எண்பதுகளின் பிற்பகுதியில் தொலைபேசித்துறையில் கோஆக்சியல் கேபிள் பாதை அமைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்தன. வனப்பகுதிகளும் மலைப்பகுதிகளும் நிறைந்த பல மாவட்டங்களை இணைக்க முடியவில்லை. முக்கியமாக ஹாசன், மங்களூர், சிக்கமகளூர், கார்வார், ஷிமோகா போன்ற பகுதிகளை இணைக்கமுடியாமல் திணறினோம். அந்த நேரத்தில் இரும்புக் கோபுரங்களைக் கட்டியெழுப்பும் மாற்றுத்திட்டம் உதித்தது.
இரண்டு
அடுத்தடுத்த ஊர்களில் இருநூறு முன்னூறு அடி உயரத்துக்கு இரும்புக் கோபுரங்களை கட்டியெழுப்பி நிறுத்தி அதன் உச்சியில் ஆண்டெனாக்களைப் பொருத்தி அவற்றின் வழியாக மின் அலைகளாக மாற்றப்பட்ட ஒலி அலைகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வசதியான ஒரு நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதுதான் அந்த மாற்றுத் திட்டம். ஜபல்பூர் பயிற்சி
நிலையத்துக்குச் சென்று அதற்கான பயிற்சியை நானும் நண்பர்களும் பெற்றுக்கொண்டு திரும்பினோம்.
வந்ததுமே
வனப்பகுதி மாவட்டங்களில் அமைந்திருக்கும் ஊர்களிடையில் இணைப்பதற்குத் தேவையான ஒரு மாதிரி திட்ட வரைவை தயாரித்துக்கொடுத்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, வேலையை உடனே தொடங்குமாறு உத்தரவு வந்தது. ஹாசனிலிருந்து மங்களூருக்கு
பாதையை உருவாக்கும் வேலையில் ஐந்து பொறியாளர்கள் கொண்ட குழு இறங்கியது. ஹாசனிலிருந்து சக்லேஷ்புர
வரைக்கும் நிலவழிப்பாதை. அதேபோல மங்களூரிலிருந்து பன்ட்வால வரைக்கும் உள்ள பாதையும் நிலவழிப்பாதை. இரண்டு பகுதிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சக்லேஷ்புரத்துக்கும்
பன்ட்வாலுக்கும் இடைப்பட்ட தொலைவு முழுக்க முழுக்க மேற்குத்தொடர்ச்சி மலையைச் சேர்ந்த அடர்ந்த வனப்பகுதிகள். இரண்டு ஊர்களுக்கும் இடையில் இரண்டு வழிகள் ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்ட இரண்டு அரைவட்டங்களைப்போல இருந்தன. ஒன்று சார்மடி
வனப்பகுதி ஊடே செல்லும் வழி. மற்றொன்று
ஷிராடி வனப்பகுதியின் ஊடே செல்லும் வழி. அதுதான் பிரச்சினைக்குரிய பகுதி. எதைத் தேர்ந்தெடுப்பது
என்று தெரியவில்லை.
இரண்டு
வழித்தடங்களிலும் கோபுரங்கள் அமைக்கவேண்டிய ஊர் விவரங்களையெல்லாம் குறித்த வரைபடங்களோடு வனத்துறை அதிகாரியைச் சந்தித்தேன். ஏதேனும் ஒரு வழித்தடத்தில் வேலையைத் தொடங்க அவர்கள் அனுமதி அளிக்கவேண்டும். அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட வனத்துக்குள் பதித்துவிட முடியாது. நான் சொன்னதையெல்லாம்
பொறுமையாகக் கேட்ட பெரிய அதிகாரி இன்னொரு சின்ன அதிகாரியை என்னுடன் அனுப்பி வழித்தடங்களை அவருக்குக் காட்டுமாறு சொன்னார்.
அவர்
பெயர் பசவலிங்கப்பா. என்னோடு அவர் நான்கு நாட்கள் எல்லா இடங்களுக்கும் சுற்றினார். முதல் நாளிலேயே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவரை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறுவதற்கு வந்தேன். அவர் முன்னால்
நடக்க நான் பின்னால் தொடர்ந்து வந்தேன். அவர் சட்டென
கைகளை இருபுறமும் விரித்துக்கொண்டு பின்னால் வரும் என்னைத் தடுத்து நிறுத்தினார். எங்கள் வாகனத்தின் உச்சியில் ஒரு மீன்கொத்தி உட்கார்ந்து எங்கோ வானத்தைப் பார்த்திருந்தது. அவர் அதைப் பார்த்து நின்றுவிட்டார். நீலம் படிந்த முதுகுப்புறம். கழுத்துக்குக் கீழே செம்மஞ்சள் நிறம். சற்றே பருத்த
உடல். மூக்கு நீண்டிருக்காவிட்டால்
அதன் மஞ்சள் நிறத்தை வைத்து மைனா என்றுதான் சொல்லத் தோன்றும்.
“எஷ்டு
சந்த, அல்வா?” என்று
ஒருகணம் புன்னகைத்தார் பசவலிங்கப்பா. சில கணங்களுக்குப் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி வாகனத்தில் ஏறினார். கதவு அறைபட்ட
சத்தத்தில் மீன்கொத்தி பறந்துபோனது.
“அது
மீன்கொத்திதானே?” என்று ஐயத்தோடு கேட்டேன். “ஹெளது, மின்ச்சுளி” என்று
முதலில் கன்னடத்தில் பதில் சொன்னார் அவர். பிறகு ஆங்கிலத்தில்
சொன்னார். “இங்க ஏதாச்சிம் ஏரி குளம் இருக்குதா என்ன? இந்த இடத்துல
எப்பிடி?” என்று மெதுவாக என் ஐயத்தை முன்வைத்தேன். “இதுதான சார் அதனுடைய இடம்? இங்க வராம
எங்க போகும்? ஏரி குளத்துக்கா
பஞ்சம் இங்க? நூறு நூறு
அடிக்கு ஒன்னு இருக்கு. அதனுடைய இடத்த
நாம ஆக்கிரமிச்சிட்டு, அது ஏன் இங்க வருதுன்னு கேட்டா எப்பிடி சார்?” என்று இன்னொரு கேள்வியையே எனக்குரிய பதிலாகச் சொன்னார் அவர்.
மின்ச்சுளி
என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை நூலகத்தில் எடுத்துப் படித்த நினைவு வந்தது. ”அந்தத் தலைப்பில தேஜஸ்வி ஒரு புத்தகம் எழுதியிருக்காரில்ல?” என்று அவரிடம் எழுப்பினேன். அதைக் கேட்டு அவர் முகம் உடனே மலர்ந்துவிட்டது. ”படிச்சிருக்கீங்களா?” என்று பரபரப்புடன் என்னிடம் கேட்டார் பசவலிங்கப்பா. ”படிச்சிருக்கேன். கர்நாடகத்தின் பறவைகள் புத்தகமும் படிச்சிருக்கேன்” என்றேன் நான்.
அவர்
வியப்பு தாளாமல் என்னை ஒருவிதமாக விசித்திரமாகப் பார்த்தபடி “நீங்க எப்பிடி....?” என்று இழுத்தார். ”எனக்கு தாய்மொழி தமிழ்தான். ஆனால் கன்னடமும்
தெரியும்” என்று பதில்
சொன்னேன். தற்செயலாக அவர்
எழுதியிருந்த ‘அபச்சூர் போஸ்டாபீஸ்’ சிறுகதையைப் படித்ததையும் அதைத் தொடர்ந்து அவர் எழுதிய படைப்புகளைத் தேடும்போது பறவைகளைப்பற்றியும் இயற்கையைப்பற்றியும் அவர் எழுதிய மற்ற படைப்புகளையும் படித்ததாகச் சொன்னேன். தேஜஸ்வியைப் பற்றி
உரையாடத் தொடங்கி நாங்கள் அந்தப் பயணத்தில் மிகவும் நெருக்கமானவர்களாகிவிட்டோம்.
காட்டுப்பாதையின்
இரு புறங்களிலும் பச்சைப்பசேலென மரங்கள் அடர்ந்திருந்தன. சூரிய ஒளி தரையைத் தொட்டுவிடாதபடி மரங்களின் இலையடுக்குகள் தடுத்திருந்தன. பச்சைநிறத்தைப் பார்க்கப்பார்க்க கண்கள் குளிர்ந்தன. தரையில் உதிர்ந்த இலைகள் மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்து மட்கியும் ஒருவிதமான புதிய மணத்துடன் காடு விரிந்திருந்தது. மரங்களை மட்டும் பார்த்தபடியும் அவ்வப்போது ஒலிக்கும் பறவைகளின் கலவையான ஓசைகளை கேட்டபடி காட்டின் ஊடே செல்லச்செல்ல ஏதோ ஒரு விசித்திரமான கனவு உலகத்துக்குள் செல்வதுபோல இருந்தது. மனம் அடங்கி, எல்லா எதிர்பார்ப்புகளும் உதிர்ந்துவிட, தாழ்வாகப் பறக்கும் ஒரு பறவைபோல மிதந்து செல்லும் உணர்வு வந்தது.
பசவலிங்கப்பாக்கு
காடு பற்றி பல நுட்பமான விஷயங்கள் தெரிந்திருந்தன. காற்றில் எழும் மணத்தை வைத்து “இன்னும் கொஞ்ச
நேரத்தில் மழை வரப்போவுது” என்று சொல்வார். அவர் சொல்லும்போது
வெயிலடித்தபடி இருக்கும். நமக்கு நம்பிக்கையே
வராது. ஆனால் பத்தே
நிமிடங்களில் சட்டென இருண்டு மழை பொழியத் தொடங்கிவிடும். இலைகள் மிதிபடும் சத்தம், கிளைகள் உரசும்
சத்தம், விலங்குகளின் காலடிச்சத்தம்
அனைத்தும் அவருக்கு அத்துபடியான விஷயம்.
ஹாசன் வனத்துறையினரின் பரிந்துரைகளை முன்வைத்து பெங்களூரில் இருக்கும் தலைமை வனத்துறை அலுவலகம் இன்னும் கூடுதலான சில புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து அனுப்பும்படி எழுதியது. ஒரே மாதத்தில் நானும் அவரும் இப்படி நான்கைந்து முறை ஆய்வுக்காக மீண்டும் மீண்டும் அந்தக் காட்டுப்பாதைகளில் பயணம் செய்யவேண்டியிருந்தது. பறவைகள் பற்றியும் விலங்குகள் பற்றியும் அவர் சொன்ன கதைகள் ஏராளம். பேசத் தொடங்கினால் பேசிக்கொண்டே இருப்பார். அவர் கவிஞர் குவெம்புவின் ஆராதகர். அவர் எழுதிய பல பாடல் வரிகளை மனப்பாடமாகச் சொல்வார்.
காட்டுக்குள் ஓடைகளும் அருவிகளும் இருக்கும் இடங்கள் அனைத்தையும் அவர் அறிந்துவைத்திருந்தார். சிற்சில சமயங்களில் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு காட்டுக்குள் அழைத்துச் சென்று அவற்றைக் காட்டியதை ஒருபோதும் மறக்கமுடியாது. ஒருமுறை மான்கள் மேயும் புல்வெளியை அவர் எனக்குக் காட்டினார். சிறுவர்சிறுமியர் போல அவை துள்ளியும் ஓடிப் பிடித்தும் விளையாடிக்கொண்டிருந்த காட்சி என் ஆழ்மனத்தில் அழிவற்ற சித்திரமென பதிந்துவிட்டது.
என் முயற்சி எதிர்பார்த்த பலனளிக்காததால் என்னை அந்தத் திட்டத்திலிருந்து விடுவித்து வேறொரு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். ஊரைவிட்டுப் புறப்படும் முன்பாக பசவலிங்கப்பாவிடம் தனிப்பட்ட வகையில் சொல்லிக்கொண்டு விடைபெறவேண்டும் என்று தோன்றியது. அதற்காகவே ஒருநாள் அவருடைய அலுவலகத்துக்குச் சென்றேன். என் மாற்றல் செய்தியைக் கேட்டு அவர் வருத்தப்பட்டார்.
“காட்டுக்குள்ள முக்கியமான ஒரு இடம் இருக்குது. அத உங்களுக்குக் காட்டணும்ன்னு நெனச்சிருந்தேன். இப்படி நடந்துட்டுதே..” என்று இழுத்தார்.
“அதுக்கென்ன, வாங்க, இன்னைக்கே போவலாம்”
என் ஆவலைப் பார்த்ததும் அவர் முகம் உற்சாகத்தில் மலர்ந்தது. ”முடியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் தலையசைத்தேன்.
“இன்னைக்கு வேணாம். நாளைக்கு காலையில ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுங்க. அங்கிருந்து நேரா போகலாம்.”
“வண்டி வேணாமா?”
“மலையேற்றத்துக்கு வண்டி எதுக்கு?”. பசவலிங்கப்பா சிரித்தபடி கேட்டார்.
“மலையேற்றமா?”
“ஆமா. முப்பது கிலோமீட்டர். நடந்து பழக்கமிருக்கில்ல?”
“அதுக்கென்ன, தாராளமா நடக்கலாம்.”
“திரும்பி வர ரெண்டு மூனு நாளாகும்ன்னு வீட்டுல சொல்லிட்டு வந்துடுங்க”
கம்பளி ஆடைகள், மாற்றுடைகள், காலுறைகள், கையுறைகள் என அவசியமாக எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைப்பற்றி நினைவூட்டினார்.
“அது சரி, எங்க போறோம்? அத சொல்லலையே?” என்று கேட்டேன். அவர் புன்னகைத்தபடியே “ஒம்பத்து பெட்ட” என்றார்.
ஒன்பது குன்று என்னும் அந்தச் சொல்லே எனக்கு ஒருவித கிளர்ச்சியை ஊட்டியது. “ஒன்பது குன்றுன்னு சொன்னா, உண்மையிலேயே ஒன்பது குன்றுகள் இருக்குமா? ஒன்றுமேலே ஒன்றாக இருக்குமா? அல்லது ஒன்றுக்குப் பக்கத்தில் இன்னொன்று என அடுக்கிவைத்ததுபோல இருக்குமா?” என்று அடுத்தடுத்து எழுந்த கற்பனைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கேள்வியாகக் கேட்டேன். அவரோ, “என்ன அவசரம் இருங்க? எப்படியும் நாளைக்குப் பார்க்கத்தானே போறீங்க?” என்று என் தோளைப் பற்றி அழுத்தினார்.
அன்று
வீட்டுக்குத் திரும்பிய பிறகு ஒன்பது குன்று பற்றிய கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடந்தேன். நான் முதன்முதலாகப்
பார்த்த சிகரம் தொட்டபெட்டா. ஆனால் ஏறி நடந்து சென்று அடைந்த சிகரமல்ல. உச்சி வரைக்கும்
வாகனத்திலேயே சென்று அருகில் அரை கிலோமீட்டர் தொலைவு மட்டுமே நடந்து திரிந்த இடம். பனிப்புகைக்கு நடுவில்
பத்தடி தொலைவில் என்ன இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் நண்பர்களின் கைகளைக் கோர்த்தபடி நடந்து திரிந்துவிட்டு திரும்பிவிட்டோம். அதையடுத்து நான் பார்த்த சிகரம் பாபாபுதன்கிரி. அதுவும் உச்சி வரைக்கும் வாகனத்திலேயே சென்று பார்த்துவிட்டு வந்த சிகரம்.
மிகக்குறைந்த
உயரமென்றாலும் கால்நடையாகவே ஏறிச் சென்று நின்ற இடம் தலைக்காவேரிக்கு அருகில் உள்ள பிரம்மகிரி. அது சிகரமல்ல. சிறிய குன்றின்
உச்சி. ஆனால் அந்த
உச்சியில் நின்ற கணங்கள் பரவசமானவை. அனைத்துலகும் சூழ, நடுவில் நான் மட்டுமே நின்றிந்த கணம். கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும்
பனிப்புகை. அங்கங்கே சிற்சில
கணங்கள் கலைந்து சேரும் புகைக்கோடுகளுக்கு நடுவில் மேலே நீல வானம். கீழே பசுமையான
நிலம். என் மனம்
விம்மியது. என்னை அறியாமலேயே
என் கண்களில் நீர் நிறைந்தது. கரைந்து கரைந்து
நானும் பனிப்புகையாக மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கனவில் மிதந்தேன். ஒரு குன்றின்
மீது ஏறி நின்ற அனுபவமே அப்படியென்றால், ஒன்பது குன்றின் மீது நிற்கும் அனுபவம் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்று மனத்துக்குள்ளேயே கற்பனை செய்தபடி தூங்கியது தெரியாமலேயே தூங்கிவிட்டேன்.
அதிகாலையில்
ஐந்தரை மணிக்கெல்லாம் சரியாக பசவலிங்கப்பாவின் வீட்டை அடைந்தேன். துணிநாடாக்கள் பொருத்தப்பட்டு
முதுகில் தொங்கவிடும் வகையில் ஜிப் போட்ட ஒரு பிளாஸ்டிக் பையை நான் சுமந்துவந்திருந்தேன். நீளமான ஜெர்கின் அணிந்துகொண்டு எனக்காக பசவலிங்கப்பா காத்திருந்தார். அவர் வீட்டில் இருவரும் சூடான காப்பி அருந்தினோம். பிறகு முதுகுப்பையோடு அவரும் வெளியே வந்தார். இருவரும் அவருடைய
இரு சக்கர வாகனத்திலேயே புறப்பட்டோம். சில்லென்று வீசும் காற்று முகத்தில் மோதி விலக, முற்றிலும் இருள்
விலகாத காட்டுப்பாதையில் வண்டி உருண்டபடி இருந்தது.
நீண்ட
நேரத்துக்குப் பிறகு ஒரு திருப்பத்தில் வண்டியை நிறுத்தினார் பசவலிங்கப்பா . வானத்தை முழுமையாகக் கண்டுகளிக்கத் தக்க ஓர் இடம் அது. அவர்
முகம் கிழக்கு நோக்கித் திரும்பியது. திரைவிலக்கி வெளியே வரும் நங்கையென சூரியன் தகதகவன காட்டின் விளிம்பிலிருந்து வெளிப்பட்டபடி இருந்தது. சிவப்பும் மஞ்சளும்
இரண்டறக் கலந்து, பிறகு மெல்ல
பொன்வண்ணமாக மாறி, பார்த்துக்கொண்டிருக்கும் போதே வெண்ணிறத்தோடு வானத்தை நோக்கி நகர்ந்தது. மேக அடுக்குகளூடே
அது நகரத் தொடங்கிய பிறகு நாங்கள் அந்த இடத்திலிருந்து புறப்படத் தொடங்கினேன்.
மீண்டும்
ஒரு திருப்பத்தில் வாகனத்தை நிறுத்திய பசவலிங்கப்பா தொலைவில் சரிவான ஓரிடத்தில் சுட்டிக் காட்டினார். அங்கே ஆறேழு தேக்குமரங்கள். நடுவில் ஒரு சின்ன புல்வெளி. சதுரமான பச்சைவயல்
போல விரிந்திருந்தது. இரண்டு மயில்கள் அங்கே தோகைவிரித்தபடி நின்றிருந்தன. நீலக்கழுத்தை அசைத்து அசைத்து அவை நடந்த அழகைப் பார்த்ததும் ஒருகணம் வண்டியிலிருந்து இறங்கி அவற்றின் அருகில் சென்று நிற்கவேண்டும் என்பதுபோலத் தோன்றியது.
ஏழுமணியளவில்
நாங்கள் குண்ட்யா என்னும் செக்போஸ்ட்டை அடைந்தோம். உள்ளே நாற்காலியில்
அமர்ந்திருந்தவர்கள் பசவலிங்கப்பாவைப் பார்த்ததும் வேகமாக எழுந்து வெளியே வந்தார்கள். அவர்களிடம் வாகனத்தை ஒப்படைத்தார் பசவலிங்கப்பா. அறையிலிருந்து வெளியே வந்த ஒரு காவலர் எங்களைப்போலவே ஒரு முதுகுப்பையோடு வெளியே வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார். நான் வேகமாக பசவலிங்கப்பாவின் பக்கம் திரும்பினார். “அவர் ஸ்ரீதர். நம்ம ஃபாரஸ்ட்
கைட்” என்றார் அவர். ”இவரும் நம்மோடு வராறா?” என்று கேட்டேன். ”ஆமாம்” என்று தலையசைத்தார். நான் அவரிடம்
என்னை அறிமுகப்படுத்தியபடி அவரோடு கைகுலுக்கினேன். தண்ணீர்பாட்டில்கள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், பழங்களோடு மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு ”வாங்க சார்” என்றபடி ஸ்ரீதர்
முன்னால் நடந்தார்.
இளங்காலைக்
காற்று எங்களை வரவேற்றது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும்
பச்சை நிறம் விரிந்திருந்தது. அந்தப் புள்ளி வரைக்கும்தான் அவை மரங்கள் என்று தோற்றம் காட்டின. அதற்குப் பிறகு
எல்லாமே பச்சை வயல்களாகவே காட்சியளித்தன. இயற்கையே நெய்து அணிந்துகொண்ட ஆடை.
எனக்கு
ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு மரமும் நீர்நிறைந்தோடும் ஒவ்வொரு ஓடையும் எனக்கு வியப்பூட்டின. பார்க்கப் பார்க்க எனக்குள் ஏராளமான எண்ணங்கள் பொங்கியெழுந்தன. அவற்றை பசவலிங்கப்பாவுடன் ஒவ்வொன்றாகப் பகிர்ந்தபடி வந்தேன். ஒரு கட்டத்தில்
அங்கு நிறைந்திருப்பது அழகைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். மரம் அழகு. செடி அழகு. தளிர் அழகு. புல் அழகு. அணில்கள் அழகு. குயில்கள் அழகு. வானம் அழகு. கொஞ்சம்கொஞ்சமாக மனம் அடங்கி
அமைதி கொள்வதை என்னால் உணரமுடிந்தது. பரவசம் கூட தணிந்துவிட்டது. பார்க்கும் ஒவ்வொன்றுமே பரவசமூட்டும்போது, பரவசம் பரவசமின்மை என்னும் வேறுபாடுகள் அற்ற வேறொரு உலகத்துக்குள் வந்துவிட்டதுபோல இருந்தது. பரவசம் ஒரு
குழந்தையென என்னை தன் இடுப்பில் ஏந்திக்கொண்டது. ஒரே நேரத்தில் ஒரு பெரிய தங்க மாளிகைக்குள் இருப்பதுபோலவும் தன்னந்தனியே ஒரு குடிசைக்குள் இருப்பதுபோலவும் உணர்ந்தேன்.
ஒரு திருப்பத்தில் தண்ணீர் அருந்துவதற்காக சில நிமிடங்கள் நின்றோம். பசவலிங்கப்பா அப்போது
வானத்தைக் கவனிக்கும்படி சொன்னார். அது ஒரு
முக்கியமான கோணம். கீழே காட்டின்
பச்சை விளிம்பு. மேலே சற்றே
கருமை படிந்த மேகங்களின் கோடு. இடையில் கச்சிதமான
செவ்வக வடிவம். அக்கணத்தில் வண்ணம்
தீட்டிய ஒரு கித்தானைப்போல இருந்தது வானம். “என்ன மாதிரியான ஒரு நிறம் பாருங்கள்” என்று மெய்ச்சிலிர்த்தார்
அவர். அது வெண்மையல்ல, சாம்பலுமல்ல, கருமையுமல்ல. பால்நிறமுமல்ல. அனைத்தும் இணைந்து உருவான ஒரு புத்தம் புதிய நிறம்.
வழியில்
மலைக்குடிகள் தங்கியிருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் நாங்கள் சிற்றுண்டி சாப்பிட்டோம். அவல் உப்புமாவும் வெல்லமும். யாரோ ஒருவர்
வழியாக ஸ்ரீதர் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த வீட்டில் ஒரு சிறுமி இருந்தாள். அவள் பெயர்
லட்சுமி. ஆனால் அங்கிருந்தவர்கள்
அவளை லக்கி என்றே அழைத்தார்கள். எப்படியோ அவள் என்னோடு ஒட்டிக்கொண்டாள். அவள் கேட்ட கேள்விகளுக்கு அளவே இல்லை. ஒரு பதிலை
சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு கேள்வி கேட்டாள். புறப்படும்போது “ஒன்பது
குன்று பார்க்கப் போறீங்களா?” என்று மெதுவாகக் கேட்டாள். நான் ஆமாம்
என்பதுபோல தலையசைத்தாள்.
அவள்
ரகசியமாக எனக்கு அருகில் வந்து “அங்க ஒரு
இளவரசியும் இளவரசனும்
இருப்பாங்க. அவங்களயும் பாத்துட்டு வாங்க” என்று தீவிரமான
குரலில் சொன்னாள். நான் அவளை
ஆச்சரியத்தோடு பார்த்தேன். ”ஆமா, அங்கதான்
இருப்பாங்க. கண்டிப்பா பாருங்க” என்று விரலைக்
காட்டிச் சொன்னாள்.
“அவுங்க
எப்படி அங்க போனாங்க?”
“உங்களுக்குத்
தெரியாதா? அந்த காலத்துல
ஒரு மந்திரவாதி நாட்டிலேர்ந்து ஒரு இளவரசிய தூங்கும்போது தூக்கிட்டு வந்து ஒன்பது மலை, ஒன்பது
காடு தாண்டி மறைச்சி வச்சிகிட்டான். யாராரோ தேடி வந்து ஏமாந்து போயிட்டாங்க. யாராலயும் கண்டுபிடிக்க முடியலை. அப்ப நான்
கண்டுபிடிச்சிட்டு வரேன்னு ஒரு இளவரசரு கெளம்பி வந்தாரு. ஒன்பது மலையையும்
ஒன்பது காட்டயும் தாண்டி போயி அந்த மந்திரவாதியோடு சண்டை போட்டு ஜெயிச்சி இளவரசிய காப்பாத்திட்டாரு. ஆனா ஊருக்குத் திரும்பி வரவே இல்லை. ரெண்டு பேருக்கும்
அந்த இடம் புடிச்சிட்டதால, ஊருக்கு திரும்பி வராம அங்கயே தங்கிட்டாங்க. அதனாலதான் சொல்றேன். அங்கதான் இருப்பாங்க. நீங்க தேடி பாத்துட்டு வாங்க”. யாரோடும் பகிர்ந்துகொள்ளாத ஒரு ரகசியத்தை என்னிடம் சொல்லிவிட்ட பெருமை அவள் முகத்தில் சுடர்விட்டது.
நான்
அவளுடைய மென்மையான விரல்களைப் பற்றி “உனக்கு யாரு
சொன்னாங்க?” என்று கேட்டேன். அவள் எல்லாப்
பக்கங்களிலும் ஒருகணம் திரும்பிப் பார்த்து யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு “எங்க தாத்தா சொன்னாரு. அவருக்கு மட்டும்தான்
இந்த ரகசியம் தெரியும்” என்று
அடங்கிய குரலில் சொன்னாள். நான் உடனே
தலையசைத்தபடி “சரி, சரி, நிச்சயமா பாக்கறேன். நீதான் பாக்க
சொன்னேன்னும் சொல்றேன். சரியா?” என்றேன். அதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது. நாங்கள் அங்கிருந்து
விடைபெறும்போது வெகுநேரம் என்னைப் பார்த்து கையசைத்தபடி இருந்தாள்.
பகல்
தொடங்கிவிட்டதென்றாலும் வெப்பம் தெரியவே இல்லை. வழியெங்கும் நிழலே
படர்ந்திருந்தது. அதனால் களைப்பே தெரியவில்லை. ஒரு இடத்தில் எங்களை நிறுத்தி ஸ்ரீதர் ஒரு பாட்டிலைத் திறந்து திரவத்தை எங்கள் கையில் ஊற்றி ஷூக்கள் மீதும் காலுறைகள் மீதும் பூசிக்கொள்ளும்படி சொன்னார். அந்த மணத்துக்கு
அட்டைகள் நெருங்காது என்றார்.
வழியில்
ஒரு மரக்கிளையில் மீன்கொத்தியைப் பார்த்துவிட்டு நின்றார் பசவலிங்கப்பா. “ஆ, மீன்கொத்தி” என்றபடி அவர் முகம் மலர்ந்தது. நான் அவரைச்
சந்தித்த முதல் தருணத்தை நினைத்துக்கொண்டேன். “ஆறு நெருங்கிடுச்சின்னு நினைக்கறேன்” என்றார். அவர் சொன்னதுபோல
பத்து நிமிட நடை தூரத்தில் ஒரு ஆறு வளைந்து சென்றது. பார்ப்பதற்கு தேங்கி
இருப்பதைப்போலத்தான் காட்சியளித்தது. நெருங்கி நிற்கும்போது ஆற்றில் உதிரும் இலை மித்ந்து செல்லும் வேகத்தைப் பார்த்த பிறகுதான் தண்ணீரின் வேகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. தண்ணீருக்கு அடியில்
உள்ள கூழாங்கற்களும் மணற்பரப்பும் கூட தெளிவாகத் தெரிந்தது. அந்த அளவுக்கு
பளிங்குபோல இருந்தது தண்ணீர். ”இது கபின்ஹொளெ” என்று சொன்னார்
ஸ்ரீதர்.
தொலைவில்
ஆற்றோரமாக நடமாடும் மான்களைப் பார்க்கும்படி சுட்டிக் காட்டினார். “தண்ணி குடிக்க வந்திருக்கும் அல்லவா?” என்று கேட்டபடி நாங்கள் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தோம். “இந்த இடத்துல நான் ஒருமுறை ஒரு யானை வந்து தண்ணி குடிக்கறத பார்த்திருக்கேன்” என்று சொன்னார் ஸ்ரீதர். எனக்குள் அச்சமும்
உற்சாகமும் ஒருங்கே எழுந்தன. “இப்ப வருமா?” என்று ஆவலோடு கேட்டேன். “தெரியலை. வரலாம். வராமலும்
போவலாம்” என்று தோளைக்
குலுக்கியபடி சொல்லிவிட்டுச் சிரித்தார்.
மலையடிவாரத்தை
ஒட்டியே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். மதிய வேளையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு தண்ணீர் அருந்தினோம். பல இடங்களில் சின்னச்சின்ன ஓடைகளைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. ஷூக்களைக் கழற்றிவிட்டு நடக்கக்கூடாது என்பதால் இடையிடையே தெரிந்த பாறைகளில் கால் வைத்துத் தாண்டிக் கடந்தோம்.
ஒரு கட்டத்தில் நாங்கள் தொடங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோமோ என்றுகூடத் தோன்றியது. அந்த அளவுக்கு
எல்லா இடங்களும் ஒன்றுபோலவே காட்சியளித்தன.
காட்டுக்கு
நடுவில் வனத்துறைக்குச் சொந்தமான ஓடு வேய்ந்த ஒரு சின்ன அறை இருந்தது. அன்றைய இரவுப்பொழுதை
அங்கு தங்கி கழிக்கலாம் என்பது எங்கள் திட்டம். குறித்த நேரத்துக்கு
முன்பாகவே நாங்கள் அந்த இடத்தை அடைந்துவிட்டோம்.
நான்கு
பக்கங்களில் சுவர்களும் ஒரு கதவும் மட்டுமே கொண்ட அறை அது. மரக்கட்டில்கள்
மட்டும் இருந்தன. ஸ்ரீதர் அதைத்
திறந்து உள்ளே காற்று புகுந்துவர வழி ஏற்படுத்தினார். சிறிது நேரத்துக்குப் பிறகு உள்ளே சென்று சுத்தமாக்கினார். நாங்கள் வெளியே மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். சூரியன் மறையும் நேரம் அது. அழகான
ஒரு நடனத்துடன் நிறைவடையும் கலைநிகழ்ச்சிபோல அந்தக் காட்சி இருந்தது.
இரவு
ஆப்பிள்களையும் பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு கொண்டுவந்த போர்வையை கட்டில் மீது போர்த்திவிட்டு கம்பளியைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டோம். குவெம்பு எழுதிய ராமாயணத்திலிருந்து சில பாடல்களைப் பாடிக் காட்டி பொருள் சொன்னார் பசவலிங்கப்பா. அவர் குவெம்புவைப்பற்றி பேசுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய பாடல்கள், கதைகள், நாவல்கள்
என அனைத்தையும் அங்கங்கே தொட்டுத்தொட்டு பேசினார். பேச்சின் சுவாரசியத்தில்
நீண்ட நேரம் விழித்திருந்தோம். எப்போது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கிவிட்டோம்.
காலையில்
ஸ்ரீதர்தான் என்னைத் தொட்டு எழுப்பினார். எழுந்த வேகத்தில் ஒன்றும் புரியாமல் நான் அவரைப் பார்த்தேன். “சீக்கிரம் வாங்க சார். சூரியன் வர
நேரம்” என்றார். அவர்
சொல்வதை உள்வாங்கிக்கொள்ள ஒருகணம் பிடித்தது. உடனே போர்வையை
உதறிவிட்டு எழுந்தேன். அதற்குள் சத்தம்
கேட்டு பசவலிங்கப்பாவும் எழுந்துவிட்டார்.
இருவரும்
வெளியே வந்தோம். குளிர்க்காற்று முகத்தை அறைந்தது. எண்ணற்ற பறவைகளின் பேரோசை ஒரு கலவை இசைபோல ஒலித்தது. நீண்ட உடலுடைய
வெண்ணிறக் கொக்குகள் கூட்டமாகப் பறந்துபோவதைப் பார்த்தேன். வெள்ளித்தகடென கீழ்வானம் மின்னியதில் அந்த வெண்மை மேகங்களில் பிரதிபலித்தது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வானில் செம்மை படர்ந்தது. அதைத் தொடர்ந்து
படிப்படியாக சூரியன் உயர்ந்தது. மெய்மறந்து நாங்கள்
அக்காட்சியில் தோய்ந்திருந்தோம்.
அடுத்த
ஒரு மணி நேரத்தில் காலைக்கடனை முடித்து குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு புறப்பட்டோம். முதல் நாளில் இருபது கிலோமீட்டருக்கும் மேலாக நடந்திருந்தும் களைப்பின் சுவடே இல்லை.
ஆர்வத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் ”இன்னும் எவ்வளவு
நேரமாகும் ஸ்ரீதர்?” என்று கேட்டேன். “இன்னும் ரெண்டு மணி நேரத்துல சேந்துடலாம் சார்” என்றார்.
மீண்டும்
மீண்டும் வழியில் ஆற்றின் கிளைகள் வந்தபடியே இருந்தன. அவற்றைக் கடந்து
மரங்கள் அடர்ந்த பகுதிகள் வழியாகவும் மரங்களற்ற புல்வெளி வழியாகவும் நாங்கள் நடந்துபோய்க்கொண்டே இருந்தோம். வழியில் ஒரு
மரத்தில் சிங்கவால் குரங்குகள் அமர்ந்திருப்பதை எங்களுக்குக் காட்டினார் ஸ்ரீதர். ஒரு ஆற்றங்கரையில்
மீண்டும் நாங்கள் மான்களையும் மலையாடுகளையும் பார்த்தோம்.
எண்ணற்ற
வளைவுகள். குறுகலான பாதைகள். பாலங்கள். ஏற்ற இறக்கங்கள். அனைத்தும் ஒரு புள்ளியில் சட்டென நிறைவடைய எங்கள் முன்னால் நீல வானம் காட்சியளித்தது. வானத்துக்குக் கீழே அமைதி ததும்பும் பச்சைப்பசேலென குன்றுகள்.
என்னால்
அக்காட்சியை நம்பவே முடியவில்லை. சொல்லற்று உறைந்துவிட்டேன். “இதுதான் ஒன்பது குன்று” என்றார் ஸ்ரீதர்.
குன்றுகளில்
பதிந்திருந்த என் பார்வையை ஒருகணம் விலக்கி ஸ்ரீதரையும் பசவலிங்கப்பாவையும் நன்றியுடன் பார்த்தபடி அவர்களுடைய கைகளைப் பற்றிக்கொண்டேன். என்னை அறியாமலேயே என் கண்கள் தளும்பின.
பசுமை
நிறைந்த வெட்டவெளியில் ஒன்றை அடுத்து ஒன்றென ஒன்பது சிறுசிறு குன்றுகள். பச்சைப்புடவைக்குள் நாணி முகம்மறைத்து
நின்றிருக்கும் இளம்பெண்களென அவை நின்றிருந்தன. பச்சைக் குவியல்கள். பச்சைக்கோபுரங்கள். கண்ணுக்குத் தெரியாத கிளைகளில் ஆடும் பச்சைத்தூளிகள். கழுத்து வரைக்கும் தரைக்குள் புதைந்து விண்நோக்கும் முகங்கள். விண்ணை நோக்கி
அவை என்ன கோருகின்றன? மீட்சியையா? ஆசியையா? விண்ணுடன் அவை
நிகழ்த்தும் அலகிலா உரையாடல்களை இசையென சுமந்துவரும் காற்று மெல்லிய ரீங்காரமென, ஓங்கிய ஓங்காரமென ஓய்வே இன்றி, பரப்பிக்கொண்டே இருந்தது. காற்றின்
மொழியறியாமல் அந்த உரையாடலை அறிந்துகொள்ள முடியவில்லை.
பச்சைமலைகளின்
பேரமைதியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எப்போதோ படித்த ஒரு பிரபந்தப்பாட்டின் வரிகள் நெஞ்சிலெழுந்தன. ’பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்று ஆனந்தக்கூத்தாடும் ஒரு பக்தரின் வரிகள். உன்னைவிட்டு எங்கும்
போகமாட்டேன் என நெஞ்சுக்குள் புகுந்த இறைவன் அளித்த வாக்குறுதியில் மெய்மறந்து நிற்கிறார் அந்த பக்தர். ’கார் ஏழ், கடல்
ஏழ், மலை
ஏழ், உலகுண்டும்
ஆரா வயிற்றானை’ அடங்கப் பிடித்துவிட்ட
ஆனந்தத்தில் திளைத்து நிற்கிறார் அவர். பச்சை மலைகள்
திளைத்து நிற்பதற்கு அப்படி ஒரு வாக்குறுதியைப் பெற்றதுதான் காரணமா? ததும்பியும் குழம்பியும்
தடுமாறியும் திளைத்தும் எண்ணற்ற கேள்விகளோடு ஒவ்வொரு கணமும் மனம் மோதிக்கொண்டிருந்த நேரத்தில், ஆம் ஆம்
என்று சொல்வதுபோல எழுந்து முழங்கியது காற்று.
அந்தக்
குன்றுகளின் உச்சியிலிருந்து என்னால் கண்களை விலக்கவே முடியவில்லை. மனம் அதிலேயே ஒட்டிக்கொண்டது. ஒருகணம் வழியில் சந்தித்த சிறுமி சொன்ன இளவரசன் இளவரசி சொன்ன கதையை நினைத்துக்கொண்டேன். இப்படி ஒரு இடத்தில் இருந்து பழகிய பிறகு யாருக்குத்தான் மனிதர்கள் நிறைந்த நாட்டுக்குத் திரும்ப மனம் வரும். ”இளவரசனே, இளவரசியே, நீங்கள்
அங்கேயே என்றென்றும் ஆனந்தத்துடன் வாழ்வீர்களாக” என்று மனசார வாழ்த்தினேன்.
என் தோள் தொட்டு அசைக்கப்பட்டபோதுதான் நான் இந்த உலகத்துக்கே மீண்டு வந்தேன். ஒரு மலரென
மனம் எடையற்று மிதப்பதை உணர்ந்தேன். அபூர்வமான
அக்கணத்தில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டதுபோல இருந்தது. புன்னகையுடன் பசவலிங்கப்பாவைப்
பார்த்தேன். “திரும்பலாமா?” என்பதுபோல அவர் தலையை அசைத்தார்.
“ரெண்டு
மணி நேரம் ஓடினதே தெரியலை” என்று புன்னகைத்துக்கொண்டே
மூச்சை இழுத்து வாங்கினார். ”ரெண்டு மணி நேரமா?” என்று நம்பமுடியாமல் நான அவரைப் பார்த்தேன். ”ம்” என்று
சிரித்தார் அவர்.
நான்
மீண்டுமொரு முறை திரும்பி ஒன்பது குன்றுகளையும் பார்த்துவிட்டு திரும்பினேன். கீழே வைத்திருந்த பையை எடுத்து முதுகில் வைத்துக்கொண்டேன்.
“இப்ப
கெளம்பனாதான் இருட்டறதுக்குள்ள நாம கீழ போகமுடியும்” என்றார் ஸ்ரீதர். ஸ்ரீதர் முன்னால்
நடக்க, பசவலிங்கப்பா அவருக்குப்
பின்னால் நடக்க, அவரைத் தொடர்ந்து
நான் நடக்கத் தொடங்கினேன்.
(2020)