சந்திப்பு : அருள்செல்வன்
சிறுகதை,
கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி
சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்குரிய சாகித்ய அகாதெமி விருது, கனடாவின்
இலக்கியத் தோட்ட இயல் விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றுள்ள அவருடன்
ஓர் உரையாடல்.
உங்களை சிறுகதைத் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று இலக்கியவாதிகள் பேசுகிறார்கள் அப்படிப்பட்ட நீங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தீர்கள்.குறிப்பாக நீங்கள் திண்ணை இணைய இதழில் எழுதிய உலக மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் பற்றிய கட்டுரைகள் புகழ்பெற்றவை.அது தந்த எதிர்வினைகள் பற்றிக் கூற முடியுமா?
புத்தாயிரத்தாண்டில் அக்கட்டுரைத் தொடரை நான் திண்ணை இணைய இதழில் தொடங்கினேன். அந்த நேரத்தில் சிறுகதையை எதிர்மறையாகவே அணுகும் போக்கு மேலெழுந்து வந்தது. அரசியல் குரல்களுக்கும் கலகப்போக்குகளுக்குமான ஊடகமாக சிறுகதைகளை முன்வைத்து உரையாற்றும் குரல்கள் ஓங்கி வந்தன. ஒரு வாசகனுக்கு தன் ரசனையுணர்வை மெல்ல மெல்ல மேம்படுத்திக்கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் சிறுகதை வாசிப்பில் பெறமுடியும். வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இணைப்பு எத்தனை வலிமையானது என்பதை வாசிப்பின் வழியாகவே அறியமுடியும். அந்த அறிவுதான் நம் ரசனையை மேம்படுத்தும் என்பதை இலக்கியத்தை நோக்கி வரும் இளம்வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பித்தான் அத்தொடரைத் தொடங்கினேன். தொடங்கிய காலத்திலேயே அத்தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது ஒருமுறை சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அத்தொடரை விரும்பிப் படிப்பவர்களில் அவரும் ஒருவர் என்பதைப் புரிந்துகொண்டேன். இளைஞர்களுக்கு அது மிகவும் பயனுள்ளது, தொடர்ந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்திப் பேசினார். பல ஊர்களுக்கு இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் சென்றபோது பல புதிய வாசகர்கள் அத்தொடரைப்பற்றி பேசியிருக்கிறார்கள். சிலிகான் ஷெல்ஃப் என்னும் தளத்தில் அந்த நூறு கட்டுரைகளையும் அவற்றின் இணைப்புகளையும் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். எங்கோ ஒரு வாசகனுக்கு அப்பட்டியல் இன்றும் தேவையாகத்தான் இருக்கிறது.
நீங்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என பல
வகைமைகளில் எழுதி வரும் எழுத்தாளர் என்றபோதும், பல நேரங்களில் நீங்கள் சாகித்திய அகாதெமியின்
மொழிபெயர்ப்பு விருதாளராக மட்டுமே அறியப்படுகிறீர்கள். அது சார்ந்து ஏதேனும் வருத்தம் இருக்கிறதா?
இல்லை. எந்த வருத்தமும் இல்லை. என்னை எப்படி ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்பது முழுக்கமுழுக்க ஒருவருடைய தனிப்பட்ட முடிவு அல்லவா? என்னுடைய சொந்தப்
படைப்புகளில் ஒன்றைக்கூட வாசிக்காதவராகவும், மொழிபெயர்ப்புப் படைப்புகளை மட்டுமே வாசிக்கக்கூடியவராகவும்
ஒருவர் இருந்தால், அவர் அப்படித்தானே நினைக்கமுடியும்.
அதில் பிழையில்லை. இதைப் படியுங்கள், அதைப் படியுங்கள் என அவரிடம் நான் எப்படிச் சொல்லமுடியும்?
அவருடைய விருப்பத்தில் அது குறுக்கிடுவதுபோல அமைந்துவிடாதா? அதை நான் செய்யமாட்டேன். அவராகத் தேடிப் படிக்கும்
காலம் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பேன். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக
என்னுடைய எந்த எழுத்தையும் வாசிக்காமல் என்னோடு இன்றளவும் நட்போடு பழகக்கூடிய நண்பர்கள்
கூட எனக்கு இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும், என் படைப்புகளைப் படிக்கும் விருப்பம்
ஒருவருக்கு தானாக வரவேண்டும்.
உங்களது படைப்புகளில் பெரும்பாலும் துயரங்கள் பேசு பொருளாக இருக்கிறது. அதற்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் அமைந்த சூழல் காரணமாக இருக்குமா?
உலக இலக்கியம் உருவாகி வந்த காலத்திலிருந்தே அதன் முதன்மைப்
பேசுபொருளாக துயரம் அமைந்துவிட்டது. குறிப்பாக பெண்களின் துயரங்கள். சீதையின் துயரமும்
மண்டோதரியின் புலம்பலும் இல்லாமல் இராமாயணத்தைப் படிக்கமுடியுமா? அம்பை, குந்தி, திரெளபதை,
மாதரி, உத்தரை போன்றோரின் துயரக்கதைகளின் தொகுதியல்லவா மகாபாரதம்? ஐம்பெருங்காப்பியங்களிலும்
ஐஞ்சிறு காப்பியங்களிலும் இடம்பெற்றிருப்பதும் பெண்களின் துயரக்கதைகள் அல்லவா? சந்திரிகையின்
கதை, கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் என நாவல்களின் உலகத்தில் படர்ந்திருப்பதும் பெண்களின்
துயரமே. நவீன உலகில் அதன் தொடர்ச்சியையே என் கதைகளில் நீங்கள் பார்க்கிறீர்கள். என்
இளமைக்கால வாழ்க்கை துயர அனுபவங்களால் நிறைந்ததுதான். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அனுபவம் சார்ந்து
என் எழுத்துமுயற்சிகளைத் தொடங்கியபோது, அந்த அனுபவத்தொகையிலிருந்து பல தருணங்களை நான்
எடுத்தாண்டிருக்கிறேன். ஆனால் காலம் செல்லச்செல்ல துயரத்தை எழுதுவதற்கு துயரத்தில்
தோய்ந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்றும் துயரத்தை உணரும் மனம் இருந்தால் போதும்
என்றும் நான் புரிந்துகொண்டேன். அந்த ஞானம்
என் படைப்புலகத்தை மேலும் விரிவாக்கியது.
நூறு படைப்புகளைத் தொட்டு இருக்கிறீர்கள். உங்களுக்குப் பெரிதும் மன நிறைவு அளித்த முதல் ஐந்து என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?
சிறுகதையாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி,
என் மனத்துக்கு நிறைவளிப்பதைத்தான் எழுதுகிறேன். ஒரு படைப்புக்கான ஊற்று மனத்துக்குள்
பொங்கி வரும்போதே, அது நிறைவான விதத்தில் வெளிப்படுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவையாக
இருக்குமோ அவ்வளவு உழைப்பையும் தயக்கமின்றி அளிப்பேன். என் படைப்புகள் அனைத்தும் எனக்கு நிறைவைத்தவையே.
புத்தம்புதிதாக ஒரு படைப்பை எழுதிமுடிக்கும் தருணத்தில், அது அதுவரை எழுதிய எல்லாப்
படைப்புகளையும்விட நிறைவளிக்கும் படைப்பாக ஓர் உணர்வு எழுவது புரிந்துகொள்ளமுடியாத
ஒரு விசித்திரம். உங்களைப்போன்ற நண்பர்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வி எழும்போது, அதற்கு நான் பதில் சொல்வதுதான்
நல்லது. ஒருவேளை இதுவரை என் எழுத்துகளையே படிக்காத ஒரு புதிய வாசகருக்குக்கூட இப்படி
ஒரு கேள்வி எழலாம். இந்தப் பதில் வழியாக அவர் என் படைப்புகளை நோக்கி வரக்கூடும். இப்போது
அச்சிலேயே இல்லாத ஏதோ ஒரு பழைய தொகுதியின் பெயரைச் சொல்லி, அவரையோ, உங்களையோ நான் தடுமாற்றத்தில்
ஆழ்த்த விரும்பவில்லை. இதுவரை வெளிவந்த பழைய புத்தகங்களைவிட சமீபத்தில் வெளிவந்த புத்தகங்கள்
எனக்குக் கூடுதலான நிறைவை அளித்துள்ளன. சிறுகதை, அனுபவக்கட்டுரை, கட்டுரை, சிறார் கதைகள்,
சிறார் பாடல்கள் என பல வகைமைகளிலும் நான் எழுதி வருகிறேன். அதனால் வகைமைக்கு ஒன்றாக
என் விருப்பநூல் பட்டியலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். நயனக்கொள்ளை என்னும் சிறுகதைத்தொகுதி, நான் கண்ட பெங்களூரு என்னும் கட்டுரைத்தொகுதி,
ஒன்பது குன்று என்னும் அனுபவக்கதைகளைக்
கொண்ட தொகுதி, பொம்மைகள் என்னும் சிறார்
சிறுகதைத்தொகுதி, வணக்கம் சொல்லும் குரங்கு
என்னும் சிறார் பாடல்தொகுதி. என்னைப் புரிந்துகொள்ளவும் என் படைப்புலகத்தின் தன்மையைப்
புரிந்துகொள்ளவும் நீங்கள் இந்தக் குறும்பட்டியலில் இருந்து தொடங்கலாம்.
எழுத்தாளர் ஒரே சீரான தன்மையுடன் எழுத வேண்டும் என்பதில்லை. அவரது புனைவுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
ஒரு நல்ல எழுத்தாளர் ஒருபோதும் தன்னுடைய ஒரு படைப்பைப்போல
இன்னொரு படைப்பை ஒருபோதும் உருவாக்குவதில்லை. படைப்புமனம் முற்றிலும் புதிய களங்களை
இயல்பாகவே தேடித்தேடிச் செல்லும் குணத்தைக் கொண்டது. அதே சமயத்தில் அப்படைப்பாளியின்
மனம் அவனையறியாமலேயே ஒரு புள்ளியில் தோய்ந்திருக்கும். வாழ்க்கையைப் பற்றிய பார்வையை
அதன் மையத்திலிருந்தே அவன் பெற்றுக்கொள்கிறான். அவன் எத்தனை களங்கள் நாடியலைந்து அடைந்தாலும்,
அவனையறியாமலேயே அப்பார்வை நிழலென படிந்திருக்கும். ஒரு படைப்பாளனுடைய எழுத்துகளைத்
தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அதைக் கண்டறிந்துவிடுவார்கள்.
ஒரு புனைவுக்கும் மற்றொரு புனைவுக்கும் இருக்கும் வேறுபாடுகளை
முரண்பாடு என எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டும் வேறுவேறு. எடுத்துக்காட்டாக தல்ஸ்தோய்
எழுதிய போரும் வாழ்வும், புத்துயிர்ப்பு, அன்னா கரினினா ஆகிய மூன்று நாவல்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
மூன்றும் மூன்றுவிதமான களங்களைக் கொண்டவை. முற்றிலும் புதிய கதையமைப்புகளைக் கொண்டவை.
அதே சமயத்தில், மூன்று களங்களும் ஒரே புள்ளியிலிருந்து கிளைத்திருப்பதை கண்டுணரமுடியும்.
போரும் வாழ்வும் நாவலில் இடம்பெற்றிருக்கும் நடாஷா, புத்துயிர்ப்பு நாவலில் இடம்பெற்றிருக்கும்
கத்யூஷா, அன்னா கரினினா நாவலில் இடம்பெற்றிருக்கும் அன்னா ஆகியோருக்கு நாவலில் அளிக்கப்பட்டிருக்கும்
இடங்களைப்பற்றி யோசித்தால் நாம் ஓர் உண்மையைக் கண்டுகொள்ளலாம். இந்த மூன்று பெண்களின்
காதலை மூன்று விதமான கதையமைப்போடு முன்வைக்கிறார் தல்ஸ்தோய். மூன்றுமே மூன்று விதமான
காதல் கதைகள். காதலின் வெவ்வேறு விதமான பரிமாணங்கள்.
இதேபோன்ற ஆய்வை தமிழில் தி.ஜானகிராமன் எழுதிய பத்து நாவல்களையும் முன்வைத்து நாம் சொல்லலாம். அமிர்தம்
தொடங்கி நளபாகம் வரைக்கும் ஒவ்வொரு நாவலும் ஒரு களம் சார்ந்ததாக இருந்தாலும் அடிப்படையில்
அனைத்தும் காதலின் சாரத்தையே பேசுபொருளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இலக்கியம் படைப்பு என்கிற பாதையில் வந்து விட்ட எவருக்கும் கண்மூடித்தனமான அரசியல் விசுவாசமோ சித்தாந்தப்பற்றோ இருக்கக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அது அந்த படைப்பாளியின் சுதந்திரத்தை தடுக்கும் என்பதையும் பற்றி?
அரசியல் செயல்பாடு என்பதோ கொள்கைப்பற்று என்பதோ ஒருவருடைய
சொந்தத் தேர்வுக்குட்பட்ட செய்தியாகும். ஒரு பொதுமனிதனுக்குரிய அத்தேர்வு ஓர் எழுத்தாளனுக்கும்
பொருந்தும். எல்லாக் காலங்களிலும் எழுத்தாளர்கள் ஏதேனும் ஓர் இயக்கத்தோடு இணைந்து செயல்படுகிறவர்களாகவும்
எதனுடனும் இணையாமல் தனிப்பாதையில் செயல்படுகிறவர்களாகவும் இரு பிரிவுகளாக இருந்திருக்கிறார்கள்.
சுதந்திரப்போராட்டக் காலத்தில் அரசியல் ஈடுபாட்டோடு இயங்கிய படைப்பாளிகள் ஏராளமானவர்கள்.
நம் மகாகவி பாரதியாரே விடுதலை இயக்கத்தோடு தொடர்புடையவர் அல்லவா? அவரை அடுத்து கல்கி,
சுத்தானந்த பாரதியார், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்பிரமணியன், சாவி, கா.சி.வேங்கடரமணி,
ஆக்கூர் அனந்தாச்சாரி, ஜமதக்னி, கோதைநாயகி அம்மாள் என ஏராளமானவர்கள் காங்கிரஸ் இயக்கத்தோடு
தொடர்புடையவர்களே. பலர் சிறையில் வாடியவர்கள். அதே சமயத்தில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன்
போல எந்த இயக்கத்தோடும் தொடர்பின்றி வாழ்ந்த எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அரசியல்
ஈடுபாடு படைப்பாளியின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் படைப்புச்செயல்பாட்டுக்கு
நேரமில்லாதபடி கட்டுப்படுத்திவிடும்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் மக்களிடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியதும்,திரைப்படத்திற்கான தாய் வடிவமாக இருந்ததுமான நாடக வடிவம் இன்று செல்வாக்கு இழந்ததற்கு என்ன காரணம்? சிலப்பதிகாரம் பிறந்த தமிழ்நாட்டில் இன்று நாடக இலக்கியம் செழிப்படையாதது ஏன்?
எழுத்தியக்கம் என்பது ஒரு தனி கலைஞன் மட்டுமே ஈடுபடும் செயல்பாடு.
அவனுடைய எழுத்தை ஒருவர் படிக்கலாம். அல்லது படிக்காமலேயே புறக்கணிக்கலாம். அவனுக்கான
அங்கீகாரம் கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம். ஆனால் தன் அகத்தூண்டுதலால்
அக்கலைஞன் எழுதிக்கொண்டே செல்வான். என்றாவது ஒரு நாள் இச்சமூகத்தின் கூர்மையான ஒரு
பகுதி அக்கலைஞனைக் கண்டெடுக்கும். படிக்கத் தொடங்கும். பாராட்டும். நம் காலத்திலேயே
அப்படி கண்டெடுக்கப்பட்டு மிக உயர்வாக கொண்டாடப்பட்ட கலைஞர் நாவலாசிரியரான ப.சிங்காரம்.
ஆனால் நாடகம் என்பது ஒரு கூட்டுக்கலை. அங்கே நாடக ஆசிரியர் மட்டுமில்லை. நடிகர்கள்
இருக்கிறார்கள். நடிகைகள் இருக்கிறார்கள். இயக்குநர் இருக்கிறார். இன்னும் பிற துணைக்கலைஞர்கள் இருக்கிறார்கள்.
அனைவரும் இணைந்து நிகழ்த்தும்போதுதான் ஒரு நாடகம் சாத்தியமாகும். அது மேடைக்கலை. அதற்குப்
பார்வையாளர்கள் அவசியம். வாசிப்பைப்போல அது தனி அனுபவம் அல்ல. பொது அனுபவம். ஒரு காலத்தில்
நம் நாடகங்களுக்கு மாபெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருந்தார்கள். இன்று அப்பார்வையாளர்களில்
பெரும்பாலானோர் திரைப்படங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். காட்சி ஊடகங்களின் வெவ்வேறு வடிவங்களை நோக்கிச்
சென்றுவிட்டனர். தமிழ்நாட்டை மட்டுமன்றி, இந்தியாவில்
உள்ள எல்லா மாநிலங்களையும் இம்மாற்றம் பாதித்தது. ஆயினும் அம்மாற்றத்தால் தம்மை மாற்றிக்கொள்ளாத
ஒரு சிறு பகுதியினர் வங்காளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் நாடகங்களுக்கான பார்வையாளர்களாக
இன்றும் இருக்கிறார்கள். அந்த ரசனையும் மாறாத தன்மையும் அம்மொழிகளில் நாடகங்களுக்கு
ஆதரவாக இருக்கின்றன. அப்படி ஒரு சிறு பகுதியினர் தமிழுக்கு அமையவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
ஆயினும் பார்வையாளர்களை எப்பாடுபட்டாவது திரட்டி தக்கவைத்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கையோடும்
எதிர்பார்ப்போடும் சில கலைஞர்களும் நாடகக்குழுக்களும் இன்னும் தமிழில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது செய்தியாகக்கூட தமிழகத்தில் பரவவில்லை என்பதுதான் மிகப்பெரிய துயரம். ஒரு
கொலையையும் கொள்ளைச்செய்தியையும் அரைப்பக்கத்துக்கும் முழுப்பக்கத்துக்கும் வெளியிடுகிற
பத்திரிகைகள் தம் வட்டாரத்தில் நிகழ்கிற ஒரு நாடகத்தைப்பற்றி ஒரு பத்துவரிச் செய்தி
கூட போடுவதில்லை. விரல் எண்ணிக்கை அளவே இருந்தாலும் மு.ராமசாமி, அ.ராமசாமி, பிரளயன்,
பார்த்திபராஜா, முருகபூபதி, வேலுசரவணன் போன்றோரின் நாடகச்செயல்பாடுகள் தமிழுக்கு வளம்
சேர்ப்பவை. தம் பொருளிழப்பைப்பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவர்கள் இயங்கியபடியே
இருக்கிறார்கள். மகாராஷ்டிரம், வங்காளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இன்றும் பார்வையாளர்கள்
நூறு ரூபாயோ இருநூறு ரூபாயோ கொடுத்து டிக்கட் வாங்கிக்கொண்டுதான் நாடகங்களைப் பார்க்கச்
செல்கிறார்கள். இலவச அனுமதி என்னும் நிலையே இன்னும் நீடித்தும் கூட தமிழ்நாட்டில் பார்வையாளர்கள்
நாடகங்களை நோக்கி வருவதில்லை. இச்சூழலை வென்றெடுப்பதுதான் இன்றுள்ள மிகப்பெரிய சவால்.
சிறார் இலக்கிய படைப்புகள் கணிசமாக வரும் நிலையில், சிறார் இலக்கியம் குறித்து இருவேறு கருத்துகள் உண்டு. குழந்தைமை மனநிலையில் எழுதப்பட வேண்டும் என்று ஒரு பக்கம். யார் குழந்தைமை மனநிலையைத் தீர்மானிப்பது எப்படி எழுதினாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்,அவர்களது மொழியைக் குறுக்க வேண்டாம் என்று இன்னொரு பக்கம். இதில் நீங்கள் எந்த பக்கம்?
நான் குழந்தைகளுக்காக எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என்
கல்லூரி ஆசிரியரும் மிகச்சிறந்த மரபுப்பாவலருமான ம.இலெ,தங்கப்பா பேச்சுப்போக்கில் ஒரு
செய்தியைச் சொன்னார். அது அன்று என்னை வழிநடத்தும் ஒரு சொல்லாக அமைந்துவிட்டது. அவர்
சொன்னது இதுதான். அடிப்படையில் நம்முடைய நினைவிலும் கனவிலும் எப்போதும் ஒரு குழந்தை
விளையாடிக்கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தைக்காகத்தான்
நாம் எழுதுகிறோம். நம் ஆக்கங்கள் அந்தக் குழந்தையை
கைத்தட்டிச் சிரிக்கவைக்கவேண்டும், ஆடவைக்கவேண்டும். அது நிகழ்ந்துவிட்டால் போதும்,
இந்த உலகத்திலே எல்லாக் குழந்தைகளையும் ஆடவைத்துவிடும் என்றார். இந்தச் சொல்லே இன்றுவரை
என்னை இயக்கி வருகிறது.
வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என இருவேறு போக்குகள் எப்போதும் இருந்து வருகின்றன.ஒருவரை ஒருவர் ஏளனம் செய்வதும் உண்டு. உங்கள் பார்வையில் வெகுஜன இலக்கியம் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எல்லாக் காலங்களிலும் எல்லா மொழிகளிலும் படைப்புலகம் என்பது
பொதுவாசிப்புக்கு உரியவை என்றும் சிறப்புவாசிப்புக்கு உரியவை என்றும் இரண்டு பிரிவாகப் பிரிந்துதான் இயங்கி வருகின்றது.
தமிழுக்கு மட்டுமான பிரிவுகளாக இதைப் பார்க்கத் தேவையில்லை. வாசிப்பு என்னும் ரசனையுணர்வை
வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகத்துக்குள் வருவதற்கு ஒரு நுழைவாயில் போல பொதுவாசிப்புக்குரிய
படைப்புகள் துணையாக இருக்கின்றன. அது ஒரு பயிற்சி. ஆனால் இலக்கியம் என்பது மானுட வாழ்வின்
ஆழத்தை நோக்கிச் செல்லும் பெரும்பயணம். எளிய ரசனையோடு நிறைவுறும் பயணமல்ல. ஆகவே பொதுவாசிப்பு
நூல்களிலிருந்து இன்னும் தீவிரமும் ஆழமும் கொண்ட படைப்புகளை நோக்கிச் செல்லவேண்டியதிருக்கிறது.
இரண்டும் ஒன்றே என வாதிக்கத் தொடங்கும்போதுதான் சிக்கல் எழுகிறது. இரண்டும் வேறு வேறு
என்ற தெளிவு இருப்பவர்களிடையில் எந்தக் குழப்பமும் இல்லை. கிணற்றிலிருந்து தண்ணீர்
எடுக்க கயிறும் தேவை, குடமும் தேவை.
(தீராநதி – மே 2023 )