Home

Friday 30 January 2015

’வாழ்க்கை: ஒரு விசாரணை’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எழுபதுகளின் இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றைப் படிப்பதற்காக எடுத்துவந்தேன். அத்தொகுப்பில் பச்சோந்தி என்னும் சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அக்கதையில் ஒரு பொது இடத்தில் ஒருவனை ஒரு நாய் கடித்துவிடுகிறது. தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு காவலர் அந்தச் சம்பவத்தை விசாரிக்கிறார். வெறிபிடித்த நாயை தெருவில் நடமாடவைத்ததற்காக அதன் உரிமையாளனை விசாரிக்கவேண்டுமென்றும் தண்டிக்கவேண்டுமென்றும் குரலையுயர்த்திச் சொல்கிறார். மாற்றிமாற்றி பலரும் அந்த இடத்தில் உரையாடியபடியே இருக்கிறார்கள். இடையில், அந்த நாய் அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியின் வளர்ப்புநாய் என்கிற தகவலை ஒருவன் காவலரிடம் ரகசியமாகச் சொல்கிறான். உடனே காவலரின் தொனி மாறிவிடுகிறது. விறைப்பேறிய குரலில் கடிபட்டவன் ஏதேனும் சேட்டை செய்து நாயை வம்புக்கிழுத்திருக்கக்கூடும் என்றும் அதனால் நாய் கடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன வம்பு செய்தாய் என கடிபட்டவனிடமே விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒரே கணத்தில் மனம் மாறிவிடுகிற காவலரின் நடத்தை திகைக்கவைத்துவிட்டது. வழக்கம்போல தேநீர்க்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி என் நண்பன் பழனியோடு இக்கதையைப் பகிர்ந்துகொண்டேன். அதே கடைத்தெருவின் வழியாக, பல தருணங்களில் விசாரணைக்காக கைவிலங்கிடப்பட்ட மனிதர்களை காவலர்கள் அழைத்துச் சென்ற  சம்பவங்களையும் கதையுடன் இணைத்துப் பேசிக்கொண்டோம். அவ்வழக்குகளில் எத்தனை உண்மையானவையாக இருக்குமோ, எத்தனை புனையப்பட்டவையாக இருக்குமோ என்று சொல்லி கசப்போடு சிரித்துக்கொண்டோம்.
எல்லோரும் சிற்சில தருணங்களில் தத்தம் நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளும் குணமுள்ளவர்களே. எளிய மனிதர்களின் பச்சோந்தித்தனத்தைவிட காவலர்களின் பச்சோந்தித்தனம் சமூகத்தின் கவனத்தை உடனடியாக ஈர்க்கிறது. அறத்தைக் காக்கும் இடத்தில் காவலர்களை நம் ஆழ்மனம் பொருத்திவைத்திருக்கிறது. அதுதான் காரணம். நம்மில் ஒருவனுடைய அறப்பிசகால் நம்முடைய சூழல்மட்டுமே பாதிக்கும், காவலர்களின் அறப்பிசகால் சமூகமே பாதிக்கும் என மனிதமனம் நினைக்கிறது. திகைப்பும் அதிர்ச்சியும் அதனாலேயே உருவாகின்றன. யாருக்குமே தன் முதுகில் இருக்கிற அழுக்கு தெரிவதில்லை, அடுத்தவர் முதுகில் இருக்கிற அழுக்குதான் தெரியும். நிதானமான குரலில் பழனி சொல்லிக்கொண்டே சென்றான். அச்சொற்களை இரவுமுழுக்க அசைபோட்டபடியே இருந்தேன். அதன் முடிவில் தொடர்பே இல்லாமல் சிலப்பதிகாரப் பாயிரத்தின் வரியொன்று மனத்தில் மிதந்தெழுந்தது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதுதான் அந்த வரி. அறம் கூற்றாகும் என்பதில் தொனிக்கும் நம்பிக்கையின் அழுத்தத்தை என்னால் உணரமுடிந்தது. சட்டென பழனி சொன்ன அறப்பிசகு என்னும் சொல் நினைவில் மோத, அறம் பிழைத்தோர்க்கு எது கூற்றாகும் என நானாகவே கேட்டுக்கொண்டேன். அதற்குப் பிறகு, இயற்கையாக எழுந்த இவ்வரியை அடிக்கடி நினைத்துக்கொள்வது என் பழக்கமாகிவிட்டது. வேறொரு தருணத்தில் இதுபோலவே பொங்கியெழுந்த உணர்வுமோதல்களில் அதற்குரிய விடையைக் கண்டுபிடித்தேன். வாழ்க்கையே கூற்றாகும் என்பதுதான் அந்த விடை.
இவையனைத்தும் நடைபெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் சிறுகதை எழுத்தாளனாக மாறினேன். தீபம், கணையாழி, தாமரை, மன ஓசை என சிற்றிதழ்களில் என் படைப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, வாசக உலகில் என் பெயர் பரவலாக தெரியத் தொடங்கியது. ஒருமுறை கொப்பல் என்னும் ஊரில் கேபிள் புதைக்கும் வேலை முடிந்து எங்கள் முகாமிருக்கும் இடமான ஹோஸ்பெட் என்னும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். மாலைக்காற்று தழுவியோட, வானத்தின் நீலத்தையும் மேகங்களையும் வேடிக்கை பார்த்தபடி ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். முனிராபாத் என்னும் நிறுத்தத்தில் வண்டி நின்று புறப்பட்டபோது ஒரு கூட்டம் ஏறியது. அக்கூட்டத்துடன் கைவிலங்கிடப்பட்ட இருவரோடு இரண்டு காவலர்களும் வந்து இருக்கையில் அமர்வதைப் பார்த்தேன். பேருந்தில் இருந்த அனைவருடைய விழிகளும் விலங்கிடப்பட்டவர்கள்மீது ஒரே கணத்தில் பதிய, அவர்கள் யாரையும் பார்க்காமல் தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்கள். அக்காட்சி ஒருகணம் திகைக்கவைத்துவிட்டது. காவலர்களையும் கைதானவர்களையும் மாறிமாறிப் பார்த்தபடியே இருந்தேன். என் கட்டுப்பாட்டை மீறி என் மனத்திலும் உடலிலும் வெப்பம் வெடித்துப் பரவுவதை உணர்ந்தேன். எதிர்பாராத ஒரு கணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நானும் பழனியும் சேர்ந்து பார்த்த காட்சியும் அதைத் தொடர்ந்த உரையாடல்களும் நினைவிலெழுந்தன. அறப்பிசகு என்னும் சொல்லும் நினைவுக்கு வந்துவிட்டது. அக்கணம் எனக்குள் நிகழ்ந்த ஒரு பெரிய திறப்பு. நள்ளிரவு வரைக்கும் நான் அந்த சொல்லையே அசைபோட்டபடி இருந்தேன். அச்சொல்லின் ஊடாக, எங்கள் கிராமத்தின் கதையையே எழுதமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. என் முதல் நாவல் அப்படித்தான் பிறந்தது.
இதன் கையெழுத்துப் பிரதியை என் நண்பரான எஸ்.சஙகரநாராயணனுக்கு அனுப்பி, படித்து கருத்துரைக்குமாறு  கேட்டுக்கொண்டேன். ஒரு சில நாட்களிலேயே அவர் எழுதியனுப்பிய விரிவான கடிதம் எனக்கு மிகவும் ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டுவதாக இருந்தது. அதுமட்டுமன்றி, அவரே பொறுப்பேற்று, கையெழுத்துப் பிரதிக்கு புத்தக உருவமும் கிடைக்க வழிசெய்தார். இருபத்தேழாண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் மீண்டும் வெளிவரும் இவ்வேளையில் நண்பர் எஸ்.சங்கரநாராயணனை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். திருமணத்துக்குப் பிறகுதான் இந்த நாவலை நான் எழுதத் தொடங்கினேன். அப்போதெல்லாம் பகல்முழுக்க வேலைதொடர்பாக அலைந்துவிட்டு இரவு கவிந்தபிறகுதான் வீட்டுக்குத் திரும்பமுடியும். குளித்துமுடித்து உணவுண்ட பிறகு சிறிது நேரம் உரையாடிவிட்டு, உடனே எழுத உட்கார்ந்துவிடுவேன். இதற்காக, ஒருபோதும் என் மனைவி அமுதா என்னிடம் சலித்துக்கொண்டதே இல்லை. அவருடைய நேசமும் துணையும் இல்லையென்றால், என்னால் இவ்வளவு தொலைவு வந்திருக்கமுடியாது. அவருடைய காதலும் உத்வேகமூட்டும் சொற்களும்தான் என்னை இடைவிடாமல் இயங்கவைத்தபடி இருக்கின்றன.  அவரையும் அன்புடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
என் மனைவியின் தங்கையான அருணா ஒரு நல்ல வாசகி. இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கும் நல்ல ரசனையுனர்வு உள்ளவள்.  சந்திக்கும்தோறும் இலக்கியம் பேசி உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பவள். கலகலவென்ற தன் சிரிப்பின் வழியாகவே தன்னைச் சுற்றி ஒரு கொண்டாட்ட உணர்வை விதைத்துவிடும் ஆற்றல் அவளிடம் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவளுடைய அன்புக்கு இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  மிகச்சிறந்த முறையில் இந்த நாவலை வெளிக்கொண்டு வந்திருக்கும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.
மிக்க அன்புடன்,
பாவண்ணன்