Home

Thursday 15 January 2015

‘யானைச் சவாரி’ தொகுப்பிலிருந்து சில பாடல்கள்




1.குறும்புக்காரி

ஆட்டக்காரி பாட்டுக்காரி
ஆடி வருகிறாள்
அக்கம்பக்கம் பொருளையெல்லாம்
தள்ளி வருகிறாள்

குறும்புக்கார் சிரிப்புக்காரி
குதித்து வருகிறாள்
அழுக்குக் கையை நல்ல துணியில்
துடைத்துச் சிரிக்கிறாள்

பேச்சுக்காரி தளுக்குக்காரி
ஓடி வருகிறாள்
அம்மா தரும் பாலை மட்டும்
அருந்த மறுக்கிறாள்

வம்புக்காரி வார்த்தைக்காரி
வளைய வருகிறாள்
அங்குமிங்கும் போக்குக்காட்டி
தப்பி விடுகிறாள்


2.உங்களாலே முடியுமா?

தவளை போலத் தாவுவேன்
சந்து பொந்து சுற்றுவேன்

எருமைக் குரலில் அலறுவேன்
இடுப்பை வளைத்து ஆடுவேன்

கிளியைப் போலப் பேசுவேன்
பழத்தைப் பார்த்தால் கொத்துவேன்

குயிலைப் போலக் கூவுவேன்
கூரை மேலே ஏறுவேன்

யானை போல பிளிறுவேன்
ஆசி கூட வழங்குவேன்

குரங்கு போல சீறுவேன்
குட்டிக் கரணம் போடுவேன்

கொஞ்ச நேரம் நில்லுங்கள்
எனது திறமை பாருங்கள்

உங்களாலே முடியுமா?
ஓடி வந்து செய்யுங்கள்.

3.தெரியுமா?

கத்தரிக்கோல் கைக்குக் கிடைத்தால்
என்ன செய்வேன் தெரியுமா?

கட்டுக் கட்டாய் வண்ணத்தாளை
வெட்டிக் குவிப்பேன் புரியுமா?

குவித்து வைத்த வண்ணத்தாளை
என்ன செய்வேன் தெரியுமா?

கயிற்றின் மீது வரிசையாக
ஒட்டி வைப்பேன் புரியுமா?

ஒட்டி வைத்த வண்ணக்கொடியை
என்ன செய்வேன் தெரியுமா?

வீட்டைச் சுற்றி தோரணமாக
கட்டி வைப்பேன் புரியுமா?

தோரணத்தை தொங்கவிட்டு
என்ன செய்வேன் தெரியுமா?

வருவோரை எல்லாம் வாசலில் நின்று
வரவேற்பேன் புரியுமா?

4.பரிசுகள்

இங்கிலாந்து பெரியம்மா
இன்று காலை வந்தார்
இடுப்புயரப் பெட்டியொன்றை
எனக்குப் பரிசாய்த் தந்தார்

சின்னச் சின்ன அடுக்குக்குள்ளே
விதவிதமாய் இனிப்பு
பெரிய பெரிய பைக்குள்ளே
வண்ணவண்ண உடுப்பு

பொம்மை வண்டி, பூச்சாடி
பூனை, யானை, மான்சிற்பம்
பந்துகள், பொம்மைத் துப்பாக்கி,
பறந்து சுழலும் எலிகாப்டர்.

அடுக்கி வைத்த பரிசுகளை
மலைத்து மலைத்துப் பார்த்தேன்
ஏதோ ஒன்று நினைவிலெழ
அடுத்த நொடியில் திகைத்தேன்

எல்லாம் சரிதான் பெரியம்மா,
ஒன்றை மறந்தாய்என்றேன்.
தோளைத் தொட்ட பெரியம்மா
என்ன?” என்று விழித்தார்

இங்கிலாந்து பேனாஎன்றேன்
ஐயோ மறந்தேன்என்றார்.
அடுத்த முறை மறக்கமாட்டேன்
வாடி செல்லம்என்றார்.