எண்பதுகளின் நடுப்பகுதியில் இரண்டாண்டு காலம் கர்நாடகத்தில் ஷிமோகா என்னும் நகரில் வேலை செய்துவந்தேன். எங்கள் கோட்ட அலுவலகம் ஹூப்ளியில் இருந்தது. அந்த நகரங்களில் தினமும் நாடகங்கள் மட்டுமே நிகழ்த்தப்படும் அரங்குகள் இருந்தன. இரவு ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிந்துவிடும். உள்ளூர் குழுக்களும் வெளியூர் குழுக்களும் மாறிமாறி நாடகங்களை அரங்கேற்றும். கர்நாடகம் முழுதும் ஆண்டுதோறும் வலம்வரும் நீநாசம் குழுவின் நாடகங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும். ஒருமுறை தார்வாட் நகரில் நான் ஹயவதனன் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அந்த நாடகத்தை எழுதியவர் கிரீஷ் கார்னாட்.
ஒரு பெண்ணின் காதல் துயரத்துக்கும் அவள் காதலைப்பற்றியோ விருப்பத்தைப்பற்றியோ சிறிதளவு கூட பொருட்டாகக் கருதாமல் அவளை அடைவதை மட்டுமே இலக்காகவும் சவாலாகவும் நினைக்கும் இரு ஆண்களின் செயல்பாடுகளுக்கும் இடையில் நிகழும் மோதல்களையும் அழிவுகளையும் நாடகம் காட்சிப்படுத்தியிருந்தது. கூர்மையான உரையாடல்கள். வேகமாக நகரும் காட்சிகள். பல நாட்கள் அந்தக் காட்சிகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டபடியே இருந்தேன். தார்வாட் நகரில் இருந்த மனோகர் பதிப்பகம்தான் அந்த நாடகப்பிரதியை வெளியிட்டிருந்தது. அதை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்தேன். அதைத் தொடர்ந்து யயாதி, துக்ளக் நாடகங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு நாடகத்தையும் பார்த்து முடிக்கும்போது கிரீஷ் கார்னாட் மீதான மதிப்பு பெருகிக்கொண்டே இருந்தது.
அவரைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தைத் தூண்டியது தலெதண்ட என்னும் நாடகம். கர்நாடக வரலாற்றின் போக்கையும் சிந்தனைப்போக்கையும் அசைத்த ஒரு முக்கியமான ஆளுமை பசவண்ணர். பக்தியின் வழியாக சமூக மாற்றத்தையும் சாதி இழிவுகளைக் களையும் முயற்சிகளையும் மேற்கொண்டவர். நாட்டின் அரசியல் சூழல் அவருக்குச் சாதமாக இல்லாத நிலையில் அவர் அடையும் வேதனையையும் தோல்வியையும் களமாக அமைத்து கிரீஷ் கார்னாட் அந்த நாடகத்தை எழுதியிருந்தார்.
சாதிகளைக் கடந்து சமூக முன்னேற்றத்தை விழையும் பசவண்ணர் ஒரு முக்கியமான புள்ளி. சூத்திரன் என்றபோதும் தன் வீரத்தாலும் வலிமையாலும் பல போட்டிகளுக்கிடையில் அரசனாகி தன்னை சத்திரியனாக உயர்த்திக்கொள்ளும் பிஜ்ஜளன் மற்றொரு முக்கியமான புள்ளி. அரசு எந்திரத்தின் அடையாளம் அவன். அரசு அதிகாரத்தின் மீதுள்ள ஆசையினால் எடுப்பார் கைப்பிள்ளையாகி தந்திரத்தால் தன் தந்தையாகிய அரசனையே சிறையில் அடைத்து ஆட்சியில் அமர்கிற சோவிதேவன் மூன்றாவது புள்ளி. சாதிச்சார்பின் அடையாளம் அவன். மூன்று புள்ளிகளிடையில் நிகழும் மோதல்களையும் முரண்களையும் காட்சிப்படுத்துகிறது நாடகம். சாதிவாட்கள் எண்ணற்றோரின் உயிரைக் குடிக்க, நாடே பலிபீடமாக்க் காட்சியளிக்கிறது. இறுதியில் பிஜ்ஜளனும் பசவண்ணனும் இறந்துவிட, சோவிதேவன் வெற்றி முழக்கத்தோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.
தலெதண்ட நாடகம் எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. பல முறை அந்த நாடகத்தைப் பார்த்தேன். என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நாடகத்தைப்பற்றி மணிக்கணக்கில் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் வழக்கம்போல திருமதி. சரஸ்வதி ராம்னாத் அவர்களிடமும் அதைச் சொன்னபோது அந்த நாடகத்தை மொழிபெயர்க்கும்படி சொன்னார். அந்தத் தூண்டுதல் என வாழ்வில் ஒரு முக்கியமான தருணம்.
அந்த வாரத்திலேயே நானும் என் நண்பர் ஜி.கே.ராமசாமியும் அவரைச் சந்திக்கச் சென்றோம். நாடக உரையாடல்கள் அனைத்தும் தார்வாட் பேச்சுமொழியில் இருப்பதால் மொழிபெயர்ப்பதில் சில சிரமங்கள் இருக்கக்கூடும் என அவர் நினைத்தார். தார்வாடிலேயே பணிபுரிந்த அனுபவத்தில் தார்வாட் மொழியிலேயே அவரிடம் நான் உரையாடிதைத் தொடர்ந்து அந்த எண்ணத்தை அப்போதே அவர் உதறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் புன்னகை படர்ந்த முகத்துடன் மொழிபெயர்ப்பதற்கு உரிய அனுமதியை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை நான் பலிபீடம் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். நண்பர் வெளி ரங்கராஜன் அதை
உடனடியாக ஒரு புத்தகமாகக் கொண்டுவந்தார்.
அதைத் தொடர்ந்து நாகமண்டலம், அக்னியும் மழையும், யயாதி, ஹயவதனன், துக்ளக், சிதைந்த பிம்பம், அஞ்சும் மல்லிகை, திருமண ஆல்பம், அனலில் வேகும் நகரம் என அவருடைய ஒன்பது நாடகங்களை மொழிபெயர்த்தேன். ஒவ்வொரு சந்திப்பிலும் உதடுகளில் தவழும் புன்னகையோடு கையைப்பற்றி இழுத்து என் தோளில் தன் அகலமான கையை வைத்து அழுத்தி அன்பைத் தெரிவிக்கும் விதம் மறக்கமுடியாத அனுபவம்.
நாடகத்துக்கான களத்தை மூன்று புள்ளிகளாக வகுத்து அவற்றுக்கிடையிலான மோதலாக வடிவமைத்துக்கொள்வது என்பது கிரீஷ் கார்னாடின் நாடக ஆக்கத்தில் உள்ள சிறப்பம்சமாகும். அவருடைய பல நாடகங்களை மீண்டும் மீண்டும் பார்த்து அசைபோட்டதின் வழியாக அதை நான் கண்டறிந்தேன். அது அவருடைய மிகப்பெரிய வலிமை. இந்த வலிமையின் உச்சத்தில் ஏறி அவர் இந்திய அளவில் மிகச்சிறந்த நாடக ஆசிரியராக விளங்கினார்.
“யாராவது இந்த நாடகங்களை மேடையில் நடிக்கிறார்களா? ஏன் இந்த முயற்சியை எடுக்கிறீர்கள்?” என ஒருமுறை கேட்டார்.
அவர் புன்னகையில் சிறிதளவு வருத்தமும் இருந்தது. ”இன்று இல்லை என்பது உண்மைதான். எதிர்காலத்துக்குத் தேவைப்படலாம் அல்லவா” என்று நான் மெதுவாகப் பதில் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பும் பயணத்தில் அந்தக் கேள்வியையே யோசித்தபடி இருந்தேன். இறுதியில் ஒரு விடையை என் மனம் தொட்டது. புராணங்களையும் நாட்டார் கதைகளையும் சற்றே தாழ்வாகக் கருதி விலக்கிவைக்கும் தமிழ்ச்சூழலில் இன்று இப்பிரதிகளுக்குரிய முக்கியத்துவம் கிட்டவில்லை. ஆனால் எப்போதும் சூழல் ஒரே மாதிரி இருக்குமா என்ன? ஒருநாள் நிலைமை மாறும். அப்போது அனைவருக்கும் கிரீஷ் கார்னாடின் நாடகங்கள் தேவைப்படும். அப்போது புராணப்பின்னணியில் பொதிந்திருக்கும் சமகாலத்தன்மையைப் பிரித்தறிந்து பார்க்கும் ஆர்வமும் வசப்படும்.
(தேசிய அளவில் அனைவராலும் அறியப்பட்ட நாடக ஆளுமையாக கிரீஷ் கார்னாட் 10.06.2019 அன்று இயற்கையெய்தினார். இந்த அஞ்சலிக்கட்டுரை 13.06.2019 அன்று ’இந்து தமிழ்’ நாளிதழில் வெளிவந்தது )