Home

Thursday, 20 June 2019

இரண்டு கவிதைகள்



சிப்பி

உலவும் கால்கள் அலையும்
கடல் மணற்பரப்பில்
பிடுங்கி வீசிய ஒற்றை விழியென
மிதிபட்டு கிடக்கும் ஒரு சிப்பி
ஏதோ ஓர் அலையில் ஒதுங்கி
புறம் மறந்து தியானத்தில்
புதைந்த ரிஷியாகக் கிடக்கிறது

உட்சுழிவின் உட்பரப்பில்
சூரியனின் ஒளிகசிய
ஓட்டின் உச்சியில் வெளிச்சம்
வெளிநோக்கி விடுக்கும் அழைப்பு
எங்கெங்கும் அழுந்தும் பாதங்கள்
ஒருகணம் ஒதுங்கவும் கூடும்
இடைப்பட்ட கணத்தில்
ஒரேயொரு உயிரையேனும் ஈர்த்தது என்பதே
இதன் வாழ்வு

(கணையாழி, 1993)

மிச்சம்

இடித்துச் சிதைத்தார்கள் ஒருநாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை

காரணங்கள் சொல்வதா கஷ்டம் -
'பஸ்ங்க வந்து ரயில் அழிச்சாச்சி
வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ்ல ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில் புடிப்பானா'

என் இளமையின் ஞாபகம் வேறுவிதம்

ஒவ்வொரு மணிக்கும் ஓடும் ரயில்களுக்கு
வரிசையாய் நின்று சல்யூட் அடிப்போம்

குதிரைவண்டியில் வந்திறங்கி
கூட்டமாகக் காத்திருப்பவர்களை
ஆல விழுதில் ஊஞ்சல் கட்டி
ஆடியபடி பார்த்திருப்போம்

அரையணாவுக்கு நாவல்பழம் வாங்கி
ஆளாளுக்குத் தின்றபடி
மரங்கள் நடுவில் பாதை போட்டு
ரயில்கள் போல நாங்களே ஓடுவோம்

தேடிவரும் அம்மா எங்களைக் காண்பது ரயிலடியில்தான்

காலம் மாறிவிட்டது இன்று -


என் பிள்ளை பார்க்க
ரயில் இல்லை இப்போது

அகால நள்ளிரவில் ஊளையிட்டுச் செல்லும்
சரக்கு ரயிலைக் காட்ட முடியாது

தண்டவாளம் மட்டும் இருக்கிறது
பழசின் ஏதோ மிச்சம் போல

(காலக்ரமம், ஜனவரி 1998)