Home

Thursday, 20 June 2019

கதவு திறந்தே இருக்கிறது - மகிழ்ச்சியின் ஊற்று



லியோ தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, மக்சீம் கார்க்கி போன்றோர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ரஷ்ய மொழியில் எழுதிய மற்றொரு முக்கிய எழுத்தாளர் விளாதிமிர் கொரலேன்கோ. அவர் 15-07-1853 அன்று உக்ரேனியாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ஜித்தோமிர் என்ற சிறு நகரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் வழக்கறிஞர். ஆனால் கொரலேன்கோ தன் சிறுவயதிலேயே அவரை இழந்துவிட்டார். ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்திச் செல்ல கொரலேன்கோவின் தாயார் மிகவும் சிரமப்பட்டார். பசியும் பட்டினியுமாக நாட்கள் கழிந்தன. அச்சூழலில் கொரலேன்கோவால் தன் கல்வியைச் சரியாகத் தொடரமுடியவில்லை. இருபது வயதிலேயே கல்லூரியிலிருந்து விலகிவிட்டார். கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்துக்குத் துணையாக இருந்தார்.

கொரலேன்கோ தொடக்கத்தில் ஒரு பத்திரிகையில் பிழை திருத்துபவராக சிறிது காலம் வேலை செய்தார். அந்தப் பத்திரிகை சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகர இளைஞர்களைப்பற்றிய செய்தியை வெளியிட்டது என்னும் காரணத்துக்காக காவல்துறையின் தொல்லைக்கு ஆளானது. கொரலேன்கோ நாடுகடத்தப்பட்டார். 1881 ஆம் ஆண்டில் புதிய ஜார் சக்கரவர்த்திக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய மறுத்ததற்காக மீண்டுமொரு முறை ஏதோ ஒரு கிராமத்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே அவர் ஐந்து ஆண்டுகளைக் கழிக்கநேர்ந்தது. அப்போது விவசாயிகளோடு நெருங்கிப் பழகி விவசாயம் பற்றிய நுட்பங்களை நன்கு அறிந்துகொண்டார். அப்போதே அவர் எழுதத் தொடங்கிவிட்டார்.
அவருடைய சிறுகதைகளும் கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளியாகி அவருக்கு கவனிக்கத்தக்க எழுத்தாளர் என்னும் பெயரை ஈட்டித் தந்தன. ருஷ்யாவுக்குத் திரும்பியதும் ருஷ்ய வேடமோஸ்திஎன்னும் பத்திரிகை அவருக்கு தொடர்கதை எழுதும் வாய்ப்பை அளித்தது. கொரலென்கோ தன் ஆழ்மனத்தில் பல ஆண்டுகளாக அசைபோட்டுக்கொண்டிருந்த கண்தெரியாத ஓர் இளைஞனை மையப்பாத்திரமாக்கி ஒரு நாவலை எழுதத் தொடங்கினார். அந்த நாவலின் பெயர்கண் தெரியாத இசைஞன்’. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரா.கிருஷ்ணையா.
ஓர் இரவுப்பொழுதில் ஒரு பணக்காரக்குடும்பத்தில் பொப்பேல்ஸ்காயா என்னும் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதன் அழுகுரலோடு தொடங்குகிறது நாவல். குழந்தையின் அழுகையைக் கேட்டு அதன் தாய் சற்றே அச்சம் கொள்கிறார். பிறந்த குழந்தை அழுவது இயற்கை என்று சொல்லி தாயை அமைதிப்படுத்துகிறாள் மருத்துவச்சி. சில வாரங்கள் கழிகின்றன. குழந்தையின் கண்கள் தெளிவு பெறுகின்றன. கண்ணின் பாவைகளுடைய அசைவுகள் விசித்திரமாகத் தோற்றமளிக்கின்றன.
குழந்தை உறங்கும் அறைக்கு அருகிலேயே பெரிய தோட்டம் இருக்கிறது. தோட்டத்துக்கு வந்துபோகும் ஏராளமான பறவைகளின் இரைச்சல் எப்போதும் கேட்டபடியே இருக்கும் சூழல். அறையின் ஜன்னல் வழியாக ஒளிக்கற்றைகள் உட்புகுந்து நடனமிடுகின்றன. ஆனால் அக்காட்சிகளைக் காணும் பொருட்டு அவன் விழிகள் அசையவில்லை என்பதை ஒருநாள் பொப்பேல்ஸ்காயா கண்டறிகிறாள். அந்த அசைவின்மை அவளைக் கலவரப்படுத்துகிறது. உடனே மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறாள். பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு, பிறவியிலேயே குழந்தை பார்வைத்திறனின்றி பிறந்திருப்பதாக மருத்துவர் சொல்லிவிடுகிறார். முதலில் திகைத்து உறைந்தாலும் மெல்ல மெல்ல அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்து சேர்கிறாள் பொப்பேல்ஸ்காயா. அவளும் அக்குடும்பத்திலேயே தங்கியிருந்த மக்சீம் என்னும் அவளுடைய சகோதரனும் சேர்ந்து அக்குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தைக்கு பியோத்தர் என்று பெயர் சூட்டப்படுகிறது. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமெங்கும் நடக்கவைத்து செவிப்புலன் வழியாக ஒவ்வொன்றின் இருப்பையும் அறியும் ஆற்றலை அவன் பெறும் வகையில் பொப்பேல்ஸ்காயா சொல்லித் தருகிறாள். அதன் விளைவாக ஒலியின் வழியாக ஒளியை அறியும் ஆற்றலை அவன் அடையமுடியும் என அவள் நம்புகிறாள். அந்த முயற்சி பலனளித்தாலும் பல நேரங்களில் அவன் புதிய ஒலிகளைக் கேட்கும்போது மிரள்வதும் பழைய ஒலி ஒலிக்காத சமயத்தில் அச்சம் கொள்வதுமாக அவன் தடுமாறிக்கொண்டே இருக்கிறான். பொப்பேல்ஸ்காயா தொடர்ந்து அவனோடு உரையாடி அத்தடுமாற்றத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்டுகிறாள். அவன் மாமா அவனை அருகில் உள்ள குன்றுகளுக்கும் வயல்வெளிகளுக்கும் கால்வாய்களுக்கும் நடக்க வைத்து அழைத்துச் செல்கிறார்.. புதிய ஓசைகளை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஒருநாள் அந்திவேளையில் எங்கிருந்தோ வரும் இசையைக் கேட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான் பியோத்தர். ஆனால் அது என்ன இசை என்பதை அவனால் உணரமுடியவில்லை. அவன் அந்த இசையைப்பற்றி தன் தாயிடம் சொல்கிறான். முதலில் அவளாலும் எதையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் ஒன்றிரண்டு நாள் முயற்சிக்குப் பிறகு அந்த இசையின் பின்னணியைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அருகிலிருந்த கிராமத்தில் குதிரை லாயத்திலிருந்து இயோஹிம் என்பவன் இசைத்த புல்லாங்குழலின் இசை அது. அந்த இசையைக் கேட்டதும், அவளும் அவ்விசையில் மயங்கிவிடுகிறாள்.
ஒருநாள் வழக்கம்போல இயோஹிம் குழலிசைத்தபடி இருந்த நேரத்தில் தன் முகத்தைத் தொட்டு, கைகளைத் தொட்டு, புல்லாங்குழலைத் தொட்டு வருடியபடி அருகில் வந்து நின்ற கண் தெரியாத சிறுவனைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைகிறான். அதே நேரத்தில் மகனைக் காணாமல் தேடிக்கொண்டு வந்த தாய் அந்த லாயத்தை வந்தடைகிறாள். இயோஹிம் தன்னை மறந்து கண்களை மூடி இசைப்பதையும், அவன் அருகிலேயே அமர்ந்து அந்த இசையில் சிறுவன் ஆழ்ந்திருப்பதையும் அவள் பார்க்கிறாள். பிறகுதான் அவள் மனம் அமைதியடைகிறது.
அன்றுமுதல் ஒவ்வொரு மாலை நேரத்தையும் அவன் இயோஹிமுடன் கழிக்கிறான். புல்லாங்குழலை இசைக்கவும் அவனிடமிருந்து கற்றுக்கொள்கிறான். அது அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடக்கத்தில் பொப்பேல்ஸ்காயா அதைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றபோதும் மெல்லமெல்ல அவள் மனத்தில் ஒருவித கசப்புணர்ச்சி படியத் தொடங்குகிறது. ஒருநாளின் பெரும்பகுதி நேரத்தை அவன் அந்த லாயத்திலேயே கழிப்பதை அவள் விரும்பவில்லை.
மகனின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப்பற்றி யோசிக்கத் தொடங்குகிறாள் பொப்பேல்ஸ்காயா.  இறுதியில் இசையின் வழியாகவே அவன் கவனத்தைத் திசைதிருப்ப முடிவுசெய்து புதிதாக ஒரு பியானோவை வாங்குகிறாள். ஏற்கனவே இளம்பருவத்தில்  அதை வாசிக்கும் பயிற்சியைப் பெற்றவள் என்பதால் பியானோவை மிக இனிமையாக இசைக்கிறாள். இசையார்வம் மிக்க மகனுடைய கவனம் பியானோ இசையின்மீது திரும்புகிறது. புல்லாங்குழலின் இசை எழாத தருணங்களில் எல்லாம் தன் தாயின் பியானோ இசையைக் கேட்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.
அனைத்தையும் மீறி, அவன் ஆழ்மனத்தில் ஒருவித துக்கம் நிறைந்திருக்கிறது. அது இந்த உலகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்னும் துக்கம். இசைக்கு உத்வேகமூட்டும் மூலப்புள்ளி காட்சிகளே, இசைப்பவர்கள் அவற்றைக் காணும் மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் இசையின் வழியே வெளிப்படுத்துகிறார்கள், செவியால் கேட்கும் இசையின் வழியாக தன்னால் அம்மகிழ்ச்சியை முழு அளவில் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பது உண்மை. ஆனாலும், அக்காட்சிகளை நேருக்குநேர் பார்த்து மகிழ்ச்சியுற முடியாதபடி தனக்குப் பார்வையில்லை என்கிற துயரம் அவனை அரித்தபடி இருக்கிறது.
ஒருநாள் பியோத்தர் யாருமில்லாத நேரத்தில் பியானோவுக்கு அருகில் சென்று அதன் கட்டைகளைத் தொட்டுப் பார்க்கிறான். மெல்லிய நாதம் காற்றில் மிதந்து அதிர்கிறது. மெல்ல மெல்ல ஒவ்வொரு கட்டையாக அழுத்துகிறான். படிப்படியாக சுரக்கட்டைகள் மீது அவன் கைகள் தவழத் தொடங்குகின்றன. அவற்றிலிருந்து எழுந்த இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறான். அவன் ஆர்வத்தை அறிந்துகொண்ட அவனுடைய தாய் அவனுக்கு பியானோ இசைக்கக் கற்றுத் தருகிறாள்.
ஐந்து வயது நிரம்பிய பியோத்தர் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும் வாய்ப்பின்மையை ஒரு பெருந்துயரமாக நினைக்கிறான். இதனால் அக்கம்பக்கத்துத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வசிக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும் வரவழைத்து பியோத்தருடன் சேர்ந்து பேசி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாள் பொப்பேல்ஸ்காயா. கிராமச்சிறுவர்கள் பண்ணை வீட்டுக்கு வந்து விளையாடுகிறார்கள். ஆயினும் அவர்களால்  பியோத்தருடன் இயல்பாகப் பழகமுடியவில்லை. அவன் பார்வையின்மை அவர்களிடையே ஒரு தடையாகவே நீடிக்கிறது. ஆயினும் அவனை நடுவில் நிற்கவைத்துவிட்டு தமக்குள் ஆடிக் களிக்கிறார்கள் அவர்கள்.
ஒருநாள் அவன் தன் பண்ணையில் யாருமற்ற நேரத்தில் புல்லாங்குழலை இசைத்து, அந்த இசையில் திளைத்திருக்கிறான். அந்த இசையில் மயங்கி இசைப்பவர் யார் என அறிந்துகொள்வதற்காக அடுத்த பண்ணையிலிருந்து ஒரு சிறுமி வருகிறாள். அவள்பெயர் இவெலீனா. தன்னைப்போலவே ஒரு சிறுவன் இசைக்கும் இசை என அறிந்து மகிழ்ந்து அவனை மிகவும் பாராட்டுகிறாள். அவன் பார்வையில்லாதவன் என்பதை அறிந்து அவள் துயரம் கொள்கிறாள். அதை வெளிப்படுத்தி அவனைத் துயரத்தில் ஆழ்த்திவிடாதபடி மிகவும் பக்குவமாக அவனுடன் பேசுகிறாள். அது சூரியன் மறையும் வேளை. தான் சூரியனையே பார்த்ததில்லை என்று அவன் துயரத்தோடு பேசினாலும், அவனுக்குள்ள மற்ற திறமைகளைப்பற்றிப் பேசி, உரையாடலைத் திசைதிருப்பிவிடுகிறாள் அவள்.
மறுநாளே அவனை அவனுடைய பண்ணைக்கே வந்து சந்திக்கிறாள் இவெலீனா. அவனுடைய அம்மாவையும் மாமாவையும் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுகிறாள். அவளுடைய இசையார்வம் அந்தக் குடும்பத்தோடு நெருங்கி உறவாட ஒரு முக்கியக் காரணம். அவன் இசைக்கும் பியானோ இசையையும் புல்லாங்குழல் இசையையும் மிகவும் விரும்பிக் கேட்கிறாள் அவள்.
ஒருநாள் காலையில் எழுந்ததும் பரபரப்போடு பியோத்தர் தன் அம்மாவை நெருங்கி முதல்நாள் இரவில் தனக்கொரு கனவு வந்ததாகக் குறிப்பிடுகிறான். ”அக்கனவில் உன்னையும் மாமாவையும் பார்த்தேன். இந்த உலகத்தின் காட்சிகளையும் என் கண்களால் பார்த்தேன்என்று பரவசத்தோடு சொல்கிறான். அப்படிச் சொல்லும்போதே அவன் முகம் வாட்டமடைந்து குரல் உடைந்துவிடுகிறது. தனக்கிருக்கும் குறையை உணர்ந்து ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிடுகிறான். பார்வை என்பதே ஓர் உயிரை இந்த உலகில் மகிழ்ச்சியோடு உலவுவதற்குத் தேவையான முக்கியமான அம்சமென்பதையும் அது தன்னிடம் இல்லையென்பதையும் புரிந்துகொண்டு துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறான். அவன் தாய் உரைக்கும் ஆறுதல் சொற்கள் அவனை அடையவே இல்லை.
வரைக்குறியீடுகளை புடைப்புப் புள்ளிகளாகக் கொண்ட புத்தகங்களின் துணையோடு பியோத்தரின் இசைப்பயிற்சி தொடர்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மக்சீம் மாமா செய்கிறார். அவற்றைத் தொட்டு வருடி இசைக்கோவைகளை அறிந்து மனப்பாடம் செய்துகொண்ட பிறகு பியானோவில் அதை இசைத்துப் பார்க்கும் பயிற்சி என்பது அவ்வளவு எளிமையானதல்ல. ஒவ்வொரு வரிவடிவமும் இசைத்துணுக்காக மாறும் முன்னால் விரல்களின் மூலம் மூளைக்குச் சென்று பதிவாகி, பிறகு இசைக்கட்டைகளை அழுத்தும் விரல்நுனிகளுக்குத் திரும்பி வந்தாகவேண்டும். இடைவிடாத பயிற்சிகளின் மூலம் அவற்றை மிகவும் எளிதாகக் கடந்துவருகிறான் பியோத்தர்.  எதிர்பாராத கணமொன்றில் தன் மனத்தை பார்வையின்மையின் துயரம் அழுத்தும்போதெல்லாம், அதிலிருந்து வெளியேற இந்த இசையே அவனுக்கு உற்ற துணையாக விளங்குவதை உணர்ந்து ஆறுதலடைகிறான்.
பியோத்தர் மேலும் வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் வண்டலாகப் படிந்திருக்கும் அவன் மனத்துயரமும் மாற்றமெதுவுமில்லாமல் வளர்ந்து நிற்கிறது. ஒருமுறை அவனுடைய குடும்பம் கிராமத்திலிருக்கும் ஸ்தவ்ருச்சேங்கோ குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று விருந்தினராகச் செல்கிறார்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் இசையைப்பற்றியும் இதர உலகச்செய்திகள் பற்றியும் உரையாடிப் பொழுதைக் கழிக்கிறான் பியோத்தர்.
ஒருநாள் அருகிலிருக்கும் ஒரு மடாலயத்தைப் பார்ப்பதற்காக அனைவரும் ஒன்றாகப் புறப்படுகிறார்கள். வழியில் ஓய்வெடுப்பதற்காக ஒரு தோட்டத்துக்குள் செல்கிறார்கள். அங்கே ஒரு மூலையில் புதர் மண்டிய இடத்தில் ஒரு மேடை தெரிகின்றது. குட்டைப்புற்கள் வளர்ந்து அதை மூடி மறைத்திருக்கிறது. செந்தீ மரங்களிலிருந்து விழுந்து சருகான மலர்களும் இலைகளும் காற்றில் சலசலத்தபடி இருக்கின்றன. அவற்றை ஒதுக்கித் தள்ளி சுத்தம் செய்யும் தருணத்தில்தான் அது ஒரு பழைய வீரனின் கல்லறை என்பதை உணர்கிறார்கள். அந்த வீரரின் பெயர் இக்னாத் காரிய். இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மடாலயம் போலந்துப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒருநாள் அதை கோசாக்குகள் முற்றுகையிட்டனர். அவர்களோடு கூட்டு சேர்ந்த தாத்தாரியர்கள் இறுதிநேரத்தில் மனம் மாறி போலந்து படைகளுடன் சேர்ந்து கோசாக்குகளைத் தாக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இருள் நேரத்தில் மோதல் நிகழ்கிறது. படைத்தலவரான காரிய்  இறந்துவிடுகிறார். அவரோடு சேர்ந்து போராடிய கண்தெரியாத பண்டூராக்காரனும் இறந்துவிடுகிறான். அவனும் காரியின் கல்லறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டிருக்கிறான். கல்லறையைச் சூழ்ந்து நின்றபடி அனைவரும் கடந்துபோன வரலாற்று நினைவுகளைப் பேசிப் பகிர்ந்துகொள்கிறார்கள்.  இறந்துபோன கண் தெரியாதவனும் ஒரு பெரிய பாடகன். சுற்றுவட்டாரத்தில் அவன் பெயரை அறியாதவர்களே இல்லை.
மடாலயத்தைப் பார்ப்பதற்கு வருவோர் அங்குள்ள மாதாகோவிலில் சிறிது நேரம் சுற்றிவிட்டு பிறகு மணிக்கூண்டில் ஏறி மேலே செல்வது வழக்கம். அதன் உச்சியிலிருந்து பார்க்கும்போது சுற்றுப்புற வட்டாரம் முழுதும் தெரியும். சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அங்கே நின்று பார்த்து மகிழ்வார்கள். மடாலயத் துறவியின் ஆணைப்படி விருந்தினராக வந்திருக்கும் அனைவரையும் ஒரு சிறுவன் மாடிக்கு அழைத்துச் செல்கிறான். அவனுடைய நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணரும் பொப்பேல்ஸ்காயா பதற்றத்தோடு வேகமாக அவனை நெருங்கி பக்கத்தில் வந்து நின்று பார்க்கிறாள். அவன் கண் தெரியாத சிறுவன் என்பதை உறுதி செய்துகொள்கிறாள். வெளுத்த முகத்தோற்றம். அசையாத விழிப்பாவைகள். புருவங்களின் ஓயாத அலைவு. அச்சத்தில் நடுங்கும் பூச்சிகளின் உணர்கொம்புகளைப்போல சாதாரண சத்தத்துக்கும் கூட துடிக்கும் இமைகள். அவனுக்கும் பியோத்தருக்கும் இடையில் இப்படி பல ஒற்றுமைகள் இருப்பதை அவள் கண்டு மனம் கலங்குகிறாள்.
விருந்தினர்களைத் தொடர்ந்து மடாலயத்துக்கு வந்திருப்பவர்கள் பலரும் படிக்கட்டுகள் வழியே மேலே ஏறி வருகிறார்கள். அவர்களிடையே மணியடிப்பதற்காக தட்டுத்தடுமாறி வருகிறான் அவன். அவன் பார்வையில்லாதவன். அவனைச் சூழ்ந்து கிண்டல் சொற்களைச் சொன்னபடி பல சிறுவர்களும் வருகிறார்கள். அந்த மணியாட்டியைக் கண்டதுமே பொப்பேல்ஸ்காயாவின் மனம் மேலும் வாட்டமடைகிறது. கிண்டல் சொற்களைத் தாங்கிக்கொள்ள முடியாத மணியாட்டி கோபத்தோடு கதவை ஓங்கி அறைகிறான். கைகளை வீசி வசைச்சொற்களைச் சொல்கிறான். சட்டென வேறு பக்கம் திரும்பி துன்பத்தின் ஆற்றாமை துடிக்கும் குரலில் தேவனே, என்னை ஏன் இப்படிப் படைத்தீர்கள்?” என்று முனகுகிறான். பொப்பேல்ஸ்காயா மனமிரங்கி அவனுக்கு இருபத்தைந்து ரூபிள் நோட்டொன்றை எடுத்துக் கொடுக்கிறாள்.
ஆலயச் சுவர்களை பார்வையாளர்களுக்குச் சுற்றிக் காட்டும் மணியாட்டி, அங்கிருக்கும் ஒரு சுவரில் புடைப்புப்புள்ளிகளால் ஏதோ கிறுக்கிவைத்திருப்பதாகச் சொல்கிறான்.  ஆர்வம் கொண்ட பியோத்தர் அப்புள்ளிகளைத் தன் விரல்களால் தொட்டுத் தடவி, அவை எழுத்துகள் என்று பரவசத்தோடு சொல்கிறான். ஒவ்வொரு சொல்லாகக் கூட்டிப் படித்துப் பார்த்துவிட்டு அது ஒரு பாடல் என்றும் சொல்கிறான். வாக்கியங்கள் அனைத்தையும் முழுக்க உள்வாங்கிய பிறகு அப்பாடலைப் பாடிக் காட்டுகிறான். அது ஒரு சோகப்பாடல். அதைக் கேட்டு அனைவரும் துயரத்தில் மூழ்கிவிடுகிறார்கள். எல்லோரும் கீழே இறங்கிவிட, மணியாட்டியும் பியோத்தரும் தமக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். பிறந்ததுமுதல் பார்வையற்று இருப்பவர்களைவிட பிறந்து சில ஆண்டுகளாவது பார்க்கும் திறனோடு இருந்துவிட்டு பிறகு பார்வையை இழப்பது மேலானது என்று சொல்கிறான் மணியாட்டி. குறைந்தபட்சம் இந்த உலகத்தையும் மனிதர்களையும் கண்ணால் பார்த்த நிறைவாவது அவர்களுக்குக் கிடைக்குமில்லையா என்று கேட்கிறான். அதில் உள்ள உண்மையை உணர்ந்து மேலும் மேலும் துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறான் சிறுவன். மெளனத்தில் உறைந்தபடி அனைவரும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.  பியோத்தரின் துயரமும் வளர்கிறது. ஒவ்வொரு கணமும் பார்வையின்மை அவனை வதைத்தபடி இருக்கிறது. அவனுடன் உரையாடி அவனை எதார்த்தத்தை  உணரும்படி செய்வதற்கும் வேதனைகளிலிருந்து அவனை மீட்டெடுப்பதற்கும் மக்சீம் மாமாவும் இவெலீனாவும் தம்மால் முடிந்தவரை பாடுபடுகிறார்கள். அவன் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் மிகவும் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை. ஒருமுறைஎன்னைவிட பிச்சைக்காரன் எவ்வளவோ மேல். அவனைப்போல வாழ்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். அதில் எவ்விதமான துன்பமோ துயரமோ இல்லை. ஆனால் பார்வையில்லாதவனாக இருப்பது பெரும்கொடுமைஎன்று ஆத்திரத்தோடு பேசுகிறான். அவனுக்குப் புரியவைக்கமுடியாத தோல்வியுணர்ச்சியோடு எல்லோரும் சென்றுவிடுகிறார்கள்.
வசந்தத்திருவிழாவுக்கு பண்ணையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலயத்துக்கு அனைவரும் செல்கிறார்கள். நகரத்தின் நுழைவாயிலிலிருந்தே கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. ஒரு திருப்பத்தில் பிச்சைக்காரர்கள் கூட்டம் வழியை அடைத்தபடி நின்றிருக்கிறது. ஒவ்வொருவரும் கையிலொரு மர ஓடு வைத்திருக்கிறார்கள். அனைவரும் விதவிதமான ஓலங்களை எழுப்பி பிச்சை கேட்கிறார்கள். அக்குரல்களில் சொல்ல முடியாத சோகம் நிரம்பி வழிகிறது. அதைக் கேட்டு பியோத்தர் அப்படியே உறைந்து நின்றுவிடுகிறான். வலியில் அவன் முகம் துடிக்கிறது. “அன்று நீ பெரிய பாக்கியசாலிகள் என்று நினைத்துப் பொறாமைப்பட்டாயே, அவர்கள்தான் இவர்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீயே பார்என்று அவன் அருகிலேயே நின்றிருந்த மக்சீம் மாமா எடுத்துரைக்கிறார். சவுக்கடி பட்டதுபோல தலையைப் பின்னால் சாய்த்துக்கொள்கிறான் பியோத்தர். அவன் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவனுடைய கையில் பணப்பையைக் கொடுக்கும் மக்சீம் மாமா, அனைவருக்கும் நாணயங்களை எடுத்துக்கொடுக்கச் சொல்கிறார். அங்கிருந்து புறப்படும்போது தமக்குக் கிடைத்த நாணயங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்காக பிச்சைக்காரர்கள் எழுப்பும் குரல்களைக் கேட்டு நடுக்கம் கொள்கிறான் பியோத்தர்.   வீட்டுக்குத் திரும்பும் வழியில் தன் பழைய நண்பனொருவனைப்பற்றி பியோத்தரிடம் சொல்கிறார் மக்சீம் மாமா. அவன் பெயர் கந்தீபா. யுத்தத்தில் கண்கள் சிதைக்கப்பட்டு பார்வையை இழந்தவன். கீவ் என்னும் இடத்தில் பாடி, தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான்.  
வீட்டுக்குத் திரும்பியதும் அவன் காய்ச்சலுற்று படுத்துவிடுகிறான்.  அவன் தாய் அவனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறாள். அவன் தெளிந்து எழ பல நாட்களாகின்றன. காலம் காலமாக அவன் மனம் சுமந்துவந்த துயரச்சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துபோகிறது. எது மகிழ்ச்சி என்பதை அவன் ஆழ்மனம் கண்டடைந்துவிடுகிறது. காய்ச்சலிலிருந்து எழுந்ததும் அவன் மீண்டும் இசையை நாடுகிறான். இசையில் அவன் மனம் நிறைகிறது.  புல்லாங்குழலும் பியானோவும் அவனுக்கு உற்ற துணையாக விளங்குகின்றன.
இசையின் வழியாக அவன் பெற்றுக்கொண்ட நம்பிக்கை வாழ்க்கையை ஆர்வத்துடன் அணுகும் பக்குவத்தை அவனுக்கு அளிக்கிறது. வளர்ந்து இளைஞனானதும் அந்த நம்பிக்கையின் தூண்டுதலால் அவன் இவெலீனாவை மணம் செய்துகொள்கிறான். அடுத்த ஆண்டே இவெலீனா ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். குழந்தை நல்ல பார்வைத் திறத்தோடு இருப்பதாக மருத்துவச்சி அறிவிக்கும் குரலைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறார்கள். அதுவரை அனைவரையும் சூழ்ந்திருந்த அச்சமும் கவலையும் விலகிவிடுகின்றன.  பியோத்தரின் பிறப்போடு தொடங்கும் நாவல் பியோத்தருக்கு எவ்விதமான உடற்குறையுமின்றி ஒரு மகன் பிறப்பதைச் சித்தரிக்கும் காட்சியோடு முடிவடைகிறது.
எது உண்மையான மகிழ்ச்சி என்பது ஓர் அடிப்படையான கேள்வி. சிலருக்கு செல்வம் மகிழ்ச்சியை அளிக்கிறது. சிலருக்கு கலைகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. சிலருக்கு நாடோடி வாழ்க்கையே மகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. மகிழ்ச்சி என்பதற்கான வரையறை மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது என்பதுபோன்ற எண்ணம் ஒருவருடைய நெஞ்சில் எழுவது இயற்கை. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அதையும் ஏதோ ஒரு விதத்தில் வரையறைத்துக்கொள்ள முடியும்.  பொதுவாக எந்தச் செயலால் நம் மனம் நிறைவடையுமோ, அதுவே நம் மகிழ்ச்சிக்குரிய செயல் என்று சொல்லலாம். அச்செயலை மீண்டும் மீண்டும் செய்வதன் வழியாக அந்த மகிழ்ச்சியைப் பல மடங்காகப் பெருக்கிக்கொள்ளலாம்.
இந்த நாவலின் மையப்பாத்திரமான சிறுவன் பியோத்தரால் அப்படி நினைத்துக்கொள்ள முடியவில்லை. பார்வைத்திறனே மகிழ்ச்சிக்குரிய ஊற்று என நம்பி, தன்னால் அடைய முடிந்த மகிழ்ச்சியைக்கூட நிராகரித்து விலக்கி, ஒருவித மனபாரத்தில் ஆழ்ந்து கிடக்கிறான். பார்வைத்திறன் என்பது மானுட வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று என்பதில் ஒருதுளி ஐயமும் இல்லை. ஆனால், பார்வைத்திறனை பிறவியிலேயே இழந்திருக்கும் நிலையில், அந்தத் துயரத்தைக் கடந்து சென்று மகிழ்ச்சியை அடையும் வழிமுறைகளைக் கண்டறிவதே விவேகம்  மிக்க  செயலாகும்.
பியோத்தர் இயல்பாகவே இசைநாட்டம் கொண்டவன். குழந்தையாக இருந்தபோது புல்லாங்குழலின் ஓசையைக் கேட்டு, அது ஒலிக்கும் திசையைத் தேடி தானாகவே இருப்பிடத்தைவிட்டு வெளியேறி அலைந்து கண்டறிந்தவன். இசையில் லயித்து, அது அளிக்கக்கூடிய மகிழ்ச்சியை உள்ளூர உணர்ந்தவன். ஆயினும் ஏதோ ஒரு முள் அவனை சதாகாலமும் இடறியபடி இருக்கிறது. தன் பார்வையைப் பறித்து இயற்கை தன்னை வஞ்சித்துவிட்டது என்னும் வருத்தத்தை அவன் காலமெல்லாம் சுமக்கிறான். அப்படி ஒரு சுமை அவன் மனத்தை அண்டிவிடக்கூடாது என்பதற்காகவே அவனுடைய தாயும் மாமாவும் குழந்தைப் பருவத்திலிருந்தே இசையை அவனுக்கு முறையாக அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். தொடர்ச்சியான பயிற்சி வழியாக அவனை கற்பனைத்திறமை உள்ளவனாகவும் இசைஞானம் மிக்கவனாகவும்  மாற்றுகிறார்கள். தன் திறமையையும் ஆளுமையையும் தானே அறியாதவனாக இருக்கிறான் பியோத்தர். அதுதான் அவனுடைய தீயூழ்.
இறுதியில் அதிரடியாக மக்சீம் மாமா எடுக்கும் நடவடிக்கை  அவனுடைய தீயூழிலிருந்து அவனை வெளியே கொண்டுவருகிறது. ‘பிச்சைக்காரனாக இருப்பது மேல், அவர்களுக்கிருக்கும் மகிழ்ச்சி எனக்கில்லைஎன்று அடிக்கடி சொல்லிப் புலம்புவது எவ்வளவு அபத்தமானது என்பதை உண்மையான பிச்சைக்காரக்கும்பலிடையே எதிர்பாராத ஒரு கணத்தில் அவனைக் கொண்டுசென்று நிற்கவைத்து அவனுக்குத் தெளிவு பிறக்க வழிவகுக்கிறார். பிச்சைக்காரர்கள் உலகத்திலும் நிறைந்திருக்கிற போட்டிகள், பொறாமைகள், அடிதடிகள் அவனை நிலைகுலையவைக்கின்றன. அதிலேயே திளைத்திருக்க விரும்பும் அவர்களுடைய இச்சை அவனைத் திகைக்கவைக்கிறது. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி ஆனந்தமாகப் பாட்டிசைத்தபடி கடந்துபோகும் சிலரையும் அவன் அந்த இடத்தில் அறிந்துகொள்கிறான். இசையின் மகத்துவத்தை அவன் மனம் உணர்ந்துகொள்கிறது. அதுவரைக்கும் தன் மனம் வளர்த்துக்கொண்ட குறைபட்ட எண்ணங்களை உதறி இசையின் உலகத்துக்குத் திரும்பிவருகிறான். அவன் மனம்  மகிழ்ச்சியின் ஊற்றைக் கண்டடைந்ததில் பரவசம் கொள்கிறது.