Home

Sunday, 26 May 2019

வெள்ளைக்காரன் - சிறுகதை



ன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம்என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த  ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடிஜபல்பூர்ஜபல்பூர்என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக பதில் சொன்னார். அதைக் கேட்டு அவனும்ஜபல்பூர்என்று முணுமுணுத்தபடி தலையசைத்துக்கொண்டான்.
வண்டியிலிருந்து இறங்கிய கூட்டம் மூட்டைமுடிச்சுகளோடு நடந்துபோவதை பார்த்ததும் ஒருகணம் அப்படியே இறங்கிப் போய்விடலாமா என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது யாரோ ஒரு சிறுமியின் பிடியிலிருந்து நழுவிய பலூன் எல்லோருடைய தலைக்கும் மேல் ஒரு பறவையைப்போல உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் காட்சி அவன் பார்வையில் விழுந்தது. பச்சை நிறத்தில் ஒரு பூசணிக்காய் அளவுக்கு ஊதியிருந்தது அந்தப் பலூன்.
ஆட்களின் தோளைத் தொட்டு இடைவெளியை உண்டாக்கியபடி பலூனை நோக்கி கையை நீட்டியவாறு வெகுதொலைவில் ஒருவர் அவசரமாக வந்துகொண்டிருந்தார். அவரால் வேகமாக வரமுடியாதபடி கூட்டம் அதிகமாக இருந்தது. அவரையும் பலூனையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ ஒருகணத்தில் பலூன் மறைந்துவிட்டது. கிட்டத்தட்ட மறுகோடி வரைக்கும் சென்று ஏமாற்றத்தோடு அவர் திரும்பிவருவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
சிக்னல் விழுந்து, ரயில் கிளம்புவதற்கு அடையாளமாக பெருஞ்சத்தத்துடன் சங்கு முழங்கியது. சட்டென்று இருக்கையைவிட்டு எழுந்து வேகமாக வாசலுக்குச் சென்று ரயிலிலிருந்து இறங்கினான் அவன்.  ஜிப்பாக்காரர் அவனைப் பார்த்து பதற்றமும் திகைப்புமாக இந்தியில் எதையோ சொல்வதை அவன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். “ஒன்னும் கவலப்படாதீங்க, போய் வாங்கஎன்று சைகையால் உணர்த்தியபடி புன்னகையோடு அவரை நோக்கி கையசைத்தான் அவன்.
ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தான். வாசலில் நின்றிருந்த  ஆலமரம் அந்த வளாகத்துக்கே நிழல் கொடுத்துக்கொண்டிருந்தது. நிழலில் ஏராளமான ரிக்ஷாக்களும் குதிரைவண்டிகளும் நின்றிருந்தன. காதில் விழும் இந்திச் சொற்களை விசித்திரமான உணர்வுடன் காதுகொடுத்துக் கேட்டான். ஒரு கம்பத்தின் கீழே இளநீர்க்குலைகளைக் குவித்து வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். ஆறேழு சுற்றுகளாக அவர் மடித்துச் சுற்றியிருக்கும் தலைப்பாகையை ஆச்சரியத்துடன் சில கணங்கள் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினான். சொகுசாக கால் நீட்டி உட்கார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களோடு ரிக்ஷாக்களை இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள் ரிக்ஷாக்காரர்கள். அடுத்தடுத்து நிற்கும் பெரியபெரிய கட்டடங்களைப் பார்த்து ஆச்சரியத்தில் திளைத்தன அவன் விழிகள். அந்த ஆரவாரத்துக்குத் தொடர்பே இல்லாததுபோல பாதையோரத்தில் தண்ணீர் நிறைந்த கால்வாயொன்று ஓடிக்கொண்டிருந்தது. கரையோர மரங்களில் கொக்குகள் கூட்டம்கூட்டமாக உட்கார்ந்திருந்தன. கொக்குகளை வேடிக்கை பார்த்தபடி கரையோரமாகவே அவன் நடக்கத் தொடங்கினான். ஒரு கணம் அவன் மனம் தனது ஊரில் ஓடும் கெடிலம் ஆற்றங்கரையையும் அதைக் கடந்து விரிந்திருக்கும் சிங்காரத்தோப்பையும் நினைத்துக்கொண்டான். நகரத்தின் எல்லையைத் தாண்டி அடுத்த ஊரை நோக்கி அந்தக் கால்வாய் போய்க்கொண்டிருந்தது.
ஓர் உணவுக்கடையைக் கடக்கும்போது தன் வயிற்றில் பசியின் அனலை உணர்ந்தான் அவன். கொஞ்சம் கூட யோசிக்காமல் வாசலில் வைக்கப்பட்டிருந்த வாளியிலிருந்த தண்ணீரை எடுத்து கைகளைக் கழுவிக்கொண்டு கடைக்குள் சென்றான். இலையைக் கொண்டுவந்து வைத்த பரிசாரக அம்மாவின் இந்தி புரியாமல் சாப்பாடு வேண்டும் என்று சைகையால் கேட்டான். அவர் சுடச்சுட சப்பாத்திகளைக் கொண்டுவந்து வைத்து உருளைக்கிழங்குக் கூட்டை வைத்தார். முதல் வாய் உணவு தொண்டைக்குள் இறங்கியதும் அவன் மனம் அம்சவல்லி அம்மாவை நினைத்துக்கொண்டது. அக்கணமே அவன் கண்கள் கலங்கிவிட்டன. இனி ஒருபோதும் பார்க்க வாய்ப்பில்லாத அவருடைய முகம் நெஞ்சில் தோன்றியது. நெற்றியில் திருநீறு துலங்க, ஏற்றிவைத்த விளக்குபோல சுடர்விடும் அவர் முகம். ஈரத்துடன் மின்னும் அவர் கண்கள். அபயக்கரம் காட்டி கருணை பொழியும் பார்வையுடன் நிற்கும் அம்மன் சிலை போன்ற தோற்றம். “வெள்ளக்காரா, வெள்ளக்காராஎன்று பரிவோடும் பாசத்தோடும் அவனை அழைக்கும் அவருடைய குரல். எல்லாவற்றையும் ஒரே கணத்தில் உதறித் தொலைத்துவிட்டு வந்துவிட்டோமே என்னும் துயரம் ஒரு கடலலையைப்போல அவன் நெஞ்சில் புரண்டது.
சப்பாத்தித்துண்டை விழுங்கும்போது புரைக்கேறியதில் விக்கல் வந்துவிட்டது. இடது கையால் நெஞ்சை அழுத்திக்கொண்டு நாலைந்துமுறை விக்கினான். ஓடோடி வந்த பரிசாரக அம்மா தண்ணீர்த்தம்ளரை அவனிடம் கொடுத்தபடிதீரேஜி தீரேஜிஎன்று சொன்னார். இரண்டு வாய் தண்ணீரைப் பருகிய பிறகுதான் தொண்டையின் இறுக்கம் தளர்ந்தது. அந்தப் பரிசாரக அம்மாவின் கண்களில் படிந்திருந்த கருணையை அப்போது அவன் பார்த்தான்.
அந்தக் கண்களை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அச்சு அசலாக அம்சவல்லி அம்மாவின் கண்களைப்போலவே இருந்தன. “அவனை திருத்தி வழிக்குக் கொண்டாருவன்னு நெனச்சா, இன்னும் கொஞ்சம் கெட்டுப் போடான்னு அவன் போவச் சொல்ற எடத்துக்கெல்லாம் வண்டி ஓட்டிகினு போறயே, இது ஒனக்கே அடுக்குமா? இதுதான் நீ இந்த குடும்பத்துக்கு செய்யற உபகாரமா?” என்று இடிக்கிறமாதிரி பேசும்போதும் சரி, ”அன்னிக்கு குலதெய்வத்துக்கு கூழ் ஊத்தி படைக்கறதுக்கு புத்துப்பட்டுக்கு போய் நிக்கறேன், என் பின்னால நாலஞ்சி பொம்பளைவோ நின்னுகினு நெட்டப்பாக்கத்து சின்ன கவுண்டருக்கு பொம்பள சகவாசம் இல்லாத ஊரே இல்லடின்னு ரகசியம் பேசறாளுவோ. அத கேக்கும்போது  நாலு மொழம் கயித்துல அங்கயே தொங்கிடலாம்ன்னு நெனச்சன்என்று மனம் நொந்து பேசும்போதும் சரி, “அப்பன் சாவுக்குப் பிறகு புள்ள தப்பா வளருதுன்னு நாலு பேரு சொல்ல எடம் குடுத்துறக் கூடாதுன்னுதான் அவனுக்கு கூட்டாளியா உன்ன வச்சேன். உன்னாலயும் காலணாவுக்கு பிரயோஜனம் இல்லஎன்று அலுத்துக்கொள்ளும்போதும் சரி, “நாயக் குளுப்பாட்டி நடு ஊட்டுல வச்சாலும் அது வாலை கொழச்சிகினு போவற எடத்துக்குத்தான் போவுமாம். ஒன் சின்ன கவுண்டரு கத அந்தமாரிதான் போவுது. ஊட்டுல தாலி கட்டன பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்காளேங்கற நெனப்பு கூடவா இல்ல அவனுக்கு? வரவர அவள நிமுந்து பார்த்து பேசறதுக்கு கூட எனக்கு வெக்கமா இருக்குதுஎன்று உருகும்போதும் சரி, அந்தக் கண்களில் கருணையைத் தவிர வேறு எதுவும் தெரிந்ததில்லை.
கருணைக்கு மாறாக சபலத்தை கண்களில் தேக்கிக்கொண்டவராக இருந்தார் சின்னக் கவுண்டர். அந்த வழியிலிருந்து அவரை விலக்கும் முயற்சியாகத் தோற்றமளிக்கும் உரையாடல்களை வெட்டி வீழ்த்துவதில் வல்லவராகவும் இருந்தார். “வாழ்க்கைய ஒவ்வொரு நிமிஷத்தயும் ஆனந்தமா வாழணும்ன்னு நெனைக்கறவன் நான். அந்த ஆனந்தத்தயெல்லாம் பாட்டா, நடனமா, சிரிப்பா, பேச்சா மாத்தி பெண்கள்கிட்ட குடுத்துட்டு போயிட்டான் அந்த ஆண்டவன். ஆனந்தம் வேணும்ங்கறவனுக்கு பெண்கள் ரொம்பரொம்ப அவசியம், புரியுதா? போய் அந்த அம்சவல்லி அம்மாவுக்கு புரிய வை, அப்படியே மாயவரத்து மகாராணிக்கும் புரிய வை, போஎன்று சொற்களைக் கொட்டி வாயை அடைத்தார். தொடர்ந்து சின்னம்மா சொன்னாங்க பெரியம்மா சொன்னாங்கன்னு அறிவுரை சொல்ற வேலையெல்லாம் வச்சிக்காத.  ஒழுங்கா வண்டிய ஓட்டற வேலைய மட்டும் பாருஎன்று பக்கவாட்டில் நகரும் மரங்களைப் பார்த்தபடியே சொன்னார். நேரடியாகச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் அவன் நெஞ்சை மாடு முட்டியதுபோல முட்டித் துளைத்துக் கிழித்துவிட்டன.
விழியோரத்தில் கசிந்து தேங்கிய கண்ணீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு சப்பாத்திகளை உண்டு முடித்தவனிடம்இன்னும் வேணுமா?” என்று கேட்டார் பரிசாரக அம்மா. ”வேணாம்என்பதன் அடையாளமாக தலையசைத்தபடி இலையை மடித்து வெளியே எடுத்து வந்து கூடைக்குள் வீசிவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டான். சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து சாலையோரமாகவே நடக்கத் தொடங்கினான்.
சிறிதும் பெரிதுமாக வாகனங்கள் வேகமாக பறந்துகொண்டிருந்தன. அவற்றை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தபடி சிக்னல் கம்பத்துக்கு அருகில் வந்து நின்றான் அவன். பச்சை நிறத்தில் ஒளிரும் விளக்குகள் திடீரென சிவப்பாக மாறுவதும் சில கணங்களுக்குப் பிறகு மறுபடியும் பச்சை நிறம் வருவதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த விளக்குகளின் நிறத்துக்குத் தகுந்தபடி வாகனங்கள் நிற்பதும் ஓடுவதும் அதைவிட அதிசயமாக இருந்தது. வெகுநேரம் அங்கேயே நின்று அதை வேடிக்கை பார்த்தபடி நின்றான்.
அப்போது ஏழெட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனொருவன் தயக்கத்துடன் வந்து அவனுக்குப் பக்கத்தில் நின்று தன் வயிற்றைத் தொட்டுக் காட்டி பசிப்பதாக சைகை செய்தான். துவண்டு சுருங்கிவிட்ட அவன் கண்களைப் பார்த்து அவன் மனம் ஒருகணம் நடுங்கி ஒடுங்கியது. உடனே அவன் தோளை ஆதரவுடன் தொட்டு தட்டிக் கொடுத்தான். சிறுவன் மறுபடியும் பசியின் சைகையைச் செய்தபடி அவனை அண்ணாந்து பார்த்தான். அந்தச் சைகை அவனுக்கு வேதனையாக இருந்தது.
அவன் அந்தச் சிறுவனுடன் உணவுக்கடைக்கு மறுபடியும் சென்று உணவு மேசையின் முன்னால் உட்கார்ந்தான். பரிசாரக அம்மா அவனை விசித்திரமாகப் பார்த்தபடி மறுபடியும் சாப்பாடா?” என்பதுபோல சைகையால் கேட்டாள். அவன் அவசரமாக தலையசைத்து மறுத்தபடி, அச்சிறுவனின் தோளைத் தொட்டு அவனுக்கு இலைபோடும்படி சொன்னான். அந்த அம்மா கொண்டு வந்து வைத்த சப்பாத்திகளை எடுத்து அவன் வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான். அவனைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு தன்னுடைய சிறுவயது நினைவுகள் பொங்கி வந்தன.

ப்போது அவனுக்கும் அச்சிறுவனின் வயதுதான் இருக்கும். திடீரென்று கடலூர் பங்களாவிலிருந்து அவனையும் அவன் அம்மாவையும் வெளியேற்றிவிட்டார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்த அதிகாரியும் மற்றவர்களும் போன இடம் தெரியவில்லை.  சுதந்தரத்த கொடுத்திட்ட பிறகு தொரைங்களுக்கு நம்ம நாட்டுல என்ன வேலை? அவனயும் பக்கத்துலயே வச்சிக்கறதுக்கா காங்கிரஸ்காரங்க கஷ்டப்பட்டாங்க? எல்லாரும் அவுங்கவுங்க நாட்டுக்கு போயிட்டாங்க.  போ போ போய் பொழைக்கறதுக்கு வேற எடத்த பாருஎன்று தெருவில் இழுத்துவிட்டார்கள். கூட்டத்தில் ஒருவன்  காவேரி நேத்துவரைக்கும் பங்களாவுக்குள்ள ஓடிச்சி. இனிமேல சாக்கடையில ஓடப் போவுதுஎன்று எங்கோ பார்த்தபடி குத்தலாகப் பேசிவிட்டுச் சிரித்தான்.
ஒரு துணிமூட்டையோடு அவன் அம்மா போக்கிடம் தெரியாமல் கடலூருக்குள்ளேயே எங்கெங்கோ அவனை அழைத்துக்கொண்டு பகல்முழுக்க நடந்தபடி இருந்தார். ஒருநாள் கோவில் வாசல். ஒருநாள் கெடிலம் படித்துறை. ஒருநாள் சத்திரம். இரவுகளில் எங்கெங்கோ மாறிமாறித் தங்கி முழுப்பட்டினியும் அரைப்பட்டினியுமாக ஊரைத் தாண்டி நடந்தார்கள்.  தெருவொரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்துடேய், வெள்ளக்காரன் மாதிரியே இருக்கான் பாருடாஎன்று சுட்டிக்காட்டி சிரித்தார்கள். இரண்டு தடிப்பிள்ளைகள்வெள்ளைக்காராஎன்று சத்தம் போட்டு கூவி கைத்தட்டினார்கள். அவமானத்தில் தேம்பித்தேம்பி அழுதபடி அம்மாவின் விரல்களைப் பற்றி அவன் நடந்துகொண்டே இருந்தான்.
பல சாலைகள். பல திருப்பங்கள். சில பாலங்கள். பொழுது சாய்கிற நேரத்தில் அவர்கள் ஒரு பண்ணையை நெருங்கும் சமயத்தில் அவன் அம்மா மயங்கி சுருண்டு விழுந்தார். சுய உணர்வில்லாமல் கிடந்த அம்மாவின் கன்னத்தைத் தொட்டுத்தொட்டு அவன்அம்மா அம்மாஎன்று சத்தம் போட்டு கதறியழுதான். பக்கத்தில் பசுவை நிற்கவைத்து பால் கறந்துகொண்டிருந்தவரும் பெரிய கவுண்டரும் அங்கே ஓடி வந்து பார்த்தார்கள். “அழதாட தம்பி, அழாதடா தம்பிஎன்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பெரிய கவுண்டர். சத்தம் கேட்டு அம்சவல்லி அம்மாவும் வந்துவிட்டார். அவர்தான் கல்தொட்டியிலிருந்த தண்ணீரை சொம்பில் மொண்டுவந்து அவன் அம்மாவின் முகத்தில் தெளித்தார்.  முகத்தில் தண்ணீரின் ஈரம் பட்டதும் அவர் மெதுவாக கண்களைத் திறந்தார்.  அவர்களுடைய பசியை அம்சவல்லி அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கேயே மரத்தடியில் அவர்கள் இருவருக்கும் இலை நிறைய சோற்றை எடுத்துவைத்து சாப்பிடச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்த பிறகு அம்சவல்லி அம்மாவிடம்ஏதாச்சிம் ஒரு வேல குடுங்கம்மாஎன்று கையெடுத்துக் கும்பிட்டார் அவன் அம்மா. ”ஏற்கனவே இங்க ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்களேடி, உனக்குன்னு நான் எந்த வேலைய குடுக்கறது?” என்று அம்சவல்லி அம்மா இழுத்தார். “அப்படி சொல்லாதீங்க தாயே. நீங்க காலால இட்ட வேலய நான் தலயால செய்வன்என்றார் அம்மா. உடனே அம்சவல்லி அம்மா தயக்கத்துடன்என்ன செய்வே நீ? உனக்கு என்னடி வேல தெரியும்?” என்று கேட்டார். “சமைக்கறது, ஊட்ட கழுவித் தொடைக்கறது, துணி தொவைக்கறதுன்னு எல்லாமே சுத்தமா செய்யத் தெரியும்மா….” என்று வேகமாக முதலில் பதில் சொன்னார் அம்மா. பிறகு தொடர்ந்துமாட்ட கழுவி குளுப்பாட்டி தவுடு காட்டி வைக்கல போடற வேலைலாம்கூட நல்லா செய்வம்மா. சாணி மூத்திரத்தயெல்லாம் அப்பப்ப கழுவி எடுத்துட்டு சுத்தமா வச்சிக்குவேன்…” என்று மூச்சுவிடாமல் சொன்னார். அதைக் கேட்டு அம்சவல்லி அம்மா ஒருகணம் தலையை அசைத்துக்கொண்டார். பிறகு அப்ப சரி, கொட்டாய்ங்கள்ல இருக்கிற மாடுங்களயெல்லாம் நல்லபடியா பார்த்துக்கஎன்றார்.
பக்கத்திலேயே பெரிய தொழுவம் இருந்தது. மூங்கில் தட்டிகள் வைத்து எட்டு பிரிவுகளாக அதைப் பிரித்திருந்தார்கள். ஒவ்வொன்றிலும் இரண்டு பசுக்கள் இருந்தன. அடுத்து இரு தடுப்புகளில் நான்கு எருதுகள் இருந்தன. கடைசியில் காலியாக இருந்த தடுப்பைச் சுத்தப்படுத்தி அங்கே தன் மூட்டையை வைத்துக்கொண்டாள் அம்மா. ஏராளமான சங்கடங்களுக்குப் பிறகு அம்மாவின் கண்களில் நிம்மதியைப் பார்த்தான் அவன்.
மறுநாள் காலையில் பால் கறக்கும் வேலையெல்லாம் முடிந்த பிறகு, சாணத்தையெல்லாம் கூடையில் வாரியெடுத்து வந்து ஓரமாகக் குவிக்கும் வேலையில் மூழ்கியிருந்தார் அவன் அம்மா. கல்தொட்டியில் மாடுகளுக்குத் தேவையான தீவனத்தை கலக்கிக்கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் வயதுள்ள சிறுவனொருவன் புத்தாடையோடு வீட்டிலிருந்து வந்து வாசலில் இருந்த கூண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்ததைப் பார்த்தான். அவனுக்குப் பின்னாலேயே  புத்தகப்பையை எடுத்து வந்த வேலைக்காரன் வண்டிக்குள் வைத்துவிட்டு ஓரமாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். மாடுகளை அதட்டியதும் வண்டி ஓடத் தொடங்கியது. “அவருதான்டா சின்னக் கவுண்டரு. கடலூருல பெரிய பள்ளிக்கூடத்துல படிக்கறாருஎன்று தொட்டிக்குப் பக்கத்தில் எருமுட்டைக்காக சாணத்தை மிதித்துக்கொண்டிருந்த ஆள் அவனிடம் சொன்னான்.
மிதிபட்டு வாடி விழுந்த செடி தற்செயலாக கிடைத்த ஈரத்தை உறிஞ்சி உயிர்பெற்று நிமிர்ந்து தளிர்விடும் தருணத்தில் மறுபடியும் மிதிபட்டு விழுவதுபோல அவர்கள் வாழ்வு மறுபடியும் நிலைகுலைந்தது. போரிலிருந்து வைக்கோல் எடுக்கப் போன சமயத்தில் ஒருநாள் அவன் அம்மாவை பாம்பு கடித்துவிட்டது. வைத்தியர் வந்து பார்ப்பதற்குள் விஷம் தலைக்கேறிவிட ஒருசில கணங்களிலேயே உயிரற்ற உடலாகிப் போனார்.
அம்மாவுக்குப் பிறகு அவனை பெயர் சொல்லி அழைக்க யாருமே இல்லை. அவன் நிறத்தை வைத்து, எல்லோருமே அவனை வெள்ளைக்காரன் என்றார்கள். அதைக் கேட்டுக்கேட்டு அவனும் அதையே தன் பெயராக எடுத்துக்கொண்டான். ”டேய் வெள்ளைக்காராஎன்று யார் அழைத்தாலும் ஓட்டமாக ஓடிச் சென்றுசொல்லுங்க சாமிஎன்று கைகட்டி நின்றான்.
பத்துப்பதினைந்து வருஷ காலத்தில் தொழுவத்தை அவன் தன்னுடைய கோவிலாகவே நினைத்து வாழ்ந்தான். சின்னப் பிள்ளைகளைப்போல மாடுகள் அவனைச் சுற்றி நின்றன. ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பெயரைச் சூட்டி கூப்பிட்டு மகிழ்ச்சியடைந்தான். அவன் பெயர் சொல்லி அழைக்கும்போதெல்லாம் அவை திரும்பிப் பார்த்துக் குழைந்தன. மனிதர்களோடு பேச முடியாததையெல்லாம் அவன் மாடுகளிடம் பேசினான். ”இப்படி ஒரு மாட்டுக்காரன பூமியில எங்க தேடனாலும் பார்க்கமுடியாதுஎன்று மரணப்படுக்கையில் சொன்ன பெரிய கவுண்டர் அம்சவல்லி அம்மாவை அழைத்துபாவம், தாயில்லாத புள்ள.  அவன நல்லா கவனிச்சிக்கோஎன்று சொல்லிவிட்டு இறந்தார்.
ஒருநாள் மாலை வழக்கமாக வண்டியை ஓட்டும் துளசிங்கத்துக்காக வெகுநேரம் காத்திருந்து ஏமாந்த சின்னக் கவுண்டர் அவனை அழைத்தார். வேட்டி சட்டையோடு மீசையை முறுக்கியபடி நிலைகொள்ளாமல் கூடத்தில் உலவிக்கொண்டிருந்த அவர் முன்னால் சென்று நின்றான் அவன். அவனைப் பார்த்ததுமே அவசரமாகநீ வண்டி ஓட்டுவியாடா வெள்ளக்காரா?” என்று கேட்டார். ”துளசிங்கம் தாத்தாவோடு சேந்து நாலஞ்சி தரம் ஒட்டியிருக்கேன் சாமி, ஆனா தனியா  ஓட்டி பழக்கமில்லஎன்று பதில் சொன்னான் அவன். “பொறக்கும்போது எல்லாத்தயும் பழகிகிட்டா பொறக்கறோம். போ. போ. போய் வண்டியில மாட்ட பூட்டி ஓட்டி வாடாஎன்றார். அச்சொற்களை அவனால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான் அவன். “டேய் வெள்ளக்காரா, சொல்றது காதுல உழலியா? போடா. போய் வண்டிய சீக்கிரம் ஓட்டி வாஎன்று சத்தம் போட்டார். பதற்றத்தோடு தொழுவத்துக்கு ஓடோடிச் சென்று எருதுகளை அழைத்து வந்து வண்டியில் பூட்டி சின்னக் கவுண்டருக்குப் பக்கத்தில் நிறுத்தினான்.
சிங்காரத்தோப்புக்கு போ?” என்று சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறி சாய்ந்து காலை நீட்டிக்கொண்டார் அவர். மண்சாலையைக் கடந்து பிரதான சாலையைத் தொட்டதும் வண்டி வேகமாக ஓடியது.  ஆற்றைக் கடந்ததும் ஒரு பெரிய புளியந்தோப்பு. அதைத் தாண்டி பச்சைப்பசேலென காற்றில் நெளிந்தாடும் வயல்வெளி. கோடு இழுத்ததுபோல நீண்டு செல்லும் வண்டிப்பாதை. எங்கோ ஒரு சில வீடுகள். சிங்காரத்தோப்புக்குள் நுழைந்த பிறகு செல்லுமிடத்துக்கு அவரே வழி சொல்லத் தொடங்கினார். நாலைந்து திருப்பங்கள். ஒரு கோவில். ஒரு மடம். கடைசியில் முன்பக்கம் பெரிய முற்றத்தோடு காணப்பட்ட ஓர் ஓட்டுவீட்டின் முன்னால் போய் நின்றது வண்டி. கீழே இறங்கிய சின்னக் கவண்டர் அவனிடம்இங்க நிக்க வேணாம் நீ. ஆத்தங்கரை பக்கமா எங்கயாச்சிம் நிறுத்திக்கோ. சாயங்காலம் சூரியன் மறைஞ்சதுக்கப்புறமா வந்தா போதும்என்று சொல்லிவிட்டு அந்த வீட்டுக்குள் போய்விட்டார்.
அன்று இரவு சாப்பாடு போட வந்த அம்சவல்லி அம்மாஎங்கடா போயிருந்தீங்க?” என்று அவனிடம் கேட்டார். போன இடம் வந்த இடம் எல்லா விவரங்களையும் விரிவாகச் சொன்னான் அவன். “நான் இல்லாத விரதமா, செய்யாத பூசையா. எல்லாத்தயும் இந்த படுபாவிக்காக செய்றேன். எந்த தெய்வமும் இவனுக்காக கண்ண தெறக்க மாட்டுதே. இனிமே நான் எந்த தெய்வத்துகிட்ட முறையிடுவன்?” என்று தனக்குத்தானே பேசியபடி கண்கலங்கினார் அம்சவல்லி அம்மா. அவர் கண்ணீரைப் பார்த்ததும் அவனால் தொடர்ந்து சாப்பிடவே பிடிக்கவில்லை. அளவுமீறிய பசியைத் தணிப்பதற்காக அவன் சோற்றை உருட்டி விழுங்கினான்.
சின்னக் கவுண்டரின் சிங்காரத்தோப்பு பயணங்களை யாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை. நினைத்த நேரத்துக்கு வண்டியை எடுக்கச் சொல்லி உத்தரவு போடுவது வழக்கமாகிவிட்டது. துளசிங்கம் தாத்தாவிடம் இருந்த வண்டிப்பொறுப்பு அவனிடம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. பயணங்களின் எண்ணிக்கை பெருகப்பெருக அம்சவல்லி அம்மாவின் ஆற்றாமையும் பெருகியது. தாய்ப்பாசத்தில்நீங்கள்லாம் சேந்துதான்டா அவன கெடுக்கறிங்கஎன்று வேதனையோடும் ஆத்திரத்தோடும் சொன்னார். “என்னைக்காவது வேணாம் கவுண்டரே, விட்டுடுங்க கவுண்டரேன்னு அவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிங்களாடா?” என்று குற்றம் சுமத்தினார்.
எடுத்துச் சொல்ற எடத்துலயாம்மா நாங்க இருக்கம்? அவருகிட்ட நாங்க எப்படிம்மா வாயத் தெறக்கறது?” என்று பணிவோடு அவர் முகத்தைப் பார்த்துக் கேட்டான் அவன். அம்சவல்லி அம்மா உடனே வேகமாகசுயபுத்தி இல்லாம அலயறவனுக்கு எடுத்துச் சொன்னாதானடா தெரியும்? சேத்துல உழுந்து பொரள்றவன சரி பொரளுங்கன்னு வேடிக்கை பார்க்கவா நீங்கள்லாம் இருக்கிங்க?” என்று எரிச்சலும் இயலாமையும் கலந்த குரலில் கேட்டுவிட்டு எழுந்து போனார்.
மறுநாள் காலையிலேயே வீட்டில் பெரிய  சண்டை நடந்தது. சின்னக் கவுண்டர்மீது அவருடைய மனைவியும் அம்சவல்லி அம்மாவும் மாறிமாறி குற்றம் சுமத்திப் பேசினார்கள். பதிலுக்கு அவரும் ஆத்திரத்தில் எதைஎதையோ பேசினார். உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் அந்தச் சண்டை ஓய்ந்தது. அதே வேகத்தில் வெளியே வந்த சின்னக்கவுண்டரின் மனைவிஇனிமேல சிங்காரத்தோப்பு கிங்காரத்தோப்புனு எவனும் இனிமேல இந்த ஊட்டு வண்டிய எடுக்கக் கூடாது. அத மீறி எவனாச்சிம் போனான்னா, அவனுக்கு இந்த பண்ணையில எடமும் கெடையாது, சோறும் கெடயாது. தெரிஞ்சிக்குங்கஎன்று எச்சரித்தபடி கொண்டையைப் பிரித்து ஒருதரம் உதறிவிட்டு கட்டியபடியே உள்ளே சென்றார்.
அதற்குப் பிறகு சின்னக் கவுண்டரின் போக்கில் பெரிய மாறுதல் தெரியத் தொடங்கியது. குத்தகைக்கு எடுத்திருந்த தென்னந்தோப்பிலும் பருத்திக் காட்டிலும் பொழுதைக் கழிக்கத் தொடங்கினார். மூன்று மாத காலம் சச்சரவில்லாமல் ஓடியது.
அந்த ஆண்டில் பருத்தி நன்றாக விளைந்திருந்தது. வழக்கத்தைவிட அதிகமான அறுவடை. களத்துமேட்டில் கொஞ்சம்கொஞ்சமாக பஞ்சை உதறி உலரவைத்து மூட்டைமூட்டையாகக் கட்டி அடுக்கினார்கள். பஞ்சுமண்டியின் அறிவிப்பு கிடைத்ததற்கு அடுத்தநாள் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவண்டி புறப்பட்டது. கணக்குப் பார்த்து பணம் பெற்று வருவதற்காக கூண்டு வண்டியில் சின்னக் கவுண்டர் கிளம்பினார். அக்கம்பக்கமிருந்த பல கிராமங்களிலிருந்தும் வண்டிகள் வந்து மண்டியில் வரிசையில் நின்றன. மூட்டைகளை இறக்கி எடைபோட்டு  ரசீது வாங்குவதற்குள் உச்சிப் பொழுதாகிவிட்டது. பணம் எடுத்து வருவதற்காக வங்கிக்குப் போன ஆள்  வரும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.
சின்னக் கவுண்டர் பக்கத்தில் இருந்த சாப்பாட்டுக் கடைக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். மண்டியில் பணம் கொடுக்கும் ஆள் வந்து சேர இன்னும் நேரமாகும் என்று பேசிக்கொண்டார்கள். சரக்குவண்டியை ஓட்டி வந்தவனிடம்நீ வேணும்ன்னா வீட்டுக்கு போ. நாங்க பணம் வாங்கிட்டு அப்பறமா வரோம்என்று சொல்லி அனுப்பிவைத்தார் சின்னக்கவுண்டர். 
மரத்தடியில் தனியே அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தவரிடம்  ஒருவித பரபரப்பு மின்னுவதை திகைப்போடு பார்த்தான் அவன். அதே கணத்தில் அவனை அருகில் அழைத்த சின்னக் கவுண்டர் அவனிடம்சிங்காரத் தோப்பு வரைக்கும் ஒருதரம் போயிட்டு வரலாமாடா?” என்று புன்னகையோடு கேட்டார். அவன் உடம்பு ஒருகணம் நடுங்கி அடங்கியது. அவர் சொல்வதை அவனால்  நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டான். பிறகுஐயா….. அது….. அது…” என்று ஏதேதோ பிதற்றினான். சரியான சொற்கள் கிடைக்காமல் நாக்கு குழறியது. “பணம் கொடுக்கற ஆள் வர்ரதுக்கு இன்னும் வெகுநேரம் ஆவும்னு சொல்றானே, காதுல உழல? அதுவரைக்கும் இங்க நின்னுகினு என்னா செய்யறது? கண்ண மூடி கண்ண தெறக்கற நேரத்துக்குள்ள போயி வந்துடலாம். வாடா……” என்று புன்னகைத்தார் சின்னக் கவுண்டர். அவனால் அந்தப் புன்னகையைக் கடந்து செல்லமுடியவில்லை. மெதுவாக அரைகுறை மனத்துடன் கவுண்டருக்குப் பின்னாலேயே நடந்து வண்டிக்கு அருகில் சென்றான்.
கல்யாணமுருங்கை மரங்களுக்கு அருகில் அவன் வண்டி நின்றிருந்தது. மரங்கள் உயர்ந்துகொண்டே போனால் ஒடிந்துவிடக்கூடும் என்று நினைத்தோ என்னமோ அதை நடுப்பகுதியோடு வெட்டியிருந்தார்கள். வெறும் தூண்கள்போல நின்றிருந்தன மரங்கள். வெட்டுப்பட்ட இடத்துக்கு பக்கவாட்டில் பச்சைப்புழுபோல சின்னதாக துளிர்கள் அரும்பியிருந்தன. ஒருகணம் அவற்றைப் பார்த்த சின்னக் கவுண்டர் திரும்பி மாடுகளை வண்டியில் பூட்டிக்கொண்டிருந்தவனிடம்இங்க பாருடா வெள்ளக்காரா, ஒரு மரம் கூட வெட்டவெட்ட துளுத்துகிட்டே இருக்குது. மனுஷனுக்கு மட்டும் ஆச துளுக்கக்கூடாதா?” என்று புன்னகைத்தார். பிறகு நீ எதுக்கு வீணா அலையணும்? இந்தா ரசீது. நீ வச்சிக்க. பணத்த குடுத்தான்னா வாங்கி வை. அதுக்குள்ள நானே வண்டிய எடுத்தும் போய்ட்டு வந்துர்ரேன்என்று சொல்லிக்கொண்டே ரசீதுச் சீட்டை அவன் கையில் வைத்து அழுத்திவிட்டு வண்டியில் ஏறி சிட்டுபோலப் பறந்துவிட்டார்.
நான்கு மணி வாக்கில் பணம் கிடைத்துவிட்டது. ஆனால் சின்னக் கவுண்டர் வரவில்லை. இருள் எங்கெங்கும் கவிந்து பரவியது. ஊர் அடங்குகிற நேரம் வரைக்கும் பஞ்சு மண்டிக்குள் வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டே இருந்தார்கள் ஆட்கள். அவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தபடி மண்டியையே பல முறை சுற்றிச்சுற்றி வந்து பொழுதைப் போக்கினான். மடியில் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தது. சின்னக்கவுண்டர் இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப அவனுக்குத் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. சின்ன அம்மாவின் எச்சரிக்கைச் சொற்கள் நினைவுக்கு வந்து, அவனைத் தடுத்தன.
ஒரு கட்டையில் உட்கார்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தபடி இருந்தான். ஒரு குழந்தை தவழ்ந்து வருவதுபோல நிலா மெல்ல மெல்ல ஊர்ந்து உச்சிக்கு வந்து சேர்ந்தது. ஒரே கணத்தில் அடர்ந்து பரவியிருந்த மேகங்களின் இடுக்கில் நுழைந்து பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. சின்னக்கவுண்டர் வந்துவிடுவார் என்னும் நம்பிக்கை கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்தது. அங்கே நிற்கவே பிடிக்கவில்லை. மண்டியைவிட்டு வெளியேறி  குழப்பத்துடன் கால்போன போக்கில் நடந்தான். அந்த அகால நேரத்தில் ஒரு மரத்தில் சில பறவைகள் திடீரென கூச்சலோடு விலகிப் பறந்து வானத்தில் வட்டமிட்டு அடங்கின. எதிரில் ரயில்வே ஸ்டேஷன் தெரிந்தது. பால்போல வெளிச்சத்தைப் பொழியும் விளக்குக்கம்பங்களுக்குக் கீழே அது ஒரு தீவுபோல காணப்பட்டது. அந்த நேரத்தில் எந்த ரயில் வரும் என்னும் விவரம் கூட அவனுக்குத் தெரியவில்லை. விசாரித்து சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்று ரயில் வந்ததும் ஏறி உட்கார்ந்தான். மறுநாள் காலை மெட்ராஸ்க்கு வந்து சேர்ந்தது வண்டி. மனபாரத்தையும் மடிபாரத்தையும் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குற்ற உணர்வு மனசுக்குள் நெருப்பாகக் கொதித்தது. எங்கேயாவது கண்காணாத இடத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது. அக்கம்பக்கத்தில் கேட்டு நடந்து சென்று காசிக்குப் போகிற ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு ஏறி உட்கார்ந்தான்.

பானி…. பானிஎன்று பரிசாரக அம்மாவிடம் சின்னப்பையன் கேட்ட குரலின் சத்தத்தால் அவன் நினைவுகள் கலைந்தன. கூச்சத்தோடு அவன் பையனின் இலையைப் பார்த்தான். காலியாக இருந்தது. தண்ணீர் கொண்டு வந்து வைத்த அம்மாவிடம் அவன்இன்னும் ரெண்டு சப்பாத்தி குடுங்கஎன்று சைகையால் சொன்னான். மெளனமாக அவற்றையும் சாப்பிட்டு முடித்தான் அவன்.
பணத்தைக் கொடுத்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். அக்கணத்தில் யாராவது துணைக்கு இருந்தால் நல்லது என்று அவனுக்கும் தோன்றியது. அவன் தமிழில் பேசினான். பையன் இந்தியில் பேசினான். சிக்கலான இடங்களில் இருவருமே சைகைகளில் பேசிக்கொண்டார்கள். அம்மா அப்பா யாருமற்ற சிறுவன் என்னும் விஷயம் தொடங்கி பல விஷயங்களை அவன் அப்பையனிடமிருந்து தெரிந்துகொண்டான். அந்தப் பையன் தன் மேல்சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினான். கோடுகோடாக அவன் வாங்கிய அடிகளின் வடுக்கள் தெரிந்தன. அவற்றைப் பார்த்ததும் அவன் அடிவயிறு ஒருகணம் சுருங்கி அடங்கியது.
சாலையைக் கடந்து கால்வாய்க்கரையோரமாகவே இருவரும் வெகுதொலைவு நடந்தார்கள். கிட்டத்தட்ட அந்த நகரத்தின் எல்லைக்கே வந்துவிட்டதுபோல இருந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு கம்பி வேலி தெரிந்தது. பையன் அதைத் தாண்டிப் போகக்கூடாது என அவனைத் தடுத்து நிறுத்தினான். துப்பாக்கியால் சுடுவதுபோல கையைக் காட்டிவிட்டுமில்ட்ரி. மில்ட்ரிஎன்றான்.
அவர்கள் ஊருக்குள் திரும்பியபோது இரவாகிவிட்டிருந்தது. மீண்டும் பழைய சாப்பாட்டுக்கடைக்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பரிசாரக அம்மாள் சிரித்தபடி வரவேற்றார். இரண்டு பேருக்கும் இலைபோட்டு சுடச்சுட சப்பாத்தி வைத்தார். அந்தப் பையன் அவற்றை மிகவும் ரசித்துச் சாப்பிட்டான். அந்தக் கணத்தில் அவன் மனம் இனி இதுதான் தனக்குச் சொந்த ஊர் என்று முடிவெடுத்தது. 
சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்த பிறகும் நகராமல் அங்கேயே அவன் நிற்பதைப் பார்த்துவிட்டு எதுவும் புரியாமல் கடைக்காரர் அவனிடம்என்ன வேணும்?” என்று விரல்களை அசைத்துக் கேட்டார். அவன் கொஞ்சமும் தயங்காமல் குனிந்து அவருடைய கால்களைத் தொட்டுஒரு வேலை வேணும்என்றான். கடைக்காரருக்கு தமிழ் புரியவில்லையே தவிர அவனுடைய கோரிக்கை என்ன என்று புரிந்துவிட்டது. மெதுவாகஎன்ன வேலை செய்வ நீ?” என்று கேட்டார். “எது சொன்னாலும் செய்வேன்என்பதுபோல அவன் பணிவோடு கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னான். கடைக்காரர் பரிசாரக அம்மாவைப் பார்த்து எதையோ சொல்ல, அந்த அம்மா அவர்களை பின்கட்டில் பாத்திரம் விளக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார். சமையல் பாத்திரங்கள் அங்கே குவியலாகக் கிடந்தன.
ஓரமாக உட்கார்ந்து அக்கணத்திலேயே வேலையைத் தொடங்கினான் அவன். சுவரோரமாக ஒரு மண்பாத்திரத்தில் தேங்காய் நாரும் ஏதோ பொடியும் இருந்தன. நாரை தண்ணீரில் நன்றாக நனைத்து பொடியில் தொட்டு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினான் அவன். ஏதோ ஒரு ஆட்டச்சாமானை வைத்துக்கொண்டு உருட்டி விளையாட்டு காட்டுவதுபோல அவன் பாத்திரம் தேய்ப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவன் சுத்தமாகக் கழுவிக் கொடுத்த பாத்திரத்தை சிறுவன் வாங்கிச் சென்று வேறொரு அறையில் கவிழ்த்து அடுக்கிவிட்டு வந்தான். பின்கட்டிலிருந்து அவர்கள் திரும்பிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் எல்லோரும் போய்விட்டிருந்தார்கள். அவன் கடைக்காரரின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் பெஞ்சுக்கு அடியில் நீட்டிக்கொண்டிருந்த துடைப்பத்தை எடுத்து கடைமுழுக்க சுத்தமாகப் பெருக்கி குப்பையை ஓரமாகக் கூட்டிக் குவித்தான்.
உன் பேரென்ன?” என்று கேட்டார் கடைக்காரர்.
வெள்ளைக்காரன்நிறுத்தி நிறுத்திச் சொன்னான் அவன்.
கடைக்காரர்வெள்ளிக்காரன், வெள்ளிக்காரன்என்று தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டார். ”வெள்ளி இல்ல, வெள்ளை. வெள்ளைஎன்று மீண்டும் மீண்டும் திருத்தினான் அவன். அவர் நாக்கில் வெள்ளை படிய மறுத்தது. ஒரு கட்டத்தில் அந்தச் சொல்லைத் திருத்தும் முயற்சியை அவனாகவே கைவிட்டுவிட்டான். கடைக்காரர் சிரித்துக்கொண்டே பெயரைக் கேட்பதற்காக அந்தப் பையன் பக்கமாகத் திரும்பி வாய் திறப்பதற்குள் அந்தப் பையனே முந்திக்கொண்டுஅமர்என்றான்.
கடைக்காரர் அவர்களை அங்கேயே பெஞ்சுகளில் படுத்துக்கொள்ளச் சொன்னார். பையன் படுத்ததுமே தூங்கிவிட்டான். பஞ்சுமண்டியிலிருந்து ஜபல்பூர் வரைக்குமான நினைவுகளை திரும்பத்திரும்ப மனசுக்குள் இழுத்து வந்து நிறுத்தி தூக்கமின்றி நீண்ட நேரம் புரண்டுகொண்டே இருந்தான். பஞ்சு விற்ற பணத்தோடு ஓடிவந்துவிட்டது முதல் குற்றம். சிங்காரத்தோப்புப் பக்கம் சின்னக்கவுண்டரைச் செல்லவிடாமல் தடுக்க முடியாமல் போனது இரண்டாவது குற்றம். குற்ற உணர்ச்சிகளால் தலை வெடிப்பதுபோலக் குழம்பி, பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் தூக்கத்தில் மூழ்கிப்போனான்.
ப்படித்தான் அவர்கள் அந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஆறு மாதங்களில் அவன் சப்பாத்தி, சமோசா, பூரி செய்வதிலும் உருளைக்கிழங்கு சீவல் போடுவதிலும் அவன் தேர்ச்சியடைந்தான்.  அவன் போடும் சமோசாவின் சுவை அந்த வட்டாரத்திலேயே பேர் போனதாக இருந்தது. ஐம்பது, நூறு சமோசா விற்றுக்கொண்டிருந்த கடையில் இருநூறு முந்நூறு சமோசாக்கள் விற்பனையாகத் தொடங்கின. அடுத்தடுத்த மாதங்களில் இனிப்புகள் போடும் வேலைகளையும் கற்றுக்கொண்டான்.  வாடிக்கையாளர்களிடம் பேசிப்பேசிப் பழகியதில் அவன் நாக்கில்  இந்தி சரளமாகப் படிந்தது. சம்பளமாக அவன் எதையும் கடைக்காரரிடம் பெற்றுக்கொள்ளவில்லை. தேவைப்படும்போது மொத்தமாக பெற்றுக்கொள்வதாகச் சொன்னான் அவன்.
ஒரு நாள் இரவில் தூக்கம் வரும்வரை இருவரும் படுத்தபடி பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சிகரமான அந்த உரையாடலின் தொடர்ச்சியாக அமர் அவனிடம்உங்களிடம் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்று தயக்கத்துடன் கேட்டான். “போலோ அமர்என்று அவன் தலைமுடியைக் கோதியபடி புன்னகைத்தான் அவன். “உங்களை நான் பிதாஜி என்று அழைக்கட்டுமா?” என்று தடுமாறினான் அமர். அதற்குள் அவன் கண்கள் தளும்பியதை அவன் பார்த்தான். அவனுக்கு உடல் ஒருகணம் சிலிர்த்தது. “தாராளமாக கூப்பிடு அமர்என்றபடி அவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். அவன் உச்சந்தலையில் மெதுவாக ஒரு முத்தம் கொடுத்தான். பிறகு அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தபடி இருந்தான். அமர் உறக்கத்தில் மூழ்கிய பிறகும் அவன் உறக்கமின்றி ஜன்னல் வழியே தெரியும் துண்டு வானத்தை வேடிக்கை பார்த்தான். அமர் சொன்ன ஒரு சொல்லை பல கோடி முறை நினைவுக்குக் கொண்டு வந்தபடி தூங்கிவிட்டான். 
அவனுக்குச் சேரவேண்டிய தொகையையெல்லாம் முதலீடாகப் போட்டு, ஒரு வருஷத்துக்குப் பிறகு கடைக்காரரே அவனுக்கு வேறொரு இடத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து வைத்துக்கொடுத்தார். கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டார் கடைக்காரர். அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. அவன்காவேரின்னு வைக்கலாமா?” என்று கேட்டான். “காவேரி கானாவலிஎன்று ஒருகணம் மனசுக்குள் சொல்லிப் பார்த்த கடைக்காரர்ரொம்ப நல்லா இருக்குதே, அதயே வச்சிடலாம்என்று உற்சாகமாகச் சொன்னார். அடுத்த வாரத்தில் ஒரு நல்ல நாளில் காவேரி கானாவலி செயல்படத் தொடங்கியது. ஆறு மாத காலத்திலேயே அந்த வட்டாரத்தில் அந்தக் கடையின் புகழ் பரவி வியாபாரத்தில் சூடு பிடித்தது.
கடை இல்லாத ஒரு விடுப்பு நாளில் அவனும் அமரும் நகரத்தைவிட்டு வெளியே நடைப்பயிற்சிக்குச் சென்றார்கள். வெகு தொலைவில் ஒரு குடியிருப்பில் ஒரு கோவில் தெரிந்தது. புதுசாகத் தெரிந்ததால் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டுத் திரும்பினார்கள். அப்போது கோவிலை ஒட்டி மரத்தடியில் ஒரு வயதான தாடிக்காரர்  பஞ்சை உருட்டி திரியாக்கியபடி உட்கார்ந்திருப்பதைத் தற்செயலாகப் பார்த்தான் அவன். அவருக்குப் பக்கத்தில் ஒரு கூடை நிறைய பஞ்சு இருந்தது. இன்னொரு கூடையில் திரிகளின் கட்டுகள் குவிந்திருந்தன. அவர் விரல்கள் ஒரு இயந்திரத்தின் தண்டுகள்போல திரியைச் சுருட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தன. முதலில் அவை அனைத்தும் விற்பனைக்காக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அவருடைய தோற்றம் அந்த சந்தேகத்தை நிராகரித்தது.
அக்கணத்தில் தன்னைக் கடந்து செல்லும் ஒருவரை நிறுத்தி திரிகளின் கூடையைச் சுட்டிக் காட்டிஎதற்காக அவர் அப்படி செய்கிறார்?” என்று கேட்டான். “கோயிலுக்குக் கொடுப்பாங்கஎன்றார் அவர். அவன்ஓகோ என்று சொல்வதற்குள்பொருள் சம்பாதிக்கறமோ இல்லயோ, வாழ்க்கையில எப்படியாவது புண்ணியத்த சம்பாதிக்கணும் இல்லயா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ஒருகணம் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான் அவன். புறப்படுவதற்கு முன்பாக முகத்தைத் திருப்பிக்கொண்டுஒருவேள பாவத்தை தொலைக்கறதுக்காகவும் இருக்கலாம். அதயெல்லாம் யாரு கண்டா? அவுங்கவுங்க மனசுக்குத்தான் வெளிச்சம்என்று சொன்னபடி வேகவேகமாக நடந்துபோய்விட்டார். அவர் முதுகையும் திரியுருட்டும் பெரியவரின் முகத்தையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு பெருமூச்சோடு திரும்பி நடந்தான் அவன். அக்கணத்தில் மனத்தின் ஆழத்திலிருந்து பஞ்சு விற்ற பணத்தோடு மண்டியிலிருந்து புறப்பட்டு வந்த இரவின் நினைவு மேலெழுந்து வந்து மறைந்தது. எதுவும் பேசாமல் மெளனமாக நடக்கும் அவனைப் பார்த்து அமர்என்ன பிதாஜி?” என்று கேட்டான். “ஒன்னுமில்ல, வாஎன்றபடி அவன் தொடர்ந்து நடந்தான்.
அடுத்த வாரம் எங்கிருந்தோ கூடை நிறைய பஞ்சுப்பொதியை வாங்கிவந்தான். இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு கை நிறைய கொத்தாக பஞ்சை எடுத்து வைத்துக்கொண்டு திரியுருட்டத் தொடங்கினான். “நீங்க எதுக்காக திரி உருட்டறீங்க பிதாஜி?” என்று குழப்பத்தோடு கேட்டான் அமர். அவன் அமரைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டு பதில் சொல்லாமலேயே திரி உருட்டுவதில் ஆழ்ந்திருந்தான். ”சொல்லுங்க பிதாஜி, உங்களுக்கு ஏன் இந்த வேல?” என்று மறுபடியும் கேட்டான். தலையை உயர்த்தி அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டுஎல்லாம் நம்ம பங்குல இருக்கிற பாவத்தைத் தொலைக்கறதுக்குதான்டாஎன்று சிரித்தான் அவன். ”பாவமா? நீங்க என்ன பாவம் செஞ்சீங்க?” என்று குழம்பியபடி சொற்களை இழுத்தான் அமர். “நான் பொறந்ததும் பாவம். வளந்ததும் பாவம். வாழ்ந்ததும் பாவம். அநியாயமா நம்ம கணக்கு ஏறிகிட்டே போவுது. அதையெல்லாம் முடிஞ்ச அளவுக்கு கொறச்சிடலாம்னு ஒரு நப்பாசை, வேற என்ன?” என்று புதிர்போலப் பேசினான் அவன். “சும்மா இருங்க பிதாஜி, வெளயாடாதீங்க…” என்று சிணுங்கினான் அமர். பஞ்சு உருண்டையிலிருந்து  தேவையான அளவுக்குப் பிரித்தெடுத்தபடிநான் என்ன இருக்கற வேலைய கெடுத்துகிட்டா இத செய்றேன்? ராத்திரியில தூக்கம் வரவரைக்கும் உருட்டுவேன். அவ்ளோதான். போய் நீ படு போ. காலையில சீக்கிரமா எழுந்திருக்கணுமில்லஎன்றான் அவன். ஒரு வாரம் கழித்து அவன் உருட்டிய திரிக்கட்டுகளையெல்லாம் எடுத்துச் சென்று பக்கத்தில் தெரிந்த கோவில்களுக்கு வழங்கிவிட்டு வந்தான். அன்று இரவே இன்னொரு கூடை பஞ்சு வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
கால ஓட்டத்தில் என்னென்னவோ மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வாடகை இடத்தில் நடந்த காவேரி கானாவலி சொந்த இடத்துக்கு இடம்பெயர்ந்தது. ஒரு கூடம் கொண்டதாக இருந்த கடை, இரு பெரிய கூடங்கள் கொண்டதாக மாறியது. பதினாறு பேர்கள் சம்பளத்துக்கு வேலை செய்தார்கள். பக்கத்திலேயேவெள்ளிக்காரன் ஸ்வீட் ஸ்டால்உருவானது. கடைக்கார அம்மாவின் ஏற்பாட்டில் அமருக்கும் சுமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுடைய ஆனந்தமான வாழ்க்கையின் அடையாளமாக ரேஷ்மாவும் சதீஷும் பிறந்து வளர்ந்தார்கள். கண்ணெதிரில் தவழ்ந்த குழந்தைகள் வளர்ந்து, படித்து, கல்லூரியில் பட்டம் பெற்று கல்கத்தாவுக்கும் தில்லிக்கும் வேலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஐம்பது ஆண்டுகள் கழிந்ததே தெரியவில்லை. ஆனால் கடை, நடை, அறை, கோவில் என்கிற அவனுடைய தினசரி அட்டவணையில் ஒருநாளும் மாற்றம் ஏற்பட்டதே இல்லை.  அதுவும் நாளடைவில் அறை, கோவில் எனச் சுருங்கியது.

ரவில் கடையிலிருந்து திரும்பியதும் ஒருமுறை, காலையில் கடைக்குப் புறப்படும்போது ஒருமுறை என தினமும் பிதாஜியின் அறைக்கு வந்து அவருடன் சிறிது நேரம் பேசுவதை அமர் ஒரு பழக்கமாகவே வைத்திருந்தான். ஒருநாள் இரவு பிதாஜியின் அறைக்குள் நுழைந்தபோது  சுவரோடு பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஏதோ பழைய காலத்துப் பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருக்க, அதைக் காதுகொடுத்துக் கேட்டபடி அவர் பஞ்சுத்திரிகளை  உருட்டி உருட்டி விரிப்பின் மீது வைத்துக்கொண்டிருந்தார். சத்தம் கேட்டு நிமிர்ந்து அமரைப் பார்த்துப் புன்னகைத்தார். ஞாபகத்துக்கு வந்த பழைய விஷயங்களையெல்லாம் அசைபோட்டபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ”சரி பிதாஜி, நான் வரட்டுமா?” என்று அமர் எழுந்திருந்த தருணத்தில் ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டவரைப் போலஅமர், ஒரு நிமிஷம், உன்கிட்ட ஒன்னு சொல்லணும்என்று அவனை நிறுத்தினார். ”சொல்லுங்க பிதாஜிஎன்றபடி அவன் அருகில் வந்தான்.
தன் இறந்த காலத்து விஷயங்களையெல்லாம் அவனிடம் கொட்டி மனபாரத்தை இறக்கிவைத்துவிட வேண்டும் என்று நினைத்து, ஆரம்பிக்க ஒரு சொல் கிடைக்காமல் தடுமாற்றத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தார். அதற்குள் அவன் மறுபடியும்சொல்லுங்க பிதாஜிஎன்று கேட்டான். பாரம் முழுக்க திடீரென பின்வாங்கி மனசுக்குள்ளேயே அடைபட்டுவிட, “ஒன்னுமில்ல அமர். இந்த திரி உருட்டற வேலை என்னோடு நின்னு போயிடக் கூடாது. எனக்குப் பிறகு நீயும் அதைச் செய்யணும்என்று பேச்சை திசைமாற்றினார். அதைக் கேட்டுஅதுக்கென்ன பிதாஜி, கண்டிப்பா செய்றேன். சுமாகிட்ட சொன்னா வண்டிவண்டியா உருட்டிடுவாஎன்றான் அமர். வெள்ளைமுடி அடர்ந்த தலையை அசைத்தபடி புன்னகைத்துக்கொண்டே பிதாஜிநீ செஞ்சா போதும் அமர். அவளயெல்லாம் இதுல இழுத்து உடாத. என்ன மாதிரி நீ கட்டுகட்டா உருட்ட வேணாம். தெனம் ரெண்டே ரெண்டு திரி உருட்டி எடுத்தும் போயி கோயில்ல போட்டா போதும். செய்வியா?” என்று கேட்டார். ”கண்டிப்பா செய்றேன் பிதாஜிஎன்று சொன்னபடி அவருடைய தளர்ந்து சுருங்கிய கையை எடுத்து தன் கைக்குள் வைத்து சில கணங்கள்  அழுத்தினான். பிறகு அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறினான்.
மறுநாள் காலையில் தேநீர்க் கோப்பையோடு பிதாஜியை எழுப்புவதற்காக அறைக்குள் சென்ற அமருக்கு பஞ்சுத்திரியுடன் அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. ”வயசானாவே தூக்கம் கொறஞ்சிடும் போலஎன்று மனசுக்குள் முணுமுணுத்தபடி என்ன பிதாஜி, இன்னைக்கு காலையிலயே திரி போட ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் சென்று கோப்பையை அவர் முன்னால் வைத்தான். குனிந்த தலை நிமிராத அவருடைய கோலத்தின் விபரீதம் அப்போதுதான் அவன் மூளையில் சட்டென உறைத்தது. அவசரமாக பிதாஜி பிதாஜிஎன்றபடி அவருடைய தோளைத் தொட்டு அசைத்தான். உயிர் பிரிந்த உடல் அவனுடைய கைகள் மீது ஒரு பஞ்சு மூட்டைபோல சரிந்தது. மெலிந்த அவருடைய விரல்களுக்கிடையில் ஒரு திரி நீட்டிக்கொண்டிருந்தது.
(2016 இல் அம்ருதா இதழில் வெளிவந்த சிறுகதை)