Home

Sunday 13 November 2022

ஊருக்கு வந்தவன் - சிறுகதை

 ஜன்னலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் முட்களை தற்செயலாக உற்றுப் பார்த்தான். முட்கள் துடித்து நகரும் ஓசை உடனடியாக ஓர் இதயத்தை உருவகப்படுத்தியது. தொடர்ந்து அந்த இதயத்துக்கு உரியவனாக அழகேசனை நினைத்துக்கொண்டான். இரவின் அமைதியைக் குலைத்தபடி சிறிய அளவில் விடாமல் ஒலித்த அந்த ஓசையின் வேகம் நொடிக்குநொடி பெருகுவதைப் போலிருந்தது. ஒரு பெரிய மத்தளத்தை இடைவிடாமல் ஓங்கி அடிப்பதைப்போல அந்த ஓசை அறையில் நிரம்பியது. ஒருவித பயம் மனத்தைக் கவ்வி ஆட்டிப் படைத்தது.

இரண்டு வாரங்களாக ஒரேஒரு பக்கத்தைக் கூட சிரத்தையுடன் படிக்க முடியாத அளவுக்கு பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று தூக்குமேடைச் சித்திரமொன்று மனத்தில எழுந்தது. பின்னங்கைகள் கட்டப்பட்ட நிலையில் அழகேசனுடைய முகத்தை கருப்புத்துணியால் மூடிக் கழுத்துச்சுருக்கு மாட்டப்பட்டது. காவலர்களுக்கிடையே சைகைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குறித்த நேரத்தில் மேடைக்கு அருகிலிருந்த ஒரு பிடி இயக்கப்பட்டு காலடிக்குக் கீழேயிருந்த வட்டப்பலகை உள்முகமாகத் திறந்தது. சுருக்குக் கயிற்றில் உடல் துடித்து அடங்கியது. தன் உடல் வேர்வையில் நனைந்துவிட்டதை உணர்ந்ததும் கட்டிலிலிருந்து எழுந்து நாற்காலியின் அருகில் வந்து நின்றுகொண்டான். அனிச்சையாக தன் கழுத்தைத் தடவிப்பார்த்தான். எல்லாம் கைமீறிப்போய்விட்டது என்று முணுமுணுத்துக்கொண்டான்.  அவன் மனம் அதிர்ச்சியில் கலங்கிப்போயிருந்தது. எரிந்துகொண்டிருக்கும் விளக்கையும் மேசைக்கு அருகில் அடுக்கிவைத்திருந்த புத்தகங்களையும் கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தான். தூக்குமேடை மனிதனின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கண்களும் கெஞ்சுதலும் ஒரு சிற்பத்தைப்போல நெஞ்சுக்கடியிலேயே நின்றது.

அறையைவிட்டு வெளியே வந்தான். விளக்கை அணைப்பதற்காக நீண்ட கையை ஒருகணம் தயக்கத்துக்குப் பிறகு இழுத்துக்கொண்டான். வெளியே வாசலில் நின்று அமைதியாக தெருவைப் பார்த்தான். தார்ச்சாலையின் கருமை நிலவொளியில் அவிழ்த்துவைத்த இடுப்பு பெல்ட்போல மின்னியது. சாலையோரப் புளியமரங்களின் நிழல்தோற்றம் தூக்கிடப்பட்டு தொங்கும் தலைகளைப்போலத் தெரிந்தன. காற்றின்றி அசைவற்ற அதன் தோற்றம் அந்த எண்ணத்துக்கு உயிரூட்டுவதாக இருந்தது. தவிர்க்க முடியாதபடி தூக்குமேடைச் சித்திரம் மறுபடியும் மிதந்து வந்தது.

ஆயிரம் சந்தாக்கள் உள்ள மாலைப்பதிப்பு பத்திரிகையொன்றில் செய்தி சேகரிப்பாளானாகவும் உதவி ஆசிரியனாகவும் மெய்ப்பு பார்க்கிறவனாகவும் பலதுறை மன்னனாக வேலை செய்துகொண்டிருந்தவன் அவன். பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம். உண்மைச் செய்திகளை வெளியிடும் நோக்கத்துடன் நீதிமன்றத்தின் வாசலில் விசாரணை நடக்கும் எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து செய்தி சேகரித்தபோதுதான் அறைஎண் 18ல் பரபரப்பான கொலைவழக்கின் விசாரணை நடப்பதை அறிந்தான். தள்ளித்தள்ளி வைக்கப்பட்ட வழக்கில் அன்றுதான் முதல் விசாரணை நடக்கப் போவதாகச் சொன்னார்கள். பெரிய, சிறிய பத்திரிகைக்காரர்கள் பலரும் அந்த அறையின்முன் சூழ்ந்திருந்தார்கள். கும்பலுக்கிடையே மௌனத்திலும் அச்சத்திலும் உறைந்த நிலையில் கூண்டில் நிறுத்திவைக்கப்பட்ட முகத்தைக் கண்டான். பார்வையாளர்களிடையே சலசலப்பு எழுந்து அடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நகருக்குள் நடந்த மொழிக்கலவரத்தின் போது மாற்றுமொழிக்காரன் ஒருவனைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அவன் கைது செய்யப்பட்டதை அப்போதே பத்திரிகைகள் கட்டம் கட்டி வெளியிட்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் விதம்விதமான செய்திக்கட்டுரைகள் வெளிவந்தபடி இருந்தன. வாசகர்களின் கடிதங்கள் இச்சம்பவத்தையொட்டி விசேஷமாக வரவழைக்கப்பட்டு  தொகுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. அவன் எப்படியெல்லாம் தண்டிக்கப்படவேண்டும் என்றும் பெரும்பான்மை மொழியினரின் நலம் எப்படி பாதுகாக்க்படவேண்டும் என்றும் ஏராளமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. கடுமையான அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மொழிப்பிரிவைச் சேர்ந்தவன் அவன். இலட்சக்கணக்கான அளவில் பொருள் சேதத்துக்கும் 42 பேர்களின் உயிர்ப்பலிக்கும் காரணமாக இருந்த கூட்டத்தவர்கள் சார்பில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. தற்செயலாக அழகேசன் அகப்பட்டதும் அவனை மையமாக வைத்து சதித்திட்டங்களைத் தீட்டும் ஒரு பெரிய ரகசிய இயக்கமே அரசுக்கு எதிராக இயங்குவதைப்போன்ற ஒரு சித்திரம் தீட்டிக்காட்டப்பட்டது. நான்கு வருடங்கள் சிறைவாசம். ஏராளமான அளவில் புனையப்பட்ட சம்பவங்களாலும் கற்பனைகளாலும் தீவிரவாதி என்கிற படிமம் அவன் மீது கட்டியெழுப்பப்பட்டது.

தொடர்ந்து அங்கே நிற்க இயலவில்லை. வாசலைச் சாத்திக்கொண்டு அறைக்குத் திரும்பினான். பிதுங்கிய விழியைப் போல எரியும் சுடரையே வெகுநேரம் உற்றுப்பார்த்தபடி யிருந்தான். மனம் குழம்பித் தவித்தது. மீண்டும்மீண்டும் அவன் மனம் அழகேசன் மீது குவிந்தது. நடந்த எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தித் தொகுத்து யோசிக்கவே அவன் விரும்பினான். விடியும் நேரத்தில் அவன் உயிர் பிரிந்துவிடக்கூடும் என்கிற விஷயம் அவனது மற்ற எண்ணங்களைச் சிதறவைத்தபடி இருந்தது. இன்னொரு கோணத்ததில் கையாலாகாதவனாகவும் கோழையாகவும் உண்மையான வலிமையை நிறுவிக் காட்ட வழியில்லாத பத்திரிகைக்காரனாகவும் சுயசித்திரங்களை முன்வைத்தது. நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் செய்திக்காக புகுந்து வந்தபோதெல்லாம் காக்கிச்சட்டைகளின் கம்பீரம் எந்த விதத்திலும் செயல்பட அனுமதிக்காத கோழைத்தனத்தை மூட்டிவிடுகிறது என்று தன்னையே நொந்துகொண்டான்.

விடியும்வரை அழகேசனைப் பற்றிய எண்ணங்களிலேயே ஆழ்ந்திருக்கும் நாட்டம் திடுமென எழுந்தது. ஒருவகையில் அச்செயல் அவனுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கக்கூடும் என்று மன அமைதியடைந்தான்.

பலத்த ஆரவாரங்களுக்கிடையேதான் அவனது விசாரணை அன்று தொடங்கியது. மிரட்சியிலும் கூச்சத்திலும் அவன் உடல் குன்றிப்போயிருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லை. வாக்குறுதி வாங்கிய நீதிமன்றப் பணியாளன் அவனை நிமிர்ந்து  பார்த்துப் பேசுமாறு திரும்பத்திரும்பச் சொன்னான்.

உங்க பேரு?”

அழகேசன்”.

அப்பா பேரு?”

பரமசிவன்.”

எந்த ஊரு?”

திர்ணாமலைக்குப் பக்கமுங்க. திருக்கோயிலூரு. உலகளந்த பெருமாளுக்கு அழகான கோயில் இருக்கிற ஊருங்க”.

இந்த நகரத்துகு ஏன் வந்திங்க?”

டிகிரி முடிச்சி மூணு வருஷமாச்சிங்க. எண்பத்திரண்டு பர்சென்டுங்க. ஊருல அதுக்கெல்லாம் ஒரு மரியாதையும் இல்லிங்க. எந்த வேலையும் கெடைக்கலைங்க. கோயில் வாசல்ல இருபது ரூபா சம்பளத்துக்கு பூக்கட்டி பொழைச்சேன். எவ்வளவு காலத்துக்குத்தான் அத செய்யறது சொல்லுங்க. இங்க வந்தா ஏதாவது கம்பெனியில வேலபார்த்து பொழச்சிக்கலாம்ன்னு வந்தங்க”.

கிருஷ்ணதாஸ் நாயக்க ஏற்கனவே தெரியுமா ஒங்களுக்கு?”

தெரியாதுங்க-”

அவர் கூட ஏதாவது விரோதமா?”

யாருன்னே தெரியாத ஆளுமேல எப்படிங்க விரோதமா இருக்கமுடியும்?”

அவர எப்ப பாத்திங்க?”

பஸ் ஸ்டாண்ட்லேருந்து வெளியே வந்தங்க. திடீர்னு நெறய கூட்டம் அலஅலயா ரெண்டு பக்கத்திலேருந்தும் ஓடியாந்தாங்க. எஙக பாத்தாலும் ஒரே தலைங்களா தெரிஞ்சிது. ஏகப்பட்ட வண்டிங்க நடுவுல மாட்டிக்கிட்டுதுங்க. ஓரத்துல போலீஸ்காரங்க வேனுங்கள கொண்டாந்து வச்சிகிட்டு கண்ணுமண்ணு தெரியாம அடிச்சிட்டிருந்தாங்க. பூந்து ஓடக்கூட ஒரு வழியும் தெரியல. எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம்ங்கற மாதிரி இருந்திச்சி நெலைமை. என்ன ஏதுன்னு ஒன்னுமே எனக்குப் புரியலைங்க. ஏதாவது பெரிசா நடக்கறதுக்குள்ளே ஓடித் தப்பிச்சிடணும்ன்னு கண்ணுக்குத் தெரிஞ்ச சந்துங்க வழியா பூந்துபூந்து ஓடினான்.  நிமுந்து பாக்கறவங்க மூஞ்சிலயெல்லாம் ஒரே பயம். யார யாரு என்ன செய்வாங்கன்னு யோசிக்கவே முடியல. கண்ணு முன்னாலயே ஒருத்தன் இன்னொருத்தவன் நெஞ்சில குத்தினான். கீழ தள்ளி உட்டு வெறவு வெட்டற மாதிரி வெட்டினான். எங்க பாத்தாலும் ரத்தம் வழிஞ்சிகிட்டிருந்திச்சி. கைகாலெல்லாம் நடுங்கிச்சி. நிக்கறதுக்கு பயமா இருந்திச்சி. ஓடிட்டே இருந்த. சட்டுனு ஒரு மூலையில ஒரு கும்பல் மடக்கி எக்குத்தப்பா கேள்வி கேட்டாங்க. அவுங்க மொழி எனக்கு சுத்தமா புரியலை. எல்லாத்துக்கும் தலையை ஆட்டி இல்ல இல்லன்னு சொன்னன். அதுக்குள்ள ஹாக்கி ஸ்டிக்கால ஒருத்தன் என் முதுவுலேயே ரெண்டு அடி அடிச்சிட்டான். அடிவாங்கன வேகத்துல கீழ விழுந்தாலும் டக்குன்னு போக்கு காட்டி தப்பிச்சிட்டேன். ஓடிஓடி இன்னொரு கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன். அங்கயும் நல்ல அடி. கையில் இருந்த பைய புடுங்க வந்தாங்க. என் சர்டிபிகேட்லாம் அதுலதான் இருந்திச்சி. எப்படியாவது அத காப்பாத்திக்கணும்ன்னு வேகம். எப்படியோ அவுங்க கையிலேருந்து தப்பிச்சி ஓடனன். ரொம்ப தூரம் ஓடி மூச்சி வாங்கிகிட்டு நிக்கற நேத்துலதான் அவருகிட்ட மாட்டிகிட்டேன்.

அவரு ஒங்கள அடிச்சாரா?”

இல்ல.”

எதாவது திட்டனாரா?”

இல்ல.”

மெரட்டனாரா?”

இல்ல.”

வேற என்ன செஞ்சாரு?”

தாண்டி ஓட முடியாத மாதிரி வேகமா என்ன பாத்து வந்தாரு. எனக்கு பயம். -ஏற்கனவே ரெண்டுதரம் அடிவாங்கன பயம். கையில இருந்த பைய புடுங்கிக்குவாரோன்னு பயம். அடிச்சிக் கொன்னுடுவாரோன்னு பயம். அனாதயா இந்த ஊருல செத்துட்டா கிராமத்துல அப்பா அம்மாவ யாரு காப்பாத்துவாங்கன்னு பயம். அவரு என்ன பாத்து வரவர என் பயம் அதிகமாயிடுச்சி”.

அதனால என்ன செஞ்சிங்க நீங்க?”

என்ன காப்பாத்திகறதுக்காக பக்கத்துல கெடந்த கட்டடைய 373 பாவண்ணன் தொகுப்பு பாகம் 1 s

எடுத்து தடுத்து புடிச்சன். அவுரு வந்த வேகத்துல தலையில இடிச்சிக்கிட்டாரு.”

அவர நீங்க அடிக்கலையா?”

இல்ல

அவர் செத்தது தெரியுமா?”

அன்றைய விசாரணையை கட்டம்கட்டிய பெட்டிச் செய்தியாக மாலைப்பதிப்பில் எழுதினான். ஒவ்வொரு பத்திரிகையும் அச்செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதியது. பாதிக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் அதை திட்டமிட்ட கொலை என்றே எழுதின. மொழிவெறுப்பைக் காட்டுவதற்காக செய்யப்பட்ட கொலை என்று தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. பிழைப்பதற்காக உள்ளே நுழையும் வந்தேறிகள் நிரந்தரமாக வாழ்பவர்களின் அமைதியைக் குலைப்பதற்காக தீட்டிய சதித்திட்டத்தின் ஓர் அம்சமே இந்தக் கொலை என்று எழுதியது மற்றொரு பத்திரிகை. அந்த மொழியில் பிரபலமான அளவில் துப்பு துலக்கி செய்திகளை வெளியிடும் ஜனரஞ்சக வார இதழொன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரவாதம் இக்கொலையின் வழியாக அழகிய பூங்காவாகத் திகழும் பிரதேசத்துக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டது என்றும் அதைச் சரியான முறையில் இனம்கண்டு காவல்துறையும் நீதித்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் மூலமே அமைதிளை நிலைநாட்ட முடியுமென்றும் சுட்டிக்காட்டியது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கோணத்தில் செய்தி சேகரித்து எழுதினாலும் நடந்த நிகழ்ச்சி திட்டமிட்ட கொலையே என்று சாதிப்பதிலேயே முனைப்பாக இருந்தன. திருக்கோயிலூருக்கு அருகில் இருந்த அவன் கிராமத்துக்கும் அவன் படித்த கல்லூரிக்கும் சென்று செய்திகளைச் சேகரித்து கட்டுரையொன்றை எழுதினான் அவன். அவனுடைய தந்தையார் சாதாரண நெசவாளி. வயதின் காரணமாக தறியில் உட்கார இயலாமல் பத்திரம் பதியும் இடத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இரண்டும் நாலுமாக சம்பாதித்துக்கொண்டிருந்தார். தாயார் எருமுடை தட்டி விற்றுச் சம்பாதித்தார். நாலு சகோதரிகளில் இரண்டுபேர் திருமணம் முடிந்து உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டிருந்தார்கள். முதிர்கன்னியாக இருந்த ஒருத்தி மனநிலை பிறழ்ந்த மற்றொருத்திக்கு பாதுகாப்பாகவும் வீட்டு வறுமையைப் போக்குவதற்காக ஆயத்த ஆடை அங்காடியில் தையல்  தொழிலாளியாகவும் வேலை செய்துகொண்டிருந்தார். பசியிலும் பட்டினியிலும் மூழ்கிக்கொண்டிருந்த குடும்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நம்பிக்கையோடு வண்டியேறினான் அழகேசன். சேரும் இடத்தில் தனக்கொரு தூக்குக்கயிறு தொங்கிக்கொண்டிருப்பதை அறியாமலேயே வண்டியேறி விட்டான். நிராதரவான நிலையில் மகன் அகப்பட்டுத் தவிக்கும் செய்தி அக்குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருந்தது. அவர்களுக்கு அழமட்டுமே தெரிந்திருந்தது. அழகேசனைக் காப்பாற்றும் பொறுப்பை அந்தத் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்டு கண்ணீர்விடுவதைத் தவிர வேறு வழியறியாதவர்களாக இருந்தார்கள். சிறையில் அகப்பட்டிருந்த மகனைப் பார்த்துவரக்கூட அவர்களுக்கு வசதியில்லை. வறுமையின் நெருப்பில் கொஞ்சம்கொஞ்சமாக கரிந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது அக்குடும்பம்.

ஓராண்டு விசாரணைக்குப் பிறகு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கலவரத்தில் நடந்த மரணத்தை திட்ட மிட்ட கொலையாக கருதுவதாகவே நீதிமன்றம் தெரிவித்தது. அத்தீர்ப்பு படிக்கப்பட்டபோது இருண்ட முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அழகேசன் மயக்கமடைந்து கூண்டுக்குள்ளேயே கீழே விழுந்தான்.

நகரில் செயல்பட்டுக்கொண்டிருந்த மனித உரிமை அமைப்பு அந்த வழக்கின் தன்மை முழுஅளவில் ஆராயப்படவில்லை என்றொரு அறிக்கையை வெளியிட்டது. குறிப்பிட்ட மொழியினரை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட கலவரப் பின்னணியைக் கணக்கிலெடுத்துக்கொண்டே இந்த வழக்கு ஆராயப்பட வேண்டும் என்பதை மீண்டும்மீண்டும் வலியுறுத்தியது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கண்டதும் உருவாகிற பயமும் நம்பிக்கையின்மையும் கொல்வதற்குத் தூண்டுகிற சக்திகளாக உருமாறும் அவலத்தை முற்றுலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறியது. விசாரணையின்போது அழகேசன் சார்பில் வாதாடிய வழக்கறிஞரும் அதைத்தான் ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வந்தார். ஏற்கனவே பலமுறை அடிவாங்கி உயிர்பிழைத்து ஓடிவந்தவன் தற்செயலாக மறுபடியும் ஒருவனைப் பார்த்ததும் தன்னைக் கொல்ல வந்தவனாகவே அவனைக் கருதி தற்காப்புக்கு நிகழ்த்திய தாக்குதல் துரதிருஷ்டவசமாக மரணத்தில் முடிவடைந்ததைக் கருணையுடன் அணுகுதல் வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கையை முன்வைத்தார். அந்த வழக்கறிஞரும் மனித உரிமை அமைப்பினரும் தாமாகவே அவ்வழக்கில் நியாயம் கோரி  மறுபரிசீலனைக்காக உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.

மேற்கொண்டு யோசிக்கமுடியாதபடி மூளை வெடித்துவிடுவதைப் போல இருந்தது. எழுந்து அறை மூலையில் வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்துப் பருகினான். குளிர்ந்த தண்ணீர் தொண்டை வழியாக நெஞ்சைத் தாண்டி இறங்கும்போது கொதித்துக்கொண்டிருந்த உடல் வெப்பத்துக்கு சற்றே ஆசுவாசுமாக இருப்பதை உணர்ந்தான். மனநெருப்பு முழுவதையும் யாரோ ஒரே கணத்தில் அணைத்து விட்டதைப்போல. விலக்கமுடியாமல் அழுத்திக் கொண்டிருந்த பாரம் தானாகவே கரைந்து விலகியதைப்போல, சில கணங்கள் மட்டுமே அந்த அமைதியில் அவன் மனம் அமிழ்ந்திருக்க முடிந்தது. மறுபடியும் சுயவெறுப்பே பொங்கி மேலெழுந்து அவன் ஊக்கத்தை அழித்தது.

வருடக்கணக்கில் விசாரணை நடந்தபடியே இருந்தது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவ்வழக்கு எடுத்தக்கொள்ளப்படும். கயிறுகட்டி இழுத்து வரப்படுகிற பலியாட்டைப்போல அழகேசன் ஒவ்வொரு முறையும் கூண்டுக்கு அழைத்துவரப்படுவான். வழக்கறிஞர்கள் மாற்றிமாற்றி அவனை வெவ்வேறு கோணங்களில் கேள்வி கேட்டபடி இருப்பார்கள். அவன் கேள்விப்பட்டே இராத பல தீவிரவாத இயக்கங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி அவற்றுக்கும் அவனுக்கும் இருந்ததாக நம்பப்படும் தொடர்புகளைப்பற்றி ஓயாமல் கேள்வி கேட்பார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவன் மறுதலித்தே பதில் சொல்லவேண்டியிருந்தது. அதுவே வழக்கறிஞர்களின் கோபத்தைத் தூண்டப் போதுமான காரணமாக இருந்தது. தொடர்ச்சியான கேள்விக்கணைகளை வேறொரு கோணத்திலிருந்து தொடுக்கத் தொடங்குவார்கள். ஒரு முறையாவது தனக்குத் தேவையான பதிலை அவன் வழியாக வரவழைத்துவிடும் முயற்சியில் இடைவிடாமல் ஈடுபடுவார்கள். மணிக்கணக்கில் தொடர்கிற விசாரணை ஒரு சலிப்பான கட்டத்தில் வந்து நின்றுவிடும். மறுபடியும் ஒத்திவைப்பு. சிறைவாசம். சில நாள்களுக்குப் பிறகு மறுவிசாரணை. பலமுறை ஏதாவது காரணம் சொல்லப்பட்டு வழக்கை ஒத்திவைப்பதற்கு அனுமதி கோரப்படும். உடனே எந்த மறுப்புமின்றி அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். செய்திக்காக விசாரணை மண்டபத்தை மொய்த்திருக்கும் பத்திரிக்கைக்காரர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடும். சுடச்சுட அச்செய்தியை முதலாம் ஆளாகத் தருவதற்கு ஆவலுடன் காத்திருந்து திரும்பும்  ஏமாற்றம் அவர்கள் முகங்களில் வரிவரியாகத் தெரியம். “நாலே நாலு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால்கூட போதும். நான்கு காலம் செய்தியை வேக வேகமாக எழுதிவிடமுடியுமேஎன்று பாதையோர தேநீர்க் கடைகளில் தேநீர் அருந்தியபடி அவர்கள் தமக்குள் அங்கலாய்த்துக்கொள்வார்கள். வழக்கு நடக்காத குறையை வேறு சில பத்திரிகைகள் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு ஈடுசெய்தன. சொந்த மொழிக்காரர்களின் தலைக்குமேல் எந்த நேரமும் விழுந்துவிடக்கூடிய கத்திகள் தொங்கிக்கொண்டிருப்பதைப்போன்ற கற்பனைகளை வார்த்தைகள் வழியாக சாமர்த்தியமாக இறக்கிவைத்தார்கள் அவர்கள். அந்த சொற்கட்டுகள். உணர்ச்சி ததும்பும் உவமைகள். அரையடி தொலைவில் மரணம் நின்றுகொண்டிருப்பதான எண்ணத்தையும் பயத்தையும் வலுவாகத் தோற்றுவிக்கும் தன்மையில் அந்த எழுத்துக்கள் அமைந்திருக்கும். பொய்களின் அணிவகுப்பைத் தாங்கமுடியாமல் அவன் மனம் கொதிக்கும். ஒருமுறை அப்பொய்த்தன்மையை அம்பலப்படுத்திக்காட்டும் கட்டுரை ஒன்றை எழுதினான். அதன் வேகம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அச்சுக்குப் போகும் முன்னர் ஆசிரியர் அதை நீக்கிவிடும்படி கட்டளையிட்டுவிட்டார். நெருங்கி வந்து உட்கார்ந்து மெதுவான குரலில் ஏதோ ஒரு பொதுவான விஷயத்தைப்பற்றிப் பேசுவதைப்போல பேசினார். அது கொலையல்ல என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. திட்டமிட்ட கொலை என்று எழுதுகிறவனுக்கும் கூட அது கொலையல்ல என்பது தெரியும். படிக்கிற ஒவ்வொருவனுக்கும் தெரியும். சூழல் எதிர்பார்ப்பதெல்லாம் அது உண்மையல்ல என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு குரலை. ஒரே ஒரு கட்டுரை. ஒரே ஒரு வாக்கியம்கூட போதும். மற்றொரு கலவரத்தை எளிதாகத் தூண்டிவிட முடியும். இன்னொரு கலவரத்தையும் இன்னும் சில உயிர்ப்பலிகளையும் சந்தித்து இந்த நகரில் உயர்வாழ்வது சிரமமாகிவிடும். ஒருவேளை கஞ்சிக்கு நம்பிக்கையோடு இந்த நகரில் அலைந்துகொண்டிருக்கும் கூட்டம் அகதிகளாக சுக்குநூறாக சிதைந்து போவார்கள். மாடுகளை விரட்டுவதைப்போல விரட்டப்படுவார்கள். வாய்ப்புக்காகவே காத்திருக்கிறவர்கள் சந்தடிசாக்கில் நுழைந்து தாக்கத் தொடங்குவார்கள். அகங்காரத்துடனும் வெறியுடனும் மிருகத்தைப்போலப் பாய்கிற கூட்டத்தின் முன்னால் எந்த றியாயமும் எடுபடாது. கொலை. கொள்ளை. ரத்தம். வெட்டப்படும் கைகள். கால்கள். துண்டாடப்படும் தலைகள். நகரில் அங்கங்கே மறைவிடங்களிலும் சாக்கடை ஓரங்களிலும் அடையாளம் தெரியாத பிணங்கள் ஒதுங்கத் தொடங்கும். யாராவது இன்னொரு அழகேசன் விவரம் புரியாமல் அந்த நேரத்தில் ஊருக்குள் இறங்கி எல்லாப் பழிகளுக்கும் பலியாடாக நிறுத்தப்பட்டு மரண தண்டனை பெறுவான்.

அன்று இரவுதான் மனவேதனையை மறக்க முதன்முதலாக மது அருந்தத் தொடங்கினான். தூக்கமின்றி ஒரு பைத்தியத்தைப் போல உடனிருந்த நண்பனிடம் புலம்பிக்கொண்டே இருந்தான். “உண்மையைக் கொல்றதும் மறைக்கறதும் ஒரு கோழிய அமுக்கிக் கொல்றாப்பல ரொம்ப சுளுவான காரியம் தெரியுமா?” என்று திரும்பத்திரும்பப் பிதற்றினான். தட்டிலிருந்தத சிவந்த மாமிச வறுவலைப் பார்த்ததும் கொஞ்சநேரம் அழுதான். அதைத் தொடுவதற்கு தன் கை கூசுவதாக தள்ளிவைத்துவிட்டான். குழப்பமான பார்வையை அவன்மீது செலுத்தினான் அவனுடைய நண்பன்.

எந்த விசாரணைக்கும் பயனில்லாத வகையில் உயர்நீதி மன்றத்திலும் அவனுடைய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆசை அழகேசனுடைய கண்களில் ஒரு கெஞ்சுதலாக வெளிப்பட்டபடி இருந்தது. வார்த்தைகள் எதுவுமின்றி அவன் கண்கள் கண்ணீரை வழியவிட்டன. அப்போதுதான் அழகேசனுக்காக வாதாடிய வழக்கறிஞரோடும் மனித உரிமை அமைப்போடும் தன்னையும் இணைத்துக்கொண்டான் அவன். உச்சநீதிமன்றத்துக்கு அந்த வழக்கைக் கொண்டுசெல்லும் ஆவலும் வேகமும் எல்லாருக்கும் இருந்தாலும் அதற்கென தேவையான பணஉதவி இல்லாத குறை எல்லாரையும் செயல்படவிடாமல் முடக்கியது. சிறை அதிகாரியின் அனுமதியைப் பெற்று ஒருமுறை அழகேசனைப் பார்க்கப் போனான் அவன். உடல் தளர்ந்து ஒரு குச்சியைப் போல நின்ற அவன் தயங்கித்தயங்கிப் பேசினான். வாய்ப்புகளைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய கடவுள் சந்தர்ப்பங்களை உருவாக்கி தண்டிக்க முற்படநேர்ந்த அவலங்களைச் சுட்டிக்காட்டும் ஆவேசமும் அழுகையும் பேச்சினூடாக கலந்து வெளிப்பட்டன. எஞ்சிய தன் வாழ்நாள்களின் கணக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்ட விஷயத்தை அவனால் நம்பவே முடியவில்லை. ஒருகணம் ஆவேசம். மறுகணமே புலம்பல். காரணமே இல்லாமல் ஒரு கோப வெளிப்பாடு. அடுத்தபடி உதடுகளைக் கடிப்பதுபோல பற்களால் பற்றியபடி ஒரு விம்மல். இளமையின் விளிம்பிலிருந்த அவனை எதிர்பாராத மரணஅழைப்பு வாழ்க்கையின் விளிம்புக்கு  வேகவேகமாக இழுத்துச் சென்றுவிட்டது. தனது துக்கத்தையும் ஆற்றாமையையும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுத்தியபடி பேசினான். அழகேசனுடைய கண்களை நேருக்குநேர் பார்க்கும் துணிச்சலின்றி நிமிர்வதும் குனிவதுமாகவே பேச்சுக்கு காதுகொடுத்துக்கொண்டிருந்தான் அவன். சட்டென கைகளை நீட்டிப்பற்றிக் கொண்டுஉயர் போவும்போது ரொம்ப வலிக்குமா சார்?” என்று கேட்டான். அப்போது இருண்டு வியர்வையில் மின்னிக்கொண்டிருந்தது அவன் முகம். எந்த மாதிரியான பதிலைச் சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் அவன். அதே கேள்வியை தன்னோடு நடந்து வருகிற யாரோ ஒருவரிடமும் கேட்பதைப்போல கேட்டுக்கொண்டே அவன் சந்திப்பை முடித்துக்கொண்டு நடந்துபோனான். அந்தக் காட்சியை அவனால் மறக்கவே முடியாமல் போய்விட்டது. அன்றிரவும் தூக்கமின்றி மது அருந்திப் புலம்புவதன் வழியாக மன ஆறுதலைத் தேடிக் கொண்டான்.

போதையின் உச்சத்தில்தான் அழகேசனுக்காக கருணை மனு எழுதும் எண்ணம் அவனுக்கு உதித்தது. உடனே அதை செயல்படுத்தினான். வாக்கியங்கள் கோர்வையாகவும் கச்சிதமாகவும் இரக்கத்தை யாசிப்பனவாகவும் வந்து விழுந்தன. ஆறு பக்கங்கள். திருக்கோயிலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாட்சிக் கையெழுத்துக்கு அழைக்கும் கண்களுக்காக நாளெல்லாம் ஏங்கும் தோல்சுருங்கி உடல் தளர்ந்த முதியவரின் சித்திரம்முதல் ஒவ்வொருவருடைய சித்திரமும் ரத்தமும் சதையுமாக வார்த்தைகளில் நிற்பதைப்போல இருந்தது. அவர்களுடைய வறுமை. இயலாமை. வாய்ப்பின்மை. பட்டினிக் கோலம். ஒவ்வொன்றையும் அந்த மனு வெளிச்சம் போட்டுக் காட்டியது. உயிருக்காக மன்றாடுகிற குரல் ஒவ்வொரு வரியின் இடைவெளியிலும் கைநீட்டி எழுந்தபடி இருந்தது.

மனித உரிமை அமைப்பின் நண்பர்களும் வழக்கறிஞரும் அந்த மனுவைப் படித்து திருப்தியாக இருப்பதாகச் சொன்னார்கள். சட்டம் தொடர்பான சின்னச்சின்ன வாக்கியங்களை மட்டுமே கூடுதலாக சேர்க்கவேண்டியருந்தது. அந்தக் காரியத்தை அவர்களே செய்தார்கள். கெடு விதிக்கப்பட்ட நாளுக்கு முன்னாலேயே அந்த மனு உரிய முறையில் கவர்னருடைய பார்வைக்கு அதனுப்பிவைக்கப் பட்டது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தூக்கமில்லாத இரவுகளாகவே கழிந்தன. அழகேசனுக்கு நம்பிக்கை ஊட்டுவது தனிவேலையாக இருந்தது. முடிவு தெரியவரும் நாளில்  பரபரப்போடு வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்ற அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கவர்னரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தியை அவர் சொல்வதை அவனால் தாங்கவே முடியவில்லை. மீண்டும் மரண தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டது கடைசி முயற்சியாக குடியரசுத் தலைவருக்கு இந்தக் கருணைமனுவை அனுப்பி வைக்கலாம் என்ற யோசனை அலசி ஆராயப்பட்டது. மனுவில் சில வரிகளை அங்குமிங்கும் மாற்றினான் அவன். இரக்கத்தைத் தூண்டும் விதமாக அம்மனுவை அமைப்பதில் அவன் மிகுந்த முயற்சியெடுத்துக்கொண்டான். வழக்கறிஞரும் கூட இருந்து சில திருத்தங்களைச் சொன்னார். முடிவுசெய்யப்பட்ட மனுவை முறையாக தட்டச்சு செய்து அழகேசனிடம் கையெழுத்தைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தான்.

நாள்கள் திடீரென மெதுவாக கரைவதைப் போல இருந்தன.  வழக்கமான செயல்களைச் செய்வதில் காரணமில்லாத பதற்றம் வெளிப்பட்டபடி இருந்தது. ஒரு சின்னப் பிழைகூட இல்லாத அளவுக்கு மெய்ப்பு பார்க்கும் அவன் திறமை சட்டென மங்கிப்போனது. தலைப்புச் செய்தியிலேயே எழுத்துப்பிழை. குற்றச்சாட்டுகள் அவனை அவமானப்படுத்துவதாக இருந்தன. காரணமில்லாமல் வெளியே அலைந்தான். அறையில் தங்கியிருக்கப் பயந்தான். அளவுக்கு அதிகமாக மது அருந்தத் தொடங்கினான். ஆனாலும் அவன் மறக்க நினைக்கிற முகமும் கண்களும் மீண்டும்மீண்டும் மிதந்து வந்து அவனுக்குக் காட்சியளித்தன. அழுகையும் உயிரோசையும் ததும்பும் அக்கண்களை அவனால் பார்க்கவே முடியவில்லை. விழியோரம் கோர்த்துத் தேங்கியிருந்த கண்ணீரின் ஈரம் இரக்கத்தை யாசித்து உறைந்துபோயிருந்தது. வழக்கறிஞரைப் பார்ப்பதையே அவன் தவிர்ந்துவந்தான். அதன் மூலம் அழகேசனுடைய மரணத்தை ஒத்திப் போடமுடியும் என்பதைப்போல குழந்தைத்தனமாக நம்பினான் அவன். எதிர்பாராத ஒருநாளில் வழக்கறிஞரே இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலக அறைக்கே வேனைத் தேடி வந்தார். அவர் முகம் வாடியிருந்தது. எதுவோ பேசவேண்டும் என்பதைப்போல வேகமாக வந்தவர் மேசையின் அருகே பேச்சேயின்றி கண்ணாடிக் கோளத்தை கையிலெடுத்து சுழற்றிச்சுழற்றி விழவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவரால் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேச இயலவில்லை. அவனைப் பார்த்து உதட்டை பிதுக்கி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினார். அவ்வளவுதான். குடியரசுத் தலைவரின் நிராகரிப்பு விளங்கிவிட்டது. ஜன்னலோரமாக இயங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின¢மீது அவன் பார்வை மீண்டும் அனிச்சையாகப் பதிந்தது. நாலரைக்கு இன்னும சில மணித்துளிகளே பாக்கியிருந்தன. அழகேசனுடைய கழுத்தில் தூக்குக்கயிறு அந்நேரத்தில் மாட்டப் பட்டிருக்கும் என்பதை அவனால் தாங்கவேமுடியவில்லை. விரல்களை மடித்து மேசையின்மீது ஓங்கிஓங்கிக் குத்தினான். முறையில்லாமல் மேசையில் சிதறிக்கிடந்த ஒரு குண்டூசி குத்தி ரத்தம் ஒழுகியது. ஆனாலும் நிறுத்தாமல் பற்களைக் கடித்தபடி மீண்டும் மீண்டும் குத்தினான். சட்டென கடிகாரம் நாலரையைச் சுட்டும் விதத்தில் ஓங்கி அலறியது. வழக்கமாக அவன் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதற்காக முன்வைக்கப்படும் அழைப்புக்குரல் அது. எரிந்துகொண்டிருந்த மனத்தின் நெருப்பை அக்குரல் மேலும் கிளறிவிடுவதைப்போல இருந்தது. ஆவேசத்துடன் அதைத் தாவி எடுத்து ஓங்கித் தரையில் அடித்தான். சில கணங்களுக்கு விடாமல் ஒலித்த அதன் குரல் திடீரென அடங்கியது. அதையே விடாமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அவன் பார்வைக்கு அக்கடிகாரத்தின் தோற்றம் உயிரற்ற ஒரு சடலத்தை ஞாபகப்படுத்தியது.

(கதைசொல்லி -2004)