Home

Sunday, 4 June 2023

கனிந்து நழுவும் சூரியன் - கட்டுரை

 

     நேருக்குநேர் பார்க்கும்போது அளவற்ற ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் வழங்குகிற சூரியஅஸ்தமனக் காட்சி ஒருசில கணங்களில் சொற்களால் வடிக்கவியலாத தவிப்பையும் வலியையும் வழங்குகிற ஒன்றாகவும் மாறிவிடும் புதிரை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. புரிந்துகொள்ள முயற்சிசெய்யும் ஒவ்வொரு தருணத்திலும் சிக்கலான ஒரு கணக்கின் விடைக்குரிய இறுதி வரிகளை எழுதத் தெரியாத சிறுவனுக்குரிய தத்தளிப்பையும் வருத்தத்தையுமே இயற்கை வழங்குகிறது.

     ஏதோ ஒருசில நிமிடங்களில் ஏதோ ஒரு இடத்தில்  சூரியஅஸ்தமனக் காட்சி கண்களில் விழுந்தபடியே இருக்கிறது.  மாலை நடையிலும் ரயில் பயணங்களிலும் மாடிப்படியோரம் நிற்கும்போதும் ஏரிக்கரையிலிருந்து திரும்பும்போதும் அதன் தோற்றத்தை உள்வாங்கிக்கொள்கிறது மனம். மற்ற எந்தக் காட்சியும் உருவாக்கவியலாத களிப்பும் கலக்கமும் ஒரே கணத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியிலிருந்து வெள்ளம்போலப் பெருகி வந்து நெஞ்சில் அலைமோதுகிறது. காலம்காலமாக இந்த மண்மீது அக்காட்சி ஒரு தவிப்பின் காவியத்தையே எழுதிவருகிறது. நம் மனம் கண்டடையும் ஒன்றிரண்டு சொற்கள் அக்காவியத்தை அறியும் மாபெரும் ஆவலைத் து¡ண்டுகிறது. எண்ணற்ற தலைமுறைகளின் ஏக்கம் அந்த ஆவல்வழியாக பெருகியோடுகிறது.

     ஆகும்பெ சிகரத்திலிருந்து பார்க்கும் சூரிய அஸ்தமனக் காட்சியைப்பற்றி பல நண்பர்கள் எடுத்துரைத்திருந்தார்கள். ஆசையின் து¡ண்டுதலால் ஒருநாள் வண்டியேறினேன். தீர்த்தஹள்ளியிலிருந்து உடுப்பியை நோக்கிச் செல்லும் வழியில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆகும்பெ. காட்டுவழிப் பயணம். இரு புறங்களிலும் அடர்த்தியான தேக்குமரங்களும் சந்தனமரங்களும். பல இடங்களில் மயில்களின் நடமாட்டம். ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியைநோக்கி கூட்டம்கூட்டமாக தாவும் புள்ளி மான்கள்.

     ஆகும்பெயைச் சேர்ந்தபோது மணி நாலரையைக்கூட தொட்டிருக்கவில்லை. பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டு நிமிட நடைது¡ரம். அஸ்தமனக் காட்சியைப் பார்ப்பதற்கென்றே வட்டமான ஒரு மேடையை உருவாக்கியிருந்தார்கள். எனக்கும் முன்னராக வந்துசேர்ந்த சுற்றுலாப் பயணியர்கள் கும்பல்கும்பலாக நின்று காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பலர் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள். வறுத்த வேர்க்கடலைகளும் வெள்ளரிப்பிஞ்சுகளும் நிரம்பிய கூடைகள் சுமந்த சிறுவர்களும் சிறுமிகளும் ஏதேதோ சொல்லி விற்பனைக்காக பயணியரை ஈர்த்துக் கொண்டிருந்தார்கள்.

     மரங்களின் பசுமையைப் பார்த்தபடி நின்றேன். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பசுமையின் கோலம். மிகப்பெரிய ஒரு போர்வையை விரித்ததைப்போல. பிரம்மாண்டமான ஒரு பந்தலைப்போல. வெளிச்சத்தின் கதகதப்பை அப்பசுமையைத் தாங்கிக்கொண்டிருக்கும் மண் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அந்த அளவுக்கு அடர்த்தியான தோற்றம்.  குனிந்து பார்த்தபோது அந்த ஆழம் ஒருவித பீதியை எழுப்பியது. வயிறு குழைந்து சுருங்கியது.  சட்டென்று பின்வாங்கி நகர்ந்தேன்.

     "என்ன சார் தலைய சுத்துதா?" அருகிலிருந்த ஒரு பெரியவர் புன்னகைத்தபடி கேட்டார். நான் தலையசைத்தபடி புன்னகைக்க முயன்றேன்.

     "காட்டுக்கு பல முகங்கள் உண்டு சார். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு முகம். நெருக்கமாக இருக்கும்போது கவர்ச்சியான அழகு முகம். கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது எடுப்பாக வாவாவென்று அருகில் அழைக்கிற வேறொரு முகம். பத்தோடு பதினொன்றாக நடந்தபடியோ பிரயாணம் செய்தபடியோ பார்க்கும்போது ஒருகோடி கண்கள் இருந்தாலும் ஆசைதீரப் பார்க்கப் போதாது என்ற எண்ணம் எழும்வகையில் பளிச்சிட்டு மின்னலிதூம் ஆசைமுகம். தொலைது¡ரத்தில் பார்க்கும்போது அச்சத்தையும் இச்சையையும் தூண்டுகிற மர்மமுகம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்."

     நான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். ஒடுங்கிய தட்டையான முகம். வெள்ளைத்தாடியும் தலைமுடியும் காற்றில் பறந்தபடி இருந்தது. ஏதோ ஒரு குழந்தைக்கு தெரியாததை புரிகிறமாதிரி எடுத்துச் சொல்லும்வகையில்  இருந்தது அவர் முகம். பேச்சுக்கொடுத்தால் இன்னும் பேசுவார் என்று தோன்றியது.

     "நீங்களும் அஸ்தமனத்த பாக்கத்தான் வந்திங்களா? எந்த ஊரு?" ஒரு கேள்வியோடு உரையாடலைத் தொடர்ந்தேன்.

     "உங்க கேள்விக்கு ஆமாம்னு சொல்றதா, இல்லன்னு சொல்றதான்னு தெரியலை. நான் இந்தக் காட்டுல கீழதான் வாழறன். பொழுதுபோனதும் சும்மா ஒரு நடை இப்படி மேல ஏறி வருவன். அஸ்தமனத்தயும் பாப்பேன். உங்களமாதிரி ஆளுங்களயும் பாப்பேன். எல்லாரும் கெளம்பிப் போனப்பறம் நானும் கீழ எறங்கிப் போயிருவேன்."

     அவரோடு வசிக்கும் மற்றவர்களைப்பற்றி, அவர்களுடைய தொழிலைப்பற்றி, வாழ்க்கையைப்பற்றி எனக்குள் எழுந்த சந்தேகங்களையெல்லாம் கேள்விகளாகக் கேட்டேன். எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பதில் சொன்னார்.

     ஆட்கள் மேலும்மேலும் பெருகிக்கொண்டே இருந்தார்கள். நான்கு வயதுக் குழந்தையொன்று நடுவில் நடக்க இருபுறமும் அதன் கைகளைப் பற்றியபடி நடந்துவந்த இளைய ஜோடியொன்றின் காட்சி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் குழந்தையின் முகம் அழகான சுடரைப்போல இருந்தது. புன்னகையும் ஆர்வமும் அதன் முகம் முழுவதும் நிறைந்திருந்தன. அவர்களிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டது அக்குழந்தை. அவர்களும் சிரித்தபடி பதில் சொன்னார்கள்.

     "எதுக்குப்பா இங்க இவ்ளோ மரங்கள் இருக்குது?"

     "காடுன்னா அப்படித்தாம்மா இருக்கும்."

     "இதயெல்லாம் யாருப்பா வளத்தாங்க?"

     "காட்டுல இருக்கறவங்க."

     "ஏன் வளக்கறாங்க?"

     "காடு இருந்தாதானே நமக்கெல்லாம் மழ வரும்."

     "மழ வந்தா அவுங்களெல்லாம் எங்கப்பா போவாங்க?"

     "எங்கயும் போவமாட்டாங்கம்மா. மரத்தாலயே சின்னச்சின்னதா வீடு கட்டியிருப்பாங்க. அதுக்குள்ள தங்கிக்குவாங்க."

     "சூரியன் வானத்துலதானப்பா போய்க்கிட்டே இருக்குது?"

     "ஆமாம்."

     "அப்பறம் எதுக்குப்பா இங்க வந்து காட்டுக்குள்ள மறையுது?"

     "பகல் முழுக்க சுத்திகிட்டே இருந்தா களைப்பா இருக்காதா? அதான் காட்டுக்குள்ள வந்து ஓய்வெடுக்கப் போவுது."

     "எங்கப்பா ஓய்வெடுக்கும்? அதுக்கும் ஒரு வீடு இருக்குமா?"

     "இருக்கும்மா."

     அடுத்த கேள்வியை அக்குழந்தையின் மனம் தேடியது. அந்த இடைவெளியில் அதன் தந்தை து¡க்கிக்கொண்டு விலகி நடக்கத் தொடங்கினான்.  அதன் தாய்மட்டுமே காற்றில் கலைந்து புரளும் தலைக்கூந்தலைக் கைவிரல்களால் கோதி ஒழுங்குசெய்தபடி வானத்தில் பார்வையைப் பதித்து நின்றாள். 

     நான் எழுந்து பார்வைமேடையின் விளிம்பைநோக்கி வந்தேன். காற்றில் இப்போது குளிர் அதிக அளவில் படிந்திருந்தது. மரங்களின் உரசலால் எழுந்த இசை இனிமையாக இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு காற்றின் அலை நாலு பக்கங்களிலும் இலைப்பரப்பை கலைத்துவிட்டுச் சென்றது.

     "சார் ஒரு போட்டா எடுத்துத் தரீங்களா? "

     குரல் கேட்டுத் திரும்பினேன். இளைஞனொருவன் தன்னிடம் இருக்கும் புகைப்படக்கருவியைக் காட்டி என்னிடம் மறுபடியும் கேட்டான். அவன் அருகில் இளம்பெண்ணொருத்தி நின்றிருந்தாள். பார்த்ததுமே காதலர்கள் என்று சொல்லிவிடத்தக்க தோற்றம். சிரித்தபடியே நான் கைநீட்டி அந்தக் கருவியை வாங்கிக்கொண்டேன்.

     "எய்ம் பண்ணிட்டு அந்தச் சிவப்பு பட்டன ஒருதரம் தட்டனா போதும் சார். வேற ஒன்னும் செய்யவேணாம். "

     நான் புகைப்படக்கருவி வழியாக அவர்களைப் பார்த்தேன். அவன் வெள்ளைச்சட்டையும் கருப்புநிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தான். அவள் இளம்பச்சை நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். வட்ட முகம். பெரிய கண்கள். காதோரத்திலும் நெற்றியிலும் பறந்துபறந்து வந்து விழும் முடிக்கற்றைகளை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவள் முயற்சியைப் பார்த்துச் சிரித்த இளைஞன் "இயற்கையாவே இருக்கட்டும் விடு, எதுக்கு இழுத்துஇழுத்து நிறுத்தற?" என்றான். அவள் உதடுகளில் ஒருகணம் புன்னகை சுடர்விட்டது. அஸ்தமனச் சூரியனைப்போன்ற பொட்டு அவள் நெற்றிக்கு அழகாக இருந்தது.

     "பாதி அளவுல  எடுக்கட்டுமா? முழுசா எடுக்கட்டுமா?" கருவியிலிருந்து கண்களை விலக்கி அந்த இளைஞனிடம் கேட்டேன். அவன் ஒருகணம் யோசித்தான். பிறகு, "அப்படி ஒன்னு, இப்படி ஒன்னுன்னு ரெண்டாவே எடுத்துருங்க சார்" என்றான். அவர்கள் விருப்பப்படியே இரண்டு நிலைகளிலும் படங்களை எடுத்தேன்.

     "புதுக்கல்யாணமா?" என் கேள்வி அவர்களை வெட்கப்படத் து¡ண்டியது. பதில்சொல்லத் தயங்கியபடி சிரித்தார்கள். அவர்கள் இருக்கிற மனநிலையில் எதைப் பார்த்தாலும் அல்லது எதைக் கேட்டாலும் சிரித்துவிடுவார்கள் என்று தோன்றியது.

அந்த மரத்தடியில ஒரு கட்டை இருக்குது பாருங்க. அங்க உக்காந்துக்கிறிங்களா? அப்படி ஒரு படம் எடுத்தா அழகா இருக்கும்.

     என் ஆலோசனை அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கவேண்டும். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் நான் சுட்டிக் காட்டிய இடத்துக்குச் சென்றார்கள். உட்காரும் நிலைகளைப்பற்றி நானும் தயக்கமின்றி ஒருசில விஷயங்களைச் சொன்னேன். அந்த இடத்தில் மூன்று படங்களை எடுத்தேன்.

     "சார், எங்க எங்க எடுத்தா நல்லா இருக்கும் , நீங்களே சொல்லுங்க சார். இந்த ரோல் முழுக்க நீங்களே எடுத்துக் குடுங்க சார்" திடீரென உற்சாகத்தோடு அந்த இளைஞன் சொன்னான். அவன் வார்த்தையை என்னால் நம்பவே முடியவில்லை. வாங்க சார் என்று அழைத்துக்கொண்டு அவன் மேலும் நடக்கத் தொடங்கினான். சுற்றுமுற்றும் தெரிந்த வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு நிலைகளில் அவர்கள் இருவரையும் நிற்கவைத்துப் படங்களை எடுத்தேன். அவர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தபடி இருந்தார்கள்.

     "எந்த ஊருலேருந்து வரீங்க?" பேச்சுவாக்கில் கேட்டேன்.

     "இங்கதான் பக்கத்துல கரிமனெலேருந்து வரோம். இன்னிக்கு காலையிலதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஊட்டுலயும் ஊருலயும்  யாருக்கும் தெரியாது. அவுங்க யாருக்கும் நாங்க ரெண்டு பேரும் சேந்திருக்கறது புடிக்கலை. எங்கள பிரிச்சி விடறதுலதான் ரொம்ப குறிக்கோளா இருந்தாங்க. நாங்களாவே ஊரவிட்டு வந்து பண்ணிக்கிட்டோம்."

     "அவுங்களுக்கு ஏன் புடிக்கலை?"

     "எங்க இனம் வேற, இவுங்க இனம் வேற. அது போதாதா புடிக்காம போவறதுக்கு?"

ஒருகணம் அவன் வார்த்தைகள் தடுமாறின. திடீரென உணர்ச்சி வசப்பட்டவனாக உடைந்த குரலில் "மனுஷனவிட சாதிங்கறது பெரிசாய்டுமா சார்?" என்று கேட்டான். அவன் உதடுகள் நடுங்கின.

     "நிச்சயமா கெடைதாது. மனித வாழ்க்கைதான் எல்லாத்தவிடவும் பெரிசு. வாழ்க்கைக்காக அத உதறுவதில எந்தத் தப்பும் இல்ல. உதறிட்டு வந்துட்டோம்னு நீங்க ரெண்டுபேரும் வருத்தப்படவேண்டிய அவசியமே இல்ல."

     "ரொம்ப சந்தோஷம் சார்.  ஒரு வேகத்துல ஊரவிட்டு வந்துட்டமே தவிர மனசுக்குள்ள ஒரு சின்ன குறுகுறுப்பா இருந்தது. உங்க பேச்ச கேக்கும்போது தைரியம் வருது. எங்களுக்கு தைரியம் குடுக்கறதுக்காகவே ஆகும்பெக்கு நீங்க வந்தமாதிரி இருக்குது."

     அவன் புன்னகைத்தபடி என்னுடன் கைகுலுக்கினான். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.  என் மகிழ்ச்சியின் அடையாளமாக அவர்களுக்கு எதையாவது தரவேண்டும்போல இருந்தது. என் தோள்பையில் வழியில் சாப்பிடுவதற்காக வாங்கிவைத்திருந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டுமே கிடந்தன. அவசரத்துக்கு வேறு எதுவும் தோன்றாமல் அந்தப் பாக்கெட்டுகளை எடுத்து அவர்களிடம் நீட்டினேன். முதலில் மறுத்தாலும் பிறகு மலர்ந்த முகத்தோடு வாங்கிக்கொண்டான் அவன்.

     "எல்லாரயும் எதுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கங்கறது சரிதான். இப்ப மறுபடியும் ஊருக்குத்தானே திரும்பிப் போவணும்." நான் மெதுவாக மறுபடியும் உரையாடலைத் தொடர்ந்தேன். அதைக் கேட்டு இளைஞன் ஒருகணம் பெருமூச்சு வாங்கினான்.

     "இல்ல சார், போவறதுக்கு எங்களுக்கும் விருப்பமில்லை. பயந்துட்டோம்னு நெனைச்சிக்காதிங்க. சுத்திசுத்தி நம்மளப் புடிக்காதவங்களே இருக்கும்போது, அவுங்க நடுவுல வாழறதால அவுங்களுக்கும் நிம்மதி இல்ல, நமக்கும் நிம்மதி இல்ல. எங்கனாச்சிம் கண்மறவா இருந்துட்டா எல்லாருக்கும் நிம்மதி."

     "இப்ப எங்க போவறதா திட்டம்?"

     "மங்களூருல எனக்குத் தெரிஞ்ச கூட்டாளிங்க ரெண்டுமூணு பேருங்க இருக்கறாங்க. அங்க போயி பொழைச்சிக்குவம் சார்."

     அந்த இளைஞனுடைய தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

     "அப்படித்தான் தைரியமா இருக்கணும். எல்லாரயும் மீறி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விஷயமில்ல. எல்லாருக்கும் முன்னால பெருமையா வாழ்ந்து  காட்டணும். அததான் முக்கியம். அப்பத்தான் காதலுக்கும் ஒரு மரியாத கெடைக்கும். "

     சூரியன் சரியத் தொடங்கிவிட்டது. அதன் அடையாளமாக அடிவானம் முழுக்க சிவக்கத் தொடங்கியது. ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டமாதிரி அதுவரை வெள்ளைவட்டமாக இருந்த சூரியனுடைய புறத்தோற்றம் மெல்லமெல்ல செவ்வட்டமாக கனிந்தது. ஒருகணம் அது உலகத்தை ஆர்வமுடன் கவனிக்கும் ஒரு விழியைப்போலத் தோன்றியது. அவ்விழி அசைந்தது. உருண்டது. சிரித்தது. ஊடலுடன் பின்வாங்கித் தயங்கியது. மறுபடியும் நகைத்தது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. கனிந்தது. விடைபெறும் பிரிவின் வலியில் கலங்கியது. அமிழ்ந்தது. வானிலிருந்து நிழல்வடிவம் பிரிந்து  காட்டின் மடியில் தலைசாய்த்துக்கொண்டது.

     சில கணங்களிலேயே எதுவுமே நடக்காததைப்போல வானம் மாறிவிட்டது. ஆனாலும் அஸ்தமனச் சூரியனிலிருந்து வழிந்த செம்மையின் நிழல் எல்லாருடைய முகங்களிலும் படிந்திருந்தது. கனவுநிலையிலிருந்து விழித்தவர்களைப்போல அவர்கள்  கலையத் தொடங்கினார்கள். ஒருசிலர் மெதுவாக தலையைமட்டும் ஆட்டிக்கொண்டு ஒரு சொல்கூடப் பேசாமல் நடந்தார்கள். ஓயாமல் கேள்விகேட்ட குழந்தை "பாவம்பா சூரியன், சீக்கிரமா படுக்கப் போயிடுச்சி" என்றபடி தன் தந்தையின் தோளில் முகம் புதைத்திருந்தது. நாலைந்து நிமிடங்களில் எல்லாரும் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள். சிறிதுநேரம் அடர்ந்த காட்டின்பக்கமாக பார்த்திருந்துவிட்டு நானும் நடக்கத் தொடங்கினேன். ஏதேதோ நினைவுகள். சம்பவங்கள். எதுவும் கோர்வையாகத் தோன்றாமல் கலவையான காட்சகளாக மனத்தில் நகர்ந்தன. ஒருவித வேதனையில் எதற்காகவே நெஞ்சம் துடிப்பதுபோல இருந்தது. எதிர்பாராத விதமாக களைப்பு கவிந்தது. வெகுநேரம் அங்கே நிற்கமுடியாததைப்போல இருந்ததால் பேருந்து நிறுத்தத்தைநோக்கி நடக்கத் தொடங்கினேன். அப்போதுதான்  இளம்ஜோடி இன்னும் அந்த இடத்திலேயே நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். விடைபெறலாமா என்று எழுந்த எண்ணத்தைத் தள்ளி நின்ற இடத்திலிருந்தே கையசைத்து விடைபெற்றேன். அவர்கள் சிரிப்பும் களையான முகங்களும் ஒரு சித்திரமாக மனத்தில் பதிந்தது. "என்ன சார் கெளம்பியாச்சா?" என்றபடி பெரியவர் என்னுடன் சேர்ந்துகொண்டார். நிறுத்தம்வரை எனக்கும் ஒரு பேச்சுத்துணை தேவையாக இருந்ததால் நானும் உரையாடலை வளர்க்கத் தொடங்கினேன்.

     "எப்படி போவீங்க கீழ?"

     "இந்தப் பக்கமா குறுக்குவழின்னு இருக்குது . சரசரன்னு எறங்கிப் போயிடுவேன்."

     "இருட்டுல பயமா இருக்காதா?" நான் ஆச்சரித்தோடு கேட்டேன்.

     "காட்டுலயே இருக்கறவங்க நாங்க. இருட்டுக்க பயந்தா வாழமுடியுமா சார்?" அவர் சிரிப்புடன் என்னை நிமிர்ந்து பார்த்தார். பொருள்பொதிந்ததாகத் தோன்றியது அச்சிரிப்பு.

     நிறுத்தத்துக்கு அருகே ஒரு சின்ன தேநீர்க்கடை அருகில் நின்றோம். ஆளுக்கொரு தேநீர் அருந்தினோம். பேருந்து வர இன்னும் அரைமணிநேரம் ஆகும் என்று கடைக்காரர் சொன்னார். என்னை  வண்டியிலேற்றிவிட்டுச் செல்வதாக பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார். பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு யாரோ ஒருவர் அலறியபடி ஓடிவந்தார்.

     "அந்த ஜோடி பள்ளத்துல உழுந்துடிச்சி. அந்த ஜோடி பள்ளத்துல உழுந்துடிச்சி."

     வேகமாக கைகளை ஆட்டியபடி அவர் ஓடிவந்ததைப் பார்த்ததும் கடைப்பக்கமாக நின்றிருந்த சிலர் மீண்டும் மேடைப்பக்கம் ஓடினார்கள். ஓடும் கூட்டத்தோடு நானும் பெரியவரும் ஓடினோம். முதலில் அலறியவன் அவர்கள் தாவிய இடத்தை எல்லாருக்கும் காட்டிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியிலிருந்து சற்றும் என்னால் மீளமுடியவில்லை.      கண்ணீருடன் என் மனம் மறுபடியும் விழித்தபோது அந்தப் பெரியவர் கைக்கு எட்டிய மரக்கிளையைப்பற்றி தாவி சரிவின் ஒரு புள்ளியில் இறங்கி இன்னொரு புள்ளியைநோக்கி வேகவேகமாக இறங்கி காட்டின் ஆழத்தைநோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார்.

     "தாத்தா போயிருக்காரில்ல. அதுங்க எங்க கெடந்தாலும் இழுத்தாந்து போட்டுடுவாரு."

     அருகில் நின்ற கடைக்காரர் வேறு யாரிடமோ சொன்னார்.

     "இருட்டுல அவருக்கும் கஷ்டமா இருக்கும்ல?" நான் அவரிடம் கேட்டேன்.

     "நீங்க ஒன்னு. தாத்தாவுக்கு இதானே வேல. எனக்குத் தெரிஞ்சி முப்பது நாப்பது ஜோடிங்கள இழுத்தாந்து போட்டிருக்காரு."

     சில கணங்களிலேயே சுற்றிலும் இருள் கவிந்தது. என்னால் அங்கே தொடர்ந்து நின்று தாத்தா சுமந்துவரப்போகும் உயிரற்ற உடல்களைப் பார்க்கமுடியாது என்று தோன்றியது. சோர்வோடு நிறுத்தத்தைநோக்கித் திரும்பி நடந்தேன். "அங்க போயி பொழைச்சிக்குவம் சார்" என்ற அவனுடைய குரல் ஆழத்தில் புரண்டது. அந்தக் குரல் ஒரு பேரோசையாக எழுந்து இந்த உலகத்தையே ஆக்கிரமிப்பதைப்போல உயரத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து சூரியன் கனிந்து நழுவி விழுந்த காட்சி சலனமில்லாத ஒரு படம்போல மனத்தில் படர்ந்து விரிவடைந்தது. மெல்லமெல்ல அந்த வட்டமுகம் அந்த இளைஞனுடைய முகமாகவும் இளம்பெண்ணின் முகமாகவும் மாறியது. உலகஉருண்டையின் அளவுக்கு அந்த முகம் பெரிதாகி வளர்ந்துகொண்டே இருப்பதுபோல இருந்தது. கண்முன் திரளும் அந்த உருவைக் காணும் தைரியமில்லாமல் கண்களை மூடிக்கொண்டேன்.

 

(புதிய பார்வை – 2008)