Home

Sunday 7 May 2023

அய்யனார் - கட்டுரை

 

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ’கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான் நின்றிருந்தேன். அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அழுதுகொண்டே சென்று தன் அம்மாவிடம் நான்தான் அவனைக் கீழே தள்ளிவிட்டதாகச் சொல்லிவிட்டான். மறுகணமே அவன் அம்மா என் அம்மாவிடம் வந்து புகார் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த கணம் என்னிடம் எதையும் விசாரிக்காமலேயே தன் கோபத்தையெல்லாம் என்னை அடித்துத் தீர்த்துக்கொண்டார் என் அம்மா.

அதன் தொடர்ச்சியாக நாலைந்து வீடுகள் தள்ளியிருந்த பொம்மைக்காரர் பெரியப்பா வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார் அம்மா. அப்போது பெரியப்பா திண்ணையில் ஒரு பிள்ளையார் சிலைக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தார். அந்த வட்டாரத்திலேயே கோவில் சிலை செய்வதில் பேர் வாங்கியவர் அவர்.

அழுதுகொண்டே நின்ற என்னைப் பார்த்ததும் “என்ன ராசா? ஏன் அழுவற?” என்று கேட்டார் பெரியப்பா. பதில் சொல்ல எனக்கு வாய்ப்பளிக்காமல் அம்மாவே முந்திக்கொண்டு “அவங்கூட ஆடப் போறேன், இவன்கூட ஆடப்போறேன்னு கெளம்பிப் போயி ஊருவம்புல மாட்டிக்கறான் மாமா. இவன் ரோதனையே எனக்கு பெரிய ரோதனையா போச்சி. உங்க கூடயே வச்சிகிட்டு ஏதாவது வேலை வாங்குங்க மாமா. பள்ளிக்கூடத்துல லீவு விட்டா போதும், இவன் பிரச்சினையே எனக்குப் பெரிய பிரச்சினையா இருக்குது” என்று சொன்னார் அம்மா.

“என்ன விஷயம்? என்ன நடந்திச்சி? அதச் சொல்லும்மா மொதல்ல” என்று கேட்டார் பெரியப்பா. நடந்ததையெல்லாம் அம்மா சங்கடப்பட்ட குரலில் சொன்னார். பெரியப்பா அவரை ஆறுதல் படுத்தும் விதமாக “நம்ம ராசா அப்படிப்பட்ட பையன் கிடையாதும்மா. நீ போ. நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டார்.

மேற்கொண்டு என்னிடம் பெரியப்பா எதையும் கேட்கவே இல்லை. “இந்தக் காதால வாங்கி அந்தக் காதால விட்டுட்டு போயிகிட்டே இரு” என்பதுபோல சைகையாலேயே தெரிவித்தார். பிறகு ”அந்த சிவப்பு வர்ணத்த எடு ராசா” என்றார். அவருக்கு அருகில் சுவரோரமாக ஏழெட்டு கொட்டாங்கச்சிகள் இருந்தன. சிவப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள், நீலம் என பல வர்ணங்கள் அவற்றில் நிறைந்திருந்தன. நான் சிவப்பு வர்ணம் நிறைந்த கொட்டாங்கச்சியை எடுத்து அவர் முன்னால்  வைத்தேன். சிறிது நேரம் கழித்து அவர் மஞ்சள் கேட்டார். உடனே அதை எடுத்துக் கொடுத்தேன். ஓவியங்கள் மீதும் நிறங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்ததால் பெரியப்பா வீட்டுத் திண்ணை  என் விருப்பத்துக்குரிய இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.  

திண்ணை நிறைய எப்போதும் கடவுள்களின் சிலைகள் இருக்கும். சிவன், பார்வதி, குழலூதும் கண்ணன், லட்சுமி, சரஸ்வதி, முருகர், வினாயகர். பெரும்பாலானவை எல்லாமே என் உயரம் கொண்டவை. ஒருசில சிலைகள் மட்டும் என்னைவிட உயரம் கூடுதலானவை.

தினமும்  காலையில் பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்றதுமே அந்தச் சிலைகள் மீது படிந்திருக்கும் தூசையெல்லாம் தட்டித் துடைப்பேன். அதுதான் என் முதல்வேலை.  அதன் பிறகு தேவைப்படும் வர்ணங்களைக் குழைப்பது, எடுத்துக் கொடுப்பது அவ்வளவுதான்.

ஒருநாள் “பெரியப்பா, , உயரமான கடவுளுக்கு சக்தி அதிகமா, குட்டையான கடவுளுக்கு சக்தி அதிகமா?” என்று கேட்டேன். பெரியப்பா அப்போது எதிர்த்திண்ணையின் விளிம்பில் உட்கார்ந்து தினத்தந்தி படித்துக்கொண்டிருந்தார். என் கேள்வியைக் கேட்டுத் திகைத்தவராக “என்ன கேட்ட, என்ன கேட்ட, இன்னொரு தரம் சொல்லு” என்று என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

நான் உடனே எனக்கு அருகில் இருந்த குட்டையாக இருந்த வினாயகர் சிலையையும் உயரமாக இருந்த முருகர் சிலையையும் தொட்டுக் காட்டி ”உயரமான கடவுளுக்கு சக்தி அதிகமா, குட்டையான கடவுளுக்கு சக்தி அதிகமா?” என்று கேட்டேன்.

அதைக் கேட்டதும் பெரியப்பாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.  “உயரமானவங்க, குள்ளமானவங்கங்கற வித்தியாசம்லாம் நம்ம மாதிரி இருக்கிற மனிதர்களுக்குள்ள நடக்கிற விஷயம் ராசா. அவ்ளோதான். கடவுள்களுக்கு நடுவுல உயரம், குள்ளம்ங்கற பேச்சே இல்லை. எல்லாரும் ஒன்னுதான்” என்றார்.

“எல்லாரும் ஒன்னுதானா?” என்று எனக்கு நானே சந்தேகத்துடன் சொல்லிக்கொண்டு தூசு துடைக்கும் வேலையைத் தொடர்ந்தேன். அந்தப் பதிலில் ஏதோ ஒரு கோணத்தில் திருப்தியற்றவனாக “எல்லாரும் ஒன்னு, சரி. யாருக்கு சக்தி அதிகம்?” என்று கேட்டேன். 

“எல்லாருக்கும் ஒரே சக்திதான் ராசா. கடவுள்ங்கறவரு ஒருத்தருதான். அவுங்கவுங்க வசதிக்கு ஒரு பேர வச்சி கூப்டறாங்க. படைக்கும் தொழில் செய்யற சமயத்துல அவருக்கு பிரும்மான்னு பேரு. காக்கும் தொழில் செய்யற சமயத்துல விஷ்ணுன்னு பேரு. அழிக்கும் தொழில் செய்யற சமயத்துல சிவன்னு பேரு. உருவம், பேரு வேற வேறயா இருந்தாலும் சக்தி ஒன்னுதான். புரியுதா?”

எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. ஆயினும் பெரியப்பாவின் முன்னால் “ம்” என்று தலையாட்டி வைத்தேன். வெகுநேரம் என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை. கேள்விகள் முளைத்துக்கொண்டே இருந்தன.

“முருகர், வினாயகர், மாரியம்மன், அய்யனார் எல்லாம் கடவுள்தானா? அவுங்களுக்கு எப்படிப்பட்ட சக்தி இருக்கும்?”

“எல்லாருமே இந்த உலகத்தைக் காக்கிற கடவுள்கள்தான் ராசா. இதுல உயர்வு தாழ்வுங்கற பேச்சுக்கே இடமில்லை”

பெரியப்பா தினத்தந்தியை மடித்து சுவரோரமாக வைத்துவிட்டு என் பக்கமாகத் திரும்பினார்.

“இப்ப நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு பதில் சொல்லு. இப்ப உங்க வகுப்புல படிக்கிற பசங்கள்ல ஒரே பெயர்ல நாலு பசங்க இருந்தாங்கன்னு வை. எப்படி கூப்புடறது, எப்படி பேசறதுன்னு குழப்பமா இருக்குமா இல்லையா?”

“ஆமா”

”அந்த மாதிரி சமயத்துல வாத்தியாரு என்ன செய்வாரு?”

“ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பட்டப்பெயரை வச்சி கூப்புடுவாரு”

“கடவுள் விஷயத்துலயும் அதேதான் நடக்குது. எல்லாக் கடவுளுமே இந்த உலகத்தை காப்பாத்தற கடவுள்கள்தான். இப்ப, இந்த உலகத்துல என்னென்ன இருக்குது, யோசிச்சி பாரு. மலை இருக்குது, காடு இருக்குது, மரம் இருக்குது. ஊரு, வயல்வெளி இருக்குது. கடல், ஆறு, ஏரின்னு எத்தனையோ இருக்குது. மலைய காப்பாத்தறவருக்கு முருகர்னு பேரு. மரத்தை காப்பாத்தறவருக்கு வி்னாயகர்னு பேரு. ஊரயும் தெருவயும் காப்பாத்தறவருக்கு மாரியம்மன்ன்னு பேரு. ஏரிய காப்பாத்தறவருக்கு அய்யனார்னு பேரு. இப்படி ஒரு வசதிக்காக வேற வேற பேரு வச்சிருக்கோம். எல்லாரும் ஒன்னுதான். புரியுதா?”

என்னால் அவர் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. நான் ஒவ்வொரு சொல்லாக அசைபோட்டுக்கொண்டிருந்தபோதே பெரியப்பா சட்டென எழுந்துவிட்டார். நான் அவசரமாக “பெரியப்பா” என்று கூப்பிட்டதால் ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தார். “என்னடா?” என்றார்.

“அய்யனார்தான் ஏரிங்கள காப்பாத்தற கடவுள்னு சொன்னா, நம்ம நாட்டுல இருக்கற எல்லா ஏரிங்களையும் அவர்தான் காவல் காத்து காப்பாத்தறாரா?”

“ஆமாம்டா ராசா”

“நம்ம ஊரு ஏரியைக்கூட அவருதான் காவல் காக்கிறாரா?”

“ஆமாம்டா ராசா. அவரு பெரிய காவல் தெய்வம்.”

“அதனாலதான் ஏரிக்கரையோரமா அவருக்கு பெரிய சிலை வச்சிருக்காங்களா?”

“ஆமாம். அதைத்தான நான் ஆரம்பத்துலேர்ந்து சொல்லிட்டிருக்கேன். இப்பவாவது உனக்கு புரிஞ்சிதே, ரொம்ப சந்தோஷம்”.

பெரியப்பா புன்னகைத்தபடியே எழுந்து வந்து தோளில் தட்டினார். எனக்கு இன்னும் எதையோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்போல இருந்தது. ஆனால் கோர்வையாக என் கேள்வியை முன்வைக்கத் தெரியாமல் தடுமாற்றத்தோடு “பெரியப்பா…” என்று தொடங்கினேன். அதற்குள் பெரியப்பாவே “இன்னைக்கு நிறைய வேலை இருக்குது ராசா. பேசிட்டே இருந்தா எந்த வேலையும் நடக்காதுப்பா. அந்த அய்யனார் சிலையை எடுத்துட்டு போக சாயங்காலமா ஆளு வந்துடுவாங்க. அதுக்குள்ள கடைசி கோட் வர்ணம் அடிச்சி முடிக்கணும் வா” என்று சொன்னார். என் கேள்வி என் நெஞ்சுக்குள்ளேயே அடங்கிவிட்டது.

மேல்சட்டையைக் கழற்றி ஓரமாக கொடியில் போட்டுவிட்டு சிலைக்குப் பக்கத்தில் சென்றுவிட்டார் பெரியப்பா. நான் அவருக்குப் பின்னாலேயே சென்று வேகமாக வர்ணங்கள் நிறைந்த கொட்டாங்கச்சிகளை எடுத்து அடுக்கிவைத்தேன்.

சிலைக்கு அருகில் சென்றதும் பெரியப்பாவின் விரல்கள் வேகவேகமாக இயங்கத் தொடங்கின. தலையுச்சியிலிருந்து ஒவ்வொரு இடமாக பார்த்துப் பார்த்து மெருகூட்ட வேண்டியிருந்தது. சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இழுக்கும்போதே “கருப்ப எடு” என்றார். அதைக் கலக்கி குழைத்து இரண்டு பூச்சு பூசிவிட்டு ”நீலத்த எடு” என்றார். மறுகணமே “வெள்ளைய எடு” என்றார். அவர் விரல்கள் செயல்படும் வேகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தபடி இருந்தேன். ஐயனாரின் உருண்ட பெரிய பீதியூட்டும் விழிகளைப் பார்த்தபோது யாரோ ஒரு பெரிய உருவம் முன்னால் வந்து உட்கார்ந்திருப்பதுபோலவே இருந்தது. பெரியப்பாவின் கைவண்ணம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.

“பெரியப்பா, எனக்கு ஒரு சந்தேகம்”

“இப்ப என்ன ராசா சந்தேகம்?

“எல்லா சாமிகளுக்கும் கண்கள் அளவா கச்சிதமா இருக்குது. அய்யனாருக்கு மட்டும் ஏன் முண்டக்கண்ணு மாதிரி இருக்குது”

பெரியப்பா என்னைப் பார்த்து சிரித்தார். “எப்படிடா உனக்கு மட்டும் புதுசு புதுசா சந்தேகம் வந்துகிட்டே இருக்குது? என் வாழ்க்கையில இப்படி ஒரு சந்தேகத்தை இதுவரைக்கும் ஒருத்தனும் கேட்டதே கிடையாது” என்றார். “அது கெடக்கட்டும். நீ அந்த கருப்ப எடு” என்றபடி கைநீட்டினார். நான் உடனே கருப்பு நிறம் நிறைந்த கொட்டாங்கச்சியை எடுத்து நீட்டினேன். பெரியப்பா தன் பிரஷ்ஷால் ஒரே ஒரு துளி மட்டும் தொட்டெடுத்து அய்யனாரின் கழுத்தணிகளை அழகுபடுத்தி்னார்.

“பெரியப்பா, நான் அந்த கண்ணுக்கு வர்ணம் பூசட்டுமா?”

“என்ன சொன்னே, என்ன சொன்னே” என்று நம்பமுடியாமல் பெரியப்பா என்னையே பார்த்தார்.

“அய்யனாரு கண்ணுக்கு நான் வர்ணம் பூசட்டுமான்னு கேட்டேன்”

“ஆசையா இருக்குதா?”

“ம்”

“இப்ப வேணாம். இது கிட்டத்தட்ட முடிஞ்சிட்ட நிலையில இருக்குது.  எங்கனா ஏடாகூடமா தெறிச்சிட்டுதுன்னா மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கிற மாதிரி ஆயிடும். அடுத்த சிலை செய்யும்போது நீ பூச ஏற்பாடு செய்றேன். போதுமா?”

“சரி. அடுத்த சிலை எப்ப செய்வீங்க?”

“சீக்கிரமாவே செய்யற வேலை ஒன்னு இருக்குது ராசா”

“அதான் எப்ப?”

“சிறுவந்தாட்டுல புதுசா ஒரு கோவில் கட்டறாங்க.  இதவிட ரெண்டு மூனு மடங்கு உயரமான சிலை. அந்த ஊருலயே தங்கி செய்யணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க. அப்ப நீ நினைச்ச மாதிரி கண்ணுக்கு வர்ணமடிக்கலாம். சரியா?”

“சரி. அப்ப கண்ணு காது, மூக்கு, மீசை எல்லாத்துக்கும் நான் வர்ணம் பூசட்டுமா?”

“தாராளமா பூசு”

சொல்லிக்கொண்டே பெரியப்பா ப்ரஷ் நுனியால் என் கன்னத்தில் ஒரு பொட்டு வைத்தார். கூச்சத்துடன் அழுக்குத்துணியால் அந்தப் புள்ளியைத் துடைத்துக்கொண்டேன்.

அன்று மாலையில் பத்து பன்னிரண்டு பேர் ஒரு பெரிய மாட்டுவண்டியோடு வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் அய்யனாரின் சிலையைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி எதுவும் பேசத் தோன்றாதவர்களாக நின்றனர். அவர்களை வழிநடத்துபவர்களாக வந்தவர்கள்தான் ”ம்.ம். ஆகட்டும். நின்னு பார்த்துட்டே இருந்தா, இன்னைக்கு முழுக்க நின்னு பார்த்துட்டிருக்கணும்னுதான் தோணும். ராத்திரிக்குள்ள ஊரு போய் சேரணும்” என்று விரட்டி வேலை வாங்கினர்.  அவர் பெரியப்பாவை மட்டும் தனியே அழைத்துச் சென்று பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வந்தார்.

மற்றவர்கள் தம்மோடு எடுத்து வந்த பெரிய பலகையை சிலைக்கு அடியில் செலுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி பலகையின் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்தனர். பிறகு பலகையின் ஓரப் பகுதியில் இருந்த வளையங்களிடையில் மூங்கில் கழிகளைச் செலுத்தி இருபுறத்திலும் ஆட்கள் மெல்ல மெல்ல பீடத்தைத் தூக்கி வண்டித்தளத்தில் மீது நிறுத்திவிட்டனர். அப்போது அவர்கள் போட்ட முழக்கத்தில் தெருவே அதிர்ந்தது.

அந்த நேரத்தில் எங்கள் கோடை விடுமுறை முடிந்தது. பள்ளி தொடங்கியது. நான் படித்துவந்த கோவிந்தையர் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு இருந்தது. ஆனாலும் என் அம்மா நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று விரும்பியதால், நான் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றேன்.

பள்ளியிலிருந்து திரும்பியதும் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் புதிய சீருடைகள் தைப்பது, புதிய புத்தகங்கள் வாங்குவது, அட்டை போடுவது என ஏராளமான வேலைகள் இருந்தன. ஓய்வுப்பொழுதே இல்லை. பொம்மைக்கார பெரியப்பா வீடுவரைக்கும் செல்ல நேரமில்லாமல் போய்விட்டது.

ஒரு வாரம் கழித்து வந்த ஞாயிறு அன்றுதான் அவருடைய   வீட்டுக்குச் சென்றேன். பெரியப்பாவைக் காணவில்லை. வீடு பூட்டியிருந்தது. சிலைகள் வைக்கப்பட்டிருந்த திண்ணைகள் சாக்குத்திரை போட்டு மூடப்பட்டிருந்தது. இரு திண்ணைகளிலும் வெவ்வேறு உயரங்களிலும் நிறங்களிலும் ஏராளமான சிலைகள நின்றிருந்தன. இரண்டு மாத காலம் அச்சிலைகளோடு ஒருவனாக நடமாடிய நினைவுகள் நெஞ்சில் மோத அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஒரு வார இடைவெளியையே ஓராண்டு இடைவெளி போல நினைத்துக்கொண்டேன்.

முருகர் சிலையின் பாதத்தைத் தொட்டுப் பார்த்தேன். விரலில் தூசு ஒட்டியது. சிலையில் நான் விரல் வைத்த இடத்தில் அடையாளம் விழுந்தது. இடைப்பட்ட காலத்தில் துடைக்கவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே கூரை இறவாணத்தில் மடித்து செருகப்பட்டிருந்த துணியை எடுத்து ஒவ்வொரு சிலையிலும் ஒட்டியிருந்த தூசு போக துடைத்தேன்.

எல்லா சிலைகளையும் துடைத்து முடித்த தருணத்தில்தான் பெரியப்பா வந்து சேர்ந்தார். “அடடே, நீயா? வா ராசா. புதுப்பள்ளிக்கூடம் எப்படி இருக்குது? அந்த வேலையெல்லாம் இப்ப எதுக்குப்பா செய்யற?” என்றார்.

“உங்ககிட்ட பேசிட்டு போகலாம்ன்னுதான் வந்தேன் பெரியப்பா. உங்கள காணோம். சரி, இந்த தூசயாவது துடைச்சிட்டிருப்போம்ன்னு ஆரம்பிச்சிட்டேன். எங்க போயிட்டு வரீங்க?”

“ஏரிப்பக்கம் கொஞ்ச தூரம் நடந்துட்டு, அப்படியே குளிச்சிட்டு வரலாம்ன்னு போயிருந்தேன். திரும்பற வழியில ஒரு பழைய கூட்டாளி கெடைச்சிட்டாரு. அப்படியே பேசிட்டு வர நேரமாயிட்டுது. அது சரி, உன் புது பள்ளிக்கூடம் எப்படி இருக்குது?”

“நல்லா இருக்குது பெரியப்பா. ராமசாமின்னு ஒரு சார் இருக்காரு. அவருதான் எங்க க்ளாஸ் டீச்சர். ரொம்ப அழகா கதையெல்லாம் சொல்லி பாடம் நடத்தறாரு”

“நல்லா படி ராசா. உங்க அம்மா உன்ன நெனச்சி நெனச்சிதான் ரொம்ப பயப்படறாங்க”

“புதுசா சிலை செய்யப் போறேன்னு சொன்னீங்களே, எப்ப செய்ய ஆரம்பிக்கப் போறீங்க?”

“எந்த செலயை சொல்றே?”

“எதுவா? ஏன் பெரியப்பா, அதக்குள்ள மறந்துட்டீங்களா? புதுசா ஒரு பெரிய சிலை செய்யப்போறேன், கண்ணு, காது, மூக்கு, மீசைக்கெல்லாம் நீதான்டா வர்ணம் பூசணும்னு சொன்னீங்களே?”

“ஓ, நீ அதைச் சொல்றியா ராசா? இப்ப ஞாபகம் வந்துட்டுது.  வெறும் வாய்வார்த்தையாதான் கோவில்காரங்க சொல்லிட்டு போயிருக்காங்கப்பா. இன்னும் தீர்மானமா தேதி குறிச்சி சொல்லலை. நானும் அதுக்காகத்தான் பார்த்திட்டிருக்கேன்.”

“சரி சரி. மறந்துடாதீங்க. நேரம் இருக்கும்போது நான் அப்பப்ப வந்து இங்க இருக்கிற சிலைகளை துடைச்சி வச்சிட்டு போறேன்”

“உனக்கு எதுக்கு ராசா கஷ்டம்? நீ படிக்கிற வேலைய பாரு. இதயெல்லாம் நானே பார்த்துக்குவேன்.”

புதிய பள்ளியில் இரண்டு மூன்று வாரங்களிலேயே பாடங்கள் சூடு பிடித்துவிட்டன. புதிய ஆசிரியர்கள் நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்தார்கள். படிப்பது, எழுதுவது, மனப்பாடம் செய்வது என ஏராளமான வேலைகள். பல சமயங்களில் ஞாயிறு தினங்களில் கூட வேலை இருந்தது. எவ்வளவு நேரம் இருந்தாலும், எப்படியாவது சிறிது நேரம் ஒதுக்கி பெரியப்பா வீட்டுக்குச் சென்று அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, திண்ணையில் இருந்த சிலைகளில் படிந்திருக்கும் தூசைத் தட்டித் துடைத்துவிட்டுத் திரும்புவேன். அந்த சிலைகளுக்கு நடுவிலிருக்கும் சின்ன அய்யனார் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் இதேபோல பெரிதாக உருவாகவிருக்கும் அய்யனார் சிலையின் முகத்தில் வர்ணம் தீட்டும் கனவில் திளைத்து நின்றிருப்பேன்.

நாட்கள் ஓடியதே தெரியவில்லை. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் காலாண்டுத்தேர்வு வந்துவிட்டது. ஒரு வாரம் விடுப்பு விட்டார்கள். அந்த நேரத்தில் பெரியப்பாவோடு பொழுதைக் கழிக்கலாம் என்று கட்டிவைத்திருந்த கற்பனைகள் எதுவும் நடைபெறவில்லை. எனக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்னாலேயே அவருக்கு ஒரு வேலை வந்துவிட்டது. மடுகரை என்னும் ஊருக்கு அருகில் ஒரு கோவில் வேலை. ”முன்பணமெல்லாம் வாங்கிட்டேன். போய்த்தான் ஆவணும்” என்று சொன்னார். “அய்யனார் சிலையா பெரியப்பா?” என்று கேட்டேன். “இல்ல ராசா. இது அம்மன் சிலை. அய்யனார் சிலையா இருந்தால் உன்கிட்ட சொல்லாம இருப்பனா?” என்றார்.

தங்குவதற்கும் சாப்பாட்டுக்கும் மடுகரையிலேயே கோவில்காரர்கள் ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டார்கள். பெரியப்பா ஒரு மாதத்துக்கும் மேல் அங்கேயே தங்கி வேலை செய்தார்.

பிள்ளையார் சதுர்த்தி தொடங்குவதற்கு முன்னாலேயே பெரியப்பா  ஊருக்குத் திரும்பிவிட்டார். அதுதான் பெரியப்பாவுக்கு முக்கியமான மாதம். மற்றவர்கள் அச்சில் மண்ணை அடைத்து பிள்ளையாரை உருவாக்கி விற்றுவந்த நிலையில் பெரியப்பா அரையடி, ஓரடி, இரண்டடி என வெவ்வேறு உயரத்தில் நூற்றுக்கணக்கான பிள்ளையார் சிலைகளைச் செய்து விற்றார்.

“ஏன் பெரியப்பா, பிள்ளையார் சிலைகளை மட்டும் செய்யறீங்க? மத்த சாமிங்க சிலைகளை ஏன் செய்ய மாட்டறீங்க? வாங்க மாட்டாங்களா?”

“இது பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடற நேரம். அதனால பிள்ளையார் சிலைகள்தான் தேவைப்படும். அதனாலதான் அதைமட்டும் செய்றோம்”

“இருக்குதுன்னு தெரிஞ்சா, தானா வாங்குவாங்க பெரியப்பா”

பெரியப்பா என்னை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தார். சிரித்துக்கொண்டே “நீ சொல்றத பார்த்தா ஏதோ அசரீரி வாக்கு மாதிரி இருக்குது. சரி, நவராத்திரிக்கு செய்யும்போது எல்லா சாமி சிலைகளையும் கலந்து கட்டி செஞ்சிடலாம். சரியா?” என்றார்.

“உண்மையாவா சொல்றீங்க?”

“ஆமாம்டா ராசா. நவராத்திரிக்கு எல்லா சிலைகளும் உண்டு. போதுமா?”

“போதும் பெரியப்பா” எனக்கு துள்ளிக் குதிக்கவேண்டும் போல இருந்தது. “பெரியப்பா, இப்பவாவது நான் அய்யனார் சிலைக்கு வர்ணம் பூசட்டுமா?” என்று கெஞ்சுவதுபோல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

பெரியப்பா என்னை ஒருகணம் உற்றுப் பார்த்தார். “நான் வேற ஆரம்பத்துலயே சொல்லிச்சொல்லி உன் மனசுல ஆசையை வளர்த்துட்டேன். அந்த சிறுவந்தாட்டு ஆளுங்களும் இதோ அதோன்னு இழுத்துகிட்டே இருக்கானுங்க. அதுதான் பெரிய சிலை. உன்  இஷ்டத்துக்கு பூசலாம்ன்னு நெனச்சேன். எங்கயாச்சும் தப்பா போனாலும் சரிசெஞ்சிடலாம்” என்று சொல்லிக்கொண்டே விரல்களால் முகவாயை சொறிந்தபடி சொன்னார். இறுதியில் ”சரி ராசா. நவராத்திரிக்கு அய்யனார் சிலை செய்யறபோது உன்னால எத்தனை சிலைக்கு வர்ணம் பூச முடியுமோ பூசு, சரியா?” என்று சொல்லிக்கொண்டே வந்து என் முதுகில் தட்டினார்.

அடுத்த வாரத்திலிருந்தே பெரியப்பா நவராத்திரி சிலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, வாமனன், நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், முருகர், பிள்ளையார் என சாமி சிலைகள் ஒருபக்கம். செட்டியார், கூடைக்காரி, ஓடக்காரி, கிழவி, குரங்கு, பசு, கன்று என கலவையான சிலைகள் மற்றொரு பக்கம். இரண்டு வரிசைக்கும் நடுவில் முறுக்கிய மீசையோடு கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் அய்யனார் சிலைகள். அவர் தினமும் தூங்குகிறாரா இல்லையா என்பது எதுவுமே தெரியவில்லை. ஓய்வே இல்லாமல் சிலைகளைச் செய்து உலரவைத்து பக்குவப்படுத்தியபடியும் வர்ணம் பூசியபடியும் இருந்தார்.

நவராத்திரிக்கு முந்தைய ஞாயிறு காலையில் நான் பெரியப்பா வீட்டுக்குச் சென்றேன். பெரியப்பா வாசலிலேயே உட்கார்ந்து வர்ணங்களை கொட்டாங்கச்சியில் குழைத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததுமே “வா வா, உன்னைத்தான் நினைச்சிட்டே இருந்தேன்” என்றார். நான் புன்னகையோடு திண்ணை ஓரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த சின்னச்சின்ன அய்யனார் சிலைகளைப் பார்த்தேன்.

“வா ராசா. இந்த பக்கமா வந்து உக்காரு. நான் ஒரு சிலைக்கு பூசறேன். வர்ணத்தை எந்த அளவுக்கு எடுக்கறேன், எப்படி பூசறேன்ங்கறத நல்லா பாத்து கவனிச்சிக்கோ. கண்ணு பார்த்தா கை செய்யணும். புரியுதா. ஒரே ஒரு துளி வர்ணம் அதிகமானாலும் சரி, ஒரு துளி மங்கி குறைஞ்சாலும் சரி, நாம நினைக்கிற அழகு வராது. பக்குவமா எடுக்கணும். புரியுதா?”

வர்ணம் நிறைந்த கொட்டாங்கச்சியில் குச்சியை விட்டு நன்றாக கலக்கிய பிறகு தூரிகையால் வர்ணத்தைத் தொட்டு எடுத்துக் காட்டினார். நீருக்குள் இறங்காமல் மீனை மட்டும் கொத்திக்கொண்டு போகிற மீன்கொத்தியைப் போல, அவர் பிடியிலிருக்கும் தூரிகை ஒரே ஒரு துளி வர்ணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மேலெழும் விசித்திரத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நாலைந்து முறை செய்து காட்டிய பிறகு என்னிடம் அந்தத் தூரிகையைக் கொடுத்தார் பெரியப்பா.

அதை வாங்கி என் விரல்களுக்கிடையில் பிடித்ததுமே மனம் பரவசத்தில் துள்ளியது. நான் அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன். முடியவில்லை. எனக்குள்ளேயே ஏதோ பொங்கிப்பொங்கி வந்தது. பெரியப்பாவின் கைலாவகத்தை என் நெஞ்சில் நிறுத்தி அவரைப்போலவே விரலை அசைத்து வர்ணத்தைத் தொட முயற்சி செய்தேன். நாலைந்து முறை வர்ணத்துக்குள் முழு தூரிகையும் முழுகியது. பிறகு நாலைந்துமுறை வர்ணப்பரப்பைத் தொடாமலேயே தூரிகை வெளியே வந்துவிட்டது.

நான் சோர்வோடும் ஏமாற்றத்தோடும் பெரியப்பாவை நிமிர்ந்து பார்த்தேன்.

“எதுக்கும் பயப்படாத ராசா. எல்லாமே மனப்பழக்கம் கைப்பழக்கம்தான். வரும். வரும். நம்பிக்கையா முயற்சி பண்ணு. நான் வேணும்ன்னா அந்த பக்கம் திரும்பி வேற வேலையை பாக்கறேன்”

பெரியப்பா என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு திண்ணையில் வேறு ஏதோ வேலையைத் தொடங்கிவிட்டார். நான் தனியாக தூரிகையை வைத்துக்கொண்டு முயற்சி செய்தேன். ஏதோ ஒரு புள்ளியில் மனத்துக்கும் விரலுக்கும் ஓர் இணைப்பு உருவாகிவிட்டது. மகிழ்ச்சியில் “பெரியப்பா, இங்க பாருங்க பெரியப்பா. சரியா சொல்லுங்க” என்றேன். அவர் மெதுவாகத் திரும்பிப் பார்த்துவிட்டு திருப்தியுடன் “சபாஷ். அவ்ளோதான். இனிமே உன் காட்டுல மழைதான்” என்றார். அடுத்து “இந்தா, இந்த இடத்துலேர்ந்து ஆரம்பி” என்றார். நான் அவர் சொன்ன புள்ளியில் தூரிகையை மெதுவாக வைத்து இழுக்கத் தொடங்கினேன். சிலையின் மீது தூரிகை வழவழவெனப் படிந்து நகர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் ஒரு அய்யனார் சிலைக்கு வர்ணம் பூசி முடித்துவிட்டேன். சற்றுமுன் மண்சிலையாக இருந்த அய்யனார் இப்போது புதுவண்ணக் கோலத்தோடு காட்சியளிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் மிகவும் விரும்பிய அய்யனாரின் உருண்டு திரண்ட வட்டமான கண்களில் வர்ணத்தை ஏற்றும்போது என் உடலே சிலிர்த்தது.

“இந்தக் கலையுடைய ரகசியமே அவ்ளோதான் ராசா”

பெரியப்பாவின் பாராட்டு என் மீது மழை பொழிவதுபோல இருந்தது. நான்  அன்று நான்கு சிலைகளுக்கு வர்ணம் தீட்டினேன். ”வர்ணம் பூச கத்துகிட்ட மாதிரி சிலை செய்யவும் கத்துகிட்டா போதும், நீதான் பெரிய ஆளு” என்றார் பெரியப்பா.

அடுத்த நாள் எதிர்பாராத விதமாக பகல் முழுக்க மழை பொழிந்தது. நான் பள்ளியில் சிக்கிக்கொண்டேன். ஏழு மணிக்கும் மேல் மழை நின்ற பிறகுதான் மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியேற அனுமதித்தார்கள்.  பள்ளிக்கு வெளியே பெரியப்பாதான் குடையை வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருந்தார்.

நான் அதை எதிர்பார்க்கவில்லை. நானே ஓடிச் சென்று அவர் கையைப் பற்றினேன். அவர் சிரித்துக்கொண்டே “இம்மாம்பெரிய கூட்டத்துல உன்ன எப்படி கண்டுபுடிக்கறதுன்னு கொழப்பமா இருந்திச்சி நல்ல வேளையா நீயே வந்துட்ட” என்றார். தொடர்ந்து அவராகவே “ஒங்க அம்மாதான் மழையில கொடையை எடுத்துட்டு போயிட்டிருந்தாங்க.  நம்ம வீட்ட தாண்டி போற சமயத்துலதான் நான் பார்த்தேன். இந்த கொட்டற மழையில எங்கம்மா போறன்னு கேட்டதுக்கு ஒன் கதையை சொன்னாங்க. நீ போம்மா,  நான் போய் கூப்ட்டாறேன்னு சொல்லிட்டு கொடையை வாங்கிட்டு வந்துட்டேன்” என்றார். பிறகு பேசிக்கொண்டே இருவரும் வீடு வரைக்கும் நடந்தோம்.  

அன்று தொடங்கிய மழை நிற்கவே இல்லை. இரவும் பகலும் இடைவெளியே இல்லாமல் மழை பொழிந்தபடியே இருந்தது. மழையிலேயே நவராத்திரியும் சரஸ்வதி பூஜையும் வந்துபோனது. ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறையில் இருப்பது ஒருவித மகிழ்ச்சியாக இருந்தாலும் நாள் செல்லச்செல்ல எப்போது மழை நிற்கும், எப்போது பள்ளி தொடங்கும் என்று ஏக்கமாக மாறிவிட்டது.

மூன்று வார மழையில் ஊரே தண்ணீரில் மிதந்தது.  ஊரைச் சுற்றி இருக்கும் கால்வாய்கள் எல்லாம் நிறைந்து வழிந்தன. சாலைகளில் பள்ளம் எது, மேடு எது என்று எதுவுமே தெரியவில்லை. கடைகளைத் திறக்கமுடியாததால் அப்பா வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார். கையிருப்பாக இருந்த பணத்தை வைத்துக்கொண்டு முதல் வாரம் வரைக்கும் சமாளிக்க முடிந்தது. அதற்குப் பிறகு அரிசி வாங்க பணமில்லை.  அடுத்த வாரத்தில் நொய் வாங்கிவந்து ஒருவேளைக்கு மட்டும் கஞ்சி வைத்துக் கொடுத்தார் அம்மா. மூன்றாவது வாரத்தில் அதற்கும் வழியில்லாமல் போனது. கேழ்வரகு மாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து அடை தட்டிக் கொடுத்தார்.

ஒருநாள் கொட்டும் மழையில் சாக்குத்துணியை தலைக்கு மறைப்பாகப் பிடித்துக்கொண்டு பஞ்சாயத்து போர்டு சேவகர் தண்டோரா அடித்துக்கொண்டு சென்றார்.

”இதனால் தெரியப்படுத்துவது என்னவென்றால் நமது ஊர் ஏரி   எந்த நேரத்திலும் உடைந்துவிடும் நிலையில் இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரும் ஏரிப்பக்கம் செல்லக்கூடாது என்று பஞ்சாயத்து போர்டு  கேட்டுக்கொள்கிறது. எச்சரிக்கை. எச்சரிக்கை. எச்சரிக்கை”

ஒவ்வொரு சொல்லும் நெஞ்சில் பீதியைக் கிளப்பியது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். இடைக்கால ஏற்பாடாக எங்காவது சென்று தங்கிக்கொள்ள வழி இருப்பவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு மூட்டை முடிச்சுகளோடு வெளியேறினார்கள். எங்களுக்கு எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருப்பவர்கள் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக  இரவோடு இரவாகப் போய்விட்டார்கள்.

எனக்கு திடீரென பெரியப்பாவின் முகம் நினைவு வந்தது.  “பாவம்மா பெரியப்பா, எங்க போயிருப்பாரு?” என்று கேட்டேன். அம்மாவுக்கும் கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. “நாமளே வெளிய தெருவ போகமுடியாம கெடக்கறோம்.  அவரும் அப்படித்தான் இருப்பாரு. பாவம், நல்ல மனுஷன்.  நாம என்ன செய்யமுடியும், சொல்லு” என்று சொன்னபடி கண்களைத் துடைத்துக்கொண்டார் அம்மா.

அடுத்த நாள் ஒரு நூறு பேருக்கும் மேல் கூட்டமாக தெருவில் நடந்து செல்வதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். உடனே அம்மாவை அழைத்துக் காட்டினேன். “பஞ்சாயத்து போர்டு சேர்மன்தான் போறாரு. ஏதாவது பேசி முடிவெடுப்பாங்க” என்றார் அம்மா.

“ஏரிய உடைச்சி விடறதுதான் ஒரே வழி. வேற வழியே இல்லை” என்றார் அப்பா.

“கரைய உடைக்கறதா, என்ன பேச்சு பேசறீங்க நீங்க? இன்னைக்கு அவசரத்துக்குன்னு உடைச்சிட்டா நாளைக்கு யார் கட்டி கொடுப்பாங்க”

“இன்னைக்கு ஜனங்க பொழைக்கணுமா, வேணாமா? அதைத்தான் யோசிப்பாங்க. கட்டறதை பத்தி அப்பறமா யோசிக்கலாம்”

“நாலு மதகுகள் இருக்குதில்லை. அத தெறந்துவிட்டா, தண்ணி தானா போயிடாதா?”

“நாலு மதகும் பத்து நாளா தெறந்துதான் இருக்குதும்மா. தண்ணி வெளியே போய்கிட்டேதான் இருக்குது. பெண்ணையாத்துலேர்ந்து ஆழங்கால் வழியா உள்ள வர தண்ணியும் மழைத்தண்ணியும் அதைவிட அதிகமா இருக்கறதால கரையில வழிஞ்சிகிட்டே இருக்குது.”

அப்பா சொல்வது அம்மாவுக்குப் புரியவில்லை. எதுவும் பேசாமல் அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஏரிக்கு நாலு பக்கமும் கரை இருக்குது, புரியுதா? மேற்குப் பக்கத்துலதான் ஆழங்கால். அது தண்ணி வரக்கூடியவழி. அந்த வழியில உடைச்சிவிட முடியாது. தண்ணி வெளியே போகாது. உட்பக்கமாத்தான் உருட்டிகிட்டு வரும். புரியுதா?”

அம்மாவுக்கு அப்போதுதான் பிரச்சினையின் தீவிரம் தெளிவுபெறத் தொடங்கியது. கண்களில் மிரட்சி படர “ஆமாம்” என்றார்.

“தெற்குப் பக்கத்துல சாலையாம்பாளையம், .ஓட்டேரிப்பாளையம், தாதம்பாளையம்னு ஆறு ஊருங்க இருக்குது. அந்தப் பக்கத்துல கரையை உடைச்சா தண்ணி ஊருக்குள்ளதான் போகும். அதையும் செய்யமுடியாது. புரியுதா?”

“ம். ம். புரியது”

“வடக்குப் பக்கத்துல எடுத்துகிட்டா கரையை ஒட்டியே ரயில்வே ஸ்டேஷன், பஞ்சாயத்து போர்டு தெரு, பிள்ளையார் கோவில் தெரு எல்லாம் இருக்குது. ஊருல பாதி இந்தப் பக்கத்துல இருக்குது. இந்தப் பக்கத்து கரையை உடைச்சிவிட்டா எல்லாமே நாசமாயிடும்”

“ஆமாம், ஐயோ கடவுளே”

“இப்ப இருக்கறது கிழக்கு பக்கம் மட்டும்தான். ஏரிக்குள்ள கிழக்கு மூலைதான் தண்ணி தேங்கற இடம். ஆனா ஒருபக்கம் மேட்டுத்தெரு, இன்னொரு பக்கம் அக்கிரகாரம். கரையை உடைச்சிவிட்டா, இந்த ரெண்டு இடமும் அழிஞ்சிடும்”

“ஐயோ, நாலு பக்கமும் பிரச்சினைன்னு சொன்னா, எந்த பக்கத்துல உடைச்சிவிட்டா பாதுகாப்பா இருக்கும்?”

“ஜனங்களயும் காப்பாத்தணும். ஏரியையும் காப்பாத்தணும். அதைப் பேசி முடிவுகட்டறதுக்குத்தான் இப்ப சேர்மனும் மத்த ஆளுங்களும் போறாங்க. புரியுதா?”

”பேசட்டும், பேசட்டும். பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும். எப்படியாவது ஊரு பொழைச்சா போதும்”

மழை பொழிந்துகொண்டே இருந்தது. பஞ்சாயத்து போர்டு பக்கம் போன ஆட்கள் என்ன பேசினார்கள் என்பது புரியவில்லை. பொழுது சாயும் நேரம் வரைக்கும் என்ன நடக்கிறது என்பதையே அறிந்துகொள்ள முடியவில்லை.  எப்போதாவது ஒருவர் பஞ்சாயத்து போர்டு பக்கத்திலிருந்து குடை பிடித்துக்கொண்டு நடந்துபோவதைப் பார்த்ததும் அப்பா திண்ணையிலிருந்தே சத்தமான குரலில் அவரை நிறுத்தி “என்ன பேசிக்கறாங்கண்ணே?” என்று கேட்பார். அவரும் தான் அறிந்தவரையில் எதையாவது சொல்லிவிட்டுச் செல்வார்.

ஒருமணி நேரம் கழித்து பொழுது சாய்ந்த வேளையில் ஒருவர் சென்றார். அவரிடம் கேட்டபோது “நாயுடு சேர்மனே நிலைமை என்னன்னு பார்க்கறதுக்கு கரைபக்கமா நடந்து போயிருக்காராம். பின்னாலயே அம்பது பேரு போயிருக்காங்க” என்று தெரிவித்தார்.

மழை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தது. நன்றாக இருட்டிவிட்டது. ”சேர்மன் வராரு. ஓடியாங்க. ஓடியாங்க. பேசலாம்” என்று சத்தம் எழுப்பியபடி தெருவில் நான்கு பேர் ஓடினார்கள். அச்சத்தத்தைக் கேட்டு அப்பாவும் சாக்குப்பையை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு வாசலைவிட்டு இறங்கினார். “அப்பா அப்பா, நானும் வரேன்பா” என்றேன். அவர் சட்டென இன்னொரு கையால் சாக்கு மறைப்புக்குள் என்னையும் இழுத்து மறைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.

நாங்கள் தெருவை அடைவதற்குள் நாயுடு சேர்மன் கோவில் பக்கமாக வந்துவிட்டார். நாற்பது ஐம்பது பேர்களுக்கும் மேல் அதற்குள் சேர்ந்துவிட்டார்கள்.

“இங்க பாருங்க. யாரும் பயப்படவேணாம். உங்க தெருவுக்கும் பாதிப்பு வராது. மேட்டுத் தெருகாரங்களுக்கும் பாதிப்பு வராது. என் மேல நம்பிக்கை வச்சி நீங்க எல்லாரும் நிம்மதியா தூங்குங்க”

சேர்மன் சொல்லி முடிப்பதற்குள் “ஏரிய ஒடைச்சிடுவீங்களா ஐயா” என்று கேட்டார் ஒருவர். நாயுடு சேர்மன் அவரைப் பார்த்து அருகில் அழைத்து ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார். ”வீணா கண்டதயும் நெனச்சி மனச போட்டு குழப்பிக்காதிங்க. நிம்மதியா இருங்க. கடவுள் துணை இருப்பார். எல்லாப் பிரச்சினையிலேர்ந்தும் நாம மீண்டு வரலாம்” என்று சொல்லிவிட்டு கைகுவித்து வணங்கிவிட்டு விடைபெற்றுவிட்டுச் சென்றார்.

நாயுடு சேர்மன் நடக்கத் தொடங்கியதும், அதுவரை கூடியிருந்த கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியதும். அப்பாவும் வீட்டுப்பக்கம் திரும்பினார். மழைத்தாரைகள் முகத்தில் ஊசிபோல இறங்கின.

எனக்கு அப்போது பெரியப்பாவின் ஞாபகம் வந்தது. பல நாட்களாக அவரைப் பார்க்கவே இல்லை. அப்பாவின் கையைப் பற்றி அழுத்தியபடி நின்றேன். “என்னடா?” என்று கேட்டார் அப்பா. “ஒரு நிமிஷம் . பெரியப்பா எப்படி இருக்காருன்னு பார்த்துட்டு போயிடலாம்பா” என்றேன். அப்பா எதுவும் சொல்லவில்லை. “சரி, வா” என்று அவர் வீட்டை நோக்கி நடந்தார். நானும் அவருக்குப் பின்னாலேயே சென்றேன்.

பெரியப்பாவின் வீடு இருண்டிருந்தது. வாசலில் நின்று “அண்ணே அண்ணே” என்று அழைத்தார் அப்பா. நானும் என் பங்குக்கு “பெரியப்பா பெரியப்பா” என்று சத்தம் போட்டு அழைத்தேன். மழையின் சத்தத்தில் எங்கள் சத்தம் எடுபடவில்லை. முடிந்த அளவு சக்தியைத் திரட்டி நான் ”பெரியப்பா” என்று பெருங்குரலெடுத்து அழைத்தேன்.

நீண்ட நேரமாக பதில் இல்லை. “இல்லை போல இருக்குதுடா, திரும்பிடலாமா?” என்று கேட்டார் அப்பா. கடைசி முயற்சியாக “பெரியப்பா” என்று கூவினேன். திண்ணையை ஒட்டியிருந்த சாக்குத்திரையை விலக்கி சிலைகளைப் பார்த்தேன். இருட்டு உருவமாக அய்யனார் தெரிந்தார். எதிர்பாராத விதமாக அப்போது கதவைத் திறந்துகொண்டு நடுங்கிக்கொண்டே பெரியப்பா வெளியே வந்தார். நான் சட்டென்று ஓடிச் சென்று அவரைப் பிடித்துக்கொண்டேன். “உங்கள பாக்கணும்ன்னு  சொன்னான் பையன். அதான் கூட்டிகினு வந்தேன்” என்றார் அப்பா. பெரியப்பா என் தலையில் படிந்திருந்த ஈரத்தை தன் வேட்டியை உயர்த்தி துடைத்துவிட்டார். “வீட்டுல விளக்கேத்த கூட மண்ணெண்ணெய் இல்லை” என்றார். மழை தொடர்ந்து பொழிந்தபடி இருந்ததால் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை. விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டோம்.

அடுத்த நாள் காலையில் எழுந்து கண்களைக் கசக்கிக்கொண்டே வெளியே வந்தேன். மழை அப்போதும் தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தது. வாசலில் அப்பாவோடு யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

”ராவோடு ராவா ஆளுங்க போய் கிழக்கு பக்கமா நடு ஏரியில கரையை உடைச்சிவிட்டுட்டாங்க. நாயுடு சேர்மன் ஏற்பாடு. அந்தப் பக்கம் எல்லாமே வயல்வெளிதான். அதுக்குத்தான் கொஞ்சம் சேதாரம். அதுக்கு நஷ்ட ஈடு கொடுத்திடறாங்களாம். பாதிக்கு மேல ஏரி தண்ணி வடிஞ்சி போச்சி. இனிமேல ஒன்னும் பிரச்சினை கிடையாது”

அவர் முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்திருப்பதை உணரமுடிந்தது. அதைக் கேட்ட அப்பாவின் முகத்திலும் நிம்மதியைப் பார்க்க முடிந்தது.