தற்காலத்தில் சிறார்களுக்கென சிறுகதைகளை எழுதிவரும் எழுத்தாளர்கள் வரிசையில் முக்கியமான ஒருவர் உமையவன். அறிவியல் செய்திகளை மையமாகக் கொண்டு சிறார்களுக்கென அவர் ஏற்கனவே எழுதி வெளிவந்த ’ஆகாய வீடு’ அவரை கவனிக்கத்தக்க படைப்பாளியாக முன்னிறுத்தியது. மேலும் சிறார்களுக்கென ’பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’, ’வண்டி மாடு’ என இன்னும் சில கதைத்தொகுதிகளையும் அவர் எழுதியுள்ளார்.
உமையவன் எழுதி புதிதாக வெளிவந்திருக்கும் ’மாயப்புத்தகம்’ தொகுதியில் 11 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் கற்பனை அம்சம் பொருந்தியதாகவும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கதையையும் இன்னொரு முறை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் எழும் அளவுக்கு செறிவாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் எழுதியிருக்கிறார் உமையவன்.
உமையவனின் கதைகளில் சிறார்களை ஈர்க்கும் வகையில் கற்பனையும்
மாயத்தன்மையும் சரிவிகிதத்தில் நிறைந்துள்ளன. அதே சமயத்தில் பிஞ்சு மனத்தில் தன்னியல்பாக
ஊற்றெடுக்கும் கருணையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. இது இத்தொகுதியின்
மிகமுக்கியமான சிறப்பம்சம்.
’மேகவீடும் மீனு மழையும்’ இத்தொகுதியின் முதல் சிறுகதையாகவும்
முக்கியமான சிறுகதையாகவும் அமைந்துள்ளது. வானத்தில் எங்கெங்கும் மேகங்கள் அடர்ந்திருக்கின்றன.
எதிர்பாராமல் நிகழ்ந்த காற்றின் திசைமாற்றத்தால் மழை பொழியத் தொடங்குகிறது. அதுவரை
மேகப்படுக்கையில் பாதுகாப்பாக இருந்த ஒரு மழைத்துளி, அப்பாதுகாப்பிலிருந்து விடுபட்டு
மழையோடு மழையாக பூமியை நோக்கிச் சரிந்து விழுகிறது. அந்தத் துளியின் பெயர்தான் மீனு.
தன்னை யாரோ படுக்கையிலிருந்து தள்ளிவிட்டார்கள் என அது நினைத்து ஒரு குழந்தையைப்போல
கலங்குகிறது.
பூமியின் மீது விழுந்தால் அத்துளி உடைந்து நொறுங்கிவிடுவோம்
என அஞ்சுகிறது. தற்செயலாக அத்துளி ஓர் ஆலமரத்தின் இலையில் விழுகிறது. மழை ஓய்ந்த சமயத்தில்
ஆலஇலையிலிருந்து சரிந்து அம்மரத்தடியில் இருந்த குளத்தில் நிறைந்திருந்த ஒரு தாமரை
இலையின் மீது விழுகிறது. பிறகு உருண்டோடி தண்ணீருக்குள் விழுகிறது. எங்கோ செல்கிறோம்
என தெரியாமல் கால்வாயின் பாதையிலேயே போகிறது.
வானத்துக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்திலேயே
அது எப்போதும் மூழ்கியிருக்கிறது. அதைச் சுற்றியிருக்கும் எந்த உயிரினத்துக்கும் அதற்கு
உதவும் வழி தெரியவில்லை. கடைசியில் வெயிலின்
தாக்கத்தால் ஆவியாகி அத்துளி மீண்டும் வானத்துக்குச் சென்று மீண்டும் மேகத்தோடு கலந்துவிடுகிறது.
அதுவரை நடுக்கமளித்த அனுபவங்கள் அக்கணத்தில் மகிழ்ச்சி நிறைந்த சாகச அனுபவங்களாக மாறிவிடுகின்றன.
ஆனந்தமான அந்த அனுபவங்களை மேகத்தில் உள்ள பிற துளிகளிடம் சொல்லிச்சொல்லி மகிழ்ச்சியடைகிறது.
சின்னஞ்சிறிய ஒரு மழைத்துளியின் மகிழ்ச்சிக்கும் ஏதோ ஒரு சுற்றுலா
நகரத்துக்கு உல்லாசப்பயணம் சென்று திரும்பும் சிறார்களின் மகிழ்ச்சிக்கும் எந்த வேறுபாடும்
இல்லை. அடிப்படையில் ஒவ்வொரு அனுபவத்தையும் ஆனந்தமாக ஆக்கிக்கொள்வது நம் மனம் அல்லவா?
’கனகாம்பரமும் பூக்களின் இளவரசியும்’ ஒரு மலரின் மனவருத்தத்தை
இன்னொரு மலர் போக்கிய விதத்தைப்பற்றிய சிறுகதை.
ஒரு தோட்டத்தில் ரோஜா, முல்லை, மல்லிகை, கனகாம்பரம் என ஏராளமான மலர்ச்செடிகள் நிறைந்திருக்கின்றன.
எல்லாச் செடிகளிலும் பூக்கள் மலர்ந்து கண்ணைக் கவர்கின்றன.
பல பெண்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். ஒவ்வொருவரும்
ஏதோ ஒரு மலரைக் கிள்ளி தலையில் சூடிக்கொள்கின்றனர். ஒருவரும் கனகாம்பரம் பூ இருக்கும்
திசையைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர்களுடைய உதாசீனம் கனகாம்பரம் பூவுக்கு மிகுந்த
வருத்தத்தை அளிக்கிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பூக்களின் மாநாடு
நடக்கவிருப்பதாக எங்கெங்கும் செய்தி பரவுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்
குறிஞ்சிப்பூ இளவரசி மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறது. இளவரசியைச் சந்திக்கச் சென்ற
கனகாம்பரம் பூ தன் மனக்குறையை குறிஞ்சிப்பூவிடம் பகிர்ந்துகொள்கிறது.
நிறையும் குறையும் நிறைந்ததே வாழ்க்கை என்னும் உண்மையை கனகாம்பரம்
பூவிடம் எடுத்துரைக்கிறது குறிஞ்சிப்பூ. தனக்குக் கிடைத்த பூக்களின் இளவரசி என்னும்
பட்டம் நிறை என்றபோதும் பதினோரு ஆண்டுகள் பூக்காமலேயே இருக்கும் குறையும் தன்னிடம்
இருப்பதாகத் தெரிவிக்கிறது குறிஞ்சிப்பூ. அதைக் கேட்ட கனகாம்பரம், சூடிக்கொள்ளாத பூ
என்பது தன்னிடம் உள்ள ஒரு குறையென்றாலும் வெடித்துச் சிதறி விதைகளைப் பரப்பும் ஆற்றல்
மிகப்பெரிய நிறை என்பதை அக்கணத்தில் உணர்ந்துகொள்கிறது. அந்தப் புரிதல் அதன் மனத்தை
அதுவரை வாட்டிவந்த துயரத்தைப் போக்கிவிடுகிறது.
’தொட்டிலில் தூங்கிய குட்டி யானை’ சுவாரசியமாகப் படிக்கத்தக்க
இன்னொரு சிறுகதை. காட்டுக்குள் அலைந்து திரிந்த ஒரு யானைக்கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக
மலையடிவாரத்தில் உள்ள ஒரு குளத்துக்கு வருகிறது. அப்போது தாய் யானையோடு சேர்ந்து ஒரு
குட்டி யானையும் வருகிறது. தண்ணீர் அருந்திய பிறகு குட்டி யானை குளத்தில் இறங்கி தும்பிக்கையால்
நீரை உறிஞ்சுவதும் பீய்ச்சியடிப்பதுமாக விளையாடத் தொடங்குகிறது.
தாய் யானையும் பிற யானைகளும் காட்டுக்குள் திரும்பிச் சென்றுவிடுகின்றன.
அவர்கள் செல்வதைக் கவனிக்காமல் ஆட்டத்திலேயே மூழ்கியிருக்கிறது குட்டியானை. பிறகு மலையடிவாரத்தில்
இருந்த ஊரை நோக்கிச் செல்கிறது.
ஊருக்குள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஒரு தொட்டிலில்
ஒரு குழந்தை ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறது குட்டியானை. உடனே, தானும்
அதைப்போல ஒரு தொட்டிலில் படுத்துத் தூங்கவேண்டும் என்று ஆசை எழுகிறது. அப்போதுதான்
அதற்குத் தன் தாய் யானையின் நினைவு வருகிறது.
எந்தப் பக்கம் செல்வது என்பது தெரியாமல் குட்டியானை குழம்பித்
தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், தாய் யானை பிளிறும் சத்தம் கேட்கிறது. உடனே சத்தம்
வந்த திசையை நோக்கி ஓடுகிறது. ஒரு வழியாக தாய் யானையோடு சேர்ந்துவிடுகிறது. இரண்டும்
இருட்டிய வேளையில் வெகுதொலைவு நடந்து தம் இருப்பிடத்தை அடைகின்றன.
பொழுது விடிந்ததும் தாய் யானையிடம் தன் ஆசையைத் தெரிவிக்கிறது
குட்டியானை. குட்டி யானையின் மனத்தைத் திசைதிருப்ப தாய் யானை என்னென்னமோ சொல்லிப் பார்க்கிறது.
ஆனால் குட்டியானையிடம் எதுவும் பலிக்கவில்லை.
தாய் யானை பிற யானைகளின் உதவியோடு மூங்கில்களையும் இலைகளையும்
கொடிகளையும் சேகரிக்கிறது. உறுதியான ஒரு வேங்கைமரக்கிளையில் குட்டி யானையின் உடல்பருமனுக்கும்
எடைக்கும் தக்க வகையில் ஒரு பெரிய தொட்டிலைக் கட்டிமுடிக்கிறது. தாய் யானை குட்டியானையைத்
தூக்கி தொட்டிலில் படுக்கவைத்துவிட்டு தன் தும்பிக்கையால் முன்னும்பின்னுமாக ஆட்டிவிடுகிறது.
குட்டி யானை மகிழ்ச்சியோடு உறங்கத் தொடங்குகிறது.
இத்தொகுதியின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆர்வத்துடன் புரட்டிப் படிக்கத்
தூண்டும்வண்ணம் அழகான வண்ண ஓவியங்கள் நிறைந்துள்ளன. ஓவியங்களைப் போலவே தொகுப்பில் உள்ள
எல்லாக் கதைகளிலும் சிறுவயதினரை ஈர்க்கும் சுவாரசியமான அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
பூ, மரம், செடி, கோழி, நாய், வாத்து, யானை என இயற்கைத்தாவரங்களும் விலங்கினங்களும்
இடம்பெற்றிருக்கும் வகையில் இத்தொகுதியின் கதைகள் எழுதப்பட்டிருந்தபோதும், கதைகளின்
சாரமான உண்மை மனிதகுலத்துக்கும் பொருந்தும் விதத்தில் அமைந்துள்ளது. அதுவே இத்தொகுதியின்
பலம்.
(மாயப்புத்தகம். சிறார் கதைகள். உமையவன். பயில்
பதிப்பகம், தி.நகர்., சென்னை -17. விலை. ரூ.244)
(புக் டே – இணையதளம் – 12.10.2026)
