Home

Thursday 22 January 2015

ஒளிவட்டம்


போ போ, வேற ஊடு போயி பாரும்மா. ஒரு தரம் சொன்னா காதுல உழாதா? இங்கயே நின்னுகினு தொணதொணக்காத. போஎன்று பிச்சைக்காரியை விரட்டும் தாத்தாவின் குரல் நடுக்கூடம்வரை கேட்டது. அப்போது ஆங்கிலப் புத்தகத்துக்கு நடுவில் வைத்திருந்த நாடக நோட்டீஸ்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாமே சித்தப்பா கொண்டுவந்து கொடுத்தவை. ஒருகணம் கண்களை உயர்த்தி வாசல்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் நோட்டீஸ்கள்மீது பார்வையைத் தாழ்த்தினேன். பள்ளிக்கூடப் பாடங்களைவிட அவற்றின்மீதுதான் எனக்கு ஆசை அதிகம். அவற்றை நான் உயிருக்குயிராக நேசித்தேன். ஆயிரம் முறை பார்த்த நோட்டீஸைக்கூட ஆயிரத்தோராவது முறை பார்க்கும்போது புதுசாகப் பார்ப்பதுபோலவே தோன்றும். அவற்றில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விதவிதமான புராணப் பாத்திரங்களின் படங்கள் என்னுடன் பேசுவதுபோலவும் என்னைப் பார்த்துப் புன்னகைப்பதுபோலவும் இருக்கும். அவர்கள் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தோற்றத்தைப் பார்த்ததுமே, அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமான உரையாடல்களை புதுசுபுதுசாக மனம் உருவாக்கும். கற்பனையிலேயே அதை எனக்குள் பேசிப் பார்த்துக்கொள்வேன்.
சைக்கிள் மணிச்சத்தத்தால் என் கற்பனை கலைந்தது. மீண்டும் கண்களை உயர்த்தி வாசல் பக்கமாகப் பார்த்தேன். தபால்காரர் கொடுத்த கடிதத்தை தாத்தா திண்ணையிலிருந்து எழுந்துபோய் கைநீட்டி வாங்கிக்கொள்வது தெரிந்தது. கடிதத்தை அவர் முன்னும் பின்னும் திருப்பித்திருப்பிப் பார்ப்பதையும் கவனித்தேன். பிறகு எப்படியோ என் கவனம் மீண்டும் நோட்டீஸ்கள்மீது குவிந்துவிட்டது. அப்போது திண்ணையிலிருந்து தாத்தா அழைத்ததை காதுகள் உள்வாங்கிக்கொண்டாலும் மனம் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  நாடக நோட்டீஸ்களின் விதவிதமான வண்ணத்திலும் படங்களின் வசீகரத்திலும் மனம் லயித்திருந்தது.

குமாரசாமி……”
தாத்தாவின் குரலில் ஒலித்த கடுமை அவர் பொறுமையிழந்ததை உணர்த்தியது. அடுத்த கணமே புத்தகத்தை மூடிப் பைக்குள் வைத்துவிட்டு திண்ணைக்கு ஓடி ஓரமாக நின்றேன்.
ஏன்டா மக்கு, ரெண்டு காதுலயும் சாணிய வச்சி அடச்சியா வச்சிருக்கு? கூப்ட்ட கொரலுக்கு ம்ன்னு சொல்லகூடவா துப்பில்ல?” என்றபடி சுட்டுவிடுவதுபோல என்னைப் பார்த்தார் தாத்தா. நான் தலையைக் குனிந்தபடி ஓரக்கண்ணால் அவரைச் சுற்றி கவனித்தேன். சாய்வு நாற்காலிக்கு கீழே வெற்றிலை உரல் இருந்தது. அதற்கு அருகில் அவர் படித்துவிட்டு மடித்துவைத்திருந்த தினத்தந்தி பத்திரிகை இருந்தது. கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக உடைந்தது என எழுதப்பட்டிருந்த கொட்டை எழுத்துச் செய்தியை என்னால் படிக்கமுடிந்தது. நாற்காலியில் கைப்பிடியிலிருந்து தொங்கிய பச்சைத்துண்டு அதைத் தொட்டுக்கொண்டிருந்தது.
இன்னாடா இது?” என்றபடி என்னை நோக்கி அஞ்சலட்டையை நீட்டினார் தாத்தா. நான் அதைக் கையில் கூட வாங்காமலும் யோசிக்காமலும் உடனேலெட்டர் தாத்தாஎன்று சொல்லிவிட்டேன்.
அவருக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. எரிச்சலுடன்ஒலக்க. ஒலக்க. அது தெரியாதா எனக்கு? அதுல என்ன எழுதியிருக்குது பாருஎன்றார். அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு சமையலறையின் கதவைப் பிடித்தபடி வாசல்பக்கமாக அம்மா எட்டிப் பார்த்தாள்.
அந்தக் கடிதத்தை வாங்கி வேகமாகப் படித்துப் பார்த்தேன். தஞ்சாவூர் காளிதாசன் நாடகசபையிலிருந்து வந்திருந்தது. பாண்டிச்சேரியில் ஒதியஞ்சாலை திடலில் பத்தாம் தேதியிலிருந்து ஒரு வார காலத்துக்கு கிருஷ்ணலீலா நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இரண்டு நாட்கள் முன்கூட்டியே அங்கு வந்து சேர்ந்துகொள்ளும்படியும் எழுதியிருந்தார்கள். படித்துமுடித்த கணத்தில்தான் அவருக்கே படிக்கத் தெரிந்திருக்கும்போது என்னை ஏன் படிக்கச் சொன்னார் என்கிற சந்தேகம் உறைத்தது.  குழப்பத்துடன் அவர் முகத்தைப் பார்த்துசித்தப்பாவுக்கு யாரோ எழுதியிருக்காங்க தாத்தாஎன்று இழுத்தேன்.
அவர் மறுபடியும் எரிச்சலுடன்அறிவு கெட்டவனே, அது தெரியாதா எனக்கு? அட்ரஸ்ல அவன் பேருகூட என்ன எழுதியிருக்குது பாருடாஎன்று முகத்தைச் சுளித்தார்.
சித்தப்பாவின் பெயரைக் குறிப்பிட்டிருந்ததில் இருந்த புதுமையை நான்  அப்போதுதான் கவனித்தேன். ஒருமுறை மனத்துக்குள்ளேயே சொல்லிப் பார்த்துவிட்டுஒளிவட்டம் சிங்காரம்னு போட்டிருக்குது தாத்தா?” என்றேன்.
அது என்னடா ஒளிவட்டம், கிளிவட்டம்னு……?” அவர் எரிச்சல் குறையாமலேயே இருந்தது.
அது அவருடைய பட்டப்பேரு தாத்தாஎன்னை அறியாமலேயே ஒருவித உற்சாகம் என் குரலோடு வெளிப்பட்டுவிட்டது.
தாத்தா முகத்தைச் சுளித்தபடி அடிக்குரலில்தொடப்பக்கட்ட. லண்டன்ல படிச்சி வாங்கன பட்டமா. இல்ல கவர்னரு குடுத்த பட்டமா? எட்டாங்கிளாஸ்லயே மூணுதரம் தோத்துட்டு ஓடி போன கழுத. அதுக்கு பட்டம் கேக்குதா பட்டம்? தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கட்டனமாரிஎன்றார்.
அது அவுங்க கம்பெனிகாரங்க குடுத்த பட்டம் தாத்தா. அவரு பெரிய……” என்று நான் அவருக்கு விளக்க ஆரம்பிப்பதற்குள் அவர் கையை நீட்டி அடக்கினார்.முண்டம்,முண்டம். நிறுத்துடா. நீ என்ன அவனுக்கு வக்கீலா? அவன் கூட சுத்திசுத்தி நீயும் அவனப் போல ஆவலாம்ன்னு நெனைக்கிறியா? ஒழுங்கா படிச்சி பொழைக்கற வேலய பாரு, போ…….” என்றார்.
அந்தக் கடிதத்துடன் நான் மீண்டும் ஏற்கனவே உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த தூணை நோக்கி நடந்தேன்.நாலு கழுத வயசாவுது. கல்யாணமும் வேணாம், ஒரு கருமாந்தரமும் வேணாம்ன்னு இன்னும் ஊரூரா சுத்திகினே வருது. என்னைக்குத்தான் புத்தி வருமோ தெரிலஎன்ற தாத்தாவின் முணுமுணுப்பு என் முதுகுக்குப் பின்னால் கேட்டது. உட்காரப் போன சமயத்தில் சமையலறையின் கதவோரம் நின்றிருந்த அம்மாவின் பார்வையைப் பார்க்க நேர்ந்தது. அவள் உடனேஇங்க வாடாஎன்பதுபோல விரலை அசைத்தாள். திரும்பித்திரும்பி தாத்தாவின் பக்கம் பார்த்தபடியே நான் அம்மாவிடம் சென்றேன்.என்னடா விஷயம்?” என்று சைகையாலேயே அவள் கேட்டதும், அடங்கிய குரலில் விவரத்தைச் சொன்னேன். பிறகு மெதுவாகபசிக்குதும்மாஎன்றேன். அவள் உடனே அடங்கிய குரலில்இட்லி இப்பதான் ஊத்தியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் படிடா. போ. ஆத்துக்கு போன ஒன் சித்தப்பன்காரன் வரட்டும். அப்பறம் ஒன்னா சாப்டலாம் போஎன்று சொல்லி அனுப்பிவைத்தாள்.
பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா, அப்பா ஆகியோரைக் காட்டிலும் எனக்கு சித்தப்பாவைத்தான் மிகவும் பிடிக்கும். எல்லோரும் தபால் ஆபீஸிலும் ரயில்வே ஆபீஸிலும் வேலை செய்துகொண்டிருக்க, சித்தப்பா  மட்டும் நாடகக்கம்பெனியில் வேலை தேடிச் சென்றுவிட்டார். நாடகம் என்றால் நடிப்பு இல்லை. மேடைகளில் ஒளியமைப்பு வேலை. மாசக்கணக்கில் ஊர்சுற்றிக்கொண்டே இருப்பார். கம்பெனியில் நாடகம் இல்லாத சமயத்தில்மட்டும் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டுச் செல்வார். அவர் ஒளியமைப்பு செய்த எல்லா நாடகங்களின் கதைகளயையும் ஒவ்வொரு காட்சியாக எனக்குச் சொல்வார். ஒவ்வொரு காட்சியிலும் மேடையில் பல இடங்களில் ரகசியமாக அவர் பொருத்தியிருக்கும் விளக்குகளிலிருந்து பாய்ந்துசெல்லும் வெளிச்சம் நடிகநடிகையர்களை வேறொரு புதிய பரிமாணத்தில் காட்டும் தன்மையை அவர் ரசனையோடு விவரிப்பதை இரவுமுழுக்க தூங்காமல் கேட்டபடியே இருப்பேந்ன். நான் ஒரு நாடகத்தைக்கூட பார்த்ததே கிடையாது. சித்தப்பா சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு நானாகவே அதை மனசுக்குள் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன். தூக்கத்தில் வரும் ஏராளமான கனவுகளில் மூழ்கியிருப்பேன்.
ஒளிவட்டம் என்பது சித்தப்பாவே கண்டுபிடித்த ஒரு தந்திரக்காட்சி. பாத்திரங்கள் உணர்ச்சிகரமாக பேசும் தருணத்தில் மேடையை இருட்டாக்கி, நடிகரின் தலைக்குப் பின்னால் வட்டவடிவில் ஒளிவிழச் செய்து, அந்த நடிகர் பேசி முடிக்கும்வரை அதைச் சுழலவும் வைக்கும்போது, பார்வையாளர்கள் பக்திப் பரவசத்தில் கையெடுத்துக் கும்பிடுவார்கள் என்று சித்தப்பா சொல்வதைக் கேட்டதிலிருந்து எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை உருவாகிவிட்டது. அவர் உருவாக்கிய தந்திரக் காட்சிக்கு பார்வையாளர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு, கம்பெனி அவர் பெயரைக் குறிப்பிடும்போதெல்லாம் ஒளிவட்டம்  சிங்காரம் என்று சொல்லிச்சொல்லி, கடைசியில் அதுவே அவருடைய பட்டப் பெயராகிவிட்டது. அன்றுமுதல் கம்பெனி அச்சிட்டு விநியோகிக்கிற நோட்டீஸ்களில் பட்டப்பெயரோடு அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டது. அப்படிப்பட்ட நோட்டீஸ்கள் என்னிடம் கத்தைகத்தையாக இருந்தன. அவர் என்னிடம் சொல்லும் விஷயங்களுடன் என் கற்பனையையும் கலந்து அம்மாவிடம் சொல்லிச்சொல்லி, அவள் மனத்திலும் நாடகம் பார்க்கும் ஆசையை விதைத்திருந்தேன்.ஒன்னுக்கு நாலு சதுக்கபூதங்கள் இருக்கற ஊட்டுல இதயெல்லாம் நாம எந்த காலத்துலதான் பாத்து ரசிக்கப் போறமோ. நமக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்டாஎன்று அவள் சலித்துக்கொண்டாலும் என் ஆசையை அவளும் தன் ஆசையாக நினைத்து வளர்த்துவந்தாள்.
ஆற்றிலிருந்து சித்தப்பா வந்ததுமே நான் அவரிடம் கடிதத்தைக் கொடுத்தேன். மூன்று வார இடைவெளிக்குப் பிறகு வந்த தகவல் என்பதால் அவர் மகிழ்ச்சியடைந்தார். வீட்டிலிருந்து டவுன் பஸ்ஸில் சென்று பார்த்துவிடக் கூடிய தூரத்தில்தான் பாண்டிச்சேரி ஒதியஞ்சாலை திடல் இருந்ததால் எங்கள் நாடக ஆசைக்கு இது ஒரு சரியான வாய்ப்பு என்று நினைத்தோம். திடலுக்கு வந்துவிட்டால் போதும், மற்றபடி நாடகம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளையும் தன்னால் செய்துவிடமுடியும் என்று சித்தப்பா சொன்னார். இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்று அம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.
நடக்கவிருக்கிற நாடகம்பற்றி உற்சகாமாக விவரித்தார் சித்தப்பா. அந்த நாடகத்தில் தான் அமைக்கப்போகிற தந்திரக்காட்சிகளைப்பற்றி உற்சாகமாக  எங்களிடம் சொன்னார்.  வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் கதவுகளைச் சாத்தி இருட்டாக்கிவிட்டு சுவரோரமாக என்னையே  முருகனாகவோ, கிருஷ்ணனாகவோ, சிவனாகவோ நிற்கவைத்து, எனக்குப் பின்னால் ஒளிவட்டம் எப்படிச் சுழலும் என்று செய்துகாட்டினார். எல்லாமே மின்சாரத் தந்திரம். ஒளிவட்டம் சுழலச்சுழல, பார்த்துக்கொண்டிருந்த  அம்மாவும்  பெரியம்மாவும் பக்திப் பரவசத்தில் ஆனந்தக்கண்ணீர் விட்டார்கள். நாடகமேடையில் அந்த ஒளிவட்டம் சுழல்வதைப் பார்க்கும் ஆசை அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்வதுபோல எங்கள் நெஞ்சில் நிமிடத்துக்கு நிமிடம் உயர்ந்தபடி இருந்தது.
நாடகம் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே சித்தப்பா கிளம்பிச் சென்றுவிட்டார். நாம் வசிக்கும் ஊரிலேயே நிகழப்போகிற நாடகத்தைப் பார்க்காமல் இருப்பதுபோன்ற சோம்பேறித்தனமும் உதாசீனமும் உலகத்திலேயே கிடையாது என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார் அம்மா. எப்படி எப்படியோ அப்பாவிடம் பேசி அனுமதி வாங்க அம்மா முயற்சி செய்தாள். அசைக்கமுடியாத பாறையாக விளங்கினார் அப்பா. தாத்தாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்து அவரை  யாரும் வேதனையில் ஆழ்த்திவிடக்கூடாது என்பது அவருடைய கருத்து. சாப்பாடு வைக்கும்போதும் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும்போதும் ரகசியமான குரலில் அம்மா முன்வைத்த வேண்டுகோளை அவர் காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. ஒருநாள்நான் என்ன காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் போவணும்ன்னா கேக்கறன்? ஒரே ஒரு தரம் நாடகத்துக்கு போய்வரலாம்ன்னுதான கேக்கறன்என்று கண்ணீர் விட்டாள்.நம்ம வீட்டுப்புள்ள பங்கெடுத்துக்கிற நாடகம் நம்ம ஊருலயே நடக்கப் போவுது. நம்ம புள்ள திறமைய நாம பார்த்து பாராட்டினாதானே, அது நாள பின்ன நம்மோட ஒட்டுதலா இருக்கும். வேணாம் போன்னு நாம சொன்னா, அதுவும் வேணாம் போன்னு நம்மள சொல்ல எவ்ளோ நேரமாவும்?” என்றாள்.  சாப்பிட்டு முடித்த அப்பாவுக்கு வெற்றிலையின் நரம்புகளை எடுத்துவிட்டு நீவி மடித்துக்கொடுத்தபடி தரையைப் பார்த்துக்கொண்டேஊரு ஒலகத்துல ஒவ்வொரு புருஷனும் பொண்டாட்டிக்கு எள்ளுனு கேட்டா எண்ணெய எடுத்தாந்து குடுக்கற ஆளா இருக்காங்க. எனக்குத்தான் ஒரு நாடகத்துக்கு கூட விதியில்லாம போச்சிஎன்று கண்ணீர் விட்டாள். அதைக் கேட்டு அப்பா திகைத்து உறைந்துவிட்டார்.

அன்று இரவு தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் நடந்த உரையாடலின் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் மறுநாள் காலை அலுவலகத்துக்குச் செல்லும் முன்பு நாடகத்துக்குச் செல்லலாம் என்று அம்மாவிடம் அவர் தெரிவிப்பது என் காதிலும் விழுந்தது. இரண்டு நாட்களில் வர இருந்த ஞாயிறு அன்று அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அன்றுதான் நாடகத்துக்கு கடைசிநாள். திடல் வரைக்கும் அழைத்துச் செல்வதற்கும் அப்புறம் திருப்பி அழைத்து வருவதற்கும் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். தன்னை யாரும் நாடகம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். நாங்கள் நாடகம் பார்க்கும் நேரத்தில் கடற்கரை, கோயில், கடைகள் என்று
எங்கேயாவது சுற்றி பொழுதுபோக்கிவிட்டு திரும்புவதாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டு அம்மாவுக்கு பேச்சே வரவில்லை. ஆனந்தத்தில் அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது. அதுதான் நானும் அம்மாவும் பார்க்கப்போகிற முதல் நாடகம். நிமிடத்துக்கு ஒருமுறை என் மனம் வில்லியனூரிலிருந்து திடல்வரைக்கும் ஒரு பறவைபோல சென்றுசென்று திரும்பியது.
சனிக்கிழமை இரவெல்லாம் தூக்கமே இல்லை. கண்களை மூடும்போதெல்லாம் ஒளிவட்டம் சுழல்வதுபோலவே இருந்தது. தாத்தா திடீரென பேசுவதைக் குறைத்துக்கொண்டார். கர்ஜித்துக்கொண்டே இருக்கும் ஒரு சிங்கம் திடீரென அமைதியாகிவிட்டதைப்போல இருந்தது. பக்கத்தில் இருக்கும் விசிறிமட்டையை எடுத்துத்தரக்கூட யாரையாவது கூப்பிடும் பழக்கம் கொண்ட அவர் தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்ளத் தொடங்கினார். அன்று இரவு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவர் திடீரென இருமியபடியே எழுந்து உட்கார்ந்தார். அரைத் தூக்கத்தில் எழுந்து பார்த்த அம்மா என்னை எழுப்பி செம்பில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுக்கும்படி சொன்னார். நான் அவர் அருகில் சென்றுஇந்தா தாத்தாஎன்று செம்பை நீட்டினேன். அதை வாங்குவதற்காக கையை நீட்டியவர், வாங்காமலேயே பின்பக்கமாக சரிந்து மயங்கி விழுந்துவிட்டார்.அம்மாஎன்று நான் போட்ட சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். அப்பா அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்துவிட்டு கன்னத்தை அசைத்துஅப்பா அப்பாஎன்று அழைத்தார். தாத்தாவுக்கு உணர்வே இல்லை. சின்ன பெரியப்பா ஓடிச் சென்று எங்கள் தெருவிலேயே இருந்த ஒரு கம்பவுண்டரை அழைத்து வந்தார். அதற்குள் தாத்தாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது. கம்பவுண்டர் அவரை பரிசோதித்துவிட்டு ரத்த அழுத்தம் ஏறிவிட்டது என்றும் உடனடியாக பெரிய ஆஸ்பத்திருக்குச் செல்வதுதான் நல்லது என்றும் சொன்னார். பெரிய பெரியப்பா வெற்றிலைத் தோட்டம் ரெட்டியார் வீட்டுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லி அவருடைய காரை எடுத்து வந்தார். மூன்று பேரும் தாத்தாவை அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் மருத்துவம் நடந்தது. ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்குத் திரும்பியதும் தாத்தா வீட்டுக்கு வந்தார்.
நாடகத்துக்குச் செல்ல முடியாத ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அழுகையே வந்துவிட்டது. தாத்தாவின் உடல்நிலை காரணமாக நாடகத்தைப்பற்றி வெளிப்படையாக வீட்டுக்குள் பேசமுடியாத நிலை இருந்தது. மூச்சுமுட்டுகிற ஓர் இருட்டறைபோல வீடே மாறிவிட்டது. சத்தமாகக்கூட யாரும் பேசுவதில்லை. அடங்கிய குரலில் குசுகுசுவென்று பேசியபடி நடமாடினோம். சித்தப்பா மட்டுமே எனக்கிருந்த ஒரே ஆறுதல். அவர் என்னை ஆற்றங்கரைக்கும் கடற்கரைக்கும் தென்னந்தோப்புக்கும் அழைத்துச் சென்று ஏராளமான கதைகளைச் சொல்லிச்சொல்லி என் துயரத்தை லேசாக்கினார். பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற நாடகக் காட்சிகளுக்கே கணக்கே இல்லை என்றார்.  ஒவ்வொரு காட்சியின் தகவலையும் ஒன்றுவிடாமல் சொல்லும்படி நான் அவரை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரும் உற்சாகத்தோடு  ஒன்றையடுத்து ஒன்றாக சொல்லிக்கொண்டே இருந்தார். திருமணகோலத்தில் தங்கையையும் மாப்பிள்ளையையும் கம்சன் தேரில் அழைத்துவரும்போது எழும் அசரீரிக் காட்சிக்குக் கிடைத்த கைத்தட்டல்களைப்பற்றி நீண்ட நேரம் சொன்னார். அவர் பேச்சு என் சோகங்களையெல்லாம் கனவுகளாக மாற்றிவிட்டன. கிருஷ்ணலீலாவின் ஒவ்வொரு காட்சியும் அரங்கு நிறைந்த காட்சியாகவே இருந்ததால் பாண்டிச்சேரியில் அது ஒரு மாபெரும் வெற்றிபெற்ற நாடகமாக கருதப்பட்டது. அதனால் ஒரு மாதம் கழித்து மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். நான்குநாள் கழித்து ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துவிட்டு, என்னைத் தூக்கி தட்டாமாலை சுற்றினார். நாடகம் பார்க்கும் ஆசை எனக்குள் மீண்டும் துளிர்த்தது.
அன்று இரவே அம்மாவிடம் தகவல் சொன்னேன். அவள் நேரம் பார்த்து அப்பாவிடமும் தெரியப்படுத்தி, பழைய வாக்குறுதியையும் நினைவூட்டினாள்.  தாத்தாவின் உடல்நிலையை நினைத்து அப்பா மிகவும் தயங்கினார். பிறகு தன்னுடைய சொல்லை நிறைவேற்றுவது தன்னுடைய கடமை என்றும் நேரம் காலம் பார்த்து நிச்சயமாக அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். தாத்தாவின் உடல்நிலையிலும் படிப்படியாக நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் காலையில் தூங்கியெழுந்ததுமே வீட்டிலிருந்து ஆற்றைத் தாண்டி ரயில்வே ஸ்டேஷன்வரைக்கும் நடக்கும் பயிற்சியைத் தொடங்கினார். காலைநடைத் துணையாக அவருடன் நானும் சென்றேன். அப்போது அவர் எனக்கு தெய்வங்களின் அவதாரக்கதைகளைச் சொன்னார். முதன்முதலாக நான் தாத்தாவை ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவரால் அப்படியெல்லாம் கதைசொல்ல முடியும் என்பதே எனக்கு நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. அப்படியே பேசியபடி நடந்துகொண்டே இருக்கமாட்டோமா என்று தோன்றியது. ஒரு சிங்கத்தின் தோலாடைக்குள் எளிமையான ஒரு கன்றுக்குட்டி இருப்பதை மகிழ்ச்சி ததும்பப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.  
சித்தப்பாவின் நாடகங்களும் இப்படிப்பட்ட கதைகளையே மையமாகக் கொண்டவை என்பதையும் அவர் வேலைத்திறமையையும் சமயம் பார்த்து ஒருநாள் தாத்தாவிடம் சொல்லிவைத்தேன்.அப்படியா, நான் என்னமோ ஆடறது பாடறதுன்னுதான நெனச்சிட்டிருந்தேன்….” என்று தாத்தா சந்தேகத்தோடு  இழுத்த இடைவெளியில் சித்தப்பா எனக்குள் விதைத்திருந்த நாடக அறிவை அவரிடம் உற்சாகமாக இன்னும் பகிர்ந்துகொண்டேன். சில நிமிடங்கள் அவர் ஒன்றும் சொல்லாமலேயே நடந்தார். பிறகு மெதுவாக, “என்னைக்காவது இந்த பக்கம் நடந்தா சொல்லு, நாம எல்லாருமே சேந்துபோயி பாக்கலாம்என்று சொன்னார். வீட்டுக்குத் திரும்பிய மறுகணமே நான் அவர் முடிவை அம்மாவிடம் சொன்னேன். சில நிமிடங்களில் அது வீடு முழுதும் பரவிவிட்டது. சிற்றுண்டி சாப்பிடும் நேரத்தில் சித்தப்பாவுக்கும் அது தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் தனக்குள் புதுரத்தம் புகுந்திருப்பதாகச் சொல்லி அன்றுமுழுக்க அடிக்கடி புன்னகைத்தபடியே இருந்தார்.
எல்லோரும் சேர்ந்து நாடகத்துக்குச் செல்லலாம் என்று முடிவாகிவிட்ட சூழலில் நாடகத்துக்கான நாள் குறிக்கப்படாமல் தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஒப்பந்தப்படி நாடகம் நடைபெற இருந்த நாளுக்குள் கொட்டகை போடும் வேலை முடியாமல் இருந்ததால் நாடகம் நடக்கவில்லை. கொட்டகை தயாராகிவிட்ட சமயத்தில் வேறொரு ஒப்பந்தப்படி கம்பெனி காரைக்குடி பக்கம் நகர்ந்துவிட்டது. அவர்கள் திரும்பி வந்து நடத்தவிருந்த சமயத்தில் எதிர்பாராத புயல்மழையால் தடைபட்டது. அதைத் தொடர்ந்து வந்துவிட்ட அரையாண்டுத் தேர்வுகள் என்னை எதைப்பற்றியும் யோசிக்கவிடாமல் செய்துவிட்டன. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஒருவழியாக நாடகம் தொடங்கிவிட்டது.
குடும்பத்தோடு நாங்கள் நாடகம் பார்க்கப் போகிற விஷயம் ஊர்முழுக்கப் பரவிவிட்டது. அன்று காலையிலிருந்தே என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும்என்னடா, இன்னைக்கு நாடகமா?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஒங்களயெல்லாம் டிக்கட்டே  கேக்கமாட்டாங்க, இல்ல?” என்று பக்கத்துவீட்டு ஆயா கேட்டாள்.குடுத்து வச்ச குடும்பம்டா. ஒரு நால்ணாகூட செலவில்லாமயே நாடகத்துக்கு போறீங்கஎன்று பெருமூச்சுவிட்டார் பூசாரித் தாத்தா. பெரிய பெரியப்பா, சின்ன பெரியப்பா, அப்பா எல்லோருமே அன்று மாலை அலுவலகத்தில் வேலை முடிந்தபிறகு நேராக வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள். நாங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு நாடகம் பார்க்கப் புறப்படுவதை தெருவில் இருப்பவர்கள் எல்லோருமே வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.நாய்க்கண்ணு நரிக்கண்ணு பேய்க்கண்ணு பிசாசுக்கண்ணு ஒன்னொன்னும் என்னமோ காணாதத கண்டமாரி பாக்குதுங்க. வந்ததும் மொதல் வேலயா சுத்திப் போடணும்என்று முணுமுணுத்தபடியே வந்தாள் அம்மா.
நாடகத்திடலில் சித்தப்பாவே எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று நல்ல இருக்கைகளில் உட்காரவைத்தார். பக்கத்தில் இருந்த கம்பெனி முதலாளியை அழைத்துவந்து தாத்தாவையும் மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினார்.சித்தப்பா, ஒளிவட்டம் எங்க சுத்தும்?” என்று மேடையில் தேடிக்கொண்டே அவசரமாகக் கேள்விகேட்ட என் கன்னத்தில் செல்லமாக தட்டிவிட்டு சிரித்தார் சித்தப்பா. பிறகு, “வரும் வரும். நீயே பாரு. அவசரப்படாதஎன்று சொல்லிவிட்டு மேடைக்குப் போய்விட்டார்.
பரபரப்புடன் நான் நாடகமேடையின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பார்வையை ஓட்டி அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோதே மூன்றாவது முறையாக அடிக்கப்பட்ட மணியின் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. பிறகு வண்ணவண்ண விளக்குகளின் ஒளிக்கற்றைகள் படிந்து மேடை பிரகாசமுற்றது. நான் மெதுவாக தாத்தாவின் கையைத் தடவி, “தாத்தா, இதெல்லாம் சித்தப்பாவுடைய சாகசம்என்று கிசுகிசுத்தேன்.
முதல் காட்சியே முக்கியமான காட்சி. தேவகியும் வசுதேவரும் மணக்கோலத்தில் உட்கார்ந்திருக்கும் தேர் நகரத்தை நெருங்கும் சமயத்தில் கம்சா என எழுந்த எச்சரிக்கைக்குரல் மேடையில் அதிர்ந்தது. கம்சன் மேடையின் மூலைப்பகுதியை நோக்கிப் பார்வையைத் திருப்பிய கணத்தில் மேடையில் இருள் அடர்ந்து அழகான ஒளிவட்டமொன்று உருவானது. பார்ப்பதற்கு  முழுநிலவு போலவும் வெள்ளித்தட்டு போலவும் தோன்றியது.கம்சா, உன் தங்கை வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தையால் நீ மரணமடைவாய்என்று குரல் ஒலித்தது. அக்காட்சியைக் கண்டு பார்வையாளர்கள் பரவசத்துடன் கைதட்டினார்கள். கைதட்டியபடியே நான் தாத்தாவை நெருங்கிதாத்தா, இதுவும் சித்தப்பா வேலதான்என்றேன். அவர் புன்னகையுடன் தலையசைத்துக்கொண்டார்.
ஒளிவட்டம் தோன்றிய இன்னொரு காட்சியிலும் மக்களின் கைதட்டல்களால் கூரை அதிர்ந்தது. இடிமின்னலும் புயலும் நிறைந்த இருளில் குழந்தை கிடத்தப்பட்ட கூடையை தலைமீது வைத்தபடி  வசுதேவர் ஆற்றைக் கடந்தார். மேடை இருண்டு, ஒளிவட்டத்திலிருந்து பரவிய கிரணங்கள் குழந்தை கிருஷ்ணனை அரவணைத்ததோடு மட்டுமன்றி வசுதேவருக்கு பாதையைக் காட்டும் வெளிச்சமாகவும் இருந்தது. பார்வையாளர்களின் கைதட்டல் ஓசை நீண்ட நேரம் நீடித்தது.
சித்தப்பாவின் ஒளிவட்ட தந்திரக்காட்சிகளைப் பார்க்கப்பார்க்க என் உற்சாகம் பல மடங்காகப் பெருகியது. பக்கத்தில் இருந்த அம்மாவைப் பார்த்தேன். கண்களிலிருந்து பெருகும் கண்ணீரை அவர் துடைத்துக்கொண்டிருந்தார்.
தங்கையிடமிருந்து குழந்தையைப் பிடுங்கிய கம்சன் அதை சுவரில் ஓங்கியறைந்த கணத்தில் மேடை இருண்டதுமே, வரவிருக்கும் ஒளிவட்டக்காட்சியை எதிர்பார்த்து பார்வையாளர்கள் கைதட்ட தொடங்கிவிட்டார்கள். அவர்களுடன் நானும் மகிழ்ச்சியோடு நிறுத்தாமல் கைதட்டினேன். ஆனால் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ஒளிவட்டம் அக்கணத்தில் தோன்றவில்லை. மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். கைதட்டல் ஓசை ஒருகணம் நின்றது. மெளனத்தை உடைத்துக்கொண்டு இருளிலேயே அசரீரி ஒலித்தது. திகைப்போடும் குழப்பத்தோடும் ஒளிவட்டம் தோன்றவேண்டிய மூலைப்பகுதியையே மற்றவர்களைப்போலவே நானும் பார்த்தபடி இருந்தேன். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மறுகணம் அம்மா என எழுந்த குரலின் சத்தம். படபடவென மூங்கில் முரியும் சத்தம். யாரோ கூரையிலிருந்து கீழே விழும் சத்தம். சித்தப்பாவின் குரல்போலவே இருக்கிறதே என்றொரு எண்ணம் எழுந்த சமயத்தில் மேடையில் விளக்குகள் ஒளிர்ந்தன. சித்தப்பா தரையில் விழுந்து கிடந்தார். நடிகர்கள் அவரை மடியில் ஏந்தி கன்னத்தை தட்டி விழிக்கவைக்க முயற்சி செய்வது தெரிந்தது. சித்தப்பா என்று அலறியபடி நான் மேடையை நோக்கி ஓடினேன். அப்பாவும் சின்ன பெரியப்பாவும் பெரிய பெரியப்பாவும் என் பின்னால் ஓடி வந்தார்கள். நம்ப முடியாத அதிர்ச்சியில் பார்வையாளர்கள் எழுந்து நின்றார்கள்.
காத்த உடுங்ககாத்த உடுங்கஎன்றபடி கம்பெனி முதலாளி சித்தப்பாவின் அருகில் வந்தார். குனிந்து அவர் தோளைத் தொட்டுசிங்காரம்….. சிங்காரம்…” என்று அசைத்தார். பின்மண்டை அடிபட்டதில் ரத்தம் கசிந்து கோடாக வழிந்தது. அவர் அவசரமாக தனது துண்டாலேயே காயத்தை மூடி இறுக்கமாகக் கட்டினார். ஒரு பக்கம் நானும் அப்பாவும் அவரை அழைத்தபடி கால்மாட்டில் நின்றிருந்தோம்.டேய் சின்னவனேஎன்று உடைந்த குரலில் தாத்தா அழைத்தபடி கீழே குனிந்தார். அக்கணத்தில் அவர் தலை அசைந்தது. கண்களைத் திறந்து தாத்தாவின் பக்கம் பார்த்தார். மறுகணமே அவர் மயக்கத்தில் மூழ்கிவிட்டார். அதற்குள் செய்தி கிடைத்து மேடைக்கு ஓடிவந்த கொட்டகை முதலாளிஎன்னப்பா இப்படி சுத்தி நின்னு வேடிக்க பார்க்கறிங்க? தூக்குங்கப்பா மொதல்ல. ஆஸ்பத்திரிக்கு போவலாம்……” என்று சத்தம் போட்ட பிறகுதான் ஒரு வேகம் பிறந்தது. மூன்று பேர் சேர்ந்து அவரை ஒரு வாழைமரத்தை தூக்குவதுபோல தூக்கிச் சென்று காரில் கிடத்தினார்கள்.பெரியாஸ்பத்திரிக்கு ஓட்டுப்பாஎன்று காரோட்டியிடம் சொல்லிவிட்டு முதலாளியும் முன்னிருக்கையில் உட்கார்ந்துகொண்டார். கம்பெனியின் காரில் நாங்கள் எல்லோரும் பின்னாலேயே சென்றோம்.
அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குள் சித்தப்பாவை அழைத்துச் சென்றுவிட்டதால் நாங்கள் எல்லோருமே வெளியே நின்றிருந்தோம். கம்பெனி நடிகர்கள் கூடிக்கூடி சித்தப்பாவின் திறமையைப்பற்றி புகழ்ந்து பேசியபடி நின்றிருந்தார்கள்.சக்கரம் சுத்தலையேன்னு கூரையில ஏறி கையால சுத்தி உட போயிருக்கான். இருட்டுல ஏதோ ஒயருல கால் பட்டு ஷாக் அடிச்சிடுச்சிஎன்றார் ஒருவர்.அட, ஒருநாள் சக்கரம் சுத்தலைன்னா என்ன, குடியா முழுவிட போவுது? போனா போவுதுன்னு உட்டு தொலைக்காம, எதையோ செய்யப் போயி என்னமோ ஆயிட்டுது பாருஎன்று கசப்புடன் சொன்னார் இன்னொருவர். ஒரு டாக்டர் தாத்தாவிடம் ஒரு விண்ணப்பத்தைக் காட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார். ஒன்றிரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்த ஒரு தாதி அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். ஆஸ்பத்திரிக்கூடத்தின் விளிம்பில் தாத்தா மெளனமாக தரையையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். நாங்கள் அவரைச் சுற்றி நின்றிருந்தோம்.
அதிகாலையில் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். நுரையீரல் இயக்கமும் மூளைச் செயல்பாடும் திருப்தியாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். அதற்குப் பிறகுதான் எங்களால் மூச்சே விடமுடிந்தது. தன்னை மீறி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தாத்தா துண்டால் துடைத்துக்கொண்டார். ஆனால் இரண்டு மணி நேரத்திலேயே சட்டென்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. டாக்டர்களும் தாதிகளும் உள்ளே செல்வதும் வெளியே பதற்றத்துடன் வருவதுமாக இருந்தார்கள். ஒருவர் தாத்தாவின் அருகில் வந்து உள்ளே வரும்படி சொன்னார். பிறகு மெதுவாகஇதயத் துடிப்பு கொஞ்சம்கொஞ்சமா குறைஞ்சிகிட்டே வருது. மருந்துக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கமாட்டுதுஎன்று சங்கடத்துடன் சொல்லிவிட்டுவாங்க, நீங்க வந்து பாருங்கஎன்றார். தாத்தா அவரை மெளனமாகப் பின்தொடர்ந்தார். நாங்கள் அனைவரும் அவர் பின்னால் சென்றோம். டாக்டர் ஒருகணம் எங்களை நிமிர்ந்து பார்த்தார். பிறகு, “பேஷண்ட்டுக்கு தொந்தரவு கொடுக்காம தள்ளி நின்னு பார்க்கணும்என்று சொன்னார்.
தாத்தாவின் குரலைக் கேட்டதும் சித்தப்பாவின் விழிகள் திறந்தன. சிரிக்க விரிவதுபோல அவர் உதடுகள் நெளிந்தன. தள்ளி நின்ற எங்களையும் பார்த்தார். ஓடிச் சென்று அவர் விரல்களைப் பிடித்துக்கொள்ளவேண்டும் போல இருந்தது. முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார் அம்மா.ஒனக்கு ரொம்ப மனக்கஷ்டம் குடுத்துட்டம்பா. மன்னிச்சிக்குப்பாஎன்று ஒவ்வொரு சொல்லாக மெதுவாகச் சொன்னார் சித்தப்பா.அப்படிலாம் சொல்லாதடா சின்னவனே. நீ உத்தமன்டா. உத்தமன்டா… ” என்று தொண்டை கரகரக்கச் சொன்னார் தாத்தா. மறுபடியும்அப்பாஎன்றார் சித்தப்பா. தாத்தா அவரின் முகத்துக்கு அருகில் குனிந்தார்.எனக்கு என்ன பொண்டாட்டியா புள்ளயா? பெத்தவனயே கொள்ளி வைக்க வச்சிட்டியே ஈஸ்வரான்னு ராவணன் பாடற பாட்டு ஒன்னு எங்க நாடகத்துல உண்டு. அந்த மாரி நீ அழக்கூடாதுப்பா. என் ஒடம்ப ஆஸ்பத்திரிக்கே தானமா குடுத்துடுப்பாஎன்றார். தாத்தாவின் உடல் ஒருகணம் குலுங்கி அடங்கியது. பக்கத்திலேயே நின்றிருந்த டாக்டரை அவர் கண்கள் ஏறிட்டுப் பார்த்தன. பிறகு சித்தப்பாவின் பக்கம் திரும்பி சரி என்பதுபோல தலையை அசைத்தார்.  சித்தப்பாவின் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவி நிலைத்தது. நான் அவர் உடலை முகத்திலிருந்து பாதம்வரைக்கும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் முகத்தின்மீது பார்வையைப் பதித்தேன். அவர் பார்வை என்னை நோக்கித் திரும்புவதை உணர்ந்தேன்.சித்தப்பாஎன்று அழைக்க வாயெடுத்த  கணத்தில் புன்னகைத்த கோலத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.


(இருவாட்சி பொங்கல் மலரில் இடம்பெற்றுள்ள சிறுகதை)