Home

Sunday, 28 May 2023

கசப்பில் கரைந்த இளைஞன் - கட்டுரை

 

     திருமணமாகாத இளைஞர்களுக்கு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் மற்ற நகரங்களில் இருந்ததைப்போலவே பெங்களூரிலும் ஏராளமான சிரமங்கள் இருந்தன. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மறுப்பதற்கு முன்னரேயே தரகர்கள் மறுத்துவிடுவார்கள். சிற்றூர்களிலிருந்து நகரத்தைநோக்கி வருகிறவர்களாகட்டும், வேறு நகரங்களிலிருந்து வெவ்வேறு காரணங்களுக்காக குடிபெயர்ந்து வருகிறவர்களாகட்டும் அவர்களுக்காகவே சிற்சில இடங்களில் சில விடுதிகள் இயங்கிவந்தன. எட்டுக்குப் பத்தடியில் அடுத்தடுத்து வரிசைவரிசையாகக் கட்டப்பட்ட சின்னச்சின்னக் கூண்டுகள். ஒவ்வொன்றிலும் இரண்டு கட்டில்கள். ரயில் பெர்த்துகளைப்போல சிற்சிலவற்றில் நான்குகூட கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றை நோக்கித்தான் தரகர்கள்  அவர்களை வழிகாட்டுவார்கள். 

    மூன்று அல்லது நான்கு மாடிகள் கொண்ட ஒவ்வொரு விடுதியிலும் குறைந்தது நு¡று பேராவது இருப்பார்கள். எனக்கு முன்னால் நகரத்துக்கு வந்து இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கிய அனுபவங்களை என் மூத்த நண்பர்கள் கதைகதையாகச் சொல்வார்கள். நாலைந்து இளைஞர்களுக்கு நானே இத்தகு விடுதிகளில் சிலருக்காக இடம் வாங்கித் தந்து அவர்களுக்கெல்லாம் பொறுப்பாளனாக வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன்.

     இளைஞர்களுக்கு வீடுகள் மறுக்கப்படுவதற்கான காரணங்களை பல தரகர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் சிலரிடமும் பல முறை கேட்டிருக்கிறேன். எல்லாரிடமும் ஒரே வகையான பதில்களே வெவ்வேறு வடிவில் இருந்தன. மணமாகாத இளைஞர்களுக்கு சுத்தமாக இருக்கத் தெரியாது. அவர்கள் வீட்டை ஒழுங்காகப் பெருக்கமாட்டார்கள். குப்பைமேடாக இருந்தாலும் அதன்மீதே படுத்து உறங்கிவிட்டுப் போவார்கள். கண்ட இடத்தில் துப்புவார்கள். நாலு பேர் நடமாடுகிற இடம் என்று கூட பார்க்காமல் புகைப்பார்கள். புகைத்து வீசிய துண்டுகள் அறைமுழுக்கச் சிதறிக் கிடக்கும். சுவர்களில் திரைப்பட நடிகையரின் படங்களைத் தொங்கவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். கண்ட நேரத்துக்கு வெளியே போவார்கள். கண்ட நேரத்துக்கு வந்து கதவைத் தட்டுவார்கள். அக்கம்பக்கத்து இளம்பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து தவறான வழிகளில் செல்லத் து¡ண்டுவார்கள். தண்ணீரை ஏராளமாகச் செலவழிப்பார்கள். மற்றவர்களின் காது கிழிந்துவிடும்படி சத்தமாக வானொலியையும் தொலைக்காட்சியையும் வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். திடீர்திடீரென யார்யாரையோ உறவினர்கள் என்றும் ஊர்க்காரர்கள் என்றும் விருந்தினர்கள் என்றும் அழைத்துவந்து தங்கவைத்துக் கொள்வார்கள். இப்படி அலுக்கிறவரை சொல்லிக்கொண்டே போவார்கள்.

     இப்படி எண்ணற்ற காரணங்களைச் சொல்லி வாடகைக்கு வீடு தர மறுத்தவர்களின் போக்கில் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் யாருமே எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்தது. குடியிருப்புப்பகுதிகளில் இளைஞர்களுக்கு வீடுகள் வாடகைக்கு தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது. தனியாகவும் கூட்டாகவும் வசதிக்குத் தகுந்தபடி வீடுகள் அமைந்தன. ஒருசில உரிமையாளர்கள் இளைஞர்களுக்குமட்டுமே தம் வீடுகளை வாடகைக்கு உரியதாக வடிவமைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இன்னும் சில உரிமையாளர்கள் தங்குமிடத்தோடு ஒருவேளையோ இரண்டுவேளையோ சாப்பாட்டுக்கும் சிற்றுண்டிக்கும் வழிசெய்துகொடுக்கத் தொடங்கினார்கள். "இளைஞர்களுக்கான தங்குமிடங்களுக்கு இங்கே அணுகவும்" என்று பல வீடுகளின் முன்பக்கம் விளம்பர அட்டைகள் தொங்கத்தொடங்கின. செய்தித்தாட்களின் விளம்பரங்களில் ஒரு முழுநீளப் பத்தி இப்படிப்பட்ட வாடகைவீடுகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டதாகவே வெளிவரத் தொடங்கியது. புரட்சிகரமான இந்தத் தாராள மனமாற்றத்துக்கு முக்கியமான ஒரு காரணம் நகரத்தில் மிகவேகமாக வளர்ந்த மென்பொருள் துறையின் வளர் ச்சி. ஒரு குடும்பத்திடம் ஆயிரம் ரூபாய்மட்டுமே வாடகையாக பெற முடிந்த ஒரு சின்ன வீட்டுக்கு அல்லது அறைக்கு இந்த இளைஞர்களிடம் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் இரண்டாயிரம் ரூபாயை எளிதாகப் பெற முடியும் என்பது இரண்டாவது காரணம்.

     நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டின் ஒரு பகுதியில் ஏற்கனவே குடியிருந்த பட்டாளத்துக்காரர் காலிசெய்துவிட்டுப் போனபிறகு அந்தப் பகுதியை யாரோ ஒரு தரகர் அழைத்துவந்து காட்டிய ஐந்து இந்திக்கார இளைஞர்களுக்கு வாடகைக்குக் கொடுத்தார் எங்கள் உரிமையாளர்.  இவ்வளவு காலமும் இளைஞர்களைப்பற்றி எதிர்மறையான கருத்துகளையே சொல்லிவந்தவர் ஒரே நாளில் மனத்தை மாற்றிக்கொண்டார்.

குடிக்கிற தண்ணீரை எங்கே பிடிப்பது? துணிகளை எங்கே துவைப்பது? எங்கே உலரவைப்பது? காலையில் பால் எங்கே கிடைக்கும்? என ஏராளமான கேள்விகளோடு அந்த இளைஞர்கள் தமக்குள்ளேயே தயங்கித்தயங்கித் தடுமாறுவதை தற்செயலாக மாடிக்குச் சென்றபோது கேட்டு நானாகவே உதவிக்குச் சென்றேன். அக்குடியிருப்பில் இந்தியில் உரையாடத் தெரிந்தவன் என்கிற முறையில் அவர்களுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு அரும்பத் தொடங்கியது. ஒரேஒரு வார்த்தைகூட இந்தி தெரியாத என் மனைவி அமுதாவுக்கும் அவர்களுக்கும் இடையே அதைவிட நல்ல உறவு உருவாகி வலுப்படத் தொடங்கியபோது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இந்தியிலும் அவள் தமிழிலும் மிக சகஜமாக எவ்விதப் பிழைகளும் இல்லாமல் உரையாடல்களைத் தொடர்ச்சியாக வடிவமைத்துக் கொள்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

     அவர்கள் அனைவருமே போபாலைச் சேர்ந்தவர்கள். ராகேஷ், சந்தோஷ், ஜீராஜ், நிதின், விக்ரம் என்பவை அவர்களுடைய பெயர்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள். சில ஆண்டுகள் கணிப்பொறிப் பயிற்சிக்கான படிப்பைப் படிப்பதற்கும் பிறகு நல்ல வேலையாகத் தேடி அமர்வதற்கும் அவர்கள் பெங்களூரைத் தேர்ந்தெடுத்து வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி ஒரு நிறுவனத்தில் பயிற்சிப் படிப்புக்காகச் சேர்ந்திருந்தார்கள். மூன்றாண்டுப் படிப்பு. பயிற்சிக்காக ஒரு  பழைய கணிப்பொறியை குறைந்த விலைக்கு வாங்கி வைத்துக்கொண்டு பயிற்சி செய்தார்கள். எரிவாயு அடுப்பில் அவ்வப்போது சப்பாத்தி செய்து சாப்பிட்டார்கள்.

     அந்த இஞைர்களுக்கும் எங்களுக்கும் இடையே இசைவான உறவு கூடிவந்தது. மழைக்கு அஞ்சி மாடியில் உலர்ந்துகொண்டிருந்த எங்கள் துணிகளை எடுத்தபோது அருகிலேயே உலர்ந்திருந்த அவர்களுடைய துணிமணிகளையும் சேர்த்து எடுத்து வைத்திருந்து இரவில் அவர்கள் வீடு திரும்பியதும் கொடுத்தபோது அவர்கள் மனம் நெகிழ்ந்துவிட்டார்கள். ஒரு சாதாரண உதவியைக்கூட அவர்கள் மலையளவு பெரிதாக எண்ணி திரும்பத் திரும்ப நன்றி சொன்னார்கள். எப்போதாவது அகாடுத்தனுப்பும் இட்லிகளை அமுதமாக எண்ணிச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். மற்ற நான்கு பேர்களைக் காட்டிலும் எங்களிடம் ஒட்டுதலாகப் பேசியவன் ஜீராஜ்.

     "அங்கிள், நீங்க போபால் பார்த்திருக்கிங்களா?" ஒரு ஞாயிறு அன்று படிப்பதற்காக செய்தத்தாளை வாங்கிச் செல்ல வந்த ஜீராஜ் கேட்டான்.

     "ரெண்டு தரம் டில்லிக்கு போகும்போது போபால் ஸ்டேஷனப் பாத்திருக்கேன். எறங்கிப் பாத்ததில்லை. எப்பவாவது பாக்கணும்" புன்னகைத்தபடி சொன்னேன்.

     "வர லீவுக்கு எங்க கூடவே வாங்க அங்கிள். நான் ஒங்களுக்கு சுத்திக் காட்டறேன்." மனதார அழைப்பு விடுத்தான் அவன்.

     "போபால்னு சொன்னதும் அங்க நடந்த விஷவாயுச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வருது."

     "உண்மைதான் அங்கிள். அப்படி ஒரு சரித்திரக்கொடுமையால ஒரு ஊரின் பெயர் மக்கள் நடுவிலே நிலைபெற்றுவிடுவது மிகப்பெரிய சோகம் அங்கிள்" அவன் முகத்தில் நான் சற்றும் எதிர்பாராத துயர நிழல் படிந்து அடர்ந்தது. சில கணங்கள் மெளனம். நான் சட்டென்று அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கக்கூடாதோ என்ற குற்ற உணர்வில் என்னை நானே நொந்துகொண்டேன்.

     "ஒரு வகையில் இன்னைக்கு மக்கள் மனத்தில் ஞாபகமிருக்கிற எல்லா ஊர்களுக்கும் அங்கே நடந்த சரித்திரக்கொடுமைகளுக்கும் அழுத்தமான தொடர்பு உண்டு அங்கிள். எவ்வளவு பெரிய யுத்தம் நடந்த இடம் குருஷேத்திரம். மிகப்பெரிய சூறையாடலுக்கு இலக்கான இடம்தானே சோமநாதபுரம். லட்சக்கணக்கான போர்வீரர்கள் மடிந்து கிடந்த மண்தானே கலிங்கம். பொதுக்கூட்டத்துக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஜெனரல் டயர் என்னும் அதிகாரியால் ஓடஓட விரட்டிச் சுட்டுச் சாகடிக்கப்பட்ட இடம்தானே ஜாலியன் வாலாபாக். அந்த வரிசையில் போபாலுடைய பெயரும் நின்னுட்டுது."   

     அவன் வார்த்தைகள் எனக்குள் ஒரு பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சியதைப்போலத் தோன்றின. மிகப்பெரிய உண்மையொன்றை அவன் மிகச் சாதாரண முறையில் சொல்லிவிட்டுச் செல்வதைப்போல நினைத்துக்கொண்டேன். கயத்தாறு முதல் அரியலு¡ர்வரை பல ஊர்களின் பெயர்கள் மனத்தில் நகர்ந்துசெல்வதை உணர்ந்தேன்.

     "எங்க போபாலுக்கு ஏரிகளின் நகரம்னு ஒரு பெயர் உண்டு, தெரியுமா அங்கிள்?"  அவன் ஒரே நொடியில் இழந்த உற்சாகத்தை மீட்டுக்கொண்டு கேட்டான்.

     "தெரியாது ஜீராஜ்."

     "பெங்களூர்ல அல்சூர் ஏரி , ஹைதராபாத்ல ஹுசேன் சாகர் ஏரி இருக்கறமாதிரி போபால்ல மேல் ஏரி, கீழ் ஏரின்னு ரெண்டு பெரிய ஏரிங்க உண்டு. எந்தக் காலத்திலயும் வற்றாத ஏரிகள். இங்க இருக்கற ஏரியைவிட அஞ்சி மடங்கு பத்து மடங்கு பெரிசு. ஒவ்வொன்னும்  பன்னிரண்டு மைல் பத§முணு மைல் சுற்றளவு கொண்டது. வற்றாத ஏரிகள் என்பதாலேயே அது பறவைகள் சரணாலயம். ஏராளமான தோப்புகள். இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை."

     அவனுடைய இந்தி வாக்கியங்கள் என்னுடைய புரிதல் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்ததால் ஏரிகளைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் என்னுடைய ஆசைகள் பலமடங்காகப் பெருகின.

     ”அந்த ஏரி உருவாகி எவ்வளவு காலம் இருக்கும்?"

     "மேல் ஏரி உருவாகி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல இருக்கும். போஜ ராஜன்னு ஒரு அரசன் ஆட்சியில இருந்தபோது உருவாக்கப்பட்டது. வைத்தியத்தால தீர்க்கமுடியாத தோல்வியாதியால அவன் ஒருமுறை ரொம்ப அவஸ்தைப்பட்டானாம். அப்போது அவன் நாடியைப் பரிசோதிச்ச ஒரு சித்த வைத்தியர் முந்நு¡ற்றி அறுபத்தைந்து கிளைநதிகளையும் ஊற்றுகளையும் இணைக்கூடிய ஒரு வற்றாத ஏரியை உருவாக்கி அந்தத் தண்ணீரில அவன் தொடர்ந்து குளிச்சால் அந்தத் தோல்வியாதி குணமாகும்னு சொன்னாராம். உடனே அப்படிப்பட்ட ஒரு ஏரியை உருவாக்க திட்டம் தீட்டி நிறைவேற்றினாராம் ராஜா. அதுக்கப்புறம் நம்பிக்கையோடு தொடர்ந்து அந்த ஏரித் தண்ணீரில குளிச்சி வந்ததால அவர் வியாதியும் குணமாயிடுச்சாம்.  கீழ் ஏரின்னு சொல்லப்படுகிற ஏரி இருநு¡று வருஷங்களுக்கு முன்னால சோட்டாகான் என்பவருடைய காலத்தில உருவானது. எவ்வளவு பெரிய பஞ்சத்திலயும் இந்த ஏரிகள் வற்றியதில்லை."

     முந்நூற்றி அறுபத்தைந்து கிளைநதிகளையும் ஊற்றுகளையும் இணைத்துப் பார்க்க நினைத்த அந்தக் காலத்துப் பொறியியல் மனத்தின் உத்வேகமும் சாதனையும்  ஆச்சரியமளிப்பதாக இருந்தன.

     "வேறு என்னென்ன இருக்குது போபால்ல?" உற்சாகத்தோடு கேட்டேன் நான்.

     "இந்தியாவிலயே மிகப்பெரிய மசூதியான தாஜூல் மசூதி போபால்லதான் இருக்குது. கலைவேலைப்பாட்டுக்கு பேர்போன ஷெளகத் மகால் கூட போபால்லதான் இருக்குது."

     "என்னைக்காவது ஒருமுறை நீங்கள்ளாம் விடுமுறையில ஊருக்குப் போகும்போது நாங்களும் கூட வரோம். நீயே எல்லா இடங்களயும் சுத்திக் காட்டு, சரிதானே?"

     அவன் மகிழ்ச்சியோடு எழுந்து போனான்.

     ஐந்து பேர்களுமே பயிற்சியில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்கள். ஆண்டுக்கு இரண்டுமுறை கிடைக்கிற விடுமுறையைக் கழிப்பதற்காக ஊருக்குச் செல்வார்கள். நான் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் அவர்கள் தவறாமல் அழைப்பார்கள். சொல்லிவைத்ததுபோல ஒவ்வொரு முறையும் ஏதாவது வேலை நெருக்கடிகள் குறுக்கிட்டு எங்கள் திட்டத்தைத் தவிடுபொடியாக்கிவிடும்.  "அடுத்த முறை பாக்கலாம் ஜீராஜ்" என்று வருத்தம் தெரிவிப்பதைத் தவிர்க்கவே முடிந்ததில்லை.

     நால்வரில் ஜீராஜ்மட்டும் சிறிது வாசிப்புப் பழக்கம் உடையவனாக இருந்தான். இதனாலேயே  எங்களிடையே நெருக்கமும் அதிகமாக இருந்தது. அவனுக்கு ஆர்.கே.நாராயண் எழுதிய புத்தகங்கள் மிகவும் விரும்பமுள்ளவையாக இருந்தன. தற்செயலாக என் மகனுக்கும் பிடித்த எழுத்தாளராக அவர் இருந்ததால் அவருடைய பெரும்பாலான புத்தகங்கள் வீட்டிலேயே இருந்தன. அக்கதைகளைப் படித்துவிட்டு வந்த தான் ரசித்த விதத்தை அலுக்காமல் சொல்வான்.

     ஒரு நாள் இரவு பத்து மணியிருக்கும். அமுதாவும் மயனும் ஊருக்குச் சென்றிருந்தார்கள். நான்மட்டும் தனியாக வீட்டில் கணிப்பொறியில் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென "நமஸ்தே அங்கிள்" என்ற ஜீராஜின் கீச்சுக்குரல் என் கவனத்தைத் திருப்பியது. ஜன்னல் ஓரமாக அவன்தான் நின்றிருந்தான். "என்ன ஜீராஜ்?" என்று கேட்டேன் நான்.

     "ரொட்டிக்கு மாவு பிசைஞ்சோம். சப்ஜிக்கு காய்ங்கள நறுக்கி வேகவச்சிட்டிருக்கும்போது கேஸ் தீந்து போயிடுச்சி அங்கிள். என்ன செய்யறதுன்னு புரியலை. உங்ககிட்ட அடிஷனல் சிலிண்டர் இருந்தா குடுக்கறிங்களா அங்கிள்?"

     "மொதல்ல நீ உள்ள வா" என்று கதவைத் திறந்தேன்.

     "எதுக்கு தடுமாறுகிறாய்? ரெண்டாவது சிலிண்டர்தான் இப்ப நம்ம வீட்டுல ஓடிட்டிருக்குது. பதிவு பண்ணிவச்சிருக்கிற சிலிண்டர் இன்னும் வரலை. நீ ஒன்னு செய். நம்ம அடுப்பிலேருந்து சிலிண்டர பிரிச்சி எடுத்தும்போ. சமையல் வேலையை முடிச்சிட்டு காலையில கொண்டுவந்து தா."

     "அங்கிள், இந்த சிலிண்டரையா......வேணாம் அங்கிள்" என்று தயக்கத்தோடு வெளியேற அவன் முனைந்தான். கட்டாயப்படுத்தி அவனைத் தடுத்து சிலிண்டரைப் பிரித்தெடுத்து கொடுத்தனுப்பினேன். மறுநாள் காலையில் சிலிண்டரைத் திருப்பித்தர ஐந்து பேர்களும் வந்துவிட்டார்கள். "என்னப்பா இதத் தூக்கி வர அஞ்சி பேரா?" என்று சிரித்தபடி கேட்டேன்.  "ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்" என்று மாறிமாறிச் சொன்னார்கள் அவர்கள் .

     "அட இருங்கப்பா நீங்க, இதுக்குப் போயி பெரிசா தேங்க்ஸ் சொல்ல வந்துட்டிங்களா, இன்னைக்கு உங்க எல்லாருக்கும் நான் போடப்போகிற டீதான். இருந்து குடிச்சிட்டு போங்க...."

     செய்தித்தாட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு சில நிமிடங்களுக்குள் தேநீர் தயாரித்து எல்லாருமாகச் சேர்ந்து பருகினோம்.

     "அங்கிள், ஆண்டி   இல்லைன்னா உங்களுக்குக் கஷ்டமாவே இருக்காதா?" விக்ரம் கேட்டான்.

     "கஷ்டம்னு நீ எதைச் சொல்றே விக்ரம்? வீட்டு வேலை செய்றதையா? சமைக்கிறதையா? இதையெல்லாம் அவுங்கதான் செய்யணுமா? கொஞ்சநாள் நாம செய்யக்கூடாதா? அவுங்க சந்தோஷமும் நமக்கு முக்கியம்னு நாம நெனைச்சா எதுவுமே கஷ்டமே இல்லை விக்ரம்."

     "அங்கிள் நல்லா பேசறீங்க."

     எல்லாரும் விடைபெற்றுச் சென்றார்கள்.

     மூன்றாண்டுப் பயிற்சிப்படிப்பில் ஐந்து பேர்களுமே நல்ல மதிப்பெண்களோடு தேறினார்கள். எல்லாருமே விதம்விதமான இனிப்புகளை வாங்கிவந்து கொடுத்து திணற அடித்தார்கள். அவர்கள் அனைவருக்குமே அந்த மாதத்திலேயே நல்ல நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஜீராஜூக்கு கற்பிப்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. அதனால் மென்பொருளைப்பற்றிக் கற்பிக்கும் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாருமே கைநிறையச் சம்பாதித்தார்கள். அடுத்த மாதத்திலேயே ஆளுக்கொரு ஸ்ப்லென்டர் வாகனம் வாங்கினார்கள். திடீரென எங்கள் வீட்டு வாசலில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் ஐந்து கூடியது. அவர்கள் செல்லும் நேரமும் வரும் நேரமும் மாறிமாறி இருந்ததால் வெளிவாசல் பூட்டுக்கு போலிச்சாவிகளைத் தயார் செய்து ஆளுக்கொன்றாக வைத்துக்கொண்டார்கள்.

     நிறுவனங்கள் சம்பளப்பணத்தை வங்கிக்கணக்கு வழியாகக் கொடுத்ததால் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தேவைப்பட்டது. வெளிநாட்டிலும் பணம் எடுக்கவும் போடவும் வசதியுள்ள வங்கிக்கணக்குதான் அவர்களுடைய தேவையாக இருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. கிளைகளில் விண்ணப்பங்களில் அறிமுகக் கையெழுத்துப் போட்டு அவர்களுக்குரிய கணக்கை நானே தொடங்கிக்கொடுத்தேன். அந்தக் கணக்கு, இந்தக் கணக்கு என்று மாதத்துக்கு ஆறேழு கடிதங்கள் அந்த வங்கிக் கிளைகளிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அக்கடிதங்களையெல்லாம் பொறுப்பாக வாங்கி வைத்திருந்து ஒவ்வொரு ஆளாக வரும் நேரம் பார்த்திருந்து கொடுப்பது அமுதாவின் வேலையாக இருந்தது. அவர்கள் பெயர்களில் வருகிற கூரியர் கடிதங்களைக்கூட அவளே கையெழுத்துப் போட்டு வாங்கிவைத்தாள்.

     ஒருநாள் காலையில் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் ஜீராஜ் வந்தான். தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டப் படிப்புக்காக இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் சேர இருப்பதாகவும் விண்ணப்பங்களிலும் மதிப்பெண் அட்டைகளின் நகல்களிலும் கெஜட்டட் அதிகாரியின் கையெழுத்து தேவையாக இருப்பதாகவும் என்னால் கையெழுத்திட்டுத் தரமுடியுமா என்றும் கேட்டான். கொண்டுவரச் சொல்லி எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு முத்திரை அடித்துக் கொடுத்து அனுப்பிவைத்தேன். அவன் சான்றிதழ்களையும் பள்ளி விவரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய இளமைக்காலத்தைப் பற்றி ஏராளமான விஷயங்களைச் சொன்னான். மிகவும் பின்தங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளிப்படிப்பு என்பது இவனுடைய தலைமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆசிரமம் ஒன்று அவனைத் தத்தெடுத்துப் பள்ளிப் படிப்பைத் தந்திருக்கிறது. மேற்படிப்புக்கான செலவுக்கு அவன் பல இடங்களில் பல வேலைகளைச் செய்து பணம் சேமித்து ஈடுகட்டிக்கொண்டான். ஊரில் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். அவர்களை நல்லவிதமாகப் படிக்கவைத்து நல்ல வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் அவன் கனவு.

     இரண்டாண்டுக் காலத்திலேயே அவர்களுடைய நிறுவனங்கள் அவர்களை  நிரந்தர ஊழியர்களாக அறிவித்து ஊதிய உயர்வையும் அளித்தது. நிரந்தர ஊழியர்கள் என்பதால் வங்கிக்கடன் எளிதாகக் கிடைத்தது. நகருக்கு வெளியே காகதாசபுர என்னும் இடத்தில் புதுப்புது தொகுப்பு வீடுகள் அப்போது கட்டப்பட்டுக்கொண்டிருந்தன. ஆளுக்கொரு வீடு பதிவு செய்தார்கள். அடுத்த இரண்டாண்டுக் காலத்தில் ஒவ்வொருவராக புதிய வீட்டுக்கு குடிபோனார்கள். நான்கு பேர்கள் வெளியேறினார்கள். ஜீராஜ் பதிவு செய்திருந்த வீட்டின் வேலை இன்னும் முடிந்தபாடில்லை. ஏகப்பட்ட வேலைகள் பாக்கி. சின்னச்சின்ன வேலைகள் முடிக்கப்படாமல் இழுத்துக்கொண்டே இருந்தன. ஐந்து பேர்கள் இணைந்து கொடுத்த வாடகையை அவன் தனியாளாகவே கொடுத்து அங்கேயே அவன் தங்கியிருந்தான். அவன் தனியாளாக இருந்ததால் சிறிது காலம் அவனுக்குத் துணையாக இருக்கும் எண்ணத்தில் அவனுடைய பெற்றோர்கள் வந்து தங்கியிருந்தார்கள்.

வங்கியிலிருந்து கத்தைகத்தையாக வரும் கடிதங்களையும் சுற்றறிக்கைகளையும் அமுதா வாங்கி தொடர்ந்து சேகரித்துவந்தாள். எப்போதாவாது அந்தப் பழைய இளைஞர்கள் வந்து சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு கடிதங்களைப் பெற்றுச் செல்வார்கள். அல்லது அவர்களைச் சந்திக்க ஜீராஜ் செல்லும் தினத்தில் கடிதங்களையெல்லாம் எடுத்துச் சென்று அளித்துவிட்டுத் திரும்புவான்.

     ஒருநாள்  தான் திருமணம் செய்துகொள்ளப் போகிற பெண் இவள்தான் என்று ஒரு புகைப்படத்தை எனக்கும் அமுதாவுக்கும் காட்டினான் ஜீராஜ். பெண்ணின் முகத்தில் நல்ல தெளிவு இருந்தது. பார்ப்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருந்தாள். நிச்சயம் அவனுக்குப் பொருத்தமானவளாகவே தெரிந்தாள். எங்கள் மனத்தில் பட்டதை அவனிடம் அப்படியே சொன்னோம். அதைக் கேட்டு அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லாம் ஒரு கணம்தான். மறுகணமே வடிந்துவிட்டது.

     "ஆனா எங்க அம்மா அப்பாவுக்கு சந்தியாவப் புடிக்கலை அங்கிள்.  சந்தியா ரொம்ப ஏழைப்பொண்ணு. அப்படியும் கஷ்டப்பட்டு டிகிரி முடிச்சிருக்கா. அவுங்க குடும்பத்தால கல்யாணச் செலவெல்லாம் செய்ய முடியாதுன்னு அம்மா தட்டிவிடப் பாக்கறாங்க. அம்மா பழசயெல்லாம் ரொம்ப சீக்கிரத்துல மறந்துட்டாங்க அங்கிள். கிழிஞ்ச புடவையை தச்சித்தச்சி போட்டுகிட்ட காலத்தயெல்லாம் மறந்துட்டாங்க. பொறக்கும்போதே பணத்தோட பொறந்தமாதிரி பேசறாங்க. அவுங்களுக்கு ஆதரவா அப்பாவும் கண்ணுமண்ணு தெரியாம பேசறாரு. இவுங்கள எப்படி சமாதானம் செஞ்சி சந்தியாவ எப்படி நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேனோ, தெரியலை. ரொம்ப பயமா இருக்குது அங்கிள்."

     பேச்சின் திசையை வேறுபக்கம் திருப்பி அவன் மனபாரத்தை லேசாக்கி, தேநீர் பருகவைத்து அமைதியாக்கி அனுப்பிவைத்தோம். அன்று இரவில் அவன் வீட்டில் கடுமையான முறையில் வார்த்தை மோதல்கள் நிகழ்ந்தன. பெற்றோர்கள் தாம் பார்த்துவைத்திருக்கிற பெண்ணின் பெருமையைப்பற்றிப் பேசினார்கள். அவனோ சந்தியாவின் பெருமையைப்பற்றிப் பேசினான். நள்ளிரவுவரை அச்சண்டை தொடர்ந்தது. புதுவீட்டுக்குக் குடிபோகிறவரை நள்ளிரவுச் சண்டை நிகழாத நாளே இல்லை. ஜீராஜ் பாதியாக உடல் இளைத்துவிட்டான். விடைபெற வந்த அன்று அவனைப் பார்க்கவே முடியவில்லை. பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல இருந்தான். எங்களால் முடிந்தவரை அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தோம். "ஓய்விருக்கும்போது நீங்க  அந்தப் பக்கமா வாங்க அங்கிள்..." என்று சொல்லி முகவரியை எழுதிக்கொடுத்தான். சரி என்று சொன்னோமே தவிர வேலை நெருக்கடிகளில் அதற்கான ஓய்வு வாய்க்கவே இல்லை.

வங்கிக் கடிதங்கள் வந்து குவியும்போதெல்லாம் அவனுடைய ஞாபகம் வந்துபோகும். வாட்டம் கண்ட அவனுடைய முகமும் ஞாபகத்துக்கு வரும். மூன்று நான்கு மாதங்கள் கழித்து திடீரென ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்தான். இப்போது நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவர்களுடைய வாய்ச்சண்டை இன்னும் ஓயவே இல்லை என்றான். போபாலுக்கே சென்று அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சண்டைபோட்டுவிட்டு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள் என்றான். கடிதங்களையெல்லாம் வாங்கி தோள்பைக்குள் போட்டுக்கொண்டான்.

     "அட்ரஸ மாத்திக் கொடுத்தா பேங்க்காரங்க அங்கயே நேரா அனுப்பி வச்சிருவாங்க இல்லையா ஜீராஜ், இங்க வந்து விழுந்து கிடந்தா எது முக்கியம், எது முக்கியமில்லாத கடிதம்னு நமக்கு எப்படி தெரியும் சொல்லு?" ஆதரவாகத்தான் சொன்னேன்.

     "எனக்கு என்ன முக்கியமான கடிதம் வரப்போவுது அங்கிள், இந்த அட்ரஸே இருக்கட்டும் அங்கிள், எப்பவாவது ஒருநாள் நேரம் கெடைக்கும்போது வந்து வாங்கிட்டுப் போகிற சாக்கில ஒங்ககூட கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே" கசப்பு நிறைந்த அவன் புன்னகையைப் பார்க்க வருத்தமாக இருந்தது. அன்று பேச்சின் திசையை வேறுபக்கம் திருப்பி வெகுநேரம் பேசியிருந்துவிட்டு அனுப்பிவைத்தேன்.

     அதற்கப்புறமும் இரண்டுமூன்று சந்தர்ப்பங்களில் வந்து கடிதங்களை வாங்கிக்கொண்டு சென்றான். அவன் மனபாரம் இறங்கவில்லை என்பதில் அவனுடைய பேச்சிலேயே ஊகித்துக்கொண்டேன்.

     தீபாவளிக்கு அடுத்தநாள் எதிர்பாராத விதமாக ஜீராஜைத்தவிர மற்ற நான்கு பேர்களும் வாகனங்களில் வந்து இறங்கினார்கள். "வாங்க வாங்க" என்று அவர்களை அழைத்து உட்காரவைத்தோம். ஆளுக்கொரு தட்டில் சோமாஸ், முறுக்குகளை அடுக்கி அவர்களிடம் கொடுத்தாள் அமுதா. அவற்றை வாங்கி அவர்கள் முகங்களில் உற்சாகமில்லை. "என்னப்பா நீங்கள்ளாம் வந்திருக்கிங்க? ஜீராஜ எங்க காணோம்?" வேடிக்கையாகத்தான் நான் கேட்டேன்.

     "அத சொல்லத்தான் அங்கிள் வந்தோம்" விக்ரம் தயங்கிய குரலோடு தொடங்கினான். மற்றவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள். எனக்குள் ஏதோ ஒருவித கலவர உணர்ச்சி படரத் தொடங்கியது. விக்ரம் முகத்தையே ஆழ்ந்து பார்த்தேன்.

     "ஆகஸ்டு கடைசியில அவன் ஆளே சரியில்லை அங்கிள். அவன் நம்பியிருந்த மாதிரி அம்மா அப்பாவ அவனால சம்மதிக்கவைக்கவே முடியலை. அது ஒரு பெரிய தோல்வியுணர்ச்சியாவும் அவமான உணர்ச்சியாவும் அவன் மனசில அப்படியே தங்கிடுச்சி. நாங்க எவ்வளவோ சொல்லிச்சொல்லி தைரியப்படுத்தனோம் அங்கிள். ஒன்னும் பிரயோஜனமில்லை. ஒரு நாள் ஆபீஸ் ரெஸ்ட் ரூமிலயே ஏகப்பட்ட தூக்கமாத்திரைய விழுங்கிட்டுப் படுத்துட்டான். தூக்கத்திலேயே உயிர் போயிடுச்சி அங்கிள். ஏழுமணிக்கு டீ வாங்கிட்டு வந்து எழுப்புன்னு சொல்லிட்டு து¡ங்கப் போனானாம். டீ எடுத்துட்டுப் போன வாட்ச்மேன்தான் நெலைமையப் பாத்துட்டு ஆம்புலன்ஸ்க்கும் ஆஸ்பத்திரிக்கும் தகவல சொல்லியிருக்கான்.

     ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் எங்கள் கண்முன்னாலேயே நடமாடிய அவனுடைய சிரிப்பு படர்ந்த முகத்தை  ஒருமுறை நினைத்துக்கொண்டேன். மனம் துக்கத்தால் கனத்தது.

     "அவுங்க அம்மா அப்பா?"

     "அவுங்கதான் அழுதுகிட்டே எல்லாக் காரியங்களயும் செஞ்சாங்க அங்கிள். அவுங்க வீண்பிடிவாதத்துக்கு ஒரு புள்ளையே பலியாயிடுச்சி. அந்த வீட்டயும் வித்துட்டாங்க அங்கிள். ரெண்டு வாரத்துல போபாலுக்கே திரும்பிப் போயிட்டாங்க."

     பல நொடிகள் மெளனத்தில் கழிந்தன. ஒரு வார்த்தை சொல்லியிருந்தா வந்து நாங்களும் பார்த்திருப்போமே விக்ரம்.

     "ஸாரி அங்கிள், அந்த நேரத்துல எங்களுக்கு ஒன்னுமே புரியாம போயிடுச்சி."

     அவன் பெயரில் வந்திருந்த கடிதக்கற்றைகளை அனிச்சையாக என் விரல்கள் தடவிக்கொடுத்தன. எல்லாக் கடிதங்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள். 

"ஏம்பா, நீங்களாவது அட்ரஸ மாத்திக் கொடுக்கக்கூடாதா?" ஒருவித ஆற்றாமையோடுதான் அவர்களிடம் கேட்டேன் நான்.

     "இந்த அட்ரஸே இருக்கட்டும் அங்கிள், எப்பவாவது ஒருநாள் நேரம் கெடைக்கும்போது வந்து வாங்கிட்டுப் போகிற சாக்கில ஒங்ககூட கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே" அவர்கள் மெல்லிய புன்னகைபடர சொன்னார்கள். மறைந்துபோன ஜீராஜின் நினைவு மறுபடியும் என் நெஞ்சில் மோதியது. இதே வார்த்தைகளைத்தான் அவனும் ஒருமுறை சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது.

     தீபாவளி கடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இரண்டு மாத இடைவெளியில் ஏறத்தாழ பதினைந்து கடிதங்கள் வந்துவிட்டன. பெரும்பாலானவை ஐ.சி.ஐ.சி.ஐ. கடிதங்கள். தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் அக்குவியலில் ஜீராஜ் பெயரிட்ட கடிதமும் இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் மனத்தில் ஒருவித தவிப்பும் இயலாமையும் படர்வதைத் தவிர்க்கமுடியவில்லை.

 

(புதிய பார்வை – 2006)