Home

Thursday 15 January 2015

‘யானை சவாரி’ பாடல் தொகுதிக்கு எழுதிய முன்னுரை



எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் இருக்கின்றன. செவ்வக வடிவம் கொண்ட பூங்காவின் விளிம்பையொட்டி போடப்பட்டிருக்கும்  அகலமான பாதை நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உரியது. ஒரு சுற்று என்பது ஏறத்தாழ நானூறு மீட்டர் நீளமிருக்கும். பாதைக்கு இடைப்பட்ட பகுதி முழுக்க புல்வெளியாலும் பூச்செடிகளாலும் நிறைந்திருக்கும். இடையிடையே சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவதற்கான ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும் ஏறி இறங்கும் ஏணிகளும் வளைந்து நெளிந்து போகும் வாயகன்ற குழாய்களும் பொருத்தப்பட்டிருக்கும். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான பிள்ளைகள் பெற்றோர்களின் துணையுடன் இங்கே வந்து விளையாடுவார்கள். சற்றே வளர்ந்த பிள்ளைகள் பந்து விளையாடுவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். ஒரே சமயத்தில் நாற்பது ஐம்பது பிள்ளைகள் விளையாடமுடியும். நடைப்பயிற்சி முடிந்த பிறகு, ஒரு மரத்தடியிலோ அல்லது சிமெண்ட் பெஞ்சிலோ உட்கார்ந்துகொண்டு அச்சிறுவர்களின் விளையாட்டுகளை நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேரங்களில் எனக்குள் பரவும் உற்சாகத்துக்கு ஈடு இணையே இல்லை.
 
குழந்தைகள் முகத்தில் தெரியும் பூரிப்பையும் பரவசத்தையும் பார்க்கப்பார்க்க என் மனம் விம்மும். சிரிப்பும் வேகமும் பொங்க அவர்கள் பேசுவதையும் பொருளற்ற சொற்களைக் கூவுவதையும் ஆசையோடு கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்வேன். விதவிதமான உணர்வெழுச்சிகள். விதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம். ஒவ்வொன்றையும் ஓர் இசைத்துணுக்கு என்றே சொல்லவேண்டும். அதிசயமான அந்தத் தாளக்கட்டை ஒருபோதும் மறக்கவே முடியாது. அந்தக் காட்சிகளும் அவர்கள் மொழிந்த சொற்களும்தான் இந்தத் தொகுதியில் உள்ள பாடல்களுக்கான ஊற்றுக்கண்கள். வீணையின் தந்தியை மீட்டுவதுபோல அந்தக் குழந்தைச் சொற்களை மீட்டிமீட்டி, மனத்துக்குள் அக்காட்சியை அசைபோடத் தொடங்கும்போது எஞ்சிய வரிகள் தாமாகப் பொங்கி வந்து அச்சொற்களுடன் இணைந்துகொள்ளும். அச்சொற்களை நான் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் நானே குழந்தையாக மாறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். குழந்தைகளால் குழந்தையாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்கமுடியும்?  
குழந்தைகளை நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் பாரதியாரின் முகம் எழுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே குழந்தைகளையும் மனைவியையும் தினமும் மாலைவேளைகளில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை அவர் கடைபிடித்து வந்திருக்கிறார். குழந்தைகளோடு கடற்கரை மணலில் விளையாடுவதும் கடலலைகளையும் கட்டுமரங்களையும் பார்த்தபடி அவர்களுக்கு கதைகள் சொல்வதும் அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக இருந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் விரும்பும் தாளக்கட்டில் அவர்கள் விரும்பிய கணத்தில் பாடல்கள் கட்டிப் பாடுவதையும் அவர் விளையாட்டுபோல செய்துவந்துள்ளார். அவரைப்போல குழந்தையை நேசிப்பவர்கள் மிகவும் குறைவு. அவருடைய பாடல்களை இன்று படிக்கும்போது கூட அவர் கையாண்டிருக்கும் சொற்சேர்க்கையில் மனம் மயங்குகிறது. அந்த மகத்தான ஆளுமையை நினைத்துக்கொள்ளாமல் ஒருநாளும் கழிந்ததில்லை. இப்பாடல்கள் தொகுப்பாக வெளிவரும் இத்தருணத்தில் அவர் முகமே என் நெஞ்சில் எழுந்து சுடரெனப் பரவுகிறது. மகாகவி பாரதியாருக்கு இத்தொகுதியைச் சமர்ப்பிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இத்தொகுப்பில் உள்ள ஒரு சில பாடல்கள் சிறுவர் மணி, சுட்டி விகடன், புதுவை பாரதி, ஆரோவில் செய்திமடல் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். என் மனைவி அமுதாவின் அன்பும் நட்பும் ஆதரவும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் எப்போதுமே அருந்துணையாக நிற்பவை. அவரை நினைத்துக்கொள்ளாத கணமே இல்லை. இத்தொகுப்பைச் சிறப்பான முறையில் வெளியிடும் பாரதி புத்தகாலயத்தாருக்கும் என் அன்பார்ந்த நன்றி.

                                    எப்போதும் அன்புடன்
                                        பாவண்ணன்