Home

Wednesday 7 January 2015

அர்ஷியாவின் புதிய நாவல் ‘அப்பாஸ்பாய் தோப்பு’



நாடோடிகளாகத் திரிந்தவர்கள் கூடி வாழத் தொடங்கியபோதே சமூகம் உருவாகிவிட்டது. சில சமூகங்கள் உருவான இடத்திலேயே நிலைத்து நீடித்து வேர்விட்டு தழைத்துப் பெருகும் வாய்ப்பைப் பெற்றன. வேறு சில சமூகங்களோ நிலைத்துநிற்க வழியின்றி இடம்பெயர்ந்துகொண்டே இருந்தன. போர்களால் எழுந்த அச்சம் ஒரு காரணம். எதிரிகளால் எழுந்த அச்சம் ஒரு காரணம். வாழ்வதற்குத் தேவையான வழிகளைத் தேடி அலையும் நெருக்கடியும் ஒரு காரணம். பஞ்சம் ஒரு காரணம். ஒவ்வாத இயற்கைச்சூழல்கள் ஒரு காரணம். அரசுகள் உருவாகி, மக்கள் தேவைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அணைகள், மதகுகள், சாலைகள் என புதுப்புது கட்டமைப்புகளை எழுப்ப முனையும்போதும் இடப்பெயர்வுகள் தவிர்க்கமுடியாதவையாக மாறின.  இடப்பெயர்வுக்கு இப்படி பல காரணங்களை அடுக்கிச் சொல்லலாம். வரலாற்றுப்பாதையில் இடப்பெயர்வு என்பது ஒரு சின்னஞ்சிறிய நிகழ்ச்சி. ஆனால், மானுட வாழ்க்கையிலோ, அது துயர்நிறைந்த வேதனை.
மதுரையில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு வெள்ளம் வந்தது. அப்போது நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தபிறகு, அரசு ஒரு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஆற்றின் கரையை உயர்த்துவதும், தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியும் மறைந்துபோயிருந்த ஆற்றின் வடிகால்பகுதிகளைச் சீர்ப்படுத்துவதுமாக அந்த நடவடிக்கைகள் அமைந்தன. அதையொட்டி கரையை ஒட்டியிருந்த அப்பாஸ்பாய் தோப்பின் சில பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலப்பரப்பில் நீண்ட காலமாக சேர்ந்திருந்த சமூகம், வாழிடம் தேடி நாலாபக்கமும் கலைந்து சிதறும்படி நேர்ந்தது. ஒரு காலத்தில் அப்பாஸ்பாய் தம்மிடம் வேலை பார்க்கவந்த தொழிலாளர் குடும்பங்கள் வசிப்பதற்காகவே உருவாக்கிய இடம் அது. அதனாலேயே அது அப்பாஸ்பாய் தோப்பு என்று பெயர் பெற்றிருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்து தொழிலாளர்களும் அங்கே சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். நாலைந்து தலைமுறை கடப்பதற்குள், அந்த வரலாறே இல்லாமல் போய்விட்டது. வரலாறே வரலாற்றை அழித்துவிடும் ஆச்சரியம் நிகழ்கிறது. ஆனால், கலை ஒரு வரலாற்றை ஒருபோதும் அழிக்கவிடுவதில்லை. அதை இலக்கியமாக்கி காலத்தில் உயிர்த்திருக்கவைக்கிறது. கண்ணகியின் சீற்றத்தையும் மதுரையின் அழிவையும் உள்ளடக்கிய வரலாற்றை கலையாக்கிய இளங்கோவின் பரம்பரையில் வந்த எழுத்தாளர்கள் அத்தகு வரலாற்றை மீண்டும்மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ, கையகப்படுத்தப்பட்ட அப்பாஸ்பாய் தோப்பின் வரலாறு எஸ்.அர்ஷியாவின் எழுத்துமுயற்சியால்  கலையாக மலர்ந்திருக்கிறது.

 
அப்பாஸ்பாய் தோப்பில் வாழ்ந்து வெளியே வந்தவர் அர்ஷியா.  அதை அவரே தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். மனம் முழுக்க அந்தத் தோப்பையே அவர் சுமந்துகொண்டிருக்கிறார். தனிப்பட்ட குணங்களைப் பொருட்படுத்தாதவராக, அந்தத் தோப்பில் வாழ்ந்த மனிதர்களை நேசிப்பவராக இருக்கிறார். தோப்பு மனிதர்களும் அவர்களுடைய கதைகளும் அவருடைய நெஞ்சில் நிறைந்திருப்பதை உணரமுடிகிறது. உலுக்கினால் உதிரக்கூடிய பழங்களைப்போல, அப்பாஸ்பாய் தோப்பு மனிதர்களைப்பற்றிய கதைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டபடி இருக்கின்றன. கி.ராஜநாராயணனுக்கு ஒரு கோபல்லபுரம்போல, எஸ்.அர்ஷியாவுக்கு இந்த அப்பாஸ்பாய் தோப்பு.
சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த உசேன் நெக்லஸ்காரம்மா வீட்டை அண்டி வளர்ந்து, படித்து பட்டம் பெற்று,  எவ்விதமான தீய பழக்கத்துக்கும் இடம்கொடுக்காமல் பத்திரிகைகளில் கட்டுரை எழுதி, எல்லோரும் ஏக்கமுடன் பார்க்கிற அளவுக்கு நல்ல இளைஞனாக உயர்கிறான். வெகுகாலமாக திருமணமே வேண்டாம் என ஒதுங்கியிருந்தவன் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிற நாள்முதல், திருமணம் நடைபெறும்வரையிலான கால அளவுதான் நாவலின் காலமும் களமாகவும் உள்ளது. ஆனால், திருமணம் என்பது நாவலைப் பொறுத்தவரையில் ஒரு சின்ன நிமித்தம் மட்டுமே. தோப்பையும் தோப்பின் மனிதர்களையும் அது சிதறுவதையும் முன்வைக்கவே அவர் மனம் விரும்பியிருக்கிறது என்பதை நாவலை வாசித்துமுடித்ததும் புரிந்துகொள்ளமுடிகிறது.
பலவிதமான மனிதர்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் அர்ஷியா. ரோசாப்பூ பாய் என்கிற யூசுப் அபூர்வமான ஒரு மனிதர். ஆறு சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர் அவர். அவர்களுடைய பாசத்தில் மூழ்கி வளர்ந்தவர். அவரைத் திருமணம் செய்துகொண்ட பெண், ஆண்மையற்றவர் என்று குற்றம் சுமத்திவிட்டு ஒரே நாளில் அவரை விட்டு வெளியேறிவிடுகிறார். பால்யகாலத்தில் பெண்துணைகளுக்கு இடையில் வாழ்ந்தவரை, பருவத்தில் துணையற்றவராக ஆக்கிவிடுகிறது காலம். பற்றற்ற மனிதராக தோப்பில் வலம்வருகிறார். ஒருநாள் கடன்சுமையில் இருந்து மீளமுடியாத பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்ள, ஆதரவு இல்லாத பெண் தங்களுக்கு வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் விலகிவிட, தன்னந்தனியாக ஆதரவின்றி அனாதையாக நின்ற ஓர் இந்து இளம்பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் அவர்.இனி இவள் என் பெண்என்று கருணையோடு சொல்லி ஏற்றுக்கொள்ளும் ஆண்மை, அந்தத் தோப்பில் அவருக்குமட்டுமே இருக்கிறது. அப்படியென்றால் ஆண்மை என்பது என்ன என்றொரு கேள்வி நம் முன் வந்து நிற்கிறது.
அசன் முகம்மது ஒரு பெண்பித்தன். வார்த்தையாலேயே பெண்களை ஏமாற்றி மயக்கி இன்பம் நுகர்பவன். ஒடுக்கி ஒரு சலவைத் தொழிலாளி, அவனுடைய வார்த்தைகளுக்கு வளைந்துகொடுக்காத மன உரம் உள்ள பெண். ஆற்றங்கரையோரம் அதிகாலையில் வெள்ளாவி வைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருட்டுச்சுகத்துக்காக திட்டமிட்டு நெருங்கி வந்த அவனை எதிர்த்து நின்று கீழே தள்ளி, துணிச்சலாக கொள்ளிக்கட்டையால் அவன் முகத்தைத் தீய்த்துவிடுகிறாள். பெண்மையின் கோபம் தன் கற்பனைக்கு அப்பாற்பட்டது என முதன்முதலாகப் புரிந்துகொள்கிறான் அவன்
அப்சர் பதின்ம வயதில் இருக்கும் இளைஞன். மனபாரத்தை மதுவில் கரைக்க முயற்சி செய்பவன். மன ஆழத்தில் படிந்திருக்கும் கோபத்தை, போதையில் ஊதிஊதி பெருங்கனலாக மாற்றி, அதில் தன்னையே சாம்பலாக்கிக்கொள்ள நினைப்பவன். மூடப்பட்டுவிட்ட தந்தைவீட்டுக் கதவின்முன் நீதிக்காகவும் ஒரு அடையாளத்துக்காகவும் அவன் எழுப்பும் குரலுக்கு பதிலே இல்லை. அவனுக்கு ஆறுதல்சொல்லவும் யாரும் இல்லை. மெளனமாக தன்னை வேடிக்கை பார்ப்பவர்களைப் பார்த்துநீங்கள்ளாம் நிக்காஹ் பண்ணவளுக்கு பொறந்தவய்ங்க. ஆயிரந்தான் இருந்தாலும் எங்காத்தா படுத்து ஏந்திருச்சவதானெஎன்று புலம்புகிறான். தன்னைக் கடந்து செல்லும் குழந்தைகளைப் பார்த்துஒங்கள பெத்தவங்க நல்லவங்க. புள்ளைங்களோட அருமை தெரிஞ்சவங்க. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்கறாங்க. என்னப் பெத்தவ என்ன தெருவுல வுட்டுடுட் போயிட்டாஎன்று அரற்றுகிறான். அவனுக்கு தேவையானது அவன் பிறப்புக்கான ஓர் அங்கீகாரம். ஆனால் அது அவனுக்கு தோப்பில் கிடைக்கவே இல்லை.
உருது முஸ்லிமான அபுனு, தமிழ் முஸ்லிமான பாத்திமாவைக் காதலித்து, தன் தாயிடமிருந்து பிரிந்து சென்று திருமணம் செய்துகொள்கிறான். மனைவியை அன்போடு பார்த்துக்கொள்கிறான். ஆனால், அவன் அன்பின் ஈரமும் உயரமும் அவளுக்குப் புரியவில்லை. திருடனான தன் சகோதரனைத் தேடி வந்த காவலர்கள், வீட்டிலிருந்த அவனைப் பிடித்துக்கொண்டுபோய் உதைத்து, துன்புறுத்தி, பழி சுமத்தி, அவமானப்படுத்தி அனுப்பிவைக்கிறார்கள். காவலர்களுக்கு பணம்கொடுக்க வாங்கிய கடனை அடைக்க அவன் கடையை விற்க நேரிடுகிறது. முதலாளியாக இருந்தவன் தொழிலாளியாக மாறுகிறான். சைக்கிளில் பொருள் சுமந்து சென்று தெருத்தெருவாக கூவி விற்கிற விற்பனையாளனாகிறான். அப்படியும் அவனால் கடனை அடைக்கமுடியவில்லை. அவன் துயரம் எதையுமே அவன் மனைவி ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பதுதான் அவனுக்கு மாபெரும் துயரமாக இருக்கிறது. யாரும் காணாத ஓர் அதிகாலை நேரத்தில் மனம் நொந்து ஆற்றில் மூழ்கி உயிர்துறந்துவிடுகிறான்.  
தோப்பில் எல்லோருக்கும் தேவைப்படுபவன் அழுக்குமூட்டை ராமையா. தன்னையும் ஒரு மனிதனாக மதித்து உசேன் வழங்கும் திருமண அழைப்பிதழை விரல்களால் தடவித்தடவிப் பார்த்து கண்ணீர் மல்குகிறான் அவன்.உன் பேர் இதுல எங்க எழுதியிருக்கு?’ என்று சுட்டிக் காட்டும்படி சொல்லி, அதைத் தொட்டுப் பார்த்து உணர்ச்சிவசப்படுகிறான். தோப்பில் பல திருமணங்களுக்கு அவன் சென்றதுண்டு. அவை அனைத்தும் யாரும் அழைக்காமலே சென்றவை. தனக்கு முதன்முதலாக அழைப்பிதழ் கொடுத்த அன்பை அவனால் தாங்கவே முடியவில்லை. தோப்பு கையகப்படுத்தப்பட்டதும் தொழில் செய்யவும் முடியாமல், ஒண்டியிருக்க இடமும் கிடைக்காமல் திருப்பரங்குன்றத்தில் பிச்சையெடுத்து உண்டு மண்டபத்தில் ஒதுங்கி உறங்கும்வகையில் மாறிவிடுகிறது அவன் வாழ்க்கை.  
இருபது வருஷத்துக்கு முன்பு தோழி என்கிற முறையில் ஒரு உதவியாகக் கொடுத்த இருநூறு ரூபாயை, வட்டியுடன் சேர்த்து நாலாயிரத்து அறுநூறு ரூபாயாக நின்றநிலையில் திருப்பிக் கொடுக்கும்படி வற்புறுத்தி, அவமானப்படுத்திப் பேசி, தடுமாறவைத்து, தற்கொலைக்குத் தூண்டும் கனகவல்லியின் தீய மனத்தின் இருட்டு நிலைகுலைய வைக்கும் ஒரு சித்திரம். பூவராகவன் சாமி என்கிற பூசா பொதுவுடைமைச் சித்தாந்தம் பேசியபடி தோப்புக்குள் வளையவருபவர். துணையின்றி தனிமையில் வாழ்பவர். எல்லோரையும் நேசிப்பவர். தோப்பு கையகப்படுத்தப்படும் செய்தியின் துயரத்தில் எல்லோரும் மூழ்கியிருக்கும் சமயத்தில்மாற்றம் ஒன்றே வரலாற்றில் மாற்றமில்லாததுஎன தத்துவம் பேசுகிறார். இறுதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிடந்து மரணமெய்திவிடுகிறார்.
தோப்பில் வாழ்ந்த ஒவ்வொருவரும் அரிதானவராகவே காணப்படுகிறார்கள். ஒவ்வொருவரைச் சுற்றியும் அபூர்வமான கதைகள் பின்னிக் கிடக்கின்றன. அதுவே அவர்களுக்கு அடையாளமாக விளங்குகிறது. அந்தப் பட்டியல் மிகவும் நீண்டது. எம்.ஜி.ஆர்.பெத்தாவாக மாறிப் போய்விட்ட சுகுரம்மா, சால்னாபாய், பப்புகலா, கோரிகாலா, முக்தார்பாய், தோது சுப்புணி, கிணறுவெட்டும் வெள்ளைச்சாமி, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி, வைரமணி என்னும் ஙங்ஙே முங்ஙே, தங்கம், குத்புதீன், ஹஜானியா குல்சார்பேகம், பெருமாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் சிலர்.
காடு பலவிதமான மரங்களைக் கொண்ட இடம். பல உயிரினங்களுக்கு அது வாழிடம். அப்பாஸ்பாய் தோப்பு ஒருவகையில் அத்தகு காடு போன்றது. அது பலவிதமான மனிதர்களையும் பல மதங்களைப் பின்பற்றும் மனிதர்களையும் கொண்ட இடமாக இருந்தது. முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு வாழும் இந்து இளைஞனும் அங்கே உண்டு. இந்து பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் முஸ்லிம் இளைஞனும் உண்டு. எவ்விதமான சிறப்புநோக்கமும் இல்லாமல், காதலிக்கத் தகுதியுள்ளவர்கள் என்பதாலேயே அவர்கள் காதலிக்கிறார்கள். தோப்புவாழ்க்கை இத்தகு இயற்கைத்தன்மையை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.
வெளியேற்றப்பட்ட தோப்புமனிதர்கள் வெவ்வேறு திசைகளைநோக்கிச் சென்றுவிடுகிறார்கள். தோப்பு அழிந்து மறைந்துவிட, தோப்பைப்பற்றிய நினைவுகள்மட்டுமே காலத்தில் எஞ்சிநிற்கின்றன.  ஒவ்வொரு நினைவையும் மிகையற்ற வண்ணங்களுடன் தீட்டியிருக்கிறார் அர்ஷியா. அதீத ஒட்டுதலாலும் ஈடுபாட்டாலும் சிதறிவிட வாய்ப்புள்ள கட்டங்களில்கூட, அர்ஷியாவின் எழுத்தில் கலைஒருமை கைகூடி வந்திருக்கிறது.
இந்து தொழிலாளர்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வாழும் இடமாக தோப்பு அமைந்திருந்தாலும், தத்தம் மதத்தின்மீது பிடிப்புள்ளவர்களாகவே ஒவ்வொருவரும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். கோயில் கட்ட எடுக்கப்படும் முயற்சி ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிடுகிறது. தன் பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டான் என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத தந்தை, அந்தப் பையனுக்குத் தொடர்புள்ளவன் என்பதாலேயே ஒருவனை அடிக்கச் செல்கிறான். ஆனால், அவை அனைத்துமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளிப்படும் செயல்களாக உள்ளனவே அன்றி, ஒருவரையொருவர் வெறுத்து ஒதுக்கும் நிலைக்குச் செல்வதில்லை. மதம்பற்றிய உரையாடல்கள் வலிமைபெற்றுவரும் இன்றைய சூழலில், மாறுபட்ட மதத்தினர்கள் இணைந்து வாழ்ந்த ஒரு தோப்பின் சித்திரத்தை எழுதிக் காட்டும் முயற்சி பாராட்டுக்குரியது.