Home

Wednesday 23 November 2016

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்


எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு வெட்டுவார்.  அருகில் ஓடும் துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும் வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’ என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான் கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.

அன்று இரவு அந்தத் தொடரைப்பற்றிய இன்னும் சில விளக்கங்களைச் சொன்னார் பசவராஜ். உழைப்பின் வடிவத்தில் தெய்வமே உறைந்திருக்கிறது. உழைப்பில் சின்ன உழைப்பு, பெரிய உழைப்பு என எந்த வித்தியாசமும் இல்லை. மனமொன்றி நாணயத்துடன் உழைக்கும் எந்த உழைப்பும் முக்கியமான உழைப்புதான். உழைப்பின் வடிவத்தில் தெய்வமே வீற்றிருக்கிறது என்பதால், உழைக்கும் தருணத்தில் நாம் கிட்டத்தட்ட தெய்வத்தோடு வசிக்கிறோம். உழைப்பு உண்மையானதாக இருக்கவேண்டும். உடலுழைப்பு தொடர்பான ஒரு அவமான உணர்வு இந்த உலகத்தில் பரவத் தொடங்கிய கணத்தில், இப்படி வரையறுத்து உழைப்புக்கான உரிய மதிப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடாகக்கூட இந்தத் தொடர் இருக்கலாம் உழைப்பின் பயனாகக் கிடைக்கும் செல்வத்தில் தன் தேவைகளுக்குப் போக எஞ்சியதை தானமாக அளிக்கவேண்டும். உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தானமும் முக்கியம். உழைப்பில் தெய்வம் உறைந்திருப்பதுபோலவே, தானத்திலும் தெய்வம் உறைந்திருக்கிறது. உழைப்பில் ஈட்டிய செல்வத்தை ஒருநாளும் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடாது.  அன்றன்றே தானங்கள் செய்து செலவழித்துவிடவேண்டும். சேமிப்பு கொடுக்கக்கூடிய குருட்டுத்தைரியம் சிற்சில சமயங்களில் நம்மை உழைப்புச் சோம்பேறியாக்கிவிடலாம். தெய்வத்தைப் புறக்கணிக்கத் தூண்டலாம். அந்த அச்சத்தின் காரணமாக இப்படி ஒரு வரையறையை முன்னோர்கள் உருவாக்கியிருக்கலாம். முன்னோர்கள் முற்றும் உணர்ந்த ஞானிகள். அவர்கள் அருளியிருக்கும் தொடர்களின் பொருளை விளங்கிக்கொள்ள நாம் உளப்பூர்வமாக முயற்சி செய்யவேண்டுமே தவிர, நம் தர்க்கங்களின் அளவுகோல்களால் அவற்றை நிராகரிக்க முயற்சி செய்யக்கூடாது. நீண்ட நேரம் அவர் இப்படி விளக்கிக்கொண்டே இருந்தார்.
அந்தத் தொடரை அவர் வசனம் என்னும் சொல்லால் குறிப்பிட்டார். அதற்கு மொழியப்பட்டது அல்லது அருளப்பட்டது என்று பொருள். அல்லமபிரபு, அக்கமகாதேவி, பசவண்ணர் போன்ற அனைவரும் வசனகாரர்கள். சாதிவேறுபாடு எதுவுமின்றி, வசனகாரர்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் தோன்றினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் அமைதியான முறையில் ஒரு சமூகப்புரட்சியையே இவர்களுடைய வசனங்களும் விளக்கங்களும் அணுகுமுறைகளும் உருவாக்கின. கிட்டத்தட்ட அது ஒரு மறுமலர்ச்சிக்கட்டம். சமூகத்தின் மேல்தளத்தில் அது பெரிய எதிர்ப்பை எதிர்கொண்டது. ஆயினும் மக்கள் மனத்தில் எஞ்சியிருந்த கருத்துகள்வழியாகவே அந்தச் சிந்தனை வளர்ந்துவந்தது. கன்னடமொழியில் இலக்கியவரலாற்றில் வசன இலக்கியத்துக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. வசனகாரர்களின் பங்களிப்பைப் புறக்கணித்துவிட்டு, கன்னட இலக்கியத்தைப்பற்றிப் பேசமுடியாது.
வசனம் என்னும் சொல் என் மனத்தில் விழுந்த கணம் ஒரு விதை விழுந்த கணம். அந்தச் சொல்லும் அதன் வசீகரமும் என்னை மிகவும் ஈர்த்தன. என் நீண்ட நடையின்போது, பல சமயங்களில் பசவராஜின் உரையாடல்களை நினைத்துக்கொண்டே நடப்பதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தேன். ”மாமரம் எங்கே ! குயில்கள் எங்கே ! எங்கிருந்து எங்கே உறவய்யா !” என்பது பசவராஜ் வழியாக நான் தெரிந்துகொண்ட இன்னொரு முக்கியமான வரி. சாலையோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, மரத்தடிகளில் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்த ஒரு துறவியிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர் வசனங்களை இன்னும் கூடுதலான விவரங்களோடு எனக்கு அறிமுகப்படுத்தினார். ’மலையின் உச்சி என்று தெரிந்தும், மலை உச்சியில் வசிக்கவேண்டும் என்கிற ஆசையின் தூண்டுதலால் அங்கே வீட்டைக் கட்டிக் குடியேறிவிட்டு, தனிமையைக் கண்டு அஞ்சுவதில் பொருளொன்றுமில்லை’ என்ற பொருளைத் தந்த வசனவரி என்னை உலுக்கியெடுத்துவிட்டது. இச்சம்பவமே என்னை வசன இலக்கியத்தின்பால் என்னை ஆற்றுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, வசன இலக்கியத்தைப்பற்றி என் எல்லா நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதை ஒரு கடமைபோலவே இன்றுவரை செய்துவருகிறேன். கன்னட மொழிப்பயிற்சி கைகூடி வந்த பிறகு, நானே தேடிப் படிக்கவும் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை அவ்வப்போது மொழிபெயர்க்கவும் செய்தேன்.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட வசனங்களைப் பயின்றுகொண்டிருக்கும் மாணவன் நான். ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு தொடரும் புதுப்புது அர்த்தங்களை வழங்கியபடியே உள்ளன. நேரடியான பொருளில் வசனகாரர்களை கவிஞர்கள் என்று அழைக்கமுடியாது. மனம் வெடிக்க வந்து விழுந்த சொற்களின் கோவை என்று சொல்லலாம். கவிதைகளுக்கே உரிய அபூர்வமான சொற்சேர்க்கைகள் காணப்படுகின்றன. அருமையான உவமைகள், நயமான கற்பனைகள், முத்தாய்ப்பான சொற்கள் என ஏராளமானவை இவ்வசனங்களில் உண்டு.  ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வசனகாரர்கள் இருந்ததாகவும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் எழுதப்பட்டதாகவும் சொல்வதுண்டு. ஒற்றைத் தொகுப்பாக நான் இவற்றைப் பார்த்ததில்லை என்றாலும், இந்தத் தகவலை நான் படித்த எல்லாத் தொகுப்புகளின் முன்னுரையிலும் படித்திருக்கிறேன்.
வாழும் அறிஞர்களில் முக்கியமானவர் எம்.எம்.கலபுர்கி. வசன இலக்கியத்தைக் கசடறக் கற்றுத் துறைபோகியவர். புத்தாயிரத்தாண்டின் முதல் பத்தில் வசன இலக்கியத்தின் சாரம் தொனிக்கும்படியான ஒரு பெரிய தொகுப்பை உருவாக்கும் முயற்சியை கர்நாடக அரசு மேற்கொண்டு அறிஞர் கலபுர்கியின் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளின் தொடர் உழைப்பின் விளைவாக அக்குழு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வசனகாரர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரத்தைந்நூறு வசனங்களைக் கொண்ட ஒரு மாபெரும் தொகுப்பை உருவாக்கினார்கள். ஏறத்தாழ  தொள்ளாயிரம் பக்கங்களைக் கொண்ட தொகுப்பு. கன்னடத்தில் உருவாக்கப்பட்ட இத்தொகுப்பை இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், உருது, வங்காளம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கிற திட்டமொன்றை உடனடியாக உருவாக்கியது அரசு.  இத்திட்டத்தின் மேற்பார்வையாளராகவும் கலபுர்கி இயங்கினார். மொழிபெயர்ப்பாளர்களோடு இடைவிடாமல் உரையாடி உரையாடி செழுமைப்படுத்தியபடியே இருந்தார். காங்கிரஸ், ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி என மாறிமாறி பலவிதமான கட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருந்தபோதும், எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் இந்தத் திட்டம் தொடர்ச்சியாகச் செயல்பட்டபடியே இருந்தது. ஐந்தாண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர் முயற்சியால் திட்டமிட்டபடி ஒன்பது மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுதிகள் வெளியிடப்பட்டன. தமிழாக்கத்தில் தமிழ்ச்செல்வி, ஜெயலலிதா இருவரும் ஓரளவு பங்கு பெற்றிருக்கிறார்கள். மிக அதிக அளவில் வசனங்களை மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கி, இத்தொகுப்பை வெற்றிகரமாகக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியவர் மொழிபெயர்ப்பாளர் இறையடியான். கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக கன்னடத்துக்கும் தமிழுக்கும் ஓர் உறவுப்பாலமாக இயங்கிவருபவர். போராட்டம், அவதேஸ்வரி, மகாபிராமணன் போன்ற பல முக்கியமான கன்னட நாவல்களை தமிழில் மொழிபெயர்த்தவர்.  வசனம் தொகுப்பு தமிழுக்குக் கிடைத்துள்ள முக்கியமான கொடை. வீரசைவ இயக்கத்தின் தத்துவமுகத்தைப் புரிந்துகொள்ள இது நிச்சயம் உதவும். ஒரே மூச்சில் படித்துமுடிக்கத்தக்க தொகுப்பல்ல இது. ஒருசில வசனங்களைப் படிப்பதும், அந்த வரிகளை தம் வாழ்வியல் மற்றும்  கருத்தியல் அனுபவங்களோடு இணைத்து அசைபோடுவதுமாக, மெல்லமெல்ல உள்வாங்கவேண்டிய தொகுதி.
மனம் ஒரு குரங்கு என்ற சொல்வழக்கை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். ஒரே எண்ணத்தில் நிலைத்திருக்கமுடியாமல் இதுவா அதுவா என மாறிமாறித் தாவும் இயல்பால் இந்த வழக்கு நிலைத்துவிட்டது. பசவண்னர்  மனத்தைப் பாம்பு என்று குறிப்பிடுகிறார். அந்தப் புதுமை அடுத்த வரிக்குப் போகவிடாமல் கட்டிப் போட்டுவிட்டது. மனத்தைப் பாம்பு என்று சொன்ன கையோடு, உடலை கூடை என்று சொல்கிறார் சித்தராமேஸ்வர். இந்த வாழ்க்கையே பாம்புடன் வாழக்கூடிய வாழ்க்கை. அது எப்போது நம்மைத் தீண்டும் என்று சொல்லமுடியாது. எப்போது கொத்திக் கொல்லும் என்றும் சொல்லமுடியாது. அப்படியும் இப்படியும் அசையவிடாமல், வசப்படுத்தி ஒரே நிலையில் அதை  நிறுத்துவது பெரிய சவால். கூடலசங்கம தேவனை இடைவிடாமல் தொழுதபடியே இருப்பதுமட்டுமே ஒரே வழி. அதன்மூலம் மட்டுமே வெற்றி சாத்தியம். மகுடியோசையின் வழியாக பாம்பை வசப்படுத்துவதுபோல, கூடலசங்கம தேவனைத் தொழுதபடி இருப்பதுமட்டுமே மனப்பாம்பை வசப்படுத்தும். தொழுவது தடைபடும்போதோ அல்லது நின்றுவிடும்போதோ, மனத்தின் விஷம் ரத்தத்தில் கலந்துவிடத் தொடங்கும்.
செத்துப்போன ஒரு முயலை ஒரு வசனத்தில் சிறந்ததொரு உவமையாகப் பயன்படுத்துகிறார் பசவண்ணர். செத்துபோன ஒரு முயலை ஒரு வேடன் விற்பனைக்கு எடுத்துவருகிறான். முயல்கறியில் விருப்பமுள்ள அனைவரும் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். சரியான விலையை உறுதிப்படுத்திக்கொள்ள பேரம் பேசுகிறார்கள். இந்த ஊரின் அரசன் மிகப்பெரிய வீரன். பெருமை படைத்தவன். எல்லோருக்கும் பிடித்தவன். திடீரென அவன் உயிர் பிரிந்து விடுகிறது. அவனுடைய உடல் இறுதிவணக்கத்துக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வணங்குவதற்கு பலர் வரக்கூடும். ஆனால், தனக்குப் பிரியமான அரசன் என்பதற்காக, பணம்கொடுத்து யாரும் அரசனின் உடலை வாங்கிவைத்துக்கொள்வதில்லை.  மனிதன் உடலோடு உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும்வரைதான் கெளரவம், மரியாதை எல்லாம் கிடைக்கின்றன. உயிர் நீங்கியபிறகு, ஒரு முயலுக்குக் கிடைக்கும் விலைகூட இந்த உடலுக்குக் கிடைக்காது. உயிரின் நிலையாமையை மனம் உணரவேண்டும். கூடலசங்கம தேவனைத் தொழுவதன்மூலம் பக்தனாக வேண்டும். பக்தி, வாழ்வின் மதிப்பை உயர்வுள்ளதாக ஆக்கும். வாழ்க்கையே முடிந்துபோனாலும் அந்த மதிப்பு காலமுள்ளவரையில் எஞ்சி நிற்கும்.
பக்தி என்பதை ஓர் எண்ணமாகவோ அல்லது செயலாகவோ வரையறுத்து ஈடுபடமுடியாது. அந்நிலையில் அது ஒரு பழக்கமாகமட்டுமே எஞ்சக்கூடும். மாறாக, அது தன்னிச்சையான ஒரு சுபாவமாக மாறவேண்டும். மூச்சுவிடுவதுபோல. உடலில் ரத்தம் பாய்வதுபோல. இது சித்தராமேஸ்வரரின் வரையறை. அந்த வரையறைக்கு அவர் பயன்படுத்தும் உவமையின் காரணமாக, அந்த வசனம் மனத்தில் அழுத்தமான இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது. முன்னால் தள்ளும்போதும் அறுத்து, பின்னால் இழுக்கும்போதும் அறுக்கிற இரம்பத்தைப்போல மனம் பக்தியின்பால் இயங்கவேண்டும் என்பது பசவண்ணரின் குறிப்பு.
அவர் சொல்லும் இன்னொரு உவமையும் மிக இயற்கையான ஒன்று. கிராமப்புறங்களில் இன்றும் வாய்வழக்காக இருப்பதுதான் அது. சர்க்கரையை நக்கினால் இனிக்குமா, சர்க்கரைக்குடத்தை நக்கினால் இனிக்குமா என்று அந்தக் கிராம வழக்கோடுதான் அவருடைய ஒரு வசனம் தொடங்குகிறது. எல்லோரும் ஓடி ஓடிச் சர்க்கரையைத் தேடி வாங்கிச் சேமிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்களே தவிர, சர்க்கரையைச் சுவைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். சர்க்கரையைச் சுவைப்பதற்கு மாறாக, சர்க்கரைக்கலயத்தைச்  சுவைக்க முற்படுகிறார்கள். பக்திதான் சர்க்கரை. நெஞ்சார கூடலசங்கம தேவனை நினைக்கத் தொடங்கும் தருணத்திலேயே மனம் லயிக்கத் தொடங்க,  பக்தியை அக்கணமே  சுவைக்க ஆரம்பிக்கலாம். பக்தி தேடி அடையத்தக்க ஒன்றோ அல்லது தேடிச் சேமிக்கத்தக்க ஒன்றோ அல்ல. அது ஆழ்ந்து எண்ணி, லயித்து, சுவைக்கவேண்டிய ஒன்று. இரண்டுக்கும் உள்ள வழிமுறைகள் வேறுவேறு. அதைச் சுட்டிக்காட்டி செய்யும் கிண்டல்தான் பசவண்ணரின் வரி.
ஒரு கேள்வியை முன்வைப்பதுபோல, அல்லமப்பிரபு கையாளும் ஒரு உவமை முக்கியமானது. ’பாற்கடலில் நின்றுகொண்டு பசுவுக்காக கவலைப்படலாமா?’ என்பதுதான் அக்கேள்வி. தாயின் காலடியிலேயே நின்றுகொண்டு தாய் எங்கே தாய் எங்கே என எந்தக் குழந்தையும் தேடுவதில்லை. உள்ளங்கையில் லிங்கம் இருக்கும்போது தெய்வமே நம்முடன் இருப்பதுபோல. தெய்வத்தையே கைக்குள் வைத்துக்கொண்டு, தெய்வம் எங்கே எனத் தேடுவது மிகப்பெரிய வேடிக்கை. அதற்குக் காரணம், லிங்கத்தின் பெருமையையே உணராத நமது அறியாமை. கண்களையும் கருத்தையும் மறைத்திருக்கிற மாயத்திரையை விலக்குவதற்காக இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது.
‘ஏசுவின் போதனைகளைப் பின்பற்றுவதைவிட, ஏசுவாக வாழ முயற்சி செய்யவேண்டும்’ என்பது ஓஷோவின் புகழ்பெற்ற வரி. இதை நினைத்துக்கொண்டதற்குக் காரணம் அல்லமப்பிரபு எழுதிய வசனம். ’லிங்கம் போலானவர் ஒருவரையும் காணேன்’ என்று மனக்குறையுடன் எழுதுகிறார் அவர். லிங்கத்தை வழிபடுவதல்ல, லிங்கத்தைப் பாடிப் போற்றுவதல்ல, லிங்கமாக இருப்பதைப்பற்றி ஒருவர் கனவு காண்பதே புதுமையாக உள்ளது.
பேசியவன் மரம் போலானான்
பேசாதவன் கல் போலானான்
சினந்தவன் நெருப்புப் போலானான்
சினமுறாதவன் நீர் போலானான்
அறிந்தேன் என்றவன் மூடனானான்
அறியேன் என்றவன் விலங்குபோலானான்
அறிந்தேன் என்றும் எண்ணாமல்
வல்லோன் என்றும் எண்ணாமல்
குகையீசனெனும்
லிங்கம் போலானவர் ஒருவரையும் காணேன்
இதே கருத்தாக்கத்தை சென்ன பஸவண்ணர் தன் வசனத்தில் வேறொரு வடிவத்தில் சொல்கிறார். லிங்கத்தை ஒருவன் கைக்குள் வைத்திருக்கலாம். லிங்கத்தை வழிபடுகிறவனாக இருக்கலாம். லிங்கத்தைப் பாதுகாப்பாவனாகவும் இருக்கலாம். ஆனால் இது எதுவும் லிங்கத்தை உணர்ந்த ஞானத்தை அவனுக்கு வழங்கிவிடாது. அந்த ஞானத்தை அடைவது என்பது வேறொரு வழிமுறை என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார். அதை உணர்த்த அவர் கையாளும் உவமை படித்ததுமே மனத்தில் பதிந்துவிடும் தன்மையுடையது. ‘பெண்ணின் உடலில் ஊர்ந்துவிடுவதாலேயே மூட்டைப்பூச்சியால் உடலுறவின் இன்பத்தை அடைந்துவிடமுடியுமா’ என்பதுதான் அந்த உவமை. மனத்தில் அருளுணர்வோ அன்போ சிறிதும் இன்றி, வெற்றுச்சடங்குகளுக்கு ஆட்பட்டு லிங்கத்தை வழிபடுகிறவர்களை மூட்டைப்பூச்சிகள் என உரைத்து நிராகரிக்கிறார் சென்ன பஸவண்ணர். அதையே வேறு சொற்களில் ’பால்மடியைக் கடித்த உண்ணி பாலைச் சுவைக்கமுடியுமா அய்யனே?’ என்று சொல்லி நிராகரிக்கிறார் ஹேமகல்ல ஹம்பண்ணா.
’அன்னியக்குழந்தையை வைத்து ஆழம் பார்க்கின் எங்ஙனம் நிறைவேற்றுவான் ஐயனே?’ என்னும் கேள்வியில் சென்ன பஸவண்ணர் பயன்படுத்தும் வரியின் உட்பொருளை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது. மேலோட்டமாக, இந்த வசனத்தைப் படித்துமுடித்ததும், அன்னியக்குழந்தைக்கு மாறாக தன் குழந்தையை வைத்து ஆழம் பார்ப்பதுதான் சரியாக இருக்கவேண்டும் என்று தோன்றக்கூடும்.   ஆனால், அதுவும் பிழையானதுதான். ஒருவன் தான் நம்புகிற உண்மைக்கான சோதனைகளமாக தன்னையே ஆக்கிக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதே சமயத்தில் ஒரு சோதனையின் வழியாகவோ அல்லது தேடலின் முடிவாகவோ அறிவதல்ல, தெய்வ அனுபவம். தெய்வத்தில் தோய்வதால் மட்டுமே தெய்வ அனுபவம் கிடைக்கும்.
உண்மைகளும் போலிகளும் இணைந்திருக்கும் நிலையில் உண்மையைக் கண்டறிவது பெரிய சவால். தெய்வ உணர்வோடு வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். தெய்வத்தை சடங்காக வழிபட்டு, நெருக்கமுள்ளதுபோல நடித்துத் திரிகிறவர்க்ளும் இருக்கிறார்கள்.  இருவருக்குமிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது மிகமுக்கியம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ஆயுதக்கி லக்கம்மா  காகத்தின் குஞ்சு குயிலாக முடியுமா? ஆட்டுக்குட்டி ஆனையாக முடியுமா? வேட்டைநாய் சிங்கக்குடியாக முடியுமா? அறிவு, ஒழுக்கம், மெய்ஞ்ஞானம் எதுவும் அறியாமல் வெறும் பெயரைமட்டும் சுமந்துகொண்டு திரிவதால் ஒரு பயனுமில்லை என்பது அவர் எண்ணம். அப்படிப்பட்டவரை அடையாளம் கண்டுகொள்வது அவசியம். ஆழ்ந்த அனுபவமுள்ள பக்தர்கள் உண்மையான ஞானியருக்கும் போலிஞானிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இயற்கையாகவே உணர்ந்துகொள்வார்கள். அந்த இயற்கையறிவை உணர்த்துவதற்கு அவர் கையாளும் உவமை முக்கியமானது. ’யானையின் குட்டியை சங்கிலியால் கட்டுவார்களே அல்லாமல் பன்றியின் குட்டியைச் சங்கிலியால் பிணைப்பார்களா ஐயனே. சிங்கத்தின் குட்டியைக் கண்டால் வியப்பார்களே அன்றி, கருங்குரங்குக் குட்டியைக் கண்டு வியப்பார்களா’ என்பவைதான் அவர் வரிகள்.
எது உண்மையான பூசை என்கிற கேள்விக்கு விடைசொல்வதுபோல அம்பிகர செளடய்யாவின் வசனம் அமைந்துள்ளது.
யாரோ நட்ட செடியிலிருந்து மலர்பறித்து
ஊரார் கட்டிய ஏரியின் நீரெடுத்து
பாரோர் பாரீரென பூசனை செய்யின்
பூசையின் பலன் மலருக்கோ, நீருக்கோ,
தேயத்துக்கோ, வழிபட்டவனுக்கோ?
யாமறியேன், தாங்கள் உரைப்பீர் என்றான்
அம்பிக செளடய்யா
ஒரு புதிர்போல இந்த வசனம் காணப்பட்டாலும், இப்படி செய்யப்பட்ட பூசை உண்மையின் பாற்பட்டதன்று என்று உணர்த்தும் நோக்கம் கொண்டது என்பதை ஒரு வாசிப்பில் கண்டுபிடித்துவிடலாம். இறைவனை வழிபட அர்ப்பிக்கவேண்டிய மலர் நம் உணர்வுகள். அர்ப்பிக்கவேண்டிய நீர் நம் எண்ணங்கள். நம்மைத் தூய்மையாக்கிக்கொள்ளும் வழிமுறையே உண்மையான பூசை.
நம் பூசை அப்படி இருக்கவேண்டும். நம் பக்தி அப்படி இருக்கவேண்டும். அமுகே ராயம்மா என்கிற வசனகாரர் ஒரு வழிமுறையைச் சொல்லி, அதன்பால் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்.
காய்ச்சிய சூடான பாலை ஈ தொடுமா?
நெருப்புக்கு இடையிலுள்ள குண்டை பூனை தொடுமா?
.ஈயும் பூனையும் தொடாதபடி வழிமுறைகள் இருப்பதுபோல போலிகள் தொடாதபடியும் சில வழிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றி பக்திகொள்வதே சாலச்சிறந்த வழிமுறை.
போலி பக்தியை கேலி செய்தும், உண்மை பக்தியின் பெருமையை உயர்த்திப் பேசியும் வசன இலக்கியம் முழுதும் ஏராளமான தொடர்கள் இடம்பெற்றுள்ளன. ஹடப்பாத அப்பண்ணா எழுதிய ’சொர்க்கம் போவதற்கு ஏணி எதற்கு’ என்ற வரியையும் கணதாசி வீரண்ணாவின்  ‘பன்றிக்கு பல்லக்கு வைத்தால் அரசனாகிவிடமுடியுமா? என்ற வரியையும் மறக்கமுடியாது.
வசனங்களில் இடம்பெற்றுள்ள பழமொழிகளுக்கும் உவமைகளுக்கும் கணக்கே இல்லை. சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக அவை வசனகாரர்களால் கையாளப்பட்டுள்ளன. ஒவ்வொரு உவமையையும் அசைபோடும்தோறும் மனத்திலெழும் எண்ணங்கள் ஏராளமானவை. அவற்றுக்கு அளவே இல்லை.
இறையடியான் முயற்சியால் தமிழுக்கு ஒரு புதையலே கிடைத்துள்ளது என்பது என் எண்ணம். இதை அவருடைய சாதனை முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை.