் சென்ற பலரும் வாசலை அடைத்துக்கொண்டு நின்றபடி உள்ளே செல்ல முயற்சி செய்தபடி இருந்தனர்.

தன் மகனின் தோளைப் பற்றி முன்னோக்கி செலுத்தியபடி பின்னால் சென்றார் அவர். வண்டிக்குள் இருந்த நடத்துநர் அதைப் பார்த்துவிட்டு ஜன்னல் வழியாக தலையை நீட்டி “யாருப்பா அது தம்பி, பின்னால போ. இவ்ளோ பெரிய ஆளா இருக்க. லேடீஸ்ங்க வழியில வந்து ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு? போ போ. பின்னால போய் ஏறு” என்று அதட்டினார். அதற்குள் அந்த அம்மா நடத்துநர் பக்கமாக திரும்பி கையை நீட்டி, ”என் புள்ளைதான் சார். கொஞ்சம் உடம்புக்கு முடியாத புள்ளை. அதனாலதான் என் கூடவே ஏறிகட்டும்னு அழச்சிட்டு வந்தன்” என்றார். ஆனால் அதையெல்லாம் காது கொடுத்து கேட்கும் மனநிலையிலேயே நடத்துநர் இல்லை. ”முதல்ல மத்தவங்க ஏறறதுக்கு வழிய விட்டு ஓரமா நில்லும்மா. கூட்டம் அலைமோதற சமயத்துல தொல்லை கொடுக்காதீங்கம்மா. தள்ளிப் போங்க. வேற வண்டி பாருங்க. போங்க” என்றார்.

“ஜென்ட்ஸ்க்குன்னு ஒரு வழி இருக்குதில்ல, அந்த பக்கமா அனுப்ப வேண்டிதுதான. அது கூட தெரியாம வழியில நின்னு உயிரை வாங்கறாங்க. எங்கேருந்துதான் கெளம்பி வராங்களோ இவுங்கள்ளாம்” என்று பொதுவாகச் சொல்வது மாதிரி முணுமுணுத்தபடியே படியேறிய பெண்கள் பேருந்துக்குள் சென்றார்கள். ”சார் சார்” என்ற அந்த அம்மாவின் குரலை யாரும் பொருட்படுத்தவில்லை.

“தள்ளி போம்மா, தள்ளி போம்மா” என்று சொல்லிவிட்டு, அவர் விலகிவிட்டார் என்பதை ஓரக்கண்ணால் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு பேருந்து புறப்படுவதற்கான விசிலை அடித்தார் நடத்துநர்.

புறப்பட்டுச் சென்றுவிட்ட பேருந்தையே ஒருசில கணங்கள் திகைப்போடு நின்று பார்த்துவிட்டு, மறுபடியும் பெஞ்சை நோக்கி நடந்து வந்து இருவரும் உட்கார்ந்தனர்.

எனக்கு அவரோடு சிறிது நேரம் உரையாடவேண்டும் போல இருந்தது. “எங்கம்மா போவணும்?” என்று பொதுவாக பேச்சைத் தொடங்கினேன். அவரும் என் பக்கமாகத் திரும்பி “சிவாஜி நகருக்கு போவணும் தம்பி. இப்படி எல்லா வண்டிக்காரனுங்களும் ஏத்த மாட்டோம் ஏத்த மாட்டோம்னு போயிட்டா, எந்த வண்டிதான் எங்கள ஏத்திக்கும்னு தெரியலை” என்றார்.

அந்த நேரத்தில் ஒரு தள்ளுவண்டியில் பஞ்சுமிட்டாய் விற்பவர் சென்றார். ஒரு கொத்தாக ஒரு தாங்கியில் நிறுத்திவைக்கப்பட்ட ஆறேழு குச்சிகளில் கொண்டை போல ஆரஞ்சு நிறத்தில் சுற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தது. நிறுத்தத்தை ஒட்டியிருந்த உட்ப்க்கத் தெருவிலிருந்து அந்த வண்டிக்காரர் வந்துகொண்டிருந்தார். சாலையைக் கடந்து பள்ளியின் வாசல் பக்கம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வந்து நின்றார்.

அந்த இளைஞன் தன்னைப் பிடித்திருக்கும் தன் தாயின் கையைத் தொட்டு “அம்மா பஞ்சு மிட்டாய்” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அப்போதே அந்த மிட்டாயை நாக்கில் வைத்து சுவைப்பதுபோல நினைத்து நாக்கைச் சுழற்றி சப்புக் கொட்டினான். “அம்மா, எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும்மா” என்று கேட்டான்.

அந்த அம்மா அவன் தலையைத் தொட்டு முடியைக் கோதியபடி “இப்ப வேணாம். சொன்னா கேளு. நம்ம வீட்டுப் பக்கம் வரும் அப்ப வாங்கிக்கலாம். புரியுதா?” என்று சொன்னார். அவன் உடனே அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுபோல தலையசைத்துவிட்டு “எனக்கு அது வேணும் எனக்கு அது வேணும்” என்று விசும்பத் தொடங்கினான்.

அந்த அம்மாவால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை.  “இங்க பாரு வெளிய வந்தா சும்மா இருக்கணும்னு அம்மா சொல்லியிருக்கேனா இல்லையா? அமைதியா நல்ல புள்ளையா இருக்கணும். புரியுதா?” என்று நயமாகப் புத்திமதி சொல்லத் தொடங்கினார்.

அவன் எதையும் காதுகொடுத்துக் கேட்டு ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. பிடிவாதமாக “அது வேணும் அது வேணும்” என்று சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லத் தொடங்கினான்.

அக்கம்பக்கத்தில் நின்றிருந்த சிலர் அதைக் கேட்டு ஒரு கணம் அவ்விருவரையும் பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டனர். அந்த அம்மா பெருமூச்சு விட்டபடி “நேரம் காலம் தெரியாத ஆளுடா நீ இந்த நேரத்துல பஸ் வந்தா என்ன செய்யறது சொல்லு?” என்று ஆற்றாமையுடன் சொன்னார். பிறகு கைப்பையைத் திறந்து அதற்குள் வைத்திருந்த இன்னொரு பையிலிருந்து பணத்தை எடுத்து பஞ்சுமிட்டாய்க்காரர்டம் கொடுத்து ஒரு குச்சி பஞ்சுமிட்டாய் வாங்கி வந்து கொடுத்தார். உடனே அவன் அதை வாங்கி நாக்கை நீட்டி இழுத்து வளைத்து சாப்பிட்டான். பிறகு நிறம் மாறிய தன் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்து திருப்தியுடன் “அம்மா, என் நாக்கு நிறம் மாறிப் போச்சு” என்று சொல்லிவிட்டு சிரித்தான். ”ஆமாம் ஆமாம். மாறிட்டுது. சும்மா இரு” என்றார் அந்த அம்மா.

என்னால் அந்தக் காட்சியை நேர்கொண்டு பார்க்கவே முடியவில்லை. இதயமே வெடித்துவிடுவதுபோல இருந்தது. உலகத்தில் யாருக்குமே இப்படி ஒரு துயரம் வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

“எவ்ளோ காலமா இப்படி இருக்குது?”

”சின்ன வயசுலேருந்து இப்படிதாம் தம்பி இருக்குது. ஆரம்பத்துல சின்ன வயசுல ஏதோ கொழந்தைத்தனமா இருக்கான்னு நெனச்சி விட்டுட்டேன். காலப்போக்குல சரியாய்டும்னு நெனச்சி விட்டுட்டேன். பள்ளிக்கூடம் போற வயசு வரைக்கும் கூட மாறலைன்னதும் மனசு பகீருன்னு ஆயிடுச்சி. புள்ள இப்படி இருக்கான்னு தெரிஞ்சதும் இதும் அப்பன்காரன் உட்டுட்டு போயிட்டான். ஆத்தா ஊடு அண்ணன் தம்பி ஊடுன்னு எனக்கு எதுவுமில்லை. ஒரு ஆயாகாரிதான் என்னை வளர்த்து கட்டி கொடுத்தா. அதுவும் எப்பவோ மண்ணுக்குள்ள போய் சேர்ந்துட்டுது. இன்னைக்கு சரியாய்டுவான், நாளைக்கு சரியாய்டுவான்னு கடவுள நம்பி நானும் இத்தனை வருஷங்கள ஓட்டிட்டேன்”

“ஆஸ்பத்திரியில காட்டினீங்களா?”

“ரெண்டு மூனு தரம் போயிருந்தேன். அவுங்க கொடுக்கிற மாத்திரைங்களை இவன் சாப்புடவே மாட்டேங்கறான். வாய்ல போட்டா போதும், அப்படியே எல்லாத்தயும் ஓஓன்னு வாந்தி எடுத்துடுவான். டாக்டருகிட்ட சொன்னா, உள்நோயாளியா சேத்துட்டு போங்கன்னு சொல்லிட்டாரு. நம்ம புள்ளை நம்மகிட்ட இருக்கும்போதே நம்ம வார்த்தைய கேக்கமாட்டுது. அசலாளுங்க வார்த்தைங்கள கேட்டு எப்படி அடக்கமா நடக்கப்போவுதுனு நெனச்சி விட்டுட்டேன். ஊட்டுக்காரன்னு ஒருத்தன் இருந்திருந்தா அதட்டி கிதட்டி ஏதாச்சும் செஞ்சிருப்பான். ஒத்தையில நிக்கற ஆள் நானு. என்னால என்ன செய்யமுடியும்?”

“சிவாஜி நகர்னு சொல்றீங்க. இவ்ளோ தூரம் எங்க வந்தீங்க?”

“இந்த பக்கம் இஸ்கூலுக்கு பின்னால ஒரு சாமியாரு மந்தரிச்சி தாயத்து கட்டிவிடுவாருன்னு சொன்னாங்க. அதனால வந்தேன்”

இந்தக் காலத்திலுமா இப்படி என்று மனசுக்குள் தோன்றினாலும் அவரை எதுவும் கேட்கவில்லை. ”கட்டினாரா?” என்று மட்டும் கேட்டேன்.

“கட்டினாரு. என்னமோ தோஷம்னு சொன்னாரு. ஒரு மாசத்துல குறைய ஆரம்பிச்சி படிப்படியா சரியாய்டும்னு சொன்னாரு. எல்லாமே ஒரு நம்பிக்கைதான தம்பி”

“அது சரி, வரும்போது சிவாஜி நகர்லேருந்து எப்படி வந்தீங்க?”

”பஸ்லதான் வந்தோம். காலை நேரத்துல கூட்டமே இல்லை. பஸ் ஸ்டேன்ட்லயே ஏறிட்டதால இடம் புடிச்சி உக்காந்துட்டம். இப்பதான் இவ்ளோ கூட்டம் முட்டி மோதுது”

“வேலைக்கு போற நேரத்துல எல்லா பஸ்ஸும் இப்படித்தான் இருக்கும். ஒரு ஆட்டோ புடிச்சி கொடுக்கறேன். அதுல போயிடறீங்களா?”

“ஐயையோ, வேணாம் தம்பி”.

“பணத்தை பத்தி கவலைப்படாதீங்க. நான் கொடுக்கறேன். நீங்க சீக்கிரமா வீட்டுக்கு போய் சேந்துடலாம்”

“அதுக்கில்ல தம்பி. ஒரு தரம் ஒரு ஆட்டோக்காரரு எங்கிட்ட சண்டைக்கு வந்துட்டாரு. என்ன பார்த்து ரொம்ப சத்தம் போட்டுட்டாரு. இவனுக்கு சத்தம்னாவே ஆவாது. ரொம்ப பயந்துட்டான். அதுலேருந்து ஆட்டோன்னாவே இவனுக்கு பயம். அதுக்குள்ள கால வச்சாவே போதும், வேணாம் வேணாம்னு கத்துவான்”

“பஸ்ல ஏத்த மாட்டேங்கறாங்க. ஆட்டோ ஒத்துக்காதுங்கறீங்க. அப்புறம் எப்படித்தான் போவீங்க?”

“கூட்டம் கொறைவான பஸ்ஸ பார்த்து போய்க்கிட வேண்டிதுதான்”

அவருக்கு உதவக்கூடிய வகையில் மாற்றுவழி எதுவும் எனக்கும் தோன்றவில்லை. அந்த இளைஞனைப் பார்த்தேன். காற்றில் எங்கிருந்தோ பறந்து பறந்து உருண்டு வரும் கிழிந்துபோன ஒரு காகிதத்தின் மீது அவன் கவனத்தைப் பதித்திருந்தான். அது நகர்ந்துபோவது, அவனுக்கு ஏதோ ஒரு தவளை தத்தித்தத்திச் செல்வதுபோலவோ அல்லது ஒரு பறவை தாவித்தாவிச் செல்வதைப்போஅவோ இருந்திருக்கவேண்டும். அது நகர்ந்து அசையும்தோறும் அவன் கைதட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். ஒரு குழந்தை கைதட்டிச் சிரிப்பதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் முப்பது வயது இளைஞனொருவன் அதே மாதிரி சிரிப்பதை ஒரு கணம் கூட பார்க்கமுடியாது என்று தோன்றியது.

அப்போதுதான் என் மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. உடனே “நான் சொல்ற மாதிரி செய்ங்க. நீங்க பஸ்லயே போகலாம்” என்று அவரிடம் சொன்னேன்.

“என்ன தம்பி?”

“பஸ் வந்து நின்னதும்,  பஸ்க்குள்ள தம்பிய அழச்சிகிட்டு நான் ஜென்ட்ஸ் படிக்கட்டு வழியா போயிடறேன். நீங்க லேடீஸ் படிக்கட்டு வழியா ஏறி உள்ள வந்துடுங்க. தம்பிய பக்கத்துலயே இருந்து பத்தரமா பார்த்துக்கணுங்கறதுதான உங்க பிரச்சினை. உங்களுக்கு கவலையே வேணாம். சிவாஜி நகர் வரைக்கும் அவரை அழைச்ச்சிட்டு வந்து எறக்கி உங்ககிட்ட ஒப்படைக்கறது என் பொறுப்பு. ”

“ஐயோ, எங்களால உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்?” என்று அவர் பதற்றத்துடன் கேட்டார்.

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. நீங்க தயாரா இருங்க. சிவாஜி நகர் வண்டி வந்ததும் சொல்றேன்”

அந்த இளைஞனுக்கு என் கைகள் பழகவேண்டும் என்பதால்  அந்த அம்மா அருகில் இருக்கும்போதே அவனைத் தொட்டு அவன் கைகளைப் பற்றினேன். அவன் விசித்திரமாக என்னைப் பார்த்து சிரித்தான். என் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் முட்கள் நகர்வதை ஆச்சரியத்தோடு பார்த்தான். “இப்ப மணி எத்தனை?” என்று ஆசையோடு கேட்டான். நான் சொன்னேன். அவன் ஓ என்று சொன்னபடி தலையசைத்துக்கொண்டான்.

தொலைவில் சிவாஜி நகர் பேருந்து வருவது தெரிந்தது. கூட்டம் கொஞ்சம் குறைவாக இருப்பதுபோலத்தான் தெரிந்தது. “அம்மா, பஸ் வருது. ரெடியா இருங்க. முன்பக்கமா போய் வண்டிக்குள்ள ஏறுங்க. பயப்படாம போங்க. தம்பிய நான் பார்த்துக்கறேன்” என்று சொன்னேன். அவர் தலையசைத்தபடி இளைஞனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு தயாராக நின்றார்.

பேருந்து நின்றது. ஆட்கள் இறங்கத் தொடங்கினர். நான் அந்த இளைஞனின் கைகளைப் பற்றியபடி ஆண்களின் வரிசையை நோக்கிச் சென்றேன். மெல்ல அவனை முதலில் ஏறவைத்துவிட்டு அவனுக்குப் பின்னால் நான் ஏறினேன். நல்ல வேளையாக எங்கள் இருவருக்கும் இடம் கிடைத்தது.  நிமிர்ந்து பார்த்தபோது பெண்கள் வரிசை வழியாக அந்த அம்மா படியேறி உள்ளே வந்துவிட்டதைக் கவனித்தேன்.

பேருந்து புறப்பட்டதும் நடத்துநர் வந்தார். ”மூனு சிவாஜி நகர்” என்று பணம் கொடுத்தேன். “மூனா?” என்று கேட்டார் நடத்துநர். “ஆமா. முன்னால ஒரு லேடீஸ் ஏறியிருக்காங்க” என்றேன். நிற்கும் இடத்திலிருந்து அந்த அம்மா எங்களை நோக்கித் திரும்பிப் பார்ப்பதை அதற்குள் அந்த நடத்துநரும் பார்த்துவிட்டார். ஒன்றும் சொல்லாமல் சீட்டு கொடுத்துவிட்டு வேறு பக்கமாக நகர்ந்தார்.

வண்டி புறப்பட்டது. ஜன்னல் வழியாக முகத்தில் காற்று வருடிச் செல்லும் விதம் அவனுக்கு மிகவும் பரவசத்தை அளித்திருக்கவேண்டும். ”ஐ, காத்து” என்று கண்கள் மின்ன அவன் சொன்னான். “ஆமாம் ஆமாம்” என்று அவன் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தேன். வழிநெடுக தென்பட்ட கோவில், பாலம், கடைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து கைதட்டிக்கொண்டு  வியப்பில் மூழ்கியபடி ஏதேதோ சொல்லிக்கொண்டே  வந்தான். நான் ம் ம் என்று தலையசைத்து அவனுக்கு உற்சாகமூட்டிக்கொண்டே வந்தேன்.

சிவாஜி நகர் பேருந்து நிலையம் வந்ததும் அவனை அழைத்துக்கொண்டு ஆண்கள் வாசல் வழியாக இறங்கி, நடைமேடையின் பக்கம் ஒதுங்கி நின்றேன். அந்த அம்மா பெண்கள் வரிசையில் இறங்கி வேகமாக எங்கள் பக்கமாக வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை என் பிடியிலிருந்து இயல்பாக விடுவித்துக்கொண்டு அவர் கையைப் பற்றிக்கொண்டான். அம்மா அம்மா என்று சொன்னான்.

பிரயாணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, பேருந்து மீண்டும் புறப்படத் தயாரானது. காத்திருந்தவர்கள் வேகவேகமாக உள்ளே செல்லத் தொடங்கினர். “நான் வரேம்மா. பத்தரமா பார்த்துக்குங்க” என்றபடி விடைபெற்றேன். அந்த அம்மாவால் பேசமுடியவில்லை. தலையை அசைத்தார். அவர் கண்கள் தளும்பி நிறைவதைப் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டே நான் படிக்கட்டு வழியாக பேருந்துக்குள் சென்று இடம் பார்த்து அமர்ந்தேன். பேருந்து நகரும் கணத்தில் அந்த இளைஞனை நோக்கி கையை உயர்த்தி அசைத்தேன்.  எதிர்பாராத விதமாக என்னை நோக்கி அவன் கைகள் நீள்வதை அப்போது கண்டேன்.

 

வண்டி புறப்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு என் கைப்பேசி ஒலித்தது. நண்பர்தான் அழைத்தார். ”நான் ஸ்டாப்புக்கு வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க. ஸ்கூல் பக்கம் வேடிக்கை பார்க்க போயிட்டீங்களா?” என்று கேட்டார். ஒருகணம் தயங்கி, பிறகு “ஆமாமாம். நீங்க அங்கயே இருங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றேன்.

 

(கிழக்கு டுடே – இணைய இதழ் 07.02.2023)