கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் முக்கியமான மூத்த படைப்பாளர் விட்டல்ராவ். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கலை விமர்சகர், ஓவியர், திரைப்படஞானம் மிக்கவர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்.
இலக்கியச்சிந்தனை வழங்கிய சிறந்த நாவலுக்குரிய பரிசை கையெழுத்துப்பிரதி வடிவிலேயே பெற்று, பிறகு நூலாக வெளிவந்த நாவல் ‘போக்கிடம்’. இந்தப் படைப்புதான் விட்டல்ராவ் அவர்களை ஒரு நாவலாசிரியராக தமிழ்ச்சமூகத்தின் முன் நிலைநிறுத்தியது. அதையடுத்து, 1981ஆம் ஆண்டில் நூல்வடிவில் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ‘நதிமூலம்’ நாவல் இன்றளவும் அனைவராலும் விரும்பி வாசிக்கப்படும் செவ்வியல் நாவலாக விளங்குகிறது. இதுவரை இவருடைய ஆக்கங்களாக பன்னிரண்டு நாவல்களும் ஐந்து குறுநாவல்களும் ஐந்து சிறுகதைத்தொகுதிகளும் பன்னிரண்டு கட்டுரைத்தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
விட்டல்ராவ் பெங்களூரில் வசித்துவருகிறார். பெங்களூரில் வசிக்கும்
மகனைப் பார்ப்பதற்காக ஆண்டிற்கு ஐந்தாறு முறை பெங்களூருக்கு வரும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர்
எஸ்ஸார்சி. நல்வாய்ப்பாக, ஒரே தெருவில் ஐந்தாறு நிமிட நடை தொலைவில் இருவருடைய வசிப்பிடங்களும்
அமைந்திருப்பதால் எஸ்ஸார்சிக்கு விட்டல்ராவைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது.
அந்த உரையாடல்கள் வழியாக விட்டல்ராவின் விரிவான வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கிய அனுபவங்களையும்
தொழிற்சங்க அனுபவங்களையும் பிற எழுத்தாளர்களோடு பழகிய நினைவுகளையும் அவர் தெரிந்துகொள்கிறார்.
ஐந்து பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று உரையாடக்கூட நேரமில்லாமல்
பரபரப்போடு பேசிவிட்டுப் பிரிகிற பலரும் வசிக்கும் பெருநகரில் ஒவ்வொரு செய்தியைப்பற்றியும்
விரிவான பின்னணியோடு சிரத்தையோடு எடுத்துரைத்துப் பகிர்ந்துகொள்ளும் விட்டல்ராவின்
பண்பு அவருடைய மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது. அவரைக் கண்டு உரையாடிய அனுபவங்களையும்
அவருடைய நூல்களைப் படித்துப் பெற்ற அனுபவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக எழுதி ‘விட்டல்ராவ்
எனும் கலைச்சுரங்கம்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தையே எழுதியிருக்கிறார் எஸ்ஸார்சி.
குவிகம் பதிப்பகம் அந்தப் புத்தகத்தைச் சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது.
விட்டல்ராவைப்போலவே எஸ்ஸார்சியும் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து
ஓய்வு பெற்றவர். பழைய துறைசார் அனுபவங்களை இருவரும் நினைத்து நினைத்து அசைபோடுகிறார்கள்.
விட்டல்ராவ் ஏற்கனவே எழுதி அம்ருதா பதிப்பகம் வழியாக வெளிவந்திருக்கும் ‘தொலைபேசி நாட்கள்’
புத்தகம் நல்லதொரு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடுகிறது. இன்றைய தொலைபேசி நிலையத்தின்
செயல்பாடு நவீன வடிவத்துக்கு மாறிவிட்டது. வெவ்வேறு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவுக்கும்
தேவையான தனித்திறமை கொண்டவர்கள், அவர்களுடைய செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும்
என அந்தப் பழைய காலத்து நினைவுகள் அவர்களுடைய உரையாடலில் இடம்பிடிக்கின்றன. தானியங்கி
உலகமாக மாறிவிட்ட இன்றைய சூழலில் அந்தப் பழைய மனிதர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்.
எதிர்காலத்தில் அவர்களைப்பற்றிய சித்திரங்கள் விட்டல்ராவின் புத்தகத்தில் மட்டுமே பார்த்துத்
தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் விட்டல்ராவின் புத்தகமும் எஸ்ஸார்சியின்
கட்டுரையும் நல்ல ஆவணங்களாக விளங்குகின்றன.
விட்டல்ராவ் எழுதி வெளிவந்த 116 சிறுகதைகளை சந்தியா பதிப்பகம்
இரு பெருந்தொகுதிகளாக கடந்த ஆண்டில் வெளியிட்டது. அவற்றைப்பற்றிய வாசிப்பனுபவத்தை எஸ்ஸார்சி
தன் கட்டுரையில் விரிவாகவே பகிர்ந்துகொண்டுள்ளார். அவரும் சிறுகதையாசிரியர் என்பதால்
ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படும் மேன்மையையும் மனிதாபிமானத்தையும் கலையழகையும் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். தேடல், அவளுக்கும்
அவனுக்கும் இடையே, அவர் நினைவாக, மரி சுவாமிகள், கல்யாணமான முத்தம்மா, பன்றி, சட்டிச்சாமி
என பல முக்கியமான கதைகளை முன்வைத்து அவற்றில் தென்படும் சிறப்பம்சங்களையும் தொட்டுக்
காட்டியிருக்கிறார். ஓர் இளம்வாசகர் தாமாகவே விட்டல்ராவின் கதைகளைத் தேடிச்சென்று வாசிக்கத்
தூண்டும் அளவுக்கு எஸ்ஸார்சி முன்வைத்திருக்கும் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன.
போக்கிடம், காம்ரேடுகள், நிலநடுக்கோடு ஆகிய நாவல்களை முன்வைத்து
தனித்தனி கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்ஸார்சி. சேலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தையும்
மனிதர்களையும் பற்றி ஓர் இளம் ஆசிரியராக அக்கிராமத்துக்குச் செல்லும் ஓர் இளைஞனின்
பார்வையில் விரியும் ’போக்கிடம்’ புதினத்தை மிகச்சிறந்ததொரு ஆவணம் என்று குறிப்பிடுகிறார்
எஸ்ஸார்சி.
பொதுவுடைமைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்ந்து
காட்ட ஆசைப்பட்ட சத்தியநாராயணா கெடுவாய்ப்பாக சொந்த வாழ்வில் தோல்வியுற்று மரணமடைந்துவிடுகிறான்.
உறவு என சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லாத அவனை மெய்யான தோழர்கள் மட்டுமே கேட்டிலும் துணிந்து
நின்று தோழைமை பாராட்டி நல்லடக்கத்துக்கு வழிசெய்கின்றனர். தோழைமையின் உயர்வை காம்ரேடுகள்
நாவல் தெளிவாக சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் எஸ்ஸார்சி. தேவ் என்னும் கதாபாத்திரத்தின்
வழியாக அந்தக் கால சென்னைப் பெருநகரத்தின் சித்திரங்களை அறிந்துகொள்ள விட்டல்ராவின்
நிலநடுக்கோடு நாவல் எப்படி துணைசெய்கின்றது என்பதைக் குறிப்பிடும் நல்லதொரு கட்டுரையும்
இத்தொகுதியில் உள்ளது.
’தமிழகக்கோட்டைகள்’ விட்டல்ராவின் இன்னொரு முக்கியமான தொகுப்பு.
ஒவ்வொரு கோட்டையையும் பார்த்த அனுபவமும் கட்டிடக்கலை
பற்றிய வரலாறும் அரசர்களின் வரலாறும் இணைந்த அழகான சொல்லோவியங்களாக அத்தொகுப்பு அமைந்திருப்பதாகக்
குறிப்பிட்டிருக்கிறார் எஸ்ஸார்சி. ’விட்டல்ராவின்
சுவாரசியமான எழுத்துகளால் உருவான எழுத்துச்சித்திரம்’ என ’ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்’
புத்தகத்தைப்பற்றிக் குறிப்பிடும் எஸ்ஸார்சி, அந்நூல் வழியாக முக்கால்நூற்றாண்டுக்கு
முந்தைய சேலம் நகரத்தைப்பற்றி தான் அறிந்துகொண்ட ஒவ்வொரு தகவலையும் சுருக்கமான சிறுகதையைப்போல
ஒரு கட்டுரையில் அழகாக எழுதியிருக்கிறார்.
இத்தொகுப்பில் 11 கட்டுரைகள் அடங்கியுள்ளன. விட்டல்ராவின் படைப்புகளைப்போலவே அவற்றை முன்வைத்து எஸ்ஸார்சி எழுதிய கட்டுரைகளும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. ஓர் எழுத்தாளரை முழுமையான அளவில் வாசித்துவிட்டு அந்த வாசிப்பனுபவத்தை இன்னொரு எழுத்தாளர் நூல்வடிவில் எழுதுவது என்பது தமிழ்ச்சூழலில் அரிதாகக் காணக்கூடிய செயல். மூத்த எழுத்தாளர் விட்டல்ராவின் படைப்புகளை முன்வைத்து அத்தகு அரிதான செயலை அமைதியாகச் செய்து முடித்திருக்கிறார் எஸ்ஸார்சி. அவருக்கு வாழ்த்துகள்.
(விட்டல்ராவ் என்னும் கலைச்சுரங்கம். எஸ்ஸார்சி.
குவிகம் பதிப்பகம். 99, செளபாக்கியா காலனி, அண்ணா மெயின் ரோடு, கே.கே.நகர், சென்ன-
78. விலை. ரூ.120)
(புக் டே – இணையதளம் – 14.09.2026)
