Home

Friday 30 January 2015

’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் வீடு. பெரும்பாலும் நான் மாலைநேரப்பணி அல்லது இரவுநேரப்பணியையே தேர்ந்தெடுத்துச் செய்துவந்தேன். அதிகாலையில் ஆறரைமணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே உள்ள தேநீர்க்கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து செல்வதுதான் என் வழக்கம். அதிகாலைக்காற்று வீசியபடி இருக்க, ஊரையே மூடியிருக்கும் இருளின் போர்வையை விலக்கும் சூரியனின் கைவிரல்கள் பட்டதுமே மண்மீதிருந்த ஒவ்வொன்றின்மீதும் ஒளி சுடர்விடத் தொடங்கும். நடமாட்டம் குறைந்த தெருக்களின் வாசல்தோறும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் விதவிதமான வண்ணக்கோலங்களைப் பார்த்தபடியே நடப்பேன். அழகான கோலங்கள். அழகான செடிகள். அழகான மரங்கள். அழகான சாலைகள். காலைநேரம் அந்த அழகைப் பலமடங்காகப் பெருக்கி கண்களுக்கு விருந்தாக்கிவிடும்.
அந்த விருந்து அதிகநேரம் நிலைத்திருக்காது. ஒதியஞ்சாலையைக் கடந்து, கம்பன் கலையரங்கத்தை நெருங்கும்போது  மக்கள் நடமாட்டம் பெருகத் தொடங்கிவிடும். ஒரு காரணம் அருகில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம். இன்னொரு காரணம் ஆலைகளில் அது ஷிப்ட் மாறும் நேரம். எங்கெங்கும் மிதிவண்டிகள் காணப்படும். ஆலையின் சுற்றுச்சுவர்களை ஒட்டியிருந்த சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் விதவிதமான வியாபாரம் நடக்கும். திருவிழாவுக்கு வந்த ஒரு பெரிய கூட்டத்தைப்போல எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள் தெரிவார்கள். பாட்டுச்சத்தம். பேச்சுச்சத்தம். சிரிப்புச்சத்தம். வசைகளின் சத்தம். வாகனங்களின் சத்தம்.  நெல்லித்தோப்பு திரும்பும்வரைக்கும் அந்தக் கோலத்தில் மாற்றமே இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்தச் சாலையைக் கடப்பது திருவிழாவுக்குள் புகுந்து வெளியே வருவதுபோல இருக்கும். நெல்லித்தோப்பைக் கடந்ததுமே, சாலைகளின் மெளன அழகு மறுபடியும் பார்வையில் விழத் தொடங்கும்.
சாலையில் மெளனம் படிந்திருந்தாலும் நெஞ்சின் ஆழத்தில் சற்றுமுன் கேட்ட சத்தத்தின் எதிரொலி கேட்பதை என்னால் உணரமுடியும். அந்த ஆரவாரமான சத்தத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை பலவிதமாக யோசித்துப் பார்ப்பேன். அது மனத்தின் அடியிலிருந்து அருவிபோலப் பொங்கி வரும் சத்தம். மனிதர்கள் கூடும்போது மட்டுமே வெளிப்பட்டு பேரோசையாக ஒலிக்கும் சத்தம். அதற்கு மொழி அவசியமில்லை. எழுத்து அவசியமில்லை. அது ஒருவகையான உல்லாசம் எழுப்பும் சத்தம். அங்கிருந்த ஆலைத்தொழிலாளர்கள் முகங்களிலும் விழிகளிலும் அந்த உல்லாசம் சுடர்விட்டபடி இருந்தது.
தினமும் பார்த்துப்பார்த்து இந்த அதிகாலைச்சித்திரங்கள் என் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிட்டன. இளம்பொறியாளர் பணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டுப் பயிற்சிக்காக ஐதராபாத் செல்லவேண்டியிருந்தது. பயிற்சி முடிந்த கையோடு நான் கர்நாடகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நான் புதுச்சேரிக்குத் திரும்பி வந்தேன். வழக்கமான அதிகாலை நடை அனுபவத்தை எதிர்பார்த்து பேருந்து நிலையத்தில் இறங்கி, வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன். என் மனத்தில் படிந்திருந்த சித்திரம் வேறாகவும் என் கண்கள் பார்க்கும் காட்சி வேறாகவும் இருந்தது. எந்த இடம் இதற்குமுன்னால் திருவிழாச்சந்தடியாக இருந்ததோ, அந்த இடம் அமைதியில் அமிழ்ந்திருந்தது. கைவிடப்பட்ட தூரத்து உறவினர் ஒருவருடைய வீட்டைப்போல, அந்த ஆலைவளாகம் தோன்றியது. ஏராளமான மதிலோரக்கடைகள் மூடிய நிலையில் இருக்க, எங்கோ ஒன்றிரண்டுமட்டும் இயங்கிக்கொண்டிருந்தன.
ஆலைகள் மூடப்பட்டுவிட்டதையும் போராட்டங்கள் பயனற்றுப் போனதையும் நண்பர்கள் வழியாக அறிந்து வேதனையடைந்தேன்.  அவர்கள் விவரித்த செய்திகள் ஒவ்வொன்றும் மனத்தை உறையவைப்பவையாக இருந்தன. மெல்லமெல்ல நம்பிக்கையிழந்த தொழிலாளர்கள் தம் குடும்பத்தைத் தாங்கும்பொருட்டு, கிடைத்த வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டதாகச் சொன்னார்கள். பலர் அக்கம்பக்கமிருந்த ஊர்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகவும் சிலர் அண்டைமாநிலங்களுக்குச் சென்று வேலை தேடிக்கொண்டதாகவும் சொன்னார்கள். ஒரு நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஏராளமான கூட்டம் சேர்ந்திருந்தது. அங்கு கவிந்திருந்த மெளனத்தைப் பார்க்க விசித்திரமாக இருந்தது. பிறகுதான் அந்த வீட்டில் வசித்த கணவன், மனைவி, நான்கு பிள்ளைகள் அனவைரும்  விஷமருந்தி பிணமாகக் கிடப்பதைப் பார்த்தேன். ஒருகணம் என் மனம் உறைந்துவிட்டது.குடும்பத்தோடு இப்படி செய்துகொள்ள என்னடா காரணம்?’  என்று நண்பனிடம் கேட்டேன்.ஆறு மாசமா ஆலை ஓடலை. வறுமை. வருமானத்துக்கு என்னென்னமோ வேல பார்த்தாரு. திடீர்னு என்னாச்சோ தெரியலையே, இப்படி செஞ்சிக்கிட்டாருஎன்றான் அவன். அதற்குப் பிறகு நான் ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
ஒருகாலத்தில் ஆலைத்தெருக்களில் நான் கேட்ட உல்லாசத்தையும், பிறகொருநாள் மரணவீட்டில் கவிந்திருந்த மெளனத்தையும்  ஒரு தாளின் இரண்டு பக்கங்களாக அடிக்கடி நினைத்துக்கொள்வேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆலைகள் திறக்கப்பட்ட செய்தி கிடைத்தது. அந்த ஆண்டு விடுப்பில் ஊருக்குப் போயிருந்தபோது, இயங்கத் தொடங்கிய ஆலைகளைப் பார்ப்பதற்காக ஆவலோடு சென்றிருந்தேன். ஆனால், என் நெஞ்சில் சேமித்துவைத்திருந்த பழைய சித்திரத்தை அங்கே என்னால் பார்க்கமுடியவில்லை. அன்று அங்கே நான் கண்ட காட்சிகளில் உற்சாகமே இல்லை. அக்கணத்தில், இனி ஒருபோதும் என்னால் அந்தப் பழைய சித்திரத்தைப் பார்க்கவே முடியாது என்று தெரிந்துவிட்டது.
நான் வேலை செய்த முகாமுக்கு அருகில் துங்கபத்ரா ஸ்டீல் ப்ளேண்ட் என்னும் தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருந்தது. அணைக்கட்டுகளுக்குத் தேவையான இரும்புக்கதவுகள் அங்கே வடிவமைக்கப்பட்டுவந்தன. துங்கபத்திரை அணைக்கட்டிலிருந்து பிரிந்து வரும் ஒரு கால்வாயின் கரையில் அந்தத் தொழிற்சாலை இருந்தது. என் முகாமிலிருந்து அந்தத் தொழிற்சாலை வரைக்கும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நடப்பது என் பழக்கம். துங்கபத்திரையைக் கடந்துவரும் காலைக்காற்று உடலைத் தழுவியோட, கரைக்கு இருபுறங்களிலும் உயர்ந்திருக்கும் தைலமரங்களுக்கு நடுவில் நீண்டு செல்லும் ஒற்றையடிப்பாதையில் எதைஎதையோ யோசித்தபடி நடப்பேன்.  உற்சாகமான அந்தக் காலைநடை ஓர் இனிய அனுபவம்.
ஒருநாள் காலைநடையின்போது, அந்தத் தொழிற்சாலை வாசலில் தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடியிருப்பதைப் பார்த்தேன். ஆலைக்கதவு சாத்தப்பட்டிருக்க அவர்கள் வெளியே நின்றிருந்தார்கள். ஒரே சத்தம். இருபுறங்களிலும் போக்குவரத்து நின்றுவிட்டது. ஒலிப்பான்கள் மாறிமாறி சத்தமிட்டபடி இருந்தன. யாரோ ஒருவர், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, வாகனங்களுக்கு வழியமைத்துக்கொடுத்தார். கூட்டத்தைப் பிளந்துகொண்டு அவை மெதுவாகக் கடந்துசென்றன. என்ன காரணம் என்று தெரிந்துகொள்வதற்காக ஆலைக்கு அருகில் இருந்த தேநீர்க்கடையை நெருங்கினேன். வேலை நிறுத்தம் என்று சொன்னார்கள். புதிய ஆணைகள் கிடைக்காததால் உற்பத்தி குறைந்துவிட்டதைக் காரணமாகக் காட்டி, தொழிலாளர்களின் எண்ணிக்கையை நிர்வாகம் குறைக்க நினைக்கிறது என்றும் நிர்வாகத்துக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்றும் கடைக்காரர் சொன்னார். கடைசியில் பெருமூச்சோடுஆலையை மூடிட்டான்னா, நாமளும் கடைய மூடிட்டு வேற எடம் பார்க்கவேண்டிதுதான்’  என்று ஒரு வாக்கியத்தையும் சேர்த்துக்கொண்டார். அந்தச் சொற்கள் எனக்குள் ஆழமாகத் தைத்துவிட்டன. முகாமுக்குத் திரும்பும்போது, மீண்டும்மீண்டும் அச்சொற்கள் ஒலித்தபடியே இருந்தன. ஒருகணம் புதுச்சேரியில் நான் கண்ட ஆலைகளின் காட்சி நெஞ்சில் மின்னி மறைந்தது. களங்கள்மட்டுமே மாற, வரலாறு மீண்டும்மீண்டும் தன்னை நிகழ்த்திக் காட்டியபடியே இருக்கிறதோ என்று தோன்றியபோது, என் மனம் கசப்பில் அமிழ்ந்தது. அப்போதுதான் அந்த வேதனையின் வரலாற்றை நாவலாக எழுதும் முடிவையெடுத்தேன். ஏற்கனவே ஒரு நாவலை எழுதிமுடித்திருந்த அனுபவம் எனக்குத் துணையாக இருந்தது. தினந்தினமும் சில பக்கங்களை எழுதிக்கொண்டே இருந்தேன். ஒரு நிறுவனத்தை நம்பி வாழ்க்கையை இழந்து சிதறிய தொழிலாளர்களின் சித்திரங்களை ஒவ்வொன்றாக தீட்டியெடுத்து இந்த நாவலை முடித்தேன்.

  எழுத்தாளர் அகிலன் மறைவையொட்டி, எண்பதுகளின் இறுதியில் அவர் நினைவாக ஒரு நாவல் போட்டியை அவருடைய மகன் கண்ணன் அறிவித்திருந்தார்.  இந்தக் கையெழுத்துப் பிரதியை அந்தப் போட்டிக்கு அனுப்பிவைத்தேன். முடிவில் வேறொரு நாவல் பிரதிக்கு விருது கிடைத்தது. ஆனால், தனிப்பட்ட வகையில் கண்ணனுக்கு இந்த நாவல் பிடித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரே இந்தக் கையெழுத்துப் பிரதிக்கு புத்தக உருவம் கிடைக்க வழிசெய்தார். இருபத்திநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவல் மீண்டும் வெளிவரும் இவ்வேளையில் நண்பர் கண்ணனை நன்றியுடம் நினைத்துக்கொள்கிறேன். அன்று, இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தரும்படி ஞானியை அணுகியபோது, காரணங்கள் சொல்லி என்னைத் தட்டிக் கழிக்காமல் மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. கையெழுத்துப் பிரதியை அனுப்பிவைத்ததும் இரண்டு வார காலத்துக்குள்ளேயே படித்துவிட்டு, பொருத்தமான முன்னுரையையும் அனுப்பிவைத்துவிட்டார். அந்த முன்னுரை எனக்குக் கிடைத்த ஒரு நற்சான்றிதழ் என்றே சொல்லவேண்டும். எழுத்துத்துறையில் நான் தொடர்ந்து இயங்குவதற்கான நம்பிக்கையை அந்த முன்னுரை எனக்குக் கொடுத்தது. இவ்வரிகளை நான் எழுதும் இக்கணத்தில் அவர் முகம் என் நெஞ்சில் அன்புடன் ஒளிர்வதை உணர்கிறேன். அவரை வணக்கத்துடன் நினைத்துக்கொள்கிறேன். என் துணைவியின் அன்பும் ஆதரவும் என்னை இயக்கிவரும் ஆற்றலின் ஊற்றுக்கண்கள். அவரையும் இத்தருணத்தில் அன்புடன் நினைத்துக்கொள்கிறேன்.
புதுவையின் எல்.ஐ.சி. ஊழியராக பணிபுரிந்த ஞானம் என்கிற ஞானப்பிரகாசம் மிகச்சிறந்த வாசகர். உற்சாகமான உரையாடல்காரர். புதுவை ஞானம் என்கிற பெயரில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியவர். நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் கையெழுத்துப் பிரதிகளை பொறுமையாகப் படித்து, தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டவர். சென்னையில் நிகழ்ந்த ஓர் இலக்கியச்சந்திப்பில் தற்செயலாக எனக்கு அறிமுகமானவர் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் செ.யோகநாதன்.  என் எழுத்துகளை இடைவிடாது படித்து ஊக்கப்படுத்தியவர். அவரும் நல்ல உரையாடல்காரர். இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இவ்விருவரிடமும் அதைப்பற்றி நீண்ட நேரம் விவாதித்ததுண்டு. நாவலின் பிரதியை எழுதிமுடித்ததும் இருவருக்கும் படிப்பதற்காகக் கொடுத்திருந்தேன். நன்றாக வந்திருக்கிறது என இவ்விருவரும் கருத்துரைத்த அக்கணங்கள் என் வாழ்வில் மிகமுக்கியமானவை. இன்று யோகநாதன் மறைந்துவிட்டாலும், அவரைப் பற்றிய நினைவுகள் எனக்குள் இன்னும் உயிர்த்திருக்கின்றன. புதுவை ஞானப்பிரகாசத்துக்கும் இலங்கை யோகநாதனுக்கும் இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் நல்லமுறையில் இந்த நாவலை வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி.
மிக்க அன்புடன்
பாவண்ணன்.