Home

Sunday, 18 June 2023

இயல் விருது ஏற்புரை

  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.






இயல் விருது பெறுகிறவனாக உங்கள் முன்னால் நின்றிருக்கும் இத்தருணத்தில் உங்களோடு ஒருசில சொற்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1982இல் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன். துன்பத்தை ஒரு பாரமாக நினைத்து நினைத்து நெஞ்சில் சுமந்தபடி செல்வதைவிட, அந்த பாரத்தை எழுதி எழுதி கரைத்துவிட்டுச் செல்வது நல்லது என்னும் மக்சீம் கோர்க்கியின் சொல் எனக்கு மிகப்பெரிய ஆதர்சமாக இருந்த காலகட்டம் அது. ஒவ்வொரு நாளும் எதையாவது  எழுதிக்கொண்டே இருந்தேன். வாகனத்துக்கு எரிபொருளை நிரப்புவதுபோல, எழுத்து எனக்குள் எனக்குத் தேவையான உற்சாகத்தை நிரப்பியது.

இரு நகரங்களுக்கிடையில் தொலைபேசிக் கேபிளைப் புதைத்து எஸ்.டி.டி. வசதியை உருவாக்கியளிக்கும் திட்டத்தில் நான் வேலை செய்து வந்தேன். குடியிருப்பே இல்லாத ஒரு வெட்டவெளியில் நானும் என் நண்பர்களும் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தோம். ஒருநாள் எங்கள் கூடாரத்துக்கு அருகிலிருந்த ஒரு சிறு கோவில் முன்னால் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். அவர் யாரோ ஒரு நாடோடி. நான் உரையாடலைத் தொடங்கும் விதமாக அவரை நெருங்கி வணக்கம் சொன்னேன். அவர் உடனே அந்த மல்லிகார்ஜுனனின் கருணை உன்னை என்றென்றும் வழிநடத்தும் என்றும் கையை உயர்த்தி ஆசி வழங்கினார். அன்றிரவு அவர் அந்தக் கோவிலுக்கு அருகிலேயே மரத்தடியில் தங்கிவிட்டார்.

நள்ளிரவைக் கடந்த நேரத்தில் நான் என் கூடாரத்தில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென அவர் தங்கியிருந்த திசையிலிருந்து ஒரு பாட்டுக்குரல் கேட்டது. மலைமீது ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா என்ற வரி தெளிவாக எனக்குக் கேட்டது. அந்த வரி அளித்த கிளர்ச்சியின் காரணமாக கூடாரத்திலிருந்து வெளியே வந்து அவரைச் சந்திக்கச் சென்றேன். தூக்கம் வரவில்லை, சும்மா பாடுகிறேன் என்று சொன்னார். பிறகு முழு பாடலையும் எனக்காக ராகத்தோடு பாடினார்.

மலைமேலே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர்

விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா?

கடற்கரையிலே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர்

அலைநுரைகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா

சந்தை நடுவே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர்

இரைச்சலுக்கு நாணினால் எப்படி ஐயா

அழகு மல்லிகார்ஜுனனே, கேள், ஐயா

உலகத்தில் பிறந்த பின்னர்

புகழ்ச்சி இகழ்ச்சி ஏற்பட்டால்

மனத்தை சினம் தாக்காமல் இருக்கவேண்டும்

அது கன்னடக்கவிஞர் அக்கமகாதேவியின் வசனம். அந்தப் பெரியவரே அதைச் சொல்லி மேலும் விளக்கங்களைக் கூறினார். அந்தப் பாடலும் அதன் பொருளும் எனக்குள் படிந்திருந்த அச்சத்தையும் துன்பத்தையும் முற்றிலுமாக அகற்றிவிட்டன. அந்த வீடு என்னும் சொல் பல பொருள் கொண்டதாக நான் கருதினேன். எனக்கு ஏன் இப்படி அல்லது எனக்கு மட்டும் ஏன் இப்படி போன்ற தன்னிரக்கத்தைத் தூண்டும் கேள்விகளை உதறினேன். இருக்கும் வீட்டிலேயே நமக்கான ஒரு வீட்டை உருவாக்கிக்கொள்ளும் கலையை அறிந்துகொண்டேன். வீட்டைச் சுற்றி பூச்செடிகளை வளர்ப்பதுபோல என்னைச் சுற்றி இலக்கியம் மலர்ந்திருக்கும்படி செய்யத் தொடங்கினேன். அதையே எனக்கான வீடாக அமைத்துக்கொண்டேன்.

 நண்பர்களே, கடந்த நாற்பத்தொன்று ஆண்டுகளாக அந்த இலக்கியச் செடிகளோடுதான் புழங்கிக்கொண்டிருக்கிறேன். அந்தப் நாடோடிப்பெரியவரை நான் நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை. இந்தப் பெருமைக்குரிய விருதைப் பெற்றுக்கொள்ளும் இத்தருணத்தில் முகம் தெரியாத அந்தப் பெரியவரை நினைத்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் நினைத்துக்கொள்ளும் பலர் அந்த வரிசையில் உண்டு. என் பெற்றோர், என் சகோதரர்கள், சகோதரிகள், என் அன்பு மனைவி, என் மகன், உறவினர்கள், அன்பார்ந்த நண்பர்கள், என் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மூத்த எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், என் சக எழுத்தாளர்கள், இளைய எழுத்தாளர்கள், ஒவ்வொரு படைப்பையும் படித்துவிட்டு உடனுக்குடன் தம் கருத்தைத் தெரிவித்துப் பகிர்ந்துகொள்ளும் வாசக நண்பர்கள், வெகுதொலைவு பயணம் செய்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் வழியாக என் மகிழ்ச்சியை பல மடங்காக மாற்றியிருக்கும் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். விருதுச்செய்தியைத் தெரிவிப்பதற்காக என்னை முதன்முதலாக தொலைபேசியில் அழைத்த கணத்திலிருந்து இவ்விழாவுக்கு என்னை இம்மேடையில் நிற்கவைத்திருக்கும் கணம் வரை எனக்குத் துணிவூட்டி, தக்க ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டியவர் மூத்த எழுத்தாளுமையான அ.முத்துலிங்கம் அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். எல்லாக் காலத்திலும் ஒரு கோழிக்குஞ்சைப்போல என்னைத் தன் கட்டற்ற அன்பால் பாதுகாத்து என்னை என் எழுத்து முயற்சியில் ஈடுபட தூண்டிக்கொண்டே இருக்கும் என் அன்பு மனைவி அமுதாவுக்கு என் அன்பும் நன்றியும்.

 

(தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா) சார்பாக டொரோன்ட்டோ நகரில் 04.06.2023 அன்று 2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய ஏற்புரையின் எழுத்துவடிவம்)