Home

Sunday, 21 May 2023

கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை

 

கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறிச் சென்றுவிட்ட எருமையொன்று குழப்பத்தில் நான்கு திசைகளிலும் மாறிமாறிப் பார்த்தபடி நின்றிருந்தது. என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பி கண்ணாடிக்கோளம்போல மின்னும் கரிய விழிகளை உருட்டி ‘ம்மே’ என்று முதலில் சத்தமிட்டது. பிறகு, அதை நெருங்காமலேயே விலகி நின்றுவிட்ட என் திகைப்பை உணர்ந்து நான் அதனுடைய மேய்ப்பனல்ல என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற திசைகளின் பக்கம் தலையைத் திருப்பி பலவீனமான குரலில் மீண்டும்மீண்டும் ‘ம்மே ம்மே’ என்றது. அதன் கழுத்து வேகமாக அசையும்தோறும் மணியசைந்து ஓசை எழுந்தது.

புங்கமரத்திலிருந்து கொக்குகள் எழுந்து சிறகு விரித்துப் பறந்தன. இரண்டு முயல்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடின. அடுத்த ஐந்து நிமிடங்களில் கண்காணிப்புக் கோபுரத்தை அடைந்துவிடலாம் என்று தோன்றியது. கோபுரத்தை ஒட்டிய கம்பிவேலிக்கு மறுபுறம் இருந்த குன்றும் நிலமும் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் கோபுரம்தான் என் மாலைநடையின் எல்லை. அதைத் தொடும்போது சூரியன் மறைவதற்குத் தயாராக காட்சி தரும். வானத்தில் நிகழும் நிறமாற்ற அற்புதங்களை சில கணங்கள் பார்த்திருந்துவிட்டு திரும்பிவிடுவேன். கோபுரத்தில் அஜய் சிங்காவைச் சந்திக்க முடிந்தால்  சிறிதுநேரம் உரையாடுவது வழக்கம். இல்லையென்றால் சரசரவென்று இறங்கி விடுதிக்குச் சென்றுவிடுவேன்.

அஜய் சிங்காவை ஒரு மாதமாகவே கோபுரத்தின் பக்கம் பார்க்கமுடியவில்லை. ரோஷன் நின்றிருந்தான். அஜய் சிங்காவைப்பற்றி எந்தக் கேள்வியைக் கேட்டாலும் எரிந்துவிழுந்தான். ”சுட்டி சுட்டி” என்று ஒரு வார்த்தையைமட்டுமே பதிலாகச் சொன்னான். ஒரு மாதமாக ஒரே பதில். அவன் கண்களில் நட்பே இல்லை. அவனிடம் பேசுவதும் ஒரு மரத்திடம் பேசுவதும் ஒன்று என அந்தச் சமயத்தில் தோன்றும். ஊரைவிட்டு புறப்பட இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில் அவனைப் பார்க்காமல் போவதை நினைத்தாலே வருத்தம் கவிந்தது. ஒரு மாதத்துக்கு முன்புவரை தினந்தோறும் மாலையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தவனை, அடுத்த நாள் முதல் பார்க்கமுடியாமல் போய்விட்டது.

எந்நேரமும் வாகன நெரிசலும் சத்தமும் கொண்ட பெருநகரத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். என் ஆய்வுக்கட்டுரையை எங்கேயாவது மூன்று மாதம் தங்கியிருந்து எழுதிமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இடம்தேடிக்கொண்டிருந்தபோது, என் சித்தப்பாவின் பரிந்துரையில் இந்த ஊரில் குன்றையொட்டிய வனத்துறை விடுதியில் அறையொன்று கிடைத்தது. குன்று, மரங்கள், பாறைகள், பறவைகள் என அந்தப் பிரதேசம் என் மனத்துக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. முதல் நாள் மாலை நடைக்காக, எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் படம்பிடித்தபடி குன்றில் ஏறி நடந்தபோதுதான் உச்சியில் கண்காணிப்புக் கோபுரத்தையும் அதில் துப்பாக்கியோடு நின்றிருந்த அஜய் சிங்காவையும் பார்த்தேன். அவனுடைய சின்னக் கண்களும் சிவந்து உப்பிய கன்னங்களும் பார்க்கப்பார்க்க வசீகரமாக இருந்தன. “ஒரு போட்டா எடுத்துக்கலாமா?” என்று கேட்டதும் புன்னகையோடு ”ஒன்னு என்ன? பத்து எடுங்க” என்றபடி சம்மதித்தான். உடனே துப்பாக்கியை ஓரமாக வைத்துவிட்டு,  அந்தக் கோபுரத்தில் சாய்ந்தும் உட்கார்ந்தும் கைகளை விரித்தபடியும்  வானத்தைப் பார்த்தபடியும் நின்று விதம்விதமாக போஸ் கொடுத்தான். டிஜிடல் கேமிராவை அவனிடம் கொடுத்து, எடுத்த படங்களை அவன் பார்க்கும்படி செய்தேன். கண்கள் மின்ன ஒரு சிறுவனைப்போல படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, “அச்சா ஹை, ந?” என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தான்.

மெதுவாக “ஒன் பெயரென்ன?” என்று கேட்டான். நான் சொன்னேன். “ஐயோ, அதுலாம் என் வாய்லயே வராது. பேசாம ஒன்ன நான் தோஸ்த்னு கூப்பிடறேன், சரியா?” என்றபடி என் கைகளைப் பற்றினான். சம்மதத்துக்கு அடையாளமாக நானும் தலையசைத்தபடி புன்னகை புரிந்தேன்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு மாலை நடையிலும் சிங்காவைச் சந்தித்து வந்தேன். கீழேயிருந்து நான் வாங்கிச் செல்லும் சமோசாவையும் பகோடாவையும் அவன் விருப்பத்துடன் சாப்பிட்டான். சிலிகுரி ராணுவமுகாமில் வேலை செய்துகொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத் துடைக்கச் சொன்ன வேலையைச் செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக,   கீழ்ப்படிய மறுத்தவன் என குற்றம் சுமத்தி, இந்தக் குன்றிலிருந்த முகாமுக்கு மறுநாளே மாற்றிவிட்டதாகச் சொன்னான். வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்கே இருக்கும் அதிகாரி மட்டுமல்ல, சக ஊழியர்களும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டான். கசப்பான புன்னகை ஒருகணம் அவன் உதடுகளில் நெளிந்து மறைந்தது. ஊருக்குச் செல்ல விடுப்பு தர மறுப்பதாகவும் மாற்றல் கோரும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்ளாமலேயே ஒவ்வொருமுறையும் நிராகரிப்பதாகவும் வருத்தத்துடன் சொன்னான்.

தன் மணிபர்ஸில் வைத்திருந்த அவனுடைய குடும்பப்படத்தை என்னிடம் காட்டினான் சிங்கா. அவனுடைய மூன்று பெண்குழந்தைகளும் அவன் மனைவியின் கழுத்தை வளைத்துக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். ”பெரிய பொண்ணு டாக்டராவணும். நடு பொண்ணு வக்கீலாவணும். சின்ன பொண்ணு டீச்சராவணும். நடக்குமா தோஸ்த்?” என்று என்னைப் பார்த்து கேட்டபடி பர்ஸை பைக்குள் வைத்துவிட்டு புன்னகைத்தான். “கண்டிப்பா நடக்கும் சிங்கா” என்று அவனுக்கு நம்பிக்கை ஊட்டியபடி அவன் தோளைத் தொட்டு அழுத்தினேன்.

முகாமுக்குள் மற்றவர்கள் அவனுடன் அதிகமாகப் பேசுவதில்லை என்றான். அவனும் தேவை இல்லாமல் மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை என்றான். யாரையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மொழி புரியாத கிராமத்துக்குள் செல்லவும் அவன் அஞ்சினான். ஒரே ஒரு முறை குன்றைவிட்டு இறங்கி கிராமத்துக்குள் சென்றபோது, ஊர்க்காரர்கள் “சீனாக்காரன், சீனாக்காரன்” என்று சுற்றி நின்று கைதட்டியிருக்கிறார்கள். அந்த ஏளனம் அவனுக்குள் அச்சத்தை விதைத்துவிட்டது.

”இந்த ஊருல யாருக்குமே ஏன் இந்தி தெரியமாட்டுது தோஸ்த்?. நீ மட்டும் எப்படி பேசற?” என்று அவன் இந்தியில் கேட்டான்.

“நான் இந்த ஊரு இல்ல சிங்கா. வேற ஊரு” என்றேன். அவன் தலையை அசைத்துக்கொண்டான். பிறகு, “பேச்சுத் தொணைக்கும் ஆளு இல்ல, படிக்கவும் ஒரு பேப்பர் கூட கெடயாது. நாளாவ நாளாவ எனக்கு இந்தியே மறந்துடும்போல இருக்குது தோஸ்த்” என்று சிரித்தான். அவன் முகத்தைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. “நீ கவலப்படாத சிங்கா. நான் ஏற்பாடு செய்றேன்” என்றேன். சந்தோஷத்துடன் அவன் சிரித்தபோது, கன்னம் விரிய கண்கள் ஒடுங்கிக்கொண்டன.

அன்று இரவே சித்தப்பாவை தொலைபேசியில் அழைத்து, எங்கள் தெருவில் இருக்கும் பழைய பேப்பர் கடையில் ஒரு பத்து கிலோ பழைய இந்தி செய்தித்தாட்களும் பத்திரிகைகளும் வாங்கிக் கட்டி ஒரு பையில் போட்டு தினமும் இந்தக் குன்றிருக்கும் ஊருக்கு வருகிற தனியார் பஸ் டிரைவரிடம் கொடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே ”பழசா? ஒனக்கு எதுக்குடா அது? இதுதான் நீ ரிசர்ச் செய்யற லட்சணமா? போன காரியத்த செய்யாம, என்ன பண்ணிட்டிருக்க அங்க நீ?” என்று அதட்டினார். விவரங்களை விரிவாகச் சொன்னபிறகுதான் அமைதியானார். மூன்றாவது நாள் என் கைக்கு பை வந்துவிட்டது. அன்று மாலையே நான் அதை அஜய் சிங்காவுக்கு அதைக் கொடுத்தேன். “ஷுக்ரியா ஷுக்ரியா” என்று கண்களில் நீர்மல்க என் கைகளை அவன் பற்றிக்கொண்டான்.

அதற்குப் பிறகு அவன் பேச்சில் உற்சாகம் பெருகியது. ஒவ்வொரு நாளும் படித்துத் தெரிந்துகொண்ட செய்திகளை ஒட்டி தனக்கிருக்கும் கருத்துகளை என்னிடம் சொல்லத் தொடங்கினான். பத்து நாட்களுக்குள்ளேயே எல்லாவற்றையும் படித்துவிட்டான். அவனுக்காக சித்தப்பாவிடம் மீண்டும் பேசி, இன்னொரு பை நிறைய பழைய இந்தி இதழ்களை வரவழைத்துக் கொடுத்தேன். அவனுடைய படிக்கும் வேகம் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது. பேச்சு வளரவளர எங்களிடையே பழக்கமும் நெருக்கமும் அதிகரித்தன. தன் குழந்தைகளையொட்டி அவனுக்குள் இருக்கும் கனவுகள் பற்றி பரபரப்பாக ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தான்.

”எல்லாத்தயும் நானே கெடுத்து குட்டிச்சுவராக்கிகிட்டேன் தோஸ்த். என்னமாதிரி ஆளுங்களுக்கு எதுக்கு தோஸ்த் சுயமரியாதை? சொன்ன வேலய செய்றதுதானே சிப்பாய் வேலை. முடியாதுன்னு வீம்புக்கு மூஞ்சிய திருப்பிகிட்டு வந்ததுக்கு இப்ப நல்லா அனுபவிக்கறேன். பொண்டாட்டி புள்ளைங்க ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்ன்னு பிரிஞ்சி கெடக்கறதுதான் மிச்சம். மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது”. அதைச் சொன்னபோது அவன் உதடுகளில் கசப்பான ஒரு புன்னகை படர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

நினைவுகளை அசைபோட்டபடி நடந்ததில் குன்றின் உச்சியை நெருங்கியதே தெரியவில்லை. இப்போது கண்காணிப்புக் கோபுரம் முழுசாகவே தெரியத் தொடங்கியது. கோபுரத்தில் சீருடையில் நிற்கும் உருவத்தை நன்றாகவே பார்க்கமுடிந்தது. பார்த்ததுமே தெரிந்துவிட்டது. அது அஜய் சிங்காதான். கொஞ்சமாவது அதிர்ஷ்டம் என் பக்கம் இருப்பதாக அக்கணத்தில் தோன்றியது. சட்டென்று ஒரு பரபரப்பு என் மனத்தில் பொங்கியது. காற்றில் படபடவென்று அசையும் அவனுடைய தலைமுடியைக் காணமுடியவில்லை. மொட்டை அடித்திருந்தான். நெருங்கி குரல்கொடுத்ததும் திரும்பிப் பார்த்து புன்னகைத்தபடி வேகமாக கையசைத்தான். பதிலுக்கு நானும் கையசைத்தேன்.

”சிங்கா, எப்படி இருக்கே? சொல்லாம கொள்ளாம எங்க போயிட்ட? ஒன்ன பாக்காமலே ஊருக்கு திரும்பிடுவேனோன்னு பயந்துட்டே இருந்தேன்” கேள்விகளை அடுக்கியபடியே கோபுரத்தின் படிகளில் ஏறினேன்.

அருகில் சென்று நின்ற பிறகுதான் அவன் மெலிந்திருப்பதையும் கன்னம் ஒட்டியிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். “என்னாச்சி சிங்கா? உடம்பு சரியில்லயா?” என்று கேட்டேன். “சொல்றேன் தோஸ்த், சொல்றேன் தோஸ்த். ஏன் அவசரப்படறே?” என்றபடி என் தோளைப்பற்றி அழுத்தினான்.

“அந்த ரோஷன் இருக்கானே, பெரிய ஆபீசர்னு நெனப்பு அவனுக்கு. ஒன்ன பத்தி எப்ப கேட்டாலும் சுட்டிசுட்டின்னு சொல்லியே என் கழுத்த அறுத்துட்டான்”. என் சொற்களில் வெளிப்பட்ட எரிச்சலைப் பார்த்து சிங்கா சிரித்தான்.

“சொல்றேன், சொல்றேன். எல்லாத்தயும் சொல்றேன். ஒரு நிமிஷம் இப்படி ஒக்காரு”. சொல்லிக்கொண்டே அருகில் இருந்த ஒரு மர ஸ்டூலை இழுத்து என் பக்கமாக போட்டான். அவன் முகத்தில் தெரிந்த புன்னகை அப்படியே இருந்தது.

“ஊருக்கு போயிருந்தியா?”

“இல்ல தோஸ்த்.” அவன் தலை அசைந்தது. குழப்பத்தோடு நான் அவனை உற்றுப் பார்த்தேன். ”ஊருக்கும் போவல. டூட்டியிலயும் இல்லைன்னா, எங்கதான் போயிருந்த?” என்று மீண்டும் கேட்டேன். அவன் விழிகளில் நிறைந்திருக்கும் சோர்வை அப்போதுதான் முதன்முதலாகக் கவனித்தேன். அவை என்னைப் பார்ப்பதுபோல இருந்தாலும், எங்கோ தொலைவில் அவை ஆழ்ந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அவன் வலது காதையொட்டி முதுகுப்பக்கமாக நீளமாக தையல் போட்ட ஒரு தழும்பை அப்போதுதான் கவனித்தேன். அட்டையொன்று ஒட்டிக்கொண்டதைப்போல இருந்தது அது. நான் பார்ப்பதைக் கவனித்ததும் அனிச்சையாக அவன் விரல்கள் சட்டைக்காலரை இழுத்து அதை மறைக்க முயற்சி செய்தன.

“அது என்ன தழும்பு? என்னமோ கம்பியால கிழிச்சமாதிரி இருக்குது.” அவனை நெருங்கி அவன் கையை விலக்கி, பதற்றத்துடன் அந்த வடுவைப் பார்த்தேன். ”சொல்லு சிங்கா. எப்படி ஆச்சி இது? எங்கனா விழுந்திட்டியா?” என்றேன்.

“ஐயோ தோஸ்த், ஒங்கிட்ட எதயும் மறைக்கமுடியாதுபோல”  என்று ஒரு கணம் அமைதியாக இருந்தான். பிறகு “அடிச்சிட்டாங்க தோஸ்த்” என்றான்.

“எதுக்கு?”

”ஒரு மாசத்துக்கு முன்னால டில்லியிலேருந்து ஒரு பெரிய அதிகாரி இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தாரு. அவரு இட்ட வேலைய செய்யறதுக்காக என்ன அனுப்பியிருந்தாங்க. அவரு சந்தோஷப்படறமாதிரி எல்லா வேலையையும் செஞ்சேன். கெளம்பற அன்னிக்குதான் என்ன பத்திய தகவல கேட்டாரு. எல்லா உண்மையையும் சொன்னேன்.  சரி, டில்லிக்கு போனதும் உன் டிரான்ஸ்பருக்கு ஏற்பாடு  செய்யறேன்னு சொல்லிட்டு போனாரு.”

“அதுக்கும் நீ அடி வாங்கனதுக்கும் என்ன சம்பந்தம் சிங்கா?”

“அவசரப்படாத தோஸ்த். ஒவ்வொன்னா சொல்றேன், கேளு.  அந்த  ஆபீசர் சொன்ன விஷயம் இங்க இருக்கற கோட்டானுங்களுக்கு எப்படியோ தெரிஞ்சி போச்சி. இவனுங்ககிட்டயும் அவரு விசாரிச்சிருப்பாருன்னு நெனைக்கறேன். என்ன இந்த எடத்த உட்டு அனுப்பிடக்கூடாதுன்னு ஒடனே திட்டம் போட ஆரம்பிச்சிட்டானுங்க இவனுங்க……”

”என்ன சிங்கா சொல்ற? உண்மையாவா? உன் கூடவே இருந்துகிட்டு உனக்கே குழி பறிக்கறாங்களா?”

“அடுத்தவன் துக்கத்தயும் அழுகையும் பார்த்து மனசுக்குள்ள ரசிச்சி சிரிக்கிற ஆளுங்கதான் இந்த உலகத்துல பாதி பேரு தோஸ்த்.  அதுல ஒங்க ஆளுங்க எங்க ஆளுங்கன்னு எந்த வித்தியாசமும் கெடயாது.”

“என்னால நம்பமுடியவே இல்ல சிங்கா.”

“நீ இன்னும் அறியா புள்ளயாவே இருக்கற.  ஆபீசரு ஏற்பாடு செய்ற ஆர்டர் அங்கேருந்து வரதுக்குள்ள, என்ன பத்தி மோசமான ரிப்போர்ட்ட இங்கேருந்து போயிடணும்ங்கறதுதான் இவனுங்க திட்டம்.”

“அட பாவிங்களா”

“எனக்கு சம்பந்தமே இல்லாத வேலைங்களயெல்லாம் என்ன செய்ய சொன்னானுங்க.  எதுலியாவது நான் மாட்டணும்ன்னு அவனுங்க எண்ணம். இவரு கீழ்ப்படிய மறுக்கிறார்ன்னு உடனே ரிப்போர்ட் எழுத அத ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கணும்ன்னு அலைஞ்சானுங்க…..”

”சரியான பழிகாரனா இருப்பானுங்க போல.”

“நான்தான் சூடுபட்ட பூனயாச்சே. மறுபடியும் மாட்டிக்க நான் என்ன முட்டாளா? உயிரே போனாலும் சரி, எதிர்ப்ப மட்டும் காட்டிடக் கூடாதுங்கறதுல மட்டும் உறுதியா இருந்தேன்.”

“என்ன சொல்ற சிங்கா?”

“ஒரு நாள் எங்க பெரிய அதிகாரி என்ன கூப்பிட்டு வாட்ச் டவர் டூட்டிக்கு ரோஷன் போவட்டும், நீ டைனிங் ஹால்ல க்ளீன் பண்ணுன்னு அனுப்பி வச்சான்.”

“அடடா, நீ செஞ்சியா?”

“வேற வழி? டைனிங் ஹால் வேல முடிஞ்சதுமே, வராண்டாவ க்ளீன் பண்ணுன்னு சொன்னான். அப்புறம் கிச்சன், மீட்டிங் ஹால், சிட் அவுட், தோட்டம்னு சொல்லிட்டே போனான். நானும் ஒன்னொன்னத்தயும் கிளீன் செஞ்சி மோப் போட்டு வச்சேன்.”

“அதோடவாவது உட்டானா அந்த அதிகாரி?”

‘எங்க உட்டான்? அதுக்கப்புறம்தான் புதுசு புதுசா பிளான் போட்டான். மறுநாள் வரச்சொல்லி கார்ஷெட்ட கிளீன் பண்ணுன்னு சொன்னான். அது முடிஞ்சதுமே டென்னிஸ் கோர்ட்ட சுத்தி புல்லு வெட்டுனு சொன்னான். அதயும் செஞ்சேன். டாய்லெட் கிளீனிங், டிரைனேஜ் கிளீனிங், காரேஜ் கிளீனிங்ன்னு மாத்திமாத்தி அனுப்பனான்…..”

“மனசாட்சியே இல்லாதவன் போல”.

“ஆனா ஒரு வார்த்த கூட நான் தட்டி பேசலை தோஸ்த். என் குடும்பத்த நெனச்சி எல்லாத்தயும் செஞ்சேன். இந்த எடத்த ஏன் கேம்ப்னு நெனைக்கணும், நம்ம வீடுன்னு நெனச்சிக்குவோம்ன்னு மனச உறுதியாக்கிகிட்டு எல்லா டூட்டியயும் செஞ்சேன்..”

“அப்ப கூட அவன் மனசு அடங்கலையா?”

“ஒரு நாள் குவார்ட்டர்ஸ்ல வாஷிங் மிஷின் வேல செய்யல, கொஞ்சம் போய் பாருன்னு அனுப்பி வச்சாரு எங்க மேஜர். அங்க போனதும் அந்த மேடம் மிஷின் வேல செய்யலை, நீயெ தொவைச்சி குடுன்னு சொன்னாங்க. எல்லாமே அவுங்க துணி, அவுங்க பொண்ணுங்க துணிங்க. எதயும் சொல்லற நெலமையில நான் இல்ல. பேசாம எல்லாத் துணிங்களயும் துவைச்சி காயவச்சிதுட்டு வந்தேன்.”

என்னால் அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. திகைப்போடு “என்ன சிங்கா? வேலை வைக்கறதுக்குன்னு ஒரு வரைமுறை இல்லயா?” என்று கேட்டேன்.

“எந்த வரைமுறையும் ராணுவத்துல கிடையாது தோஸ்த். குறிப்பா  சிப்பாய்ங்கள வேல வாங்கறதுல ஒரு மொறயும் கெடயாது. ராணுவம்ன்னா டிசிப்ளின்னு வெளியில இருக்கறவங்களுக்கு தோணும். உண்மையில அது ஒரு பெரிய அடக்குமுறை. சர்வாதிகாரம். ஆனா எதுவுமே கண்ணுக்கு தெரியாது. ஏன் எதுக்குன்னு எதயும் கேக்கமுடியாது” அவன் குரல் வேதனையில் அமிழ்ந்திருந்தது.

“அதிகாரிங்களுக்கு அவ்வளவு ஆணவமா?”

“ஒவ்வொரு அதிகாரிக்குள்ளயும் ஆணவம் நெருப்புமாதிரி எரிஞ்சிகிட்டே இருக்கும் தோஸ்த். தனக்கு மேல இருக்கற  பெரிய அதிகாரிய பார்த்து ஒவ்வொரு நிமிஷமும் பொறாமையில வெந்து சாவானுங்க. அவனப்போல ஆகறதுக்கான எல்லாத் தகுதிகளும் தனக்கும் இருக்குது. எங்கயோ ஒரு சின்ன பிசகு நடந்ததால இந்த அளவோட தன்னுடைய வளர்ச்சி நின்னுட்டுதுன்னு பொலம்பிகிட்டே இருப்பானுங்க. அந்த எரிச்சலயும் கோபத்தயும் யார் மேல காட்டமுடியும்? தனக்கு கீழ இருக்கறவங்க மேலதான் எல்லாம் விடியும்….”

நான் பேச்சில்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அதிகாரிங்க ஆணவத்தயாவது புரிஞ்சிக்க முடியும் தோஸ்த். மேல போவ முடியாத வெறுப்புலயும் கடுப்புலயும் சொல்றானுங்கன்னு நெனச்சிக்கலாம். ஆனா அதிகாரிங்களுடைய பொண்டாட்டிங்க ஆணவத்ததான் புரிஞ்சிக்கவே முடியாது…”

“நீ சொல்றதுலாம் உண்மையா சிங்கா? கேக்கறதுக்கே அதிர்ச்சியா இருக்குது.”

“இந்த தழும்ப பத்தி கேட்டியே, இதுக்கு காரணம் எங்க மேஜருடைய பொண்டாட்டி. தெரியுமா?”

“என்ன சிங்கா சொல்ற?”

“ஆமாம் தோஸ்த். எந்த முணுமுணுப்பும் இல்லாம ஒரு நாள் துணி தொவச்சி குடுத்ததும் மேஜருடைய பொண்டாட்டி தெனமும் வந்து தொவச்சி குடுத்துட்டு போன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா. டூட்டி இருக்கே மேடம்ன்னு சொன்னேன். அதுக்குலாம் அவரு மாற்று ஏற்பாடு செஞ்சிடுவாரு, நீ வந்து துணிங்கள தொவச்சி குடுத்தா போதும். ஒன் தொவயல் வெளுப்பு  எல்லாம் ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொன்னா.”

“அப்பறம் நீ என்ன செஞ்ச?’

“வேற வழியில்ல தோஸ்த். செஞ்சிட்டுதான் வந்தேன். என்மேல குற்றம் சுமத்தற மாதிரி ஒரு வாய்ப்பயும் நானா உருவாக்கி தரக் கூடாதுன்னு பல்ல கடிச்சிகிட்டு செஞ்சேன் தோஸ்த். ஒரு நாளு துணிய உதறி கொடியில காய போடும்போது அந்த ஈரம் தோட்டத்து பக்கமா மேஞ்சிட்டிருந்த அவுங்க வீட்டு நாய்மேல பட்டுட்டுது. பெரிய லேப்ரேடர் நாய். அது என்ன பார்த்து உர்ர்னு கொலச்சிகிட்டே கிட்ட வந்தது. பயத்துல ஸ்ஸ், போ அந்த பக்கம்ன்னு கைய வேகமா காட்டனேன். அப்ப கையில வச்சிருந்த மேடம் சூடிதார் மண்ணுல உழுந்துட்டுது. உடனே மேடம் கோவத்துல கீழ கெடந்த கம்பிய எடுத்தாந்து  என் தோள்பட்டயிலயும் முதுவுலயும் அடிஅடின்னு அடிச்சிட்டா. அப்ப வாங்கன அடியில முதுகுத்தோல் கிழிஞ்சிட்டுது. ஆஸ்பத்திரியில போட்ட தையலுடைய தழும்புதான் அது“

சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு “இங்க பாரு” என்று சட்டையை விலக்கி தழும்பைக் காட்டினான். பிறகு பார்வையை விலக்கி சரிந்துகொண்டிருந்த சூரியனைப் பார்த்து பெருமூச்சுவிட்டான்.

“ரத்தக் காயத்தோட ரூமுக்கு வந்தா, எங்கூட இருக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து, என்ன காரணம்ன்னே தெரியாம என்ன சுத்தி நின்னு அடிச்சானுங்க. நல்லா இருக்கறவன பைத்தியம் பைத்தியம்ன்னு கிண்டல் செஞ்சானுங்க. காலால எட்டி எட்டி ஒதைச்சான் ஒருத்தன். துப்பாக்கி கட்டையாலயே ஓங்கி பின்கழுத்துல அடிச்சான் இன்னொருத்தன். ஆனா நான் ஒருத்தனயும் திருப்பி அடிக்கலை தோஸ்த். எல்லா ஒதைங்களயும் வாங்கிகிட்டு மரக்கட்டமாதிரி கெடந்தேன். அந்த கூட்டத்துலயும் எவனோ ஒரு நல்லவன் இருந்தான் போல, அவன்தான் என்ன ஆஸ்பத்திரியில சேத்துட்டு போயிட்டான்…”

“என்ன கொடுமை இது சிங்கா? எதுக்கெடுத்தாலும் அடிதானா?”

“அதெல்லாம் இங்க சர்வசாதாரணம் தோஸ்த். எங்க பழய கேம்ப்ல ஹெலிகாப்டர்ல ஏறப்போன கமாண்டருக்கு ஒரு சிப்பாய் சல்யூட் அடிச்சான். அவன் பொசிஷன் நல்லா இருக்குதுன்னு அவன் தோள்ல தட்டிகுடுத்து பாராட்டிட்டு எலிகாப்டருல ஏறி போயிட்டாரு அந்த கமாண்டர். தள்ளி நின்னுகிட்டு அதயே பாத்திட்டிருந்த கேம்ப் ஆளுங்க அந்த சிப்பாய் என்னமோ தப்பு செஞ்சிட்டான், அத சுட்டிகாட்டி கமாண்டர் கண்டிச்சிட்டு போறாருன்னு நெனச்சிட்டு என்னடா தப்பு செஞ்சன்னு அவன அதட்டனானுங்க. தப்பு ஒன்னும் நடக்கலை, அவரு பாராட்டிட்டுதான் போனாருன்னு அவன் சொன்னத யாருமே நம்பலை. எதுவுமே தப்பு நடக்காம அவரு ஏன்டா ஒன் தோள்ல கை வைக்கணும்ன்னு அடிஅடின்னு அடிச்சி பின்னி எடுத்துடானுங்க. அடிக்கறதுன்னா எங்க ஆளுங்களுக்கு அவ்வளவு ஆசை தோஸ்த்.” 

ஏதோ ஒரு பேச்சு வேகத்தில் “கதையெல்லாம் சரி சிங்கா. காரணமே இல்லாம அத்தன பேரு சேந்து ஒன்ன அடிச்சபோது, ஒருத்தன கூடவா நீ திருப்பி அடிக்கலை?  ஒன் பக்கம் நாயம் இருக்கும்போது, தைரியமா நீ அடிச்சிருக்கணும் சிங்கா” என்றேன்.

“சுயமரியாதை முக்கியம்ன்னு ஒரு தரம் தைரியமா பேசனுதுக்கே இப்படி எங்கயோ ஒரு காட்டுல தவிக்க உட்டுட்டத மறக்கமுடியுமா தோஸ்த்? நியாய தர்மத்துல என்ன இருக்குது தோஸ்த்? என் குடும்பத்துக்கு பக்கமா ஒரு எடத்துக்கு நான் போவணும். மூணு வருஷமா பாக்காத என் புள்ளைங்க மூஞ்சி என் கண்ணுமுன்னாலயே நிக்குது தோஸ்த். அவுங்கள பாக்கறதுக்கு என் மனசு எப்படி துடிக்குது தெரியுமா? அதுக்காக இன்னும் எவ்வளவோ அடிச்சாலும் தாங்கிக்குவேன்.”

அவன் மெதுவாகச் சிரித்தான். “எல்லாத்துலயும் ஒரு பலன் இருக்கும் தோஸ்த். இந்த வாரத்துல ஆர்டர் வந்துடும்ன்னு ஒரு பேச்சு ஓடுது. அது வந்துட்டா போதும், நான் பழயபடி சிலிகுரி போயிடுவேன்” என்றபடி தன் கன்னத்தைச் சொரிந்துகொண்டான் அவன். “எங்க போனாலும் ஒன்ன மறக்கமாட்டன் தோஸ்த்” என்றபடி என் கைகளைப் பிடித்து குலுக்கினான். பிறகு என்னை தோளோடு சேர்த்து அழுத்திக்கொண்டான்.

“சரி, நான் வரட்டுமா?. நானும் ரெண்டு நாள்ல கெளம்பணும்” என்று சொல்லிக்கொண்டே படிகளின் பக்கம் திரும்பினேன். இருள் மெல்ல கவிந்தபடி இருந்தது.  ஒரு பெரிய நாரைக்கூட்டம் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கிப் பறந்து சென்றது. “சரி தோஸ்த், பாக்கலாம்” என்று சிரித்த சிங்கா “ஒன் ஆராய்ச்சிய சிக்கிரம் முடிச்சிட்டு பெரிய அதிகாரியா போ தோஸ்த்” என்று சொன்னான். தொடர்ந்து சில கணங்கள் தயங்கிய பிறகு “ஆனா யாரயும் அடிக்காத தோஸ்த்” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நிறுத்தினான்.

ஈரம் ததும்பிய அவன் கண்களைப் பார்த்தபடி அவன் வலது கையைப் பற்றினேன். எதுவும் பேசத் தோன்றவில்லை. பார்வையாலேயே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கோபுரத்திலிருந்து இறங்கி அடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். பாதையோரப் புதர்களில் செண்பகப்பூவின் மணம் கமழ்ந்தது. தாழ்ந்த மரக்கிளையிலிருந்து பறவைகளின் கீச்சுக்குரல்கள் இடைவிடாமல் ஒலித்தன.

 

(2015)