Home

Thursday 8 January 2015

பாக்குத்தோட்டம் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை




நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் முதலாவது மாடி வாசலில் ஒரு ஆள் தனியாக நடக்கும்போது தாராளமாகவும் இரண்டு ஆட்கள் இணைந்து நடக்கும்போது நெருக்கிக்கொண்டும் நடக்கிற அளவுக்குத்தான் இடம் இருக்கிறது. இடம் சின்னதாக இருக்கிறதே என்பதற்காக, செடி வளர்க்கிற ஆசையையும் கனவையும் ஒதுக்கித் தள்ளிவிடவா முடியும்?  எங்கெங்கோ தேடி, இறுதியாக மொட்டை மாடியில் துவைத்த துணிகளை உலர்த்துகிற கொடிக்குக் கீழே சுவரோரமாக  தொட்டி வைக்க ஒரு சின்ன இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாள் என் மனைவி.  ரோஜாவுக்கு இரண்டு தொட்டிகள், கற்பூரவல்லிக்கு ஒரு தொட்டி, சோற்றுக்கற்றாழைக்கு ஒரு தொட்டி, துளசிக்கு ஒரு தொட்டி என மொத்தமாக ஐந்து மண்தொட்டிகள். தண்ணீர் ஊற்றப் போன ஒரு நாள் மாலை நான் அவற்றுக்கு பஞ்சபாண்டவர் தொட்டி என்று பெயர் சூட்டினேன்.  அதைக் கேட்டுரொம்ப நல்லா இருக்குதேஎன்று அவள் சிரித்துக்கொண்டே  சுவரையொட்டி சாய்ந்தபடி காதுத் தொங்கட்டான்கள் அசைய நின்ற கோலம் என் மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம்போல பதிந்துவிட்டது. தொட்டியை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம்  அந்தக் காட்சியும் ஒரு கணம் நெஞ்சில் மின்னி மறைகிறது.


ஓராயிரம் பார்வையிலேபாட்டின் வரிகளை முணுமுணுத்தபடியே ஒருநாள் காலை தொட்டிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த போது துளசித்தொட்டியில் துளசிக்குப் பக்கத்தில் சின்னஞ்சிறிதாக இரண்டு இலைகளை மட்டுமே தாங்கியபடி புதிதாக ஒரு செடி முளைத்திருப்பதைப் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அது என்ன செடி, யார் அந்த விதையைக் கொண்டு வந்து வைத்தார்கள் என்பது எதுவுமே எனக்குத் தெரியவில்லை.இங்க வந்து பாரு இந்த அதிசயத்த. யாரோ ஒரு புது விருந்தாளி தொட்டிக்குள்ள வந்து உக்காந்திருக்காருஎன்று அவளை அழைத்துக் காட்டினேன்.அட ஆமாம். என் கண்ணுல படவே இல்லயே. நேத்துகூட பார்த்தேனேஎன்றபடி புன்னகையும் திகைப்புமாக தொட்டிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒருகணம் உற்றுப் பார்த்தாள் அவள். மறுகணமேபார்வதிக்கு பக்கத்துல புள்ளயாரு உக்காந்திருக்கிறமாதிரி உக்காந்திருக்குதுஎன்றபடியே என் பக்கமாக நிமிர்ந்து சிரித்தாள்.நீயும் வைக்கலை. நானும் வைக்கலைன்னா, யாரு கொண்டாந்து வச்சிருப்பாங்க?” என்று கேட்டேன்.உலகத்துல நீங்களும் நானும் மட்டுமா இருக்கோம்? காத்து இருக்குது. கோழி இருக்குது. குருவி, காகம், குயில்னு ஆயிரம் பறவைகள் இருக்குது. அதும் வழியா வந்திருக்கலாமேஎன்று அவள் வாய் பேசிக்கொண்டே இருந்தாலும் அவள் முகம் அப்போது என்னைப் பார்க்கவில்லை. அந்தக் குருத்துத் தாவரத்தை விரலால் தொட்டுத்தொட்டு வருடிக்கொண்டிருந்தாள்.  அந்தக் கோலமும் என் மனத்தில் இருக்கிற இன்னொரு படம். அவள் சொன்ன வாக்கியங்களை அடிப்படையாக வைத்து காலம் கரைசேர்க்கும் விதைகள் என நானாகவே ஒரு சின்ன வாக்கியத்தை அப்போது உருவாக்கிக்கொண்டேன். என் ஆல்பத்தில் இப்படி ஏராளமான படங்கள். அவை வெறும் படங்களல்ல. நான் புத்துணர்ச்சி கொள்ள என் மீது பொங்கி வழியும் அருவிகள். அந்த ஈரத்தின் வழியாகவே நான் ஒவ்வொரு கணமும் என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.
ஒரு கூட்டத்துக்காகச் சென்றிருந்தபோது ஓர் எழுத்தாளரைச் சந்தித்தேன். சுவாரசியமாக வளர்ந்துகொண்டிருந்த உரையாடலை நிறுத்திவிட்டு அவர் திடீரென்று என்னைப் பார்த்துஉங்கள் எழுத்துக்கு எத்தனை வாசகர்கள் இருப்பார்கள்?” என்று கேட்டார். என்ன பதில் சொல்வது  என்று தெரியாமல் ஒருகணம் குழம்பித் திகைத்து மறுகணமே அதை என் புன்னகையால் கடந்து வந்தேன். பேருந்து பிடித்து இரவெல்லாம் பயணம் செய்து மறுநாள் அதிகாலை வீட்டுக்கு வரும்வரைக்கும் அந்தக் கேள்வி எனக்குள் ஒரு முள்ளாக உழன்றபடியே இருந்தது.  வழக்கம்போல தொட்டிக்கு தண்ணீர் ஊற்றச் சென்ற கணத்தில் விதைகளைக் கரைசேர்க்கிற காலம் கதைகளையும் கரைசேர்க்காதா என்றொரு வரி தோன்றியது. கேள்வி கேட்ட எழுத்தாளருக்குச் சொல்லவேண்டிய பதிலாக அல்ல, என்னைத் திடப்படுத்திக்கொள்ள கிடைத்த பதிலாக அவ்வரியை நினைத்துக்கொண்டேன்.
காலத்தை நம்பி எழுதப்பட்டவையே இத்தொகுப்பில் இருக்கும் கதைகள். இவற்றை ஒருசேரப் படித்துப் பார்க்கிற கணத்தில் இக்கதைகளில் மாறிமாறி ஊடாடுகிற காலத்தின் கோலம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஓட்டாஞ்சில்லை வீசிவிட்டு, பின்னாலேயே ஒற்றைக்காலால் நொண்டியபடி கட்டம்கட்டமாகத் தாண்டிச் செல்கிற சிறுமியைப்போல, பழைய காலத்தின் கட்டங்களை நானும் தாண்டித்தாண்டிச் சென்று விளையாடுவதுபோல இருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட காலம்வரைக்கும் சென்று மீண்டிருக்கின்றன இக்கதைகள்.வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது.  வேகமும் மோகமும் நிறைந்த ஆண்டாளின் வரிகளுக்கு நிகரான இவ்வரிகளை வாசிக்கும்போது, நான் அவற்றை ஒரு மந்திரத்தைப்போல வாய்விட்டு உச்சரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி எல்லாவற்றையும் நானாக, எல்லாவற்றிலும் நான் இருப்பதாகப் பார்க்கிற மனநிலையில் இப்போது நான் வாழ்கிறேன். அந்தப் பார்வையில் எழுதப்பட்டவையே இக்கதைகள்.
ஒருநாள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்துகொண்டிருந்தேன். வழியில் பூங்காவில் காலியாக இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தபடி, தன் மகளுக்கு ஷட்டில் காக் விளையாட கற்பித்துக்கொண்டிருந்த அப்பா ஒருவரை வேடிக்கை பார்த்தபடியே சிறிது நேரம் பொழுதுபோக்கினேன். என் கைப்பேசியைப் புரட்டியபோது, பூங்கா சத்தத்துக்கு நடுவில் காது கேட்காமல் என்னை அழைத்த ஓர் அழைப்பைத் தவறவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். வண்ணதாசனின் அழைப்பு. நான் உடனே அவரை அழைத்தேன்.நல்லா இருக்கீங்களா பாஸ்கர்?’  என்கிற வழக்கமான விசாரிப்பைத் தொடர்ந்துஉங்க கல்தொட்டி கதைய இப்பதான் படிச்சி முடிச்சேன்என்று சொல்லிக்கொண்டே போனார். அக்கணத்தில் நான் தரையிலேயே இல்லை. வானத்தில் பறந்துகொண்டிருந்தேன். என் மனம் உணர்ந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. கல்தொட்டியைத் தொடர்ந்து சைக்கிள், வாழ்க்கையில் ஒரு நாள் என பல கதைகளைப் படித்துமுடித்த சூடோடு கைப்பேசியில் அழைத்தோ, குறுஞ்செய்தி அனுப்பியோ தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்த நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளன. அவர் சொன்ன ஒவ்வொரு வாக்கியத்தையும் அவர் வழங்கிய ஆசியாகவே நான் நினைக்கிறேன்.
தமிழ்ச்சிறுகதை உலகின் முதல் படைப்பாளியாக நான் வ.வே.சு.ஐயரையே கருதுகிறேன். அவர் என்னைக் கவர்ந்த மாபெரும் ஆளுமை. தேசபக்தராகவும் இலக்கியவாதியாகவும் காந்தியவாதியாகவும் அவர் வாழ்ந்த வாழ்க்கை, இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு பகுதி.  வானளவு உயர்ந்த அவர் கனவுகள் அவருடைய மேன்மையான உள்ளத்தை உணர்த்தக்கூடியவை. அவருடைய குளத்தங்கரை அரசமரம் தொகுதியை சமீபத்தில் படித்தபோது, அவர் கையாண்டிருந்த கதைக்கருக்களின் வீச்சும் மொழியும் மனம் கவரும் விதத்தில் இருப்பதை உணர்ந்தேன். முதன்மைத்தகுதி உள்ள ஆளுமையாகவே அவரை நான் என்றென்றும் மதிக்கிறேன். அந்த ஆளுமையின் நினைவுகளுக்கு இத்தொகுதியை வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
இச்சிறுகதைகளை வெளியிட்ட அம்ருதா, உயிர்மை, ஆனந்தவிகடன்,  காவ்யா தமிழ் ஆகிய அச்சிதழ்களுக்கும் இணைய இதழான சொல்வனத்துக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் இம்முன்னுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். என் அன்புக்குரிய அமுதாவின் உறுதுணையையும் ஆதரவையும் நான் ஒருபோதும் மறக்கமுடியாது. அவையே எனக்குரிய ஊக்கசக்திகள். அவர் முகமும் இக்கணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. இத்தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வெளிக்கொண்டு வரும் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் என் அன்பார்ந்த நன்றி.