Home

Sunday 2 June 2019

இரண்டு கவிதைகள்




பூனை
காவல் பலிக்கவில்லை
தினமும் பால் திருட்டு

எதேச்சையாய்ப் பார்த்ததும்
நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ பின்வைக்கவோ
உனது தந்திரம் புரியவில்லை


துடிக்கும் மீசையில் கர்வம்
கண்களில் கவியும் குரூரம்
உடம்பில் புரளும் முறுக்கு

உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா எதிரியாகவா

சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன் குரல் இரக்கம் மிக்கது

சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை

உன் கண்களுக்கு எதுவாகத் தெரிகிறேன் நான்?
எலியாகவா?
எதிரியாகவா?

**

சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன் குரல் இரக்கம் மிக்கது

சோறு உனக்குப் பிடிப்பதில்லை
கறி நான் சமைப்பதில்லை

குழந்தைகள் இருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை

நேற்றுவரைக்கும் உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது. வீடு
இன்றுமுதல் இன்னொரு வீட்டுக்குத் திருடப்போ

**

எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது

அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது

உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்

என்ன புரிந்து எகிறினாய்?
உன் மீன் எனக்கு இரையாகுமா?
என் வாசல் தூய்மை தவறாகுமா?


('ஒரு' ஜூலை 91)




நகர் நீங்கு படலம்

தீ நாக்கு மேலலைய
புகையடர்ந்து வான் நிரம்ப
சிதையென எரியும் சிறு சிறு குடிசைகள்

வெடிச்சத்தம் குலை நடுங்கும்
துயில் இழந்த இரவுகளில்
தரையதிர வந்தவர்கள் கைக்கு அகப்பட்டு
வதையுற்ற ரணங்கள் வலிக்கும்
சிறு உரசல் மனம் கலைக்க
வெறிமிகுந்த அணி துடிக்க
தீப்பந்தம் கைகள் மாறும்
குடியிருந்தோர் கூக்குரலை
குளிர் இரவில் காற்று சுமக்கும்

பிணங்களால் இந்நகரம் நிறையலாம்
இன்னும் வீடுகளில் ஆள் தேடி அலையலாம்
சாட்சியின்றி உழைத்தழிந்த
எம் தலைமுறைகள் எருவான நிஜம்கூட மறையக் கூடும்
மீண்டுமொரு பொறி எழுந்து
மிச்சமுள்ள ஆள் கூட்டமும் அழியலாம்

ஆகட்டும், எடுக்க எதுமில்லை நண்பனே
நீ குலைத்த என் மனைவி மகள்
மீட்டெடுத்த துணி மூட்டை
வெறும் கைகள்
அவ்வளவுதான் போகிறேன்

(கணையாழி, பிப்ரவரி 1992)