இந்தியாவில் அரசு அமைப்புக்கு எதிரான சக்திகளைப்பற்றி ஆய்வு செய்ய பிரிட்டன் அரசு ரெளலட் என்னும் வெள்ளைக்கார நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை 1919ஆம் ஆண்டில் அமைத்தது. அக்குழு இந்தியாவெங்கும் பயணம் செய்து தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. அதையொட்டி, கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களை அடக்குவதற்காக புதிய சட்டங்களை இயற்ற அரசு முனைந்தது. அரசின் நடவடிக்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் சத்தியாகிரக வழிமுறைகளைப்பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும் விதமாகவும் 14.03.1919 அன்று பம்பாய் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காந்தியடிகள் உரையாற்றினார். அந்த உரை உடனடியாக எல்லாச் செய்தித்தாட்களிலும் வெளிவந்து, நாடெங்கும் அச்செய்தி வேகமாகப் பரவியது.
ஒரு சத்தியாகிரகி
என்பவன் கடுமையான இன்னல்களில் சிக்கிக்கொள்ளும் தருணங்களில் கூட சத்தியத்தை
மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்பதும் அரசு வழியாக வரும் இன்னல்களாக இருந்தாலும்
சரி, தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பவர்கள் வழியாக வரும் இன்னல்களாக
இருந்தாலும் சரி, அவற்றை முழு மனத்துடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்
என்பதும் தன் எதிரிகளையும் அன்புடன் நேசிக்க அனைவரும் தொடர்ந்து முயற்சி
செய்யவேண்டும் என்பதும்தான் அந்த உரையின் சாரம். சத்தியாகிரகத்தில் பங்குகொள்ள
விரும்புகிறவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ‘சத்தியாகிரக உறுதிமொழி’ என்னும்
பெயரில் தயாரித்து வெளியிட்டார் காந்தியடிகள்.
சென்னையில்
பொதுமக்களிடையில் அக்காலத்தில் ரெளலட் மசோதாவை ஒட்டி புரிந்தும் புரியாமலும் ஒரு
கசப்புணர்வு படர்ந்திருந்தது. அத்தருணத்தில் காந்தியடிகளே நேரிடையாக அவர்களிடையில்
தோன்றி உரையாற்றினால் அவர்களுக்குத் தெளிவூட்டுவதும் தேசப்பற்றை ஊட்டுவதும் எளிதாக
இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த காங்கிரஸ்காரரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் மற்ற
நண்பர்களும் கருதினர். உடனே காந்தியடிகளுக்கு அழைப்பு விடுத்து தந்தி வழியாக ஒரு
செய்தியை அனுப்பினார். அவர்களுடைய விருப்பத்தின் நோக்கத்தை அறிந்த காந்தியடிகள்
உடனடியாகப் புறப்பட்டு 18.03.1919 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது அவருடைய
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தம் உரையை எழுதி
மகாதேவ தேசாயிடம் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்துவிட்டார். அவரைத் தொடர்ந்து
மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் ஆங்கிலத்திலும் வ.உ.சி. தமிழிலும்
ஹர்சர்வோத்தமராவ் தெலுங்கிலும் உரையாற்றினர். காந்தியடிகள் தங்கியிருந்த
இல்லத்தில் சத்தியாகிரக உறுதிமொழிப்பத்திரம் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான
இளம்தொண்டர்கள் ஆர்வத்துடன் அங்கு திரண்டு வந்து கையெழுத்திட்டனர். அவர்களில் இன்டர்மீடியட் முடித்துவிட்டு
கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவரும் இருந்தார்.
காந்தியடிகளின் உரையை மேடைக்கு அருகில் அமர்ந்து முழுமையாகக் கேட்டு மன எழுச்சி
கொண்டிருந்தார் அந்த இளைஞர். இன்னல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தொடர்பான
காந்தியடிகளின் சொற்கள் அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவர்
பக்தவத்சலம்.
மாணவப்பருவத்திலிருந்தே
தேசத்தலைவர்களின் உரைகளைக் கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் பக்தவத்சலம். அந்த
உரைகள் வழியாகத் தன் அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டார். அதனால் சென்னையில் கடற்கரையிலும் மற்ற
பகுதிகளிலும் நடைபெறும் கூட்டங்களைப்பற்றிய செய்தி கிடைத்ததும், உடனடியாக அங்கே
சென்றுவிடுவார். பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சத்தியமூர்த்தி, இராஜாஜி,
அன்னிபெசன்ட் அம்மையார், கவிக்குயில் சரோஜினிதேவி அம்மையார், சி.பி.ராமசாமி,
கஸ்தூரிரங்க ஐயங்கார் என பலருடைய உரைகளைக் கேட்டுக்கேட்டு நாட்டுநடப்புகளைப்பற்றிய
புரிதலை வளர்த்துக்கொண்டார்.
தமிழகப்பயணத்தை
முடித்துக்கொண்டு சபர்மதிக்குப் புறப்பட்டுச் சென்ற காந்தியடிகள் ரெளலட் சட்டத்தை
எதிர்த்து 06.04.1919 அன்று நாடு தழுவிய ஒரு முழுநாள் வேலை நிறுத்தத்தையும்
உண்ணாநோன்பையும் அறிவித்தார். பம்பாயைச் சேர்ந்த செளபாட்டி கடற்கரையை ஒட்டிய
இடத்தில் அதிகாலையிலேயே காந்தியடிகள் தம் தொண்டர்களுடன் அமைதியான முறையில் திரண்டு
வந்து உண்ணாநோன்பையும் வேலை நிறுத்தத்தையும் தொடங்கினார். நாடெங்கும் எண்ணற்ற
தலைவர்கள் அதைப் பின்பற்றி அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்
தொடர்ச்சியாக, சென்னையில் நிகழ்ந்த வேலைநிறுத்தத்திலும் உண்ணாநோன்பிலும் பிற
தலைவர்களுடன் பக்தவத்சலமும் கலந்துகொண்டார்.
எதிர்பாராத விதமாக
பம்பாய், டில்லி போன்ற சிற்சில இடங்களில் வேலை நிறுத்தங்களில் சில அசம்பாவிதங்கள்
நடந்துவிட்டன. ஒருசிலர் தம் வாக்குறுதியை மீறி வன்முறையில் ஈடுபட்டு
பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்துவிட்டனர். இதற்காகவே காத்திருந்த காவல்
துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து
சிறையில் அடைத்துவிட்டனர். காந்தியடிகளையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இரு
தினங்களுக்குப் பிறகு அவர் விடுதலைபெற்று வெளியே வந்ததும் உருக்கமாகவும்
உறுதியாகவும் அகிம்சை வழியைப் பின்பற்றி நடக்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள்
விடுத்தார்.
அடுத்து சில
நாட்களிலேயே, 13.04.1919 அன்று அமிர்தரஸில் ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில்
வைசாக பண்டிகையை ஒட்டி கூடியிருந்த கூட்டத்தை துப்பாக்கியால் சுட்டுக் கலைக்குமாறு ஜெனரல் டயர் என்னும் ராணுவ
அதிகாரி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அதன் விளைவாக நானூறுக்கும் மேற்பட்ட
பொதுமக்கள் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எளிய மக்கள் படுகாயமடைந்தனர்.
நாடெங்கும் அப்படுகொலையைக் கண்டித்து, தலைவர்களும் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னை மயிலாப்பூரைச்
சேர்ந்த கபாலீஸ்வரர் ஆலய வளாகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாத் தேசியத்தலைவர்களும்
தொண்டர்களும் ஒரு முழுநாள் உண்ணாநோன்பை மேற்கொண்டனர். தம் எதிர்ப்பைப் பதிவு
செய்யும் விதமாக பக்தவத்சலமும் அந்த உண்ணாநோன்பில் கலந்துகொண்டார். உண்ணாநோன்பைத்
தொடர்ந்து திலகர் கட்டடத்தில் கண்டனக்கூட்டமொன்றும் நடைபெற்றது. அக்கூட்டத்தில்
பாரதியாரும் பங்கேற்று உரையாற்றினார். அவரை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட
பக்தவத்சலம் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு திரண்டிருந்த
அனைவருடைய நெஞ்சங்களிலும் பாரதியாரின் பேச்சாற்றல் விடுதலைவேட்கையை எழுப்பியது.
அந்த ஆண்டில் டிசம்பர்
மாதத்தில் காங்கிரஸ் ஆண்டு மாநாடு அமிர்தரஸ் நகரத்தில் நடைபெற்றது. இராணுவக்கமிஷன்
உறுப்பினர் பதவியிலிருந்து டயரை விலக்கவேண்டும் என்றும் வைசிராயாக இருந்த
செம்ஸ்போர்டைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் இந்த மாநாட்டில் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அதை உறுதியான குரலில்
கண்டிக்கும் இயல்புடைய காந்தியடிகள், கடந்த போராட்ட காலத்தில் மக்கள் வன்முறையில்
ஈடுபட்டதைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். கையால் நூற்பது, கையால்
நெசவு செய்வது போன்ற பழைய தொழில்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டவேண்டுமென்ற
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
1920ஆம் ஆண்டு ஜூலை
மாதத்தில் காந்தியடிகள் ஒத்துழையாமைத் திட்டத்தை அறிவித்தார். அதன் அம்சங்களை
எடுத்துரைப்பதற்கு ஆகஸ்டு மாதத்தில் நாடு தழுவிய ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிட்டு,
அப்பயணத்தைத் தமிழகத்திலிருந்து தொடங்கினார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்து
சேர்ந்தார். அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம்
நடைபெற்றது. அப்போது பட்டதாரிகள் தம் பட்டங்களைத்
துறக்கவேண்டுமென்றும் வழக்கறிஞர்கள் தம் தொழிலைத் துறக்கவேண்டுமென்றும் அரசு ஆதரவு
பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அவற்றிலிருந்து வெளியேறவேண்டும் என்றும்
வேண்டிக்கொண்டார்.
மறுநாள் 13.08.1920
அன்று காந்தியடிகள் சட்டக்கல்லூரியில் உரையாற்றும் வகையில் அங்கு படித்துவந்த
பக்தவத்சலம் போன்ற மாணவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால்
கல்லூரி முதல்வர் அந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதியை வழங்கவில்லை. அதனால்
கல்லூரிக்கு அருகில் இருந்த திறந்தவெளியிலேயே மாணவர்கள் கூட்டம் நடத்தினர்.
அவர்களிடையில் உரையாற்றிய காந்தியடிகள் தேச விடுதலைக்கு மாணவர்கள் என்னென்ன
வகைகளில் தொண்டாற்ற முடியும் என்பதை எடுத்துரைத்தார். அவருக்கு மிக அருகில்
அமர்ந்தபடி அவருடைய உரையைக் கேட்ட பக்தவத்சலத்துக்கு தேசத்தொண்டில் ஈடுபடும்
ஆர்வம் பொங்கியெழுந்தது. அதே நேரத்தில் கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு
வெளியேறும் கோரிக்கை அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தவும் செய்தது. நிகழ்ச்சி
முடிவடைந்து காந்தியடிகள் வெளியேறிய பிறகும் பக்தவத்சலத்தால் தன்
குழப்பத்திலிருந்து விடுபட முடியவில்லை. கல்லூரி முடிந்த பிறகு வீட்டுக்குச்
செல்லும் டிராமில் ஏறுவதற்குப் பதிலாக எதிர்த்திசையில் செல்லும் டிராமில் ஏறிப்
பயணம் செய்யும் அளவுக்கு அந்தக் குழப்பம் அவரை ஆட்கொண்டது. காந்தியடிகளின்
பேச்சைத் தொடர்ந்து அக்கல்லூரியில் படித்துவந்த சில மாணவர்கள் படிப்பைத் துறந்து
வெளியேறினர். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு தேசத்தொண்டில் ஈடுபடுவதற்குப்
பதிலாக, படிப்பை முடித்துவிட்டு தேசத்தொண்டில் ஈடுபடலாம் என்று தன்னைத்
தேற்றிக்கொண்டார் பக்தவத்சலம்.
அடுத்து இரண்டு
ஆண்டுகள் தொடர்ந்து படித்து வழக்கறிஞர் பட்டத்தோடு கல்லூரியைவிட்டு வெளியேறிய
பக்தவத்சலம் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரிடம் பயிற்சி வழக்கறிஞராகச் சேர்ந்து ஏறத்தாழ
நான்கு ஆண்டு காலம் பணி புரிந்தார். அக்காலத்தில் பிராமணரல்லாத பட்டதாரிகளை
நேரிடையாக அரசுப்பணியில் அமர்த்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த பிட்டி
தியாகராய செட்டியார் பக்தவத்சலத்துக்கு அரசுப்பணி அளித்து உதவ முன்வந்தார். ஆனால் பக்தவத்சலம் அந்த உதவியை ஏற்க மறுத்து
பயிற்சி வழக்கறிஞராகவே தொடர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதையும் துறந்து வெளியேறி தேசிய இயக்கத்தில்
இணைந்துகொண்டார். கதர்ப்பிரச்சாரக்குழுவிலும் மதுவிலக்குக்குழுவிலும் இணைந்து
கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றத் தொடங்கினார்.
ஆந்திரப்பிரதேசத்தில்
உள்ள காகிநாடாவில் 28.12.1923 அன்று தேசிய காங்கிரஸ் மாநாடு தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது. முதன்முதலாக
பக்தவத்சலம் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு தலைவர்களின் உரைகளை ஆர்வத்துடன்
கேட்டார். மறைந்த தலைவர் கஸ்தூரிரங்க ஐயங்கார் அவர்களின் மறைவையொட்டி அஞ்சலி
செலுத்திவிட்டு மாநாடு தொடங்கியது. மெளலானா முகம்மது அலி தலைமை வகித்த
அம்மாநாட்டில் மோதிலால் நேரு, வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு,
விஜயராகவாச்சாரியார், சர்தார் மங்கள்சிங், டாக்டர் அன்சாரி போன்ற முக்கியமான
தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது காந்தியடிகள் எரவாடா சிறையில்
அடைக்கப்பட்டிருந்ததால், அவருக்குப் பதிலாக கஸ்தூர்பா காந்தி கலந்துகொண்டார். தன்னுடைய ஒரே மகனை இழந்த சோகத்தையெல்லாம்
விழுங்கிக்கொண்டு புலுசு சாம்பமூர்த்தி அந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற உழைத்தார்.
பெல்காம் நகரத்தில்
26.12.1922, 27.12.1922 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற 39வது தேசிய காங்கிரஸ் மாநாட்டிலும் பக்தவத்சலம் கலந்துகொண்டார்.
சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்ட காந்தியடிகள் அம்மாநாட்டுக்குத் தலைமை வகித்து
உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பும் இராட்டையில் நூல் நூற்பதும் அவருடைய உரைகளில்
முதன்மை இடங்களை வகித்தன.
மாநாட்டிலிருந்து
திரும்பிய பின்னர் காந்தியடிகள் வகுத்தளித்த நிர்மாணப்பணிகள் சார்ந்து ஆர்வமுடன்
பாடுபட்டார் பக்தவத்சலம். சென்னை புறநகர்ப்பகுதிகளிலும் செங்கல்பட்டு பகுதிகளிலும்
நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு தீண்டாமை ஒழிப்பு, கதர்ப்பிரச்சாரம், மது
ஒழிப்பு போன்ற வளர்ச்சித்திட்ட பணிகள் சார்ந்து மக்களுக்கு நல்ல கருத்துகளை
எடுத்துரைத்தார். கதர்ப்பிரச்சாரத்துக்காக 1927இல் காந்தியடிகள் தமிழகத்துக்கு
வந்த சமயத்தில் அவரோடு இணைந்து செங்கற்பட்டு மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம்
செய்தார். பக்தவத்சலத்திடம் தென்பட்ட கதர் இயக்கம் சார்ந்த ஆழ்ந்த ஈடுபாட்டைப்
பார்த்த காந்தியடிகள், அவரைப் பாராட்டி ஊக்கமூட்டினார்.
டாக்டர் அன்சாரி
தலைமையில் சென்னையில் ஸ்பர் டாங்க் மைதானத்தில் 26.12.1927 முதல் 28.12.1927 வரை
மூன்று நாட்கள் காங்கிரஸ் மகாசபை நடைபெற்றது. வரவேற்புக்குழுவின் தலைவராக
முத்துரங்க முதலியாரும் செயலராக பக்தவத்சலமும் செயல்பட்டனர். அதுவரை ’டொமினியன் அந்தஸ்து’ பெறுவதையே
குறிக்கோளாகக் கொண்டிருந்த காங்கிரஸ் இம்மாநாட்டில்தான் ’இந்தியாவின் குறிக்கோள்
முழு விடுதலையே’ என்று அறிவித்தது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
நாடெங்கும் மனக்கசப்பு பெருகியிருந்த நேரத்தில் அந்த மாநாடு நடைபெற்றது. ஒவ்வொரு
வகுப்பினரும் அடுத்த வகுப்பினருடைய மன உணர்ச்சியைப் பாதிக்காமல் உரிய மதிப்பளித்து
நடந்துகொள்ள வேண்டும் என காந்தியடிகளே தயாரித்துக் கொடுத்த தீர்மானம்
வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
1919ஆம் ஆண்டில்
இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆட்சிமுறையின் நிறைகுறைகளை ஆய்வு செய்வதற்காக சைமன்
என்பவர் தலைமையில் ஏழு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்ட அடங்கிய
குழுவொன்று 03.02.1928 அன்று பம்பாய்க்கு வந்தது. ஓர் இந்திய உறுப்பினர் கூட
இடம்பெற்றிராத அக்குழுவை எதிர்க்க காங்கிரஸ் முடிவெடுத்தது. நாடெங்கும் எதிர்ப்பு
ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. இளைஞரான பக்தவத்சலம் எண்ணற்ற மேடைகளில் குழு
எதிர்ப்பு உரைகளை ஆற்றினார்.
உப்புச் சட்டத்தை
மீறும் வகையில் காந்தியடிகள் 12.03.1930 அன்று சபர்மதியிலிருந்து தண்டி கடற்கரையை
நோக்கி தம் தொண்டர்களுடன் ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக
13.04.1930 அன்று திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கி தம்
தொண்டர்களுடன் இராஜாஜி ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து
இந்தியாவெங்கும் கடற்கரை சார்ந்த ஊர்களில் காந்தியத் தொண்டர்களின் ஊர்வலங்களும்
தமக்குத் தேவையான உப்புக்காக கடல்நீரைக் காய்ச்சும் போராட்டங்களும் நடைபெற்றன.
சென்னை, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற நகரங்களிலும் இத்தகு போராட்டங்கள்
நடைபெற்றன. சென்னையில் பல்வேறு கடற்கரைப்பகுதிகளில் பிரகாசம், துர்காபாய்,
கிருஷ்ணய்யர், ஆக்கூர் அனந்தாச்சாரி, ஜமதக்னி, முத்துரங்க முதலியார், பாஷ்யம்,
பக்தவத்சலம் போன்றோர் உப்புச்சட்டத்தை மீறினர். அதன் விளைவாக காந்தியடிகள் உட்பட பல
தலைவர்களையும் தொண்டர்களையும் தேசமெங்கும் கைது செய்து சிறையில் அடைத்தது அரசு.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக காந்தியடிகளுக்கும்
இர்வினுக்கும் இடையில் 05.03.1931 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி
உப்பு வரியை அரசு விலக்கிக்கொண்டது.
அதே ஒப்பந்தப்படி
கள்ளுக்கடைகள், அயல்நாட்டுத்துணிகளை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றின் முன்னால்
நின்று மறியல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் பல இடங்களில் அமைதியான
வழியில் எதிர்ப்பைத் தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்யும் சம்பவங்கள்
தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருந்தன. ஒருமுறை சைனா பஜாருக்கு அருகில் நடைபெற்ற
மறியலில் பக்தவத்சலம் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பெண்குழந்தை பிறந்திருக்கும் செய்தி வந்து
சேர்ந்தது. செய்தி மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் உடனடியாகப் பார்த்து
மகிழ்ச்சியுறமுடியாத சூழலை நினைத்து துயரமடைந்தார் பக்தவத்சலம். அவசியத்தேவைக்கு
பரோலில் செல்வதற்கு சிறைவிதிகளில் இடமிருந்த போதும், எழுதிக் கொடுத்து அனுமதியைப்
பெறுவது தன் இலட்சியத்துக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என அஞ்சி தன்
ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டார். சில வாரங்கள் கழித்து அவருக்குப் பிரியமான
பாட்டி இயற்கையெய்திவிட்டதாக துயரச்செய்தி வந்து சேர்ந்தது. அந்தத் துயரத்தையும்
ஆழ்நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டார் பக்தவத்சலம். விடுதலைக்குப் பிறகே அவர் தம்
குடும்பத்தினரை நேரில் கண்டார். மகிழ்ச்சியையும் துயரத்தையும் ஒரே நேரத்தில்
அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ்
அரசியல் மாநாடு 1931 ஆம் ஆண்டு இறுதியில் மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில்
மூத்த தலைவரான இராஜாஜிக்கும் இளைய தலைவரான
சத்தியமூர்த்திக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவரும் வெளிப்படையாகவே
இரு அணிகளாகப் பிரிந்து வேலை செய்தனர். பக்தவத்சலம் காமராஜரோடு இணைந்து சத்தியமூர்த்தியை
ஆதரித்தார். தலைவர் பதவிக்கு ருக்மணி லட்சுமிபதியும் சத்தியமூர்த்தியும்
போட்டியிட்டனர். இறுதியில் சத்தியமூர்த்தி வெற்றி பெற்று தலைவரானார். பக்தவத்சலம்
செயலாளரானார்.
1935ஆம் ஆண்டில்
இராஜேந்திர பிரசாத் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். எல்லா முக்கியமான
நகரங்களுக்கும் இருபத்தோரு நாட்கள் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்து,
தொண்டர்களிடையில் உரையாற்றினார். அப்போது அவருக்குத் துணையாக சென்ற பக்தவத்சலமே
அவருடைய எல்லா உரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்றினார்.
1936இல் நடைபெற்ற
நகரசபைத்தேர்தலில் பக்தவத்சலம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயிலாப்பூர்
தொகுதியில் நகரசபை உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு
உதவி மேயர் பதவியும் கிடைத்தது. அப்போது மேயராகப் பணியாற்றியவர் ஸ்ரீராமுலு
என்பவர்.
1937இல் நடைபெற்ற
பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேரிடையாகவே போட்டியிட்டது. காங்கிரஸின்
வெற்றிக்காக சத்தியமூர்த்தியும் பக்தவத்சலமும் தமிழகமெங்கும் பயணம் செய்து
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையான
இடங்களில் வெற்றி பெற்றது. பக்தவத்சலம் திருவள்ளூர்த் தொகுதியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். இராஜாஜியும் வெற்றி பெற்று முதலமைச்சரானார். அவருடைய
ஆட்சியின்போதுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்குச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனால் ஏற்படும்
பொருளிழப்பைச் சமாளிக்கும் விதமாக, விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலய நுழைவுச்சட்டமும்
அந்தக் காலகட்டத்தில்தான் நிறைவேறியது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆட்சி அதிக
காலம் நீடிக்கவில்லை. 1939இல் பிரிட்டன் அரசு இரண்டாவது உலகப்போரில் இந்தியாவைத்
தன்னிச்சையாக இணைத்துக்கொண்டதைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவெங்கும்
ஆட்சிப்பொறுப்பில் இருந்த மாகாண அரசுகள் தேசமெங்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு
வெளியேறின.
காந்தியடிகள் உடனடியாக
தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். 17.10.1940 அன்று வினோபா பாவே
வார்தாவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள பவுனாரில் போர் எதிர்ப்புப்
பிரச்சாரத்தை நிகழ்த்தினார். பிறகு அடுத்தடுத்த நாட்களில் சர்கான், சாலு, தியோலி
என வெவ்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். 21.10.1940 அன்று, அவருடைய
பயணத்தைத் தடுத்த காவலர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வினோபாவின்
வழியில் தேசமெங்கும் ஏராளமான சத்தியாகிரகிகள் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில்
ஈடுபட்டு சிறைபுகுந்தனர். திருவள்ளூரில் போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட
பக்தவத்சலம் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 250 ரூபாய்
அபராதமும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது. பக்தவத்சலம் அபராதம் கட்ட
மறுத்ததால், அவருடைய காரைப் பறித்து ஏலத்தில் விற்று பணத்தை எடுத்துக்கொண்டது.
பக்தவத்சலம் முதலில் வேலூர் சிறையிலும் பிறகு திருச்சி சிறையிலுமாக
தண்டனைக்காலத்தைக் கழித்தார்.
ஒருமுறை ராஜாஜி
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரிவினைத்தீர்மானத்தைக் கொண்டுவந்து
உரையாற்றினார். அப்போது, ஒரே நாடு என்னும் உறுதியான எண்ணத்தில் மூழ்கியிருந்த
பக்தவத்சலம் போன்றோர் அத்தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றினர். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்தது.
அதனால் சீற்றமுற்ற இராஜாஜி செயற்குழு பதவியிலிருந்தும் தேசிய காங்கிரஸ் கமிட்டிக்
குழுவிலிருந்தும் வெளியேறினார். அன்றுமுதல் இராஜாஜியை மீண்டும் காங்கிரஸில்
சேர்க்கக்கூடாது என்னும் குரல் தமிழகமெங்கும் வலுப்பெறத் தொடங்கியது. இதன் விளைவாக
இராஜாஜி சார்பில் ஒரு குழுவும் காமராஜர் சார்பில் ஒரு குழுவுமாக இரு குழுக்கள்
தனித்தனியாக உருவாவதை ஒருவராலும் தடுக்க இயலவில்லை.
08.08.1942 அன்று
பம்பாய் நகரத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு காமராஜர், முத்துரங்க
முதலியார் ஆகியோரோடு சேர்ந்து பக்தவத்சலமும் சென்று கலந்துகொண்டார். அடுத்த நாளே
காந்தியடிகள், நேரு உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். எந்தச் சிறையில் யார்
அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்னும் செய்தி கூட ஒருவருக்கும் தெரியவில்லை.
மாநாட்டில் கலந்துகொண்டு தத்தம் ஊர்களை நோக்கி ரயிலில் வந்துகொண்டிருந்தவர்களை பல
ஊர்களில் ரயிலிலிருந்து இறக்கி கைது செய்து அழைத்துச் சென்றார், மாநாட்டுத்
தீர்மானங்களை நகல் எடுத்து விநியோகம் செய்யும் வேலைக்காக அரக்கோணம் நிலையத்தில்
இறங்கி வெளியேறிவிட்டார் காமராஜர். சென்னை நிலையத்தில் இறங்கும் சமயத்தில்
பக்தவத்சலம், முத்துரங்கம் உள்ளிட்ட முப்பது பேர்களை காவலர்கள் கைது செய்து
நுங்கம்பாக்கம் சிறையில் அடைத்துவைத்தனர். பிறகு சென்னை மத்தியச் சிறைச்சாலைக்கு
மாற்றினர். அதன் பிறகு நாகபுரி வழியாக அமராவதி என்னும் ஊரிலுள்ள சிறைக்கு
அழைத்துச் சென்று அடைத்தனர். இரண்டரை ஆண்டுக்காலம் விசாரணை எதுவுமின்றி
பக்தவத்சலம் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்புக்கைதியாகவே அச்சிறையில்
வைக்கப்பட்டிருந்தனர். அதற்குப் பிறகே விடுதலை பெற்று ஊருக்குத் திரும்பினர்.
சென்னை மாகாணத்துக்கான
சட்டமன்றத்தேர்தல் 1946இல் நடைபெற்றது. கடந்த ஐந்தாண்டு காலமாகவே காமராஜர்
அணிக்கும் இராஜாஜி அணிக்கும் இடையில் புகைந்துகொண்டிருந்த பூசல் அனைவருக்கும்
வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டது. இச்சூழலில் ஒருவரும் எதிர்பாராத வகையில்
பிரகாசம் தலைமையிலான மூன்றாவது குழு முன்னணிக்கு வர முயற்சி செய்தது. 215 இடங்களில் 163 இடங்களில் காங்கிரஸ்
வெற்றி பெற்றிருந்த போதிலும் யார் தலைமையேற்பது என்பது ஒரு கேள்விக்குறியாகவே
இருந்தது. உண்மையான தொண்டர்கள் தம் உற்சாகத்தை கொஞ்சம்கொஞ்சமாக இழக்கத்
தொடங்கினர். தேசமெங்கும் இந்து முஸ்லிம் பிரச்சினை பற்றியெரிந்துகொண்டிருந்த
சமயத்தில் தமிழ்ச்சூழலில் உட்கட்சிப் பிரச்சினை அணைக்கமுடியாத நெருப்பாக எரிந்தது.
தொடக்கத்தில் பிரகாசம்
சிறிதுகாலம் முதலமைச்சராக பணிபுரிந்தார். அடுத்து ஓமந்தூரார் அப்பொறுப்பை ஏற்று
வழிநடத்தினார். சிறிது காலத்துக்குப் பிறகு அவரும் விலகிவிட, குமாரசாமி ராஜா
பதவியேற்றார். அச்சூழலில் 1952இல் மீண்டும் காங்கிரஸ் கட்சியே தேர்தலில் வெற்றி
பெற்றது. அப்போது மத்திய அரசின் வழிகாட்டலுக்கு இணங்கி அனைவரும் இராஜாஜியை முதல்வராக
ஏற்றுக்கொண்டனர். அத்தேர்தலில் பொன்னேரி தொகுதியில் போட்டியிட்ட பக்தவத்சலம்
தோல்வியடைந்தார். அப்போது பாரததேவி என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கி
நடத்தினார். 1954இல் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காமராஜர் புதிய அமைச்சரவையை
அமைத்தார். மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தவத்சலம் அந்த
அமைச்சரவையில் விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1957இல் உருவான அமைச்சரவையில்
உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். அடுத்து 1962இல் உருவான அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நேருவின் வேண்டுகோளை ஏற்று கட்சி வேலையின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள 1963இல்
தன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் காமராஜர். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக
பக்தவத்சலம் பொறுப்பேற்றார்.
பல ஆண்டுகள்
தொடர்ச்சியாக பல துறைகளில் பணிபுரிந்ததன் விளைவாக அவருக்கு துறைசார்ந்த அனுபவங்கள்
பல சிக்கலான தருணங்களை எதிர்கொள்ளவும் பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கும் துணையாக
இருந்தன. கீழ்பவானித் திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம்,
மெய்யாற்று நீர்விசை மின்சாரத்திட்டம், பாபநாசம் இரண்டாவது திட்டம், பைக்காரா
மூன்றாவது திட்டம் ஆகியவை அனைத்தும் பக்தவத்சலத்தின் ஆர்வத்தாலும் ஈடுபாட்டாலும்
வடிவெடுத்த திட்டங்கள்.
பக்தவத்சலம்
அறநிலையத்துறை அமைச்சராகப் பணியாற்றிய சமயத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான கோயில்களைப் புனரமைப்பதற்கு வழிசெய்தார். அதிக வருமானம் கிடைக்கும் கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்கள் உருவாக தூண்டுகோலாகவும் இருந்தார். அதன் காரணமாக, அக்காலத்தில் தருமபுர ஆதீனம் அவருக்கு நல்லறங்காவலர் என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பக்தவத்சலத்தின்
ஆட்சிக் காலத்தில்தான் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாநிலமெங்கும் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் முதன்முதலாகப் பணியிடைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரிகளில் தமிழில் கற்பதற்கான வாய்ப்பும் பக்தவத்சலத்தின் ஆட்சிக் காலத்தில்தான் உருவானது. புகுமுக வகுப்புகளைத் தமிழில் நடத்துவதற்குத் தாராளமாக மானியங்கள் வழங்கப்பட்டன . தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் பக்தவத்சலத்தின் சாதனைகளில் ஒன்று.
பள்ளிக்கூடங்களும்
கல்லூரிகளும் மிக அதிக அளவில் அக்காலத்தில் தேவைப்பட்டன. அவை அனைத்தையும் உடனடியாக
அமைப்பதற்கு அரசிடம் போதிய நிதி இல்லை. இச்சூழலில் ஒரு கல்லூரியைக்
கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு யாரேனும் முன்வந்தால்,
அந்த நிதி உதவியைக் கொண்டு கட்டுமான வேலைகளை முடிக்க நினைத்தது அரசு. மேலும் நிதி உதவி செய்தவரைப் பெருமைப்படுத்தும்
விதமாக நன்கொடையாளரின் பெயர் கல்லூரிக்குச் சூட்டப்படும் என்றும் அறிவித்தது. அதை
அறிந்த ஈ.வெ.ரா பெரியார் பக்தவத்சலத்தின் முயற்சியை மனம் திறந்து பாராட்டினார்.
தொடர்ந்து அரசுக்குக் கொடுப்பதற்கு தன்னிடம் பணம் எதுவும் இல்லையென்றும் அதற்குப்
பதிலாக திருச்சியில் தனக்குச் சொந்தமான நிலத்தை அன்பளிப்பாக அளிக்கமுடியும்
என்றும் தெரிவித்தார். பக்தவத்சலம் அதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததும்
குறிப்பிட்ட நிலத்தை அரசுக்கு எழுதிக் கொடுத்தார் ஈ.வெ.ரா. அங்கு உருவான
கல்லூரிக்கு ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டது.
பக்தவத்சலத்தின்
பெருமைகளுக்கும் தியாகங்களுக்கும் அப்பால், அவர் தன் ஆட்சியை இழப்பதற்கும்
காங்கிரஸ் தன் அடித்தளத்தை இழப்பதற்கும் தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்புப்
போராட்டம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. 1950 முதல் பதினைந்து
ஆண்டுகளுக்கு ஆட்சிமொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் ஏற்கனவே
உறுதி செய்திருந்தது. அந்த உறுதிமொழியை அளித்த பிரதமர் நேரு 1964இல் மறைந்தார். 1965இல் அந்த உறுதிமொழியின் காலமும் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, புதிய
மத்திய அரசு மீண்டும் இந்திமொழிப்பயிற்சிக்கு செயல்வடிவம் கொடுக்கத் தூண்டியது.
தேசியத்தலைமை எடுக்கும் முடிவுகளை ஏற்றுச் செயல்படுத்தவேண்டிய நெருக்கடிகளில்
பக்தவத்சலம் சிக்கிக்கொண்டிருந்தார். எதார்த்த நிலைகளைக் கேட்கும் அளவுக்கு
தேசியத்தலைமை செவிகளற்று இருந்தது. பதவியை உதறிவிட்டுச் சென்றால் உருவாகச்
சாத்தியமான உட்கட்சிப்பூசல்களால், காலம்காலமாக கட்டிக்காத்த இயக்கமே அடையாளமற்றுப்
போய்விடுமோ என எழுந்த அச்சத்தால் அவர் பதவியையும் துறக்கமுடியாத நிலையில்
இருந்தார். துரதிருஷ்டவசமாக, அன்று பக்தவத்சலத்துக்குத் துணையாக நிற்க எந்தப்
பெரிய தலைவர்களும் தயாராக இல்லை. வேறு வழியில்லாத பக்தவத்சலம், மன உறுதியோடு
காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தின் அடையாளமாக அன்று நடைபெற்ற
மொழிப்போராட்டக்களத்தில் தன்னைத்தானே பலியாக்கிக்கொண்டார்.
**
சென்னையில் நாசரேத்பேட்டை என்னும்
கிராமத்தில் 09.10.1897 அன்று பக்தவத்சலம் பிறந்தார். அவருடைய தந்தையார் கனகசபாபதி
முதலியார். தாயார் மல்லிகா அம்மையார் சட்டப்படிப்பை முடித்துவிட்டு சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்த பக்தவத்சலம், அத்தொழிலைத்
துறந்துவிட்டு சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். உப்பு சத்தியாகிரகத்தின்போதும்
வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றபோதும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். 1937இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜாஜி அரசாங்கத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினார். வெவ்வேறு முதல்வர்களின் கீழ் விவசாய அமைச்சராகவும் அறநிலத்துறை
அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பணிபுரிந்த அனுபவம்
உள்ளவர். 1963-1967 காலகட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
1967இல் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து
பக்தவத்சலம் அரசியலில் இருந்து விலகினார். 13.02.1987 அன்று இயற்கையெய்தினார்.
அவருடைய வாழ்க்கைவரலாற்றை 1964இல் பெருந்தமிழர் பக்தவத்சலம் என்னும் தலைப்பில்
காஞ்சி அமிழ்தன் நூலாக எழுதி வெளியிட்டார்.
(சர்வோதயம் மலர்கிறது - ஏப்ரல் 2023)