10.06.2019 அன்று காலை எட்டரை மணியளவில் தேசிய அளவில் அனைத்து மொழி நாடக ஆர்வலர்களும் பார்வையாளர்களும் நெருக்கமாக அறிந்த கிரீஷ் கார்னாட் இயற்கையெய்தினார். ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகளாக உயிர்க்காற்றை நிரப்பியிருக்கும் உருளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறுகுழாய் மூக்கோடு பொருந்தியிருக்கும் நிலையிலேயே அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துவந்தார். அந்த நிலையில் அவரைப் பார்ப்பவர்கள் ஒருகணம் சற்றே பதற்றம் கொண்டு கலங்கிவிடுவார்கள். ஆனால் கார்னாட் வழக்கமான தன் ஒளிரும் புன்னகையோடு அரங்குக்கு வந்து அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு உரையாடிவிட்டுச் செல்வார். தன் முடிவு நெருங்கிவருவதை அப்போது அவர் அறிந்திருக்கக்கூடும். ஆனால் அதை எண்ணிக் கலங்கியவராக அவரை எங்கும் என்றும் கண்டதில்லை. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சில நாடகங்களைப் பார்ப்பதற்குக்கூட அவர் அந்தக் கோலத்திலேயே வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். நாடகமே அவருக்கு உலகமாகவும் உயிராகவும் இருந்தது. முதலில் ஓவியராக இருக்க விரும்பி, பிறகு கவிஞராக மலர நினைத்து, இறுதியில் நாடகமே தனக்குரிய களம் என்பதைக் கண்டுகொண்டவர் அவர்.
அவருடைய மறைவுச்செய்தி கிடைத்ததுமே கர்நாடக அரசு தானாகவே முன்வந்து அரசுமரியாதையுடன் அவருடைய இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும் அன்றைய தினம் பள்ளிகளுக்கும் அரசு அலவலகங்களுக்கும் விடுப்பு என்றும் மாநிலம் முழுவதும் மூன்றுநாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் தன் உடல்தகனம் எவ்விதமான சடங்குகளும் இல்லாத வகையில் மிக எளியமுறையில் நடைபெறவேண்டும் என்பதையே தன் இறுதி விருப்பமாக கார்னாட் கூறிவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவித்து அவருடைய குடும்பத்தார் அரசின் முடிவை மறுத்துவிட்டனர். அஞ்சலி செலுத்த விழையும் நண்பர்கள் அனைவரையும் தகன மையத்துக்கே நேரிடையாக வருமாறு கேட்டுக்கொண்டனர். அதற்குள் கார்னாடின் மறைவுச்செய்தியை அறிந்த உறவினர்களும் நெருக்கமான சிலரும் அவருடைய வீட்டுக்கு வந்துவிட்டனர். கார்னாடுடைய உடல் ஏறத்தாழ மூன்று மணிநேரம் மட்டுமே அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
கலங்கிய விழிகளுடன் நண்பர்கள் அந்தச் சிறிய கூடத்தில் அங்கங்கே நின்று கார்னாடுடைய உடலை மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு நண்பர் கார்னாடுடைய ‘தலெதண்ட’ நாடக நூலைப் புரட்டி பார்வையில் பட்ட பக்கத்தைப் படிக்கத் தொடங்கினார். அவர் முடித்ததும் இன்னொரு நண்பர் தன் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தன்னிச்சையாக ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தார். அதற்குப் பிறகு மற்றொருவர், அவருக்குப் பிறகு இன்னொருவர் என ஏழெட்டு நண்பர்கள் நாடக உரையாடல்களைப் படித்தார்கள். அந்த வாசிப்பே அன்று கார்னாடுக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலியாக அமைந்துவிட்டது.
மனத்தைக் கலங்கவைத்த அந்த வாசிப்பைக் கேட்கக்கேட்க முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கலந்துகொண்ட வாசிப்பு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அன்று தார்வாட் நகரில் இருந்தேன். மாலை நேரத்தில் பொழுதுபோக்காக கண்போன போக்கில் நானும் ஒரு கன்னட நண்பனும் நடந்துகொண்டிருந்தோம். முடிவில் ஒரு கடையில் தேநீர் பருகியபோது அருகிலிருந்த அரங்கத்தில் நாடக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து, அங்கே சென்றோம். மேடையில் நாலைந்து பேர் நின்றுகொண்டு நாடக உரையாடல்களை மாறிமாறிப் படித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு அது புதுமையாக இருந்தது. அப்படி ஒரு மேடையை நான் அதுவரை பார்த்ததில்லை. கன்னடத்தில் அது தொன்றுதொட்டு நிலவும் பழக்கம் என்று நண்பர் சொன்னார். அன்று படிக்கப்பட்ட நாடகப் பிரதி ‘ஹயவதனன்’. எழுதியவர் கிரீஷ் கார்னாட். தொடக்கத்தில் சிரமமிருந்தாலும் போகப்போக கதையின் போக்கைப் புரிந்துகொண்டேன். ஒவ்வொரு உரையாடலும் உற்சாகம் அளிக்கத் தொடங்கியது. பத்மினிக்கும் தேவதத்தனுக்கும், பத்மினிக்கும் கபிலனுக்கும் இடையில்
நிகழும் உரையாடல்கள் கற்பனையைத் தூண்டுவதாக இருந்தன. மறுநாள் அந்த நாடகத்தை அதே அரங்கில் பார்த்தேன். ஒரு சின்னஞ்சிறிய நாட்டுப்புறக் கதையை மையமாகக் கொண்டு கற்பனையைக் கலந்து புனையப்பட்டிருந்தது அப்படைப்பு. முதல்நாள் நிகழ்த்தப்பட்ட வாசிப்பை ஒவ்வொரு கலைஞரும் உயிர்த்துடிப்புடன் பேசி நடித்தார்கள்.
அந்த நாடகம் மறக்கமுடியாத ஓர் அனுபவம். பத்மினியும் தேவதத்தனும் கபிலனும் மீண்டும் மீண்டும் என் நெஞ்சில் தோன்றி அவரவர் தரப்பு நியாயங்களை எனக்குள் உரைத்தபடி இருந்தனர்.
தலைகள் மாறிப் போவதுதான் நாடகத்தின் முக்கியப் பிரச்சினை. ஆனால் கார்னாட் அது மிகமிக இயல்பாக நிகழும்வண்ணமும் முழு அளவில் நம்பகத்தன்மை உருவாகும் வண்ணமும் சிறிதும் மிகையின்றி அந்தக் காட்சியை அமைத்திருந்தார். மன அமைதி குலைந்த சூழலில் காளி சிலைக்கு முன்னால் நிற்கும் தேவதத்தன் பழைய நினைவின் உந்துதலால் தன் தலையை தானே வாளெடுத்து வெட்டிக்கொள்கிறான். நண்பனைத் தேடி வரும் கபிலன் நண்பனின் மரணத்துக்கு தான் காரணமாகிவிட்டோமோ என்னும் குற்ற உணர்வில் அதே வாளையெடுத்து தற்கொலை செய்துகொள்கிறான். சென்றவர்கள் இருவரும் நீண்ட நேரமாக திரும்பிவரவில்லியே என்று அவர்களைத் தேடி வரும் பத்மினி தலைவேறு உடல்வேறு என விழுந்துகிடக்கும் கோலத்தைக் கண்ட பதற்றத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தலைகளை மாற்றிப் பொருத்திவிடுகிறாள். தன்னை மயக்கும் உடலழகு கொண்டவனின் உடலோடு பொருந்தியிருக்கும் கணவனின் முகம். கணவனின் நொய்ந்த உடலோடு பொருந்தியிருக்கும் நண்பனின் முகம். உடலளவிலும் உள்ளத்தளவிலும் முழுமை பெற்ற ஆணை விரும்பும் பத்மினி உடலைத் தேர்ந்தெடுப்பதா உள்ளத்தைத் தேர்ந்தெடுப்பதா என்னும் மனக்குழப்பத்துக்கு ஆட்பட்டுத் தவிக்கிறாள். மன நெருக்கடிகளுக்கு சொல்வடிவம் கொடுப்பதில் கிரீஷ் கார்னாட் தேர்ச்சியுள்ளவர். அச்சொல் வடிவத்துக்கு உயிர்த்துடிப்பான அசைவுகளையும் உரையாடல்களையும் ஒருங்கே உருவாக்குகிறவர்கள் அவருடைய பாத்திரங்களை ஏற்று நடிக்கும் கலைஞர்கள்.
முதல்முறையாக ஹயவதனன் நாடகத்தைப் பார்த்தபிறகு வெவ்வேறு குழுக்கள் அரங்கேற்றிய அதே நாடகத்தை பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும்
புதிய புதிய கலைஞர்களின் ஆற்றலைக் கண்டு மனநிறைவு கொண்டிருக்கிறேன். அவர்களுடைய ஈடுபாட்டின் ஆழம் வியப்பூட்டக்கூடியது. எங்கோ, யாருடைய உருவத்திலோ, பத்மினியும் தேவதத்தனும் கபிலனும் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தபடியே இருக்கிறார்கள் என்றே ஒவ்வொரு முறையும் தோன்றும்.
ஒருமுறை பெங்களூரு ரவீந்திர கலாஷேத்திர அரங்கில் ஹயவதனன் நாடகம் நடைபெற்றது. அதைப் பார்க்க கார்னாடும் வந்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த நாடகக்குழு ஹயவதனன் நாடகத்தை நூறாவது முறையாக மேடையில் நடிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அது. அதே குழுவின் சார்பில் இதற்குமுன்பாக பத்மினியாக, தேவதத்தனாக, கபிலனாக பல கலைஞர்கள் மாறிமாறி நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று புதிய கலைஞர்கள் நடிக்கும் அந்தக் காட்சியைக் காண திரளாக வந்திருந்தார்கள். ஏறத்தாழ இரண்டு மணிநேர நாடகம். பார்வையாளர் வரிசையில் நானும் நண்பர் ஜி.கே.ராமசாமியும் அமர்ந்திருந்தோம். ஒவ்வொருவரும் தேர்ச்சிமிக்க நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.
நாடகம் முடிந்ததும் மேடையில் எல்லா விளக்குகளும் ஒளிர, கலைஞர்கள் அனைவரும் வரிசையில் நின்றார்கள். பார்வையாளர்கள் கைத்தட்டல்களால் அரங்கம் நிறைந்தது. வழக்கம்போல நடிகர்களை அறிமுகப்படுத்தும் நேரம் அது. இயக்குநர் எழுந்து மேடைக்குச் சென்றார். சட்டென அவரோடு எழுந்து கார்னாடும் மேடைக்குச் சென்றார். மேடையில் அவரைப் பார்த்ததும் பார்வையாளர்கள் கைதட்டல்கள் இன்னும் பெருகத் தொடங்கின. புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் சொன்ன கார்னாட் ஒலிவாங்கியின் முன்னால் நின்று ‘கலைஞர்களை இன்று நான் அறிமுகப்படுத்துகிறேன்’ என்று சொன்னார். கலைஞர்களுடைய முகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் சுடர்விட்டன.
முதலில் சில நிமிடங்கள் எல்லாக் கலைஞர்களுடைய நடிப்புத் திறமையையும் அர்ப்பணிப்புணர்வையும் மெச்ச்சிப் பேசினார்.
”ஒரு கலைஞனுக்கு அர்ப்பணிப்புணர்வு மிகமிக முக்கியம். அர்ப்பணிப்பு இருந்தால்தான் கலை வாழும். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக நான் எண்ணற்ற நாடகக் காட்சிகளைப் பார்த்து வருகிறேன். பல கலைஞர்களின் ஆற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுடைய அர்ப்பணிர்ப்புணர்வைப் பார்த்து மெய்சிலிர்த்திருக்கிறேன். உங்களால் இந்த நாடகக்கலை இந்த மண்ணில் நீடித்து வாழும் என்னும் நம்பிக்கை எனக்குள் உறுதிப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”
அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் நிறைந்தது. கார்னாட் மேடையில் நின்றிருந்த கலைஞர்களைப் பார்த்து கைத்தட்டி தன் பாராட்டைத் தெரிவித்தார்.
“இந்தக் குழு இந்த நாடகத்தை இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முதலாக நடித்தபோது பத்மினி பாத்திரத்தில் நடித்தவர் வைஷாலி. அவர் யார் தெரியுமா? திரைப்பட இயக்குநர் கிரீஷ் காசரவள்ளியின் மனைவி.
இப்போது பத்மினி பாத்திரத்தில் நடித்திருப்பவர் வைஷாலியின் மகள் அனன்யா காசரவள்ளி”
சில கணங்கள் பேச்சை நிறுத்தியபோது அவர் முகத்தில் புன்னகை பூத்தது. அதைக் கேட்டு பார்வையாளர்கள் அனைவரும் எழுந்துநின்று நீண்ட கைத்தட்டினார்கள்.
அது மட்டுமல்ல, கபிலன், தேவதத்தன், பாகவதர்
பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் அனைவருமே இதற்கு முன்பு நடித்த கலைஞர்களுடன் ஏதோ ஒருவகையில் நெருங்கிய உறவுகொண்டவர்கள் என்பதை விரிவாக வகையில் எடுத்துரைத்தார் கார்னாட். பிறகு இயக்குநரையும் பாராட்டிப் பேசினார். இறுதியாக “இதை இயக்குநர் சொல்லமாட்டார் என்பதால்தான் நானே மேடைக்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு கலைஞர்களின் வரிசையில் நின்றுகொண்டார்.
ஒருவரை மனம் திறந்து பாராட்ட கார்னாட் என்றும் பின்வாங்கியதே இல்லை. அவருடைய பேச்சு எப்போதும் மடை திறந்த வெள்ளமென இருக்கும். தயக்கம் என்பதே அவரிடம் இருந்ததில்லை. நான் அதை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். கன்னட நாடகம் மட்டுமின்றி இந்தி, மராத்தி, வங்காள மொழியில் நடிக்கப்படும் நாடக நிகழ்ச்சிகளுக்கும் பார்வையாளராக வந்து பார்ப்பதையும் பாராட்டுவதையும் அவர் வழக்கமாகவே கொண்டிருந்தார். பார்வையாளர் வரிசையில் அவர் அமர்ந்திருக்கும் பல
நாடகங்களை நானும் ஒரு வரிசையில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட
நான்கு மணி நேரம் நிகழ்ந்த ‘கசாக்கின்ட இதிகாசம்’ என்னும் திறந்தவெளி மலையாள நாடகமும் அறிவியலாளர் ஐன்ஸ்டீனாகவும் காந்தியாகவும் நடித்த நசீருத்தின் ஷாவின் ஆங்கில நாடகங்களும் என் மனத்தை நிறைத்த அனுபவங்கள்.
தகன மையத்துக்கு கிரீஷ் கார்னாடின் உடலை எடுத்துவரும் வரைக்கும் தொடர்போடும் தொடர்பில்லாமலும் இப்படி ஏராளமான நினைவுகள் மனத்தில் மோதிக்கொண்டே இருந்தன. கலைக்கக் கலைக்க அவை என் மீது கவிந்தபடியே இருந்தன. நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் தகனமையத்துக்குச் சென்றிருந்தோம். சுற்றியிருந்த புல்வெளிகளிலும் சிமெண்ட் பெஞ்சுகளிலும் எங்கெங்கு பார்த்தாலும் நாடகக்கலைஞர்களின் முகங்கள். பத்திரிகைக்காரர்கள். ராமச்சந்திர குஹாவும் ஓவியர் வாசுதேவும் இன்னும் சிலரும் துயரம் கவிந்த முகங்களோடு அமர்ந்திருந்தார்கள்.
எளிய மூங்கில்படுக்கையில் கிடத்தப்பட்ட அவருடைய உடல் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு நிலைய வாசலில் சிறிது நேரம் வைக்கப்பட்டது. எவ்விதமான சடங்கும் இல்லை. கார்னாடின் துணைவியாரும் மகனும் மகளும் இறங்கி ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் தமக்குத்தாமே ஒழுங்கை விதித்துக்கொண்டவர்களாக வரிசையில் வந்து அவரை வணங்கிவிட்டுச் சென்றார்கள். பிறகு அவருடைய உடல் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. நாங்கள் தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் சென்றோம். எரிஉலைக்குள் செலுத்தும் முன்பாக மீண்டும் ஒரு நிமிடம் அனைவரோடும் சேர்ந்து மெளனமாக அஞ்சலி செலுத்தினோம். விழியோரம் திரண்ட கண்ணீர்த்துளிகளோடு “சென்று வாருங்கள் கார்னாட்” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். அக்கணம் வரைக்கும் அலைமோதியபடி இருந்த நினைவுகள் எல்லாம் கரைந்துவிட திடீரென ஒரு வெற்றுப்பாத்திரத்தைப்போல மனம் மாற்விட்டதை உணர்ந்தேன்.
(2019 ஜூலை
மாத ’காலச்சுவடு’ இதழில் வெளிவந்த கட்டுரை )