Home

Wednesday 5 June 2019

கஸ்தூர்பா - ஒரு நினைவுத்தொகுப்பு






ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக பூனாவுக்குச் சென்றிருந்தேன். அசோக்குமார், காமராஜ், நான் மூவரும் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சென்ற இடம் ஆகாகான் மாளிகை. ’வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அந்த வளாகத்துக்குள் நடந்தோம். காந்தியடிகள் இருந்த அறைக்குள் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கிருந்த ராட்டையின் முன்னால் காந்தியடிகள் அமர்ந்து நூல் நூற்பதைப்போல ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அவர் சுவாசித்த காற்றின் மிச்சத்தை நான் சுவாசிப்பதாக அக்கணம் தோன்றியது. என் உடல் சிலிர்த்தடங்கியது.

மிகச்சிறிய அறை அது. அதுபோல பல அறைகள் அந்தத் தளத்தில் இருந்தன.  கஸ்தூர்பா, மகாதேவ தேசாய், ப்யாரிலால், சுசிலா நய்யார் மற்றும் எண்ணற்ற தொண்டர்களை அந்த அறைகளில்தான் சிறைவைத்திருந்தது ஆங்கிலேய அரசாங்கம்.
கனத்த இதயத்தோடு அந்த வளாகத்தைவிட்டு வெளியேறி காந்தியடிகள் நடைப்பயிற்சி செய்த தோட்டத்தை நோக்கி நடந்தேன். அங்கிருந்த மகாதேவ தேசாய், கஸ்தூர்பா கல்லறைகளின் முன் சில கணங்கள் மெளனமாக நின்று வணங்கினேன்.
அன்னை கஸ்தூர்பா பற்றிய இந்தப் புத்தகத்தை மிகமிகத் தாமதமாக இந்த ஆண்டில்தான் படித்தேன். ஒவ்வொரு பக்கமும் படிக்கப்படிக்க ஆகாகான் மாளிகைச் சிறையைப் பார்த்துவிட்டு வந்த அனுபவங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் பொங்கியெழுந்தபடி இருந்தன. பாரதியாரைப்பற்றிய நினைவுகளை எழுதிய யதுகிரி அம்மாளைப்போல, சுசிலா நய்யார் இந்த நூலில் கஸ்தூர்பா பற்றிய நினைவுகளைத் தொகுத்து முன்வைத்திருக்கிறார். முதல் வாசிப்பிலேயே புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. தொகுப்பின் ஆரம்பக்கட்டுரை ஒன்றில் சிறுமியான சுசிலாவை ஆசிரமத்தில் தன் குடிலில் தனக்கருகில் உறங்கவைத்துக்கொள்ளும் கஸ்தூர்பா பற்றிய சித்தரிப்பு இடம்பெற்றுள்ளது. இறுதிப்பகுதியில் உள்ள இன்னொரு கட்டுரையில் மரணப்படுக்கையில் உள்ள கஸ்தூர்பாவை தன் மடியிலும் தோளோடும் தாங்கி நிற்கும் சுசிலாவின் சித்திரம் இடம்பெற்றுள்ளது. இவ்விரு புள்ளிகளிடையே ஏராளமான அனுபவங்கள். எண்ணற்ற காட்சிகள். நெஞ்சில் படிந்திருக்கும் நினைவுகளைத் தொகுத்து முன்வைத்திருக்கிறார் சுசிலா நய்யார்.  
படித்துமுடித்ததுமே இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். என் விருப்பத்தை நண்பர் சந்தியா நடராஜனிடம் தெரிவித்தேன். மொழிபெயர்ப்பதற்கான அனுமதி கிடைக்க அவர் உடனே ஏற்பாடு செய்தார். நாம் விரும்பும் செயல்களெல்லாம் இத்தனை விரைவாக நடைபெறும்போது, மொழிபெயர்ப்பு வேலையை விரைவாக செய்துமுடிப்பதை என் உடனடிக் கடமையாக நினைத்து செயல்படத் தொடங்கினேன், மொழிபெயர்ப்பை முடித்து, இந்த முன்னுரையையும் எழுதி முடிக்கும் இக்கணம் நான் அடையும் மகிழ்ச்சி எல்லையற்றது. அன்னை கஸ்தூர்பாவுக்கு என் வணக்கங்கள்.
என் முயற்சிகளுக்கெல்லாம் துணையாக நிற்கும் என் துணைவி அமுதாவுக்கு என் அன்பு. இந்த நூலை. அழகுற வெளியிடும் சந்தியா நடராஜனுக்கு என் நன்றி.

அன்புடன்
பாவண்ணன்