”இன்னைக்கு என்ன, பூமழையா?
இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”
இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்து கிடக்கும் பழைய பூக்களின் குவியல்மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.
அதற்குள் ”எல்லாமே வருக
வருகன்னு உனக்கு வரவேற்பு குடுக்கறதுக்கான ஏற்பாடு கதிர்” என்றபடி கதவோரமாகச் சாய்ந்து
ஒரு பழைய புத்தகத்தில் மூழ்கியிருந்த தமிழ் என்னைப் பார்த்துச் சிரித்தான். தொடர்ந்து
“வருக வருக” என்று நாடகத்தனமாகச் சொன்னபடி இன்னொரு முறையும் சிரித்துவிட்டான். வாளியில்
இருந்த துணிகளை எடுத்து உதறி கொடியில் போட்டுக்கொண்டிருந்த கல்யாணியும் திரும்பி ”வாங்க
வாங்க” என்றாள். மேலும் “அறுவது வயசு ஆளுங்களுக்குத் தகுந்தமாதிரியா பேசறீங்க நீங்க?
என்னமோ இப்பதான் கூட்டாளி கெடச்ச எளவட்டப் புள்ளைங்களாட்டம் இருக்குது உங்க பேச்சு”
என்றாள்.
வீடே ஞாயிற்றுக்கிழமையின்
களையில் திளைத்திருந்தது. எட்டுமணியைக் கடந்தும் முகம் தெரியாதபடி போர்வையை இழுத்துப்
போர்த்திய நிலையில் ஒருபக்கம் செல்வம் தூங்கிக்கொண்டிருந்தான். இன்னொருபக்கம் நிர்மலா
காப்பிக்கோப்பையை கையில் பிடித்தபடி படுக்கையில் அமர்ந்த நிலையில் செய்தித்தாளில் மூழ்கியிருந்தாள்.
”வாங்க பெரியப்பா” என்று நிமிர்ந்து புன்னகைத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கிவிட்டாள்.
சமையலறையிலிருந்து சுவரொட்டிக்கறி கொதிக்கும் வாசனை வந்துகொண்டிருந்தது.
”என்ன பேசாம இருக்க?” என்றபடி
எனது கையிலிருந்த ஒரு பூவை எடுத்து காம்பைப் பற்றி உருட்டியபடி நடுநெற்றியில் ஒரு கணம்
ஒற்றியெடுத்தான் தமிழ். அதன் இதழ்ப்பதிவில் முகம் சிலிர்த்தவனாக, அப்படியே புருவம்,
விழிகள், கன்னமென ஒற்றியொற்றி எடுத்தபடி என் மீது பார்வையைப் பதித்தான். என் கண்களில்
எதையோ அறிந்தவனாக “என்ன கதிர், ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்ன விஷயம் சொல்லு?” என்று
கேட்டபடி விரல் பற்றியிருந்த பூவை புத்தகத்தின் மீது வைத்துவிட்டு எழுந்தான். அக்கணமே
நானும் எழுந்து நின்றுவிட்டேன்.
”காலையில வில்லிநூரு ஆத்தங்கரை
வரைக்கும் போலாம்ன்னு ஒரு பெரிய வாக்கிங் போயிருந்தேன் தமிழ்…….”. தொடங்கிவிட்டேனே
தவிர மேற்கொண்டு சொல்ல முடியாத அவஸ்தையில் ஒருகணம் முகத்தை மகிழமரத்தின் பக்கம் திருப்பிக்கொண்டேன். உச்சிக் காம்பிலிருந்து பிரிந்த ஒரு பூ காற்றில்
மெதுவாக அசைந்தசைந்து இறங்கி தரையில் உதிர்ந்தது.
“என்ன கதிர், சொல்லு. எதுக்காக
இவ்வளவு தயக்கம்? என்ன பிரச்சினை?”. தமிழ் என் தோளைப் பற்றி அழுத்தினான்.
ஒரு நீண்ட பெருமூச்சோடு
அவன் முகத்தைப் பார்த்தேன். சாயமேற்றி கருப்பாக்கிய தலைமுடியுடன் கூடிய அவனுடைய தற்போதைய
தோற்றத்தை ஊடுருவிக் கடந்து பழைய முகத்தை என்னால் ஒரே கணத்தில் தொட்டுவிட முடிந்தது.
அருமையான பாடகன் அவன். அந்தக் காலத்தில் இந்த ஊருக்குள் எங்கள் மெல்லிசைக்குழு ஏறி
நிற்காத மேடையில்லை. பாடாத பாட்டுமில்லை.
”எப்படி சொல்றதுன்னு தெரியலை
தமிழ். வாக்கிங் முடிச்சிட்டு திரும்பும்போது
போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு கடையில டீ குடிச்சிட்டிருந்தன். எதுத்தாப்புல சுவர்ல
ஒரு கூட்டம் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிட்டிருந்திச்சி. நான் ஆரம்பத்துல அதை
சரியா கவனிக்கலை. மேம்போக்கா பாத்துட்டு கெளம்பிட்டேன். நடக்கநடக்க எந்த பக்கம் திரும்பினாலும்
அந்த போஸ்டர் கண்ல பட்டுகினே இருந்திச்சி. ரொம்ப தூரம் வந்தபிறகுதான் ஏதோ ஒரு பொறி
தட்டி, மறுபடியும் நிறுத்தி நிதானமா படிச்சி பார்த்தேன். ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியாம
நின்னுட்டன் தமிழ்…….” மேற்கொண்டு சொல்ல முடியாதபடி குரல் வறள நிறுத்திவிட்டேன்.
“யாருடா கதிர்? நமக்குத்
தெரிஞ்சவங்களா?” என்றபடி நெருங்கி வந்து என் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்
தமிழ். “ஆமாம்” என்பதற்கு அடையாளமாக நான் தலையைசைத்தேனே தவிர பேச்சு வரவில்லை. அதுவரைக்கும்
உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்த கல்யாணியும் ஈரக்கையை புடவையில் துடைத்தபடி தமிழுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.
“யாருடா?” அவன் விழிகளில்
மெல்ல மெல்ல ஒரு பதற்றம் குடியேறுவதைக் கவனித்தேன். சொல் எழாத தவிப்பில் நான் அவனையும்
கல்யாணியையும் ஒருகணம் மாறிமாறிப் பார்த்தேன். ”ஏன் இப்படி தடுமாறறீங்க? யாருன்னு சொன்னாதான
புரியும்?” என்றாள் கல்யாணி. “சொல்லு கதிர்,
யாரு அது?” என்று என் தோளை அசைத்தான் தமிழ்.
“கலைச்செல்வி”
ஒருகணம் புரியாதவனாக “கலைச்செல்வி?”
என்று கேள்வியாக ஆரம்பித்த அவன் குரல் அரைக்கணத்திலேயே அப்படியே அடங்கி என் கண்களை
உற்றுப் பார்த்தான். பிறகு “சரியா பார்த்தியா?” என்று துயர் தோய்ந்த குரலில் மெதுவாகக்
கேட்டான்.
“ஞாபகம் வராம நானும் முதல்ல
தடுமாறிட்டன் தமிழ். ஆனா அப்பா பேரு, குடும்பப்
பேரு, கட்சிப் பேருன்னு படிச்சதுமே புரிஞ்சிட்டுது. எல்லாத்துக்கும் மேல ஜாடைன்னு ஒன்னு
இருக்குதுல்ல, எத்தன வருஷமானா என்ன, அத மறக்கமுடியுமா?”
அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
எதையோ நினைத்து யோசனையில் ஆழ்ந்ததுபோல, தலையை இப்படியும் அப்படியுமாக சில முறைகள் அசைத்தான்.
மெதுவாக இரண்டு அடி வைத்து நடந்து சென்று நாற்காலியில் உட்கார்ந்தான். குழப்பமும் கேள்வியும்
அடர்ந்த முகத்துடன் அவனுக்குப் பக்கத்தில் சென்று நின்றாள் கல்யாணி.
தமிழ் அவளைத் திரும்பிப்
பார்த்தான். அவன் கண்களில் துயரம் அடர்ந்திருந்தது. ஆயினும் கண்ணீர் வெளிப்பட்டுவிடக்கூடாது
என்பதற்காக ஒருகணம் மூச்சை இறுக்கித் தளர்த்தினான். நிதானமான குரலில் “அப்பா காலத்து
சம்பந்தம் கல்யாணி. அந்தக் காலத்துல எல்லாமே ஒரே கட்சியில இருந்த குடும்பங்க. போகப்போக
எந்தத் தொடர்பும் இல்லாம போயிட்டுது” என்றான்.
தொடர்ந்து என்ன கேட்பது
என்று புரியாமல் உதட்டைக் கடித்தபடி ஒருகணம் நின்றாள் கல்யாணி. பிறகு “இருங்க, ரெண்டு
பேருக்கும் சூடா டீ போட்டு எடுத்தாரேன்” என்றபடி சமையலறைக்குத் திரும்பிச் சென்றாள்.
செய்தித்தாளையும் கோப்பையையும்
மேசைமீது வைத்துவிட்டு வந்த நிர்மலா தமிழுக்குப் பக்கத்தில் வந்து நின்று அவன் தோள்களில்
கைகளை வைத்து அழுத்தி “அப்பா” என்றபடி தட்டிக்கொடுத்தாள். அவள் அப்படிச் செய்யக்கூடும்
என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் குரலில் பெருகிய தாய்மையையும் பரிவையும் பார்க்கும்போது
நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த மெளனமான அழுத்தத்தை மிகவும் விரும்பியவனைப்போல நிர்மலாவின்
கையைப் பற்றி தன் கைகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டான் தமிழ்.
புத்தகத்தின்மீது வைத்த
பூவின் பக்கம் அவன் பார்வை சென்றது. என்னை
அறியாமல் நானும் அந்தப் பூவையே பார்க்கத் தொடங்கினேன். சட்டென ஒரு குரல் நெஞ்சிலிருந்து
பொங்கி “மலரே, குறிஞ்சி மலரே” என ஒலித்தது. தொடர்ந்து ”முல்லைமலர் மேலே மொய்க்கும்
வண்டுபோலே” என்ற பாடல் வரிகள் உருண்டன.
தமிழ் மிகச்சிறந்த பாடகன்.
அவன் அப்பா பாண்டிச்சேரி வட்டாரத்தில் பெரிய கட்சிப்பேச்சாளர். அவர் பேசும் மேடைகளில்
அவன் பாட்டுக்கும் இடமுண்டு. அவன் நண்பன் என்பதால் எனக்கும் சில சலுகைகள் கிடைத்தன.
சிறப்புப்பேச்சாளர் வரும் வரைக்கும் மேடையில் நாங்கள் மாறிமாறிப் பாடி அரங்கத்தில்
இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவோம். ஒதியஞ்சாலை திடலில் ஒருநாள் ஒரு பெரிய கூட்டம்.
கூட்டம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். மக்கள் அமர்வதற்காக திடலில் சீராக நிரவிவிடப்பட்டிருந்த
கடல்மணல் குழல்விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது. நாங்கள் இருவர் மட்டுமே அங்கே
எஞ்சியிருந்தோம்.
அந்த வெட்டவெளியும் தனிமையும்
வழங்கிய ஆனந்தத்தில் பித்துப் பிடித்ததுபோல நான் அவனிடம் “கொஞ்ச நேரம் பாடலாமா?” என்று
கேட்டேன். அவன் உற்சாகத்தில் தலையசைக்க, ஒரு விளக்குக் கம்பத்தின் அடியில் உட்கார்ந்து
நான் ”செல்லக்கிளியே மெல்லப் பேசு” என்று மெதுவாகப் பாடினேன். அதைத் தொடர்ந்து அவன்
”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” பாட்டைப் பாடினான். தொலைதூரத்தில் நின்றிருந்த தள்ளுவண்டி
விற்பனையாளர்களும் காவலர்களும் ரிக்ஷாக்காரர்களும் சுண்டல் விற்பவர்களும் நெருங்கி
வந்து உட்கார்ந்து கேட்டு ரசிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் அவர்கள் கைதட்டிப்
பாராட்டினார்கள். அந்தச் சத்தத்தில் மரத்திலிருந்து அஞ்சியெழுந்த பறவைகள் படபடவென்று
இறக்கையை அடித்தபடி மரங்களிலிருந்து மரங்களை நோக்கிப் பறக்கத் தொடங்கின. ஒரு பெண் தம்ளர்
நிறைய கல்கண்டு பால் கொண்டுவந்து எங்களுக்கு பருகக் கொடுத்தாள். எங்களால் அந்த சந்தோஷத்தைத்
தாங்கமுடியவில்லை. அவர்கள் போதும்போதும் என்று சொல்லும்வரைக்கும் பாடிவிட்டு புறப்பட்டோம்.
அந்த வாரத்தில்தான் எங்கள்
நெஞ்சில் இன்னிசைக்குழு திட்டம் உதித்தது. பாட்டில் ஆர்வம் கொண்டிருந்த எங்கள் கல்லூரி
நண்பர்கள் தங்கமுத்து, ராஜதுரை, ரங்கசாமி மூன்று பேரையும் தேடிப் பிடித்து எங்களோடு
சேர்த்துக்கொண்டோம். தங்கமுத்துவும் ராஜதுரையும் ஞாபகசக்தியில் என்னைவிட கெட்டிக்காரர்கள்.
நான் நான்கு பாடல்கள் சொல்வதற்குள் அவர்கள் பத்து பாடல்களைச் சொல்லும் ஆட்கள். பி.பி.சீனிவாஸ்
குரலில் ரங்கசாமி கெட்டிக்காரன். ரங்கசாமிக்கு சிதம்பரம் ஜெயராமன் குரல். அவன் தொடர்பு
வழியாக முத்துக்குமாரின் வாத்தியக்குழு எங்களுக்காக மேடைகளில் இசையமைக்க ஒப்புதல் அளித்தது.
”ஐந்து நட்சத்திரங்கள்” என்று எங்கள் குழுவுக்கு அவர்கள்தான் பெயர் சூட்டினார்கள்.
ராஜதுரை மட்டுமே அப்போது
வேலை கிடைக்காத ஆளாக இருந்தான். நானும் தமிழும் இந்தியன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தோம்.
ரங்கசாமி அஞ்சல்துறையிலும் தங்கமுத்து தொலைபேசித் துறையிலும் இருந்தார்கள். பத்தாண்டு
காலம் பாண்டிச்சேரி வட்டாரத்தில் எங்கள் குழு பாடாத திருமண மேடைகளே இல்லை. தமிழ் பாடும்
“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” பாட்டு அப்போது மிகவும் பிரபலம். பதவி உயர்வு
கிடைத்ததால் ரங்கசாமியும் தங்கமுத்துவும் குஜராத்துக்குச்
சென்றுவிட்டார்கள். போட்டித் தேர்வுக்கான வயது முடிகிற நேரத்தில் ராஜதுரைக்கும் வேலை
கிடைத்து பம்பாய் போய்விட, எங்கள் குழுவின் இயக்கம் தானாகவே ஒரு புள்ளியில் தேங்கி
உறைந்துவிட்டது.
”இந்தாங்க டீ”
என்றபடி ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக்கொடுத்தாள் கல்யாணி. “மசமசன்னு இப்படி உங்களுக்குள்ளயே
பார்த்துகினே இருந்தா என்னா அர்த்தம்? கெளம்பி போவறதுன்னா வெயிலுக்கு முன்னால சீக்கிரமா
போய் பாத்துட்டு வந்துருங்க. ஒரேவடியா எண்ணெ தேச்சி குளிக்க வசதியா இருக்கும்ல” என்றாள்.
தொடர்ந்து ”இந்த பையன் வேற ஒரு வாரமா பிரியாணி பிரியாணின்னு சொல்லிகினே கெடந்தான்ட்டு
கறிய அறுத்து அவிச்சி வச்சிட்டேன். இல்லைன்னா நானும் உங்ககூடவே வந்திருவேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள். நடுக்கூடத்தில்
சந்தனமாலைகளைத் தாங்கியபடி தமிழின் அம்மா அப்பாவின் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
மெளனத்தின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள
முடியாமல் நிர்மலாவின் பக்கம் திரும்பி என்னை அறியாமலேயே “அருணா சாய்ராம் சிடி குடுத்தனே, கேட்டியா நிர்மலா?”
என்று கேட்டுவிட்டேன். அவள் சட்டெனப் பொங்கிய
உற்சாகத்தில் “இதுவரைக்கும் ஆறுதரம் கேட்டுட்டன் பெரியப்பா. அப்படியே மனச புழியறமாதிரி
இருக்குது” என்றாள். கையை நீட்டி அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டியபோது என் துக்கமெல்லாம்
பறந்துவிட்டதுபோல இருந்தது. “அச்சுஅசலா தமிழ் மாதிரியே பேசறியேம்மா. போன வாரம் நம்ம
முத்து பாம்பே ஜெயஸ்ரீ பாடன பாட்டா ஒரு இருபது பாட்ட எடுத்து சிடி போட்டு கொடுத்தான்.
அதத்தான் இப்ப நான் கேட்டுகினிருக்கேன். அப்பறமா
ஒனக்கு கொண்டாந்து தரேன்” என்றேன்.
சட்டை மாற்றிக்கொண்டு வந்த
தமிழ் நிர்மலாவிடம் “போய் குளிச்சிட்டு நேரத்தோடு சாப்புடுமா. தம்பிய எழுப்பிவிடு.
நான் சீக்கிரமா வந்துடறன்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “போவலாமா?” என்றான்.
இரண்டு பேரும் வெளியே வந்தோம்.
தெருவின் திருப்பத்தில்
ஒரு ஜேசிபி எந்திரம் நின்றிருந்தது. அதன் நீண்ட கைகள் சாக்கடைக்குள் மூழ்கி, அடைத்துக்கொண்டிருந்த
கசடுகளை அள்ளி வெளியே போட்டன. பெரும்பாலும்
உடைந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள். பிளாஸ்டிக் பைகள். அப்புறம் பழைய துணிகள், கற்கள்,
மரக்கட்டைகள், ஓடுகள். அந்த வாடையின் கடுமையை தாங்கவே முடியவில்லை. கசடின் சரிவிலிருந்து
கன்னங்கரேலென ஒரு பந்து உருண்டு வந்து நடுத்தெருவில் நின்றது. வண்டியை ஓட்டியபடி கடக்க
முடியாத நிலையில் தெருமுனை வரைக்கும் தள்ளிக்கொண்டே நடந்து போனோம். ஆறேழு சிறுவர்கள்
கூட்டம் சரிவில் கிடந்த பொருட்களையெல்லாம் கிளறிக்கிளறி எடுப்பதும் பிறகு ஓவென்று சத்தமெழுப்பியபடி
தூக்கி வீசுவதுமாக வந்தது. ஒருவன் குனிந்து ஒதுங்கிக் கிடந்த ஒரு கம்பிக்கொத்தை கால்விரலால்
புரட்டினான். அது என்ன என்று பார்க்கும் பரபரப்பில் அதன் மீது மணலை வாரிவந்து கொட்டி
பாதத்தால் அழுத்தித் தேய்த்தான். கருமை அகன்று நிறம் துலக்கம் பெறும் வரையில் உற்றுப்
பார்த்துக்கொண்டே இருந்த வேறொரு சிறுவன் “டேய், பிளாஸ்டிக் மோதிரம்டா” என்று கண்டுபிடித்த
பரவசத்தில் சத்தமிட்டான். அதற்குள் இன்னொருவன் கம்பிக்கொத்தின் இணைப்புமுடிச்சை அவிழ்த்து
மோதிரங்களை உதிர்த்தான். கிடைத்தவரைக்கும் ஆளுக்கு நான்கு ஐந்து என்று எடுத்து விரலுக்கு
போட்டுக்கொண்டு ஹே என்று சத்தமிட்டபடி ஓடினார்கள்.
இன்னும் கொஞ்ச தூரம் நடந்து
சாலைக்கு வந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறிக்கொண்டோம். அங்கிருந்து ஜோதி நகர் சாலையில்
இறங்கியதும் ஒரு பெரிய பாலம். பாலத்தில் ஏறி இறங்கினால் மாரியம்மன் கோவில். தினமும்
பார்க்கும் கோவில்தான். என்னமோ, அன்று அந்தக் கோவில் பக்கம் திரும்பாமலேயே கடந்துவிடவேண்டும்
என்று தோன்றியது. அந்த மோதிரத்தைப் பார்த்த கணத்திலிருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.
ஒரு பக்கம் வங்கி
ஊழியன், இன்னொரு பக்கம் பிரபலமான பாடகன் என்று ஆனதுமே, தமிழின் அப்பா அவனுக்கு திருமணம்
செய்துவைத்துவிட வேண்டுமென விரும்பினார். அவரைப்போலவே வில்லியனூர் பக்கத்தில் தொடக்கப்பள்ளி
ஆசிரியராக இருந்தவர் இளமாறன். அவரும் சிறந்த மேடைப்பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக
ஒரே கட்சிக்காரர். பத்தாண்டுகளுக்கும் கூடுதலான பழக்கம். அவருடைய மகள் கலைச்செல்விக்கும்
தமிழுக்கும் திருமணம் செய்துவைத்து தம் நட்பை உறவாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என இருவருக்குமே
ஆசை எழுந்தது. பெற்றோர் விருப்பத்துக்கு பிள்ளைகளும் கட்டுப்பட்டார்கள். ஊரறிய ஒரு
பெரிய மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. ஏராளமான கூட்டம்.
”இதுக்கே இவ்வளவு கோலாகலம்ன்னா,
கல்யாணம் இதவிட பத்து மடங்கு பெரிய அளவுலதான் இருக்கும்” என்று ஊரே பேசியது. நிச்சயதார்த்துக்கு
அடையாளமாக தமிழ் கலைச்செல்வியின் விரலில் அழகானதொரு சிவப்புக்கல் மோதிரத்தை அணிவித்தான்.
கலைச்செல்வியும் தமிழின் விரலில் பளபளப்பானதொரு அதே நிறம்கொண்ட இன்னொரு மோதிரத்தை அணிவித்தாள். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கட்சித்தலைவர் வாக்களித்திருந்தும்
வரவில்லை. நள்ளிரவைக் கடந்த பிற்கு ஒரு வாழ்த்துத்தந்தி மட்டும் வந்தது.
கட்சித்தலைவர் தலைமையில்தான்
அந்தத் திருமணம் நடைபெறவேண்டும் என்பதில் இரு அப்பாக்களுமே உறுதியாக இருந்தார்கள்.
இடைவிடாத ஐந்தாறு சென்னைப் பயணங்களுக்கும் சந்திப்புகளுக்கும் பிறகுதான் அவர்களுக்கு
தேதி கிடைத்தது. நான்கு மாதங்கள் தாண்டிய ஒரு தேதி அது. ஆயினும் அதுவாவது கிடைத்ததே
என மகிழ்ச்சியில் திளைத்த குடும்பங்கள் கல்யாணத்துக்கான வேலைகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்
சமயத்தில் கட்சி இரண்டாக உடைந்தது. தமிழின் அப்பா பழைய கட்சியிலேயே தொடரும் உறுதியோடு
இருந்தபோது கலைச்செல்வியின் அப்பா புதிய கட்சியில் இணைந்துவிட்டார். அது அவர்கள் நட்பைப்
பாதித்தது. திருமண ஒப்பந்தத்தையும் பாதித்தது. பரிமாறிக்கொண்ட எல்லாப் பொருட்களையும்
இருவருமே திருப்பி அளித்தார்கள். அவற்றை வாங்கிக்கொண்டாலும்கூட, அதில் ஒன்றைக்கூட வீட்டில்
வைத்துக்கொள்ளக்கூடாது என்று நினைத்தார் தமிழின் அம்மா. அனைத்தையும் யார்யாருக்கோ எடுத்துக்
கொடுத்துவிட்டார். இறுதியாக நிச்சயதார்த்தத்துக்காகக்
கொடுத்த சிவப்புக்கல் மோதிரத்தை எடுத்துச் சென்று கோவில் உண்டியலில் போட்டுவிட்டுத்
திரும்பினார்.
நெல்லித்தோப்பு
பக்கமாக வண்டியைத் திருப்பியபோது ”ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்து கதிர். வெறும் கையோட
எப்படி போகறது? ஒரு மாலை வாங்கிகினு போவலாம்” என்று சொன்னான் தமிழ். ஓரமாக நடமாட்டமில்லாத
இடமாகத் தேடி வண்டியை நிறுத்தியதும் தமிழ் மெதுவாக இறங்கி கடைப்பக்கம் சென்றான். தளர்ந்த
நடையுடன் அவன் செல்வதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
நின்றுபோன கல்யாணத்துக்குப்
பிறகு அவன் வீட்டில் யாருமே கல்யாணப் பேச்சை எடுக்கவில்லை. வங்கியை அடுத்து, மெல்லிசைக்குழுவின்
பாடல்கள் மட்டுமே அவனுக்கு ஒரு மீட்சியாக இருந்தன. ஓய்ந்த நேரத்தில் வங்கி அதிகாரிக்கான
தேர்வுக்கான தயாரிப்பில் முழுக்கமுழுக்க தன்னைக் கரைத்துக்கொண்டான். இரண்டு முறை அவனுக்கு
எழுத்துத்தேர்வில் வெற்றி கிடைத்தன. ஆயினும் நேர்காணல்களைக் கடந்து அவனால் செல்ல இயலவில்லை.
அவன் சுதந்திரத்தில் ஒருகணம்
கூட தலையிட்டதில்லை தமிழின் அப்பா. அதே சமயத்தில் அவனிடம் மனம்விட்டுப் பேசவும் அவரால்
முடியவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் ஏதோ ஒரு மெல்லிய திரை விழுந்துவிட்டது.
அவர் தலைமையில்தான் எனக்குத்
திருமணம் நடந்தது. மதிய விருந்தை முடித்துக்கொண்டு
புறப்படுகிற சமயத்தில் அவர் மண்டபத்தின் பின்கட்டுக்கு கைகழுவப் போகிறவர்போலச் சென்று
ஒரு மூலையில் நின்றபடி “கதிர், இங்க ஒரு நிமிஷம் வரியாப்பா” என்று அழைத்தார். ”இதோ
வரேன் பெரிப்பா” என்றபடி வேகமாக அவருக்கு அருகில் சென்றேன். எங்கிருந்து தொடங்குவது
என்று புரியாதவர்போல சமையல்கட்டையும் ஓரமாக அடுக்கிவைத்த வாழைப்பழத்தார்களையும் ஒன்றிரண்டு
கணங்கள் பார்த்தபடி நின்றிருந்தார் அவர்.
பிறகு தண்ணீர்க்குழாயை
மெதுவாகத் திருப்பித்திருப்பி மூடியபடி “ஏதோ வேகத்துல எடுத்து வச்ச அடியில கீழ விழுந்துட்டம்ங்கறதுக்காக,
எல்லாரும் அப்படியேவா ஆணியடிச்சமாதிரி ஒக்காந்துடறாங்க? சரி விடுன்னு தொடச்சிவிட்டு
போவறதில்லையா? உன் கூடவே தான இருக்கான் அவன்? நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
ஒரு நாளா ரெண்டு நாளா, நாலஞ்சி வருஷம் போயிட்டுதே கதிர். காலாகாலத்துல கடமைய செஞ்சம்ன்னு
எங்களுக்கும் ஒரு நிம்மதி வேணுமில்லயா?” என்றார். ஒருகணம் நிறுத்தி பெருமூச்சு வாங்கினார்.
பிறகு “இந்தக் கட்சியால இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு நான் என்ன கனவா கண்டன்? எல்லாம்
நான் செஞ்ச குத்தம்தான். இல்லைன்னு சொல்லலை…….” என்று தொடங்கியவர் தொடர்ந்து மேலே பேசமுடியாமல்
குழாயிலிருந்து விழுந்தோடும் தண்ணீரையே பார்த்தபடி நின்றுவிட்டார். தொண்டைக்குழி மட்டும்
ஏறிஏறி இறங்கியபடி இருந்தது. நானாகவே அவர் கையைப் பற்றி “விடுங்க பெரிப்பா, நாங்க எல்லாருமே
அவன்கிட்ட பேசறம். சீக்கிரமாவே ஒரு நல்லத நடத்திவைக்கலாம்” என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
அதன் பிறகு தமிழுடன் ஆறேழு ஆண்டுகளாக நிகழ்ந்த எங்கள் பேச்சுக்கு கிடைத்த பலன்தான்
தமிழ் என்கிற தமிழ்ச்செல்வனுக்கும் கல்யாணிக்கும் நிகழ்ந்த திருமணம்.
”இது சரியா இருக்குமா
கதிர்?” என்று கேட்டபடி ஒரு பெரிய ரோஜா மாலையோடு வந்து நின்றான் தமிழ். “தாராளமா போதும்”
என்று நான் சொன்னதும் சோகம் தோய்ந்த புன்னகையோடு என்னைப் பார்த்தான். ”நீ வந்து சொன்னதும்
ஒரு வேகத்துல கெளம்பிட்டனே தவிர, இதுக்குலாம் நாம போவறது சரியா தப்பான்னே தெரியலை.
பேசாம இப்படியே திரும்பிடலாமா?” என்றான். அவன் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
”இதுல என்ன தப்பும் சரியும்?
ஊர்க்காரங்கமாதிரி நாமும் மாலை போட்டுட்டு வரப் போறோம். அவ்ளோதான். பேசாம வண்டியில
ஏறி உக்காரு”
அவன் குழப்பம் நீங்காத
முகத்துடன் பின்னிருக்கையில் உட்கார்ந்தான். நான் அவசரமாக “அந்த மாலையை வேணும்ன்னா
இப்படி கொடு தமிழ், வண்டி முன்னால வச்சிக்கலாம்” என்று கையை நீட்டினேன். அவன் நாக்கு
சப்புக்கொட்டியபடி “பரவாயில்லை, பரவாயில்லை, என்கிட்டயே இருக்கட்டும்” என்றான்..
நாற்பது நாற்பத்தைந்து
ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழின் திருமணம் நின்றுபோன சமயத்தில் ஒருநாள் கடற்கரையில் டியூப்ளே
சிலையின் பக்கமிருந்த பாறையில் உட்கார்ந்தபடி பொங்கிப்பொங்கி வரும் அலைகளையும் அமிழ்ந்து
கரையும் நுரைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். “தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா”
என்று யாரோ பாடும் குரலைக் கேட்ட பிறகுதான் ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். பார்வையில்லாத
ஒரு சிறுமி பாடிக்கொண்டிருக்க, பார்வையுள்ள மற்றொரு சிறுமி அவள் தோள்பற்றி மெதுவாக
நடந்துகொண்டிருந்தாள். ரொம்ப உருக்கமான குரல். தமிழுக்கு இப்படி சோகப்பாடல்களைக் கேட்கவும்
பாடவும் மிகவும் பிடிக்கும். மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த திருமண மேடைகளில்
இதையெல்லாம் பாடக்கூடாது என்று நாங்கள்தான் அவனைக் கட்டுப்படுத்திவைத்திருந்தோம். வேகமாக
எழுந்து சென்று அந்தச் சிறுமிக்கு சில்லறைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பிய போதுதான்
என்னை நோக்கி “ஒரு நிமிஷம்” என்றபடி ஒரு பெண் வருவதைப் பார்த்தேன். சில கணங்களுக்குப்
பிறகுதான் அவள் கலைச்செல்வி என்பதைப் புரிந்துகொண்டேன்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
என்றாள் அவள். பட்டுரோஜா நிறத்தில் புடவையணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமாக அதே
நிற ரவிக்கை. கைவிளிம்புகளில் எழுந்தடங்கும் அலைகளைப்போல எம்ராய்டரி வேலை செய்திருந்தது
மிகவும் பிடித்திருந்தது. மெலிதான ஒரு தங்கச்சங்கிலிமட்டும் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
“கரும்பு ஜூஸ் குடிக்கறதுக்காக எல்லாரும் ரேடியோ ஸ்டேஷன் பக்கம் போயிருக்காங்க” என்றாள்.
“உங்கள அப்பவே பாத்துட்டேன். கொஞ்சம் பேசணும்னுதான் நான் இங்கயே நின்னுட்டன்”
பதற்றத்தில் என்ன பேசுவது
என்றே புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அவள் “எப்படி இருக்காரு உங்க
தமிழ்?” என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தேனே ஒழிய அப்போதும் அவளுக்கு நான்
பதில் சொல்லவில்லை.
“அப்பாஅம்மாதான் பாத்து
மோதிரம் மாத்தி வச்சாங்க, இல்லைன்னு சொல்லலை.
ஆனா அதே அப்பா அம்மா வேணாம்ன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு போயிடறதா? இது என்ன
ஆடு ஏபாரமா? கோழி ஏபாரமா? நமக்குலாம் மனசுன்னு ஒன்னு இருக்குதா இல்லயா?” என்று கேட்டுவிட்டு
ஒருகணம் அமைதியாக இருந்தாள்.
“கட்சி, கூட்டம், கடலப்புண்ணாக்குன்னு
பெரியவங்களுக்கு ஆயிரம் இருக்கும். அதெல்லாம் வேற விஷயம். என்ன நேருக்கு நேரா பார்த்து
பெரிசுங்கள்லாம் இப்படி கிறுக்குபுடிச்ச மாதிரி அலையுதே, நீ என்னம்மா சொல்றன்னு என்கிட்டதான
அவரு மொதல்ல கேட்டிருக்கணும்? கேட்டிருந்தா அந்த நிமிஷமே நான் வீட்டைவிட்டு வர தயாரா
இருந்தேன் தெரியுமா? அந்த அளவுக்கு அவருமேல ஆசை வச்சிருந்தேன். வாழ்ந்தா இவருகூடதான்னு
ராத்திரியும் பகலுமா கனவு கண்டுட்டு, மானம் கெட்ட ஒரு கட்சிக்காக நம்ம வாழ்க்கைய நாம
ஏன் அழிச்சிக்கணும்?”
கலைச்செல்வியின் கண்கள்
கலங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை. பார்வையைத் தாழ்த்தி அவள் கால்விரல்களையே பார்த்தபடி
இருந்தேன்.
“அப்பாஅம்மா போன்னா போவாரு,
வான்னா வருவாரு. அவ்ளோதானா? அதுதான் படிச்சவங்க செய்யற வேலையா? அவரு என்ன சாவி குடுத்த
பொம்மயா? சொந்த புத்தின்னு ஒன்னுமே இல்லயா? நிச்சயம் முடிஞ்ச ஒரு வாரம் கழிச்சி, இதே
கடற்கரையில இந்த எடத்துலதான் தற்செயலா என்ன பாத்துட்டு அரமணி நேரம் பேசிட்டிருந்தாரு.
தெரிமா ஒங்களுக்கு?”
நான் திகைப்புடன் உதட்டைப்
பிதுக்கி தலையாட்டியபடி நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். ”எனக்காக ஒரு பாட்டு பாடுறிங்களான்னு
கேட்டதும் நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்னு பாடனதுலாம் அப்படியே என் நெஞ்சில இன்னும்
இருக்குது. அந்தக் குரல். அந்த ஈரம். ஒவ்வொரு நிமிஷமும் அது பொங்கிப்பொங்கி வருது.
அந்தப் பேச்சுக்கும் பாட்டுக்கும்லாம் ஒரு அர்த்தமும் இல்லயா?” என்றபடி எச்சிலைக் கூட்டி
விழுங்கினாள்.
”என் ஞாபகமா கொஞ்ச காலமாவது
அவர் விரல்ல போட்டிருந்த மோதிரம்ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் இதோ இந்த மோதிரத்த இன்னும்
நான் போட்டிருக்கேன். இதனால வீட்டுல எத்தன சண்ட, எத்தன பேச்சு, எத்தன அடிதடி தெரியுமா?
அவருக்கு என் மனசுல கொடுத்த இடத்த வேற யாருக்கும் தரமுடியாதுங்கறத எல்லாரும் புரிஞ்சிக்கணும்ன்னுதான்
புடிவாதமா இந்த மோதிரத்த இன்னும் போட்டுகினிருக்கேன்……”
குரலை அடக்கிப் பேசினாலும்
அவளுக்கு மூச்சு வாங்கியது. “ஒரு பொண்ணுக்கு இருக்கிற புடிவாதம் ஒரு ஆம்பளைக்கு ஏன்
இல்லாம போச்சி? போய் இப்ப வர சொல்லுங்க அவர . எந்த கோவில்ல வேணும்ன்னாலும் எனக்கு தாலி
கட்டட்டும். நான் தயார்.”
சொல்லவேண்டியதையெல்லாம்
சொல்லிமுடித்தவள்போல வேகமாக எழுந்து பாதையைக் கடந்து போய்விட்டாள். அந்த ஆவேசத்தை நம்பமுடியாமல்
அவள் நடந்துபோகும் திசையையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல்ரத்தம் குளிர்ந்துபோனதுபோல
இருந்தது.
அவள் விருப்பத்தையும் கோரிக்கையையும்
நான் தமிழிடம் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில ஆண்டுகள் கழித்து என் மகளை க்ளுனி ஸ்கூலில்
சேர்க்கும் பொருட்டு ஒரு பாதிரியாரின் பரிந்துரைக்காக அவர் அலுவலக வாசலில் நின்றிருந்தபோது
அதே கலைச்செல்வியை இரண்டாவது முறையாகப் பார்த்ததையும் நான் சொல்லவில்லை.
அப்போது ஒரு காரில் வந்து
இறங்கினாள் அவள். அவளோடு என் மகளையொத்த ஒரு சிறுமியும் இறங்கினாள். கொஞ்சம்கூட மாறாத
அதே உடல்வாகுடன் அவள் நடந்து வந்தாள். என்னை அறியாத ஒரு படபடப்பில் சட்டென்று எழுந்து
நின்றதே அவள் கவனம் என்மீது படிவதற்குக் காரணமாகிவிட்டது.
”எப்படி இருக்கிங்க சார்?”
என்று புன்னகையோடு கேட்டபடி காற்று வேகத்தில் காதோரமாக வந்து விழுந்த தலைமுடியை கையை
உயர்த்தி ஒதுக்கினாள் கலைச்செல்வி. மருதாணியிட்ட அவள் விரலில் சிவப்புக்கல் மோதிரம்
மின்னிக்கொண்டிருந்தது.
நான் புன்னகையோடு தலையசைத்தேன்.
என் மகளை அவள் முன்னால் நிறுத்தி “ஸ்கூல் அட்மிஷனுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்கேன்.
இந்த ஃபாதர் சொன்னா கிடைக்கும்ன்னு முதலியார்பேட்டையில ஒரு ஃபாதர் சொன்னாரு. அதான்
பாக்கலாம்ன்னு……” என்றேன். “இங்கயும் அதே கேஸ்தான்” என்று சிரித்தாள் அவள். தொடர்ந்து
“எத்தனை குழந்தைங்க?” என்று கேட்டாள். “இவதான் மூத்தவள். இளவரசி. மூணு மாசத்துக்கு
முன்னாலதான் ஒரு பையன் பொறந்தான்” என்றேன். ”வெரி நைஸ்” என்றபடி குனிந்து இளவரசியின்
கன்னத்தில் தட்டி முத்தமிட்டாள். “ஆண்டிக்கு ஒரு முத்தம் கொடுப்பியா நீ?” என்று கேட்டதும்
தயக்கமே இல்லாமல் முத்தம் கொடுத்தாள் இளவரசி. முன்பக்கம் விழுந்த தலைப்பின்னலை எடுத்து
பின்பக்கம் போட்டபடி எழுந்த கலைச்செல்வி “உங்க நண்பருக்கு எத்தனை குழந்தைகள்?” என்று
நேருக்குநேராக என்னைப் பார்த்துக் கேட்டாள். ஒரு நிலைகுலைந்த மனநிலையில் நான் அவளிடம்
“அவன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை” என்றேன்.
அவள் ஒருகணம் திகைத்ததை
என்னால் உணரமுடிந்தது. அடங்கிய குரலில் “அவரு வேணாம்ன்னு சொன்னதும் நீங்களும் அப்படியே
விட்டுட்டிங்களா? இதான் நட்புக்கு அழகா?” என்றாள். ஒரு பெருமூச்சுக்குப் பிறகு மெதுவாக
“கலைச்செல்விய பார்த்தேன். குழந்தைகுட்டியோடு அவ நல்லாதான் இருக்கா. உன்ன சீக்கிரமா
ஒரு கல்யாணம் செஞ்சிக்க சொன்னான்னு சொல்லுங்க. கண்டிப்பா சொல்லணும். சொல்வீங்களா?”
என்றாள். நான் தலையசைத்தேன். அதுவரைக்கும் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வியின்
மகளை நான் அப்போதுதான் பார்த்தேன். சதைப்பற்றோடு அழகிய கன்னங்கள். ஈரமான உருண்ட விழிகள்.
கலைச்செல்வியின் முழுமையான சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. குனிந்து அவள் உச்சியை
வருடிக்கொடுத்தேன். “என்னம்மா உன் பேரு?” என்று கன்னத்தைத் தட்டியபடி கேட்டேன். அவள்
மெதுவாக “தமிழ். தமிழ்ச்செல்வி” என்று சிரித்தாள். மேல்வரிசையில் தெரிந்த ஒரு தெத்துப்பல்
அவளுக்கு ரொம்ப அழகாக இருந்தது.
அதற்குப் பிறகு ஆறேழு ஆண்டுகள்
கழித்து அதே பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றில் கசகசவென்றிருந்த கூட்டத்துக்கு நடுவிலும்
ஒருமுறை அவளைப் பார்க்க நேர்ந்தது. அதே குரல். அதே புன்னகை. “ரெண்டாவது பொண்ணும் இங்கதான்
படிக்கறா. இன்னைக்கு ரெண்டும் என்னமோ பாட்டு பாடுதுங்களாம். அவசியம் வரணும்ன்னு நேத்து
ராத்திரி முழுக்க ஒரே பிடிவாதம்” என்று சிரித்தாள். இளவரசியின் பெயரை நினைவுவைத்துக்கொண்டு
கேட்டாள். ”அவளும் இன்னைக்கு பாடறா” என்று பதில் சொன்னேன். ”எனக்கு நேரமே இல்லைம்மா,
நீ எதயாவது பண்ணிக்கோன்னு அவரு கெளம்பி பிசினெஸ் பார்க்க போயிட்டாரு…..” என்று அவளாகவே
சொன்னாள். அப்புறம் “அம்மா போன மாசம் தவறிட்டாங்க” என்றும் சொன்னாள். என்னமோ தெரியவில்லை,
ஒரு வார்த்தைகூட தமிழைப்பற்றி அவள் அன்று எதுவுமே கேட்காததை மிகவும் தாமதமாகவே உணர்ந்தேன்.
அதையும்கூட நான் தமிழிடம் தெரிவிக்கவில்லை.
மற்றொரு சமயத்தில் அருமார்த்தபுரம்
லெவல் கிராஸிங் அருகில் கேட் போட்டிருந்ததால் தொடர்ந்து செல்லமுடியாமல் வண்டியை நிறுத்திவிட்டு
இரண்டு காலையும் ஊன்றிக்கொண்டு நின்றிருந்தேன். எனக்கு முன்னால் நூறடி தொலைவுக்கு வாகனங்கள்
நின்றிருந்தன. ஒரே சத்தம். பேச்சுச்சத்தம். பாட்டுச்சத்தம். கைப்பேசிச்சத்தம். எல்லோருடைய
பார்வையும் ரயில் வரும் திசையில் குவிந்திருந்தது. ஒரு வீட்டு வாசலில் வட்டமாக தங்க
அரளிப் பூக்கள் உதிர்ந்திருந்தன. ஒரு நாய் எங்கோ பார்த்து குரைத்தபடி இந்தப் பக்கத்தில்
புகுந்து அந்தப் பக்கமாக ஓடிச் சென்றது. அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒரு காரின்
கண்ணாடிக்கதவைக் கீழிறக்கியபடி ”என்ன சார்? நல்லா இருக்கிங்களா?” என்று கேட்ட முகம்
கலைச்செல்வியுடையதாக இருந்தது. ஒருகணம் திகைத்துக் குழம்பி பிறகுதான் நான் பதில் சொன்னேன்.
பிறகும் சில கேள்விகள். சில பதில்கள். ஆனால் அன்றும் அவள் தமிழைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.
வில்லியனூரை நெருங்கும்
வரை தமிழ் எதுவுமே பேசவில்லை. எல்லையின் தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் பச்சைத்
தென்னையோலைகளை நட்டிருந்தார்கள். அவற்றுக்கு இடையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியைத் தாங்கிய
தட்டிகள் நின்றிருந்தன. தமிழ் என் தோளைத் தொட்டு ஒரு சுவரொட்டியின் பக்கம் நிறுத்தச்
சொன்னான். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கலைச்செல்வியின் முகத்தையே சில கணங்கள் உற்றுப்
பார்த்தான். பிறகு படத்துக்கு கீழே அச்சிடப்பட்டிருந்த வாக்கியங்கள் மீது அவன் பார்வை
படர்ந்தது. அப்புறம் ”போவலாம்” என்பதுபோல என்
தோளைத் தொட்டு அழுத்தினான்.
வெற்றிலைத்தோட்டம் தாண்டி,
ரயில்வே ஸ்டேஷன் தாண்டி, பெரம்பை சாலைத்திருப்பத்தில் நின்றிருக்கும் எம்.ஜி.ஆர். சிலையைத்
தாண்டி, அல்லிக்குளத்தைத் தொட்டபோது மேளச்சத்தத்தைக் கேட்கமுடிந்தது. யாரோ ஒரு நெருக்கமான
உறவுக்கூட்டம் மேளச்சத்தத்தின் பின்னணியோடு தெருத்திருப்பத்திலிருந்து வீட்டை நோக்கி
ஊர்வலமாகப் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு நடுவில் பெரிய ரோஜா மாலைகள்
வைக்கப்பட்ட ஒரு சைக்கிள் ரிக்ஷாவை ஒருவர் இழுத்துக்கொண்டு சென்றார்.
“அந்த ஊர்வலத்துக்குப்
பின்னாலேயே கூட்டத்தோடு கூட்டமா போய் பார்த்துட்டு வந்துடலாம் தமிழ்”
அவன் ”சரி” என்பதுபோல தலையசைத்ததற்குப்
பிறகுதான் நான் வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு இறங்கினேன். “மாலைய நான் வேணும்னா
வச்சிகிடட்டுமா?” என்று கேட்டேன். “இல்ல, நானே வச்சிக்கறேன்” என்றபடி மாலையோடு நடக்கத்
தொடங்கினான் அவன். அவனைப் பார்க்கும்போது ஏதேதோ பழைய ஞாபகங்கள் பொங்கிப்பொங்கி வந்தன.
அந்த ஊர்வலத்தை நெருங்கும்
தருணத்தில் சட்டென்று நின்றுவிட்டான் தமிழ். என்னைப் பார்த்து தலையை அசைத்தபடி ”எதுவும் வேணாம் கதிர். திரும்பிப் போயிடலாம்” என்றான்.
எனக்குக் குழப்பமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ”தமிழ்…”
என்று எதையோ சொல்ல நான் வாயெடுத்தேன். அவன் தன் பார்வையாலேயே என்னை நிறுத்திவிட்டான்.
ஒருகணம் திரும்பி கையிலிருந்த மாலையை சாலையோரமாக கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த
தட்டிக்கம்பியில் வைத்துவிட்டு திரும்பி வந்தான். பிறகு மெதுவாக ”வண்டிய எடு கதிர்,
போகலாம்” என்றான்.
(ஆனந்த விகடன் 2017)