Home

Sunday 20 November 2022

தியாக தீபங்கள்

 

காந்தியடிகளின் தலைமையில் இருவிதமான அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று இந்திய விடுதலைப்போராட்டம். மற்றொன்று தேச நிர்மாணப்பணிகளை நிறைவேற்றுதல். இவ்விரு பாதைகளிலும் ஈடுபட்டு தியாக உணர்வுடன்  தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகள் பலர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என்கிற மத வேறுபாடுகளைக் கருதாது நல்லிணக்கப்பார்வையுடன் நாட்டின் மேன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு உழைத்தவர்கள் அவர்கள்.

இன்று நாடு விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் நாட்டின் விடுதலைக்காக உழைத்தவர்களைப்பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த தலைமுறையினரைச் சென்று சேரவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தைப்பற்றி நாம் அனைவரும் அறிவோம். திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் நடைப்பயணமாகச் சென்று வேதாரண்யத்தில் முகாமிட்டு அகஸ்தியம்பள்ளி என்னும் இடத்தில் முதன்முதலாக இராஜாஜி உப்பு அள்ளி கைதானார். அப்போது நடைபெற்ற சத்தியாகிரக ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 98 பேர். ஆனால், இன்றுவரை அந்த 98 பேர் கொண்ட முழுமையான பட்டியலை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அகஸ்தியம்பள்ளியில் நின்றிருக்கும் நினைவுத்தூணில் கூட இந்த சத்தியாகிரகிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியல் இல்லை. நடைப்பயணம் குறித்து வேதரத்தினம் பிள்ளையின் முயற்சியால் உருவான ஒரே ஒரு ஆவணப்பதிவைத் தவிர நேரடி ஆவணங்களாக எதுவும் இல்லை. யாரையும் குறை சொல்வதற்காக இதை எழுதவில்லை. பொதுவாகவே நமக்கு மனிதர்களைப்பற்றியும் தியாகிகளைப்பற்றியும் வரலாற்றுத்தருணங்களைப்பற்றியும் ஆவணப்படுத்தும் பழக்கம் நமக்குள் இயல்பாக ஊறிவரவில்லை.

தியாகிகளைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் படிக்கும்போது, நமக்கு முகம் தெரியாதவர்களாக இருந்தாலும் கூட, நாம் இன்று இந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையைப் பெற்றுத் தந்த தியாகிகள் என்னும் மதிப்புணர்வும் பெருமித உணர்வும் நன்றியுணர்வும் நமக்குள் இயல்பாக பொங்கியெழவேண்டும். அடுத்தடுத்த தலைமுறையினரிடம் அவர்களைப்பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று சேர்க்கும் கடமை நமக்குள்ளது. அவர்களைப்பற்றி குறைந்தபட்சமாக நம் குடும்ப உறுப்பினர்களிடையே எடுத்துரைத்து அவர்களுடைய தியாகங்களைப்பற்றிய நினைவுகளை அழுத்தமாகப் பதியவைக்கலாம். குடும்ப எல்லையைக் கடந்து நட்புவட்டம் கொண்டவர்கள், தியாக உள்ளங்களைப்பற்றிய செய்திகளை அவர்களிடையே பரவச் செய்யலாம். பேச்சாற்றல் உள்ளவர்கள் மேடையில் பேசலாம். எழுத்தாற்றல் உள்ளவர்கள் ஒருபக்கக் கட்டுரையையாவது எழுதலாம். பொருள்வசதி உள்ளவர்கள் தத்தம் வட்டாரத்தில் வாழ்ந்த தியாகிகளைப்பற்றிய பிரசுரங்களையோ, நூல்களையோ வெளியிடலாம். இது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய முக்கியமான கடமை.

காந்தியடிகளின் தண்டி யாத்திரையைத் தொடர்ந்து வேதாரண்யத்தில் இராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றியும் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தைப்பற்றியும் நாம் பல இடங்களில் படித்திருப்போம். இந்த நூலில் சேவியர் தூத்துக்குடியில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தைப்பற்றி ஒரு விரிவான சித்திரத்தை அளித்திருக்கிறார். அப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் ஜே.பி.ரோட்ரிகுவஸ். அவர் சென்னையிலும் வேதாரண்யத்திலும் நடைபெறும் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் பற்றிய செய்தியை அறிந்துகொண்டதும் அவருக்கு தம் பகுதியிலும் ஒரு போராட்டம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாக தோன்றியுள்ளது. உடனே தம் பகுதியில் வாழும் எண்ணற்ற மீனவர்களை ஓர் அணியாகத் திரட்டினார். அவர்களை ஏறத்தாழ ஏழு மைல் தொலைவுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று தூத்துக்குடி கடற்கரையை அடைந்து உப்புச்சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார். காவல்துறையினர் ரோட்ரிகுவஸையும் மற்றவர்களையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணையில் அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் இருநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இராஜாஜியும் சத்தியமூர்த்தியும் அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில்தான் அவர்களும் அடைக்கப்பட்டனர்.

வலேரியன் பெர்னாண்டோ என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர். இந்திய விடுதலைக்காகப் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன் மதுரைக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டார். காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சமயத்தில் அவர் தன் தாயாரை இழந்தார். தாயாரின் இறுதிச்சடங்கில் கூட பங்குகொள்ள முடியாமல் துக்கத்தை நாட்டுக்காகத் தாங்கிக்கொண்டார். விடுதலைக்குப் பிறகும் தமிழ்நாட்டுப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மடத்திட்டுவிளை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் இராயப்பன். வருமானத்துக்காக ஒரு கடையில் சிப்பந்தியாக வேலை செய்தபோதும், அவர் மனம் தேசப்பற்றால் நிறைந்திருந்தது. அதனால் அக்கம்பக்கத்தில் தேச விடுதலைக்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களைப்பற்றிய செய்தி கிடைத்ததும், உடனே அங்கு சென்று பங்கெடுத்துக்கொள்வது அவருடைய பழக்கமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகளால் எரிச்சலுற்ற அவருடைய முதலாளி ஒருநாள் அவரை அழைத்து கண்டிப்பாகப் பேசினார். அக்கணமே இராயப்பன் அந்த வேலையை உதறிவிட்டு வெளியேறினார். கிடைக்கும் சிறுசிறு வேலைகளைச் செய்தபடி போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து ஏழு வாரங்கள் சிறையில் அடைத்தனர். சிறையில் ஒருபகுதியும் போராட்டங்களில் மறுபாதியுமாகவே அவருடைய வாழ்நாள் கழிந்தது. இதுவரை பெரிதும் வெளியே அறியப்படாத சந்தியாகு, பெஞ்சமின், குழந்தைசாமி, கபிரியேல், கே.டி.பால் போன்றோரைப்பற்றிய தகவல்களை சேவியர் நேர்த்தியாகத் தொகுத்துள்ளார்.

மாசிலாமணி – ஜெபமணி அம்மையார் தம்பதியினரைப்பற்றிய குறிப்புகள் இந்த ஆய்வேட்டின் மிகமுக்கியமான பகுதியாகும். இருவருமே காந்தியடிகளின் அறவழிப்பாதையில் ஈடுபாடு கொண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாகிரக போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டனர். 1931இல் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு காந்தியடிகள் எழுப்பிய அடிப்படை உரிமையைப்பற்றி தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார் மாசில்லாமணி. 1936இல் சிவகங்கையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி பேருரை ஆற்றினார். நல்ல பேச்சாற்றலும் கவிதை புனையும் ஆற்றலும் நிறைந்தவர்.

பக்தி மிக்கவரான அவர் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் முன் 20.01.1941 அன்று தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். உடனடியாக அவரைக் கைது செய்த அரசு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் இருநூறு ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக இரு மாதங்கள் சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டார் மாசில்லாமணி. அதற்குப் பிறகு விடுதலையானாலும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறைக்குச் செல்லும் நிலை தொடர்ந்தது. திருநெல்வேலி, வேலூர், சேலம், கண்ணனூர், தஞ்சாவூர் என பல சிறைகளில் மாறிமாறி இரண்டரை ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய மனைவியான ஜெபமணி அம்மையாரையும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடவைத்தார்.

விவேகானந்தரின் சீடர், பாரதியாரின் ஞானகுரு என்ற அளவில் நாமனைவரும் தெரிந்துவைத்திருக்கும் சகோதரி நிவேதிதை ஆற்றியிருக்கும் பல்வேறு செயல்களைப்பற்றி சேவியர் விரிவான சித்திரத்தைக் காட்டுகிறார். பிறப்பால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றபோதும் இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர்களில் ஒருவராக நிவேதிதை தொண்டாற்றியிருக்கிறார். 1902 முதல் 1904 வரை இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று அரசியல் விடுதலையின் தேவை பற்றி உரையாற்றியிருக்கிறார். அரவிந்தரின் புரட்சிக்குழுவில் இயங்கியதோடு மட்டுமன்றி, அவர் சிறைபுகுந்த பிறகு கர்மயோகி இதழை நடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பணியாற்றியிருக்கிறார். 1905இல் கர்சன் என்னும் கவர்னரால் வங்காளம் பிரிக்கப்பட்டபோது உருவான எல்லா எதிர்ப்புப் போராட்டங்களிலும் நிவேதிதை கலந்துகொண்டு குரல் கொடுத்திருக்கிறார். கர்சனின் தன்னலம் மிக்க செயலைக் கண்டித்து 19.02.195 அன்று ஆனந்த பசார் பத்திரிகையில் விரிவானதொரு கட்டுரையை எழுதினார். 25.12.1905 அன்று பெனாரஸ் காங்கிரஸ் பொதுக்குழுவில் பங்கெடுத்து உரையாற்றினார். “நான் இந்தியாவை என் தாய்நாடாகவே கருதுகிறேன்” என்று பலமுறை வெளிப்படுத்திய சகோதரி நிவேதிதையின் கல்லறையில் “இந்தியாவிற்காக அனைத்தையும் இழந்த சகோதரி நிவேதிதை இங்கு துயில் கொள்கிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. 

தமிழகத் தலைவர்களில் சிலர் என்னும் தலைப்பில் அமைந்த ஐம்பது பக்கங்களைக் கொண்ட இயலில் ஆண்கள், பெண்கள் உட்பட பதினாறு தியாகிகளைப்பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. இதுவே இந்த ஆய்வேட்டிற்குப் பெருமை சேர்க்கும் பகுதி. இவர்களைப்பற்றிய தகவல்களுக்காக பாடுபட்ட சேவியரின் உழைப்பு வணக்கத்துக்குரியது.  சேவியர் இன்னும் சற்றே ஆர்வத்துடன் பாடுபட்டு, இன்னும் சில தகவல்களைத் திரட்டி, ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாக ஐம்பது பக்கங்கள் கொண்ட புத்தகமாக, இந்தப் பதினாறு தியாகிகளைப்பற்றியும் பதினாறு புத்தகங்கள் எழுதவேண்டும். அத்தகு விரிவான சித்திரங்களை முன்வைக்கும்போதுதான் வாசிப்பவர்கள் நெஞ்சில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

இந்த நூல் உருவான விதத்தைப்பற்றி திருஇருதயத்தூதன் மாத இதழின் ஆசிரியரான அ.ஸ்டீபன் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் குறிப்பு மிகமுக்கியமானது அவர் அந்த இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றுக்கொண்டதும் சுதந்திரப்போராட்டத்தில் கிறித்தவர்களின் பங்களிப்பைப்பற்றி விரிவானதொரு சித்திரத்தை வாசகர்களுக்கு அளிக்கும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிடவேண்டும் என்று கருதியிருக்கிறார். அதற்காக மிகவும் நம்பிக்கையுடன் முதலில் ஒரு வரலாற்றுப் பேராசிரியரை அணுகியிருக்கிறார். அவரோ அப்படியெல்லாம் யாருமே இல்லை என்று எடுத்த எடுப்பில் கைவிரித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. தற்செயலாக முனைவர் எம்.ஏ.சேவியர் அவர்களை அணுகி தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன். சேவியருக்கும் அத்திட்டம் உடன்பாடனதாகவே இருந்தது. நண்பரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக சேவியர் பல இடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தகவல்களைத் திரட்டித் தொகுத்துவைத்துக்கொண்டு எழுதத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவர் எழுத நினைத்தது ஒரு கட்டுரை மட்டுமே என்றபோதும், எழுத எழுத அது நீண்டுகொண்டே சென்றதால் இதழில் ஒரு கட்டுரைத்தொடராகவே வெளிவரத் தொடங்கியது. அந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து இப்போது வைகறைப்பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. எல்லா மாபெரும் செயல்களுக்குப் பின்னணியாக ஏதோ ஒரு சிறிய கனவு இருக்கும் என்றொரு வாசகம் உண்டு. அது சேவியரின் இந்த ஆய்வேட்டுக்கும் பொருந்தும். ஸ்டீபன் கண்ட கனவுக்கு சேவியர் வழியாக ஒரு நிஜ உருவம் கிடைத்திருக்கிறது. இந்த நூல் வழியாக காந்தியத்தைப் பின்பற்றி நடந்த மாசில்லாமணி, ஜெபமணி, ரோட்ரிகுவஸ், பெஞ்சமின், குழந்தைசாமி என எண்ணற்ற தியாக உள்ளங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்கிறார்கள்.

ஓர் ஆய்வாளர் என்கிற கோணத்தில் வரலாற்று ஆய்வு முறைமைகளுக்கு உட்பட்டு, தியாகிகளைப்பற்றிய தொகுப்பை கிறித்தவர்கள் என்னும் அடையாளக்குறிப்போடு சேவியர் உருவாக்கியிருக்கலாம். ஆனால் காந்திய வரலாற்று மாணவன் என்கிற கோணத்தில் என்னைப்போல இருப்பவர்கள் அவர்கள் அனைவரையும் எல்லா அடையாளங்களுக்கும் அப்பாற்பட்ட தியாகிகளாகவே நினைவில் பதித்துக்கொள்வார்கள். தியாகம் என்பது காந்தியடிகளின் அடையாளமாக நீடிப்பதுபோலவே, காந்தியத் தொண்டர்களின் அடையாளமாகவும் என்றென்றும் இம்மண்ணில் நீடிக்கிறது.

 

(இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும். முனைவர் எம்.ஏ.சேவியர், வைகறை பதிப்பகம், 6, மெயின் ரோடு, திண்டுக்கல் 624001. தொலைபேசி  ; 0451-2430464. விலை. ரூ150)

 

(சர்வோதயம் மலர்கிறது – அக்டோபர் 2022)