Home

Sunday 28 May 2023

ஒரு துளியைச் சேமிப்பது எப்படி? - கட்டுரை

 

     இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் "சம்சாரா" என்னும் ஜெர்மானியப் படமொன்றைப் பார்க்க நேர்ந்தது. எல்லாப் பாத்திரங்களும் ஜெர்மானிய மொழியில் பேசினாலும் கதை முழுக்க இமயமலை அடிவாரத்தையொட்டிய லடாக் பகுதியிலேயே நடைபெறும் விதத்தில் அப்படம் அமைக்கப்பட்டிருந்தது. சில இந்தி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. படத்தை இயக்கிய இயக்குநரான பான் நலின் இந்தியத் திரைப்படங்களோடும் தொடர்புடையவர். ஜெர்மானிய நடிகர்களோடு ஓர் இந்திய நடிகையும் நடித்திருந்தார். தாஷி என்னும் இளம் புத்த பிக்குவின் வாழ்வில் நிகழும் தடுமாற்றங்களையும் தெளிவுகளையும் உணர்த்தும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. கதைப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் ஒரு கிராமத்துக்குச் செல்கிறான். அக்கிராமத்தின் நுழைவாயிலில் அடுக்கப்பட்டிருந்த கற்களில் பல வாசகங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு வாசகம்தான் "ஒரு துளியைச் சேமிப்பது எப்படி?" என்னும் கேள்வி.

     திரையில் அவ்வாசகத்தைப் படித்ததுமே ஏதோ ஒரு கவிதையின் ஆரம்பவரியைப் போலத் தோன்றி மனம் எழுச்சிகொண்டது. அடுக்கடுக்காக பல விடைகளை மனத்துக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். எல்லாமே சரி என்பதைப்போலவும் தோன்றியது. தவறு என்பதைப்போலவும் தோன்றியது. கண்டறியும் தவிப்பு ஒரு புறமும் கதைப்பாத்திரமான தாஷியைப் பின்தொடரும் ஆவல் மறுபுறமுமாக மனம் படாத பாடுபட்டது.

     ஓர் ஆசிரியர் என் முன் தோன்றி கேள்வி கேட்பதைப்போல கற்பனை செய்துகொண்டேன். அவர் என் உள்ளங்கையில் ஒரு துளி எண்ணெயை ஊற்றி "இதை எப்படிச் சேமிப்பாய்?" என்று கேட்கிறார். சேமிக்கப்படுவது திரவப்பொருள் என்பதால் அதை அவசியம் ஒரு கொள்கலத்தில்தான் சேமிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அந்த எண்ணெயை ஒரு சின்னக் கலத்தில் நழுவவிட்டுப் பாதுகாக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. விடையை எளிதாக அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறேன். கற்பனை ஆசிரியரிடம் அவ்விடையைச் சொல்கிறேன். அவர் சிரிக்கிறார். "எவ்வளவு நேரம் இதன் பக்கத்திலேயே உட்கார்ந்து உன்னால் பாதுகாக்க முடியும்?" என்று மற்றொரு கேள்வியைக் கேட்கிறார். "நீ உறங்கும்போதோ அல்லது வேறு வேலைகளில் மூழ்கியிருக்கும்போதோ இதன் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?" என்றும் கேட்கிறார். பதில் சொல்லத் தெரியாமல் நான் விழிக்கிறேன்.

     சின்ன வயசில் கேட்ட நாரதர் கதையொன்று அப்போது நினைவுக்கு வருகிறது.  அல்லும்பகலும்  நாராயணனுடைய நினைப்பொன்றையே நெஞ்சில் சுமந்து நடப்பவர் நாரதர். தானே மிகப்பெரிய நாராயண பக்தன் என்னும் எண்ணம் அவர் மனத்தில் பதிந்திருக்கிறது. யார் தன்னுடைய சிறந்த பக்தன் என்கிற ஒரு கேள்வி எழும்போது நாராயணன் அவரைச் சுட்டிக்காட்டுவதில்லை. மாறாக, எங்கோ புவியில் விறகுவெட்டிப் பிழைக்கும் ஒரு கூலிக்காரனையே சுட்டிக்காட்டுகிறார். மூச்சுக்குமூச்சு நாராயணனுடைய பெயரை உச்சரிக்கிற தன்னைக்காட்டிலும் இவன் எப்படி பெரிய பக்தனாக முடியும் என்னும் ஐயமுறுகிறார் நாரதர். அதை நேரில் கண்டறியும் எண்ணத்துடன் ஒருநாள் முழுக்க அவனைப் பின்தொடர்ந்து கவனிக்கிறார். காலையில் தூங்கி எழும்போதே நாராயணா என்று அழைத்தபடி எழும் அவன் அதற்குப் பிறகு  நாராயணனை அழைப்பதே இல்லை. அடுத்த அழைப்பை அன்று இரவு து¡ங்கப் போகும்போது சொல்கிறான். அவ்வளவுதான். ஒரு நாளைக்கு இரண்டு அழைப்புகள். நாரதருக்கு கோபம் வருகிறது. ஒரு நாளில் இரண்டு முறைகள் மட்டுமே அழைப்பவன் பெரிய பக்தனா அல்லது நாள் முழுக்க எண்ணற்ற முறைகள் பெயர்சொல்லி அழைத்தபடி இருப்பவன் பெரிய பக்தனா என்று நாராயணனிடமே வேகமாகக் கேட்கிறார் . சிறிது நேரம் மெளனம் காக்கிறார் நாராயணன். பிறகு தளும்பத்தளும்ப எண்ணெய் நிரம்பிய ஒரு கலத்தைக் கொண்டுவந்து நாரதரிடம் தந்து ஒரேஒரு துளி கூட கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு குன்றைச் சுற்றிவருமாறு சொல்கிறார். நாரதர் அச்சவாலை ஏற்கிறார். ஒரு துளிகூட கீழே சிந்திவிடாமல் வெகு கவனத்துடன் கலத்தை ஏந்தியபடி நிதானமாக அடிமேல் அடிவைத்தபடி குன்றைச் சுற்றுகிறார். சில மணிநேரங்களில் வெற்றிகரமாக குன்றுவலம் நிறைவடைகிறது. வெற்றிப் புன்னகையோடு நாராயணனை நெருங்கி நிற்கிறார். எண்ணெயக்கலத்தைத் திருப்பி வாங்கிக்கொண்ட பிறகு வலம்வரும் சமயத்தில் எவ்வளவு முறைகள் தன் பெயரைச் சொன்னதாக வினவுகிறார் நாராயணன். ஒரு முறைகூட அப்பெயர் தன் நினைவில் உதிக்கவில்லை என்பது நாரதருக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. எச்செயலையும் செய்யாமல் பெயரை உச்சரிப்பதைப் பெருமையாக நினைத்துக்கொள்ளும் தன்னைவிட ஏராளமான வேலைகளுக்கு நடுவில் தன்னிச்சையாக நாராயணன் பெயரைச் சொல்கிற விறகுவெட்டி நிச்சயம் மேலானவன் என்பது அவருக்கே புரிந்துவிடுகிறது. கிட்டத்தட்ட இக்கதைக்கு நிகரானதுதான் துளியைச் சேமிக்கிற செயல் என்று தோன்றியது.

     வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் துளியைச் சேமிப்பதை  ஒரு கண்டிப்பான கடமையாக எடுத்துக்கொள்வது பிழை. மற்ற எல்லா அக்கறைகளையும் புறக்கணித்து சேமிப்பதை மட்டுமே ஒரு பிரதான அக்கறையாக வரித்துக்கொள்வதில் எப்பொருளும் இல்லை. மற்ற அக்கறைகளிலும் நம் மனம் போதிய கவனம் செலுத்தவேண்டும். சேமிப்பிலும் உரிய கவனம் செலுத்தவேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. என் யோசனைகளில் இந்தக் கட்டம் வரை எக்குழப்பமும் இல்லை. ஆனால் எப்படிச் சேமிப்பது என்பதுதான் புதிராகவே விளங்கியது.

     கற்பனை ஆசிரியர் மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார். என் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டவராக எனக்கு உதவ முன்வருகிறார். "நம் வாழ்வில் எதைஎதைச் சேமிக்கிறோம், சொல்லமுடியுமா?" என்று கேட்கிறார். உடனே ஒரு சின்னப் பட்டியலையே சொல்லிமுடிக்கிறேன். பொன், பொருள், உடைகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள், பாத்திரங்கள் என அடுக்குகிறேன்.  "இவற்றையெல்லாம் எப்படிச் சேமிக்கிறோம்?" என்று அடுத்த கேள்விக்கு உடனே தாவுகிறார் அவர். பொன்னாலான ஆபரணங்களைப் பெட்டியில் பூட்டிவைக்கிறோம். பொருட்களை அறைக்குள் வைக்கிறோம். ஆடைகளைப் பெட்டியில் அடுக்குகிறோம். புத்தகங்களைத் தாங்கிகளில்  வைக்கிறோம். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இவையனைத்தும் பாதுகாக்கும் முறைகளே தவிர சேமிக்கும் முறை அல்ல என்று தோன்றியதால் மனம் தன் எண்ணங்களைச் சட்டென துண்டித்துக்கொள்கிறது. சேமித்தல் சேமித்தல் என்று ஏதோ மந்திரத்தைச் சொல்வதுபோல மனம் திரும்பத்திரும்ப உச்சரிக்கிறது. அதைத் தொடர்ந்து சேமிப்புக் கணக்கு என்னும் சொல் உதடுகளில் வந்து உட்கார்கிறது. அதைத்தொடர்ந்து அஞ்சல் நிலையங்களும் வங்கிகளும் மனத்தில் தோன்றுகின்றன. இங்கே பணத்தை எப்படிச் சேமிக்கிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் ஓரளவு கணிசமான தொகை சேர்ந்ததும் அஞ்சல் நிலையத்துக்குச் செல்கிறேன். என் பெயரிலிருக்கும் கணக்கில் சேர்த்துக்கொள்ளும்படி தொகையைச் செலுத்துகிறேன். அஞ்சல் ஊழியர்கள் அத்தொகையைப் பெற்றுக்கொண்டு வரவு வைத்துக்கொள்கிறார்கள். நான் கொடுக்கிற பணத்தை அவர்கள் தம் அலுவலகத் தொகையோடு சேர்த்துக்கொள்கிறார்கள். என்னிடம் இருந்தவரை தனித்தொகையாக இருந்த ஒன்று அவர்களிடம் ஏற்கனவே குவிந்திருக்கும் தொகையில் கலந்து விடுகிறது. என் தொகை சேமிக்கப்படுகிறது. மொத்தத் தொகையின் ஒரு பகுதியாக. கிட்டத்தட்ட நான் விடையை நெருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் பரபரப்போடு கற்பனை ஆசிரியரிடம் விவரிக்கிறேன். அவர் புன்சிரிப்போடு என்னை நெருங்கி முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டுகிறார். என் விடையை அவர் ஏற்றுக்கொள்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா என்று புரியாமல் குழம்புகிறேன். "சரி, உன் வழிக்கே வருகிறேன். தொகையைச் சேமிக்கும் வழிமுறைப்படியே யோசித்து ஒரு துளியைச் சேமிப்பது எப்படி என்னும் விடையைக்  கண்டுபிடி" என்று தூண்டுகிறார். என்னால் தொடர்ந்து செல்லமுடியவில்லை. நான் அதுவரை யோசித்த வழியை சரி அல்லது தப்பு என்று நேரிடையாகச் சொல்ல ஏன் இவர் தயக்கம் காட்டுகிறார் என்று தத்தளிக்கிறது மனம். அதற்கான விடையை அறியாமல் அடுத்தபடி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. நான் அவர் முகத்தையே மீண்டும்மீண்டும் பார்க்கிறேன். நான் விடையை எட்டிவிட்டதாக நினைத்த அவர் "ம் சொல் சொல்" என்று என் கண்களைப் பார்த்து உற்சாகப்படுத்துகிறார்.

     அந்த அளவற்ற உற்சாகத்தில் ஒரே தாவலில் தடையைக் கடந்துவிடுகிறது மனம். துளியையும் தொகையையும் ஒருகணம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறேன். தனிப்பட்ட தொகை பொதுத்தொகையோடு சேர்வதன்மூலம் சேமிக்கப்படுகிறது. அப்படியென்றால் தனிப்பட்ட ஒரு துளி பொதுத்துளிகளோடு சேர்வதன்மூலம் சேமிக்கப்படலாம் என்று எனக்குள் நானே சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன். "பொதுத்துளிகள்" என்னும் சொல்லாக்கம் எனக்கே வேடிக்கையாகப் படுகிறது. உலகத்தில் அப்படி எதையும் சொல்வதில்லையே என்று தோன்றுகிறது. பொதுத்துளிகள் என்று சொல்வதைவிட "துளிகளின் திரட்டு" என்ற சொல்லாக்கம் நன்றாக இருப்பதைப்போல நினைத்துக்கொள்கிறேன். அச்சொல்லில் ஒருவித கவர்ச்சி கூடுதலாக அமைந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறேன். துளிகளில் திரட்டு எது என்னும் கேள்விக்கு ஒரு குடுவை நீர், ஒரு குடம் நீர் முதல் குளம், ஏரி, வாய்க்கால், ஆறு, கடல் வரை பல சித்திரங்கள் ஒரே கணத்தில் எழுகின்றன.  இவற்றில் ஏதோ ஒன்றில் அத்துளியைக் கலந்துவிட்டால் காலத்தைத் தாண்டி அது சேமிக்கப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது. அவ்விடையைக் கண்டடைந்த  அக்கணத்தில் என் மனம் கொண்ட பரவசத்துக்கு எல்லையே இல்லை. வானத்தில் ஏறி மிதப்பதைப்போல இருக்கிறது. திரைப்படத்தில் குறிப்பிடப்படப்போகிற விடையைக் காண ஆவலாக இருக்கிறது. உண்மையிலேயே அவ்விடை வேறொன்றாக இருந்தாலும் கூட மனம் கொண்ட பரவசம் குறைவுறாதென்று தோன்றுகிறது. கற்பனை ஆசிரியர் மறுபடியும் நெருங்கி என் கன்னத்தில் தட்டிக்கொடுக்கிறார்.

     துளி என்பதை ஒரு படிமமாக மாற்றிப் பார்க்க உடனே விழைகிறது மனம். துளி என்பது அறிவா, செல்வமா, ஆற்றலா, மானுட வாழ்வா, நேசமா, அழகா என அடுக்கிக்கொண்டே செல்கிறேன். இன்னொரு கோணத்திலிருந்து அதன் பொருத்தத்தைப் பரிசோதிக்கவும் முனைகிறேன். என்னிடம் இருக்கும் அறிவு ஒரு துளி. அவ்வளவுதான். அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் என்னோடு மட்டுமே வைத்துக்கொள்வதில் எவ்விதமான பொருளும் இல்லை. யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத அறிவு பசிக்கு உதவாத உணவைப்போன்றது. பகிரப்பகிர அறிவு பலமடங்காகப் பெருகுகிறது. என் அறிவை உலக அறிவோடு கலக்கவிட வேண்டும், ஆறு கடலைநோக்கித் தாவிச் சங்கமமாவதைப்போல. வாழ்வில் நாம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு துளிதான்.  தினசரி வாழ்வில் நான் பெறும் அனுபவங்களை என் மனைவியோடும் பிள்ளையோடும் மனத்துக்குப் பிடித்த தோழர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களும் தம் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்கிறார்கள். அவை அனைத்தும் நிகழ்கால நேரிடை அனுபவங்கள். இம்மண்ணில் காலம் காலமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் தம் வாழ்வனுபவங்களையும் அவ்வனுபவங்கள் மீதான தம் கருத்துகளையும் இலக்கியங்களாக எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நம் சுவைக்கும் ஆர்வத்துக்கும் தகுந்தவகையில் தேர்ந்தெடுத்துப் படித்துச் சில அனுபவங்களைப் பெறுகிறோம். அது வாசிப்பனுபவம். வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும் சேர்ந்து நம்மை அங்குலம் அங்குலமாகச் செதுக்குகிறது. நம் துளி அனுபவம் இந்த மானுட சமூக அனுபவத்தோடு சங்கமமாகிக் கரைந்துவிடுகிறது. தண்ணீரில் உப்பு கரைவதைப்போல. ஒரு  விளையாட்டில் ஈடுபட்டதைப்போல மனம் உற்சாகம்கொண்டு துள்ளித்துள்ளித் தாவுகிறது.

     திரையில் படம் முடிவைநோக்கி நெருங்குகிறது. ஒரு கேள்வியுடன் கிராமத்துக்குள் நுழையும் தாஷி தன் குழப்பம்  தீராதவனாகவே கிராமத்தைவிட்டு வெளியேறும்படி சூழல் அமைந்துவிடுகிறது. அதில் அவனும் உள்ளூர வருத்தப்படுகிறான். மிகவும் ஆசையோடு நெருங்கி வாழ்ந்த மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்துவந்தது அவனை வாட்டுகிறது. ஆனாலும் ஒப்புக்கொண்ட ஒரு கடமையே அவனை அங்கிருந்து விலக்கி இழுக்கிறது என்பதும் அவனுக்குப் புரிகிறது. ஆயாசத்தோடு நடக்கத் தொடங்குகிறான். கேள்விகள் செதுக்கப்பட்ட கற்குவியல்கள் மறுபடியும் அவன் கண்களில் தென்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கண்களில் தென்பட்ட அதே கேள்வியை மறுபடியும் பார்க்கிறான். பழைய குழப்பமே மீண்டும் மனத்தில் நிரம்பி வழவதால் அவனால் விடையை உணர இயலவில்லை. அவ்வாசகத்தை மறுபடியம் மறுபடியும் படித்துக் குழம்புகிறான். விடையை அறிய விரும்புகிறவர்கள் அந்தக் கல்லைப் புரட்டிப் பார்க்கும்படி இன்னொரு குறிப்பு கூறுகிறது. ஆயாசத்தோடும் ஆர்வத்தோடும் அவன் கல்லைப் புரட்டுகிறான். கிட்டத்தட்ட நானும் அக்கணத்தில் தாஷியின் உடலுக்குள் புகுந்துகொண்டதைப்போல இருக்கிறது. கல்லின் மறுபக்கத்தில்ர எழுதப்பட்டிருக்கும் விடையை தாஷி படிக்கிறான். "கடலோடு கலப்பதன் வழியாக" என்பது அவ்வாசகம்.

     என் மனம் வானிலேறிப் பறப்பதைப்போல இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் திரைப்படத்துத் தாஷி மிகவும் துக்கமடைந்து நிற்கிறான். தொடக்கத்தில் அவன் துறவி. அப்போது அவனால் மற்ற துறவிகளோடு சேர்ந்திருக்கத் தெரியவில்லை. காமம் அவனை அங்கிருந்து விரட்டுகிறது. இடையில் அவன் இல்லறவாசி. அப்போதும் இல்லற விதிகளுக்கு இசைவாக அவனுக்கு வாழத் தெரியவில்லை. குடும்பத்தை விட்டு விலகிவிடுகிறான். இப்போதும் மீண்டும் துறவை நாடிச் செல்கிறான். எந்த இடத்திலும் இரண்டறக் கலந்து வாழத் தெரியாதவனாக இருந்ததை நினைத்து அவன் நொந்து நிற்பதன் துக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கணம் என் மனத்தில் புத்தரின் பேருருவம் ஒளியுடன் படர்வதைப்போல இருக்கிறது. அவர் ஞானத்தை அடைந்தவர். அந்த ஞானத்தைக் கரைப்பதற்காகவே மானுட சமுத்திரத்துக்கு இடையே வாழ்வதற்குத் திரும்பியவர் என்ற எண்ணம் எழுகிறது. எவ்வளவு பெரிய மகான் அவர்.

     படம் முடிந்து அனைவரும் சலசலத்தபடி கலைகிறார்கள். என் மனைவியின் கைகளைப் பற்றியபடி அரங்கத்தைவிட்டு மெளனமாக வெளியேறும்போது முதல் வரியையும் இறுதி வரியையும் மீண்டும் இணைத்து சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன். அது பேரனுபவமாக இருக்கிறது.

 

(புதிய பார்வை – 2006)